எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, October 27, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நவ கைலாயம் 4


அடுத்துக் காண இருப்பது புதனுக்கான க்ஷேத்திரம். இது வேறே எங்கேயும் இல்லை. மகரநெடுங்குழைக்காதரைப் பார்த்தோமே, தென் திருப்பேரை, அங்கேயேதான் இந்தக் கோயிலும் உள்ளது. முதல்நாளே அது சரியாத் தெரியலை. அன்னிக்கே பார்த்திருந்தால், நவ கைலாயப் பயணத்தன்று வேறு சில கோயில்களைப் பார்த்திருக்கலாம். தெரியலை. அதோட பலரும் பிரம்மதேசம், திருப்புடை மருதூர், கடையம், கடையநல்லூர் போன்ற ஊர்கள் சென்றீர்களா என்றும் கேட்கின்றனர். கடையம், கடைய நல்லூர் வழியாத் தொட்டுக் கொண்டு சென்றோமே தவிர ஊர்களுக்குள் நுழையவில்லை. பிரம்மதேசம், திருப்புடை மருதூர் போகமுடியலை, நேரம் இல்லாமையால். இனி புதனுக்கான க்ஷேத்திரமான தென் திருப்பேரை கைலாசநாதரைக் காணலாம்.

உரோமச முனிவர் மிதக்கவிட்ட தாமரை மலர்களில் ஏழாவது மலர் ஒதுங்கிய இடமாய்க் கூறப்படும் இந்தத் தலத்தில் கைலாசநாதர் லிங்க வடிவில் தாமரை பீடத்தின் மேல் காட்சி கொடுக்கிறார். தாமரை போன்ற வடிவமைப்புடன் கூடிய பீடம். அம்பிகையின் பெயர் அழகிய பொன்னம்மை. அம்மன் சந்நிதி தனியாக இருக்கிறது. வள்ளி, தெய்வானையோடு கூடிய சுப்ரமணியரும் இங்கே காட்சி கொடுக்கிறார். நவகிரஹங்கள் வாகனங்களில் காட்சி கொடுக்கின்றனர். சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரஹங்கள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி இருக்கும் காட்சியைக் காணலாம்.

இந்தக் கோயிலுக்கு ஒரு முறை ஆங்கிலேயே கலெக்டர் துரை என்பவர் இப்பகுதிக்கு வந்து தங்கி இருந்தார். இங்கே உள்ள சாவடியில் தங்கி இருந்த அவர் தாகம் தீர்க்க ஒரு இளநீர் கொண்டுவரச் சொல்லுமாறு சேவகனைப் பணித்தார். அருகிலுள்ள தென்னந்தோப்பிற்குச் சென்று கலெக்டருக்காக இளநீர் கேட்ட சேவகனிடம் அங்கிருந்த விவசாயி, கைலாசநாதருக்காக வளர்க்கப் படும் தென்னை மரங்கள் இவை. இந்த இளநீரை ஸ்வாமியின் அபிஷேஹத்துக்குப் பயன்படுத்துவதால் மனிதர் குடிக்கக் கொடுக்கமுடியாது என மறுத்துவிட்டார். துரையிடம் வந்து நடந்ததைச் சொன்ன சேவகனையும் அழைத்துக் கொண்டு தோப்பிற்குச் சென்ற கலெக்டர், விவசாயியிடம், “இந்தத் தோப்பிலுள்ள தென்னை மரத்தின் தேங்காய்களுக்கெல்லாம் என்ன கொம்பா முளைச்சிருக்கு?? சும்மாப் பறிச்சுப் போடு!” என்று கடுமையாக உத்தரவிட, பணிய நேர்ந்தது விவசாயிக்கு. ஒரு இளநீரைப் பறித்துக் கொடுக்க யத்தனித்த போது என்ன ஆச்சரியம்???

உண்மையாகவே அந்த இளநீரில் மூன்று கொம்பு முளைத்திருந்தது. கலெக்டரிடம் அதை நீட்டப் பயந்து போனார் கலெக்டர். உடனேயே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, தினசரி வழிபாட்டுக்காக அப்போது இருந்த பண மதிப்பில் ஆறரை துட்டு காணிக்கையாக வழங்கினார். இந்தத் தேங்காய் இப்போதும் உடைந்த ஒரு கொம்பு தவிர மற்ற இரு கொம்புகளோடு இந்தக் கோயிலில் காட்சிக்கு வைத்திருக்கின்றார்கள். நந்திக்குத் தலைப்பாகை கட்டி அலங்கரிப்பது இங்கே விசேஷமாய்ச் சொல்கின்றனர். இவ்வூரில் உள்ள நவதிருப்பதிக் கோயிலான மகரநெடுங்குழைக்காதர் சுக்கிர தோஷத்தை நிவர்த்தி செய்பவர் என்பார்கள். இந்தக் கைலாச நாதரோ புத தோஷத்துக்கு நிவர்த்தி செய்பவர். ஆகவே மாணாக்கர்கள் பெருமாளையும், ஈசனையும் ஒருசேர இங்கே வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. இங்கே உள்ள பைரவர் ஆறு கைகளோடு காணப்படுகிறார். வேதத்தின் அம்சம் எனச் சொல்லப் படுகிறார். ஆகையால் இங்கே நாய் வாகனம் இல்லாமலேயே பைரவர் காட்சி அளிக்கிறார். எல்லாச் சிவன் கோயில்களையும் போல் இங்கேயும் மார்கழி திருவாதிரையும், சிவராத்திரியும் சிறப்பாக நடைபெறும்.

படம் நன்றி:http://www.shaivam.org

Saturday, October 24, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்- நவ கைலாயம் 3

அடுத்து கோடகநல்லூர். இதுக்குத் தான் முதல்லே போனோம். நாங்க போனபோது காலை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அபிஷேஹம் முடிந்து, அலங்காரம் முடிந்து நைவேத்தியம் காட்டி தீப ஆராதனைகளும் பார்க்க முடிந்தது. தீப ஆராதனையின் போது அங்கே நின்றிருந்த ஓதுவார் நன்றாகப் பாடினார். கோயிலுக்கென நியமிக்கப் பட்ட ஓதுவார் அவர். பரம்பரையா என்னனு கேட்டுக்கலை. மிகவும் ஏழ்மை நிலைமையில் இருந்தார். கோயில் சுத்தமாக இருந்தது. ஆனாலும் ஏழைக் கோயில் தான். சேரன்மஹாதேவிக்குச் செல்லும்வழியிலேயே இருக்கிறது. நாங்க வாடகைக் காரில் போனதால் போக முடிந்தது. இந்தக் கோயிலுக்கு அதிகம் பேருந்து வசதி இல்லை. நடுக்கல்லூர் என்னும் ஊருக்கு அருகே நடுவழியில் இறக்கிவிட்டுடுவாங்க. அங்கிருந்து இந்த ஊருக்கு நடந்தே வரணும். அர்ச்சகர் இந்த ஊர்க்காரர். ஓதுவாரும் இதே ஊர். அதனால் வழிபாடுகள் நேரத்துக்கு நடக்கிறது. அரசின் கவனம் திரும்பினால் இன்னும் கொஞ்சம் வசதியாய் இருக்கும்னு குருக்களும், ஓதுவாரும் சொன்னார்கள். இனி கோயில் வரலாற்றைப் பார்ப்போம்.

நவ கைலாயக் கோயில்களிலேயே இந்தக் கோயிலின் மூர்த்திதான் மிகப் பெரிய திருவுருவம் கொண்டவர். இவருக்குக் கட்ட குறைந்த பட்சமாக எட்டு வேட்டிகளாவது தேவைப்படும் எனச் சொன்னார்கள். அங்காரகன் என்று அழைக்கப் படும் செவ்வாய் வழிபட்ட தலம் இது என்பதால் செவ்வாய் தோஷத்துக்கான பரிகார தலமும் ஆகும். பல்லாண்டுகளுக்கு முன் இங்கே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவர் மகனும் இருந்தான். ஒரு நாள் காட்டில் விறகு பொறுக்க மகன் காட்டினுள் செல்ல, அங்கே ஒரு ராஜகுமாரன் வந்தான். அவனுக்கு முனிவரைப் பார்த்ததும் தன் ராஜ்யத்தை விஸ்தரிக்க என்ன செய்யலாம்?? ஏதானும் யாகம் செய்யலாமா எனக் கேட்கத் தோன்றியது. ஆகவே முனிவரை எழுப்பிக் கேட்டான். ஆனால் பரிபூரண நிஷ்டையில் இருந்த அந்த முனிவரோ எவ்வளவு எழுப்பியும் எழவே இல்லை. கோபம் வந்த ராஜகுமாரன் ஒரு செத்த பாம்பை அவர் கழுத்தில் போட்டுவிட்டுப் போய் விட்டான். பாம்பு கழுத்தில் போடப் பட்டது கூடத் தெரியாமல் முனிவரோ நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார்.

முனிகுமாரன் திரும்பி வந்து பார்த்தபோது தன் தந்தையின் கழுத்தில் செத்த பாம்பைக் கண்டான். யார் செய்தது என்பதும் தெரிய வந்தது. உடனேயே அரண்மனைக்குச் சென்று ராஜகுமாரனிடம் உன் தந்தை ஒரு பாம்பினாலேயே இறப்பார் என்ரு சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான். பயம் அடைந்த ராஜா தன் விதி என்னவெனத் தெரிந்து கொள்ள எண்ணி அரண்மனை ஜோதிடர்களை வரவழைத்துத் தன் ஜாதகத்தைப் பார்க்க, சர்ப்ப தோஷம் இருப்பது தெரிய வந்தது. ஆகவே பாம்பிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள எண்ணிய அரசன் ஒரு மறைவிடத்தில் சென்று ஒளிந்து வசிக்கலானான். எறும்பு கூடப் புகமுடியாதபடிக்குக் கட்டப் பட்டிருந்த அந்த மண்டபத்தில் வசித்த அரசன் ஒருநாள் மாம்பழம் சாப்பிட்டான். மாம்பழத்தில் இருந்த சிறு புழு ஒன்று பழத்திலிருந்து வெளிப்பட்டு பாம்பாக மாறி அரசனைத் தீண்டியது. அரசன் இறந்து போனான். தப்பு செய்த ராஜகுமாரனை விட்டுவிட்டு அரசனைத் தீண்டிய பாம்புக்குத் தோஷம் பீடிக்க அது தியானம் மூலம் பரம்பொருளைத் துதிப்போம் எனத் துதிக்க ஆரம்பித்தது. மஹாவிஷ்ணு அந்தப் பாம்பிடம் சிவபெருமானை வழிபடச் சொல்ல, அதுவும் மனமுருகிப் பிரார்த்திக்க கைலைமலை வாசனும் பாம்பிற்கு முக்தி கொடுத்தார். பரிக்ஷித்து மன்னனையும், நளனையும் தீண்டிய கார்க்கோடகன் என்னும் பாம்புக்கும் இங்கே முக்தி கிடைத்ததால் கோடகநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டதாய்ச் சொல்லுகின்றனர். இங்கே இப்போவும் கருநாகங்கள் அதிகம் உலாவும் எனவும் சொல்லுகின்றனர்.

இங்கே அம்பாள் பெயர் சிவகாமி அம்மன். இவளைத் தவிர அநந்த கெளரி என்ற பெயரில் ஐந்து தலை நாகத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி கொடுக்கும் அம்மனும் இருக்கிறாள். இவளைச் சர்ப்பயட்சி என்றும் நாகாம்பிகை என்றும் சொல்கின்றனர். ஈசனுக்குத் துவரம்பருப்பு நைவேத்யம் விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சிவப்பு வஸ்திரமும் அணிவிக்கின்றனர். நந்திக்குத் தாலி கட்டும் அதிசய வழக்கமும் இங்கே உண்டு. செவ்வாய் தோஷத்தினால் திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் இங்கே 58 விரலி மஞ்சளால் கோர்க்கப் பட்ட தாலியை நந்தியின் கழுத்தில் மாலையாக அணிவிக்கின்றனர். இப்படிச் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. சிவராத்திரி, திருவாதிரை, போன்றநாட்களில் உற்சவம் உண்டு. மற்றபடி கொடிமரமோ, பலிபீடமோ, பரிவார மூர்த்திகளோ இந்தக் கோயிலில் காணமுடியாது.

Wednesday, October 21, 2009

தாமிர பரணிக்கரையில் சில நாட்கள்- நவ கைலாயம் 2

அடுத்து, சந்திரனுக்குரிய தலம். சேர்மாதேவி, சேரன்மஹாதேவி என்றெல்லாம் சொல்லப் படும் ஊர். திருநெல்வேலியில் இருந்து 25 அல்லது 30 கி.மீ தூரத்தில் உள்ளது. இப்போ சொல்லும் வரிசையிலே நாங்க போகலை. நாங்க போனது முதலில் கோடகநல்லூர் தான். அது செவ்வாய்க்கான தலம்னு குறிச்சு வச்சிருக்கேன். பாபநாசம் கடைசியிலே தான் போனோம். மேலே ஏறிச் செல்லவேண்டும், அங்கேயும் பார்க்கக் கோயில்கள், தீர்த்தம், அருவி இருக்குனு தெரியலை. அதனால் போயிட்டுக் கீழே இறங்க நேரம் இன்மையால் தவற விட்டோம். மீண்டும் ஒருமுறை போகணும். பார்ப்போம். சேர்மாதேவியில் சீக்கிரமாய்ப் போனால் தான் ஸ்வாமி தரிசனம் செய்யமுடியும். கோயிலைச் சீக்கிரமே சாத்திடறாங்க. நல்லவேளையா நாங்க சீக்கிரமே போனோம். ஒன்பது மணிக்குப் போயிருந்தால் கூடப் பார்க்கிறது சிரமம் தான்.

ஏற்கெனவே சொன்ன உரோமசர் தாமரைப் பூக்களை இட்ட கதையைத் தவிர இங்கே சொல்லும் மற்றொரு கதை இரு சகோதரிகளைப் பற்றியது. உரோமசருக்குப் பின்னர் கோயில் இருந்த இடம் தெரியாமல் லிங்கம் மட்டுமே ஒரு அரசமரத்தடியில் இருக்க, அங்கே வாழ்ந்து வந்த இரு சகோதரிகள், சிவ பக்தைகள். வீட்டிலேயே நெல் குத்தி, அரிசி வியாபாரம் செய்து வந்த அவர்கள், தினமும் இந்த லிங்கத்துக்கு வழிபாடுகள் செய்த பின்னரே தங்கள் வேலையைத் தொடங்குவார்கள். அவர்கள் லட்சியமே இந்த லிங்கம் மரத்தடியில் கவனிப்பாரின்றி இருக்கிறது. ஒரு அழகான கோயில் கட்டி அங்கே இவரைப் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று நினைத்தனர். தங்களது உழைப்பின் பயனில் வரும் லாபத்தைச் சிவன் கோயில் கட்டவெனச் சேர்த்து வைத்தனர். அவர்களைச் சோதிக்க எண்ணிய ஈசன் ஒரு சிவனடியார் உருவில் அவர்கள் வீடு வந்தார்.

வந்தவர் மிகுந்த பசியோடு இருப்பதாய்ச் சொல்ல, சகோதரிகள் அவரை வரவேற்று, பாதபூஜை செய்து, உணவு அருந்த வருமாறு அழைத்தனர். வீட்டில் விளக்கு எரியவில்லை. உடனேயே அதைச் சுட்டிக் காட்டிய சிவனடியார், வீட்டில் விளக்கு எரியவில்லை எனில் எவ்வாறு வெளிச்சம் இருக்கும்? அது போலவே மங்களமும், செல்வமும் தங்காது. எனவே இந்த வீட்டில் உணவருந்த மாட்டேன், என்று சொல்லிவிட்டு எழுந்துவிட்டார். பதறிய சகோதரிகள் விளக்கைத் தேடியும் கிடைக்காமல், ஒரு தேங்காயை எடுத்து உடைத்து, அதிலே நெய்யை ஊற்றி, விளக்கு ஏற்றி வைத்தனர். சிவனடியாரும் சாப்பிட்டுவிட்டுத் தன் சுயவுருவில் காட்சி அளித்தார். சிவனடியாரின் அருளால் செல்வமும் பெருகவே, சகோதரிகள் நினைத்த வண்ணமே கோயிலை எழுப்பினார்கள்.

ஈசன் பெயர் அம்மநாதர். தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது இந்தத் தலம், அம்மையப்பர் என்றும் சொல்லுகின்றனர். அம்மன் வலப்பக்கமாய்க் காட்சி கொடுக்கிறாள். அதாவது அம்மன் சந்நிதி அம்மநாதரின் சந்நதிக்கு வலப்புறமாய்க் காணப்படுகிறது. கோமதி அம்மன், ஆவுடைநாயகி என்ற பெயரில் அழைக்கப் படுகிறாள். இந்தக் கோயிலில் ஸ்வாமிக்கும், அம்மனுக்கு திருமணக் கோலத்தில் காட்சி கொடுக்கும் கோயில் என்று சொல்லுகின்றனர். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக சிதம்பரத்து நந்தனார் இந்தக் கோயிலுக்கு விஜயம் செய்திருக்கிறார் போலும். கொடிமரத்துக்குக் கீழே உள்ள பீடத்தில் நந்தனார்(??) சிற்பம் காட்சி கொடுக்கிறது. நந்தியாரும் சற்றே விலகி இருக்கிறார். அதனாலேயே நந்தனார் எனத் தோன்றுகிறது.

அரிசி வியாபாரிகள் அனைவருமே இந்தக் கோயிலில் தங்கள் வியாபாரம் செழிக்கப் பிரார்த்தனை செய்து கொள்வதுண்டு என்று சொல்கின்றனர். திருமண தோஷமும் நீக்கப் படும் பரிஹார தலமாய்ச் சொல்லுகின்றனர். அம்மன் சந்நிதியில் ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி, உடைத்த தேங்காயில் நெய் விட்டு விளக்கு ஏற்றி வைக்கின்றனர். அம்மனுக்கு மாதுளம்பழச் சாறினால் அபிஷேஹம். நவகிரஹங்கள் இங்கே காணப்படவில்லை. வழக்கம்போல் நடராஜர் இருக்கிறார். பைரவருக்கு இங்கே நாய் இல்லாமல் தனியாகக் காட்சி கொடுக்கிறார். தல விருக்ஷம் பலா. கோயிலைக் கட்டிய சகோதரிகள் சிற்பம் இருக்குனு சொன்னாங்க. தேடிப் பார்க்க முடியலை. பாண்டியர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். படம் போடமுடியலை. மன்னிக்கவும்.

Tuesday, October 20, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - நவ கைலாயம்! 1.


நவ கைலாயம்: கீழ்க்கண்ட ஒன்பது ஊர்கள் நவ கைலாயங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர நவ சமுத்திரம் என்று சமுத்திரம் என்ற பெயரில் அழைக்கப் படும் ஊர்களும் உள்ளன. அவற்றுக்கெல்லாம் போக முடியலை.


பாபநாசம்
சேரன்மாதேவி
கோடகநல்லூர்
குன்னத்தூர்
முறப்பநாடு
ஸ்ரீவைகுண்டம்
தென் திருப்பேரை
ராஜபதி,
சேந்தமங்கலம்


நவ சமுத்திரங்கள்:

அம்பாசமுத்திரம்
வீரா சமுத்திரம்
தளபதி சமுத்திரம்
கோபால சமுத்திரம்
ரத்னாகார சமுத்திரம்(திருச்செந்தூர்)
ரவண சமுத்திரம்
அரங்க சமுத்திரம்
வால சமுத்திரம்
வடமலை சமுத்திரம் (பத்மநேரி)



இந்த நவ கைலாயங்களில் சில கோயில்கள் நவதிருப்பதிகள் இருக்கும் ஊரிலேயே இருக்கின்றன. அதை முன் கூட்டியே நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு செல்லவேண்டும். எங்களுக்குத் தெரிஞ்சும், ஓரிரண்டு கோயில்களுக்குச் செல்ல முடியவில்லை. நேரப் பற்றாக்குறைதான் காரணம். நவ திருப்பதிகளை ஒரே நாளிலேயே முடித்துவிடலாம். அப்போதே அங்கங்கே இருக்கும் நவ கைலாயக்கோயில்களையும் பார்த்திருக்க வேண்டும். முடியலை! மறுநாள் போக நினைச்சுப் போக முடியலை. நவ கைலாயங்கள் தனியாகப் பார்க்கணும்னா இரண்டு நாட்கள் தேவை. நாங்க அன்னிக்கே ஊர் திரும்ப முன்பதிவு செய்திருந்தபடியால் மத்தியானமே திருநெல்வேலி திரும்பவேண்டிய கட்டாயம். ஆகவே செல்ல நினைக்கிறவர்கள் நன்கு தெரிந்து கொண்டு செல்லவேண்டும்.

இப்போ முதலில் வருவது பாபநாசம் பாபநாசநாதர் கோயில் தான். சூரியனுக்கு உரிய பரிஹாரத் தலமாகச் சொல்லப் படுகிறது. தாமிரபரணி மலையில் இருந்து கீழே இறங்கியதும், இந்தக் கோயிலுக்கு எதிரே தான் ஊருக்குள்ளே நுழைகிறாள். மிகவும் அழகான சுற்றுச் சூழ்நிலை. இயற்கையின் அழகு கண்ணைப் பறிக்க எதிரே தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவநதியாகிய நதிகளுக்கெல்லாம் மூத்த தாமிரபரணி சமநிலைக்கு வந்து விட்டாள். அங்கே மதியம் உச்சிக்கால வழிபாட்டின்போது நதியின் மீன்களுக்குக் கூட உணவிடுகின்றனர். இந்த வழிபாடு வரையில் இருந்து நாங்கள் பார்க்கலை என்றாலும் சொன்னார்கள்.

திருநெல்வேலியில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது மைல் தூரத்தில் இருக்கும் பாபநாசத்துக்கு திருநெல்வேலியில் இருந்து பேருந்து செல்கிறது. என்றாலும் நாங்கள் வாடகைக்காரிலேயே பயணத்தைத் தொடர்ந்தோம். இந்தக் கோயிலின் சித்திரை விஷு மிகவும் பிரபலமானது. அன்று தான் அகத்தியருக்கு ஈசன் தனது கல்யாணக் கோலத்தைக் காட்டி அருளினார் என்று சொல்கின்றனர். ஈசனின் திருக்கல்யாணத்தின்போது பூமிபாரம் தாங்காமல் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர, சமப்படுத்த வந்தார் அகத்தியர் பொதிகை மலைக்கு. இங்கே இருந்த அகத்தியருக்கு ஈசன் சித்திரை விஷு அன்று தனது கல்யாணக் கோலத்தைக் காட்டி அருளியதாக ஐதீகம். மூலஸ்தான சந்நிதிக்குப் பின்னால் உள் பிரஹாரத்தில் அகத்தியருக்குக் கல்யாணக் கோலம் காட்டி அருளிய கல்யாண சுந்தரர், அம்பிகையுடன் ரிஷபாரூடராகக் காக்ஷி அளிக்கின்றார். அகத்தியர் தன் மனைவி லோபாமுத்திரையுடன் ஈசனை வணங்கிய கோலத்தில் காணப்படுவார். அகத்தியரின் சீடர் ஆன உரோமச முனிவர் ஈசனுக்கு தாமிரபரணிக்கரை ஓரம் கோயில்கள் எழுப்ப விரும்பி குருவை ஆலோசனை கேட்க, ஈசனுக்கு வழிபாடு செய்த தாமரை மலர்கள் ஒன்பதை உரோமசரிடம் கொடுத்து அவற்றை ஆற்றில் வீசி எறியும்படி அகத்தியர் சொல்ல அப்படியே செய்கின்றார் உரோமசர். அவை ஒதுங்கிய ஒன்பது இடங்களிலே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து நவகிரஹப் ப்ரீதி ஸ்தலங்களாக ஆக்கினார்.

இங்கே உள்ள ஈசனுக்கு முக்களா நாதர் என்ற பெயரும் உண்டு. மூன்று வேதங்களும் மூன்று களா மரங்கள் உருவில் ஈசனை வழிபட்டதாகவும் அதர்வ வேதம் ஆகாய ரூபத்தில் வழிபட்டதாகவும் சொல்கின்றனர். கருவறையில் ருத்ராக்ஷ வடிவில் ஈசன் காணப்படுவார். ப்ராஹாரத்தில் முக்களா மரத்தின் கீழ் காணப்படுகின்றார். அசுர குருவான சுக்ராசாரியாரின் மகன் துவஷ்டாவை ஒரு சமயம் குருவாக ஏற்கவேண்டி வந்தது இந்திரனுக்கு. துவஷ்டாவோ அசுரர்களுக்கே நன்மை செய்யும் வண்ணம் யாகங்கள் செய்தான். இது அறிந்த இந்திரன், துவஷ்டாவைத் தன் குரு என்றும் பாராமல், கொல்ல, பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது இந்திரனுக்கு. தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள எல்லா இடங்களுக்கு அலைந்துவிட்டுக் கடைசியாக பாபநாசம் வந்து இங்கே உள்ள இறைவனை வழிபட்டுத் தன் பாவங்கள் நீங்கப் பெற்றான் என்கிறது தல வரலாறு.

அம்பாள் பெயர் உலகம்மை. இவள் சந்நிதி முன்பு உரல் ஒன்றும், உலக்கையும் உள்ளது. கோயிலிலேயே விரலி மஞ்சள் கொடுக்கின்றனர். அதை இந்த உரலில் இட்டு இடித்துவிட்டு அதையே பிரசாதமாக எடுத்துக் கொண்டு வரலாம். நல்லவேளையா இதுக்குக் காசு எதுவும் வாங்கலை! இந்த மஞ்சள் பொடியினாலேயே அன்னைக்கு அபிஷேஹமும் நடக்கும் எனச் சொல்கின்றனர். இந்த அபிஷேஹ தீர்த்தமும் அருந்தினால் புத்திர பாக்கியம், திருமண பாக்கியம், தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகம். இங்கே தைப்பூசத்தன்று நந்திக்குச் சிறப்பு வழிபாடு சந்தனக்காப்போடு நடக்கிறது. வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் தைப்பூசத்தன்று நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் ஆநந்த தாண்டவம் ஆடிய வண்ணம் ஈசன் காக்ஷி அளித்ததால் தைப்பூசத்துக்கு நந்திக்குச் சிறப்பு வழிபாடு. நடராஜர் தனி சந்நிதியில் ஆநந்த தாண்டவக் கோலத்தில் காக்ஷி கொடுக்கிறார். இவருக்குப் புனுகு மட்டுமே சார்த்தப் படுகிறது. இவரைப் புனுகு சபாபதி என்று அழைக்கின்றனர்.


படங்கள் உதவி: நன்றி கூகிளார்.

Sunday, October 18, 2009

நவ கைலாயம் பற்றிய பதிவுகள் மிகவும் தாமதம் ஆவதற்கு வருந்துகிறேன். புதன் கிழமைக்குள்ளாக ஆரம்பிக்க முடியும் என நம்புகிறேன். இறை அருளை வேண்டுகிறேன். நன்றி.