எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, July 26, 2007

சிதம்பர ரகசியம் -விஷ்ணு இருப்பிடம் வந்தார்!

அச்சுத ராயன் ஏற்படுத்திய "வைகானச"வழிபாட்டு முறை பற்றி நன்கு விரிவாகவே பார்த்தோம். இதில் முக்கியமான விஷயம் விட்டுப் போய் விட்டது. அதாவது, நந்தி வர்ம பல்லவனால் புதுப்பிக்கப் பட்டுக் கட்டுவிக்கப் பட்ட விஷ்ணுவின் கோவில், அவனுக்குப் பின் 3 அல்லது 4 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த சோழகுல அரசன் 2-ம் குலோத்துங்கனால் நீக்கப் பட்டு, விஷ்ணு அவரின் இருப்பிடம் ஆன கடலுக்கு அனுப்பப் பட்டதாய்ச் சொல்கிறார்கள். இப்படியே பலவருடங்கள் இந்தக் கோவிலில் விஷ்ணு தன் இருப்பிடத்தில் இல்லாமலே இருந்திருக்கிறது.குலோத்துங்கனுக்குப் பின்னர் வந்த பிற்காலப் பாண்டியர் காலத்தில், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டிய அரசனின் காலத்திலும், கிட்டத் தட்ட 15-ம் நூற்றாண்டு வரையிலும் விஷ்ணு கோவில் முக்கியத்துவம் பெறவில்லை எனத் தெரிகிறது. அரசர்களின் மான்யங்கள் அனைத்தும் நடராஜருக்கே அளிக்கப் பட்டு வந்திருக்கிறது. சிவ-விஷ்ணு பேதம் பார்க்காத பாண்டியர் காலத்தில் மட்டுமில்லாமல், பின்னர் வந்த கிருஷ்ணதேவ ராயரும் நடராஜருக்கே மானியங்கள் அளித்து வந்திருக்கிறார். அச்சுதராயர் காலத்திலேதான் கடலில் இருந்த விஷ்ணுவைக் கண்டு பிடித்து மறுபடியும் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அவ்வாறு பிரதிஷ்டை செய்யும்போது தற்சமயம் இருக்கும் கோலத்தில், விஷ்ணுவின் சிரம் தெற்கேயும், பாதங்கள் வடக்கேயும் வைத்துப் பிரதிஷ்டை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷ்ணு சந்நிதிக்கு எதிரே ஒரு குறிப்பிட்ட இடம் உள்ளது. அது தான்,

கமலமத்யம் என்று கூறுகிறார்கள். இந்த இடத்தில் நின்று கொண்டு பார்த்தால் ஒரே சமயத்தில் நடராஜர் தரிசனமும், மகாவிஷ்ணுவின் தரிசனமும் கிடைக்கும். இவ்வாறு தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாய்க் குறிப்பிடுகின்றனர். இதை சிவ வழிபாட்டின் மூன்று முக்கியமான பகுதிகளாய்க் குறிப்பிடுகின்றனர். அவை யாவன:

அத்யாத்மிகி: இம்முறையான வழிபாட்டில் நாம் கடவுளை நம் உள்ளமாகிய தாமரையில் வைத்து வணங்குகிறோம். நம் உள்ளமே ஆகாயம், அங்கே வழிபடும் "ஒளிச்சுடரே" இறைவன் என்று அறிகிறோம்.

அதிதெய்வீகி: இம்முறையில் ஒருவன் "நாராயணனே" அனைத்தும் என்று அறிந்து நாராயணனை வழிபடும் அதே நேரத்தில், அந்த நாராயணன் தன் இருதயத்தில் வைத்துப் பூசிக்கும் சிவனும் வழிபாட்டுக்கு உரியவர் என்று உணர்கிறான். இம்முறையில் அவன் "அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு" என்ற பழமொழியின் உண்மையையும் உணரத் தொடங்குகிறான்.

அதிபெளதீகி: இம்முறையில் இந்தப் பிரபஞ்சமே அந்த நடராஜரின் ஆளுமைக்கு மட்டுமில்லால் அவனால் ஆட்டுவிக்கவும் படுகிறது என்றும், சகலமும் அவனே, அவனின்றி ஓர் அணுவும் அசையாது! இந்த ஆகாயமும் சரி, சூரிய, சந்திரர்களும் சரி, நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து, மலைகள், மேடுகள், நதிகள், காட்டாறுகள், வெள்ளங்கள், எரிமலைகள், வெயில், வறட்சி, சுபிட்சம், அனைத்துக்கும் காரணன் அவனே என்று புரிந்து கொள்கிறார்கள். இந்த விஷயம் பெரும் ஞானிகள் மட்டுமே அறிய முயற்சித்த ஒன்று. நம் போன்ற சாமானியர்களுக்கும் புரிய வேண்டுமென்று சற்று எளிமையாகவே கொடுக்கிறேன்.

மேற்சொன்ன மூன்று முறைகளையும் பின்பற்றித் தான் சித்சபையில் "சகலஸ்வரூபராக நடராஜரும்", "நிஷ்கலஸ்வரூபமாக சிதம்பர ரகசியமும்", "சகல-நிஷ்கலஸ்வரூபமாக ஸ்படிக லிங்கமும்" வழிபாடு செய்யப் படுகின்றன.

இந்தக் கமலமத்யமத்துக்குச் சற்றுத்தள்ளி மண்டபத்தின் நடுவில் துவஜஸ்தம்பம் உள்ளது. பக்கத்திலேயே பலிபீடமும் உள்ளது. இந்த துவஜஸ்தம்பத்தில் தான், ஆனித் திருமஞ்சனம், மார்கழித் திருவாதிரை, பிரம்மோற்சவம் போன்ற திருவிழா சமயங்களில் கொடி ஏற்றுவார்கள். இனி அடுத்து நிருத்த சபைக்குப் போகலாம்.

Monday, July 23, 2007

சிதம்பர ரகசியம் - நீங்க வைகானசமா/ பாஞ்சராத்திரமா?

மதுரையம்பதி கேட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு மிகவும் முயற்சி செய்து வருகிறேன். என்றாலும் எனக்குத் தெரிந்தவரை ஸ்ரீ ராமானுஜர் தான் ஸ்ரீரங்கம் கோவிலில் "பாஞ்சராத்திர" முறைப்படி வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்தவர் என்றவரையில் தெரியும். அவருக்குப் பின்னர் வந்த ஸ்ரீமத்வேதாந்த தேசிகர் காலத்திலே தான் பிரிவினை அல்லது வேறுபாடு ஏற்பட்டதுன்னு நினைக்கிறேன். இந்த தேசிகர்தான் "மணிப்ரவாளம்" என்னும் வடமொழியும், தமிழும் கலந்த எழுத்து நடையை ஏற்படுத்தினார்னும் நினைக்கிறேன். இது கிட்டத் தட்ட பிரபந்தங்களையே வேதமாக ஏற்கும் ராமனுஜரின் அடியை ஒற்றி நடப்பவர்களுக்கும், பிரபந்தங்கள் மட்டும் போதாது என்று சொல்லும் நிகமாந்த தேசிகரின் அடியை ஒற்றி நடப்பவர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடாகக் கூட இருக்கலாம். இது பற்றி ஒரு பெரியவரிடம் சந்தேகம் கேட்டுள்ளேன். இருந்தாலும் எனக்குத் தெரிந்தவரையில்"

வைணவத்தில் ஸ்ரீ ராமானுஜர் கூறி இருப்பதாவது:" "ஸ்ரீ" என்னும் மகாலட்சுமியானவள் அந்தப் பரம்பொருளான "நாராயணனி"டமிருந்து பிரிக்க முடியாதவள். அவனுடன் நித்திய வாசம் செய்பவள். ஆகவே "ஸ்ரீ"யும் ஒரு பரம்பொருளே ஆவாள்." என்பதாகும்.

ஆனால் மற்றொரு பிரிவினர் கூறுவது: "ஸ்ரீ"யும் நம்மைப் போல் ஒரு ஜீவன். அவள் பரம்பொருளும் இல்லை, பரம்பொருளுக்கு நிகரானவளும் இல்லை, வேண்டுமானால் நமக்காக அந்தப் பரம்பொருளிடம் இவள் சிபாரிசு செய்து நம்மைக் கவனித்துக் கொள்ளச் சொல்கிறாள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்." இது மற்றொரு சாரார் கூற்று. இவர்கள்தான் வடகலை, தென்கலை எனப் பிரிந்து இருக்கிறார்கள் என எண்ணுகிறேன். இறைவனை அடைய முயற்சி செய்யவேண்டும், என்று ஒருசாராரும், அவன் பாதாரவிந்தங்களைச் சரணடந்து விட்டால் அப்புறம் அவன் நம்மைக் கவனிக்காமல் போய்விடுவானோ என்று மற்றொரு சாராரும் சொல்வதாக வைத்துக் கொள்ளலாமோ? இது பற்றிப் பலரிடம் சந்தேகம் கேட்டாச்சு. இப்போக் கடைசியா ஒருத்தரிடம் கேட்டுள்ளேன். கோவில் வழிபாடுமுறை பற்றிப் பலருக்கு அவ்வளவாய்த் தெரியவில்லை. சிதம்பரம் கோவில் வைகானச முறைதான் என்றும், ஸ்ரீரங்கம் கோவில் பாஞ்சராத்திர முறைதான் என்ற அளவிலும் மட்டுமே தெரிகிறது. இதில் காஞ்சிபுரம் கோவில்காரர்கள் வடகலை என்றும் தெரிய வந்தது. பதிலுக்குக் காத்திருக்கிறேன். இல்லைனால் "கண்ணபிரான்"தான் வந்து சொல்லணும். :D

Wednesday, July 18, 2007

சிதம்பர ரகசியம் - கோவிந்த ராஜர் வந்தது எப்படி?

எழுதியே கிட்டத் தட்ட 10 நாள் ஆகிவிட்டது. உடல்நிலையும், வேலைப்பளுவும் தான் முக்கியக் காரணம். மேலும் அதிகம் யாரும் படிக்கிறாப்போலவும் தெரிவதில்லை, அதனால் ஏற்பட்ட மனச்சோர்வும் ஒரு காரணம். என்றாலும் எழுதி முடித்துவிடுவேன். நான் மட்டுமே படிச்சால் கூட. மதுரையம்பதி பின்னூட்டம் கொடுக்கலைனால் கூடப் படிப்பார்னு நம்பறேன். இனி, சிதம்பரம் போகலாம்.
*************************************************************************************

சரித்திரபூர்வமாக இந்தக் கோவில் 2-ம் நந்திவர்மன் காலத்தில் புதுப்பிக்கப் பட்டதாய்த் தெரிகிறது. திருச்சித்திரக் கூடம் என வைஷ்ணவர்களால் அழைக்கப் படும் இது முதலில் தீட்சிதர்களால் தான் வழிபாடு செய்யப் பட்டு வந்துள்ளது. திருமங்கை ஆழ்வாராலும், குலசேகர ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப் பட்ட இந்தக் கோயில், அவர்களால் பாடப் பட்ட திருமொழியிலும் தீட்சிதர்கள் வழிபாடு செய்தது பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. குலசேகர ஆழ்வார் ராமபக்தியில் சிறந்தவர், ராமரைத் தொழுது வருவதே பிறவிப் பெரும்பயன் என நினைத்தவர், இந்தக் கோயில் கோவிந்தராஜப் பெருமாள் ராமர்தான் என மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்திருக்கிறார். அந்த ஸ்ரீராமன் தான் கோவிந்தராஜராக வந்திருப்பதாய் மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்துள்ளார்.

என்றாலும் சிதம்பரம் தீட்சிதர்களைப் பொறுத்தவரை நடராஜருக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துப் பெருமாளை அவரின் பரிவார தேவதைகளில் ஒருவராகவே நினைத்து ஆராதித்து வந்திருக்கிறார்கள். காஞ்சியில் உள்ள சிவ- ஏகாம்பரநாதருக்கு விஷ்ணு பரிவார தேவதை என அங்கே உள்ள ஆதிசைவ குருக்கள் வைத்து வழிபாடு செய்வதைப் போல (இது பற்றிய உண்மையான தகவல் எனக்கு இன்னும் தெரியாது, கேட்டுத் தான் சொல்லவேண்டும்) சிதம்பரத்திலும், நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண வந்த பரிவார தேவதைகளில் ஒருவராகவே விஷ்ணுவை வழிபாடு செய்தனர். கிட்டத் தட்ட 10-ம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது.

கோவிலின் நிர்வாகஸ்தர்களுக்குள் சிவன் கோவிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள், விஷ்ணு கோவிலைப் புறக்கணிப்பதாயும், வழிபாடு சரிவர நடைபெறவில்லை எனவும் குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்பட்ட காலத்தில் அச்சுத ராயன் என்பவன் காலத்தில் விஷ்ணு கோவில் புதுப்பிக்கப் பட்டும் வைஷ்ணவர்களின் ஆதிக்கத்தில் ஒப்படைக்கப் பட்டது. அத்தோடு நில்லாமல் "வைகானச சூத்ரம்" முறையில் வழிபாடுகள் நடத்தவும் ஆணை இட்டதாய்த் தெரிகிறது. இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்களாய்த் த்வஜஸ்தம்ப மண்டபத்தின் கிழக்கே இருப்பதாயும் சொல்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க நாயன்மார்களில் முக்கியமான நால்வர்களின், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியவர்களில் முதல் மூவரின் பாடல்களில் சிதம்பரம் விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப் படவில்லை எனவும், மாணிக்கவாசகரின் பாடல்களிலேயே விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதாயும் சொல்கின்றனர். மாணிக்கவாசகரின் திருச்சிற்றம்பலக்கோவையில் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாயும் சொல்கின்றனர். இங்கே எனக்கு திருக்கோவையார் கிடைக்கவில்லை. கூகிளில் தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் போடுகிறேன்.

Saturday, July 07, 2007

சிதம்பர ரகசியம் - விஷ்ணு வந்தது எப்படி?

இந்திரன் ஒருமுறை மிகவும் கொடுமை நிறைந்த ஒரு ராட்சசனை வதம் செய்ய முடியாமல் மகாவிஷ்ணுவின் உதவியை நாடினார். மகாவிஷ்ணு அவனைச் சிதம்பரம் கோயிலுக்குப் போய் அங்கே ஆனந்த தாண்டவத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நடராஜரை ஆராதனை செய்துவிட்டு அவர் உதவியை நாடும்படி சொல்ல, அவன் தான் தனியாகப் போகாமல் மகாவிஷ்ணுவையும் கூட வரும்படி வேண்டினான். அவ்வாறே சிதம்பரம் வந்த விஷ்ணு, அவனுடைய ஆராதனைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு அல்லாமல், சிவனிடமும் இந்திரனுக்கு உதவும்படிக் கேட்டுக் கொள்ள அவரும் இந்திரனின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்து அவனுக்கு அந்த ராட்சசனைக் கொல்ல சக்தி கொடுத்து அருளுகிறார். அப்போதில் இருந்தே மகாவிஷ்ணு சிதம்பரத்தில் தங்கிவிட்டதாய் ஒரு புராணம் சொல்லுகிறது. இதற்கு உதாரணமாகத் தற்சமயம் கீழரதவீதியில், கிழக்குச் சன்னதிக்கு எதிரில் இருக்கும் "இந்திர புவனேஸ்வரர்" என்னும் லிங்கம் இருப்பதாயும் இந்த லிங்கத்தை இந்திரன் வழிபாட்டை ஆரம்பிக்கும்போது ஸ்தாபிக்கப் பட்டதாய்ச் சொல்கிறார்கள். (இந்த லிங்கம் நான் இன்னும் பார்க்கவில்லை!)

மற்றொரு கதை: ஒரு சமயம் மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டு யோகநித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம் திடீரென அவரின் உடல் எடை அதிகம் ஆகி ஆதிசேஷன் திணற ஆரம்பித்தான். ஸ்ரீ எனப்படும் மகாலட்சுமியும், விஷ்ணுவின் வாகனம் ஆன கருடனும் இந்த எடை அதிகரிப்பை உணர்ந்தனர். மகாவிஷ்ணுவின் உடலில் வியர்வையும் அதிகம் ஆனது. வியந்த அவர்கள் பகவானிடம் காரணம் கேட்க, அவர் சொல்கிறார், தாருகாவனத்தில் ரிஷிகளின் கர்வத்தை அடக்கத் தான் மோகினி அவதாரம் எடுத்ததையும் சிவன் பிட்சாடனராக மாறியதையும், இருவரும் ஆடிய நடனத்தையும் தான் நினைவு கூர்ந்ததாய்ச் சொல்கிறார். உடனேயே மகாலட்சுமியும், கருடனும் தாங்களும் அந்த அற்புத நடனத்தைப் பார்க்கவேண்டும் எனச் சொல்லவே விஷ்ணு தன் பரிவாரங்களுடன் வியாக்ரபுரம் என அழைக்கப் பட்ட சிதம்பரம் வந்தடைகிறார்.

அங்கே அவர் சிவனிடம் தன் வேண்டுகோளை வைக்க சிவன் அவரை முதலில் காஞ்சி சென்று அங்கே ஏகாம்பரநாதர் கோவிலில் ஒரு லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து பூஜித்துவிட்டு வரும்படி சொல்கிறார். அவ்விதமே விஷ்ணுவும் காஞ்சி சென்று ஏகாம்பரநாதர் கோவிலின் வெளிப் பிரகாரத்தில்?(சரியாத் தெரியாது. சமீபத்தில் காஞ்சி போனபோது ஏகாம்பரநாதர் கோவில் போகமுடியலை.) ஸ்தாபிதம் செய்துவிட்டுத் திரும்புகிறார். சிவனுடன் தன்னுடைய ஆட்டத்தை ஆடி விட்டு இங்கேயே கோயில் கொள்ளுகிறார். விஷ்ணு இங்கே கோயில் கொண்டதின் நோக்கம் சிவனின் தாண்டவத்தை எந்நாளும் தரிசிப்பதோடு அல்லாமல் சபாநாயகன் ஆன அவனுக்குத் துணையாக இருக்கவும், காவலுக்கும்தான் என்றும் தோன்றுகிறது.

எவ்வாறிருப்பினும் பல்லவர்கள் காலத்தில் இருந்து இந்த கோவிந்தராஜர் தில்லையில் கோயில் கொண்டதற்குச் சரித்திரச் சான்றுகள் இருப்பதாய்க் கூறுகின்றனர். அதுபற்றிப் பாப்போம்.

Tuesday, July 03, 2007

24. சிதம்பர ரகசியம் - நடராஜருக்கு அருகே விஷ்ணு!

கனகசபைக்குக் கீழே பக்தர்கள் தரிசனம் செய்யும் இடத்தில் இருந்து சற்று மேலே கனகசபைக்குச் சமாக ஒரு பெரிய மண்டபம் ஊள்ளது. அதில் சற்றுப் படி ஏறிப் போய் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு பார்த்தோமானால் ஒரே நேரத்தில் நடராஜர் தரிசனமும், கோவிந்த ராஜர் தரிசனமும் கிடைக்கும். இந்தக் கோவிந்தராஜரும் உள் பிரகாரத்திலேயேதான் கிழக்குப் பார்த்துக் கோயில் கொண்டிருக்கிறார். இதை விஷ்ணு பக்தர்கள் "திருச்சித்திரக் கூடம்" என்று அன்புடன் அழைக்கிறார்கள். மூலஸ்தானத்தில் யோகநித்திரையில், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமான் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம், பிரம்மாவும் நாபிக்கமலத்தில் இருந்து எழுந்த நிலையில் காணப் படுகிறார். எல்லையற்ற அந்தப் பரம்பொருளின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டுகளிக்கத் தான் அவரும் இங்கே கோயில் கொண்டிருப்பதாய் ஐதீகம். வேறு எந்தச் சிவன் கோயில்களிலும் காணக் கிடைக்காத இந்தக் காட்சி இங்கே மட்டும் தான் கிடைக்கும். இதை முன் வைத்தே தற்காலத்தில் பலகோயில்கள் சிவ-விஷ்ணு கோயிலாகக் கட்டப் படுகிறது. முதலில் தீட்சிதர்கள் தான் வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள். காலப் போக்கில் மாறி இருக்கிறது. அது பின்னால்.

மூலஸ்தான விமானம் "சாத்வீக விமானம்" என்று அழைக்கப் படுகிறது. பலி பீடம், த்வஜஸ்தம்பம் போன்றவை தனியாக உள்ளன. தாயாருக்குத் தனி சன்னதி உள்ளது. தாயாரின் திருநாமம் புண்டரீகவல்லித் தாயார். உற்சவர்"பார்த்தசாரதி" என அழைக்கப் படுகிறார். இந்தக் கோயிலின் உள்பிரகாரத்தில் நரசிம்ம மூர்த்தி, வேணுகோபாலர், விஸ்வக்சேனர், பதஞ்சலி, கண்வர், ஆஞ்சனேய மூர்த்தி தனி சன்னதிகள் காணப் படுகிறது. "சேஷ சயனம்" "ராம பாதம்" காணப் படுகிறது. சிவகங்கைத் தீர்த்தம் விஷ்ணு பக்தர்களால் "புண்டரீக சரஸ்" என அழைக்கப் படுகிறது. முதன்முதல் வியாக்ரமபாதரும், பதஞ்சலியும் நடராஜ தரிசனமும், ஆனந்தத் தாண்டவமும் காணச் சிதம்பரம் வந்த போதில் இருந்தே கோவிந்தராஜரும் கோயில் கொண்டதாகவும், அவரை முதன் முதல் கண்வ மகரிஷி வழிபாடு செய்து வந்ததாகவும், பிரத்யட்ச தெய்வமாக இந்தக் கோவிந்தராஜர் அவருக்குக் காட்சி கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.

பொதுவாக எல்லா விஷ்ணு கோவில்களிலும் காணப்படுவது போல் இங்கேயும் பிரசாதமாகத் துளசி தீர்த்தம், சடாரி சாதிக்கப் படுகிறது. இறைவனின் பாதங்கள் பதிப்பிக்கப் பட்ட அந்தச் சடாரியைத் தன் தலையில் வைத்துக் கொள்வதின் மூலம் இறைவனே தங்களை நேரில் வந்து ஆசீர்வதித்ததாக இன்புறுகின்றனர். ஸ்ரீராமனின் பாதுகையைத் தன் தலையில் தாங்கிக் கொண்டு சென்ற இளவல் பரதாழ்வார், ஆழ்வார்களில் முதல்வன்? அவன் அவ்வாறு செய்து தன் பக்தியை வெளிக்காட்டிக் கொண்டதில் இருந்து இவ்வழக்கம் ஆரம்பித்ததோ என்னமோ! இதை ஸ்ரீராமன் பாதுகை என்றே சொல்கிறார்கள். சிவனும், விஷ்ணுவும் வேறு வேறு இல்லை, அரியும், சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு என்பதை நிரூபிப்பதற்காகவும், பக்தர்களுக்கிடையே உள்ள இந்த வேறுபாடுகளைக் களையவுமே இவ்வாறு கோயில் கொள்ள இறை அருள் பொங்கியதோ என்று தோற்றும் வண்ணம் இந்தக் கோயிலிலே கோவிந்தராஜனும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்.