எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, November 21, 2007

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள் - 5

சிதம்பரம் கோவிலின் பூஜை முறைகள் தீட்சிதர்களால் "வைதீக முறை"ப்படி செய்யப் படுவதாய்ச் சொல்லப் படுகிறது. மற்றச் சிவன் கோயில்களில் சைவ ஆகம முறைப் படியான வழிபாடுகள் நடந்து வருகின்றன என்றாலும் இன்றளவும் சிதம்பரம் கோயிலின் வழிபாட்டு முறைகள் மற்றச் சிவன் கோயில்களில் இருந்து வேறுபட்டதாயும் சொல்லப் படுகிறது. கோயில்களுக்கெல்லாம் கோயில் என்று சொல்லப் படும் இந்தச் சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் "போதாயனர்" என்னும் ரிஷியின் சூத்திரங்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதாய்ச் சொல்லப் படுகிறது.

மேலும் பூஜாவிதிகள்"பதஞ்சலி" முனிவரால் நடராஜரின் ஆக்ஞைப் படி எழுதப் பட்டதாயும் சொல்லப் படுகிறது. "பூஜா பதஞ்சலம்" என்னும் இந்தப் பூஜாவிதிகளே இன்றளவும் பின்பற்றப் படுவதாயும் சொல்கின்றனர். ஸ்ரீ சிதம்பரேஸ்வர நித்ய பூஜா சூத்திரம் என்னும் இந்த பதஞ்சலி பத்ததியே இன்றளவும் அனுசரிக்கப் படுகிறது. நடராஜரும் தங்களில் ஒருவர் என்னும் இவர்கள் எண்ணமும் இன்றளவும் மாற்ற முடியாமல், யாராலும் அதை உடைக்க முடியாமலும் உள்ளது. சரித்திர பூர்வமாய்ப் பார்த்தால் இந்தச் சிதம்பரம் கோயிலுக்குப் பல அரசர்கள், சக்கரவர்த்திகள் திருப்பணிகள் செய்து வந்திருக்கிறார்கள் என்றாலும், அந்நிய தேசப் படை எடுப்புக்கும் இது ஆளாகி இருக்கின்றது. முஸ்லிம்களின் படை எடுப்பின்போது, மாலிக்காஃபூர் வந்து சிதம்பரம் கோயிலை ஆக்கிரமித்த போது நடந்த ஒரு விஷயம் இதோ: திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் பார்வையில்:

"ஹிந்து சமுதாயத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் தில்லை வாழ் அந்தணர்கள் ஆற்றியுள்ள சேவை அளப்பரிய ஒன்றாகும். மாலிக் காஃபூரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் போது தமது உயிரினை தியாகம் செய்து தமிழகத்தின் ஆன்மிக கலைப் பொக்கிஷங்களான தெய்வத் திருவுருவச்சிலைகளை காத்தவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள். அமீர் குஸ்ரு தாரிக்-இ-அலை எனும் நூலில் பின்வருமாறு தில்லைவாழ் அந்தணர் அனுபவித்த கொடுமைகளை கூறுகிறான்: 'மாலிக் மிகுந்த கவனத்துடன் அஸ்திவாரங்களை பெயர்த்தெடுத்தான். பிராம்மணர்கள், விக்கிர ஆராதனையாளர்கள் தலைகள் அவர்கள் கழுத்துக்களிலிருந்து நடனமாடியபடி தரையில் அவர்கள் கால்களில் விழுந்தது. இரத்தம் ஆறாக ஓடிற்று. ' என்ற போதிலும் அந்தணப்பெருமக்கள் தம் தலைகளை கொடுத்த போதிலும் தர்மத்தை விடவில்லை. தெய்வத் திருவுருவச்சிலைகளை காப்பாற்றினர். இன்று உலகெங்கிலும் நடராஜ தாண்டவ சிற்பம் அடைந்துள்ள மேன்மையான வணக்கத்திற்கு தெய்வத்திருவருளும் உங்கள் முன்னோர்களின் தியாகங்களுமே காரணம். "

அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இந்தக் கட்டுரை தீட்சிதர்களின் நடராஜ பக்தியை வெளிக்காட்டுகிறது.

இது தவிரத் திப்பு சுல்தான் வந்தபோது நடராஜத் திருமேனியை தீட்சிதர்கள் எடுத்துக் கொண்டு போய்த் திருச்சூரில் மறைத்து வைத்திருந்ததாயும், ஆலப்புழையில் மறைத்து வைத்திருந்ததாயும் செவிவழிச் செய்திகளும் கூறுகின்றன. 1781-ல் நடைபெற்ற 2வது மைசூர் யுத்தத்தில் "கூட்" என்னும் தளபதி சிதம்பரம் கோயிலைத் தாக்கியதாகவும், பின்னர் துரத்தி அடிக்கப் பட்டதாயும், கர்நாடக நவாபுகளைப் பற்றிய சரித்திரக் குறிப்புக்களில் காணக் கிடைக்கிறது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடம் மேலக் கோபுரம் என்றும் அதன் அடையாளங்கள் இன்னும் அந்தக் கோபுரத்தின் மாடங்களில் காண முடிகிறது எனவும் சொல்கின்றனர். இந்தச் சமயத்தில் தீட்சிதர்கள் நடராஜத் திருமேனியை எடுத்துக் கொண்டு திருவாரூர் போய் அங்கே சபாபதி மண்டபத்தில் மறைத்து வைத்திருந்ததாயும், தஞ்சையை அப்போது ஆண்டு வந்த மராட்டிய அரச வம்சத்தினர் இதற்கு உதவியதாயும் கூறப் படுகிறது. இதற்குச் சான்றாக ஆயிரக்கால் மண்டபத்தில் க்ரந்த எழுத்துக்களால் அமைந்த ஒரு ஸ்லோகத்தில் இந்த விஷயம் சொல்லப் பட்டு, நடராஜர் சக வருஷம், 1695, கலியுகாதி, 4874 அதாவது கி.பி. 1773-ம் வருஷம் திருவாரூரில் இருந்து "சித்சபை" வந்தடைந்ததாய்ச் சொல்லப் பட்டிருக்கிறது.

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள் - 4

இந்தக் கோயிலின் சகல நிர்வாகங்களும் தீட்சிதர்களையே சார்ந்தது. தீட்சிதர்கள் தவிர, மற்றப் பணியாளர்களும் உண்டு. ஓதுவார்கள், மடப்பள்ளிச் சமையல்காரர்கள், சுத்தம் செய்பவர்கள், மற்றப் பணியாளர்கள் என இருக்கின்றனர். முன் காலங்களில் அனைவருக்கும் கோயிலில் இருந்து உணவு கொடுத்து வந்த பழக்கம்போல தற்சமயமும் கொடுத்து வந்தாலும், தற்காலத் தேவையை அனுசரித்து அவர்களுக்குச் சிறிய அளவில் சம்பளமும் கொடுக்கப் படுகிறது. அவர்களுக்கு உள்ளேயே ஏற்படும் வழக்குகளைக் கோவிலில் கூட்டம் கூட்டி விவாதித்து அவர்களுக்குள்ளேயே தீர்த்தும் கொள்கின்றனர். ஒரு பொது மனிதன் அனைத்துத் தீட்சிதர்கள் வீட்டுக்கும் சென்று கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதைத் தெரிவிக்கிறார். கூட்டம் "தேவசபை" அல்லது "கல்யாண மண்டபத்"தில் ஏற்பாடு செய்யப் படும். கட்டாயமாய் தீட்சிதர் குடும்பத்து அனைத்து ஆண்களும் கூட்டத்துக்கு வர வேண்டும் என்பதை ஒரு நியதியாகவே கடைப்பிடிக்கிறார்கள். "கனகசபை"யிலிருந்து ஒரு விளக்கு மிகப் புனிதமாய்க் கருதப் பட்டு எடுத்து வரப் படுகிறது. அந்த விளக்கு வந்தாலே "நடராஜரே" நேரில் வந்ததாய்க் கருதப்படுகிறது.

அவர்களுக்குள் உள்ள தனிப்பட்ட மனமாற்சரியங்களைக் களைந்து விட்டுக் கோயிலின் பொதுவான நிர்வாகச் சீர்திருத்தத்தில் மாற்றங்களோ, முடிவுகளோ ஏகமனதாய்க் கொண்டு வரப் படுகிறது. ஒரு தனி தீட்சிதர் தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தின் மூலம் அதை ஏற்கவோ, மறுக்கவோ செய்யலாம் எனினும் பொதுவாக அனைத்தும் ஏற்கப் படுகிறது. அவை தனியான ஒரு புத்தகத்தில் பதிவும் செய்யப் படுகிறது. கோவிலின் தினசரி நிர்வாகம் மட்டுமில்லாமல் உற்சவ காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வேலைகள்,கோவிலின் தினசரிப் பாதுகாப்பு, இரவுப் பாதுகாப்பு என அனைத்துமே விவாதிக்கப் பட்டு முடிவு எடுக்கப் பட்டு அவைகள் பதிவு செய்யப்படுகின்றன.

கோவிலின் மொத்த வழிபாடும் ஐந்து வகையாகப் பிரிக்கப் படுகிறது. 1.நடராஜர் கோவில், 2. அம்மன் கோவில், 3. மூலஸ்தானக் கோவில், 4. தேவசபை, 5. பாண்டியநாயகர் கோவில் என ஐந்து வகையாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு குறிப்பிடப் பட்ட தீட்சிதர் குழு எனவும் பிரித்துக் கொண்டு செயல்படுகின்றனர். இம்முறையில் அனைத்து தீட்சிதர்களும் அனைத்து இடங்களிலும் பாகுபாடு இன்றிப் பணிபுரிய முடியும். ஒரு முறை என்பது 20 நாட்களைக் குறிக்கும். அந்த நாட்களில் கோவிலின் சாவிகள், நகைப்பெட்டிகளின் சாவிகள் என அனைத்துமே மாறி மாறி ஒவ்வொருத்தர் பாதுகாப்பிலும் 20 நாட்கள் இருக்கும். பொது தீட்சிதர்கள் 9 பேர் கொண்ட நிர்வாகக்குழுவையும் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களில் ஒருத்தர் காரியதரிசியாக அந்த வருடம் நியமனம் பெறுவார். துணைக்காரியதரிசியை காரியதரிசி நியமிப்பார். கோவிலின் நந்தவனம் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பும் தீட்சிதர்களையே சாரும். இம்முறையில் இவர்கள் சுழற்சி முறையில் எந்தவிதமான வருத்தமோ, தடங்கலோ இல்லாமல் அனைத்து தீட்சிதர்களுமே கோவிலின் நிர்வாகத்திலும், பூஜை முறைகளிலும் பங்கு பெறுகின்றனர்.

Friday, November 09, 2007

சோதனைப் பதிவு!

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள் - 3

தீட்சிதர்கள் எப்போது இந்தக்கோவிலில் வழிபாடு செய்ய வந்தார்கள் என்று சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும், சரித்திரச் சான்றுகளின் படி ராஜா ஹிரண்யவர்மன் காலத்தில் இருந்து இக்கோவிலில் நடராஜருக்கு வழிபாடுகள் செய்து வருவதாய்த் தெரிய வருகிறது சோழ அரசர்களுக்குப் பட்டாபிஷேஹம் செய்யும் உரிமையும் இவர்களுக்கு இருந்திருப்பதாய்த் தெரிய வருகிறது. ஆழ்வார்களின் பாசுரங்களில் இருந்தும், திருநீலகண்டரின் கதை பற்றிய "சிவ பக்த விலாசம்' என்ற புத்தகத்தில் இருந்தும், தில்லை தீட்சிதர்கள் கோவிலில் முக்கிய அங்கம் வகித்து வந்தது தெரிய வருகிறது. ஆரம்பத்தில் 3,000/- பேர் இருந்ததாய்ச் சொல்லப் பட்டாலும், தற்சமயம் 200 அல்லது 300 பேர் தான் இருக்கின்றனர். அதுவும் பிறப்பு, இறப்பு விகிதத்தை ஒட்டி ஏறி இறங்குவது உண்டு.

கிருத யுகத்தில் 3,000 பேரும், திரேதா யுகத்தில் 2,000 பேரும், துவாபர யுகத்தில் 1,000 பேரும், தற்சமயம் கலியுகத்தில் 200 பேரும் இருப்பார்கள் எனச் சிதம்பர ரகசியத்தில் சொல்லப் பட்டிருக்கிறதாயும் கூறுகின்றனர். கோவிலின் அனைத்து உரிமைகளும் தீட்சிதர்களையே சார்ந்துள்ளது. கோவிலின் பரம்பரை அறங்காவலர்களும் இவர்களே. இது
தகப்பன் வழிச் சொத்து பிள்ளைக்கு என்ற முறைப்படி இல்லாமல் தீட்சிதர்கள் குடும்பங்களில் பிறக்கும் அனைத்து நபர்களுமே உரிமை பெற்று விடுகிறார்கள். தகப்பனும், பிள்ளையும் சம உரிமை அனுபவிக்கும் இந்தக் கோயிலுக்கு எனச் சொத்து எதுவும் தனியாகக் கிடையாது. பல அரசர்கள் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து வந்திருந்தாலும் சில,பல சொத்துக்கள் அவர்கள் அளித்திருந்தாலும் தற்சமயம் கோவிலுக்கு என எந்தவிதமான சொத்தும் கிடையாது. கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் அளிக்கும் சிறு, சிறு மான்யத் தொகைகளில் இருந்து, பெரும் மான்யத் தொகைகள் வரை சேர்ந்து ஒரு வைப்பு நிதியாக மாறி, அதில் வரும் பணத்தில் இருந்து தினசரி வழிபாடுகள் செய்யப் படுகின்றன. இது
தவிர சில "கட்டளை தாரர்"களும் இருக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் பெரும் தொகைகளும் கோவிலின் வழிபாட்டுக்கும், உற்சவங்களுக்கும் பயன்படுகின்றது. பச்சையப்ப முதலியார் ஏற்படுத்திய அறக்கட்டளை, வி.எஸ்.எஸ்டேட், ராஜா தொண்டைமான்,
புதுக்கோட்டை அவர்களின் அறக்கட்டளை, தருமபுரம் ஆதீனம், முகையூர் சுப்ரமணியபிள்ளை அவர்களின் அறக்கட்டளை, ராஜா சர். முத்தையாச் செட்டியார் அவர்களின் அறக்கட்டளை போன்றவை கோவிலுக்கு நிரந்தரமாக ஒரு தொகை கிடைக்க வழி செய்துள்ளது.

அவற்றின் கணக்கு, வழக்குகள் அந்த, அந்தக் கட்டளை தாரர்கள் நியமிக்கும் நிர்வாகியைச் சேர்ந்தது. அவர்கள் கோவிலுக்குப் பணமாகவோ, பூஜையின்போது தேவைப் படும்
பொருளாகவோ கொடுத்துத் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர். தீட்சிதர்கள் இந்தக்
கணக்கு, வழக்கு பற்றிக் கட்டளை தாரர்களிடம் கேட்டுக் கொள்ளுவது இல்லை. பிரம்மோற்சவங்களுக்கான செலவுகள், ஊரில் உள்ள அனைத்து ஜாதியினராலும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது. இது போல மற்ற உற்சவங்களும், சில தனிப்பட்ட உபயதாரர்களாலும்,
பொதுவாக வசூல் செய்யப் பட்ட பணத்தாலுமே கொண்டாடப் படுகின்றது.

இது தவிர சில பக்தர்கள் தங்கள் பெயரிலோ, குடும்பத்தின் பெயரிலோ,குறிப்பிட்ட நாளில், நட்சத்திரத்தில் அபிஷேஹம், அர்ச்சனை செய்ய என வருஷத்துக்கு ஒரு முறை கொடுக்கும்
பணமும் வழிபாடுகளுக்கு உதவுகின்றது. இந்தக் கோயிலில் எங்கேயும் உண்டியலும்
கிடையாது. எல்லாச் செலவுகளும் போக மிகுந்திருக்கும் வருமானம் எல்லாத் தீட்சிதர்களுக்கும் பிரித்து அளிக்கப் படுகிறது.பொதுவாக யாரும் சிவன் கோவிலின்
வருமானத்தையோ, சொத்தையோ வைத்துச் சாப்பிடுவது இல்லை. சிவன் சொத்து
குலநாசம் எனச் சொல்லப் படுவதுண்டு. ஆனால் இந்தக் கோயிலில் சிவனே தீட்சிதர்களில் ஒருத்தன் எனச் சொல்லப் படுவதாலும், கோயிலை தீட்சிதர்கள் தங்கள் குடும்பத்தின் முக்கிய
இருப்பிடமாய்க் கருதுவதாலும், இறைவனின் நித்திய வழிபாடுகளை, வீட்டில் செய்யும் பூஜை போல ஈடுபாட்டுடனும், வைதீக முறையிலும் செய்வதாலும் இறைவனே தங்களில்
ஒருவன் என்பதாலும் அவனுடன் இருந்து உண்ணுவது தங்கள் உரிமை என்ற நினைப்பும் இவர்களுக்கு உண்டு.