நவராத்திரி ஆரம்பத்தன்று கோயிலுக்குப் போனோம். தாயாரைப் பார்க்க முடியலைனு ஏற்கெனவே சொன்னேன். அது என்னமோ தெரியலை; தாயாரைப் பார்த்தா பெருமாளைப் பார்க்க முடியலை; பெருமாளைப் பார்த்தாத் தாயாரைப் பார்க்க முடியலை. இது எங்களுக்கு மட்டும் தான் நடக்குதுனு நினைக்கிறேன். சரி, இப்போ அரங்கனும், அரங்க நாயகியும் என்ன ஆனாங்கனு பார்ப்போமா? அரங்கனை அனுப்பிட்டோம் ஊரை விட்டே. ஆனால் அரங்க நாயகி என்ன ஆனாள்னு தெரிய வேண்டாமா? நம்ம கதையைத் தொடர்வோம்.
அரங்கன் சந்நிதி மூடப் பட்ட உடனேயே அனைவரும் தாயாரின்
கதி என்னமோ என நினைத்தார்கள். ஆனால் தாயாரையும்
மூலவரை வெளியேற்றி சந்நிதிக்கு அருகேயுள்ள வில்வ மரத்தடியில் மண்ணுக்குள் புதைத்து
வைத்தனர். தாயார் படிதாண்டாப் பத்தினி எனப்
பெயர் வாங்கியவள். ஆனால் இது தான் முதல்முறையாக
வள் சந்நிதியை விட்டு வெளியே வந்திருப்பாள் என எண்ணுகிறேன். இந்தத் தாயார் பின்னால் சில காலம் கழித்துக் கோயிலில்
வழிபாடுகள் ஆரம்பித்த சமயம் மீண்டும் பிரதிஷ்டை செய்யத் தேடியபோது கிடைக்கவே இல்லை. எங்கே தேடினாலும் கிடைக்கவில்லை. பின்னர் எப்போது கிடைத்தாள் என்பதை வரும் நாட்களில்
பார்க்கலாம். அரங்கநாயகியையும் மறைத்த பின்னர்
கோயிலில் இருந்த அதிகாரிகள், வேதாந்த தேசிகரை அரங்கனோடு செல்லும்படி வேண்டிக் கொண்டனர். ஆனால் தேசிகர் மறுத்தார். இங்கே ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரிய பெருமாளைக் காக்க
வேண்டி இத்தனை மக்கள் இருக்கத் தான் மட்டும் தப்பிப்பிழைப்பதில் அவருக்குச் சம்மதம்
இல்லை. ஆனால் வைணவத்தை நிலை நிறுத்த வந்த உந்நதமான ஆசாரியர்களில் ஒருவரான
தேசிகரைக் காப்பாற்றியே தீர வேண்டும் என அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்துவிட்டனர்.
இவர்களுக்குள் வாக்குவாதம் நடக்க அதற்குள்ளாக தில்லிப்
படைகள் ஆற்றில் இறங்கித் தாக்க முன்னேறும் தகவல் கிடைத்தது. ஹொய்சளப் படை வீரர்கள் வழிகாட்ட தில்லிப் படை முன்னேறியது. அனைவரும் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகளோடு வந்து
கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தலைமை வகித்து
நடத்தி வந்தவன் உல்லு கான் என்னும் தளபதி.
தில்லி சுல்தானாக இருந்த கியாசுதீன் துக்ளக்கின் மூத்தகுமாரன் ஆன இவனே முகமது-பின்
– துக்ளக் என்ற பெயரில் பிரபலமடைந்தவன். அங்கே
கோயிலையே கோட்டையாக மாற்றிய வண்ணம் ஊர்க்காரர்கள் அனைவரும் போருக்குத் தயாரானார்கள். பட்சிராஜன் தோப்பு என அந்நாட்களில் அழைக்கப் பட்ட
கருடன் சந்நிதியைச் சுற்றி இருந்த தோப்புக்கள் எல்லாம் ஆட்கள் நடக்க முடியாதபடிக்கு
முட்கள் பரப்பப்பட்டு, முட்களால் ஆன பந்துகள் தூவப்பட்டுக் காணப்பட்டன. இவற்றில் மனிதரோ, குதிரைகளோ செல்ல முடியாது. எதிரிப் படைகள் முன்னேறி தெற்கு வாயிலுக்கு வராமல்
இருக்கச் செய்த இந்த முன்னேற்பாடுகள் எல்லாமும் வீணாகத் தான் போயின.
அவற்றின் இடையே கால்களை வைத்து எதிரிப்படைகள் முன்னேறினார்கள். ஆனால் வடக்கு வாயிலுக்கு வந்த படைகள் உடனடித் தாக்குதலில்
ஈடுபடாமல் சற்றே பின்னோக்கிச் சென்று ஸ்ரீரங்கத்தின் மக்களைச் சரணடையும்படியும், கோயிலில்
உள்ள சகலவிதமான ஆபரணங்கள், நகைகள், பொருட்கள், தானியங்கள் அனைத்தையும் சுல்தானுக்குச்
சமர்ப்பிக்கும்படியும் ஆணையிட்டனர். ஆனால்
ஊர் மக்களோ தங்களுக்கு அரசன் அந்த ரங்கராஜன் ஒருவனே எனவும், அவன் யாருக்கும் கப்பம்
கட்டும் நிலையில் இல்லை என்றும் ஈரேழு பதினான்கு உலகுக்கும் அதிபதியானவனைக் கப்பம்
கட்டச் சொல்லும் உரிமையும் எவருக்கும் இல்லை எனவும் அறிவித்தனர். போர் ஆரம்பித்தது. அரங்கன் தென்காவிரிக்கரையில் தேசிகருக்காகக் காத்துக்
கொண்டிருந்தான். அரங்கன் அடுத்து எங்கே சென்றான்,
தேசிகர் அரங்கனைச் சேர்ந்தாரா என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.