எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, September 26, 2008

சிதம்பர ரகசியம் - சரித்திரத் தகவல்கள் தொடர்கின்றன!

சிவகாமி அம்மனின் சன்னதிக்கு நேரே பாண்டிய நாயகர் கோயிலுக்குக் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தின் வடமேற்கே ஒன்பது சிவலிங்கங்கள் எழுந்தருளி யுள்ள நவலிங்கம் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் திருத்தொண்டத்தொகையில் சுந்தரர் பாடியுள்ள 63 நாயன்மார்கள் தவிர, ஒன்பது தொகையடியார்களும் இருக்கின்றனர். இந்தத் தொகையடியார்களைக் குறித்து, அவர்களைப் போற்றும் விதத்திலேயே இந்தக் கோயில் ஒன்பது சிவலிங்கங்களும் எழுப்பப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. கல்வெட்டுக்களில் திருத்தொண்டத்தொகையீஸ்வரம் என இது குறிக்கப் பட்டிருப்பதாயும் தெரிய வருகின்றது. இப்போது சமீபத்தில் சென்ற போதும், அதற்கு முன்னால் ஜூலை மாதம் சென்ற போதுமே இந்தக் கோயிலைப் பார்க்க நேர்ந்தது. அதுவரையில் முடியவில்லை.

மேலும் சில சரித்திரத் தகவல்கள் வெள்ளை வாரணனார் கொடுத்தவற்றில் இருந்து மேற்கோள் காட்டுகின்றேன். பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகரத்து அரசர்கள், நாயக்க வம்சத்தவர் தவிர திருப்பணி செய்தவர்களில் மராட்டிய மன்னர்களும் இடம் பெறுகின்றனர் என்று இவர் தெரிவிக்கின்றார். சத்ரபதி சிவாஜியின் முதல் மகன் ஆன சாம்போஜி என்பவர் காலத்தில் தில்லை நடராஜர், சிதம்பரத்தை விட்டு வெளியே சென்று மறைத்து வைக்கப் பட்டிருந்தவர் வெளியே வந்ததாயும், இவர் காலத்திலேயே சிற்றம்பலத்திற்குத் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடைபெற்றதாயும் தெரிவிக்கின்றார். இவரின் அதிகாரியான கோபால்தாதாஜி என்பவர் இவருக்காக இந்தப் பணிகளை நிறைவேற்றித் தந்ததாயும் அரசரின் குருவான முத்தையா தீட்சிதர் குடமுழுக்கை முன்னின்று நடத்தி வைத்ததாயும் சொல்லுகின்றார். இவரின் இந்தத் திருப்பணிகள் பற்றிய குறிப்புகள் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்ட, “தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்-50” என்னும் நூலில் சொல்லி இருப்பதாயும் சொல்லுகின்றார். அந்தக் குறிப்புகள் திருவாரூர்ச் செப்பேடுகளில் இருந்து எடுக்கப் பட்டதாயும், ஆரம்பத்தில் தில்லையிலே இருந்த இந்தச் செப்பேடுகள், நடராஜர் மறைந்து வாழச் சென்றபோது அவருடன் திருவாரூருக்கு எடுத்துச் செல்லப் பட்டு, காலப்போக்கில் திருவாரூர்ச் செப்பேடுகள் என அழைக்கப் பட்டிருப்பதாயும் இவர் கூறுகின்றார். நடராஜர் மறைத்து வைக்கப் பட்ட வரலாறு பற்றிச் சில குறிப்புக்களைப் பார்த்துவிட்டுப் பின்னர் சமகாலத் திருப்பணிகள் பற்றியும் பார்த்துவிட்டு இதை முடிக்கலாம் என எண்ணம்.

மகமதியர் படை எடுப்பின் போது தென்னாட்டிற்கு வந்த ஒளரங்கசீபின் படைகள் செஞ்சியில் தங்கி இருந்ததாயும், அப்போது நடராஜருக்கும் கோயிலுக்கும் ஆபத்து நேருமோ என எண்ணிய தில்லை தீட்சிதர்கள் நடராஜரை இடம் பெயர்த்துத் திருவாரூருக்கு எடுத்துச் சென்றதாய் ஒரு குறிப்பும், ஹைதர் அலி காலத்திலும், ஒரு முறை நடராஜர் இடம் பெயர்ந்ததாயும் சொல்லுகின்றனர். இதற்கான ஆதாரங்கள் ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுக்களில் இருப்பதாயும் கூறுகின்றார்.

இது தவிர, மராட்டிய மன்னன் சாம்பாஜி காலத்துச் செப்பேடுகளிலும் இந்த விஷயம் வடமொழி, தமிழ் இரண்டிலும் பொறிக்கப் பட்டிருப்பதாயும் கூறுகின்றார். அவை பற்றிய விபரங்கள் நாளை!

Thursday, September 11, 2008

சிதம்பர ரகசியம்- சில தகவல்கள்

சீக்கிரம் முடிக்கணும்னு நினைச்சாலும், சில பல தகவல்களுக்குக் காத்திருப்பதால் நேரமும் ஆகி விடுகிறது. அநேகமாய் இன்னொரு பயணம் சிதம்பரம் போனால்தான் சரியா இருக்குமோ என்னமோ?? இப்போ அடுத்துப் பார்க்கலாம்:

பொதுவாக சிவன் கோயில்களில் விஷ்ணு ஒரு பரிவாரதேவதையாகவோ அல்லது தனி சன்னதியிலோ குடி இருப்பார். ஆனால் விஷ்ணு கோயில்களில் அப்படி சிவன் இருப்பதில்லை. ஒரு சில கோயில்கள் தவிர, அதில் திருமலையிலும், கடல்மல்லையிலும் சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து இருந்ததாய்த் தெரிய வருகின்றது. சில ஆழ்வார்களின் பாடல்களின் மூலமும் சிவ, விஷ்ணு சன்னதிகள் ஒரே கோயிலில் இருந்து வந்திருப்பதை அறிய முடிகின்றது. அத்தகைய கோயில்கள் மிகப் பழமையானவை என்றும், அத்தகைய பழமையான கோயில்களில் சிதம்பரமும் ஒன்று எனவும் தெரியவருகின்றது. இதன் மூலம் மூலப் பரம்பொருள் ஒன்றுதான் என்றும், அந்த மூலப்பரம்பொருளிடம் இருந்தே சிவனும், விஷ்ணுவும் தனியாகத் தோற்றுவிக்கப் பட்டு, இறை அன்பர்களால் வணங்கப் படுகின்றனர் என்பதும் புலனாகின்றது.

புராணங்களில் தான் கடவுளர்களின் பல்வேறு வடிவங்கள் நமக்குக் கிடைக்க ஆரம்பிக்கின்றன. அதன் முன்னால் பிரம்மம் என்ற ஒரே தத்துவமே இருந்து வந்ததாயும் தெரிய வருகின்றது. அந்த ஒரே சக்தியை பரமேஸ்வரன் என்று எடுத்துக் கொண்டால் அவரால் தோற்றுவிக்கப் பட்டவர்களே மும்மூர்த்திகள் என்று சொல்லப் படும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோர். இவர்கள் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து வருகின்றனர் என்பதும் முறையே முக்குணங்களின் சொரூபம் என்றும் (சத்வம், ரஜஸம், தமஸம்) சொல்லப் படுகின்றது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக மூவருக்குள் வேற்றுமையோ அல்லது ஒருவர் உயர்ந்தவர் மற்ற இருவர் தாழ்ந்தவர் என்றோ இல்லை எனினும் அந்த அந்தப் புராணங்களுக்கு ஏற்ப விஷ்ணு சில இடங்களில் உயர்ந்தவராயும், சிவன் சில இடங்களில் பிரம்மனையும், விஷ்ணுவையும் விட உயர்ந்தவராயும், இருந்து வந்திருக்கின்றனர். பிரம்மாவும் உயர்ந்தவராய் வெகு சில சமயங்களில் இருந்து வந்திருப்பதாயும், அவரின் வழிபாடு அவருக்கு ஏற்பட்ட சாபம் காரணமாய் நிறுத்தப் பட்டது என்றும் புராணங்கள் வாயிலாய் அறிகின்றோம்.

சிதம்பரம் கோயில் அத்தகைய சிவ, விஷ்ணு சேர்ந்து இருந்து வழிபடும் முறைக்கு ஒரு முக்கிய சான்று ஆகும். நடராஜர் எங்கே இருந்து ஆடுகின்றாரோ அதைத் தினமும் பார்க்கும் வண்ணம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் கோவிந்தராஜரின் சன்னதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் ஒரே சமயத்தில் தில்லை கோவிந்தராஜரின் தரிசனமும், தில்லை நடராஜரின் தரிசனமும் கிடைக்கும் வண்ணம் கோயிலின் சன்னதிகள் அமைக்கப் பட்டுள்ளன. மாணிக்க வாசகர் தம் திருக்கோவையாரில்,
புரங்கடந் தானடி காண்பான்
புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்
னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற்
றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல
முன்றிலம் மாயவனே.
என்று சிவனின் அடி, முடி கண்டதைக் குறிப்பிட்டுச் சொல்லுகின்றார். மேலும் சிவ புராணத்திலும், பத்ம புராணத்திலும் சிவனும், விஷ்ணுவும் ஒருவரே என்றும் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதாயும் தெரிய வருகின்றது. இருவரும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத சக்திகள் என்றும் குறிப்பிடுகின்றனர். பக்தி இலக்கியம் வேரூன்றப் பட்ட சமயங்களுக்குப் பின்னரே தனித்தனியாய்ப் பிரிந்து விட்டதாயும் சொல்லப் படுகின்றது. ஆகவே அதற்கு ஏற்ப பின்னர் வந்த அரசர்களும் ஒரு சமயம் தீவிர சைவர்களாயும், ஒரு சமயம் தீவிர வைஷ்ணவர்களாயும் மாறி, மாறி இருந்து வந்திருக்கின்றனர். என்றாலும் ஒவ்வொரு அரசர்களும் ஒவ்வொரு வகையில் சிதம்பரம் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கின்றனர் என்பதை மறுக்கவே முடியாது.மேலும் பொய்கையாழ்வார்(???) தம் முதலாம்/மூன்றாம் திருவந்தாதி(???)யில், கீழ்க்கண்டவாறு ஹரியோடு ஹரனையும் கண்டதாயும் சொல்லுகின்றார்.
"தாழ் சடையும், நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னானுந்தோன்று மால் - சூழத்
திரண்டருவி பாயுந் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து!"