எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, April 24, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம், திருவாரூரின் அவலம்!


கமலாம்பிகை சந்நிதிக்குப் போகும் முன்னரே, அங்கே தனிக்கோயிலாக இனொரு அம்மன் சந்நிதி உள்ளது. நீலோத்பலாம்பிகை என்னும் அல்லியங்கோதை என்னும் திருநாமம் கொண்ட அம்மன் அருகிலேயே தோழிப் பெண் கந்தனைத் தூக்கிக்கொண்டு. பிள்ளையை அருமையாய் அம்மை தொட்டுக்கொண்டிருக்கும் வண்ணம் காட்சி அளிக்கிறாள். இங்கேயே பள்ளியறையும் என்பது குறிப்பிடத் தக்கது. இல்லைனா இந்த சந்நிதியைப் பார்த்திருக்கத் தவறி இருக்கும். அவ்வளவு அவசரம். கோயில் ஊழியர்கள் சீக்கிரம், சீக்கிரம் என அவசரப் படுத்து கமலாம்பிகை சந்நிதிக்கு விரைந்தோம். பெரிய கோயிலின் வெளிச்சுற்றில் கமலாம்பிகை தனியாகக் கோயில் கொண்டுள்ளாள்.

தனிக்கோயில் என்றால் தனிதான். தனியான மதில் சுவரைத் தாண்டி உள்ளே சென்றால் தனிக் கொடிமரம், பலிபீடம், நந்தி. வடகிழக்குத் திசையை நோக்கி அமைந்துள்ளதாய்ச் சொல்கின்றனர். எனக்கு இந்தத் திசைக்குழப்பம் அதிகம் உண்டு என்பதால் அதைச் சரியாய்க் கவனிக்கவில்லை. நம் உடலின் மூலாதாரமே திருவாரூர் எனச் சொல்கின்றனர். அந்தத் திருவாரூர்க் கோயிலுலும் கமலாம்பிகையின் கோயில் அமைப்பு சந்திரயோகம் என்று திருமந்திரம் சொல்லும் யோகதத்துவங்களின் அமைப்பில் உள்ளதாய்க் கூறுகின்றனர். (அம்பாள் உபாசகர்கள் தான் இது பத்தி விளக்கணும், விளக்கலாம் என்ற விதி இருந்தால்) நம்ம நண்பர் அங்கே உச்சிஷ்ட கணபதி என்ற பெயரில் இருக்கார். அவர் கிட்டே அம்மாவைப் பார்க்க அநுமதி வாங்கிண்டு உள்ளே போனால், அநிந்திதை, கமலினி(ஆமாங்க சுந்தரரின் இரு மனைவியரே தான்) அவங்க துவாரபாலகிகளாய் இருக்கிறாங்களாம். இந்தக் கோயிலில் மட்டுமா? எல்லாக் கோயிலிலுமா? தெரியலை! யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் வலக்கையில் மலரோடு, இடக்கையை இடுப்பில் வைத்தவண்ணம், மேல் கரங்கள் அக்ஷமாலை, பாசம் ஏந்திய வண்ணம் காக்ஷி அளிக்க, ஒரு காலை மடக்கி, மற்றொரு காலைத் தொங்கவிட்டவண்ணம் காக்ஷி கொடுக்கிறாள் கமலாம்பிகை. முக்கியமான, முதன்மையான சக்தி பீடம் என்றும் ஞானசக்தி பீடம் எனவும் சொல்கின்றனர்.

பிராஹாரத்தில் சங்கரநாராயணி, ராஜராஜேஸ்வரி ஆகியோர் காணப்படுகின்றனர். பிராஹாரம் சுற்றி வரும்போது மேல் திசையில் காஸ்யபலிங்கர் சந்நிதிக்கு அருகே அக்ஷரபீடம். இந்த அக்ஷரபீடத்தைப் பார்த்தால் பிண்டி போன்ற அமைப்போடு உருவமற்று இருப்பதால் சட்டென யார் கண்ணையும், கருத்தையும் கவராத வண்ணம் இருக்கிறது. நாங்க சொல்லியே சிலர் தெரிந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. திருவாசி இருப்பதால் ஓரளவு இது முக்கியமான ஒன்று எனப் புரிந்து கொள்ளலாம். உற்றுக் கவனித்துத் தெரிந்து கொள்ளவேண்டும். நல்லவேளையா இங்கே வந்த குருக்கள் தீப ஆராதனை காட்டினதில் பீடத்தின் எழுத்துக்கள் கொஞ்சம் புரிய வந்தன. கீழே தாமரை போன்ற அமைப்பில் செதுக்கப் பட்டு, சுற்றித் திருவாசி. அதிலே எழுத்துக்கள். கிரந்தம் எனத் தோன்றுகிறது. ஓரளவு தான் கிட்டே போகமுடியும். உள்ளே போகமுடியாது என்பதால் பின்னாலும் எழுத்துக்கள் இருந்தால் அது தெரியவில்லை. நம் உடலின் ஆறு ஆதாரங்களும் இந்த 51 அக்ஷரங்களில் அடங்குவதாகவும், இதையே யோக சாதன அக்ஷரபீடம் என்றும் சொல்கின்றனர். வெகு நுணுக்கமான தத்துவங்கள் அடங்கிய ஒன்று. என் சிறு மூளைக்குள் ஓரளவு எழுத்துக்களும், அதன் முக்கியத்துவமும் மட்டுமே ஏறியது. இங்கேயே கொஞ்சம் தள்ளி சரஸ்வதியும் குடி கொண்டுள்ளாள்.

ஞானத்தைக் கமலாம்பிகையும், மொழி வல்லமையை அக்ஷரபீடமும், கல்வியை சரஸ்வதியும் தருவதாய் ஐதீகம். இப்படி ஒரே கோயிலிலேயே இவை அனைத்தும் அமைந்ததாய் மற்ற எதக் கோயிலிலும் காணமுடியாது என்று சொல்கின்றனர். நல்லவேளையாய் இங்கே கொஞ்சம் பார்க்க முடிந்தது. என்றாலும் கோயிலின் சேவகர் கையில் சாவியை வைத்துக்கொண்டு வெளியே நின்று கொண்டிருந்தது மனதில் தைத்துக்கொண்டிருந்ததால், அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல் திருவாரூர்ப் பயணம் அமைந்தது.

Thursday, April 22, 2010

நடந்தாய் வாழி காவேரி, காவேரி ஓரம், திருவாரூரின் அவலம்!

திருவாரூரில் தங்கி இருந்து அனைத்தையும் பார்க்கக் குறைந்தது இரண்டு நாட்களாவது வேண்டும். நாங்க அன்னிக்கு மட்டும் தங்கணும்னு தான் நினைச்சிட்டு இருந்தோம். ஆனால் அன்னிக்குக் காலம்பரக் கிளம்பினதுமே எட்டுக்குடியில் அவர் விழுந்ததும், எல்லா நிகழ்ச்சி நிரலும் மாறிவிட்டது. சீக்கிரமாய்க் கும்பகோணம் போயிட்டு ஊரைப் பார்க்கப் போகலாம் என்று தோன்றிவிட்டது. என்றாலும் வீதிவிடங்கர் வந்த வரலாற்றைத் தெரிந்து கொண்டோம். வன்மீகநாதர் என்னும் புற்றிடங்கொண்டாரைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டாமா? அவர் வரலாறு:

புண்யபூமியான குருக்ஷேத்திரம். மாபெரும் யாகம் ஒன்று நடக்க ஏற்பாடு ஆகிறது. யாகத்தைச் செய்யப் போகிறவர்களும் சாமானியர்கள் அல்ல, தலைமை ஏற்பவரும் சாதாரணமானவர் அல்ல. யாகத்தைச் செய்யப் போகிறவர்கள் தேவாதிதேவர்கள். தலைமை ஏற்பவரோ சாட்சாத் மஹாவிஷ்ணுவே. பொருட்கள் சேகரிக்கப் பட்டன. யாகத்தின் மூலம் கிடைக்கப் போகும் பெருமையும், புகழும் அனைவருக்கும் சமம் என முன் கூட்டியே தீர்மானிக்கப் பட்டது. ஆனாலும் யாகம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையில் ஓய்வு எடுக்காமல் இருப்பவரே மிகச் சிறந்தவர் எனச் சொல்லவேண்டும் என்பதற்கும் ஒத்துக்கொண்டனர். அனைவரும் யாகத்தின் தலைமைப் பதவியான யக்ஞ-மான் பதவிக்கு (இன்றைய யஜமான் இதிலிருந்து வந்ததே) திருமாலே ஏற்றவர் என முடிவு செய்தனர்.

யாகத்தை இறுதிவரையிலும் ஓய்வே இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தி வைத்தார் திருமால். எனினும் அவர் மனதின் ஓரத்தில் கொஞ்சம் செருக்கும் இருந்தது. தேவர்களை விட்டு விலக நினைத்தார். யாகத்தின் குண்டத்தில் இருந்து பலவகையான அஸ்திரங்கள் வந்தன. வில் ஒன்றும் வந்தது. வில் திருமாலின் இடக்கரத்தைப்போய் அடைய, அஸ்திரங்கள் அவர் வலக்கரத்துக்குச் சென்றது. தேவர்களை இதன் மூலம் அடக்க நினைத்தார் திருமால். மெல்ல மெல்ல அவர்களை விட்டு விலகி இந்தத் தலத்தை அடைந்தார். பராசக்திபுரம் என்ற பெயரால் அப்போது அழைக்கப் பட்டு வந்த இந்தத் திருத்தலத்திற்கு வந்த திருமால் சோர்வு மிகுதியால் வில்லின் நுனியைத் தன் தாடையில் அழுத்தியவண்ணம் தூங்கிவிட்டார். அப்போது தேவர்கள் திருமாலிடமிருந்து தப்பவேண்டி குலகுருவான பிரஹஸ்பதியின் ஆலோசனையின் பேரில் செல்லுருவில் பூமியைத் துளைக்க ஆரம்பித்தனர். துளைக்கும்போது வில்லின் கீழ்க்கயிறு அறுந்து போக வில்லின் நாண் அறுந்து திருமாலின் தலை துண்டானது. ஏழு உலகுக்கும் சென்ற அந்தத் தலை திரும்பத் திருமால் படுத்திருக்கும் இடமே வந்து விழுந்தது. பயந்து போன தேவர்கள் ஈசனைத் துதிக்க, அவர்கள் துளைத்த பூமியிலிருந்து பெரும் சப்தத்தோடு சிவலிங்க ரூபமாக ஈசன் வெளியே வந்தார்.

அவரை அனைவரும் அபயம் கேட்க அஸ்வினிதேவர்கள் உதவியுடன் திருமாலின் தலையை உடலோடு பொருத்துமாறு சொல்ல, அவ்விதமே திருமாலின் தலை பொருத்தப் பட்டது. தனக்குத் தலை வழங்கிய ஈசனைத் துதித்தாராம் திருமால். பின்னர் மது, கைடபரை வதம் செய்த திருமாலைத் திருமணம் புரியவேண்டி இந்த மூலட்டானேஸ்வரரைத் துதித்துத் தவம் இருந்தாளாம் ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி. அவள் தவம் இருந்ததாலேயே இந்த ஊர்க் குளம் கமலாலயம் எனப் பெயர் பெற்றது என்று சொல்வார்கள். மேலும் இந்தத் தலத்தில் தான் இந்திரனின் ஆலோசனைப்படி தசரதன் வன்மீகநாதர் என்னும் புற்றிடம் கொண்டாரைத் தரிசித்துச் சென்றானாம். அதன் பின்னரே புத்ரகாமேஷ்டியாகம் செய்து ராமர் முதலான நாலு புத்திரர்களையும் பெற்றான் என்றும் ஐதீகம்.


கமலாம்பாள் தொடர்கிறாள்.

Monday, April 19, 2010

நடந்தாய் வாழி காவேரி! திருவாரூரின் அவலம்!


மதிய நேரத்து வழிபாடு நடந்து கொண்டிருந்தது. முதலில் நாங்கள் வன்மீக நாதர் என்னும் புற்றிடங்கொண்ட நாயகரைத் தரிசிக்கச் சென்றோம். அபிஷேஹங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆகவே அங்கே திரை போட்டிருந்தது. கமலாம்பிகையைப் பார்ப்பதென்றால் அதுக்குத் தனியாகப் போகணும். கொஞ்சம் நேரம் ஆகும். ஆகவே கோயிலிலேயே குருக்கள் வீதிவிடங்கரையும் தியாகராஜரையும் முதலில் பார்க்குமாறு சொல்லவே அங்கே சென்றோம். பூவம்பலம் என்னும் பெயருக்கொப்ப பூக்களால் மிக மிக அழகாய் அலங்கரிக்கப் பட்டிருந்தது. நடுவில் இருந்த குமாரன் பூக்களால் மறைக்கப் பட்டிருந்தான். வெளியே தெரியவில்லை. நாதமும், பிந்துவும் சேர்ந்து பிறந்த கலை வெளியே உடனே தெரியாதன்றோ? தியாகராஜரைப் பார்க்கப் பார்க்க மனம் பரவசம் அடைந்தது. இன்னதென்று புரியாத ஓர் உணர்வு. அவருக்குப் பின்னால் இருந்த ஒரு சிறு மேடையில் ஒரு வெள்ளிப் பெட்டி இருந்தது. அலங்காரங்கள் செய்து பூக்கள் சார்த்தி வைக்கப் பட்டிருந்த அந்தப் பெட்டியில் தான் வீதிவிடங்கர் இருப்பதாய்ச் சொன்னார்கள். வன்மீக நாதருக்கு அபிஷேஹம் முடிந்ததும், வீதி விடங்கருக்கு அபிஷேஹம் நடக்கும் என்றும் இருந்து பார்த்துவிட்டுப் போங்கள் என்றும் சொன்னார்கள்.

கூட்டமும் அதிகம் இல்லை. நானும் முன்னால் போய் நின்று கொண்டிருந்தேன். திரும்ப மனம் வரவில்லை. பத்துப் பதினைந்து பேர் உள்ளூர் மக்கள் இருந்தனர். ஒருத்தர் வீதி விடங்கர் பத்தின கதையைச் சொல்ல ஆரம்பிக்க, கேட்டுக்கொண்டு நின்றிருந்தேன். வன்மீக நாதருக்கு அபிஷேக ஆராதிகள் முடிந்து இங்கே ஆரம்பம் ஆயிற்று. தில்லையில் ரத்தின சபாபதிக்குச் செய்வது போல் விஸ்தாரமாய் இருக்கும் என நம்பிக்கொண்டிருந்தேன். அங்கே எல்லாவித அபிஷேஹங்களும் நடக்கும். ஆண்டவன் ஆடிக்கொண்டிருப்பதால் அதற்கு இடையூறு நேராவண்ணம் மனதிலேயே மந்திரங்கள் ஜபிப்பார்கள் தில்லையிலும். அது போல் இங்கேயும் அஜபா நடனம் ஆயிற்றே. மனதிலேயே மந்திரம் ஜபித்தாலும் அபிஷேஹம் நடைபெற்றது எனக்கு அவ்வளவாய் மனதுக்குத் திருப்தியைத் தரவில்லை. என்னமோ அவசரம், அவசரமாய்ப் பாலை ஊற்றிவிட்டுப் பின்னர் தண்ணீரையும் ஊற்றினார்கள். பின்னர் ஒரு அலங்காரம் இல்லை, எதுவும் இல்லை, வீதிவிடங்கரைத் துடைத்துப் பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டார்கள். தீபாராதனை எடுத்தார்களா? சரியாய்த் தெரியவில்லை. ஒரே ஏமாற்றமாய் இருந்தது.

சரி அதுதான் போகட்டும் என்றால் இங்கே தேவாரமோ, திருவாசகமோ எதுவும் யாராலும் பாடப்படவில்லை. எத்தனை பதிகங்கள் இந்தக் கோயிலுக்கு என்றே? நாயன்மார்கள் அதிகப் பதிகங்கள் பாடியதே இந்தக் கோயிலின் மீது தான் என முதலிலேயே அதற்காகவே குறிப்பிட்டேன். ஆனால் யாருமே வாயைத் திறக்கவில்லை. எந்த ஓதுவாரும் கோயிலுக்கென இல்லையா எனக் கேட்க நினைத்தேன். நம்ம ம.பா. சரி, சரி, வா, போகலாம்னு கூப்பிட்டுக் கொண்டு, கமலாம்பிகை சந்நிதி மூடிடுவாங்களாம், அப்புறம் பார்க்க முடியாதுனு இழுத்துக்கொண்டு கிளம்பினார். அரை மனசாய் எந்த விபரமும் யாரிடமும் கேட்கமுடியலையேனு வருத்தத்தோடு கமலாம்பிகையைத் தரிசிக்கச் சென்றோம். வழியிலேயே ஒரு குருக்கள் நடை சார்த்தியாச்சு எனச் சொல்ல என்னடா இதுனு திகைத்தோம். ஆனாலும் கூட வந்த ஒரு சில உள்ளூர் மக்கள் அவங்களோடு வரச் சொல்லவே நாங்களும் பின்னால் நடந்தோம். மற்ற வர்ணனைகள், விளக்கங்கள் தொடரும்.