எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, August 16, 2019

தத்தனின் தீர்மானம்!

இருவரும் தங்கள் உடல் சோர்வு நீங்கவும் புழுதியான உடம்பு சுத்தமாகவும் வேண்டி மீண்டும் குளித்தார்கள். குளித்துவிட்டு வந்த தத்தன் அந்த மகரகண்டியைக் கையில் எடுத்துக் கொண்டு வல்லபனிடம் அது தங்களிடமே பத்திரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும், அதற்காக அந்தப் பெண்ணின் ஓலையை நம்பி வழியில் பிறழ்ந்து செல்லவேண்டிய அவசியம் இல்லை எனவும் சொன்னான். ஆனால் வல்லபனோ வேறு ஏதோ யோசனையில் இருந்தான். தத்தன் அவனிடம் வற்புறுத்தலாகக் கடந்த இரு நாட்களில் நடந்ததை எல்லாம் மறந்துவிட வேண்டும் என்றான். ஆனால் வல்லபனோ எதற்கும் மறுமொழி சொல்லாமல் அவனையே பார்த்த வண்ணம் நின்றான்.

தத்தன் மேலும் அவனிடம் தாங்கள் வந்த காரியம் வேறு எனவும் அந்தக் காரியத்தை முடிக்கவேண்டும் என்னும் லட்சியத்தில் இருந்து தாங்கள் பின்வாங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினான். இந்தச் சம்பவங்கள் இடையில் வந்தவை! நாமாக உட்புகுந்து விட்டோம். ஆகவே இவற்றை அடியோடு மறந்து விடலாம். நாட்டில் எங்கெங்கோ, யார் யாருக்கோ என்னவெல்லாமோ நேரிடுகிறது. அதற்கெல்லாம் நாம் பொறுப்பாகவும் முடியாது! அனைவரையும் நம்மால் காப்பாற்றிக் கொண்டிருக்கவும் முடியாது. வல்லபனின் தாயார் வல்லபனை இவ்வளவு தைரியமாக வெளியே அனுப்பி இருப்பதன் நோக்கத்தை நினைத்துப் பார்க்கச் சொன்னான் தத்தன். அவன் தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றுவதிலேயே அவன் ஈடுபட வேண்டும் என்றும் கண்டித்துக் கூறினான். வல்லபனும் ஆமோதித்தான். "ஆம்! என் தாய்க்கு என் தந்தை கண்ட கனவு பலிக்க வேண்டும்." என்றான்.

"வல்லபா! உன் தாய்க்கு வாழ்க்கையின் குறிக்கோளே அது தான்! அதற்காகவே உன்னைப் பெற்றெடுத்தார்கள். உன்னைக் கல்வி பயின்று வர அனுப்பினார்கள். கொங்கு நாட்டின் வீராதி வீரர்களிடம் உன்னை மல்யுத்தம், வாள் வீச்சு, வில் வித்தை எல்லாவற்றிலும் பழக்கி இருக்கின்றார்கள். இத்தனையும் தனியொரு பெண்ணாக நின்று அவர் செய்திருக்கிறார் வல்லபா! அனைத்தும் எதற்காக? அந்த நீண்ட நெடுங்காலத்துக் கனவு! அரங்கனை எப்பாடுபட்டாவது கண்டு பிடிக்க வேண்டும். மீண்டும் அவனைத் திருவரங்கத்தில் சேர்க்க வேண்டும். இது தானே அவர்களின் நீண்ட நெடுங்காலக் கனவு!அதையும் அவர் வாழ்நாளுக்குள்ளே நடந்து அவர் கண்களால் அதைக் காண வேண்டும்.அவர் உயிர் வாழ்வதே இதற்காகத் தானே வல்லபா! அதை நினைத்துப் பார்! இதை முடிக்க வேண்டியே வெளி உலகுக்கு உன்னையும் துணைக்கு என்னையும் அனுப்பி இருக்கிறார். இதோ பார் வல்லபா! நாடு எவ்வளவு சீர் குலைந்திருக்கிறது என்பதை நீ அறிவாய் அல்லவா? நாட்டின் இத்தகைய சீர்கேட்டிலும் உன் தாய் உன்னை தைரியமாக வெளியே அனுப்பி அரங்கனைத் தேடும் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள் என்றால் அது எப்பேர்ப்பட்ட லட்சியமாக இருக்கும் என்பதை அறிவாய் அல்லவா?"

நீளமாகப் பேசிவிட்டுப் பெருமூச்சு விட்டான் தத்தன். வல்லபன் எதற்கும் பதில் சொல்லவில்லை.தத்தன் கூறுவதெல்லாம் சரி என்றே அவன் உள்மனம் சொன்னது. தத்தன் சொன்னது மாதிரியே நடந்து கொண்டு இடையில் நடந்தவற்றை எல்லாம் மறந்து விடலாம் என ஓர் எண்ணம் வேகமாக அவன் நெஞ்சில் எழுந்தது. ஆகவே தத்தனோடு சேர்ந்து அவனும் நடக்க ஆரம்பித்தான். இருவரும் மௌனமாகவே சற்று நேரம் நடந்தார்கள். போகும்போதே வல்லபன் அவனிடம் அரங்கன் பற்றிய விசாரம் ஒன்றே இனி என் குறிக்கோள் என உறுதியாகச் சொன்னான். தத்தனும் அதை மகிழ்வோடு ஆமோதித்தான். 

Monday, August 12, 2019

குதிரை பறந்தது!

அந்த யாத்ரிகன் அதற்கு மீண்டும் மீண்டும் சிரித்தான். வல்லபன் அவனை, "நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்?" எனக் கேட்டதற்கும் சிரித்தான். பின்னர் வல்லபனைப் பார்த்து, "அதோ உன் நண்பன்! அவனிடம் நான் ஏற்கெனவே சொல்லி  விட்டேன். அவன் உனக்குச் சொல்லவில்லையா? நான் ஓர் கற்பூர வியாபாரி!" என்றான் அழுத்தம் திருத்தமாக! அவனைப் பார்த்தால் வியாபாரியாகத் தெரியவில்லை வல்லபனுக்கு. மீண்டும் சந்தேகத்துடன் அவனைப் பார்க்க அவனோ தான் ஒரு வியாபாரி தான் என வலியுறுத்திப் பேசினான். மேலும் தான் வியாபாரப் பயணத்தில் தான் தன் ஆட்களுடன் செல்லுவதாகவும் சொன்னான். மேலும் கற்பூரம் தவிர்த்துத் தான் மிளகு, கிராம்பு, இலவங்கம், இலவங்கப்பட்டை, சீனாவிலிருந்து வரும் பட்டு,  ஜாதி பத்திரி தவிர்த்து அரசர்களும் பெருங்குடி மக்களும் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள் என விற்பதாகவும் கூறினான். ஒவ்வொரு ஊரிலும் உள்ள பெருங்குடி மக்கள், தனவந்தர்கள், அங்குள்ள படைத்தலைவர்கள், குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள் எனத் தேடித் தேடிப் பார்த்துத் தன் வியாபாரத்தை நடத்திக் கொண்டு வருவதாகவும் சொன்னான். பின்னர் வல்லபனைப் பார்த்து, "தம்பி, நான் வந்த அன்று அதாவது முந்தாநாள் நான் தான் உன் உயிரைக் காப்பாற்றினேன். அதை மறந்துவிடாதே!" என்றும் சொன்னான்.

ஆனாலும் வல்லபனுக்குச் சந்தேகம் தீரவில்லை. தான் அந்த வியாபாரியான யாத்ரிகனுக்குக் கடமைப்பட்டிருப்பதையும் நன்றியுடன் இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டான். ஆனால் இந்த ஓலை நறுக்கும் மகரகண்டிகையும் தன் சந்தேகத்தை மீண்டும் மீண்டும் கிளறி விடுவதாகவும் சொன்னான்.  அதற்கு அந்த வியாபாரி, "தம்பி!இதைக் கூடவா நீ நம்பவில்லை? நான் ஏதோ சூழ்ச்சியும் தந்திரமும் செய்து உன்னை ஏமாற்றுவதாக நினைக்கிறாய் போலும்!  இந்த மகர கண்டிகை பத்தரை மாற்றுத் தங்கம் தம்பி! நன்கு கவனித்துப் பார். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு ஆபரணத்தை முன்பின் தெரியாத உன்னிடம் நான் ஏன் கொடுக்க வேண்டும் தம்பி? அதனால் எனக்கு என்ன லாபம்? எனக்கு என்ன இதன் மதிப்புத் தெரியாமல் உன்னிடம் கொடுத்ததாக நினைக்கிறாயோ? அவ்வளவு மதிகெட்டவனா நான்?"

"இதோ பார் தம்பி! உண்மையாகவே அந்தப் பெண் தங்கி இருந்த அறையில் தான் இதைக் கண்டு எடுத்தேன்.  அதில் நுனியில் கட்டியிருந்த ஓலை நறுக்கையும் கண்டேன். அதனால் தான் உங்களிடம் எடுத்து வந்தேன். எனக்கென்ன தம்பி!  நான் சொல்வதை நீ நம்பினால் நம்பு! நம்பாவிட்டால் அது உன்னிஷ்டம்! சரி, எனக்கும் நேரம் ஆகிவிட்டது தம்பி! நான் சென்று வருகிறேன். என் ஆட்களைக் கண்டு பிடித்துப் பயணத்தைத் தொடர வேண்டும்." என்று சொல்லிய வண்ணம் குதிரை மேல் ஏறிப் பயணத்தைத் தொடர ஆயத்தமானான். அவனால் குதிரை மேல் சர்வ சகஜமாக ஏற முடியவில்லை என்பதை வல்லபன் கண்டான். தத்தனைப் பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என நினைத்துக் கொண்டார்கள். என்ன நடக்கிறது என்பதும் அதன் முழு தாத்பரியமும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நல்ல நாள், நல்ல சகுனம் பார்த்தே ஊரில் இருந்து கிளம்பி இருந்தோம். அப்படியும் இப்படி எல்லாமும் நடக்கிறதே எனக் கவலையில் ஆழ்ந்தார்கள். யாத்ரிகன் போகிற போக்கில் கீழே வீசி விட்டுப் போயிருந்த மகர கண்டிகை வெளிச்சத்தில் பளபளத்தது.

அதைக் கைகளில் எடுத்து உற்று நோக்கினான் வல்லபன். நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகம் காணப்பட்ட அந்த ஆபரணத்தில் கொடிகள், மலர்களோடு, தெய்வ உருவங்களும் மீன் வடிவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.  இது உண்மையாகவே அந்தப் பெண்ணின் ஆபரணமாய் இருக்குமா? நாம் உண்மையில் ஏமாந்து விட்டொமோ? என்ன செய்யலாம்?" எனக் குழப்பத்துடன் வல்லபன் அதைப் பார்த்த வண்ணமே நின்றான். அந்த ஆபரணத்தைக் கைகளில் ஏந்தியவன் அதை முகர்ந்து பார்த்தான். ஆஹா! அந்தப் பெண்ணிடமிருந்து வந்த மகிழம்பூ வாசனை! இந்த ஆபரணத்திலும் வருகிறதே! வல்லபன் முகம் மலர்ந்தது! சந்தேகமே இல்லை. இது அந்தப் பெண்ணின் ஆபரணம் தான்! வல்லபன் முகம் பளிச்சிட்டது. தத்தனிடம் அதைக் காட்டினான். அவனையும் முகர்ந்து பார்க்கச் சொன்னான். இது அந்தப் பெண் அணிந்திருந்ததால் அதுவும் நீண்ட நாட்கள் அணிந்திருந்ததால் மட்டுமே ஏற்பட்டிருக்கும் வாசனை. ஆகவே அது அந்தப் பெண்ணுடையது தான் என வல்லபன் தத்தனிடம் தீர்மானமாகச் சொன்னான். உடனே திரும்பி அந்த வணிகனை அவசரமாக அழைத்தான். ஆனால் அவனோ சிறிது தூரம் குதிரையில் சென்று விட்டான்.

வல்லபன் விடாமல் மீண்டும் அவனை அழைத்தான். வணிகன் திரும்பிப் பார்த்தான். ஆனால் வல்லபனிடம் வரவில்லை. அங்கிருந்த வண்ணமே தான் கிழக்கே தான்போய்க் கொண்டிருப்பதாகவும் வல்லபனுக்கும் தத்தனுக்கும் விருப்பம் இருந்தால் தன்னுடன் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துவிட்டுக் குதிரையை மீண்டும் விரட்ட அதுவும் வேகம் எடுத்தது. சிறிது நேரத்தில் காடுகளைத் தாண்டிச் சமவெளிக்கு வந்ததும் குதிரை பறக்கவே ஆரம்பித்தது.

இங்கே தத்தனுக்கும் வல்லபனுக்கும் என்ன பேசுவது என்றே புரியவில்லை.  வல்லபன் கைகளில் ஓலை நறுக்கையும் மகர கண்டிகையையும் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க தத்தன் தன் தாழங்குடையைச் சுழற்றிக் கொண்டிருந்தான். இருவரும் அவரவர் யோசனையில் சிறிது நேரம் ஆழ்ந்திருந்தார்கள். பின்னர் தத்தன் வல்லபனிடம் மீண்டும் சிற்றாற்றுக்குப் போய்க் குளித்துவிட்டு வரலாம் என அழைக்க இருவரும் சிற்றாற்றங்கரையை நோக்கிச் சென்றனர். வல்லபன் நடந்து கொண்டிருந்தானே தவிர அவன் மனதில் அந்தப் பெண்ணின் முகமே தோன்றிக் கொண்டிருந்தது. அதிலும் கண்டிகையில் நீளமானமீன் வடிவில் அந்தப் பெண்ணின் நீண்ட நெடுங்கண் அவன் எதிரே தோன்றி இம்சை செய்தது. ஓலையில் முடிக்காத அந்த வாசகங்களை நினைத்தவன் அதிலே "இளைஞர்களுக்கு" எனச் சொல்லி இருப்பது எனக்கும் சேர்த்துத் தானே என நினைத்துக் கொண்டான்.

Sunday, August 11, 2019

கன்னியின் மகரகண்டிகை சொன்ன செய்தி!

அந்தப் பெண் தங்களுக்கு "முறி" எழுதி இருப்பதாக அந்தப் புதியவன் சொன்னதை தத்தன் சிறிதும் நம்பவில்லை. (முறி-கடிதம், பனை ஓலையில் எழுத்தாணியால் எழுதுவார்கள்.) நமக்கு ஏன் அவள் முறி எழுத வேண்டும் என தத்தன் நினைத்ஹ்டான். ஆனால் வல்லபனுக்கோ பரபரப்பு உண்டாயிற்று! அந்தப் பெண்ணா முறி எழுதி இருக்கிறாள்? அதுவும் நமக்கு என நினைத்துப் பரபரத்தான். தத்தனோ வல்லபனிடம் அந்த ஆள் சொல்லுவதை நம்பவேண்டாம். அவன் தங்களை ஏமாற்றுகிறான் என எச்சரித்தான். ஆனால் அந்த யாத்ரிகன் தன் இடுப்பிலிருந்து ஓர் ஓலை நறுக்கை எடுத்து வெளியில் போட்டான். தத்தனைப் பார்த்து, "தம்பி! இப்போதாவது நம்புகிறாயா?" என வினவினான்.  அதை எடுத்துப் படிக்குமாறும் கூறினான். ஆனால் அந்த ஓலை நறுக்கு சாதாரணமாக அனைவரும் எழுதும் பனை ஓலை போல் இல்லை. சரியாக நறுக்கப்படவும் இல்லை. ஒழுங்கற்று காணப்பட்டது.  அதை அந்த யாத்ரிகன் கீழே போட்டதும் சற்றே உருண்டு போய்ச் சிறிது தூரத்தில் நின்றவண்ணம் காற்றில் ஆடியது.

வல்லபன் அதை எடுக்கக் குனிந்தான். ஆனால் தன் தாழங்குடையைச் சுற்றிக் கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்த தத்தன் அதை எடுக்க வேண்டாம் என எச்சரித்தான். தான் சொல்லுவதை அவர்கள் நம்பவில்லை என்பதைக் கண்ட யாத்ரிகன் தத்தனிடம் இன்னொரு அடையாளமும் இருப்பதாகச் சொல்லிவிட்டுத் தன் இடுப்பின் இன்னொரு பகுதியிலிருந்து ஓர் மகர கண்டிகையை எடுத்தான்.  அந்த மகர கண்டிகையை உயரே தூக்கிக் காட்டினான். மிகவும் விலை உயர்ந்தது அது. அந்தக் காலகட்டத்தில் அது பல நூறு கழஞ்சுகளுக்கும் மேல் மதிப்புள்ளது. பெரும்பணக்காரர்களும் அரச குலத்தினருமே அணிய முடியும். இருவரும் அந்த யாத்ரிகன் இதை அந்தப் பெண்ணிடமிருந்து திருடி வந்திருப்பானோ என யோசனையுடனும் அதிர்ச்சியுடனும் அவனைப் பார்த்தார்கள். இருவருமே ஏதும் பேசவில்லை.

அவர்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டது போல் அந்த யாத்ரிகன் தான் எப்படி அந்த மகர கண்டிகையைக் கண்டெடுத்தோம் எனச் சொல்ல ஆரம்பித்தான். அவர்களைப் பார்த்து தத்தனும், வல்லபனும் சத்திரத்தில் இருந்து சென்றபிறகும் கூடத் தங்கி இருந்ததாகவும் அவர்கள்  இருவரும் ஏதும் அறிந்து கொள்ளாமல் சென்று விட்டதாகவும் கூறினான். மேலும் தான் அவர்களைப் போல் கருக்கிருட்டில் கிளம்பாமல் நன்றாக விடிந்து ஒரு ஜாமம் ஆன பின்னர் கிளம்பியதாகவும் அதனால் சத்திரத்தை ஒவ்வோர் அறையாக நன்கு சோதித்துப் பார்க்க முடிந்ததாகவும் கூறினான். முக்கியமாய் அந்தப் பெண் சிறையிருந்த அறையை நன்கு சோதனை இட்டதாய்க் கூறினான். அப்போது தான் கட்டிலுக்குக் கீழே இந்த மகரகண்டிகையைக் கண்டெடுத்ததாயும் கூறினான். அந்த மகர கண்டிகையில் ஓர் நுனியில் நூலால் சுற்றப்பட்டு இந்த ஓலை நறுக்கு இருந்ததாகவும் கூறினான். அதைப் பிரித்துப் பார்த்தால் இந்த இளைஞர்களுக்கு என அது எழுதப் பட்டிருந்ததாகவும் ஆகவே அவர்களை எப்படியேனும் சந்தித்து இதைக் கொடுக்க வேண்டும் என்றே தான் வந்ததாயும் கூறினான். ஆனால் அவர்கள் இருவரும் சிறிதும் அவனை நம்பவில்லை என்பது தனக்கு வருத்தத்தைத் தருவதையும் கூறிவிட்டு இனியும் இங்கே நின்று கொண்டு நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்பதால் தான் விடைபெற்றுச் செல்வதாய்க் கூறிக் கை கூப்பினான்.

வல்லபன் அந்த ஓலை நறுக்கையே பார்த்தான். மெல்ல எழுந்து நறுக்கின் அருகே போய் அதை எடுத்தான். அது எல்லோரும் எழுதும் பனை ஓலை அல்ல. சாதாரணமாகக் கூடை முடையும் ஓர் ஓலை! அதில் எழுத்தாணி கொண்டு எழுத முடியாது. சந்தேகத்துடன் அதைப் பிரித்துப் பார்த்தான். அவன் கண்களுக்கு முதலில் எதுவுமே தெரியவில்லை. பின்னர் கூர்ந்து கவனித்தான். தெளிவில்லாத எழுத்துக்கள் அதில் காணப்பட்டன. எழுத்தாணியால் எழுதப் பட்டதாகத் தெரியவில்லை. ஏதேனும் கூர்மை இல்லாப் பொருள் அல்லது மலர்க்காம்புகளால் எழுதி இருக்கலாமோ? மிகவும் சிரமப் பட்டு வல்லபன் அதை வாசித்தான்.  அதில் சத்திரத்தில் தங்கிய அந்த இளைஞர்களுக்கு மகரகண்டிகையை அடையாளம் வைத்துத் தான் எழுதுவதாகவும், தான் தெற்கே!" இது வரை எழுதப் பட்டிருந்தது. தெற்கே எங்கே போகிறார்கள்? ஒன்றும் புரியவில்லை. பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் அந்தப் பெண் அதை அங்கேயே விட்டுச் சென்றிருக்கிறாள்.

அதை தத்தனிடம் கொடுக்க அவனும் படித்துவிட்டுத் தலையை ஆட்டினான். அவனுக்கும் ஏதும் புரியவில்லை. என்றாலும் அவனால் இன்னமும் அந்த யாத்ரிகனை நம்ப முடியவில்லை. ஆகவே வல்லபனிடம் இவன் சொல்வதை எல்லாம் நம்பவேண்டாம் எனவும் அவன் பசப்புக்காரனாகத் தெரிகிறான் எனவும் கூறினான். அதற்கு வல்லபன் மகர கண்டிகை பல நூறு கழஞ்சுகள் பெறும் எனவும் கடிதமும் அந்தப் பெண்ணால் தான் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினான். பிறகு அந்த யாத்ரிகனைப் பார்த்து அவன் யார் எனவும் எங்கிருந்து வருகிறான் எனவும் கேட்டான். மேலும் அந்த யாத்ரிகன் செய்யும் காரியங்கள் எல்லாம் சந்தேகாஸ்பதமாக இருப்பதால் தங்களால் அவனை நம்ப முடியவில்லை என்பதையும் கூறினான்.

Friday, August 09, 2019

தேடி வந்த வம்பு!

தத்தன் பயத்தைக் கண்டு வல்லபனும் திகைத்து நிற்கக் குதிரையில் ஏறியவண்ணம் வேகமாக அங்கே வந்து கொண்டிருந்தது சத்திரத்துக்கு வந்த புது விருந்தாளியான யாத்திரிகன்.  இளைஞர்கள் இருவருக்கும் கவலையும், பயமுமாக இருக்கத் தங்கள் வாட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டனர். யாத்திரிகன் வந்த வேகத்தில் தங்களை வெட்டி விடுவானோ என்னும் எண்ணத்தில் தத்தனும், வல்லபனும் இடைவெளி விட்டு நிற்க அந்த யாத்திரிகனோ அந்த இடைவெளியில் புகுந்து வேகமாகக் குதிரையை ஓட்டிக் கொண்டு சென்றான். செல்லும்போதே தன் வாளால் ஓர் வீசு வீசி இளைஞர்களின் வாட்களைக் கீழே கொஞ்ச தூரத்தில் போய் விழும்படி செய்து விட்டான்.  இருவரின் திகைப்பு மேலும் அதிகம் ஆனது. ஓடிப் போய்த் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டனர். அந்தச் சொற்ப நேரத்திற்குள்ளாக அந்த யாத்திரிகன் மீண்டும் திரும்பி அவர்களை நோக்கிக் குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்தான். அவர்கள் அருகில் வந்ததும் வேகமாக அவர்களை நோக்கிப் பாய்ந்தான். இருவரும் அவனைத் தடுக்க முயன்று தோல்வி அடைந்து தங்கள் வாட்களால் அவனைத் தடுக்க முயன்று முடியாமல் திணறினார்கள். ஆனால் வந்தவனோ வேகமாகத் தன் வாளைச் சுழற்ற இப்போது தத்தன் வாள் அவன் கைகளிலிருந்து நழுவி தூரமாகப் போய் விழுந்தது.

அதைக் கண்ட வல்லபன் தன் வாளைச் சுழற்றிப் போரிட ஆரம்பிக்கச் சுற்றிச் சுற்றி வந்து அவனுடனும் போரிட்டான் வந்தவன். வல்லபன் வளைந்து நெளிந்து புதுப் புதுக்கோணங்களில் போரிட வந்தவனும் அதற்கு ஈடு கொடுத்துத் தானும் அங்கே இங்கே எனத் துள்ளிக் குதித்து வல்லபனை எதிர்த்துப் போரிட்டான். தன்னை வல்லபன் வாளால் சாய்க்க முடியாதபடி தடுத்தும் வந்தான். அப்போது வந்தவன் வீசிய வாள் வீச்சை எதிர்கொள்ள முடியாத வல்லபன் தடார் எனக் கீழே விழுந்துவிட்டான். வந்தவனும் தன் வாளை ஓங்கிக்கொண்டு வல்லபன் மார்பின் மீது ஒரு காலை வைத்து மிதித்துக் கொண்டு நின்றான்.தன் வாளை எடுக்கப் போயிருந்த தத்தன் அங்கிருந்தே இந்தக் காட்சியைப் பார்த்து நெஞ்சம் பதறி நின்றான். வல்லபனோ அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என மனம் பதைக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அப்படியே வாளை ஓங்கிய நிலையில் வல்லபன் மார்பில் ஒரு காலை வைத்தபடி நின்றவன் பின்னர் தன் வாளைத் தூர எறிந்தான். இளைஞர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்தான். கடகடவெனச் சிரித்த அவனால் இளைஞர்கள் இருவரின் பயமும் தெளிந்து அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலையில் மாற்றமும் ஏற்பட்டது. தத்தன் ஏதும் புரியாமல் வாளை எடுத்துக் கொண்டு அங்கே வந்தான். வல்லபன் எழுந்து நின்று கொண்டான்.

அப்போது அவர்களைப் பார்த்த புதியவன், "ஏன், தம்பிகளா? இருவருக்கும் வாள் வித்தையில் இத்தனை தேர்ச்சி இருக்கிறதே? அப்புறமும் ஏன் சத்திரத்தில் அந்த வீரர் தலைவனை எதிர்க்காமல் சும்மா இருந்தீர்கள்?" என்று கேட்டான். பின்னர் வல்லபனைப் பார்த்து, "தம்பி! எத்தனை திறமையாக வாள் வீசுகிறாய்? ஆனால் இதை எல்லாம் காட்ட வேண்டிய சமயத்தில் சத்திரத்தில் காட்டாமல் இங்கே என்னிடம் அல்லவோ காட்டினாய்! போகட்டும்! இனியும் அப்படி எல்லாம் இருக்காதே! உன்னைப் பார்த்து உறுமினால் வாளை உருவி, அதட்டினால் ரத்தக்காயம் வரும்படி வாளால் அடித்துவிடு!" என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.  ஆனால் அவன் பேச்சு இருவருக்கும் பிடிக்கவில்லை. தங்கள் இருவரையும் அவன் ஒருவன் இத்தனை எளிதாக வென்றுவிட்டானே என்னும் அவமானம் இருவர் நெஞ்சிலும் இருந்தது. அவனைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. வந்தவனுடைய சண்டை முறையில் உள்ள சில நுணுக்கங்களை நாமும் கற்க வேண்டும்; அவற்றை எல்லாம் கற்கவே இல்லை! அதனால் தான் தோல்வி அடைந்துவிட்டோம்! என இருவரும் நினைத்துக் கொண்டனர்.

வந்தவன் ஆசையுடனும் உரிமையுடனும் தத்தன் முதுகில் ஓர் தட்டு தட்டிக் கொடுத்தான். ஆனால் தத்தனுக்கு அது பிடிக்கவில்லை. ஒதுங்கிக் கொண்டான். கூசியது அவனுக்கு. அந்த யாத்திரிகனுக்கு இதைப் பார்த்து மேலும் சிரிப்பு வந்தது! தத்தனைப் பார்த்து, "தம்பி! ஏன் இவ்வளவு வெறுப்பும் கோபமும்?  நீங்கள் இருவரும் சுத்த வீரர்களா இல்லையா எனச் சோதிக்கவே நான் இங்கே வந்தேன்! நீங்கள் வீரர்கள் தான்!" என்றான். அதற்கு தத்தன் இம்மாதிரி திடீரெனப் போரிட்டதால் இருவரின் உடைகளும் அழுக்காகிக் கிழிந்தும் போய்விட்டதாகக் குற்றம் சாட்டினான். வந்தவனோ தத்தனிடம் இப்படி எல்லாம் சகஜமாக நடக்கும். எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும். இதை எல்லாம் பொருட்படுத்திக் கொண்டு இருக்கக் கூடாது என்று அவனுக்கு புத்திமதி சொன்னான். தத்தன் மீண்டும் போய்த் தன் தாழங்குடையை எடுத்துக் கொண்டு வந்தான். வந்தவனைப் பார்த்து," எங்களை எதற்காகச் சோதித்தீர்? என்ன அவசியம் நேரிட்டது சோதிக்க?" என்று கோபமாக வினவினான். வல்லபனும் அதை ஆமோதிக்க அதற்கு வந்தவன், "தம்பிகளா! அந்தப் பெண்ணிற்கும் உங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தோன்றியது! அதனால் தான் அதை உறுதிப்படுத்திக் கொள்ள நான் திரும்பி வந்தேன்!" என்றான். அதற்கு வல்லபன் கேலியாக தங்கள் இருவருக்கும் அந்தப் பெண்ணிற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகப் புதியவன் நினைத்துக் கொண்டது அவனுடைய அதீத புத்திசாலித்தனத்தால் தான் என்று கிண்டலாகச் சொன்னான். வந்தவனோ தான் அதி புத்திசாலி இல்லை எனவும் நுட்பமான விஷயங்களெல்லாம் அவனுக்குப் புரியாது எனவும் சொல்லிவிட்டு அந்தப் பெண் இவர்கள் இருவருக்கும் ஓர் "முறி" எழுதி இருந்ததால் அதைப் பார்த்துவிட்டுத் தான் சந்தேகப்பட்டதாகச் சொன்னான்.

Friday, August 02, 2019

வல்லபனின் துக்கம்!

அந்தப் பெண்ணின் வண்டி சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வல்லபன். அதைக் கண்ட தத்தன் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, "என்ன விஷயம்?" என வினவினான். ஆனால் வல்லபனால் பேச முடியவில்லை. அந்தப் பெண் சென்ற திசையை விட்டு அவன் கண்கள் நகரவில்லை. வாய் மட்டும் , "ஒன்றுமில்லை!" எனப் பிதற்றியது. அவன் நிலையைப் புரிந்து கொண்ட தத்தன், "அப்பா, வல்லபா! இதைக் கேள்! பொதுவாகவே இளம் பெண்கள் தங்கள் கைகளால் எதைத் தொட்டாலும், "பட்ட மரம் தளிர்க்கும்." என்பார்கள்.  அவர்கள் காலால் உதை படும் அசோக மரம் பூக்கும். பகுல மரம் என்ற ஒன்று உள்ளது. அது இளம் கன்னிப் பெண்கள் வாயில் மதுவை வைத்து மரத்தின் மேல் உமிழ்ந்தால் பூக்கும் இயல்பு உள்ளது என்பார்கள். அவர்களின் காதல் மொழியிலேயே பூக்கும் பல மலர்கள் உண்டு. சிரித்தால் சில மலர்கள் மலரும். அவர்கள் சுவாசத்தால் பழ மரங்கள் இனிமையான கனிகளைக் கொடுக்கும்  சாதாரணப் பெண்களுக்கே இப்படி எனில், இப்போது வண்டியில் போனாளே, அவள் சிறந்த பத்மினி ஜாதிப் பெண்! அவள் பார்வை பட்ட மாத்திரத்திலேயே அனைத்தும் நடந்து விடும். அத்தனை உயிரோட்டமுள்ள பார்வை. அந்தத் தலைவன் நெஞ்சில் தான் ஈரம் இல்லை!" என்று முடித்தான்.

வல்லபன் அனைத்தையும் கேட்டுக் கொண்டு மௌனமாகவே இருந்தான். பின்னர் பொழுது நன்கு புலர்ந்து வெயிலும் ஏற ஆரம்பிக்க இளைஞர்கள் இருவரும் மீண்டும் பயணப்பட ஆரம்பித்தார்கள். காலை உணவு ஏதும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆதலால் அவர்களால் விரைவாக நடக்க முடியவில்லை. மெதுவாகவே சென்று கொண்டிருந்தனர். கிழக்கு நோக்கிச் சென்ற ராஜபாட்டையில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர் இருவரும்.  வல்லபன் மனதில் அந்தப் பெண்ணும் அந்தக் கூண்டு வண்டியும் அந்தப்பெண்  கைகளும், கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலைமையுமே மாறி மாறி வந்து கொண்டிருந்தது. ம்ம்ம்ம், இதே சாலையில் தான் அவளும் சற்று நேரத்திற்கு முன்னால் சென்றிருப்பாள். அவள் செல்கையில் பொழுது நன்றாகப் புலரவில்லையோ? இதே மரங்களையும், செடி, கொடிகளையும் அவளும் பார்த்திருப்பாள் அல்லவா? இந்தப் பட்சிகள்  அப்போதும் இதே போல் இனிய கானம் இசைத்துக் கொண்டிருந்திருக்கும் அல்லவா? அவள் என்ன நினைத்துக் கொண்டு போயிருப்பாள்? என் நினைவு அவளுக்குள் வந்திருக்குமா? இந்தச் சாலையில் எவ்வளவு தூரம் அவள் முன்னால் போயிருப்பாள்? அல்லது எங்கானும் தங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறார்களோ? தத்தனும்  மௌனமாகவே வல்லபனின் நிலையைக் கண்டு வந்தான்.

சற்று நேரம் பொறுத்து, "வல்லபா! என்ன உன் கவலை? எதைக் குறித்து மனக்கிலேசம் கொண்டிருக்கிறாய்?" என்று வினவினான். வல்லபன் திடுக்கிட்டான். எதுவும் இல்லை என மறுத்தான். ஆனால் தத்தன் அதை நம்பவில்லை. வல்லபன் மௌனமாகவே வருவதைச் சுட்டிக்காட்டி, மனக்கிலேசத்தினால் தான் அவன் அவ்வாறு வருவதாய்க் கூறினான். அதற்கு வல்லபன் கொஞ்சம் தயங்கி விட்டுப் பின்னர் தன் மனம் துக்கம் அடைந்திருப்பதாய்க் கூறினான். எதனால் துக்கம் என்று தத்தன் கேட்டான். அதற்கு வல்லபன், மெல்லத் தயங்கிக் கொண்டே, "அது தான்! அந்த இளம்பெண். அவள் விருப்பத்திற்கு மாறாக அல்லவோ அவளைச் சங்கிலியால் பிணைத்து அழைத்துச் செல்கின்றனர். இது எனக்குத் துக்கத்தை உண்டாக்கி விட்டது!" என்றான். தத்தன் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, "வல்லபா! இது என்ன புதுமையா? இப்போதெல்லாம் இப்படி நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டதே! இந்தப் பெண்ணுக்காக நீ ஏன் கவலைப்படவேண்டும்?" என்றான்.

வல்லபனோ தான் இப்போது தான் முதல் முறையாக இதைப் பார்ப்பதால் மனம் அதிகம் அதிர்ச்சி அடைந்திருப்பதாய்ச் சொன்னான். பின்னரும் சற்று நேரம் இருவரும் மௌனமாகவே பயணத்தைத் தொடர்ந்தார்கள். பல காத தூரங்களை அன்று ஒரே நாளில் எளிதில் கடந்தார்கள். பின்னர் ஓர் காட்டாற்றின் கரையிலிருந்த ஓர் மண்டபத்தில் இரவு தங்கி நன்கு உறங்கினார்கள். இரவெல்லாம் எவ்விதத் தொல்லையும் இல்லாமல் உறங்கினார்கள். காலை எழுந்து காட்டாற்றில் குளித்து முடித்து உடைகளை அணிந்து கிளம்ப வேண்டி ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது சட்டெனத் தனக்கு எதிரே ஏதோ பார்த்த தத்தன் கலவரம் நிறைந்த முகத்தோடு வல்லபனை அழைத்து, "அதோ பார்!" எனச் சுட்டிக்காட்டினான். ஓர் வீரன் குதிரையில் ஏறிக்கொண்டு வாளை ஓங்கிய வண்ணம் தலை தெறிக்கும் வேகத்தில் வந்து கொண்டிருந்தான். காலதத்தன் முன்னால் சென்ற வீரர் தலைவன் தான் அந்த ஆளை அனுப்பி இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு மோசம் போய்விட்டோமே எனப் புலம்பிய வண்ணம் செய்வதறியாது திகைத்தான்.