எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, November 19, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஹொய்சள இளவரசன் என்னும் பெயரில் இருந்த ராஜவர்த்தன குலசேகரன் கைகளால் வாளைப் பெற்றுக் கொண்ட குலசேகரன் ஆழ்ந்த சிந்தனையுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான் அவனுடன் சுமார் இருபது ஹொய்சள வீரர்கள் மாறு வேடத்தில் தொடர்ந்தார்கள். ராணி கிருஷ்ணாயியுடனான தன்னுடைய உறவின் காரணத்தால் தான் திருமணம் ஆகாமலே பெற்றுக் கொண்ட பிள்ளையை நினைந்து ஒரு கணம் குலசேகரன் மனம் சிலிர்த்தாலும் பாசத்தையும் மீறிய வெறுப்பே மேலோங்கியது! ஆனால் அதற்கு அந்தக் குமாரன் என்ன செய்வான்? தான் மட்டும் இணங்கவில்லை எனில் ஹேமலேகா ராணி வாசத்திலேயே வாழ்வதோடு அல்லாமல் விரைவில் மடிந்தும் போயிருப்பாள். ஓர் அழகிய மலர் வெளி உலகைக் காணாமலேயே கருகிப் போய் இருந்திருக்கும். தன்னுடைய இந்தச் செயலால் ஹேமலேகா காப்பாற்றப்பட்டாள் என்பதை நினைத்துக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தான் குலசேகரன். தொடர்ந்து அவர்கள் ஐந்து தினங்கள் ஹொய்சள நாட்டுக்குள்ளேயே பயணம் செய்ததால் வழியில் எவ்விதமான பிரச்னையும் இல்லை. அதன் பின்னர் சுல்தானின் எல்லைக்குள் அவர்கள் நுழைந்தனர்.

மதுரைக்குத் தெற்கே ஆரம்பித்திருந்த சுல்தானிய அரசு வடக்கே கண்ணனூரைத் தாண்டிப் பல காத தூரம் வியாபித்திருந்தது. இந்தக் கண்ணனூர் தான் இப்போது சமயபுரம் என அழைக்கப்படுகிறது. சுல்தானின் எல்லைக்குள் நுழைந்ததும் நேர் வழியில் செல்லாமல் சுற்று வழியில் பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். நுழைந்த மூன்றாம் நாள் வட காவிரி என அழைக்கப்பட்டக் கொள்ளிடக் கரையை அடைந்தார்கள். பகலெல்லாம் மறைந்திருந்து ஓர் அடர்ந்த சோலைக்குள் தங்கியவர்கள் இரவானதும் "அழகிய மணவாளம்" என்னும் கிராமத்தை அடைந்தனர்.

கிராமத்தின் தோட்டங்களை அடைந்ததும் மற்ற வீரர்கள் ஏற்கெனவே பேசி இருந்தபடி தங்கள் குதிரைகளை இளைப்பாறக் கட்டிவிட்டு அவர்களும் அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தனர். குலசேகரன் மட்டும் தன் குதிரையைக் கட்டி விட்டு நடந்தே கிராமத்துக்குள் செல்லலானான். நிலவொளி பாலாய்க் கொட்டி வழி தேடச் சிரமம் இல்லாமல் இருந்தது. அதன் குளுமையில் நனைந்த வண்ணம் சென்ற குலசேகரன் செவிகளில் இனிமையான நாதம் கேட்டது. அது எங்கே என்று கண்டறிந்து கொண்டு அந்தத் திசை நோக்கிச் சென்றவன் ஓர் வீட்டின் வாசலை அடைந்தான். உள்ளிருந்து யாழின் இன்னிசை பிரவாகமாய்க் கிளம்பி எங்கும் வியாபித்தது. அந்த யாழிசையைத் தான் முன்னர் எப்போதே கேட்டமாதிரி இருப்பதாகக் குலசேகரன் ஊகித்தான். உடனே பரபரப்புடன் அந்த வீட்டின் முகப்பின் அருகே இருந்த சாளரத்தின் அருகே சென்று உள்ளே உற்று நோக்கினான்.

அவன் கண்களுக்கு உள்ளே மங்கலாகத் தெரிந்த வெளிச்சம் தவிர ஆள் நடமாட்டம் தெரியவில்லை. ஆகவே கதவருகே சென்று கதவைத் தட்டினான். உள்ளிருந்து ,"யார்?" என்று ஒரு குரல் கேட்டது. அடுத்த கணம் வாயில் கதவு திறக்கப்பட்டுக் கையில் ஓர் அகல் விளக்குடன் மெல்லிய உடலுடைய ஓர் பெண் நின்றாள். விளக்கின் ஒளியில் அவள் மேனி எல்லாம் தங்கமாய்த் தகதகத்தது. அவள் கண்கள் அந்த அகல்விளக்குகள் போலவே சுடர் விட்டுப் பிரகாசித்தது. குலசேகரனுக்கும் அவள் யார் எனப் புரிந்து விட்டது. "நீங்களா" எனக் கேட்டவண்ணம் அவனைப் பார்த்த ஹேமலேகாவின் கைகள் அகல்களைப் பிடிக்க முடியாமல் நடுங்கின. அவளை ஆவலுடன் பார்த்த குலசேகரன், "ஹேமலேகா" என ஆவலுடன் அழைத்தான். அவள் தலை நிமிராமல், "சௌக்கியமா?" எனக் கேட்டாள். அப்போது உள்ளிருந்து ஓர் குரல், "வெளியே யார் வந்திருக்கிறார்கள்? ஹேமு, உள்ளே அழைத்து வா!" என்றது. அந்தக் குரல் கேட்டுத் திடுக்கிட்டான் குலசேகரன். ஹேமலேகா அவனை உள்ளே வரும்படி அழைத்தாள். உள்ளே சென்ற குலசேகரன் அந்த வீட்டின் எளிமையைப் பார்த்து வியந்தான். அங்கே படுத்திருந்த ஓர் வயோதிகர் மெல்ல எழுந்திருந்தார். ஹேமலேகா அவனிடம் "இவர் என் கணவர்" என அறிமுகம் செய்து வைத்தாள். அவருக்கு எழுபது வயது இருக்கலாம். குலசேகரன் திடுக்கிட்டு நின்று விட்டான். 

Saturday, November 17, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் துயரம்!

ஒரு பெருமூச்சுடன் தன்னை அடக்கிக் கொண்டான் குலசேகரன். அவனுக்கு உண்மை புரிந்து ஒரு பக்கம் தன் மகன் என்னும் பாசம் வந்தாலும் ஆழ் மனதின் வெறுப்பே மேலே தலை தூக்கியது. தன்னை எப்படிப் பயன்படுத்திக் கொண்டாள் கிருஷ்ணாயி என்பதை அவனால் மறக்கவே முடியவில்லை. எதுவும் பேசாமல் சத்திரத்துக்குத் திரும்பிப் படுத்தவனுக்குத் தூக்கம் வரவில்லை. திரும்பத் திரும்பக் கிருஷ்ணாயியின் மகன் முகமே அவன் நினைவில் வந்தது. அவனைப் பார்க்கும் எவருக்கும் அந்தச் சிறுவனைப் பிடித்து விடும். அவ்வளவு சுறுசுறுப்பும் துடிதுடிப்பும். ஆனால் இது என்ன முறைப்படியாகப் பிறந்த குழந்தையா? அவனைக் கிருஷ்ணாயி பயமுறுத்தி மிரட்டி ஹேமலேகாவின் உயிரைப் பலி வாங்குவதாகச் சொல்லி அல்லவோ அவனைச் சம்மதிக்க வைத்தாள். அவள் பிறந்த துளுவ நாட்டில் இது பழக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில்! அதுவும் என்னை எப்படியேனும் அடையவேண்டி அவள் செய்த சாகசங்கள்!

ஹேமலேகாவை எப்படி எல்லாம் வஞ்சித்திருக்கிறாள். அவள் அழகு, இளமை அனைத்தும் பலி கொடுக்கப்பட்டு அன்றோ இந்தக் குமாரனை அவள் பெற்றெடுத்திருக்கிறாள். அவளுக்கு மனசாட்சி என்பதே இல்லையா? இன்னொருவன் மனைவியைத் தான் தொட்டுக் கொஞ்சி, அந்த இறைவனுக்கும் கண்ணில்லாமல் போயிற்றே! நான் எவ்வளவு பெரிய பாவியாகி விட்டேன். இப்படி எல்லாம் யோசித்துத் தன்னை மறந்த நிலையில் இருந்த குலசேகரன் காதுகளில் ஹேமலேகா அழைப்பது போன்ற மயக்கம் ஏற்பட்டது. அவள் இங்கே இல்லை. அவள் அழைக்கவில்லை. ஆனாலும் அவன் மனம் அவளையே நினைத்தது. எவ்வளவு ஆதுரத்துடன் தன்னைக் கனிவு பொங்கப் பார்ப்பாள். அவள் அழகிய புன்னகை சிந்தும் முகம் அவன் கண்ணெதிரே தோன்றியது. இவ்வுலகில் ஹேமலேகாவின் முகமும் குரலும் மட்டுமே அவனுக்குள் இன்பத்தைத் தந்து கொண்டிருந்தது. ஆனால் இன்றோ!

ஹேமலேகா!ஹேமலேகா! அவளைப் பார்த்து நீண்ட நேரம் பேசித் தன் துயரங்களை எல்லாம் சொல்லிக் கிருஷ்ணாயி தன்னைப் படுத்திய பாட்டை எல்லாம் சொல்லி ஆறுதல் பெற வேண்டும் போல இருந்தது குலசேகரனுக்கு. ஆனால் அவன் விதியோ அல்லது அவன் கொண்ட லக்ஷியமோ அல்லது அவன் மேற்கொண்டிருக்கும் வேலை காரணமாகவோ எப்போது அவளைப் பார்த்தாலும் நின்று பேச முடியாமல் அவசரமாகக் கிளம்பும்படியே ஆயிற்று.
அவளுக்கும் என்னிடம் நேசம் இருந்திருக்க வேண்டும். ஆம், ஆம் அது தெரிந்ததால் தான் கிருஷ்ணாயி அவளை ராணி வாசம் செய்யச் சொல்லி இருக்கிறாள். பேசும்போது குழைவான குரலில் இனிமை பொங்கப் பேசுவாளே! பார்க்கையில் கனிவு சொட்டுமே!என் மீது எவ்வளவு அக்கறை கொண்டிருந்தாள். எனக்காக எவ்வளவெல்லாம் உதவிகள் செய்தாள். ஆலோசனைகள் கொடுத்தாள். இத்தனைக்கும் அவள் என்னைவிடப் படித்தவள். அழகானவள். தன் பாண்டித்தியத்தின் திறமையால் அரச சபைகளில் முக்கிய இடம் பெற்றவள். படிப்பில்லாத என்னிடம் அவள் கொண்டிருந்த ஈடுபாடு எவ்வளவு வலிமையானது! எப்படி அவளுக்குத் தன் மேல் இவ்வளவு ஈடுபாடு, நேசம் ஏற்பட்டது? தூக்கம் வராமல் தவித்தான் குலசேகரன்.

மறுநாள் குலசேகரன் மாறுவேடம் தரித்த ஹொய்சளக் குதிரைவீரர்களுடன் தெற்கு நோக்கிக் கிளம்பினான். அரச சபை கூடி அவனுக்கு வழியனுப்பியது. அரசர் மாபெரும் திரவியங்கள் அடங்கிய பொதியைக் குலசேகரனிடம் கொடுத்தார். அரசர் வைணவராக  இருந்ததால் அந்தக் கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள் குலசேகரனுக்கும் அளிக்கப்பட்டன. பிரசாதத்தைத் தலை குனிந்து ஏற்ற குலசேகரன் நிமிரும்போது எதிரே கிருஷ்ணாயியும் அவள் மகனும் வந்து கொண்டிருந்ததை அதுவும் தன்னை நோக்கி வந்ததைக் குலசேக்ரன் பார்த்துத் திடுக்கிட்டான். மன்னரைப் பார்த்தால் அவர் புன்னகையுடன் இதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அரசகுமாரனான ராஜவர்த்தனன் தன் கையில் வைத்திருந்த பளபளக்கும் வாள் ஒன்றைப் பட்டுத் துணி ஒன்றின் மேல் வைத்து மிக மரியாதையுடன் குலசேகரனிடம் நீட்டினான். குலசேகரனுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் அவன் அரசகுமாரன் என்னும் பெயரில் இருப்பதால் தலை தாழ்த்தி வணக்கம் சொல்லிவிட்டு அந்த வாளைத் தன் இரு கரங்களாலும் பெற்றுக் கொண்டான். ஒரு கணம் அவன் நெஞ்சம் விம்மியது. கண்களில் நீர்க் கோர்த்தது. அதைப் பார்த்துக் கிருஷ்ணாயியின் முகம் மலர்ந்தது. குலசேகரன் மனம் நிறைய விரக்தியோடு கிருஷ்ணாயியைப் பார்த்தான். ஆனால் அவள் கண்களில் கனிவு தெரியவே எதுவும் பேசாமல் தலையைத் தாழ்த்தி அவளையும் வணங்கிவிட்டுக் குலசேகரன் அங்கிருந்து கிளம்பினான்.

Friday, October 05, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! கிருஷ்ணாயியின் மகன்!

மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எனவும் ஒற்றுமையாய் அன்னியனை எதிர்க்க வேண்டும் எனவும் கூறியவர் மேலும் அப்படிப் போரிடத் தொடங்கும் முன்னர் கண்ணனூர்க் கோட்டையில் இருக்கும் சுல்தானியர்ப் படையைத் தாக்கித் தான் ஶ்ரீரங்கத்தை மீட்க முடியும் என்பதால் அந்தச்சமயம் மதுரை சுல்தான் அவர்களுக்கு உதவ முடியாமல் தடுக்க வேண்டும் எனவும் அந்தப் பொறுப்பைக் குலசேகரன் தான் ஏற்க வேண்டும் எனவும் சொன்னார்.  அதற்குத் தான் செய்ய வேண்டியது என்னவென்று குலசேகரன் கேட்டான். மன்னர் மேலும் தொடர்ந்து மதுரைக்கும் கண்ணனூருக்கும் செல்லும் ராஜபாட்டையில் ஒவ்வொரு காத தூரத்துக்கும் ஒவ்வொரு வீரனை நிறுத்தி வைத்திருப்பதாகவும்   இவர்கள் மூலம் மதுரைக்கும் கண்ணனூருக்கும் இடையே செய்திப் பரிமாற்றம் நடைபெறுகிறது  என்றும் கூறியவர் இந்தத் தொடர் மனிதச் சங்கிலியை முதலில் அறுக்க வேண்டியது குலசேகரன் கடமை என்றார். கண்ணனூரில் இருந்து எந்தச் செய்தியும் மதுரைக்கோ அல்லது மதுரையிலிருந்து கண்ணனூருக்கு எந்தச் செய்தியுமோ போகாமல் தடுக்க வேண்டும் என்றார்.

தன்னால் நிச்சயமாய் அதைச் செய்ய முடியும் என்ற குலசேகரனிடம் அவனுக்கு உதவியாக மாறுவேடத்தில் 20 குதிரை வீரர்கள் வருவார்கள் எனவும் அவர்கள் உதவியுடன் அந்தச் செய்தி எடுத்துச் செல்லும் மனிதச் சங்கிலியில் அனைவரையும் அழித்து ஒழிக்க வேண்டியது குலசேகரன் பொறுப்பு எனவும் கூறினார் மன்னர். குலசேகரனிடமிருந்து இந்த வேலை முடிந்தது எனத் தகவல் வந்ததும் அவர்கள் தங்கள் படையெடுப்பை உடனே ஆரம்பிக்க வசதியாக இருக்கும் என்றார். இதைத் தவிர்த்தும் மேலும் பல ஆலோசனைகளை மன்னர் குலசேகரனுக்குச் சொன்னார். அவன் ராஜசபையில் இருந்து கிளம்பி அரண்மனை முற்றத்தை அடைந்தான். அப்போது ஓர் இளங்குரல் அவனை "நில்!" என அதிகாரமாக ஆணையிட்டுச் சொன்னது. திரும்பிப் பார்த்த குலசேகரன் சுமார் பத்து வயது நிரம்பிய ஓர் சிறுவன் முகமூடி அணிந்த வண்ணம் வாளைச் சுழற்றிக் கொண்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டான். அந்தச் சிறுவனின் துணிச்சல் குலசேகரனுக்கு மிகவும் பிடித்தது. எனினும் அவன் வாள் குலசேகரனைத் தாக்க முயன்றதால் தன் வாளால் பாதுகாப்புக்காகத் தடுப்பு முறைகளைப் பிரயோகம் செய்து தன்னைக் காத்துக் கொண்டான் குலசேகரன்.

அப்போது அங்கே ஓர் சேடிப் பெண், "இளவரசே! இளவரசே!" எனக் கூவிக் கொண்டே ஓடி வந்தாள். அவளைத் தொடர்ந்து ராணி கிருஷ்ணாயியும் ஓடி வந்து கொண்டிருந்தாள். கிருஷ்ணாயியைப் பார்த்த குலசேகரன் மீண்டும் திடுக்கிட்டு அவளைச் சந்திக்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். குலசேகரனை அங்கே ராணியும் எதிர்பார்க்கவில்லை ஆதலால் செய்வதறியாது அவள் திகைத்து நிற்கச் சிறுவன் தன் முகமூடியை அகற்றி விட்டு, "அம்மா! யார் இது?" என்று வினவிய வண்ணம் வாளைச் சுழற்றினான். கிருஷ்ணாயியின் முகத்தில் நாணம் பூத்தது. குலசேகரனைப் பார்த்து அவள் "சுவாமி! இது, இந்தச் சிறுவன்...... தங்கள்....." என இழுத்தவள் மேலே தொடராமல் நிறுத்தினாள். அப்போது தான் திரும்பி அந்தச் சிறுவன் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்ட குலசேகரனுக்கு ராணியின் வார்த்தைகள் புரிந்தன. சிறுவனை உற்று நோக்கினான். சிறுவனின் கண்களும் உடல் தோற்றமும் தன்னை ஒத்திருந்ததைக் கண்டு கொண்டான் குலசேகரன். இவன் தன் மகன் என்பதை அவன் புரிந்து கொண்டு விட்டான்.

அவன் உடல் ஓர் கணம் சிலிர்த்தது. தன்னில் ஒரு பாதி தன் எதிரே நிற்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் அவன் அறிவோ விழித்துக் கொண்டிருந்தது. ஆகையால் அந்தச் சிறுவனைத் தான் எவ்விதத்திலும் எந்த உறவும் கொண்டாட முடியாது என்பதையும் உணர்ந்தவனாக இருந்தான். ஆகவே ஆர்ப்பரித்து எழுந்த தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு இறுகிப் போன முகத்தோடு அங்கே நின்றான். கிருஷ்ணாயி அவனைப் பார்த்து, "சுவாமி! இவன் என் மகன் தான். இவன் பெயர் ராஜவர்த்தன குலசேகரன்!" என்றாள்.  அவள் சொன்னதைக் கேட்ட குலசேகரன் கண்களில் நீர் பெருகியது. மீண்டும் மீண்டும் அந்தச்  சிறுவன் பக்கமே அவன் கண்கள் சென்றன. அவன் நிற்கும் தோரணை குலசேகரனுக்குத் தன்னைத் தானே பார்த்துக் கொள்வது போல் இருந்தது. தன் வாழ்க்கையில் முதல்முதலாகத் தானே தன்னில் இருந்து பிரிந்து வந்து ஓர் சிறுவனாக எதிரே நிற்பதைக் கண்டதும் அவனுள் தன்னையும் அறியாமல் தந்தை என்னும் உணர்வும் அதற்கான பாசமும் ஏற்பட்டுக்கண்களில் நீர் பெருகச் செய்தது.

அந்தச் சிறுவனைக் கட்டி அணைக்கலாமா என யோசித்து முன்னே ஓர் அடி எடுத்து வைத்தவனுக்கு மீண்டும் அந்தச் சிறுவன், "அம்மா, யார் இவர்?"  எனக்கேட்ட குரல் காதில் விழுந்தது. தன்னிலை உணர்ந்த குலசேகரன் மௌனமாக அங்கேயே நின்றான். தன்னை முழுதும் அடக்கிக் கொண்டான். அவன் மனதில் பாசமும், கிருஷ்ணாயி மேல் வெறுப்பும் சிறுவன் மேல் உள்ள பிள்ளைப் பாசமும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டன. தன் உணர்வுகளை அடக்க முடியாத குலசேகரன் அங்கிருந்து வெளியேறுவது ஒன்றே வழி என நினைத்து அங்கிருந்து வெளியேறித் தான் தங்கி இருந்த சத்திரத்தை நோக்கிச் சென்றான். சத்திரத்திலும் அவனுக்குத் திரும்பத் திரும்பச் சிறுவனின் முகமே நினைவில் வந்தது. எவ்வளவு துடிப்பான முகம்!பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் தன்மை வாய்ந்தவன் அந்தச் சிறுவன். இவன் என் மகன் தான்! ஆனால்! எப்படி! எவ்வாறு! நினைக்க நினைக்கக் குலசேகரன் மனம் துடித்தது.

Tuesday, October 02, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருவண்ணாமலையில்!

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் குலசேகரனைக் கண்டதும் ஓடோடி வந்து விசாரித்த கிருஷ்ணாயியைக் கண்டு குலசேகரன் பிரமித்தான். அவள் மனம் முதிர்ச்சி அடைந்திருப்பதை அவள் கண்கள் காட்டின. பெண்மைக்கே உரித்தான நிதானமும், கனிவும் அவள் கண்களில் வழிந்து கொண்டிருந்தது.  என்றாலும் குலசேகரனால் அவளைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. ஒரு கணம் அவளை வெறித்தவன் மறுபடி தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். அவன் முகம் கல் போல் இறுகியது. கிருஷ்ணாயியோ அவன் தன்னைப் பார்க்கவே விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டவளாக, "ஏன் என்னைப் பார்க்க மறுக்கிறீர்கள் ஸ்வாமி? எப்போது வந்தீர்கள்? என்னை ஏன் வந்து பார்க்கவில்லை! என் மேல் என்ன கோபம்?" என்றெல்லாம் விசாரித்தாள். குலசேகரனோ வேறு பக்கம் திருப்பிய பார்வையுடனேயே அவளைப் பார்த்து, "மஹாராணி, என்னை எதுவும் கேட்க வேண்டாம். நான் பழைய விஷயங்களை எல்லாம் மறக்க விரும்புகிறேன்." என்றான். அவன் கண்களிலே கண்ணீர் ததும்பி நின்றது.

கிருஷ்ணாயியோ அவனைப் பார்த்து,"ஸ்வாமி! எனக்குக் காரணம் புரிகிறது! ஆனால் இனி நான் உங்கள் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யவே மாட்டேன்! இனியும் உங்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்பவும் இல்லை. பழைய விஷயங்களுக்காகவும், நான் நடந்து கொண்ட முறைக்காகவும் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னியுங்கள்! நான் வருகிறேன்!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள். பிறகு அவனைப் பார்த்துத் தயங்கியவண்ணம் அவன் திருவண்ணாமலைக்கு வந்திருக்கும் காரணம் தனக்குப் புரியவில்லை என்றும் எனினும் அவனுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் தான் செய்யத் தயாராய் இருப்பதாகவும் தெரிவித்தாள். மேலும் அவனை ஒரு முறையாவது அந்தப்புரம் வந்து தன்னைப் பார்த்துச் செல்லும்படியும் அவன் வந்தால் அது தனக்கு என்றென்றும் மறக்க இயலா ஓர் நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் என்றென்றும் தான் அதை நினைவில் வைத்துப் போற்றி வருவாள் எனவும் தெரிவித்தாள். குலசேகரன் மறுமொழி சொல்லாமல் அவளைத் திரும்பியும் பார்க்காமல் மௌனம் சாதித்தான். பின்னர் அவள் கிளம்பிச் சென்றபின்னர் அவனும் அங்கிருந்து வெளியேறி முன்னர் தான் தங்கும் சத்திரம் திரும்பினான்.  யாரைப்பார்க்க வேண்டாம் என நினைத்தானோ அவளைப் பார்க்க நேர்ந்தது தன் துர்ப்பாக்கியம் தான் எனக் கருதினான்.

இரவுப் பொழுதைச் சத்திரத்தில் கழித்த குலசேகரன் மறுநாள் காலை தன்னை அரச சந்திப்புக்கு ஏற்றவாறு அலங்கரித்துக் கொண்டு அரண்மனை நோக்கிச் சென்றான். அங்கே அரசர் வல்லாளர் சிங்காதனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார். சுமார் எழுபது வயதுக்கு மேல் ஆனாலும் அவருடைய கம்பீரமும் கட்டுக்குலையாத உடம்பும் குலசேகரனைக் கவர்ந்தது. குலசேகரனை அவர் அடையாளமும் கண்டு கொண்டார். அவனைப்பார்த்து சிங்கப்பிரான் அனுப்பினாரா எனக் கேட்டவர் மேலும் தொடர்ந்து, "வீரனே! நீ திருவண்ணாமலை வர இஷ்டப்படவில்லை என சிங்கப்பிரான் சொன்னாரே!" என்றும் வினவினார்.  குலசேகரன் சற்று நேரம் மௌனமாக இருந்தவன் பின் மன்னரைப் பார்த்து, "அரசே! இந்தத் தென்னாட்டு அதிலும் தமிழகத்து அரசர்களிடம் எனக்கு நம்பிக்கையே இல்லை! சிறிதும் இல்லை!" என்றான். வல்லாளர் கலகலவெனச் சிரித்தார்.

குலசேகரனைப் பார்த்துப் பத்து வருடங்கள் முன்னர் இளமைத் துடிப்பில் இருந்தபோது பேசிய அதே மாதிரி அவன் இப்போதும் படபடப்புடன் பேசுவதைச் சுட்டிக் காட்டினார். மேலும் ராஜரிக காரியங்களில் அவசரமோ, படபடப்போ கூடாது என்றும் அறிவுறுத்தினார்.  எத்தனையோ சோதனைகளுக்குப் பின்னர் ஹொய்சளம் இப்போது தான் இரண்டு, மூன்று ஆண்டுகளாக வலுப்பெற்று வருவதாயும் சொன்னார். வடக்கே உள்ள பகைவர்களை இப்போது தான் அழித்து ஒழித்ததாகவும் இனிமேல் தெற்கே தங்கள் கவனத்தைத் திருப்பப் போவதாயும் சொன்னார்.  மேலும் இதைத் தான் ஏற்கெனவே சிங்கப்பிரானுக்குத் தெரிவித்துவிட்டதாயும் கூறியவர் இப்போது ஹொய்சளம் தமிழ்நாட்டின் மதுரை சுல்தான் மேல் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாயும் கூறினார்.  குலசேகரன் முகம் பிரகாசம் அடைந்தது.

இந்தச் செய்தியைக் கேட்கவே தான் காத்திருந்ததாய்ச் சொன்ன அவன் இந்த முடிவு குறித்து அவனுக்கு ஏதும் தெரியாது என்பதால் தான் வந்த உடன் மன்னரிடம் குற்றம் கூறியதாகவும் இது முன்னரே தெரிந்திருந்தால் மகிழ்ச்சியோடு மன்னரை வந்து கண்டிருப்பேன் எனவும் தெரிவித்தான்.  மன்னர் அவனிடம் பொறுமையுடன் காத்திருந்து தான் எதையும் செய்யவேண்டும் என்றும் இப்போது நேரம் வந்து விட்டதாயும் சொன்னார். மேலும் குலசேகரன் தன் மேல் கொண்டிருக்கும் கோபம், வருத்தம் ஆகியவை அவருக்குத் தெரியும் என்பதால் தான் நேரிடையாக அவனைத் திருவண்ணாமலை வரும்படி சொல்லி அனுப்பவில்லை என்றும் சிங்கப்பிரானிடம் சொல்லி அவனை அனுப்பச்சொன்னதாகவும் தெரிவித்தார்.  அவனுக்கு இங்கே நிறைய வேலைகள் காத்திருப்பதாயும் சொன்னார். குலசேகரன் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொள்ள மன்னர், திருவரங்கத்தையும், திருச்சியையும் மதுரை சுல்தான்களிடமிருந்து மீட்பதற்காகப் போர் செய்யவும் தயங்கப்போவதில்லை என்பதைத் தெரிவித்தார். 

Sunday, September 30, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பத்து ஆண்டுகள் பின்னர்!

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களும் ஆகிக் கொண்டிருந்தன. அரங்கனைச் சூழ்ந்திருந்த பரிவாரங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்து விட்டது. ஒரு சிலர் முதுமை, உடல்நிலை காரணமாக உயிரிழக்க நேர்ந்தது. இன்னும் சிலர் பிழைப்பைத் தேடியும், குடும்பங்களைத் தேடியும் சென்று விட்டனர். சென்றவர் திரும்பவில்லை.  தமிழக வரலாற்றில் இந்தப் பத்து வருடங்கள் எவ்வித மாற்றங்களும் காணாமல் நகர்ந்து கொண்டிருந்தது. தென்காசி, திருநெல்வேலிப் பகுதியில் இருந்து அடிக்கடிப் பாண்டியச் சிற்றரசர்கள் மதுரையிலிருந்து துருக்கியரை விரட்டத் தங்களால் ஆன மட்டும் இயன்றார்கள், ஆனால் வெற்றி கிட்டவில்லை. ஹொய்சளர்களோ எனில் வடக்கே தங்கள் கவனம் முழுமையும் செலுத்தி ஆந்திராவையும், தில்லிப் பேரரசில் நடப்பதையும் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு நடுவே மதுரையில் மட்டும் சிறிய மாற்றம்.

தில்லிக்குத் தளபதியாக  தென்னாடு வந்த அஸன்ஷா என்பவன் தில்லிப் பிரதிநிதியாக மதுரையை ஆண்டு வந்தவன் தில்லி ஆட்சியினரைத் தூக்கி எறிந்து விட்டுத் தன்னை மதுரைக்கும் அதைச் சேர்ந்த பாண்டிய நாட்டுக்கு உட்பட்ட இடங்களுக்கும் சுல்தானாக அறிவிப்புச் செய்து கொண்டான். ஆக மொத்தம் இதன் மூலம் மதுரையில் ஒரு சுல்தான் பரம்பரை ஆட்சி தொடங்கியது. ஆனால் ஆட்சி நிர்வாகம், பாதுகாப்பு போன்றவற்றில் கவனக்குறைவாகவே இருந்தார்கள். அவர்கள் கவனமெல்லாம் ஆடம்பரமான சுகபோக வாழ்க்கையில் இருந்தது. இருந்தாலும் தங்கள் வலிமையை விட்டுக்கொடுக்காமல் யாரையும் உள்ளே நுழையாமல் பார்த்துக் கொண்டனர்.  ஆகவே எவ்வித மாறுதலும் இல்லாமல் பத்தாண்டுகள் கடந்து விட்டன.
*********************************************************************************

திருவண்ணாமலை! ஓர் நாள் மாலை!

ஓர் வாலிப வீரன் பித்துப் பிடித்தாற்போல் வீதியில் நடந்து கொண்டிருந்தான். இளமையுடனும், வீரத்துடனும் காணப்பட்ட அவன் முகத்தைக் கவலை மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன. நீண்ட காலம் சென்று அன்று அவன் இந்த ஊருக்கு வந்திருந்தான். நீண்ட நேரம் நடந்த அவன் அந்த மாலை நேரத்தில் அங்கே உள்ள ஓர் வைணவக் கோயில் முன்பாகப் போய் நின்றான்.  பெருமாள் சந்நிதி திறந்திருந்தாலும் உள்ளே செல்ல மனமின்றிக் கண்கள் கலங்க அவன் கை கூப்பியவண்ணம், "பெருமாளே! நான் பதிதன்! உள்ளே வந்து உன்னைச் சேவிக்கும் அருகதை அற்றவன்! ஐயோ! போனமுறை கூட உள்ளே வந்து உன்னைச் சேவித்தேனே! இம்முறை என்னால் அது இயலாது போயிற்றே!" எனப் புலம்பிய வண்ணம் கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தான்.

அப்போது அங்கே திடீரென சில ஆரவாரங்கள் கேட்கவே அதனால் சிந்தை கலைக்கப்பட்டவனாய்த் திரும்பிச் சுற்றும் முற்றும் பார்த்தான் அந்த இளைஞன். அங்கே ராணி கிருஷ்ணாயி வந்து கொண்டிருந்தாள்.  அவனை அங்கே கண்டதும் சிறு புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிலும் சேடிமார் மெய்க்காப்பாளர் போலக் காவலுக்கு வந்திருந்தனர். இந்தப் பத்து வருடங்களில் அவள் எழில் அதிகரித்துப் பூரணமானதொரு மங்கையாக ஆகி இருந்தாள். கண்களில் முன்னிருந்த காமவெறி இல்லாமல் கனிவு தோன்றி இருந்தது. அவளைப் பார்த்துப் பிரமித்தக் குலசேகரனைக் கண்டு அவள், "ஸ்வாமி! என்னைத் தெரியவில்லையா?" என்று கேட்டபடி முன்னால் வந்தாள்.

Saturday, September 29, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வார் பிரிவும், அரங்கன் தங்கலும்!

அந்த குகையைப் பார்த்து பிரமித்துப் போய் நின்றிருந்தார்கள் அனைவரும். அப்போது அவர்களில் ஒருவர் ஆழ்வாரையும் அவருடைய ஆபரணப் பெட்டகத்தையும் சங்கிலியில் பிணைத்து மேலே இருந்து இந்தக் குகைக்குள் இறக்கி விட்டு விடலாம் என யோசனை கூறினார். இதனால் ஆழ்வார் எவ்விதமான பயமும் இன்றிப் பாதுகாப்பாக இருப்பார். கள்வர்கள் அவ்வளவு எளிதில் இந்த குகைக்குச் செல்ல முடியாது. இப்படி ஒரு குகை இருப்பதே கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தால் தான் தெரியும்.ஆகவே பின்னால் நல்ல காலம் பிறந்ததும் ஆழ்வாரை எப்படியேனும் குகையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இதுவே அவர் சொன்னதன் சாராம்சம். மீண்டும் அவர்களுக்குள் வாதப் பிரதிவாதங்கள். பலருக்கும் அவ்வளவு ஆழத்தில் உள்ள குகையில் ஆழ்வாரை இறக்கி விடுவது சம்மதம் இல்லை.  எனினும் இப்போது கள்வர் தொடர்ந்து வரும்போது வேறு வழியில்லை.

ஆகவே ஒரு நீண்ட சங்கிலித் தொடரை அங்கிருந்த காட்டுக்கயிறுகளால் பிணைத்துக் கட்டினார்கள். அது அந்தக் குகையைப் போய் எட்டும் அளவுக்கு நீளமானதா என்பதைச் சோதித்தும் பார்த்துக் கொண்டார்கள். கயிற்றுத் தொடர் உறுதியாக ஆழ்வாரையும் ஆபரணப் பெட்டியையும் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டார்கள். பின்னர் ஆபரணப் பெட்டகத்தைத் திறந்து ஆபரணங்களை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி விட்டு ஆழ்வாரை அந்தப் பெட்டிக்குள் அமர வைத்தார்கள். அவருக்குப் பின்னால் எளிதில் தெரியாதபடிக்கு ஆபரணங்கள் அடங்கிய முடிச்சை மறைத்து வைத்தார்கள். பெட்டகத்தை நன்கு மூடி பத்திரமாய் உள்ளதா எனச் சோதித்துக் கொண்டு  சங்கிலியில் இறுகக் கட்டிச் செங்குத்தான அந்தச் சரிவு வழியே கிணற்றில் கயிறு கட்டி நீர் இழுப்பதற்கு இறக்குவது  போல் மெல்ல மெல்ல இறக்கி விட்டார்கள்.

ஆழ்வாரது பெட்டகம் கீழே போகப் போக ஆட்டம் ஆடத் தொடங்கியது. அனைவருக்கும் அது குகைக்குள் போகாமல் அந்தப் பாதாளத்திலேயே விழுந்து விடுமோ என்னும் கவலை! அதோடு இல்லாமல் சரிவுகளில் ஆங்காங்கே பாறைகள் வேறே சிறிதும், பெரிதுமாய் நீட்டிக் கொண்டிருந்தது. பெட்டகம் அவற்றில் இடித்ததும் ஒரே ஆட்டமாக ஆடியது. எப்படியோ சமாளித்து ஒரு வழியாகக் குகை வாய்க்குக் கொண்டு சென்று விட்டார்கள். மெல்ல மெல்ல அதன் வாய்க்குள் இருட்டில் அந்தப் பெட்டகத்தை உள்ளே விட்டார்கள். குகைப் பகுதியின் தரையைப் பெட்டகம் அடைந்து விட்டதற்கான அடையாளமாகப் பெட்டகம் தரை தட்டியது. உடனே கையில் பிடித்திருந்த நீளமான சங்கிலியையும் நழுவ விட்டனர். அந்தச் சங்கிலியும் பெரிய சப்தம் போட்டுக் கொண்டு குகையில் போய் விழுந்து விட்டது. பின்னர் அனைவரும் மிகுந்த துக்கத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே அங்கே இருந்து கீழே இறங்கினார்கள். இவ்வளவும் செய்து முடிப்பதற்குள்ளாகக் கள்வர் கூட்டத்தார் மலை அடிவாரத்தை நெருங்கி இருந்தார்கள்.

இவர்களைக் கண்டதும் கள்வர் கூட்டத்தார் சுற்றிக் கொண்டனர். ஆழ்வாரின் பரிவாரங்கள் ஆழ்வாருக்கு அரங்கன் கூட்டத்தார் அளித்த வட்டமனையை ஆழ்வாருடன் சேர்த்து உள்ளே வைக்காமல் கையில் வைத்திருந்தனர். தங்கத்தால் ஆன அதைப் பார்த்த கள்வர் உடனே அதைக் கைப்பற்றிக் கொண்டதோடு அல்லாமல் "சித்தை" என அழைக்கப்படும் எண்ணெய்த் துருத்தியையும் பிடுங்கிக் கொண்டனர். அவர்களில் சிலரது உடைகளையும் கவர்ந்து கொண்டார்கள். நல்லவேளையாக ஆழ்வாரை மறைத்து வைத்தோமே என ஊர்வலத்தார் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள். கள்வர் கூட்டத்தார் அங்கிருந்து அகன்றதும் திசைக்குச் சிலராகப் பிரிந்து சென்று ஆங்காங்கே இருக்கும் ஊர்களுக்குச் சென்று வாழ்க்கையைத் தொடங்கியவர் சிலர். சொந்த ஊருக்கே சென்றவரும் சிலர். ஆழ்வாரோ நிம்மதியாக மலைக்குகையில் தன் அஞ்ஞாத வாசத்தைத் தொடர்ந்தார்.
*******************************************************************************

அரங்கன் கூட்டத்தாரின் ஊர்வலம் புங்கனூரை விட்டுக் கிளம்பித் திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டையைப் போய்ச் சேர்ந்தது. ஹொய்சள ராஜ்யத்தின் கீழ் வந்த இந்த ஊர் ஓர் வைணவத் தலம். இந்தச் சம்பவம் நிகழ்வதற்குச் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஶ்ரீராமாநுஜர் சோழ அரசனின் தொந்திரவைத் தாங்க முடியாமல் திருவரங்கத்தில் இருந்து கிளம்பித் திருநாராயணபுரம் சென்று அங்கே வசித்து வந்தார். ராமானுஜரின் வருகையினால் அந்தத் திருத்தலம் மேலும் புகழும் பெருமையும், புனிதமும் அடைந்திருந்தது.  இத்தகையதோர் ஊரிலே தான் திருவரங்கன் சரண் அடைந்தான். ஊர் வைணவர்கள் அனைவருக்கும் இது குறித்து மிக்க மகிழ்ச்சி. அரங்கனே அவர்களைத் தேடி வந்திருப்பது தாங்கள் செய்த புண்ணியமே என நம்பிய அவர்கள் அனைவரும் மிகவும் ஆதரவுடனும், மேள, தாளத்துடனும் அரங்கன் ஊர்வலத்தாரை எதிர்கொண்டு அழைத்தனர்.

வரவேற்பு முடிந்ததும் செலுவப் பிள்ளையின் கோயிலில் அரங்கனின் அர்ச்சாவதாரத்தை எழுந்தருளச் செய்தார்கள்  அரங்கத்தை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டில் அவர்கள் தயவில் இருக்கிறோமே என்னும் சோகத்தையே அனைவரும் சில நாட்களில் மறந்து போனார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்குத் திருநாராயணபுரத்தில் உபசாரங்கள் நடந்தன. அரங்கனுக்கும் தினப்படி, வாராந்தரி, மாதாந்தரி, வருட உற்சவங்களைக் குறைவின்றி நிகழ்த்தினார்கள். நீண்ட நாட்கள் கழித்து அரங்கத்தை விட்டு வந்த அரங்கன் இங்கே கொஞ்சம் நிம்மதியுடன் நீண்ட காலம் தங்க ஆரம்பித்தார்.

Friday, September 28, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அடுத்து என்ன?

குலசேகரன் சொன்னதைக் கேட்டு முதலில் வியந்தாலும் பின்னர் அவர்கள் அனைவரும் சென்று நம்மாழ்வார் விக்ரஹத்தைக் கொண்டு வந்தார்கள். ஆழ்வாரை எப்படித் தண்ணீருக்குள் இருந்து எடுத்தார்கள் என்பதைப் பலமுறை குலசேகரனும் மற்ற முக்குளவர்களும் சொல்லக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள். இது நிச்சயம் இறைவன் செயலன்றி வேறேதும் இல்லை என்னும் தீர்மானத்துக்கு வந்தார்கள். அரங்கன் ஊர்வலத்தார் ஆழ்வாருக்கு "வட்டமனை" என்னும் பெயரில் ஓர் வாகனத்தைத் தங்கத்திலேயும், வெள்ளியினால் ஆன திருமுன் பந்தம் (தீவர்த்தி) ஒன்றையும் பரிசாகக் கொடுத்தார்கள். சிறிது தூரம் இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமலே சென்றார்கள். "திருக்கிணாம்பி" என்னும் வைணவத்தலம் ஒன்று கர்நாடகத்தில் உள்ளது. அங்கே சென்று சிறிது காலம் அங்கே எந்தவிதமான பிரச்னையும் இன்றித் தங்கினார்கள். பின்னர் அரங்கன் ஊர்வலத்தாருக்குத் திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டைக்குச் செல்ல ஆவல் உண்டாக அங்கே செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் ஆழ்வார் ஊர்வலத்தாருக்குத் திருக்கிணாம்பியை விட்டுச் செல்ல விருப்பமில்லை.

இதைப் பற்றி இருவரும் விவாதித்தனர். அபிப்பிராய பேதங்கள் அதிகம் ஆகவே அரங்கன் ஊர்வலத்தார் ஆழ்வார் ஊர்வலத்தார் வராவிட்டாலும் தாங்கள் செல்வது என முடிவு செய்தனர்.  ஆழ்வார் ஊர்வலத்தாரிடம் அவர்கள் விருப்பம் போல் செய்யும்படி சொல்லிவிட்டுத் திருநாராயணபுரம் செல்லும் வழியில் புங்கனூர் சென்று அடைந்தார்கள் அரங்கன் ஊர்வலத்தார். இங்கே ஆழ்வார் ஊர்வலத்தார் தனித்து விடப்பட்டதால் அவர்களுக்கு அங்கிருக்க மனமில்லாமல் அவர்களும் கிளம்பினார்கள்.  அரங்கன் ஊர்வலத்தார் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் சென்று ஓர் கிராமத்தைச் சென்று அடைந்தனர்.  பின்னர் சிறிது வாத, விவாதங்களுக்குப் பின்னர் மேற்கே பயணிக்க முடிவு செய்து கொண்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டு கிளம்பினார்கள். அப்போது கிராமத்தார் இது பற்றிக் கேள்விப் பட்டு ஓடோடி வந்து மேற்கே கள்வர் கூட்டம் அதிகம் என்பதால் அவ்வழி செல்லவேண்டாம் என்றனர். கிழக்கே போகிறோம் என ஊர்வலத்துப் பரிசனங்கள் சொன்னதுக்குக் கிராமத்தார் அங்கேயும் கள்வர் உண்டு. ஆழ்வாருடன் கூடவே நகைகள், பொக்கிஷங்கள் எடுத்துச் செல்வதால் தனிவழி செல்வது உசிதம் இல்லை என்றனர். மேலும் வடக்கே துருக்கியர்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாயும் போதாதற்குக் கடலோரமாகக் கடற்கொள்ளையர்கள் ஊருக்குள் புகுந்திருப்பதாகவும் சொன்னார்கள்.

மிகவும் யோசனைக்கு இடையில் ஆழ்வாரின் ஊர்வலத்தார் ஆழ்வாரைத் தூக்கிக் கொண்டு தென்மேற்கே செல்ல முடிவு செய்தார்கள்.  அதிகாலையில் கிளம்பினார்கள். முன்னே சிலர் செல்லப் பின்னே சிலர் தொடர்ந்து வர நடுவில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆழ்வாரின் பரிவாரங்கள் தக்க இடைவெளி விட்டுப் பயணம் செய்தார்கள். அப்படியும் சிறிது தூரத்திலேயே பின்னால் வந்த எச்சரிக்கையாளர்கள் கள்வர்கள் வேவு மூலம் இவர்கள் பயணம் செய்வதைத் தெரிந்து கொண்டு விட்டதாகச் சொன்னார்கள். பின்னாலேயே பெரும் கூட்டமாக அவர்கள் வந்து கொண்டிருப்பதாயும் தனிமையான இடம் பார்த்து அனைவரையும் மடக்கிவிடுவார்கள் என்றும் பேசிக் கொண்டார்கள். பரிவாரங்கள் குழம்பிப் போய் நிற்க மீண்டும் வாத, விவாதங்கள் தொடர்ந்தன.

சிலர் எழுந்து அரங்கன்  ஊர்வலத்தாரோடேயே அவர்களும்  போயிருக்க வேண்டும் எனவும் அது தவறு எனவும் கூறினார்கள். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். ஆபத்து நாலாபக்கமும் சூழ்ந்து கொண்டிருப்பதால் எங்கே சென்றாலும் எந்தத் தரப்பில் சென்றாலும் ஆபத்து அவர்களைச் சூழ்ந்து கொள்வதோடு ஆழ்வாரின் கதி என்ன என்பதை நிரணயம் செய்ய முடியவில்லை என்றும் சொன்னார்கள். அப்போது சிலர் ஆழ்வாரை மறைத்து விட்டுத் தாங்களும் பிரிந்து தனித்தனியாக நடந்தே சென்று வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று விடுவது தான் சரியான வழி எனக் கூறினார்கள். எல்லோரும் இதற்கு ஒரு மாதிரியாக ஒத்துக் கொள்ள ஆழ்வாரை மறைத்து வைக்க என்ன வழி என யோசித்தனர்.

அப்போது ஒருவர் எதிரே தெரிந்த முந்திரிப்பு மலை என்னும் மலையில் எங்காவது ஆழ்வாரை ஒளித்து வைத்துவிட்டுச் செல்லலாம் என்று கூறினார். அனைவரும் மீண்டும் அந்த இடத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டு ஒத்துக் கொண்டார்கள். எல்லோரும் உடனே அதி விரைவாக மலையை நோக்கிப் பிரயாணம் செய்தனர். கொடி, செடிகள் நிறைந்த மலையில் மெல்ல மெல்ல மேலே ஏறினார்கள். அத்அன் விளிம்பில் இருந்து எட்டிப் பார்த்தால் கீழே அதலபாதாளம். அங்கே ஒரு குகை! அந்தக் குகைக்குச் செல்ல வழி தேடினால் கிடைக்கவில்லை. குகைக்குச் செல்ல வழியில்லை. கூர்ந்து கவனித்துப் பார்த்ததில் குகைக்கு அடுத்தாற்போல் கீழேயும் ஓர் செங்குத்தான சரிவு காணப்பட மலைகளுக்கு நடுவில் அந்தரத்தில் தொங்குவது போல் அந்தக் குகை காணப்பட்டது.