எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, September 03, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்~ தில்லி வீரர்களின் கொடூரம்!

வரும் படைகள் எவருடையது என்ற குழப்பத்தில் அனைவரும் ஆழ்ந்தனர். வருபவர்கள் தில்லிப் படையினர் என்பது விரைவில் தெரிந்தது. உடனே அங்கிருந்தோரில் ஒருவன் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு வேட்டுவர் குடியிருப்பில் மறைந்திருக்கும்படி அறிவுறுத்தினான். உடனே அனைவரும் அழகியமணவாளரின் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு வேட்டுவர் குடியிருப்பை நோக்கி ஓடினார்கள். நோய்வாய்ப் பட்டிருந்தவர்களோடு பிள்ளை உலகாரியரும் அங்கேயே தங்கி விட்டார்.  அடுத்த சில கணங்களில் அந்தத் தோப்பை தில்லி சுல்தானின் படை நெருங்கி விட்டது. குதிரைகள் ஒரு நூறு ஒரே நேரத்தில் சடசடவென்ற சப்தத்தோடு நின்றன.

அவர்களின் தலைவன் பரிவாரங்களையும் பிள்ளை உலகாரியரையும் பார்த்து, "யார் நீங்கள்? எங்கே போகிறீர்கள்?" என்று வினவ அவர்கள் ராமேஸ்வரத்துக்குத் தீர்த்த யாத்திரை செல்வதாகக் கூறினார்கள். ஆனால் தலைவன் அதை நம்பாமல் உரக்கச் சிரித்தான். பொய் சொல்லுவதாகவும் ஏளனம் செய்தான். ஆனால் ஶ்ரீரங்கத்துப் பரிவாரங்களும் மற்றவர்களும் விடாமல் ராமேஸ்வரமே செல்வதாகக் கூற ராமேஸ்வரம் செல்லும் வழி இதுவல்ல வென்று அந்த தில்லி சுல்தானின் படைத்தலைவன் கூறினான். பின்னர் அவர்கள் ஶ்ரீரங்கத்திலிருந்து வருவதைத் தான் அறிந்து கொண்டு விட்டதாகவும் கூறினான். ஆனால் ஶ்ரீரங்கத்துக்காரர்கள் விடாமல் நோய்வாய்ப்பட்டதால் அங்கே தங்கி இருப்பதாகவும், நிழலும் நீரும் இங்கே கிடைப்பதால் தங்கி இருப்பதாகவும் கூறினார்கள். பின்னர் அவன் பார்வை அங்கே படுத்திருந்த உலகாரியர் மேல் பட்டது. அவரின் தீர்க்கமான நாமத்தைப் பார்த்த அவன் அவர் அருகே சென்று அவரைப் பார்த்து எழுப்பினான்.

"ஹே, கிழவா! எழுந்திரு! உன்னைப் போல் நாமம் தரித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை அறிவேன். நீ உண்மையைச் சொல்ல வேண்டும். எங்கே போகப் புறப்பட்டீர்கள்?" என்று வினவினான். உலகாரியரோ, "நாங்கள் ஶ்ரீவைணவர்கள். பகவானின் திருநாமமே எங்களுக்கு அமிர்தம். அதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை!" என்றார். இதைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்ட அந்தத் தலைவன் தன் கையிலிருந்த சாட்டையை எடுத்து ஓங்கி அவரை அடிக்க வேண்டும் என்று கையைத் தூக்கக் கூட்டத்திலிருந்த பலரும் ஓடோடி வந்து உலகாரியரை மறைத்துக் கொண்டு, எங்களை அடித்துக் கொள், அவரை ஒன்றும் செய்யாதே! என்று அலறினார்கள்.  கோபம் கொண்ட அந்தத் தலைவன் சாட்டையை ஓங்கி அங்கிருந்த ஓர் ஆளின் மேல் அடித்தான். வீறிட்டுக் கத்தினான் அவன். மீண்டும் மீண்டும் சாட்டையை ஓங்கிக் கொண்டு அதே ஆளையே திரும்பத் திரும்ப அடிக்க அவன் அடி வாங்குவதைக் கண்டு தாங்க முடியாத பிள்ளை உலகாரியர் மயங்கிக் கீழே விழுந்தார்.

பரிவாரங்கள் கோபத்தில் கொந்தளித்தனர். அப்போது ஒருவன் ஓடோடி வந்து, தலைவனைப் பார்த்து, "நிறுத்துங்கள், பிரபு!" என்று கத்தினான். யாரென்று பார்த்தால் அரங்கனோடு வேட்டுவர் குடிக்கு மறைந்திருக்கச் சென்றவர்களில் ஒருவன் அங்கே வந்து தாங்கள் யாத்திரிகர்கள் தாம் என்றும் அதை தில்லி சுல்தானின் ஒற்றர் தலைவனுக்கு நிரூபித்துக் காட்டிவிட்டதாகவும் கூற தலைவனுக்கு ஆச்சரியம். யார் அந்த ஒற்றர் தலைவன் என்று ஆச்சரியத்துடன் கேட்டான். அதற்கு அந்த ஆள் அவரைப் பெயர் மூலம் அறிந்ததில்லை என்றும் அடையாளம் தெரியும் என்று கூறிவிட்டுக் கன்னத்தில் பெரிய மச்சம் இருக்கும் என்றும் கூறினான். "அவரா" என்று தயங்கிய தலைவன் அவர் தான் என்றும் சொல்வதற்கும் நிரூபித்ததற்கும் என்ன அத்தாட்சி என்று கேட்டான்.

அதற்கு வந்தவன் அவரே இங்கே பக்கத்தில் திருக்கோட்டியூரில் இருப்பதாகவும் இங்கே இருந்து அரை நாழிகைப் பயணத்தில் அவரைக் காணலாம் என்றும் கூறினான். அதற்குத் தலைவன் அவனையே அந்த ஒற்றர் தலைவனைக் காட்டும்படி கூற இருவரும் திருக்கோட்டியூருக்குக் கிளம்பினார்கள். அனைவரும் உடன் சென்றனர். அரை நாழிகைக்கும் குறைவான நேரத்திலேயே திருக்கோட்டியூரை அடைந்தனர். எல்லா இடங்களிலும் தேடியவர்களுக்குக் கடைசியில் ஒரு வீட்டுத்திண்ணை மேல் மச்சக்காரன் இருப்பதையும் அவர்கள் தலைவனான குலசேகரன் என்பான் அங்கே இருந்து மச்சக்காரனுக்குப் பணிவிடை செய்வதையும் பார்த்தார்கள். கூட்டமாக ஆட்கள் வருவதைப் பார்த்தக் குலசேகரன் என்பான் திரும்பிப்பார்க்க தில்லிப் படை வீரர்களையும் அவர்களுடன் ஶ்ரீரங்கத்து ஆள் ஒருவனையும் பார்த்தான்.

ஶ்ரீரங்கத்து ஆள்குலசேகரனிடம் தாங்கள் யாத்திரிகர்கள் என்பதை நம்பாமல் தில்லி வீரர்கள் கொடுக்கும் தொந்திரவைச் சொன்னான்.அரங்கன் ஊர்வலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துத் தொந்திரவு கொடுப்பதாகவும் அனைவரையும் சாட்டையால் அடிப்பதையும் கூறி உங்கள் ஒற்றர் தலைவனே இதை அறிவார் என்று கூறி இங்கே அழைத்து வந்ததாகச் சொன்னான். அப்போது இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மச்சக்கார ஒற்றர் தலைவன் மெல்ல முனகவும் குலசேகரன் அவனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டான். தன் மடியில் சாய்த்த வண்ணம் அமர்த்திக் கொண்டான்.