எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, January 31, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஶ்ரீரங்கத்திற்கு ஒரு பொற்காலம் எனில் அது பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யம் ஏற்பட்ட போது என்று சொல்லலாம். பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் ஶ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டதோடு கோயிலும் பலமுறை சீரமைக்கப்பட்டது. இங்கே காணப்படும் சுமார் 70 கல்வெட்டுக்களில் பல கி.பி. 1225க்கும் கி.பி. 1344க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற கோயில் புனரமைப்பு வேலைகள் குறித்தும், பாண்டிய மன்னர்களால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட எண்ணற்ற விலை மதிக்க இயலாப் பரிசுகள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கின்றன. சோழநாட்டு அரசனாக இருந்த மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தான் பாண்டியர்கள் சாம்ராஜ்யம் புத்துணர்வு பெற்று எழுந்தது. அப்போது தான் ஶ்ரீரங்கம் கோயிலிலும் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டன.

பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையில் அடிக்கடி நடந்த மோதல்களினால் கோயில் வளாகத்துக்குள்  நடைபெற்ற மோசமான நடத்தைகளை விசாரிக்க வேண்டி ஒரு பெரிய கூட்டம் அப்போது தான் கோயிலின் வரலாற்றிலேயே முதல் முதலில் நடைபெற்றது. இவர்களில் ஜீயர்கள், ஶ்ரீகார்யக்காரர்கள், பாகவதர்கள், பல்வேறு விதமான தொண்டுகளைச் செய்து வரும் நம்பிமார்கள், வாயில் காப்போர்கள், பட்டாசாரியார்கள், ஶ்ரீரங்கம் கோயிலின் அலுவலகத்தைச் சேர்ந்த பல்வேறு ஊழியர்கள், பதினெட்டு மண்டலங்களைச் சேர்ந்த ஶ்ரீவைணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ராஜமஹேந்திரன் தெருவின் மேற்குப் பகுதியில் கூடினார்கள். பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இறந்த காலத்தில் கோயிலுக்குப் பாதகம் செய்தவர்கள் நீக்கப்பட்டுப் புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.  கோயிலின் நிர்வாகத்தைச் செம்மை செய்து முழு அர்ப்பணிப்பு உணர்வோடு தொண்டாற்றக் கூடியவர்கள் நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் நிர்வாகச் சீரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் மாறவர்மனுக்குப் பின்னர் வந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியனும்  திருக்கோயிலில் பொன்னால் திருப்பணி செய்ததால் "பொன்வேய்ந்த பெருமாள்" என அழைக்கப்பட்டான். இவன் காலத்தில் பொன்னாபரணங்கள் மட்டுமின்றி, பொற்கலசங்கள், விமானங்கள், மற்றும் விலைமதிக்க முடியாப் பல ரத்தினங்களால் ஆன ஆபரணங்கள் கோயிலுக்கு வழங்கப்பட்டது. பாண்டியனே துலாபாரம் மேற்கொண்டு தன்னுடைய எடைக்கு எடை பொன்னைக் கொடுத்ததாகவும் ஒரு கல்வெட்டு கூறுவதாகத் தெரிய வருகிறது.

பல்வேறு போர்களில் ஈடுபட்டு வென்று கிடைத்த பொருட்களை எல்லாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஶ்ரீரங்கம் கோயிலுக்குக் கொடுத்ததாகக் கேள்விப் படுகிறோம். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலே தான் நரசிம்மருக்கும், விஷ்வக்சேனருக்கும் தனித்தனி சந்நிதிகள் கட்டப்பட்டதாகவும் அறிகிறோம். சந்நிதிகள், விமானங்கள்  தங்கத் தகடுகள் வேயப்பட்டு கோபுரம் தங்கமுலாம் பூசப்பட்டன. மஹாவிஷ்ணுவின் அர்ச்சாவதாரம் ஒன்றும் தங்கத்தில் வைக்கப்பட்டது.


தகவல் உதவி: திரு கலைக்கோவன் "தி ஹிந்து" ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை, Srirangam's Golden Era.

Tuesday, January 13, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

சப்த லோகங்களையும் உள்ளடக்கியது என்னும் பொருளில் ஏழு பிரகாரங்கள் கொண்டுள்ள ஶ்ரீரங்கம் கோயிலில் மூன்று பிரகாரங்களின் இரு பக்கங்களிலும் குடியிருப்புகளும் நான்கு பிரகாரங்களில் பிரம்மாண்டமான மண்டபங்களும் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் மிகப் பெரியது ஆகும்.  பல்வேறு விதமான சேனைகளுடன் ஓர் ஊரே தங்குமளவுக்குப் பெரிதான ஆயிரங்கால் மண்டபத்தில் தற்சமயம் பாதுகாப்புக்காரணங்களுக்காக யாரையும் தங்க அனுமதிப்பதில்லை. ஏழு பிரகாரங்களைத் தவிர ஊரை உள்ளடக்கிய அடையவளைஞ்சான் திருச்சுற்றில் தான் ராஜகோபுரம் அமைந்துள்ளது.

மார்கழி மாதம் நடைபெறும் வகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வைபவம் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்திலிருந்து நான்காம் பிரகாரம் செல்லும் வழியில் பெரிய சந்நிதிக்கு வடபுறம் உள்ளது.  இது கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபத்துக்கு அருகாமையில் உள்ளது. வருடாவருடம் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை திறக்கப்படும் பரமபத வாசல் அடுத்த ஒன்பது நாட்களும் இராப்பத்து உற்சவம் முடியும் வரை திறந்திருக்கும்.  இந்தப் பரமபத வாசல் வழியாகவே தினம் தினம் நம்பெருமாள் இராப்பத்து உற்சவம் முடியும் வரை சென்று வருவார்.  அவருடன் அடியார் திருக்கூட்டமும் செல்லும்.  இந்த வாசல் வழி சென்றால் வைகுந்த பிராப்தி நிச்சயம் என்னும் ஐதீகம் உள்ளதால் இது திறந்திருக்கும் ஒன்பது நாட்களும் பெருமளவில் பக்தர் கூட்டம் கோயிலுக்கு வருவார்கள்.

இந்த நான்காம் பிரகாரத்தின் கிழக்குப் பக்கம் மணல்வெளியாகக் காணப்படும்.  இங்கே தான் வைகுண்ட ஏகாதசியின் இராப்பத்து உற்சவத்தின் போது வேடுபறி நடக்கும். வையாளி சேவை இங்கே நடைபெறும் என்பதால் மணல் வெளியாக அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு கூற்று இருந்தாலும் பாதங்களுக்கு நல்ல பயிற்சி என்பதாலும் இங்கே மணலாக அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுவார்கள்.  இந்த மணல் வருடா வருடம் மாற்றப்படும்.  இந்த நான்காம் பிரகாரத்தில் காணப்படும் சந்திர புஷ்கரணிக்கரையில் கோதண்டராமர் சந்நிதியைக் காணலாம்.  ஶ்ரீரங்கத்தில் பிரகாரங்களில் மேலப் பட்டாபிராமர் சந்நிதி, கீழப் பட்டாபி ராமர் சந்நிதி, கோதண்டராமர் சந்நிதி ஆகியவை மிகவும் பிரபலம்.

கோதண்டராமர் சந்நிதியிலிருந்து சற்று உள்ளே பரமபதநாதர் சந்நிதியில் ஶ்ரீபரமபதநாதர் ஶ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேதராக அருள் பாலிக்கிறார்.  நித்யசூரிகள் புடைசூழ ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஒருசேரக் காட்சி அளிக்கக் காட்சி தரும் பரமபத நாதர் சந்நிதியில்  தான் கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியும் இருக்கிறது. இந்தப் பரமபத நாதர் ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள் இங்கே குடிவரும் முன்னரே இருந்தவர் என்றும், சந்திர புஷ்கரணியும் அப்போது இருந்ததாகவும், இவற்றைப் பார்த்துவிட்டே விபீஷனண் ஶ்ரீரங்க விமானத்தோடு இங்கே இறங்கியதாகவும் சொல்கின்றனர்.  இப்போது நடைபெறும் திருவத்யயன உற்சவம் எனப்படும் பகல் பத்து, இராப்பத்து உற்சவம் ஆதிகாலங்களில் திருமங்கையாழ்வார் இருந்தபோது  இந்த சந்நிதியில் தான் நடத்தப் பட்டிருக்கிறது.  பின்னர் நாதமுனிகள் காலத்தில் 20 நாள் விழாவாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியில் மார்கழி அலங்காரம்;

படம் கூகிளார் வாயிலாக தினமலருக்கு நன்றி.

Sunday, January 11, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஶ்ரீரங்கத்திலிருந்து உற்சவர் அழகிய மணவாளர் (இவர் தான் பின்னால் நம்பெருமாள் எனப் பெயர் மாற்றம் பெற்றவர்) ஊர் ஊராக அலைய ஆரம்பித்ததும், சில வருடங்கள் அவர் இருக்குமிடம் தெரியாமலேயே இருந்து வந்தது.  அப்போது உள்ளூர்க்காரர்கள் புதியதொரு விக்ரஹத்தைச் செய்து உற்சவர் இடத்தில் அமர்த்தினார்கள்.  பின்னால் திருமலையில் நம்பெருமாள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவரும் ஶ்ரீரங்கம் திரும்பி வந்ததும், அனைவருக்கும் இத்தனை நாட்களாக அவர் இடத்தில் இருந்தவரை என்ன செய்வது எனத் தோன்றியது!


இவரும் திருவரங்கத்தைச் சேர்ந்தவர் தானே என்னும் எண்ணம் தோன்றிய கோவில் ஊழியர்கள் அவரை நம்பெருமாள் அருகிலேயே வைத்தனர்.  திருவரங்க மாளிகையார் என்னும் புதுப் பெயரைச் சூட்டினார்கள்.  யாகசாலை நாட்களில் இவரே அங்கு எழுந்தருளுவார் எனவும் அப்போது ,"யாகபேரர்" என அழைக்கப்படுவார் என்றும் தெரிய வருகிறது.  ஆனால் இப்போது அவர் நம்பெருமாளுடன் கருவறையில் காணப்படவில்லை.  எங்கே இருக்கிறார் என விசாரிக்க வேண்டும்.  இங்கிருக்கும் சிலரை விசாரித்ததில் அவர்களில் பலருக்கு இந்த விஷயமே தெரியவில்லை.  தெரிந்தவர்களைக் கேட்டுச் சொல்கிறேன்.

இந்தக் கோயிலின் மொத்த சந்நிதிகள் 54 ஆகும்.  ஒவ்வொரு சந்நிதிக்கும் தனித்தனியான நிவேதனங்களும் உண்டு.  இவை அனைத்தும் இங்குள்ள திருக்கொட்டாரம் எனப்படும் இடத்தில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு சந்நிதியையும் சேர்ந்த அர்ச்சகர் அல்லது மடைப்பள்ளி ஊழியர் அங்கு வந்து அன்றைய நிவேதனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். உபயதாரர்கள் அளிக்கும் காணிக்கைப் பொருட்களில் இருந்து அனைத்தும் இங்கேயே சேமிக்கப்படுகின்றன.

இந்த நிவேதனங்கள் பெரும்பாலும் பாலிலும், நெய்யிலுமே செய்யப்படுகின்றன.  விளக்குகள் கூடச் சுத்தமானப் பசு நெய்யிலேயே எரிக்கப்படுகின்றன. ஆதிசேஷனுக்கு மிகவும் பிடித்தது பால் தான் என்பதால் தினமும் இரவு நேரம் அரவணை வழிபாட்டின் போது ஆதிசேஷனுக்குப் பால் அமுது செய்விக்கப்படும்.  பெருமாளுக்கு அரவணை நிவேதனம் செய்யப்படும். இவற்றைப் பிரசாதமாக வழங்குவார்கள்.  இதைத் தவிர மாலையிலும் க்ஷீரான்ன வழிபாட்டின் போது பாலமுது தான் ஶ்ரீரங்கநாதருக்கு நிவேதனம் செய்யப்படும்.படத்துக்கு நன்றி: கூகிளார் வாயிலாக தினகரன் தினசரியில் வந்தது. 


"ரங்கனே தெய்வம், பொங்கலே பிரசாதம், கம்பமே காவிரி" என்பது இங்குள்ள பிரபலமான சொல்வழக்கு.  ஶ்ரீரங்கம் கோயிலில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் எனப்படும் அரவணை, புளியோதரை, அப்பம், அதிரசம், தேன்குழல், திருமால்வடை, தோசை போன்றவற்றோடு தினம் காலை வழிபாட்டில் கோதுமை ரொட்டியும், வெண்ணெயும் நிவேதனம் செய்யப்படுகிறது.  தாயாருக்கு மாலை வேளைகளில் புட்டு அமுது செய்யப்படும்.  வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு நிவேதனமாக சம்பார தோசை, செல்வரப்பம்,ஆகியவையும் கடைசி நாளான நம்மாழ்வார் மோக்ஷத்தன்று "கேலிச் சீடை"யும் நிவேதனம் செய்யப்படும்.