எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, September 07, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் -

மூலவர் ஆதிநாதப் பெருமான் என்ற பெயரிலும் பொலிந்து நின்ற பிரான் என்ற பெயரிலும் அழைக்கப் படுகின்றார். தாயார் ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி. (நம்ம வல்லி சிம்ஹன் நினைவுக்கு வராங்களா? இது அவங்க ஊரே தான்! :D) கோவிந்த விமானத்தின் கீழே கிழக்கே பார்த்துக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். ஸ்ரீவைகுண்டத்திற்குக் கிழக்கே மூன்று மைலில் இருக்கும் இந்த ஊருக்கெனத் தனியான ரயில்வே நிலையம் உள்ளது. இங்கே மார்கழியில் அத்யயன உற்சவத்தின் போது நம்மாழ்வாருக்கு முக்தி கொடுக்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாய் நடை பெறும். மேலும் நம்மாழ்வார் இங்கே தனிச்சன்னதி கொண்டும் விளங்குகின்றார். மார்கழி ராப்பத்து உற்சவத்தின்போது நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் காதாரக் கேட்கும் எம்பிரான் நம்மாழ்வாருடன் ஒரே மண்டபத்திலே எழுந்தருளுகின்றார் எனச் சொல்கின்றனர். பத்தாம் நாள் பத்து அன்று “முனியே, நான்முகனே, முக்கண்ணப்பா” என்ற பாசுரம் வரும் என்கின்றனர். அப்போது நம்மாழ்வாரை மெதுவே எழுந்தருளச் செய்து பெருமமளின் பாதாரவிந்தங்களிலே நம்மாழ்வாரின் தலை படும்படியாகச் சமர்ப்பிக்கின்றனர்.

பெருமாளின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுடி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கிடக்கும் காட்சியைக் காண பக்தர்கள் கூட்டம் ஆர்ப்பரித்து, நம்மாழ்வாருக்கு முக்தி கிடைத்துவிட்டது என ஒரு பக்கம் சந்தோஷம் கொண்டாலும், மறுபக்கம் நம்மாழ்வாரைத் திரும்பத் தரும்படியும் வேண்டுவார்களாம். அப்போது சுவாமியும் நம்மாழ்வாரைத் "தந்தோம், தந்தோம், தந்தோம், சடகோபனைத் தந்தோம், நம் ஆழ்வானைத் தந்தோம்”, என்று சொல்லி பக்தர்களுக்கு அருள் புரிவார் என்று சொல்லுகின்றனர். ஒருமுறையாவது போய்ப் பார்க்கணும். கூட்டத்தை நினைச்சால் பயமா இருக்கு.

இது தவிர, வைகாசி உற்சவத்தின்போது திருக்குருகூரைச் சுற்றி அமைந்துள்ள மற்ற எட்டுத் திருப்பதிகளில் இருந்தும் பெருமாள் இங்கே வந்து நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கேட்க வருகின்றனர். நம்மாழ்வாரே முகமன் கூறி அவர்களை வரவேற்பதாக நம்மாழ்வாரின் உற்சவர் சென்று வரவேற்பு அளிக்கும் ஐதீகம் நடை பெறுகிறது. நம்மாவாரின் சந்நதியிலேயே பெருமாள்கள் அத்தனை பேரும் பாசுரங்களுக்காகக் காத்துக்கிடக்கும் அதிசயமும் நடக்கிறது. மதியம் திருமஞ்சனம் முடிந்து இரவு கருட சேவையில் ஒவ்வொரு பெருமாளும் வரிசையாக ஆழ்வாரின் சன்னதியைத் திறந்து கொண்டு வெளியே வருவார்கள். ஆஹா, நினைச்சுப் பார்த்தாலே பார்க்கணும்போல இருக்கு. இதெல்லாம் சொல்லித் தான் கேட்க முடிஞ்சது. ஒன்பது திருப்பதிகளின் பெருமாள்களும் வீதிவலம் வருவார்கள் நம்மாழ்வாரோடு. மதுரகவி ஆழ்வாரும் வீதி வலம் வருவார் என்றார்கள். இரவு பதினொரு மணிக்குக் கிளம்பும் ஊர்வலம் மறுநாள் விடியற்காலை ஐந்து, ஆறு மணி வரை நடைபெற்றுப் பின்னர் திருக்குருகூர் கோயிலின் மங்களாசாசன மண்டபத்திற்கு வந்து சேர்வார்கள். ஆழ்வார் ஒரு பல்லக்கில் இருப்பார். அப்போது ஒவ்வொரு பெருமாளுக்கும் அந்த அந்தப் பெருமாள் மீது பாடிய பாசுரங்கள் இசைக்கப் பட்டு பெருமாளுக்கு நம்மாழ்வார் விடை கொடுத்து அனுப்பும் காட்சி நடை பெறும். பாடலைப் பெற்றுக் கொண்டு பரமானந்தத்துடன் எல்லாப் பெருமாள்களும் தத்தம் இருப்பிடம் சென்றடைவார்களாம். கண்கொள்ளாக் காட்சி என்கின்றனர்.

நம்மாழ்வார் செய்த தவம் தான் என்னே! இறைவன் அடைவதற்கு எத்தனை எளியவன் என்று சொல்லுகின்றார் நம்மாழ்வார். அவன் பெரியவன் மட்டுமல்ல, எளிதில் அவன் நம்மிடம் வருவான் என்றும் வாழ்ந்து காட்டினார்.

டிஸ்கி: இந்தக் குறிப்பிட்ட பதிவுக்கு நன்றி திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள். இத்துடன் நவதிருப்பதிகள் முடிந்தன. நவ கைலாயங்கள் அடுத்து ஆரம்பிக்கும். தொடர்ந்து ஆதரவை வேண்டுகிறேன். நன்றி.

Thursday, September 03, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்!

மணவாள மாமுனிகள்
ஆழ்வார்களுக்குள் நம்மாழ்வாருக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது என்பதே அனைவரின் கருத்தும். அதனாலேயே மணவாளமாமுனிகளும், அவர் பிறந்த வைகாசி விசாகத்தைச் சிறப்பித்து,

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒருநாள்
உண்டோ சடகோபர்க்கொப்பொருவர்
உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்
குண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்!”

என்று நம்மாழ்வார் பிறந்த வைகாசி விசாகத்தை மட்டுமில்லாமல், அவர் பிறந்த ஊரான திருக்குருகூரையும் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றார். வேதத்தின் சாரமாய்க் கருதப் படுகின்ற இவரின் பாசுரங்களைச் சிறப்பித்து நம்பெருமாளான ஸ்ரீரங்கநாதனே இவரை “நம்மாழ்வார்” என்று பெருமையுடன் அழைத்துப் பெருமைப் படுத்தியதாய்த் தெரிய வருகிறது.

நம்மாழ்வார் அமர்ந்திருந்த உறங்காப்புளி மரம் இன்னமும் திருக்குருகூரில் காணக்கிடைக்கிறது. இந்தப் பாசுரங்கள் அனைத்துமே திருமங்கை ஆழ்வார் காலத்திற்குப் பின்னர் தேய்ந்து மறைந்து போய்விட்டன. ஒன்பதாம் நூற்றாண்டில் காட்டுமன்னார்குடி எனத் தற்போது அழைக்கப் படும் வீரநாராயணபுரத்தில் நாதமுனிகள் என்ற பெயரில் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து வந்தது. அந்தக் குழந்தை பிறவியிலேயே விஷ்ணுவிடம் பக்தி பூண்டு வந்தது. அந்த ஊர்க் கோயிலுக்கு யார் வந்தாலும், அவர்கள் பாடும் பாசுரங்களில் பெருமாளின் ஒவ்வொரு அவதாரமும், ஒவ்வொரு திவ்யதேசமும் சிறப்பித்துக் கூறப் பட்டிருப்பதை நாதமுனிகள் கேட்டு அநுபவித்து வந்தார். நாளாவட்டத்தில் அவருக்குப் பாசுரங்களின் மேல் அதீதக் காதல் ஏற்பட்டன. ஒரு சமயம் கும்பகோணம் ஆறாவமுதன் மேல் பாடப் பட்ட நம்மாழ்வாரின் பாசுரங்கள் பதினொன்றையும் கேட்டுவிட்டு, பதினோராவது பாடலில், இந்தப் பாடலை எழுதியவர் குருகூர்ச் சடகோபன் என்பவர் எனக் குறிப்பு வரவே, மேல் விபரங்கள் தேடியதில் சுமார் ஆயிரம் பாசுரங்களை குருகூர்ச் சடகோபன் பாடி இருப்பது தெரிய வந்தது.ஆயிரம் பாடல்களையும் அறிய முற்பட்ட நாதமுனிகளுக்கு அவை கிடைக்கவில்லை. பாடிக் காட்டியவர்களுக்கும் சரிவரத் தெரியவில்லை. இதன் மூலத்தை அறிய வேண்டி திருக்குருகூர் வந்தார் நாதமுனிகள். அங்கே மதுரகவி ஆழ்வாரின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த சிலர் மதுர கவி ஆழ்வார் நம்மாழ்வாரைக் குறித்துப் பாடிய பதினொரு பாடல்களைத் தந்து, நாதமுனிகளை, அந்த உறங்காப்புளிய மரத்தினடியில் அமர்ந்து நம்மாழ்வாரைத் தியானித்து, இந்தப் பதினொரு பாசுரங்களையும் பனிரண்டாயிரம் முறைகள் நியமங்களை அனுசரித்துச் ஒன்னால் நம்மாழ்வாரே விரும்பியதை அருள்வார் எனச் சொல்ல, நாதமுனிகளும் அவ்வண்ணமே தாமிரபரணியில் நீராடி உறங்கப்புளிய மரத்தடிக்கு வந்து அமர்ந்தார். பனிரண்டாயிரம் முறைகள் மதுரகவி ஆழ்வார் பாடிய பாசுரங்களைப் பாடினார். நம்மாழ்வார் அவர் முன் தோன்றி, “உமக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்க, ஆயிரம் பாசுரங்களையும் கொடுத்தருள வேண்டி நாதமுனிகள் வேண்டினார். நம்மாழ்வார் நாதமுனிகளின் பக்திக்கு மெச்சி, அந்த ஆயிரம் பாசுரங்கள் மட்டுமில்லை, மற்றப் பாசுரங்களையும், இன்னும் மற்ற ஆழ்வார்கள் பாடியதையும் சேர்த்தே தருகின்றேன் என்று சொல்லிவிட்டு அவ்வண்ணமே அனைத்துப் பாசுரங்களும் கிடைக்கும்படி அருளிச் செய்தார். இவை அனைத்துமே நம்மாழ்வார் தவமிருந்த புளிய மரத்தினடியிலேயே நடந்தது என்பது அந்தப் புளிய மரத்தின் சிறப்பை மேலும் கூட்டுகின்றது.

இந்த க்ஷேத்திரத்துக்குத் திருக்குருகூர் என்னும் பெயர் வரக் காரணம் பிரம்மா பல்லாண்டுகள் மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றி “அர்ப்பணம் குரு” எனச் சொன்னதால் திருக்குருவான ஆதிநாதன் கோயில் கொண்ட இடம் திருக்குருகூர் எனப் பட்டது. பின்னர் நம்மாழ்வாரின் பெருமையால் ஆழ்வார் திருநகரி எனச் சிறப்புப் பெயரும் பெற்றது. இதைத் தவிர இந்த ஊருக்கு தாந்த க்ஷேத்திரம் என்றும் பெயர் உண்டு. வடநாட்டில் இருந்த தாந்தன் என்னும் வேதம் பயின்று கொண்டிருந்த அந்தணனை அனைவரும் மதிக்காமல் ஏசினார்கள். மனம் வருந்திய அவன் பரிஹாரம் என்ன எனத் தேட திருக்குருகூர் சென்று ஆதிநாதரைக் குறித்துத் தொழுதால் ஞானம் உண்டாவதோடு நன்மையும் ஏற்படும் எனத் தெரிய இங்கே வந்து அவ்வண்ணமே செய்தான். அவனுக்கும் இங்கே தான் முக்தி கிடைத்தது. நம்மாழ்வாருக்கும் இங்கே தான் முக்தி கிடைத்தது. இனி கோயிலின் பெருமாளையும் நம்மாழ்வாரின் முக்தியைக் குறிக்கும் நிகழ்வு பற்றிய சிறப்பையும் பற்றிக் காணலாம்.

Tuesday, September 01, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நம்மாழ்வார் தொடர்ச்சி!

நம்மாழ்வாரும் , மதுரகவியாழ்வாரும்
நாம போன பதிவிலே பார்த்த திருக்கோளூரில் ஒரு அந்தண குலத்தில் பிறந்த ஒரு குழந்தை இளமை முதலே அருமையான கவி பாடும் ஆற்றலைப் பெற்றிருந்தது. அதனால் குழந்தை மதுரமான கவிகள் பாடுவதால் மதுரகவி எனப் பெயரும் பெற்றது. அந்தக் குழந்தை வளர்ந்து வேத, சாத்திரங்களை நன்கு பயின்று மேலும் பயிலவும் வடநாடு சென்றார். நாட்கள் செல்லச் செல்ல உலக வாழ்க்கையில் பற்று நீங்கியது. அயோத்தி, மதுரா போன்ற திவ்ய தேசங்களைத் தரிசித்தார். ஒருநாள் அவர் அயோத்தியில் தங்கி இருந்தார். மாலை மங்கி இரவுப் போதில் தங்கியிருந்த இடத்தைவிட்டு வெளியே வந்தபோது விண்ணில் ஒரு பேரொளியைக் கண்டார். அந்தப் பேரொளி தென் திசை முழுதும் வியாபித்திருந்ததையும் கண்டார். என்னவெனப் புரியாமல் அன்றைய இரவைக் கழித்தார். மறுநாள் இரவு மீண்டும் அதே மாதிரி அதிசயம். தென் திசை சுடர் விட்டுப் பிரகாசித்தது. அத்தோடு மட்டுமா? அந்த ஒளி அவரை அழைப்பது போலவும் தோன்றியது அவருக்கு.

தெற்கே ஏதோ ஓர் அதிசயம் நடந்துள்ளது என்பதையும், அந்த ஒளியைத் தான் பின்பற்றிச் செல்லவேண்டும் என்பதையும் மதுரகவியாழ்வார் உணர்ந்தார். தென் திசை நோக்கிப் பயணப் பட்டுத் திருக்குருகூர் வந்தடைந்தார். அங்கே ஓர் புளியமரத்தடியில் அந்தப் பேரொளி நிலை பெற்றிருப்பதைக் கண்டார். புளியமரத்தடியில் ஒரு பாலகன் மோன தவத்தில் இருந்ததையும் கண்டார். மோனத் தவத்தில் இருந்த சிறுவனை எழுப்ப முயன்றுவிட்டுப் பின்னர் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டு முதலில் சிறுவனின் சமாதியைக் கலைத்தார். பின்னர் அந்தச் சிறுவனிடம், “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார். பிறந்ததில் இருந்து அதுவரையிலும் பேசாமல், அசையாமல் இருந்த அந்தச் சிறுவன் அப்போது, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்.” என்று பதில் சொன்னான். இந்தக் கேள்வியும், இதற்கான பதிலும் மேலோட்டமாய்ப் பார்க்க சாமானியமாயும், அர்த்தம் இல்லாமலும் தோன்றினாலும் இதன் உள் அர்த்தமானது மானுட வாழ்வின் தத்துவத்தையே உணரத்துவதாய்ப் பெரியோர் சொல்லுவார்கள்.

“ஜீவன் சூக்ஷ்மம் ஆனது. அது கண்ணுக்கே தெரியாத ஒன்று. அந்த ஜீவன் சூக்ஷ்மம் ஓர் மனித உடலில் புகுந்து பிறவி எடுக்கிறது. அப்படி சூக்ஷ்மம் ஆன ஜீவன் பிறவி எடுத்தால் அப்போது அந்தப் பிறவியின் வாழ்க்கை எப்படி அமையும்?” இதுவே மதுரகவி ஆழ்வாரின் கேள்வி. இதற்கு நம்மாழ்வார் கொடுத்த பதிலானது, "தன் பூர்வ ஜென்மத்தின் புண்ணிய, பாவங்களை, அவற்றின் பலாபலன்களை நுகர்வதே இந்த ஜென்மத்தின் வாழ்க்கையாய் இருக்கும்" என்பதே ஆகும். இவரின் இந்த நுண்ணிய அறிவையும், பிறக்கும்போதே சகல ஞானமும் அறிந்தே பிறந்திருப்பதையும் உணர்ந்து கொண்ட மதுரகவி ஆழ்வார் அக்கணமே அவரைத் தன் குருவாக வரித்துக் கொண்டார். மதுரகவி ஆழ்வார் இவரைப் போற்றியே பாடல்கள் புனைந்துள்ளார். அவை பதினொரு பாடல்களாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்று
"நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;
தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித்திரிவனே."

நம்மாழ்வாருக்குப் பிறக்கும்போது இட்ட பெயராக "மாறன்" என்று தெரிய வருகிறது. இதைத் தவிர பராங்குசன் என்ற பெயராலும் அழைக்கப் படுகின்றார். பக்தி என்ற அங்குசத்தைக் கொண்டு பெருமாளை வசப் படுத்தியதால் பராங்குசன் என்று சொல்லுவார்கள். மற்ற ஆழ்வார்கள் சரீரம் என்றால் அந்த சரீரத்தின் ஆன்மா நம்மாழ்வார் என்று சொல்லுவது வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. நம்மாழ்வார் எழுதிய பாடல்களை எல்லாம் "திருவாய்மொழி" என்னும் சிறப்புப் பெயராலும், "திராவிட வேதம்" என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப் படுகின்றது. இந்தப் பாடல்கள் நான்கு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்டுள்ளது.
திருவாசிரியம் - யஜுர் வேதம்
திருவிருத்தம் - ரிக்வேதம்
பெரிய திருவந்தாதி- அதர்வ வேதம்
திருவாய்மொழி- சாமவேதம்
என்று சொல்லப் படுகின்றது. கிட்டத்தட்ட நாலரை ஆண்டுகள் நம்மாழ்வார் சொல்லச் சொல்ல பட்டோலையில் மதுரகவி ஆழ்வார் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது. ஆழ்வார்கள் அத்தனை பேரிலும் இவரை மட்டுமே "நம்" என்று சிறப்பித்து நம்மாழ்வார் எனவும் கொண்டாடப் படுகின்றார். பெரிய திருவந்தாதியில் இருந்து ஒரு பாடல்

பூவையும் காயவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர் என்றும் காண்தோறும்_பாவியேன்
மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று

காயாம்பூ, கரு நெய்தல், செங்கழுநீர் போன்ற பூக்களைப் பார்க்கும்போதெல்லாம் மனம் மகிழ்ந்து பூரித்து திருமாலின் வடிவங்களாய்த் தோன்றுவதாய்ப் பாடல் சொல்லுகின்றது.