எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, February 22, 2008

சிதம்பர ரகசியம் -ஆதிரைச் சிறப்பு



இருபத்து ஏழு நட்சத்திரங்களிலே, இரண்டே இரண்டு நட்சத்திரத்துக்கு மட்டுமே "திரு" என்ற அடை மொழி உண்டு. அது சிவனுக்கே உரிய "திரு"வாதிரை நட்சத்திரமும், விஷ்ணுவுக்கு உரிய "திரு"வோண நட்சத்திரமும் ஆகும். அதிலும் சிவபெருமானை "ஆதிரையான்" என்றே அழைப்பார்கள். ஆதிரை நட்சத்திரம் ஆனது வான சாஸ்திரத்திலும், சோதிடத்திலும் பேசப் படும் 6-வது நட்சத்திரம் ஆகும். தற்கால வான இயல் அறிவின்படி இதை "ஓரியன் குழு"வில் சொல்லப் படுகின்றது. இந்த ஓரியன் குழுவில் 5 நட்சத்திரங்கள் முக்கியமாய்ச் சொல்லப் படுகின்றது. அவற்றில் மிகுந்த ஒளியுள்ள நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமே ஆகும். வடகிழக்குத் திசையில் காணப்படும் இந்த நட்சத்திரம் எப்போதும் மற்ற நான்கு நட்சத்திரங்களுடனேயே காணப்படும்.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருவாதிரை நட்சத்திரம் மாதா மாதம் வந்தாலும், மார்கழியில் வரும் திருவாதிரைக்குத் தனிச் சிறப்பு. ஆடவல்லான், தன் பிரபஞ்ச நாட்டியத்தை அன்றே ஆடியதாய்க் கூறுவார்கள். அதிலும் சிதம்பரத்தில் இதற்குத் தனியான மகிமை. சிதம்பரத்தில் முக்கியமான திருவிழா, மார்கழித் திருவாதிரைத் திருவிழா என்றே சொல்லலாம். மற்ற நாட்களில் கோயிலுக்கு உள்ளே இருக்கும் நடராஜர் அன்று வீதியில் உலா வருவார். அதோடு அல்லாமல் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடக்கும். இந்த ஆதிரைச் சிறப்பு நாள் விழாவாய்க் கொண்டாடப் பட்டதைப் பரிபாடல் என்னும் சங்கப் பாடலில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகின்றது.


ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

ஆதிரை நன்னாள் மட்டுமின்றி "அம்பா ஆடல்" என்னும் பாவை நோன்பினையும் சிறப்பித்துக் கூறுகின்றது மேற்கண்ட பாடல். ஆதிரை நாளில் நடராஜர், சிவகாமி, பிள்ளையார், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் தான் வீதி உலாச் செல்வார்கள். வானில் தென்படும் அந்த ஐந்து நட்சத்திரக் கூட்டமும் மேற்கண்டவாறே சொல்லப் படுகின்றது. மிக்க ஒளியுடன் திகழும் திருவாதிரை நட்சத்திரத்தை "ஆடவல்லான்" என்றே சொல்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். மார்கழி மாதம் 11 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் 9-ம் நாள் அன்றுகாலையில் நடைபெறும் தேர் ஓட்டத்துக்குப் பின் மாலையில் ஆயிரக் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நள்ளிரவிலிருந்து அதிகாலை வரையில் இந்தத் திருவாதிரை அபிஷேகம் நடக்கின்றது. அதன் பின்னர் ஆடலரசன் தரும் காட்சியே "ஆருத்ரா தரிசனம்" என்று சொல்லப் படுகின்றது. இந்தச் சமயம் ஈசானமூலையில் ஆருத்ரா நட்சத்திரம் எப்போதும் இல்லா வகையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றும் சொல்லப் படுகின்றது. ஆங்கிலக் கணக்கின்படி டிசம்பர் 15-தேதிக்குப் பின்னர் ஜனவரி 15 தேதிக்குள் வரும் ஒரு நாள் தான் திருவாதிரை நாள் ஆகின்றது. முழு நிலவு ஒளி ஊட்டும் பெளர்ணமி தினத்தன்று சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த உற்சவம் அதிகாலையில் நடைபெறுகிறது. அந்த நேரம் வானில் தென்படும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதீத பிரகாசத்தை உணர்ந்தவர்கள் ஈசனின் திருக்கூத்து அப்போது நடைபெறுவதாயே உணர்கின்றனர்.

இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும்,சேந்தனார் அளித்த களிக்காகவே அன்று களி நைவேத்தியம் செய்யப் படுவது பற்றியும் அடுத்துப் பார்ப்போம்.

மேலே காணப்படும் "ககன கந்தர்வ கனக விமானம்" படம் கொடுத்து உதவிய திரு கைலாஷி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

மேலும் இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும், இது உலகளவிலும் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் இங்கே காணலாம்.

Tuesday, February 19, 2008

சிதம்பர ரகசியம் - சித்தம் போக்கு, சிவன் போக்கு!


திரு கைலாஷி அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல் திருவாரூரில் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லுவது இல்லை. அதற்குப் பதிலாக "ஆரூரா, தியாகராஜா" என்றே சொல்லப் படுகிறது. மேலும் வன்மீகம் என்னும் புற்றில் இருந்து ஈசன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியமையால், இது ப்ருத்வித் தலம் என அழைக்கப் படுவதாயும் அறிகிறோம். திருமாலால் பாற்கடலில் வழிபடப் பட்டு, பின்னர் அவரிடமிருந்து இந்திரன் பெற்று, இந்திரனிடமிருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியை வந்து அடைந்து ஆரூரில் கோயில் கொண்ட தியாகராஜருக்கே இங்கே முதல் மரியாதை! தில்லையில் ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜரின் அழகை இப்போது சற்று பார்ப்போம்.

"குனித்த புருவமும்,கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே!" என்றார் நாவுக்கு அரசர். இறைவனின் திரு அழகில் மயங்கிய அவர் இம்மாதிரி வர்ணிப்பது மிகை அன்று என்றாலும், அவர் தம் வர்ணனையில் மறைந்திருக்கும் பொருள் என்ன வென்றால்,

குனித்த புருவமும் = பரத நாட்டியத்தில் புருவங்கள் ஏறி இறங்குவதின் மூலம் பாவங்களை வெளிப்படுத்தும் கலை உண்டு அல்லவா? இங்கே இறைவன் தன் புருவங்களைக் குனிப்பதின் மூலம் அடியார்களின் குறைகளைக் கூர்ந்து கேட்டு அறிந்து, தன்னையே சரண் என வந்தவர்களின் குறைகளைக் களையும் விதமாய்ப் புருவம் குனித்துக் கொள்வதாயும்,

கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்= தன்னை அடைக்கலம் என நம்பி வந்தோரை வருக என வரவேற்று அவர்களின் பிழைபொறுக்கும் விதமாய் கருணையுடன் கூடிய சிரிப்பையும்,

பனித்த சடையும்= சிவநெறியாளர்க்கு உரிய ஒழுக்கத்தைக் காட்டும் விதமாய் அமைந்ததாம் அந்தச் சடை

பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்= நெருப்பை ஒத்த வண்ணத்தை ஒத்த இறைவன், தன்னிடம் நெருங்கும் பொருட்களை நெருப்பானது எவ்விதம் எரித்துத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறதோ, அவ்வாறே இறைவனும் தன்னிடம் நெருங்கும் அடியார்களைத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறான் என்னும் விதமாய்

இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்=இறைவன் தன் தூக்கிய திருவடியால் அனைத்து உயிர்களையும் பிறவிக்கடலில் இருந்து விடுவிக்கிறான். ஊன்றிய திருவடியால், இப்பிறவியின் அனைத்துக் கருமங்களான ஆணவம், கன்மம், மாயையை அழுந்தித் தேய்த்து அவற்றை அகற்றுகிறான்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடல் வல்லானின் ஆடல் திருக்கோலத்தைக் காணப் பெறுவோருக்கு வேறு என்ன வேண்டும் இந்த உலகில்? இதைவிடப் பேரானந்தம் வேறே உண்டோ? என்கிறார் அப்பர்.

இறையவன் ஆடல் தெற்கு நோக்கியே இருக்கிறது. தென் திசை யமதர்மனின் திசை என்பர். அந்த யமபயத்தை நீக்கி நம்மைப் பேரருட்கடலில் ஆழ்த்தி நம்மை உய்விக்கவும், தெற்கே இருந்து வீசும் தென்றல் காற்று சுமந்து வரும் தென் தமிழின் மகத்துவத்துக்கும், மணத்துக்காகவும் கூட இருக்கலாம். "சித்தம் போக்கு சிவன் போக்கு" என்பர். இவன் போக்கை யாரோ கண்டார்?
தன் கையில் உள்ள உடுக்கையைக் கொட்டிக் கொண்டு இவ்வுலக ஆன்மாக்களின் மாயையை உதறுகிறான். ஏந்திய நெருப்பால் கன்ம மலத்தைச் சுட்டுப் பொசுக்குகிறான். ஊன்றிய திருவடியால் ஆணவத்தை அகற்றுகிறான். தூக்கிய திருவடியால் பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுவிக்கிறான். அபய ஹஸ்தம் காட்டி உயிர்களுக்கு "அஞ்சேல்" என அபயம் அளிக்கின்றான். தண்ணொளி வீசும் திருமுகத்தினால் அனைவருக்கும், அனைத்துக்கும் "நானே தலைவன்" எனத் தெரியப் படுத்துகிறான். திருமுடியில் சுமந்திருக்கும் கங்கையின் மூலம் அவன் பேராற்றலையும் உயிர்களைத் தடுத்தாட்கொள்ளும் வேகத்தையும் வெளிக்காட்டுகின்றான். பித்தனாகிய அவன் பிறையைத் தன் தலையில் சூடியதின் மூலம், தன்னைச் சரண் என வந்தடைந்தவர்களைக் கைவிடாமல் காப்பான் எனவும் தெரிவிக்கின்றான். ஆடலரசனே சரணம், அவன் திருவடிகளே போற்றி, போற்றி!

Friday, February 08, 2008

சிதம்பர ரகசியம்- தியாகராஜரும் நடராஜரும்


தில்லையில் நடராஜர் எப்படி முக்கியத்துவமோ, மூலவரோ அப்படியே திருவாரூரில் தியாகராஜர் முக்கியத்துவம் வாய்ந்தவரும் மூலவரும் ஆவார். தில்லை நடராஜ சபை, பொன்னம்பலம் என்றால் திருவாரூர் தியாகராஜ சபையைப் பூ அம்பலம் என்று குறிப்பிடுவார்கள். இங்கே தான் சுந்தரரைத் தியாகராஜர், "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று துவங்கச் செய்யும் முதலடியை வைத்துத் திருத்தொண்டத் தொகையை எழுதச் செய்து அருளினார். பஞ்சபூதத் தலங்களில் உலகைக் குறிப்பிடும் திருவாரூரை மனதில் இருத்தியே, சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தை ஆரம்பிக்கும்போது நடராஜர், "உலகெலாம்" என்று எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்து ஆடும் அம்பலவாணன் முதலில் ஆடியது என்னமோ அறைக்குள்ளே தான். உமையவள் மட்டுமே காணுமாறு அறைக்குள் அவன் ஆடிய ஆட்டம் திரு உத்தரகோச மங்கை என்னும் ஊரில் என்று சொல்லுவார்கள். அன்னையானவள் பரத குலத்தில் பிறந்து ஐயனை மணந்து பின்னர் இங்கே ஐயன் அன்னைக்கு வேதப் பொருளை உபதேசித்து, பின்னர் தன் நாட்டியத்தையும் காட்டி அருளியதாய்ச் சொல்லுவார்கள். தேவிக்கு உபதேசத்தை ரகசியமாய்க் கொடுத்து அருளியதால் உத்தர கோச மங்கை எனப் பெயர் பெற்றதாயும் சொல்லுவார்கள். உத்தரம்=உபதேசம், கோசம்=ரகசியம், மங்கை=இங்கே பார்வதியைக் குறிக்கும். இந்த நாட்டிய நடராஜரை ஆதி சிதம்பரேசர் என அழைக்கப் படுவதோடு, இங்கே உள்ள மரகத நடராஜர் இருக்கும் இடத்தை ரத்தின சபை என்றும் அழைக்கப் படுகிறது. அக்கினியின் மத்தியில் அன்னை காண மகேசன் இங்கே அறையில் ஆடிய ஆட்டமே, சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் ஆடப் பட்டதாயும் சொல்லப் படுகிறது. இதைத் தான் "அறையில் இருந்தாலும் அம்பலத்துக்கு வரத்தானே வேண்டும்" என்ற சொல் வழக்கும் சொல்லுவதாய்க் கூறுவார்கள். ஐந்தரை அடி உயர நடராஜரை உள்ளே வைத்தே சன்னதி எழுப்பப் பட்டிருப்பதாய்ச் சொல்லுகிறார்கள். இந்த ஆதி சிதம்பரம் என அழைக்கப் படும் சன்னதி தனிக்கோயிலாக கோயிலுக்கு உள்ளேயே குளத்துக்கு எதிரில் இருப்பதாயும் சொல்கின்றனர். இவர் வெளியே வருவதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை இவரின் சந்தனக் காப்பு களையப் பட்டு அபிஷேகங்கள் நடந்து திரும்பச் சந்தனக் காப்புக்குள் நுழைந்து விடுவார். அந்த நாள் மார்கழித் திருவாதிரை நன்னாள்.

ஆனால் திருவாரூரிலோ என்றால் அவன் ஆடிய ஆட்டத்தை "அஜபா நடனம்" என்று சொல்கிறார்கள். வாயால் சொல்லாமல் சூட்சுமமாய் ஒலிப்பதால் இதற்கு அஜபா=ஜபிக்கப் படாதது என்று பொருள். இதை விளக்குவதே தியாகராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம். இவர் திருமேனியே இங்கே திருவாரூர் ரகசியம். இதைச் சோமகுல ரகசியம் என்று சொல்வார்கள். இவர் திருமேனியில் ஸ்ரீசக்ரம் அலங்கரிப்பதால் திருமேனி காணக் கிடைக்காத ஒன்று. தியாகராஜரும் உற்சவ காலங்களில் வெளியே வந்து தன் நடனத்தை ஆடுகிறார். அது போல் நடராஜரும் உற்சவ காலங்களில் மட்டுமே வெளியே வருவார். ஒரு வருஷத்தில் ஆறுமுறைகளில் மகா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகிறது. அவை நம் மானிடக் கணக்கில் கொள்ளாமல் தேவர்களின் கணக்கிலே கணக்கிடப் படுகிறது. தேவர்களின் காலம் நமக்கு மார்கழி மாதம் அவர்களுக்கு உஷத் காலம் என்று கணக்கிடப் படுவதால் மார்கழித் திருவாதிரையின் அபிஷேகம் உஷத் காலப் பூஜையாகக் கணக்கிடப் படுகிறது. மாசி-பங்குனியில் செய்யப் படுவது காலசந்தி, அல்லது பகலின் ஆரம்பம் எனக் கொண்டால், சித்திரையில் செய்யப் படுவது, உச்சிக்காலம் அல்லது நடுப்பகல் என்றும், ஆனி மாதம் நடப்பது பிரதோஷ காலம் அல்லது மாலைப் பூஜை எனவும், ஆவணி மாதம் நடப்பது இரண்டாம் காலம் அல்லது முன் இரவு பூஜையாகவும், புரட்டாசி மாதம் நடப்பது அர்த்தஜாமம் அல்லது நடு இரவு எனவும் அழைக்கப் படுகிறது.