எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, October 31, 2007

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள்! - 2

எல்லாரும் என்னைப் பாராட்டி எழுதும்போது ரொம்பவே கூச்சமாயும், கொஞ்சம் கஷ்டமாயும் இருக்கிறது. இந்தச் சிதம்பர ரகசியம் தொடர் எழுதுவதிலே என் பங்கு என்பது ஒண்ணுமே இல்லை, பல குறிப்புக்களைக் கொடுத்து உதவிய எங்கள் கட்டளை தீட்சிதர் ராமலிங்க தீட்சிதர் அவர்களுக்கும், நண்பர் ஆகிரா அவர்களும், நண்பர் சிவசிவா அவர்களும், ஸ்வாமி சிவானந்தர் எழுதிய நடராஜர் பற்றிய தகவலகளும், சிவன் பற்றிய தகவல்களும்,பதஞ்சலி யோக சாஸ்திரம் பற்றிய வலைத் தளம், ஸ்ரீவித்யை பற்றிய வலைத்தளம், temple.net மற்றும் tamil.net போன்ற வலைத்தளங்களும், theevaaram.org, saivam.org, wikipedia.org, தமிழ்நாட்டுக் கோயில்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் வலைத்தளம், தல புராணங்கள் என உள்ளனவும், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றிய வலைத்தளங்கள், இன்னும் கூகிள் தேடலில் கிடைத்த சில அரிய வலைத்தளங்களுமே இதற்குக் காரணகர்த்தாக்கள். அவற்றை நான் உபயோகம் செய்து கொண்டதைத் தவிர என் பங்கு ஏதுமே இல்லை. ஆகவே காரணம் ஏதும் இல்லாமல் என்னைப் புகழ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது கூட மாலிக்காஃபூர் பற்றித் தகவல் தேடுகிறேன். "திண்ணை"யில் அரவிந்தன் நீலகண்டன் எழுதினது தவிர, கண்ணபிரான் கே.ஆர்.எஸ். கூகிளில் books.google.com -ல் உள்ள ஒரு புத்தகத்தின் பக்கங்களைச் சுட்டி கொடுத்திருந்தார். என்றாலும் அதில் வரும் பிரமஹஸ்தபுரம் ஒருவேளை சிதம்பரத்தைக் குறிக்கலாம் என்ற அனுமானத்தைத் தவிர வேறு ஏதும் கிடைக்கவில்லை. books.google.com -ல் புத்தகங்கள் என்ன விலைக்கு விற்பார்களோ, நம்மால் முடியாது என்று நான் மேலே போய் முயற்சி செய்தும் பார்க்கவில்லை! :(( இனி நம்முடைய அடுத்த பதிவுகளுக்கு வருவோமா?
*************************************************************************************

முன் குறிப்பிட்ட பதிவில் சொன்னாற்போல், திருவாரூர் தியாகேசரால் எடுத்துக் கொடுக்கப் பட்ட வரியான "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று சுந்தரர் சிறப்பித்துக் குறிப்பிட்டத் திருத் தொண்டத் தொகையில் வருகிறார்போல், தில்லை வாழ் அந்தணர்களைப் பற்றிச் சில குறிப்புக்களை இங்கே தருகிறேன். காசியில் இருந்து 3,000/- பேராய்க் கிளம்பியதாய்ச் சொல்லப் பட்ட இவர்கள் சிதம்பரத்தை வந்தடைந்தபோது ஒருவர் குறைந்திருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. திகைத்தவர்களை இறைவன் அந்த ஒருவர் தாமே என உணர்த்துகிறார். கேரளாவின் நம்பூதிரி பிராமணர்களைப் போல் முன் குடுமியுடன் காட்சி அளிக்கும் இந்தத் தீட்சிதர்கள் தங்கள் குலப் பெண்களைத் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்விக்கிறார்கள். வேறு பெண்களை எடுப்பதும் இல்லை, வேறு இடத்தில் பெண்களைக் கொடுப்பதும் இல்லை, இதன் காரணமாகவே "தில்லைப் பெண் எல்லை தாண்டாள்" என்னும் பழமொழி ஏற்பட்டதாயும் சொல்கின்றனர்.

தங்களில் ஒருவராய் நடராஜரைக் கருதும் இவர்களுக்குத் தான் இந்தக் கோயிலில் பூஜை செய்யும் முழு உரிமையும் இன்று வரை உள்ளது. சிதம்பர மகாத்மியம் நூலில் இறைவனே இவ்வாறு நந்தியிடம் கூறுவதாயும் சொல்லுகின்றனர். ஒரு தீட்சிதர் மட்டுமில்லாமல் தில்லையில் கோவிலைச் சுற்றி இருக்கும் தீட்சிதர்களின் மொத்தக் குடும்பமே இந்த இறை பணியில் தங்கள் வீட்டுப் பணி போல் நினைத்து ஈடு பட்டுள்ளது. தங்களின் குடும்பச் சொத்தாக ஒவ்வொரு தீட்சிதர் குடும்பமும் நினைக்கும் இந்தக் கோயிலின் நிர்வாகமும் அவர்களிடம் தான் உள்ளது. கோவிலின் வருமானத்தில் இருந்தே அன்றாட பூஜைகளையும், தங்களின் குடும்பத்தையும் நடத்தி வருகின்றனர். கோவிலுக்கும் வருமானம் என்பது பக்தர்களின் கட்டளைகளில் இருந்து தான். அது போல இறைவனை வழிபடுவதிலும் அவர்கள் தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றைப் போலவே பாவிக்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களில் நடக்கும் "சைவ ஆகம முறை" யில் வழிபாடு இங்கே நடப்பதில்லை. முழுக்க முழுக்க வைதீக முறைப்படி வழிபாடு நடக்கும் ஒரே சிவன் கோயில் இது தான். இங்கே ஒரு விஷயம் சொல்லணும், இந்த சைவ ஆகமத்துக்கும், வைதீகத்துக்கும் வேறுபாடுகள் தேடிக் கொண்டே இருக்கேன், சிலரிடம் கேட்கவும் கேட்டிருக்கிறேன், இன்னும் பதில் வரலை. :(

பலவிதமான யாகங்கள், யக்ஞங்கள் செய்ததாயும், இன்றும் செய்வதாயும் சொல்லப் படும் இவர்களை இறைவனுக்குச் சமமாகவும், எப்போது என்று சொல்ல முடியாத காலத்தில் இருந்தே நடராஜருக்கு வழிபாடுகள் இவர்கள் செய்து வந்ததாயும் சொல்லப் படுகின்றது. பொதுவாக இவர்கள் அனைவரும் யஜுர்வேதிகளாய் இருந்தாலும் வெகு சிலர் ரிக்வேதிகளாயும் இருக்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களில் சேவை செய்யும் சிவாச்சாரியார்களில் இருந்து இவர்கள் வேறுபட்டவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற அந்தணர்களோடு திருமணம் போன்ற எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தில்லைச் சிதம்பரத்தானைத் தவிர, இங்கே அவனின் நாட்டியத்தைப் பார்க்கக் கோயில் கொண்டிருக்கும் கோவிந்த ராஜரையும் இவர்களே முதலில் பூஜித்து வந்திருக்கின்றனர். இது திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் ஒன்றில் இருந்து தெரிய வருகின்றது.

"மூவாயிர நான்மறையாளர் நாளும் முறையாய் வணங்க அணங்காய் சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக் கூடசென்று சேர்மின்களே!" என்று திருமங்கை ஆழ்வார் அவர்களும்,

"செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள்
அந்தணர்களொரு மூவாயிரவரேத்த
வணிமணியாசனத்தமர்ந்த வம்மான் தானே!" எனக் குலசேகர ஆழ்வாரும் பாடியுள்ளார்.

Saturday, October 27, 2007

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள்



மேலே உள்ள "ஊர்த்துவத் தாண்டவம்" திருவாலங்காட்டில் காணக் கிடைப்பது. இந்தத் திருவாலங்காடு, சென்னையிலிருந்து அரக்கோணம் போகும் வழியில், சென்னைக்கு மேற்கே 37 அல்லது 40 மைல் தூரத்தில் உள்ளது. இந்தத் தலம் தான் "ரத்னசபை" ஆகும். இன்னொரு திருவாலங்காடு, ஆடுதுறைக்கு அருகே உள்ளது. அந்தத் தலம் "ரத்னசபை" அல்ல. இன்று அபி அப்பாவுடன் சில சந்தேகங்கள் கேட்கும்போது அவர் ஆடுதுறை அருகே உள்ள தலம் தான் ரத்னசபை என நினைத்துக் கொண்டிருந்தார். இன்னும் சிலருக்கும் சந்தேகங்கள் ஏற்படலாம். அதற்காகவே மீண்டும் நினைவு படுத்தி உள்ளேன். இங்கே மட்டும் இடக்காலைத் தூக்கி ஆடியபடி நடராஜர் இருப்பார். மற்ற இடங்களில் உள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி வலக்காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு இருப்பார்கள். அந்தக் கோலத்தைத் தான் நாட்டிய சாஸ்திரத்தில் "லலாட திலகம்" எனச் சொல்லப் படுகிறது. ஆனால் பேச்சு வழக்கில் இறைவன் தன் காதுக் குழையை மாட்டிக் கொள்ளக் காலைத் தூக்கியதாகச் சொல்லப் படுகிறது. அதுவும் சரி அல்ல. வலக்காலைத் தூக்கி அதன் உதவியால் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளும் அபிநயம் அது. இப்போது இந்தக் குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
*************************************************************************************சிதம்பரத்தில் தனக்குக் கோயில் கட்டிக் கொண்டு இறைவன் குடியேறியதும் சிவகணங்கள் கைலையில் இறைவன் இல்லாமல் அவனைத் தேடிக் கொண்டு காசி நகருக்கு வந்து, அங்கிருந்து இறைவன் சிதம்பரத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்டு, அந்தணர்களாக மாறி, அந்தணர்கள் உருவில் சிதம்பரத்தை அடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் இறைவனைப் பிரிய மனம் இன்றி அங்கேயே தாங்களும் குடி கொள்ள விரும்பியதாகவும், இறைவனும் அவ்வாறே அருளியதாகவும் கூறுகின்றனர். அந்தச் சிவ கணங்களே "தில்லை வாழ் அந்தணர்கள்" என்று கருதப் படுகிறது. இறைவனுக்கு அருகே இருந்து தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற அவர்கள் தங்கள் தொண்டைக் கைவிட மனமில்லாமல் சிதம்பரத்திற்கும் வந்து இங்கேயும் அவர்களே தொண்டு செய்யும் உரிமையைப் பெற்றதாயும் சொல்கின்றனர்.

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
(தி. 7 ப.39 பா.1)


திருச்சிற்றம்பலம்.
என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் கூறுகின்றார். திருஞானசம்மந்தரும் தில்லைவாழ் அந்தணர்களைத் தாம் சிவகணங்களாகவே கண்டதாய்க் கூறுகிறார். நடராஜரையும், சிவகாமசுந்தரி அம்மையையும் தங்களில் ஒருவராகவே காணும் அவர்கள் இன்றுவரை தில்லைச் சிதம்பரம் கோயிலில் நடராஜருக்குப் பூஜை செய்யும் உரிமையையும், கோவிலின் நிர்வாக உரிமையையும் தாங்களே வைத்துக் கொண்டு பணி செய்து வருகின்றனர். அவர்களைப் பற்றிய சில குறிப்புக்களையும், அவர்களின் பணி எத்தகையது என்பதையும் சிறிது பார்க்கலாம்.

Friday, October 26, 2007

சிதம்பர ரகசியம் -இறைவனை அனைவரும் வணங்கலாமே!




மஹாவிஷ்ணு ஒரு சமயம் தனக்குப் பிள்ளை வரம் வேண்டிப் பிரார்த்தித்தார், இறைவனையும், அன்னையையும். அவருக்கு வரம் அளிக்க இறைவன், அன்னையுடன் நேரிலே வந்தார். இறைவனும் விஷ்ணுவுக்கு வரம் அளித்தார். அப்போது அவர் அன்னையுடனும், ஸ்கந்தனுடனும், சோமாஸ்கந்தனாக வந்திருந்த கோலம் விஷ்ணுவின் மனதை மிகவும் கவர்ந்தது. இந்தக் கோலத்திலேயே தான் பூஜிக்க ஒரு சிற்பம் வேண்ட இறைவனும் அருளினார். அந்த மூர்த்தம் தான் இந்தத் தியாகராஜா இவர் தான் சப்த விடங்கர்களில் முதல்வர். முதல் முதல் விஷ்ணுவிடம் இருந்தவர். இவரின் இந்தக் கோலத்தை மனதிலேயே நினைத்து, நினைத்து, விஷ்ணு, அந்தக் கோலத்துக்கு ஏற்றத் தாளத்தை மனதிலேயே கொண்டு வந்து திரும்பத் திரும்ப நினைக்க இறைவனின் நாட்டியக் கோலம் தென்பட்டது, அவருக்கு. மனதிலே தாளத்தைச் சொல்லிக் கொண்டதாலும் இறைவனின் அந்தத் தோற்றம் தவளையை நினைவுறுத்துவதாயும் இருந்தமையால் இந்தத் தாளத்துடன் கூடிய வடிவுக்கு "அஜபா நடனம்" என்ற பெயர் ஏற்பட்டதாய்த் திருவாரூர்த் தல புராணம் சொல்லுகிறது.

பின்னர் அந்த விக்ரஹம் ராஜா முசுகுந்தனுக்கு விஷ்ணு அளித்ததாகவும், அதை இந்திரன் கவர்ந்து கொண்டு சென்றதாயும் இந்திர லோகம் சென்று முசுகுந்தன் விக்ரஹத்தைத் திரும்பக் கேட்கும்போது, ஒரே மாதிரியான 7 வடிவங்களை இந்திரன் காட்டி இவற்றில் உன்னுடையது எதுவெனத் தெரிந்து நீயே எடுத்துக் கொள் என்றதாயும், இறை அருளால் உண்மையான சிலா வடிவை முசுகுந்தன் கண்டறிந்ததாயும் கூறுகின்றனர். அவனுடைய இறை பக்தியை மெச்சியே இந்திரன் 7 விடங்கர்களையும் அளித்ததாயும் அவையே முன் பதிவுகளில் வந்த கோவில்களில் நிறுவப் பட்டதாயும் கூறுகின்றனர். இதை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன்.
*************************************************************************************

கோயில் என்றால் சைவர்களுக்குச் சிதம்பரம் தான். வைணவர்களுக்கோ ஸ்ரீரங்கம் தான் கோயில். இங்கே நடராஜா விழித்துக் கொண்டு இடைவிடாது ஆடிக் கொண்டே இருக்கிறார். அங்கேயோ மாறாக ரங்கராஜா நீள நெடுகப் படுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டே இருக்கிறார். என்றாலும் இருவரின் தொழிலும் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் கோயிலைப் பல சிவனடியார்களும், வைணவ அடியார்களும் வணங்கி வந்தாலும் குறிப்பிடத் தக்கவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி, வியாக்ரபாதரின் மகன் உபமன்யு, ஜைமினி ரிஷி, பிருங்கி ரிஷி, இந்திரன், வருணன், போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். சரித்திர பூர்வமாய்ப் பார்த்தோமானால், மன்னன் ஹிரண்ய வர்மன் காலத்தில் இருந்து திருநீல கண்டர், திருமூலர், மாணிக்க வாசகர், திருஞான சம்மந்தர், அப்பர், சுந்தரர், நந்தனார், போன்ற நாயன்மார்களும், பின்னர் வந்த நாட்களில் உமாபதி சிவாச்சாரியார், அப்பைய தீட்சிதர், ராமலிங்க ஸ்வாமிகள், போன்ற சிவனடியார்களும் குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களும் குறிப்பிடத் தக்கவர்கள்.

Wednesday, October 24, 2007

சிதம்பர ரகசியத்தில் இறைவனின் கூத்து!







சிறந்த சிவபக்தன் ஆன "முசுகுந்தச் சக்கரவர்த்தி" தேவேந்திரனுக்குத் தேவாசுர யுத்தத்தில் உதவி செய்தான். அதன் பலனாக அவனுக்குக் கிடைத்தவையே ஏழு விதமான நடராஜத் திருக்கோலங்கள். இவையே வேறுவிதமாயும் சொல்லப் படுகிறது. முசுகுந்தன் பூஜித்து வந்த நடராஜ மூர்த்தத்தைத் தேவேந்திரன் கவர்ந்து கொண்டு செல்ல, முசுகுந்தன் தேவேந்திரனுடன் போரிட்டு வென்றான். அவனின் நடராஜ மூர்த்தம் போலவே மற்றும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்து, முசுகுந்தனிடம் காட்டுகிறான் தேவேந்திரன். உன்னுடையது இவற்றில் எதுவோ நீயே பார்த்து எடுத்துச் செல் எனக் கூறுகிறான். இறை அருளால் சரியான மூர்த்தத்தைக் கண்டறிகிறான் முசுகுந்தன். அதுவே திருவாரூர் தியாகராஜா எனவும், மற்ற
மூர்த்தங்களையும் முசுகுந்தனுக்கே தேவேந்திரன் அளித்தான் எனவும் அவை முறையே

திருவாரூர் - வீதி விடங்கர் - அஜபா நடனம்

வேதாரண்யம் - புவனி விடங்கர் -ஹம்சபாதா நடனம்

நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர் - விசி நடனம்

திருநள்ளாறு - நகர விடங்கர் - உன்மத்த நடனம்

திருக்காரயல் - ஆதி விடங்கர் - குக்குட நடனம்

திருக்குவளை - அவனி விடங்கர் - ப்ருங்க நடனம்

திருவாய்மூர் - நிலா விடங்கர் - கமலா நடனம்

என்று சொல்லப் படுகிறது. பொதுவாக ஈசனின் திருநடனம் 9 வகை எனவும் சொல்லப் படுகிறது. அவை ஆனந்தத் தாண்டவம், காளி தாண்டவம் அல்லது காளி நிருத்தம், கெளரி தாண்டவம், முனி நிருத்தம், சந்த்யா தாண்டவம்,. சம்ஹார தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதம் மற்றும் பிட்சாடனம். இதைத் தவிரத் தஞ்சை மாவட்டத்தின்
திருவெண்காட்டிலும், திருச்செங்காட்டாங்குடியிலும் ஈசனின் நாட்டியக் கோலங்களைப் பார்க்கலாம். திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் ஈசனின் இந்தக் கூத்தை ஐந்து
வகைகளாய்ப் பிரித்துள்ளார். அவை சிவானந்தக் கூத்து, அறிவையும், சுந்தரக் கூத்து, ஆற்றலையும், பொற்பதிக் கூத்து, அன்பையும், பொற்றில்லைக் கூத்து, ஆற்றல் கூடுதலையும், அற்புதக் கூத்து, அறிவு கூடுதலையும் குறிப்பதாய்ச் சொல்லுகிறார்.

சிவானந்தக் கூத்து: திருமந்திரப் பாடல்

"தானந்தமில்லாச் சதானந்த சத்தி மேல்
தேனுந்தும் ஆனந்தமாநடங்கண்டீர்:
ஞானங்கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கானது."

சுந்தரக் கூத்து:

"அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பாலும்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்
கண்டங்கரியான் கருணை திருவுருக்
கொண்டங்கு உமை காணக் கூத்து தந்தானன்றே!"

பொற்பதிக் கூத்து:

தெற்கு வடக்கு கிழக்கு மேற்குச்சியில்
அற்புதமானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனி நடஞ்செய்யுமே!"

பொற்றில்லைக் கூத்து:

"அண்டங்கள் ஓரேழும் அப்பொற்பதியாகப்
பண்டையாகாசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டனிற் சத்தி திரு அம்பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்து கந்தானன்றே!"

அற்புதக் கூத்து:

"இருவருங்காண எழில் அம்பலத்தே
உருவோடருவோடு அருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தனாந்தன்
அருளுருவாக நின்றாடலுற்றானே!"

ரகசியம் தொடரும்......

Sunday, October 21, 2007

ஆடிக் கொண்டானடி பல வேடிக்கைகள் செய்தே - 3



ஊர்த்துவ தாண்டவம் : சிவனின் தாண்டவக் கோலங்களில் குறிப்பிடத் தக்கதான இது, காளிக்கும், இறைவனுக்கும் நடந்த போட்டியைக் குறிப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இந்தக் கோலத்தில் ஆடலரசனின் வலக்காலானது அவரின் திருமுடியைத் தொட்டவாறு காணப் படும். நாட்டிய சாஸ்திர வகைகளில் இது "லலாட திலகா" என்னும் வகையைச் சேர்ந்தது
எனச் சொல்லப் படுகிறது. வலக்காலால் தன் நெற்றியில் திலகம் வைத்துக் கொள்ளும் கோலம் எனச் சொல்லப் படுகிறது. இத்தனை மேலே ஒரு பெண்ணான தன்னால் காலைத் தூக்கி ஆட முடியாது என்பதால் காளி வெட்கித் தலை குனிந்து தன் தோல்வியை ஒப்புக்
கொண்டதாயும் சொல்லப் படுகிறது. "சண்ட தாண்டவம்" எனவும் "காளி தாண்டவம்"
எனவும், "சம்ஹார தாண்டவம்" எனவும் அழைக்கப் படும் இந்தக் கோலம்
திருவாலங்காட்டிலும் காணக் கிடைக்கிறது. சிதம்பரத்தில் காளி, சிவனுடன் போட்டி
இட்டுத் தோல்வி அடைந்தாள் எனச் சொல்லப் பட்டாலும், திருவாலங்காடு, திருப்பனந்தாள், திருச்செங்காட்டாங்குடி, தென்காசி, தாரமங்கலம் போன்ற ஊர்களிலும் ஊர்த்துவ தாண்டவ
நடராஜரைக் காணலாம்.



திருக்குற்றாலத்தில் "சித்திரசபை"யில் காணப்படும் இந்தத் தாண்டவம் "திரிபுரத் தாண்டவம்" என்று அழைக்கப் படுகிறது. திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்ட ஐயன், தன் சிரிப்பாலேயே அவர்களை எரித்ததாய்க் கூறப்படும் வேளையில் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தை பிரம்மா தானே படமாய் வரைந்ததாய்ச் சொல்லப் படுகிறது. மிக அரிய வகையான சித்திரங்களையும் இறைவனின் 64 திருவிளையாடல்களைப் பற்றிய அரிய சித்திரங்களையும் இங்கே காணலாம். இங்கே ஒரு தாமிரத்தினால் ஆன சிறிய நடராஜர் திரு உருவம் இருந்திருக்கிறது. நாங்கள் போன போது பார்க்க முடியவில்லை. :( எந்த நேரத்திலும் அழியக் கூடிய கோலத்தில் பாதி நிறம் மங்கியும், சில இடங்களில் நிறம் மங்காமலும் நடராஜர் மிகப் பரிதாபமாய்க் காட்சி அளிக்கிறார். வருகை தரும் மக்கள் தங்களாலான சித்திரங்களை அந்த உயரிய சித்திரங்கள் மீது வரைந்திருப்பதையும் காண முடிகிறது. அரிய பொக்கிஷம் என உணர இன்னும் எத்தனை நாள் ஆகுமோ தெரியவில்லை! :((((((


வெள்ளியம்பலக் கூத்தன்: மதுரையில் ஆடியது வேறு காரணத்துக்கு எனச் சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சியின் திருமணத்துக்கு வந்திருந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற ரிஷி, முனிவர்கள், தாங்கள் தினசரி தரிசிக்கும் நடராஜத் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் உணவு உண்ண முடியாது எனச் சொல்லவே அவர்களுக்காக ஆடப்பட்டது வெள்ளியம்பலக் கூத்து. இது உன்மத்தத் தாண்டவம், சொக்கத் தாண்டவம், ஞானசுந்தரத் தாண்டவம் எனவும்
அழைக்கப் படும். இவ்வாறு இடக்காலைத் தூக்கி இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் கால் வலிக்குமே என வருந்தினான் மன்னன் ராஜசேகர பாண்டியன். அவன் மனம் மகிழ ஆடியது தான் "கால் மாறி ஆடிய படலம்". வலக்காலைத் தூக்கி ஆடும் இந்தக் கோலம் மதுரையில் மட்டுமே காணக் கிடைக்கும். யு.எஸ்.ஸில். ஹூஸ்டன் நகரின் மீனாட்சி கோவிலிலும் நடராஜர் வலக்காலைத் தூக்கி ஆடிய வண்ணமே அருள் பாலிக்கிறார்.
இது தவிர, ராமநாதபுரம் மாவட்டத்துத் திரு உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர்
திரு உருவம் எங்கும் காணக் கிடைக்காத ஒன்று. இந்த மரகதநடராஜரைச் சுய உருவில் காணவேண்டுமானால், மார்கழித் திருவாதிரை அன்று மட்டுமே காண முடியும். மற்ற நாட்களில் அவர் மேல் சந்தனக் காப்பு சாத்தப் பட்டே காண முடியும். இவரை அன்னையின்
வேண்டுகோளுக்கிணங்கி அறைக்குள் அன்னை மட்டுமே காணுமாறு ஆடியதாய்க் கூறுகின்றனர். "அறைக்குள்" ஆடியது திரு உத்தரகோசமங்கையிலும், "அம்பலத்தில்" சிதம்பரத்திலும் ஆடியதாய்க் கூறப்படுகிறது. இவற்றைத் தவிர எல்லாச் சிவன் கோவில்களிலும் நடராஜ மூர்த்தம் இருந்து வந்தாலும், இந்திரனிடம் இருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியினால் பெறப்பட்ட 7 விதமான நாட்டிய பாவங்களைக் காட்டும் "விடங்க மூர்த்தி"களும் உள்ளனர். நாளை பார்ப்போமா?

Sunday, October 14, 2007

ஆடிக் கொண்டானடி பல வேடிக்கைகள் செய்தே! -2



காளிகா தாண்டவம்: இரு கண்களுடனும், எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கை போன்றவையும், இடப் பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப் படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டம் "காளிகா தாண்டவம்" எனச் சொல்லப் படுகிறது. இது தவிர தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் காணப் படுகிறது.



திரிபுர தாண்டவம்: முப்புரங்களையும் தன்னுடைய "அட்டஹாசம்" எனப்படும் சிரிப்பாலும் நெற்றிக்கண்ணாலும் அழித்த இறைவன் ஆடிய ஆட்டமே திரிபுர தாண்டவம் எனப்படுகிறது. 16 கைகளுடன் காணப் படும் இறைவனின் இடப்பக்கம் கெளரியும், வலப்பக்கம் ஸ்கந்தனும் காணப்படுகிறார்கள். திருக்குற்றாலத்துச் சித்திர சபையில் காணப்படுகிறது இந்தத் திரிபுர தாண்டவக்கோலம்.

சம்ஹார தாண்டவம்: எட்டுக் கைகளுடனும், மூன்று கண்களுடனும் காணப் படும் இறைவனின் ஊழிக் கூத்தாக வர்ணிக்கப் படும் இது இறைவன் தனக்குள் இந்தப் பிரபஞ்சத்தை அடக்கும் வேளையில் ஆடப் படும் கூத்தாகச் சொல்லப் படுகிறது. அபஸ்மார புருஷனை அடக்கும் இடக்காலுடனும், வலக்கால் தூக்கிய நிலையிலும், வலக்கைகள் அபய ஹஸ்தத்துடனும், மேலும் சூலம், உடுக்கை,போன்றவற்றுடனும், இடக்கைகளில் மண்டை ஓடு, அக்கினியுடனும் கஜஹஸ்த முத்திரையுடனும் காணப் படுகிறது. வலப்பக்கம் நந்தியும், இடப்பக்கம் கெளரியும் காணப் படுகின்றனர். பிரளய காலத்தில் ஏற்படும் இந்த ஊழிக் கூத்தில் இறைவன் தன்னில் தானே அமிழ்ந்து போய், சகலமும் தானே என்பதை உணர்த்தும் வண்ணம் ஆடுவதாயும், இதுவும் ஒரு வகையான ஆனந்தத் தாண்டவம் தான் என்றும் சொல்லப் படுகிறது.



கெளரி தாண்டவம்: தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தையும், ரிஷிபத்தினிகளின் ஆணவத்தையும் அடக்க பிட்சாடனராய் வந்த இறைவன், தன்னுடன் விஷ்ணுவையும் மோகினி உருவில் அழைத்து வருகிறார். ரிஷி, முனிவர்களின் கர்வம் அடக்கப் படுகிறது. அப்போது இறைவன் மோகினியான திருமாலுடன் ஆடிய ஆட்டமே முதல் ஆட்டம் எனச் சொல்லப் படுகிறது. நாராயணனும், தான் தான், நாராயணியாக இருப்பவளும் தான் தான் என இறைவிக்குப் புரியாதா? உமையொரு பாகத்து இறைவனின் நடனத்தைத் தான் மட்டும் கண்டு களிக்க ஆசைப் பட்டாள் இறைவி, அவளின் ஆசையை நிறைவேற்ற இறைவன் ஆடியது தான் கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது. சைவ ஆகமங்கள் படி இறைவனின் பிரம்மோற்சவத்துடன் இணைத்துச் சொல்லப் படுகிறது இந்தத் தாண்டவம். இதில் நந்தி இறைவனின் வலப் பக்கமும், இடது பக்கம் கெளரியான அம்பிகையும் காணப் படுகிறார்கள். ஆனந்தத் தாண்டவத்தில் இல்லாதபடிக்கு இதில் இறைவனின் இடப்பக்கத்துக் கைகள் ஒன்றில் பாம்பு காணப் படுகிறது.

ஆண்மயில் வடிவில் இறைவன் உறைந்த இடம் மயிலாடுதுறை. இறைவனை அடைய பெண்மயில் உருவில் ஸ்ரீதேவி, சரஸ்வதி துணை புரிய அம்பிகை தவம் செய்த இடம் மயிலாடுதுறை. இறைவியின் தவத்தை மெச்சி அவளை அடைந்த இறைவன், அவளை மகிழ்விக்க ஆடிய ஆட்டமே "கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது என்றும் கூறுகிறார்கள். இந்தக் கோயிலின் இந்தச் சபையை "ஆதி சபை" என அழைக்கிறார்கள்.


மெளலி கஜஹஸ்தம் என்றால் என்னனு கேட்டிருக்கிறார். நாட்டிய சாஸ்திரம் எனக்குத் தெரியாது என்றாலும், ஆடலரசனின் இடது கையானது, யானையின் துதிக்கையைப் போல் தோன்றும்படி அபிநயிப்பது தான் "கஜஹஸ்த முத்திரை" என்ற வரைக்கும் தெரியும். அடுத்து நந்திதா அவர்கள், காளியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை என்று தோற்றுப் போனாள் என்பதை ஏற்க முடியவில்லை என்று எழுதி இருக்கிறார். என்ன தான் பெண்ணாக இருந்தாலும் காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்து ஆட முடியாது அல்லவா? மேலும் இதில் ஆணாதிக்கம் என்பதெல்லாம் கிடையாது. இறைவன் அவளை ஆட வேண்டாம் எனவும் சொல்லவில்லை. உன்னால் முடியுமா என்பது தான் கேள்வி! முடியும் என்றாலும் பெண்களுக்கு என ஒரு எல்லைக் கோடு உண்டு என்பதை அன்னை தானாகவே வகுத்துக் கொண்டாள். பண்பு என்பது எல்லைக் கோட்டைத் தாண்டாது என்பதையும் உணர்த்தினாள். இதில் வெற்றி, தோல்வி என்பதை விட பெண்ணின் பெருமையும், அவள் தன்னிலையை ஒருக்காலும் மறக்கக் கூடாது என்பதுமே உணர்த்தப் படுகிறது. சக்தியானவள் ஆக்கும் சக்தியாக வெளிப்படுவதே அன்றி, தன்னையும் தன்னிலையையும் மறந்து அழிக்கும் சக்தியாக மாறக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துவதாய் என் கருத்து. படங்கள் கிடைத்த வரை போட்டிருக்கேன். ஊர்த்துவத் தாண்டவப் படம் கிடைக்கவே இல்லை. திரிபுர தாண்டவத்துக்கு திருக்குற்றாலம் என்று தேடினாலும் கிடைக்கவில்லை,பார்க்கிறேன். அடுத்த பதிவில் போட முடியுமா என.