எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 28, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! ஸ்ரீவில்லிபுத்தூர் 4

இங்கே ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேண்டுகோள். ஸ்ரீவில்லிபுத்தூரை ஏன் தாமிரபரணிக்கரையிலே சேர்த்தீங்கனு கள்ளபிரான் கேட்கிறார். எங்களோட திருநெல்வேலிப் பயணத்திலே அதுவும் அடங்கினது அவ்வளவே. மேலும் குழுமங்களில் இட ஒரே இழையாக இருப்பது வசதி, தலைப்பை மாற்றவேண்டாம் என்பதே காரணம். மேலும் ஆண்டாள் பிறந்த வீடான ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடாரைவல்லித் திருநாள் பொங்கலன்றே நடைபெறுகிறது. அன்றே மூட நெய் பெய்து முழங்கை வழிவார அக்காரவடிசில் சமைத்து நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப் படும். (இப்போத் தெரியாதுங்கோ) இங்கே ஆண்டாள் கனுவன்று பிறந்தவீட்டுக்குச் சாப்பிடச் சென்றுவிடுவாள். :D திருமலை நாயக்கர் காலத்திலும் , ராணி மங்கம்மாள் காலத்திலும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த இவ்வூர் அப்போது மதுரைமாவட்டத்தைச் சேர்ந்ததாகவே இருந்தது. அதற்குப் பின்னர் நெற்கட்டுச் சேவலின் ஜமீந்தாரான பூலித்தேவரிடம் இதன் பொறுப்பும், கோயிலின் பொறுப்பும் சில காலம் இருந்து பின்னர் யூசுப்கான் என்றழைக்கப் பட்ட கான்சாகிபிடம் சென்றது. அதன் பின்னர் சுதந்திரம் வரைக்கும் ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்குச் சற்று முன்பாக திருவாங்கூர் அரச வம்சத்தினர் கோயிலின் பொறுப்பை மேற்கொண்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தில் இடம் பெற்றிருந்த இந்த ஊர் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் இணைக்கப் பட்டு அதன் பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தோடு சேர்க்கப் பட்டது. இவ்விதம் பல்வகைகளிலும் அல்லாடி வந்த இந்த ஊரானது இப்போது விருதுநகர் மாவட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது.

ரயில் மூலம் செல்வதென்றால் தென்காசிக்குச் செல்லும் ரயில்பாதையில் இந்த ஊர் வரும்னு சொல்றாங்க. நாங்க திருநெல்வேலியைத் தலைமையாகக் கொண்டே சுற்றியதால் திருநெல்வேலியில் இருந்தே சென்றோம். சாலைப்பயணத்திலும் தென்காசி செல்ல இது உகந்தது என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுவிட்டே அங்கிருந்து தென்காசியும் சென்றோம். சாலைவழி இணைப்பு மதுரை,திருநெல்வேலி, சிவகாசி, சாத்தூர் போன்ற ஊர்களோடு இணைத்துள்ளதால் சாலைப்பிரயாணமும் நன்றாகவே இருக்கிறது. மதுரையில் இருந்து இங்கே தினமும் வந்து போகிறவர்கள் இருக்கிறார்கள். மதுரையில் இருந்து மூன்றுமணி நேரச் சாலைப்பயணம் இருக்கலாம். மேலும் நூபுரகங்கை பற்றி முத்துச்சாமி கேட்டிருக்கிறார். இங்கே தவிர நூபுரகங்கை மதுரைக்கருகே உள்ள அழகர் கோயிலில் உள்ளது. அங்கே ஓடுவது சிலம்பாறு. வாமன அவதாரத்தின்போது பெருமாள் எடுத்த திரிவிக்கிரம அவதாரத்தின் ஒரு கால் விண்ணைத் தொடவும், தேவாதிதேவர்களெல்லாம் எம்பெருமானின் திருவடிகளுக்கு நன்னீரால் அபிஷேஹ ஆராதனைகள் செய்ய, அப்போது அவர் சிலம்பில் பட்டுத் தெறித்த நீரே இங்கே உள்ள நூபுரகங்கையில் இருந்து சிலம்பாறாக மாறி வருகிறது என்றொரு புராணக்கதையும் இந்தத் தீர்த்தத்துக்கு உண்டு. நூபுரம் என்றால் சிலம்பு என்று அர்த்தம் அல்லவோ?? அப்பாடா, ஒருவழியா அழகர்கோயிலையும், ஸ்ரீவில்லிபுத்தூரையும், கீழே காட்டழகரையும் இணைத்து எழுதிட்டேன். கள்ளபிரான், இது எப்படி இருக்கு?? :P:P:P:P

இதைத் தவிர ஒரு காட்டழகரும் இருக்கிறார். இவர்தான் முதலிலே அழகர் ஆற்றிலே இறங்கும் திருவிழாவை நடத்தி வந்ததாகவும், இவர் காட்டிலே இன்னமும் இருப்பதாலும், நெருங்க முடியாமல் இருப்பதாலும் அதைத் திருமலை நாயக்கர் மாற்றி மதுரைக்குக் கொண்டு போனதாகவும் ஒரு கர்ணபரம்பரைக் கதை மதுரையில் சொல்லுவதுண்டு. இந்தக் காட்டழகர் இன்னமும் காட்டிலேதான் குடி கொண்டிருக்கிறார். இங்கேயும் ஒரு நூபுரகங்கை இருப்பதாய்க் கேள்வி. ராஜபாளையம் ராஜா வம்சத்தினருக்குக் குலதெய்வம் எனக் கேள்வி. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலே உள்ள ஒரு மலைத் தொடரிலே அமைந்திருக்கும் இந்தக் காட்டழகர் கோயில் உள்ள மலையை எங்கள் வண்டி ஓட்டுநர் எங்களுக்குக் காட்டினார். புரட்டாசி சனிக்கிழமைகளில் மேலே காட்டுக்குள் இருக்கும் கோயிலுக்குப் பக்தர்கள் கூட்டமாய்ச் செல்வதுண்டு என்றும் சொன்னார். கூட்டமாய்த் தான் செல்லவேண்டும், என்றும் இன்றும் யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு என்றும், அந்தக் கோயில் யானைகள் நுழையமுடியாதபடிக் கட்டப் பட்டிருக்கும் என்றும் சொன்னார். ஆசைதான் தாசில் பண்ண! ஆனால் முடியலை! அங்கே போகலை, தனியாகச் செல்லமுடியாது என்பதால்.

அடுத்து வருவதும் இதே தலைப்பில் தான், சங்கரன் கோயில். கொஞ்சம் காத்திருங்க.

Tuesday, December 22, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்!


இரட்டைக் கோயில்களாக அமைந்துள்ள இந்தக் கோயில்களில் முதலில் நாம் காணப் போவது ஆண்டாள் கோயில். பெரியாழ்வாரும்,ஆண்டாளும் வாழ்ந்த வீட்டையே பின்னாட்களில் கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவர் திருக்கோயிலாக மாற்றி உள்ளார். கல்வெட்டுத் தகவல் இதைத் தெரிவிப்பதாய்ச் சொல்கின்றனர். இரட்டைக் கோயிலாக அமைந்துள்ள இந்தக் கோயிலின் வட கிழக்கிலேதான் வடபத்ரசாயிக்குக் கோயில் உள்ளது. மேற்கே ஆண்டாள் கோயில், இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியிலே பெரியாழ்வாரின் நந்தவனம் இன்னும் மலர்கள் அளித்துவருகிறது. இங்கேயும் ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்று உள்ளது. இங்கே உள்ள துளசிமாடத்தில் ஆண்டாளின் சிற்பமும் வடித்திருக்கின்றனர். நந்தவனம் காலை வேளை சென்றால் மட்டுமே காணலாம் என எண்ணுகிறேன். முதலில் காணப்படுவதைப் பந்தல் மண்டபம் என்கின்றனர். அதைத் தாண்டிய கல்யாண மண்டபத்தில் நாயக்கர் காலத்திய ராமாயண ஓவியங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். பார்க்கமுடியலை. ஓவியங்கள் அழியும் நிலைமையில் உள்ளன என்றும் கேள்விப் பட்டோம். மதுரைப் பொற்றாமரைக்கரையைச் சுற்றி இருந்த ஓவியங்களை அழித்தாற்போல் இவையும் அழியாமல் இருக்கவேண்டும் எனப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. உள் பிரகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் காட்சி அளிப்பதே நம்ம மாதவிப்பந்தல்.(கேஆரெஸ்ஸோடது இல்லைங்க, நிஜமான ஆண்டாள் திருப்பாவையில் பாடின மாதவிப் பந்தல்) அடுத்து உள்ள மண்டபத்திலே தான் ஆண்டாள் முகம் பார்த்த தட்டொளி காணப்படுகிறது.

அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?


ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியயச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.

முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். தினமும் இவ்வாறு ஒரு கிளி புதிதாகச் செய்யப் பட்டு வைக்கப் படுகிறது. தான் அணிந்து கொண்ட பூமாலையுடன் ஆண்டாள் இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. கிணறை கண்ணாடிக் கிணறு என அழைக்கின்றனர்.
முதல் பிரகாரத்தைப் பெரியாழ்வாரின் நெஞ்சாகக் கருதினால் இரண்டாம் பிரகாரத்தில் சொர்க்க வாசல் உள்ளது. இங்கே மஹாலக்ஷ்மியும் அநுமனும், கலைமகளும் அருள் பாலிக்கின்றனர். வடக்கே உள்ள கோயிலுக்கும், நந்தவனத்துக்கும் இடையே சக்கரத்தாழ்வாரும் காணப்படுகிறார். சக்கரத்தாழ்வார் உக்கிரமாக இருந்ததாயும், ஆண்டாளால் சாந்தமடைந்ததாகவும் வரலாறு. இங்கே இருந்த ஆண்டாளும் அந்நியர் படை எடுப்பின் போது கேரளம் சென்று கொஞ்ச காலம் மறைந்து வாழ்ந்திருக்கிறாள். வடபத்ரசாயிக்கு ஆலிலையில் பள்ளி கொண்ட பெருமான் என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயிலை எழுப்பியவர்கள் வில்லி என்பவனும்,கண்டன் என்பவனும் ஆவார்கள். இவர்கள் பெயராலேயே வில்லிபுத்தூர் என்னும் பெயரும் இந்த ஊருக்கு ஏற்பட்டது. இந்தத் திருக்கோயிலின் எதிரே நூபுரகங்கை உள்ளது. இதில் எந்தக் கோடையிலும் நீர் வற்றுவதில்லை என்பதோடு நீருக்கான ஆதாரமும் தெரியவில்லை.

Friday, December 18, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! ஸ்ரீவில்லிபுத்தூர் 2

திருநெல்வேலிக்காரங்க இணையத்திலே நிறைய இருக்காங்க. எல்லாருமே வந்து அவங்களோட மலரும் நினைவுகளைப் பகிர்ந்துக்கறதிலே சந்தோஷம். இங்கே ஆண்டாளை பூமாதேவினு சொன்னதுக்கு நீளாதேவினு திரு தேவ் அவர்கள் சொல்றார். இருக்கலாம். ஆனால் பொதுவாய்ச் சொல்றது பூமியில் கண்டெடுத்ததால் பூமாதேவியே தான் அவதாரம்னும் , இன்னும் சிலர் சாட்சாத் சீதையே ஆண்டாளாகப் பிறவி எடுத்ததாகவும் சொல்கின்றனர். ஆண்டாள் அவதரித்த காலம் முதற்கொண்டு மு.ராகவையங்கார் என்னும் அறிஞர் கூறி உள்ளார். ஆண்டாளின் திருப்பாவையில் வெள்ளி எழுதல் பற்றியும், வியாழன் உறங்குவதுபற்றியும் வருகிறது அல்லவா?

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

அந்த நிகழ்வு எப்போ நடந்தது என ஆராய்ந்து பார்த்து அது நடந்தது எட்டாம் நூற்றாண்டில் எனக் கண்டறிந்து. ஆண்டாள் பிறந்தது கி.பி. 716-ம் ஆண்டு ஆடிப் பூரத்தில் என்றும், அவள் திருப்பாவையைப் பாடிய அந்தக் காலம் கி.பி. 731-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் நாள் அன்று அதிகாலை 3-50 மணியில் இருந்து 4-00 மணிக்குள் இருக்கவேண்டும் எனவும் கணித்துச் சொல்லி இருக்கிறார்கள். அந்த நாள் ஒரு பெளர்ணமி நாளாகவும் இருந்திருக்கிறது என்கின்றனர். ஆண்டாளின் வயது அப்போது பதினைந்து என்றும் சொல்கின்றனர்.

இத்தனைச் சிறிய வயதில் இப்படி ஒரு அறிவா என நாம் வியக்கின்றோம். இன்னும் வியந்து கொண்டே இருக்கிறோம். ஆண்டாளின் அறிவில் ஒரு பாதியாவது நமக்கு இருந்தால் போதுமே. ஆண்டாள் என்பதே பொய்யான ஒன்று. பெரியாழ்வாரே தம்மை நாயகி பாவத்தில் வைத்துக் கற்பனை செய்து எழுதிய கவிதைகள் இவை எனவும் ஒரு கூற்று உண்டு. மூதறிஞர் என அனைவராலும் அழைக்கப் படும் ஸ்ரீராஜாஜி அவர்களுக்கு இந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவர் வரையில் ஆண்டாள் என்ற ஒரு பாத்திரமே கிடையாது என்பார். ஆனாலும் இந்தப் பாக்களையும், ஆண்டாளையும் தமிழ் உள்ளளவும் ந்ம்மால் மறக்க முடியாது. ஆண்டாளின் மனோ தைரியமும், அவள் கண்ணன் மேல் கொண்ட காதலும் வியக்க வைப்பது.



திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!” ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பூரநக்ஷத்திரத்தில். மிகச் சிறந்த விஷ்ணு பக்தர் ஆன விஷ்ணு சித்தர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருந்த வடபத்ர சாயிக்குப் பூமாலைகளோடு சேர்த்துப் பாமாலைகளும் சமர்ப்பித்து வந்தார். அதுவும் கண்ணனைச் சிறு குழந்தையாகக் கண்ணாரக் கண்டு, மனதிலே தம்மைத் தாயாகவும், கண்ணனைக் குழந்தையாகவும் நினைத்து உருகி, உருகிப் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூற்றாண்டு” என இறைவனுக்கே பல்லாண்டு கூறும் பெருமையைப் பெற்றவர். அதனாலேயே பெரியாழ்வார் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார். ஆண்டவனின் பூமாலைகளுக்கெனத் தனியே ஒரு நந்தவனம் அமைத்து அதில் பல்வேறு வண்ணங்களும், வாசமும் மிக்க மலர்ச்செடிகளை அமைத்து அதிலிருந்து சூரியோதயத்துக்கு முன்னேயே மலர்களைப் பறித்து மாலைகள் ஆக்கி வடபத்ரசாயிக்குச் சூட்டி மகிழ்ந்து வந்தார். அந்த நந்தவனத்தின் ஒரு பக்கம் துளசிச் செடிகள் பயிராக்கப் பட்டு வந்தன. துளசியின் மணம் ஊரையே தூக்கும். ஒருநாள் காலையில் துளசி பத்ரம் பறிக்கச் சென்ற பெரியாழ்வாருக்கு ஒரு குழந்தையின் இனிமையான அழுகுரல் கேட்டது. பிரமையோ என ஒரு கணம் எண்ணிய அவர், பின் தெளிந்து கீழே பார்த்தால் துளசிச் செடிகளின் ஊடே ஒரு அழகான குழந்தை அழுதுகொண்டு இருந்தது.பச்சிளம் பாலகி. அதைக் கையில் தூக்கியதுமே பெண்குழந்தை என அறிந்த பெரியாழ்வார் மனம் மகிழ்ந்து இது நமக்கு இறைவன் கொடுத்த பரிசு. பூமாதேவியே மகளாய் அவதரித்திருக்கிறாள், என எண்ணி வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

கோதை எனப் பெயரிட்டு வளர்த்துவந்தார் அந்தக் குழந்தையை. மிக அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்துவந்தார். பெரியாழ்வார் தம் அன்போடும், பாசத்தோடும், அந்தக் குழந்தைக்கு இறை உணர்வையும் சேர்த்தே ஊட்டி வளர்த்தார். அந்தக் குழந்தையோ தகப்பனுக்கு மிஞ்சிய பெண்ணாக வளர்ந்தது. பூமாதேவியோ எனப் பெரியாழ்வார் சந்தேகப் பட்டதை உறுதி செய்யும் வகையில் பிறந்து வளர்ந்து, விபரம் தெரிந்தது முதல் அந்தக் குழந்தை அரங்கன் மேல் இணையற்ற பக்தியும், பாசமும் கொண்டு வளர்ந்து வந்தது. தினமும் ஸ்ரீகிருஷ்ணலீலை குறித்துப் பெரியாழ்வார் அந்தப் பெண்ணிடம் பேசிவர, அவள் மனதில் அது ஆழப் பதிந்தது. அவள் விளையாட்டுத் தோழன் கண்ணன். அவள் தன்னைவிட்டுக் கண்ணன் இணைபிரியாது இருப்பதாக எண்ணினாள். இடை இடையே கண்ணன் தன்னைவிட்டுச் சென்றுவிட்டானோ எனவும் தோன்றியது அவளுக்கு. தினமும் மாலைகளைக் கட்டிக் கொண்டே பெரியாழ்வார் சொல்லும் கண்ணன் கதைகளையும், கண்ணன் மேலான பாடல்களையும் கேட்டுக் கேட்டு வளர்ந்து வந்த கோதைக்குக் கண்ணனே தன் மணாளன் என்ற எண்ணம் நாளாக நாளாக உறுதிப் பட்டு வந்தது. ஆனால் பெரியாழ்வாரோ இதை அறியவில்லை. பூக்களின் வாசம் மூக்கைத் துளைக்க, அந்த வாசம் தன் மூக்கில் ஏறினால் கூட இறைவனுக்குச் செய்யும் அபசாரம் ஆகிவிடுமோ என எண்ணும் பெரியாழ்வார் ஒரு துணியைத் தன் முகத்தில் சுற்றிக் கொண்டு பூக்களை மாலையாகத் தொடுப்பார்.

மாலைகளின் வண்ண விசித்திரமான பூக்களின் அழகும், அவை ஒன்றுக்கொன்று பொருந்தும்படி வண்ணக்கலவை அமைக்கப் பட்டு மாலையான அழகையும் பார்க்கப்பார்க்க கோதையின் மனம் அந்த மாலையின் வசப்பட்டது. மாலையின் வசம் மட்டுமா? அதை அணியும் ரங்கனின் அழகிலும் அவள் மனம் வசப்பட்டது. இவ்வளவு அழகான மாலையை அணியும் ரங்கன் எத்தனை அழகு? ஆஹா, இந்த மாலையை ரங்கன் மட்டும் அணியாமல் நாமும் அணிய நேர்ந்தால், நாமும் அந்த அழகு ரங்கனும் இந்த மாலையை ஒருவர் கழுத்தில் ஒருவர் போட்டுக் கொண்டால்? கோதையால் ஆசையை அடக்கமுடியவில்லை. அங்கு இருந்த மாலையைக் கையில் எடுத்தாள். தன் கழுத்தில் போட்டுக் கொண்டாள். சுற்றுமுற்றும் பார்த்தாள்.பெரியாழ்வார் தன் அநுஷ்டானங்களைச் செய்யச் சென்றிருப்பதை உணர்ந்தாள். அங்கு இருந்த ஒரு கண்ணாடியின் முன் போய் நின்று தன் அழகைத் தானே ரசித்தாள். ஆஹா, எத்தனை அழகாய் இருக்கிறது இந்த மாலை நமக்கு? இதே போல் ரங்கனுக்கும் இருக்குமோ? நான் அணிந்த மாலையை அவன் அணிவானா? சட்டெனக் கழற்றிப் பூக்குடலையில் அந்த மாலையை வைத்தாள் கோதை. ஏதும் அறியாத பெரியாழ்வார் அந்த மாலையை எடுத்துச் சென்றுவிட்டார். ரங்கனுக்கு அன்று அந்த மாலைதான் அணிவிக்கப் பட்டது. அன்று மட்டுமா? இது தொடர்ந்தது. தினம் மாலைகளைக் கட்டிவைத்த பெரியாழ்வார் அநுஷ்டானங்களுக்குச் செல்வதும், கோதை மாலையை அணிந்து அழகு பார்த்துக் கொள்வதும், பின்னர் அதே மாலையைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று ரங்கனுக்கு அணிவிப்பதும் தொடர ஆரம்பித்தது. ஆனந்தத்தில் ஆழ்ந்த கோதைக் கண்ணன் மேல் பல பாடல்களைப் புனைந்து பாடினாள். ஊர்ப் பெண்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பாவை நோன்பு நூற்றாள். கண்ணனுடன் தனக்குக் கல்யாணம் ஆகப் போவதாயும் எண்ணி எண்ணி உவந்தாள். வாரணமாயிரம் புடைசூழ மதுசூதனன் நம்பி வந்து மாலையிடப் போவதாய் உறுதியாய் நம்பினாள். ஆனால் அவள் மன மகிழ்வைப் பொசுக்கும் வண்ணமாய் ஒருநாள்……

என்றும்போல் அன்றும் மாலையை எடுத்துச் சென்ற பெரியாழ்வார் பூக்குடலையில் இருந்து மாலையை எடுக்கும்போது அதிலிருந்து பெண்ணின் நீண்ட தலைமயிர் கூடவே வந்தது. அதைக் கண்ட பெரியாழ்வார் திடுக்கிட்டார். அன்று ரங்கனுக்கு மாலை இல்லை. மறுநாள் மனதில் ஏதோ சந்தேகம் ஜனிக்க, மாலையைக் கட்டிவைத்துவிட்டு ஒளிந்திருந்து கவனித்தார். கோதை வந்து திருட்டுத் தனமாய்ப் பார்த்துக் கொண்டே மாலையை எடுப்பதையும் தன் கழுத்தில் போட்டுக் கொண்டு அழகு பார்த்துக் கொள்வதையும் கண்டார். உடனேயே மறைவிடத்திலிருந்து வெளியே வந்தார். கோதையின் செயலைக் கண்டித்தார். கடுமையான வார்த்தைகளால் அவளைக் கடிந்து கொண்டார். அன்றும் ரங்கனுக்கு மாலை இல்லை. ரங்கனோ தவித்தான். என்ன ஆயிற்று? கோதையின் மாலைகள் ஏன் நமக்கு வரவில்லை? அன்றிரவு பெரியாழ்வாரின் கனவில் ரங்கன் வந்தான். மாலை ஏன் வரவில்லை எனக் கேட்டான். கோதை சூடிய மாலையை ரங்கனுக்கு அணிவிப்பது எங்கனம்? எனப் பெரியாழ்வார் நினைத்ததாகவும், அதனாலேயே ரங்கனுக்கு மாலை இல்லை எனவும், துக்கத்துடன் சொன்னார். தூங்கினாலும், கனவின் தாக்கத்தினால் அவர் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய்ப்பெருகியது. அரங்கன் அவரைத் தேற்றினான். கோதை நமக்கு உகந்தவள் அன்றோ? அவள் இருக்குமிடம் நம்மிடம் அன்றோ? உமக்குக் கோதையின் பிறப்பைப் பற்றி ஏதும் தெரியவில்லை போலும்? சாக்ஷாத் பூதேவி அன்றோ அவள்? அவள் நமக்கு உகந்தவளே. அவள் சூடிக்கொடுக்கும் மாலைகள் நமக்கு மிகவும் உகந்தவை. கோதை சூடிக் கொடுத்த மாலைகளன்றி வேறு மாலைகள் நமக்கு வேண்டாம். எனத் திட்டவட்டமாய்ச் சொன்னான் ரங்கன்.

கனவு கலைந்து எழுந்த பெரியாழ்வார் நடந்தது கனவா, நனவா என்ற கலக்கத்தில் சற்று நேரம் இருந்துவிட்டுப் பின் தன் பெண்ணை அழைத்துக் கனவில் வந்த ரங்கன் சொன்னதை அவளிடம் சொன்னார். ஆண்டவனையே ஆளும் பேறு பெற்ற நீ இன்று முதல் “ஆண்டாள்” என்னும் பெயரால் அழைக்கப் படுவாய் என்றார். ஆண்டவனுக்கே மாலைகளைச் சூடிக் கொடுத்த நீ “சூடிக் கொடுத்த நாச்சியாரா”கவும் ஆவாய் என வாழ்த்தினார். மகள் ஏதோ பைத்தியமாய் இருக்கிறாள் ரங்கனைத் தான் மணப்பேன் என்கிறாள் என்று நினைத்த பெரியாழ்வார் அன்று முதல் ரங்கனிடம் அவளைச் சேர்ப்பது எங்கனம்? எனக் குழம்பினார். அப்போது ரங்கன் மீண்டும் அவர் கனவில் வந்து, ஸ்ரீரங்கத்துக்கு ஆண்டாளை அழைத்து வரும்படி சொல்ல, அவ்விதமே அழைத்துச் செல்கிறார் பெரியாழ்வார். செல்லும்போது காவிரிக்கரையிலேயே கோதை காணாமல் போக, கலங்கினார் பெரியாழ்வார். கோதை தன்னிடம் இருப்பதையும் அவள் தனக்குத் திருவடிச் சேவை புரிவதையும் பெரியாழ்வாருக்குச் சூசகமாய்த் தெரிவித்தார் ரங்கநாதர். ஆனால் ஏற்கெனவே அப்பா ஒரு கிறுக்கு, பெண்ணோ பெரிய பைத்தியம் என்று சொல்லும் ஊர் என்ன சொல்லும்?? ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளைப் பலரும் அறியத் திருமணம் செய்து கொள்ளும்படி ஆண்டவனை இறைஞ்சினார் பெரியாழ்வார். அதன்படியே ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ரங்கமன்னார் ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் ஆண்டாளைத் திருமணம் செய்து கொண்டதாய் ஐதீகம்.


இனி கோயில் பற்றிய சில செய்திகள் நாளை!

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் பல விஷயங்களுக்குப் பேர் போனது. முக்கியமாய் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. எல்லா இடத்துப் பால்கோவாவுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப் படும் பால்கோவாவுக்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு. சுத்தமான பசும்பாலில் தயாரிக்கப் படும். இதை அடுத்துக் கண்ணன் பிறந்த மதுராவிலும், அவன் குடித்தனம் நடத்திய துவாரகையிலும் கிடைக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் சுத்தமான பசும்பால் தான். அதுவும் குஜராத் பூராவுமே அநேகமாய்ப் பசும்பால் தான். நாங்க இருந்த ஐந்து, ஆறு வருடங்களில் எருமையே பார்க்கலை. அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தைலச் சக்கை. சக்கைனதும் ஏதோ சக்கையாய் இருக்கும்னு நினைக்காதீங்க. அருமையான வாசனைத் தைல மூலிகைகளின் வேர்கள், பூக்கள், மொட்டுகள், இலைகள் எல்லாம் சேர்ந்த ஒன்று. இடித்துச் சூரணம் மாதிரி இருக்கும். பொதுவாகவே மதுரைப்பக்கம் பெருமாள் கோயில்களில் தாயார் சந்நிதியில் மஞ்சளும், ஆண்டாள் சந்நிதியில் இந்தத் தைலச் சக்கையும் தான் பிரசாதம். அதுவும் மதுரை வடக்குக் கிருஷ்ணன் கோயிலில் வருஷா வருஷம், ராப்பத்து, பகல் பத்து உற்சவத்தின்போது ஸ்வாமி வீதி உலா வரும்போது கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுப்பாங்க. ஒருதரம், இரண்டு தரம்னு வாங்கிட்டு, அம்மா வாங்கினதையும் சேர்த்து வெந்நீரில் ஊறவைச்சு, அம்மியில் அரைச்சுக் காலம்பர குளிக்கும்போது தலையில் தடவிக் கொண்டு ஊற வைச்சுக் குளிச்சால் மணமோ மணம்! பல நாட்கள் மணம் வீசும். சண்பகப் பாண்டியனுக்குச் சந்தேகமே வந்திருக்காது. ஸ்ரீவில்லிபுத்தூர் தைலச் சக்கை மணம் தான் தேவியின் கூந்தலில்னு அடிச்சுச் சொல்லி இருப்பான் அவனே. தருமிக்கும் பொற்கிழி கிடைச்சிருக்காது.

அருமை தெரியலை, போகட்டும். இப்போப் போயிருந்தப்போ பால்கோவா வாங்கினீங்களானு கேட்கிறீங்களா? ஆமாம், வாங்கினோம், வாங்கினோம், ஆனால் சுவை??? அதேபோல் தைலச் சக்கை கிடைக்கலை, ஆண்டாள் ஸ்நாநப் பவுடர்னு பாக்கெட்டுகளில் விற்கிறாங்க. அரை மனசோடு வாங்கிட்டு வந்தது இன்னும் இருக்கு தேய்ச்சுக்காமல். எல்லாம் அது ஒரு கனாக்காலமாயிட்டது. போகட்டும், ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமையை இன்றைக்கும் மாறாமல் வைத்திருக்க ஆண்டாளின் பெயர் ஒண்ணே போதுமே? வேறே என்ன வேண்டும்?? பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையின் புகழ் என்றைக்கும் மங்காது. அதே போல் நம் தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப் பட்ட அரசுச் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் தான். இதை அரசுச்சின்னமாக அறிவித்தவர் ஓமந்தூரார்னு நினைக்கிறேன். யாருப்பா அங்கே? ஓமந்தூரார் தானே அல்லது வேறே யாருமானு வந்து சொல்லுங்க கொஞ்சம். ஆனால் அப்போது பிரதமராய் இருந்த நேருவிற்கு சமயச் சின்னத்தை ஏற்க மனமில்லை என்றும், ஓமந்தூரார் இதை சமயச் சின்னமாய்ப் பார்க்கவேண்டாம் எனவும், திராவிடக் கட்டடக் கலையின் சின்னமாய்ப் பார்க்கும்படியும் சொன்னதாகக் கேள்விப்பட்டுப்படிச்சு இருக்கேன். இத்தனை புகழ் வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கும், ஆண்டாளுக்கும் அடுத்ததாய்ப் புகழ் பெற்றவர் வில்லி பாரதம் எழுதிய வில்லிபுத்தூரார். மேலும் தருமை ஆதீனத்தின் குருஞானசம்பந்தருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் தான் சொந்த ஊர் எனத் தெரிய வருகிறது.

வைணவ திவ்யதேசங்களில் முதலாவதான ஸ்ரீரங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூரும் ஒரு திவ்ய தேசம் தான். கடைசித் தலமான இது ஆண்டாளின் பிறந்த வீடு. ஸ்ரீரங்கமோ ஆண்டாளின் புகுந்த வீடு. அதோடயா?? மதுரையின் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது ஒவ்வொரு வருஷமும் ஆண்டள் சூடிக் கொடுத்த மாலையையும், அவள் அனுப்பி வைக்கும் பரிவட்டங்களையும் அணிந்து கொண்டே ஆற்றில் இறங்குவார். இவருக்காக ஆண்டாள் நூறுதடா வெண்ணெயும், நூறு தடா அக்காரவடிசிலும் சமர்ப்பிப்பதாய் நேர்ந்து கொண்டாள். ஆனால் ஆண்டாளால் அதைச் செய்ய முடியவில்லைபோலும். ஆண்டாளின் இந்த விருப்பத்தைப் பின்னால் வந்த ஸ்ரீராமநுஜர் நிறைவேற்றி வைத்துவிட்டு ஸ்ரீவில்லி புத்தூர் சென்றால் என்ன ஆச்சரியம்??? அங்கே இருந்த ஆண்டாள் விக்ரஹம், “என் அண்ணாரே!” என அழைத்துக் கொண்டு முன் வந்து ஸ்ரீராமாநுஜரை வரவேற்றது. “பெரும்புத்தூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்ற வாழ்த்தையும் பெற்றாள் ஆண்டாள். இனி கோயிலுக்கு உள்ளே நுழையுமுன் சற்றே ஆண்டாளின் அவதாரக் கதையைத் தெரிந்து கொள்வோமா?? அனைவருக்கும் தெரிந்த ஒன்றே என்றாலும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மிகச் சிறந்த சில கதைகளில் இதுவும் ஒன்று.

Thursday, December 17, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்- நெல்லையப்பர்!


திருநெல்வேலியின் புராதனப் பெயர் வேணுவனம் என்பதாகும். பாண்டிய மன்னன் ராமபாண்டியன் ஆட்சிக் காலத்தில் மன்னனுக்குத் தினமும் ராமக் கோனார் என்பவர் பால் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். தினமும் அவர் காலில் வழியிலிருந்த கல் ஒன்று இடறும். பால் கொட்டும். ஆனால் கையில் கொண்டு வரும் பானைக்கு எந்தச் சேதமும் ஏற்படாது. இப்படித் தினமும் தொடர்ந்து நடக்க மன்னனுக்குச் சந்தேகம் தலை தூக்கியது. இவர் நிஜமாகவே பால் கொண்டுவருகிறாரா என சந்தேகப் பட்டான். மறுநாளும் மன்னனின் ஆட்கள் தொடரப் பால் கொண்டு வந்த கோனாரின் கையில் இருந்து பானையில் இருந்த பால் முழுதும் இடறிய கல்லின் மேலேயே கொட்ட மீண்டும் அனைவரும் மன்னனிடம் சென்று முறையிட்டனர். மன்னனும் தன் வீரர்களை அழைத்துக் கொண்டு அங்கே வந்து பார்த்தான்.

கல் கண்களில் பட அந்தக் கல்லை அகற்ற முயன்றார்கள் அனைவரும். கோடாரியால் ஓங்கி ஒரு போடு போட அந்தக் கல்லில் பட்டு உடனே ரத்தம் பீறிட ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது திகைத்து நிற்க விண்ணில் இருந்து அசரீரி கேட்டு அந்தக் கல்லைத் தோண்டிப் பார்த்தால் அது சிவலிங்கம். அப்போது போட்ட கோடரி அடி லிங்கத்தின் இடப்பக்கம் பட்டு ரத்தக் காயம் தெரிந்தது. மன்னன் கையை வைக்க ரத்தம் வருவது நின்றது. சுயம்புவாய்த் தோன்றிய அந்த லிங்கத்தை வைத்துக் கோயில் உருவானது. இப்போதும் மூலவரின் தலையில் வெட்டுக் காயம் இருப்பதாய்ச் சொல்கின்றனர். இந்த வேணுவனம் திருநெல்வேலியானது இன்னொரு பக்தராலே.

அவரும் வேதசர்மா என்ற பெயரோடு தினமும் வேணுவனநாதருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். அவரைச் சோதிக்க எண்ணிய ஈசன் நாளடைவில் அவருக்குச் செல்வம் குறையும்படி செய்ய, அக்கம்பக்கம் சென்று இறைஞ்சிப் பணமோ நெல்லோ பெற்று இறைவனுக்குத் தொண்டு செய்துவந்தார். ஒருநாள் அக்கம் பக்கம் வீடு வீடாய்ச் சென்று நெல்லை வாங்கிச் சேகரித்து சந்நிதி முன்னால் காயப் போட்டுவிட்டுக் குளிக்கச் சென்றார். திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதசர்மா மழை நீரில் நெல் நனைந்து அடித்துச் சென்றுவிடுமே என எண்ணி வேகமாய் ஓடி வந்தார். என்ன ஆச்சரியம்?? நெல்லைச் சுற்றிக் கொண்டு மழை நீர் ஓடியது. நடுவே உள்ள காய்ந்த இடத்தில் மட்டும் வெயில் அடிக்க நெல் அங்கே காய்ந்து கொண்டிருந்தது. அசந்து போனார் வேதசர்மா. மன்னனுக்கு விஷயம் போக மன்னனும் வந்து பார்த்து அசந்து போனான். உலகிற்குப் பெய்த மழை வேதசர்மாவின் நெல்லைக் காத்த அதிசயம் ஊரெங்கும் பரவியது. நெல் நனையாது காத்த ஈசனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என அழைக்கலானான் மன்னன். வேணுவனம் என்றிருந்த அப்பகுதியும் திருநெல்வேலி என அழைக்கப் பட்டது.

ஈசன் பெயர் நெல்லையப்பர் என்றிருந்தாலும் வேணுநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றெல்லாம் அழைக்கப் படுகிறார். அம்பாள் வடிவுடை அம்மை என்றாலும் காந்திமதி என்ற பெயரிலேயே அறியப் படுகிறாள். இதைத் தவிர அம்பாள் திருக்காமக்கோட்டத்து நாச்சியார் எனவும் அழைக்கப் படுகிறாள். மிக மிகப் பெரிய கோயிலாக பிரமிக்கும் விதத்தில் இருக்கிறது. ஆயிரம், இரண்டாயிரம் வருஷங்கள் பழமையான கோயில் என்று சொல்லப் படுகிறது. நிறைய இதிகாச, புராணத் தகவல்களோடு அதி அழகான சிற்பக் கலை வேலைப்பாடுகளுடன் கூடியதாகவும் உள்ளது. ஸ்வாமிக்கும், அம்மனுக்கும் தனித் தனிக் கோயில். தனித் தனி ராஜ கோபுரங்கள். ஸ்வாமி கோயிலையும் அம்மன் கோயிலையும் இணைக்கும் மண்டபத்தைக் கல் மண்டபம் என்று சொல்கின்றார்கள்.

மிகப் பெரிய தெப்பக்குளம் ஒன்று கோயிலின் உள்ளேயே இருக்கிறது. சுற்றிலும் இரும்புக் கம்பிகளால் பாதுகாக்கப் படுகிறது. வேண்டுமானால் உள்ளே சென்றும் பார்க்கலாம். ஆனால் கீழே இறங்க முடியாது. கோயிலின் பிரம்மாண்டம் அசத்துகிறது. மூலஸ்தானத்தில் நெல்லையப்பருக்கு அருகேயே பெருமாளும் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். முக்கியமான ஐந்து சபைகளில் இரண்டு சபைகள் இந்தத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. குற்றாலத்தில் நாம் கண்டது சித்திர சபை. இங்கே நாம் காண்பது தாமிர சபை. இந்தத் தாமிர சபை இரண்டாம் பிரஹாரத்தில் அமைந்துள்ளது.

கோயில் மட்டுமில்லை. இங்குள்ள நந்தியும் பெரியதாய் உள்ளது. நந்தி வெள்ளை நிறத்தில் உள்ளது. விநாயகரும் பெரிய விநாயகர். ஒன்பது அல்லது பத்தடிக்குக் குறையமாட்டார். தக்ஷிணா மூர்த்தி, சண்டேஸ்வரர், துர்கை, பைரவர் போன்ற பரிவார மூர்த்திகள் உண்டு. இரண்டாம் பிரஹாரத்தில் தான் இசைத் தூண்கள் உள்ளன. மூன்றாம் பிரஹாரம் மிகப் பெரியது என்றும், 3 யானைகளுக்கு மேல் சேர்ந்து நடக்கலாம் என்றும் சொல்கின்றனர். இந்தப் பிரஹாரத்தில் இருந்தே அம்மன் கோயிலுக்குச் செல்லும் மண்டபம் உள்ளது. மிகப் பெரிய இவை பார்க்கவே பிரமிப்பை ஊட்டுகிறது. இந்தப் பிரஹாரத்தில் தான் மேலே சொன்ன தெப்பம் உள்ளது. இதைத் தவிர வெளித் தெப்பமும் ஒன்று உண்டெனச் சொல்கிறார்கள். பார்க்கவில்லை.

நாங்க தங்கி இருந்த அறையிலிருந்து நடந்தே போகலாம் என்று சொன்னாலும் பேருந்தில் போனோம். ஊர் மிக அழகும் சுத்தமுமாய் உள்ளது. கோயில் ராஜ கோபுரங்களை அடுத்த வீதிகளைச் சுற்றிக் கடைகள்,கடைகள், கடைகள். திருநெல்வேலியின் பாரம்பரிய போத்தீஸுக்கும், ஆரெம்கேவிக்கும் நடுவே சென்னையின் நல்லியும் இடம் பெற்றுள்ளது. திரும்பிப் பேருந்தில் வர வேறு வழி. என்றாலும் குழப்பம் இல்லை. கோபுர வாசலுக்கு நேரே இருட்டுக்கடை அல்வாக்கடை. போகும்போது தான் கடை திறந்து சிறிது நேரம் என்றார்கள். திரும்பி வந்துதான் எப்படியும் அல்வா வாங்கணும். ஆகவே திரும்பி வேறே வழியில் கடைக்குச் சுத்திண்டு வந்தோம். ஒரே அதிர்ச்சி. பெரிய வரிசை அல்வாவுக்கு. அல்வாவுக்கே அல்வா கொடுக்கவெல்லாம் முடியலை. பெண்கள் வரிசை நல்லவேளையாக(?) தனியே இருந்தது. நான் அதில் போய் நின்றேன். திருநெல்வேலிக்குப் போறோம்னதும், அல்வாவுக்கான முன்பதிவுகளும், கல்லிடைக்குறிச்சி அப்பளத்துக்கான முன்பதிவுகளும் நிறையவே இருந்தன. கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் நின்னதும் அல்வா கிடைத்தது. நாம வாங்கற ஒரு கிலோ, அரை கிலோவெல்லாம் அவங்களுக்கு பிசாத்து போலிருக்கு. அலக்ஷியமாப் பார்த்தாங்க. சரிதான்னு நினைச்சுட்டு வாங்க வேண்டியவங்களுக்கு எல்லாம் வாங்கிக் கொண்டோம். வரும் வழியிலே கல்லிடைக்குறிச்சியிலே இறங்கி அம்பி வீட்டுக்குப் போய் ஒரு கலக்கு கலக்கிட்டு அப்பளப் பாக்கெட்டுகளையும் வாங்கிக் கொண்டிருந்தோம். அல்வாவை முடிச்சுட்டு அறைக்குத்திரும்பினோம். அடுத்த பதிவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலும், அதன் பின்னர் சங்கரன் கோயிலும். காத்திருங்கள். ஆண்டாளையும், வடபத்ரசாயியையும் பார்க்க.


திருநெல்வேலி அல்வாக்கடை படம் உதவி: நன்றி, துளசி.

Wednesday, December 16, 2009

வளம் தரும் வியதீபாத தரிசனம்

(மார்கழி 9, வியாழக் கிழமை, 24.01.2010, அதிகாலை 04.30 மணி)

சிதம்பரம். கோயில் என்றாலே பொருள்படுவது. ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது. சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும் ஸ்தலம். சிதம்பர ரகசியம் விளங்குவது. அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலம¡க விளங்குவது.

சிவபெருமானுக்கும் ஐந்து என்ற எண்ணுக்கும் அநேக தொடர்புகள் உள்ளன. பஞ்சாக்ஷரம் ஐந்து எழுத்து. நடராஜராஜர் செய்யும் செயல்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல்,) பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாக அமந்த ஸ்தலங்கள் ஐந்து. மகேஸ்வரனின் சக்தி ரூபங்கள் ஐந்து (ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி). சிதம்பர ஸ்தலத்தின் முக்கிய பிரகாரங்கள் ஐந்து. ஈஸ்வரனின் முகங்கள் ஐந்து. பரமேஸ்வரனின் முகங்கள் ஐந்து. சித்தாந்தக் கலைகளின் (சித்தாந்தம்) ஐந்திற்கும் நாயகராக விளங்குபவர்.

பஞ்சாங்கம் என்பது ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது. 1.திதி, 2.வாரம், 3. நக்ஷத்திரம், 4. யோகம், 5. கரணம்.

அண்டத்தின் பரம்பொருள் நடராஜப் பெருமான். அலகிலாத உருவம் உடையவர். அடிமுடி காணமுடியாதவர். அங்கிங்கெண¡தபடி எங்கும் வியாபித்திருப்பவர். அவரன்றி அணுவும் அசையாது. இயங்கு சக்திகளை தாள கதியுடன் ஆட்டுவிப்பவர். அண்டத்தின் பால்வெளியில் அமைந்த நவக்ரஹங்களையே மாலையாக அணிந்தவர்.

சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் சன்னிதியில், பஞ்சாக்ஷர படிக்குக் கீழே, தினமும் பஞ்சாங்கம் படிக்கப்படுவது ஆண்டாண்டு காலம¡க நிகழ்ந்து வருவது.

நக்ஷத்திரங்களும், ராசி மண்டலங்களும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் கட்டளைக்கிணங்க இயங்குகின்றன.

1. திதி : திதிக்குக் காரணமாகிய சந்திரனை தலையில் சூடியவர்.
2. வாரம் : கிழமைகளுக்கு ந¡யகராகிய சூர்யனை குண்டலமாக அணிந்தவர்.
3. நக்ஷத்திரங்கள் : இவற்றை மாலையாக அணிந்தவர்
4. யோகம் : வேண்டுவோருக்கு வேண்டும் யோகங்களை அருள்பவர்.
5. கரணம் : கரணங்களை தன்னுள் கொண்டவர்.

மார்கழி மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக அமைகின்றது. ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், மார்கழியில், அதிகாலைப் பொழுதாகிய பிரம்ம முஹூர்த்த நேரத்தில், மிகச் சிறப்பாக திருப்பள்ளியெழுச்சி காலம் நடைபெறும்.

இந்த மார்கழி மாதத்தில் (பஞ்சாங்கத்தில் ஒரு அங்கமாகிய) வியதீபாதம் என்னும் யோகம் வரும் நாளில் ஸ்ரீ சித்ஸபேசரை தரிசனம் செய்வது ஸர்வ பாபங்களையும் நீக்கி, பெரும் புண்யங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லது. மார்கழி மாதத்தின் அனைத்து தினங்களிலும் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசனங்களின் பலன்கள் அனைத்தும், (தனுர்) வியதீபாத தினத்தில் தரிசனம் செய்தால் கிடைக்கும்.

பஞ்சாங்கத்தின் யோகம் என்பது சிறப்பு வாய்ந்த ஒரு அம்சம். சூர்யனுக்கும், சந்திரனுக்கு இடையே உள்ள தொடர்பை நிறுவும் அம்சம்.

யோகங்கள் என்பது மூன்று வகைப்படும்.

பிறக்கும்போது ஜாதகத்தில் கிரஹங்கள் இணைவதால் உண்டாகும் யோகம். (கஜகேசரி யோகம், சகடயோகம்)

நக்ஷத்திரமும், தினமும் இணைவதால் உண்டாகும் யோகம் (அமிர்த, சித்த மற்றும் மரண யோகம்). அஸ்வினி நக்ஷத்திரம் திங்கட்கிழமையில் அமைந்தால் அது சித்த யோகம்.

சூர்யனும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் யோகங்கள் 27. (விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை) இந்த 27 யே¡கங்களுள் ஒன்றுதான் வியதீபாத யோகம், யோக நாயகர்களுக்கு அதிபதியாக விளங்குவது.

மார்கழி மாதம் & வியதீபாத யோகம் இணையும் வேளையில் ஸ்ரீ நடராஜப் பெருமானை வழிபடுவது மிகுந்த யோகங்களைத் தரவல்லது.

புராண விளக்கம் :

ஒரு சமயம், சந்திரன் குரு பகவானின் மனைவியான தாரையின் அழகில் மயங்குகிறார். இதை அறிந்த சூர்ய பகவான், சந்திர பகவானிடம் இது தகாத செயல் என எச்சரிக்கிறார். அச்சமயம் இருவரின் பார்வைகளும் ஒன்று சேர, அந்த சக்தியிலிருந்து ஒரு மிகப் பெரும் வடிவம் எழுந்து, உலகத்தையே விழுங்கப் பார்த்தது. அந்த உருவத்தைச் சாந்தப்படுத்திய சூர்ய சந்திரர்கள், யோகங்களில் ஒருவராக, வியதீபாதம் என்று பயர் அளித்து, யோகங்களுக்கு அதிபதியாக பதவி அளித்தனர். உலகை விழுங்க ஆசைப்பட்டு, சாந்தப்படுத்தியதால், பூலோக மக்கள் உன் யோகம் வரும் நாளில் எந்தப் புனித காரியத்தையும் செய்யமாட்டார்கள் எனவும் கூறினர்.

மக்கள் புனித செயல்கள் செய்யாத திதிகளான, அஷ்டமி, நவமி திதிகள் மஹாவிஷ்ணுவை வேண்டிக்கொண்டு, அவரின் அவதார தினப் பெருமையைப் பெற்றனர்.

அதுபோல, வியதீபாத யோகம், தன் நாட்களில் எந்தப் புனித காரியமும் செய்யாதிருக்கிறார்களே என்று எண்ணி, நடராஜப் பெருமானின் குஞ்சிதப¡தத்தை (தூக்கிய திருவடியை) சரணடைய, பக்தர்களுக்கு வேண்டியதை உடனடியாக வரமளிக்கும் நடேசர், மார்கழி மாதமும், வியதீபாதம் யோகம் வரும் நாளில், திருப்பள்ளியெழுச்சியில் என்னைத் தரிசனம் செய்வே¡ருக்கு அனைத்துப் பலன்களும் கிடைக்கும் என்று, அந்த யோகத்திற்கு மகிழ்வையும், நற்பேற்றையும் அளித்தார்.

வல்லமை வாய்ந்த இந்த யோகத்தில் தரிசனம் செய்தால் பதினாறு பேறுகளும் கொண்ட பெரு வாழ்வினை சித்ஸபேசர் அருளுவார்.

வானவியல் சாஸ்திரப்படி, மார்கழி மாதம் தனுர் அல்லது தனுசு மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த ராசிக்கு அதிபதி குரு பகவான். இந்த ராசியில் சூர்யன் சஞ்சரிக்கும்போது, சந்திரன் சூர்யனுக்கு முன்பு வரும்போது, வியதீபாதம் யோகம் ஏற்படுகிறது.

ஸ்ரீ உமாபதி சிவம் அருளிய குஞ்சிதாங்கிரிஸ்தவம் எனும் நூலில் (வியதீபாத யோகம் தோன்றக் காரணமான) சந்திரன், குரு பகவானின் மனைவியான தாரையை மோகித்ததால் ஏற்பட்ட தோஷத்தினை சிதம்பரத்தில் நடராஜரைப் பணிந்து தோஷ நிவர்த்தி செய்துகொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ அப்பைய தீVதர் தனது சிவார்ச்சனா சந்திரிகையில் (தந்த சுத்தி படலம்), வியதீபாத யோகம் வரும் நாளில் பிரம்ம முஹூர்த்தத்தில் சிவனை வழிபடவேண்டும் என வலியுறுத்துகிறார்.

வியதீபாத யோக நன்னாளில் நடராஜப் பெருமானை தரிசனம் செய்வோம், நல்யோகங்கள் மற்றும் வளங்கள் அனைத்தயும் பெறுவோம்.

* நி.த. நடராஜ தீட்சிதர், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
* செல் : 94434 79572, 93456 43077.//

இந்தப் பதிவை எழுதிய தீக்ஷிதருக்குச் சொந்த வலைத்தளம் இல்லாததால் என்னுடைய தளத்தில் போடச் சொல்லி இருக்கார். இது பற்றிய சந்தேகங்கள் இருப்பவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளலாம். நன்றி.

Monday, December 14, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - தென்காசி விஸ்வநாதர்!

குலசேகரபாண்டியனுக்குப் பின்னர் பல ஆண்டுகள், அல்லது நூற்றாண்டுகள் கழித்து வந்த பராக்கிரம பாண்டியன் வடநாட்டின் காசி விஸ்வநாதரின் மேல் அபார பக்தி பூண்டு மனதுக்குள் வழிபட்டு வந்தான். காசி நகரத்து விஸ்வநாதர் கோயிலைப் பற்றிக் கேள்விப் பட்டு அதே போல் இங்கும் ஒரு கோயில் கட்டி அதில் விஸ்வநாதரைப்பிரதிஷ்டை செய்யவேண்டும் என எண்ணினான். அதே நினைப்போடு இருந்த மன்னன் கனவில் காசி விஸ்வநாதரே தோன்றி, அவனது முன்னோர்கள் வழிபட்டு வந்த லிங்கம் அந்த ஊரின் செண்பக வனத்தில் இருப்பதாகவும். கோட்டையில் இருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைப்பின் தொடர்ந்து செல்லுமாறும் பணித்தார். அவ்விதமே செய்த மன்னன் குலசேகரனால் வழிபட்டு வந்த லிங்கத்தைக் கண்டு பிடித்தான். அந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதர் எனப் பெயரிட்டு கோயிலையும் கட்டினான். வடக்கே இருக்கும் காசி விஸ்வநாதர் தெற்கேயும் வந்து அருளுவதால் இந்த ஊரின் பெயரே அதன் பின்னர் தென்காசி என அழைக்கப் பட்டது. இவனுக்கு ஆலோசனைகள் சொல்லி உதவ ஈசனே சிவனடியார் உருவில் வந்து உதவியதாகவும், பின்னர் அந்த அடியார் இந்தக் கோயிலிலேயே தங்கியதாகவும் கூறுகின்றனர். அவருக்கெனத் தனிச் சந்நிதியும் உள்ளது. அந்தச் சந்நிதியில் விக்ரஹம் எதுவும் இல்லாமல் சதுர பீட உருவில் அமைக்கப் பட்டு, அங்கே அடியாரை வணங்கி வருகின்றனர்.

அம்பிகை குழல்வாய்மொழிநாயகி என்னும் உலகம்மை கோயிலுக்குப் பெயரை வழங்கி அருளாட்சி புரிகின்றாள். கோயில் பிராகாரத்தில் ஸ்ரீசக்ர அமைப்புடன் கூடிய பராசக்தி பீடம் உள்ளது. இதையும் தரணி பீடம் என்றே அழைக்கின்றனர். அம்பிகை பூமியில் தோன்றியதால் அவ்விதம் அழைக்கின்றனரோ எனத் தோன்றுகிறது. 40 முக்கோணங்களுடன்கூடிய இந்தப் பீடத்திற்குப் பச்சைப் புடைவை சார்த்தி வழிபடுகின்றனர். ஸ்ரீசக்ர சந்நிதிக்கு எதிரேயே ஒரு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. இந்தக் கோயிலின் மற்றொரு விசேஷம் இங்கே நவகிரஹங்களும் மண்டபத்தினுள் ஒவ்வொரு திக்கையும் பார்த்தவண்ணமும், மண்டபத்துக்கு வெளியே நேர் வரிசையாகவும் காணப்படுகின்றனர். இதன் தாத்பரியம் புரியவில்லை. ஒருவேளை இடைக்காட்டுச் சித்தர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்று இங்கே நடந்திருக்கலாமோ? அவர் தாம் நேரே ஒன்றாக இருந்த நவகிரஹங்களையும் ஒவ்வொரு திசைக்குத் திருப்பினார் என்பார்கள். அதை நினைவு கூரும் விதத்தில் அமைத்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

தில்லையில் நடராஜருக்குக் கணக்குகளை ஒப்பிப்பது போன்றதொரு நிகழ்ச்சி இங்கேயும் நடை பெறுகிறது. இந்தக் கோயிலின் நிர்வாகத்தை ஈசனே நேரே கண்காணிப்பதாக ஐதீகம். ஈசனுக்குத் தனி அரியாசனம் உண்டு. ஆவணிமாதம் முதல் தேதி அன்று சொக்கநாதர் என்ற பெயரோடே அரியாசனம் ஏறும் உற்சவர் முன்னே ஒரு வருஷத்துக் கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப் படுகின்றன. கங்கை நீரால் விஸ்வநாதருக்கு அபிஷேஹம் செய்யவேண்டும் என விரும்பிய மன்னனின் விருப்பத்துக்காக ஈசனே இங்கே கிணறு வடிவில் கங்கையை வரவழைத்தார் என்கின்றனர். இந்தக் கோயிலின் திருப்பணிகளைச் செய்த பராக்கிரம பாண்டியன் கோயில் சரிவர நிர்வகிக்கப் படவேண்டும் என்பதிலும், கோயிலின் பராமரிப்புப் பணிகள் செம்மையாக நடைபெறவேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை காட்டி இருக்கிறான் என்பதை இங்கே உள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. கோயிலினுள் நுழையும் ராஜகோபுரத்தின் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்வெட்டு ஒன்றில், “ காலத்தால் இந்தக் கோயில் சிதைவடையுமானால், அதைச் சரி செய்பவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்குவேன்.” என எழுதப் பட்டுள்ளது. இது தவிரவும், கோயிலுக்கு வரும் பக்தர்களை வணங்கும்விதமாய் மன்னன் கீழே விழுந்து வணங்குவது போன்றதொரு சிற்பம் அம்மன் கோயிலின் நுழைவு வாயிலிலும் அமைத்திருக்கின்றனர். அப்படியும் காலப் போக்கில் இந்தக் கோயில் கோபுரம் இரண்டாய்ப் பிளந்து காட்சி அளித்ததாகவும், பின்னர் 1990=ம் ஆண்டு வாக்கில் புதிய கோபுரம் கட்டப் பட்டதாகவும் சொல்கின்றனர். இந்தக் கோபுர வாசல் காற்றின் விசேஷம் என்னவென்றால் கோபுரத்துக்குள் நுழையும்போதே காற்று நம்மை முன்னோக்கித் தள்ளி உள்ளே கொண்டு சேர்க்கும் வண்ணம் கட்டப் பட்டிருப்பது தான். நுழையும்போது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்று கோபுரத்தைக் கடந்ததும், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசும் என்பதையும் உணரும் விதம் கட்டப் பட்டுள்ளது.

அருமையான சிற்பங்களுடன் கூடிய இந்தக் கோயிலின் பாலமுருகன் சந்நிதி ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் இடையே அமைந்துள்ளது. சோமாஸ்கந்த அமைப்புக் கோயிலாகச் சொல்லப் படுகிறது. தல விருக்ஷங்கள் இரண்டு உள்ளன. ஏற்கெனவே இருந்த செண்பகம் தவிர, பலா மரமும் இங்கே தலவிருக்ஷம் ஆகும்.

Sunday, December 13, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - இலஞ்சி முருகன்.

திருக்குற்றாலத்தில் மெயின் அருவி எனப்படும் கூட்டம் மிகுந்த அருவியையும், மேலே சென்று அங்கே உள்ள அருவியையும் பார்த்துவிட்டோம். இன்னும் மேலேயும் செல்லவேண்டும்தான். ஆனால் மதியம் இரண்டு மணி அப்போவே ஆகி இருந்தது. இன்னும் சித்திர சபை வேறே போகவில்லை. குற்றாலநாதர் கோயிலும் திறக்கவில்லை. இருந்து கோயில் திறந்ததும் தான் தரிசனம் செய்து கொண்டோம். கோயிலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசுத்தம் செய்து வைத்திருந்தார்கள். சித்திர சபை போகும் வழியும் கரடு, முரடாக, மலைப்பாதை தானே? முன் யோசனை இல்லாமல் செருப்பு அணியாமல் சென்றுவிட்டோம். போகப் போகப் போயிட்டே இருக்கு. அங்கேயும் சித்திரநடராஜரைப் பார்த்து மனம் நொந்து கொண்டு திரும்பினோம். கீழே இறங்கலாமா எனக் கேட்ட வண்டியோட்டியிடம் இலஞ்சிக்குப் போகச் சொன்னோம். இலஞ்சிக்குக் கூட்டிச் சென்றார். அருமையான சுகமான மலைப்பாதை. மிக மிக அழகான சாலை. இயற்கையின் வண்ண விசித்திரங்களோடு, பக்ஷிகளின் கூச்சலும் சேர்ந்து அந்த மாலை நேரத்தையே அழகானதாய் மாற்றிக் கொண்டிருந்தது. குளிர்ந்த சாலை. இருபுறமும் அடர்ந்த மரங்கள். மர நிழலைப் பார்த்தாலே ஒரு துணியை விரித்துப் படுத்துடலாமானு எண்ணம். அவ்வளவு தண்மை.

கோயிலில் தீபாராதனை நடக்கும் சமயம். மாலை வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன. மாமனைத் தள்ளிவிட்டு அங்கே தந்தையைக் கொண்டு வந்த சாமர்த்தியசாலியான முருகனைக் கண்ணாரப் பார்க்க முடிந்தது. அநேகமாய் எல்லாக் கோயில்களிலுமே நெரிசல் இல்லாமையால் அருமையான தரிசனம். இந்த இலஞ்சிக் கோயிலையும், ஜாத்திரையையும் பற்றிக் கலைமகளில் பள்ளி நாட்களிலேயே படித்திருக்கிறேன். எல்லார்வி என்னும் எழுத்தாளர் எழுதுவார். இலஞ்சியைப் பற்றி அவர் வர்ணித்திருந்த அழகு இப்போது இருக்காதுதான். என்றாலும் இன்னும் ஒன்றும் மோசம் ஆகவில்லை. கோயிலும் அழகான சூழ்நிலையில் அமைந்துள்ளது. எதிரே மலைகள், மலைகள், பள்ளத் தாக்குகள். அங்கே நின்று படம் எடுக்கணும்னு தான் ஆசை. ஆனால் எடுக்க விடவில்லை.


ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோயில் எனப்படுகிறது இலஞ்சி. இங்கு ஓடும் நதியே தீர்த்தமும் ஆகும். நதியின் பெயர் சித்ராநதி ஆகும். மகிழமரத்தைத் தலவிருக்ஷமாய்க் கொண்ட இந்த ஊரின் ஈசன் அகத்தியரால் மணலால் பிடிக்கப் பட்டு வணங்கப் பெற்றவர். குற்றால நாதரைத் தரிசிக்க வந்த அகத்தியருக்கு அங்கே பெருமாளே காட்சி கொடுத்ததையும், முருகனின் ஆலோசனையின் பெயரில் வைணவச் சின்னங்கள் தரித்துச் சென்றதையும் குற்றாலம் பற்றிய பதிவில் பார்த்தோம். குற்றாலத்தில் தரிசனம் கிடைக்காத அகத்தியர் இலஞ்சி வந்து முருகனை வேண்ட, முருகனும் அருள் புரிகிறார். அங்குள்ள சிற்றாற்றின் கரையிலேயே குமரனுக்கு அருகேயே அவர் தந்தைக்கும் வெண்மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டார் அகத்தியர். அகத்தியர் அவ்வாறு பூஜை செய்த லிங்கமே இன்றும் இருவாலுக நாயகர் என்னும் பெயருடன் வழங்கப் படுகிறார். இங்கே ஈசனின் அருள் கிடைத்ததுமே அகத்தியர் திரும்பக் குற்றாலம் செல்கிறார்.

இங்குள்ள குமரன் இளமை பொருந்தியவனாகச் சொல்கின்றனர். கட்டிளம் காளையாகக் காட்சி அளிக்கும் தமிழ்க் கடவுள் இவ்விதம் இங்கே தோன்றியமைக்கும் காரணம் சொல்கின்றனர். திரிகூடமலையின் வடகீழ்த்திசையில் காசியபர், கபிலர், துர்வாசர் மூன்று முனிவர்களும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். பலவேறு தத்துவங்களையும், அதன் நுணுக்கங்களையும் ஆய்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்களுக்குள் ஒரு சந்தேகம். இவ்வுலகம் இல் பொருளா? உள் பொருளா என்பதே! கபிலர் இல் பொருள் எனத் தன் வாதத்தை நிலைநாட்ட, காசியபரும், துர்வாசரும் முத்தொழில்களையும் செய்யும் ஈசன் இல்லாது இல் பொருள் தோன்றுவது எங்கனம் எனக் கேள்வி எழுப்பினர். உலகம் உள் பொருளே எனச் சொல்ல, கபிலரும் நன்கு யோசித்து அவர்கள் கருத்தில் உண்மை இருப்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறார். ஆனாலும் மூவருக்கும் மீண்டும் வாதம் ஆரமபித்தது. உள் பொருளான உலகின் உண்மைப் பொருள் யார் என்று வாதம் புரிந்து கபிலர் திருமாலே எனச் சொல்ல பிரம்மபுத்திரனான காசியபரோ, பிரம்மனே எனச் சொல்ல , ருத்ராம்சமான துர்வாசரோ ருத்ரரே எனச் சொல்ல குழப்பம் ஏற்பட்டது.

குழப்பத்தைத் தீர்க்கவேண்டும், அதற்கென நடுநிலை வகிக்கும் ஆள் வேண்டுமே. யாரைக் கூப்பிடுவது என யோசித்து, யாரேனும் ஒரு இளைஞனே தகுதியானவன் என்று எண்ணுகின்றனர். அப்போது குமரக் கடவுள் ஓர் கட்டிளம் காளையாக அவர்கள் முன் தோன்றினான். (சிலர் கபிலரும், துர்வாசரும் முருகனை வேண்டியதாகவும் கூறுவார்கள்). அவன் தன் உண்மை உருவை அவர்கள் மூவருக்கும் காட்டி ஆதிப்பரம்பொருள் தாமே என்றும், மூவினையும் செய்யும் மும்மூர்த்திகளாகத் தன்னை மூன்று முனிவர்களிடமும் காட்டியும் யாமே படைத்தல், காத்தல், அழித்தல் முத்தொழிலையும் செய்பவர் என உணர்த்தினார். அவரை வணங்கிய முனிவர்கள் வழிபட்ட இடத்திலேயே அதே கட்டிளம் காளைக் கோலத்தில் இன்றளவும் நின்றுகொண்டு வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளுகின்றான் முருகன்.

இலஞ்சியில் இருந்து வரும் வழியில் தான் மற்றொரு முருகன் கோயிலும் அருகிலிருந்த இன்னொரு மலையில் இருப்பது தெரிய வந்தது. நேரமின்மையால் செல்லவில்லை. தென்காசி போயிட்டுத் திருநெல்வேலி திரும்பவேண்டும். அங்கே இன்னும் நெல்லையப்பரைப் போய்ப் பார்க்கவில்லை. ஆகையால் நேரமும் கிடையாது. மறுநாள் விட்டுப் போன கோயில்களைப் பார்த்துக் கொண்டு ஊர் திரும்பும் திட்டம்.

வண்டியைத் தென் காசிக்கு விடச் சொன்னோம். தென்காசி திருநெல்வேலியில் இருந்து அறுபது அல்லது எழுபது கிலோமீட்டருக்குள் தான் இருக்கிறது. திருநெல்வேலிச் சீமையைப் பாண்டியர்கள், (பழைய???) ஆண்டு வந்தபோது கட்டிய கோயில் இது. முதலில் இந்தக் கோயிலை எழுப்பும் முன்னர் இங்கே செண்பகவனமாக இருந்திருக்கிறது. குலசேகரபாண்டியன் என்னும் மன்னன் காலத்தில் முதன்முதல் இந்தக் கோயில் கட்டப் பட்டுள்ளது. எந்தக் குலசேகரபாண்டியன் எனச் சரியாய்த் தெரியவில்லை. பெரிய அளவில் கோயில் இல்லாமல் செண்பக வனத்தில் லிங்கத்தை அமைத்து மன்னன் வழிபட்டிருக்கிறான். மக்கட்பேறு இல்லாத மன்னனுக்கு இங்கே இருந்த ஒரு மகிழமரத்தடியில் குழந்தை ஒன்று கிடைத்தது. பெண் குழந்தை. குழல்வாய்மொழி எனப் பெயரிட்டுத் தன் மகளாகவே அந்தக் குழந்தையை வளர்த்து வந்த மன்னன், நாளாவட்டத்தில் குழந்தையாகத் தன்னிடம் வளருவது சாக்ஷாத் அம்பிகையே எனத் தெரிந்து கொள்கிறான். ஈசனுக்கே வாழ்க்கைப் படுவேன் என அந்தப் பெண் தவமிருந்து சிவ வழிபாடுகள் செய்து ஈசனை மணாளனாக அடைந்தாள். மன்னனுக்கு உலகை ஆளும் அம்மையே தனக்குப் பெண்ணாக வந்திருப்பதை எண்ணி எண்ணி வியப்பு அடங்கவில்லை. உலகம்மா, நீயே எனக்கு மகளாய் வந்தனையோ” என உணர்ச்சிப் பெருக்கீட்டில் மன்னன் மனம் உருகினான். நாளாவட்டத்தில் உலகம்மன் என்ற பெயரே நிலைத்துவிட்டது. உள்ளூர் மக்களுக்கு உலகம்மன் கோயில் என்றால் தான் புரியும். கோயிலின் மற்ற வரலாறுகள் நாளை.

Sunday, December 06, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! -குற்றாலம் தந்த ஏமாற்றம்!


வடநாட்டு முனியான அகத்தியர் இறைவன் கட்டளைப்படி தென்னாடு வருகிறார். வடமொழியில் எல்லை தேர்ந்தவர் ஆன அவர் தமிழ் மொழியின் பால் பற்று உள்ளவர். அம்மொழியைச் சிறப்பித்தவர். இவர் வரும் காலை இக்குற்றால மலையில் மஹாவிஷ்ணுவே கோயில் கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். இறைவனின் கட்டளைப்படி வடக்கே இருந்து தெற்கே வந்த அகத்தியர் கோயிலில் தரிசனம் செய்யப் போகச் சிவனடியாரான அவரை கோயிலின் உள்ளே விட அர்ச்சகர் மறுக்கிறார். மனவருத்தத்தோடு நடந்த அகத்தியர் அங்கிருந்து பக்கத்தில் உள்ள இலஞ்சியை அடைகிறார். அங்கே தமிழ்க்கடவுளாம் முருகனின் தாள் பணிகிறார். முருகனோ எனில் விளையாட்டுப் பிள்ளை!அர்ச்சகர்களை ஏமாற்றி விட்டு உள்ளே போகுமாறு அகத்தியருக்கு அறிவுரை கூறி மறைய, அகத்தியரும் துவாதச நாமம் தரித்து பரம வைஷ்ணவராய் மாறிவருகிறார். அவருக்கு அனுமதி கிடைக்கிறது. உள்ளே சென்ற அகத்தியர் தாமே தனியாகப் பூஜை செய்ய வேண்டும்என்று வேண்டிக் கொண்டு கருவறைக்கதவைச் சார்த்திக் கொண்டு, "நின்ற சீர் நெடுமாலாய்க்" காட்சி அளித்த திருமாலைக் கையால் தலையில் அழுத்திக் "குறுகிக் குறுகுக" என்று கைலாச நாதனை வேண்டி நினைக்க குறுகிப் போன திருமால் சிவலிங்க வடிவில் குற்றால நாதன் ஆகிறார்.


இப்படி மாறிய இறைவனைக் குறித்துஅகத்தியரே பாடியது:
"முத்தனே முளரிக் கண்ணா!
மூலம் என்று அழைத்த வேழப்பத்தியின் எல்லை காக்கும்பகவனே!
திகிரியாளா!சுத்தனே! அருள் சூல் கொண்டசுந்தரக் கதுப்பினானே!
நத்தணி செவிய கோலநாடுதற்கரிய நம்பி!" என்று இருவருக்கும் பொருத்தமாகப் பாடித் துதிக்கிறார்.
குற்றால நாதரின் வலப்பக்கத்தில் தனிக்கோயிலில் "குழல்வாய் மொழி அம்மை"கோயில் கொண்டிருக்கிறாள். தலவிருட்சமான குறும்பலா நான்கு வேதங்களும் தவம் செய்து பலா மரரூபமாய் அங்கே இருப்பாதாய் ஐதீகம்.அங்கே ஒரு லிங்கம். இம்மரத்துப் பழத்தை வானரங்கள் தவிர வேறு யாரும் பறித்து உண்ணுவது இல்லை. இறைவன் "குற்றாலம், சமருகம்" என்ற பெயருடைய ஆத்தி மர நிழலிலே குடிகொண்டதால் குற்றாலம் என்ற பெயர்
உண்டாயிற்று என்று சொல்கிறார்கள். மலை அதிக உயரம் இல்லை. 3,000 அடியில்இருந்து 5,000 அடிக்குள் தான் இருக்கும்.மூன்று சிகரங்கள் உள்ளதால் "திரிகூடம்"என்ற பெயரும் உண்டு.

மலைக்காடுகளுக்குச் செண்பகக்காடு எனப்பெயர் உண்டு. நிறைய மூலிகைகள் அடங்கிய மலை என்றும் சொல்கிறார்கள். இம்மலையின் உச்சியில் இருந்து குதித்துவருவது தான் சிற்றாறு. மிக்க உயரத்தில் தேனருவி இருக்கிறதாய்ச் சொல்கிறார்கள்.அதற்கு அடுத்து செண்பக தேவி அருவி.

இங்கே செல்லவும் காடுகளின் வழியாய்த்தான் போக வேண்டி இருக்கிறது.குற்றாலத்தில் சாரல் காலம் மக்கள் கூட்டம் கூடுவதால் அப்போது போய் வருவதுசற்றுப் பாதுகாப்பு என்று கூறுகிறார்கள்.

அதற்குப் பின் தான் தற்சமயம் நாம் பார்க்கும் முக்கிய அருவி என்று சொல்லப்படும் அருவி. சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழும் நீர் இடையில் உள்ள பாறைகளிலும் விழுந்து கீழே விழுவதால் வேகம் குறைவாக இருப்பதால் குளிக்க ஏற்றவாறு உள்ளது. அதுவும் முதலில்
பொங்குமாங்கடலில் விழுந்து பின்னே கீழே விழுகிறது.

"வானரங்கள் கனி கொடுத்து
மந்தியோடு கொஞ்சும்மந்திசிந்து
கனிகளுக்குவான்கவிகள் கெஞ்சும்தேனருவித்
திரை எழும்பிவானின் வழி ஒழுகும்செங்கதிரோன்
பரிக்காலும்தேர்க்காலும் வழுகும்"

குற்றாலக் குறவஞ்சியின் இந்தப் பாட்டைப் படித்த பள்ளி நாட்களில் இருந்தே குற்றாலத்தைப் பற்றிய கனவுகளில் இருந்த எனக்கு இப்போதைய குற்றாலம் ஏமாற்றத்தையேஅளித்தது. சுட்டுப் பொசுக்குகிற வெயிலில் முக்கிய அருவியில் குளித்துக்கொண்டிருந்த மக்களின் கூச்சல் அருவியின் ஓசையை அமுக்குகிறது. இருக்கிறது, இப்போதும் இருக்கிறது பலாவும், மாமரங்களும், நெல்லிக்கனிகளும்,அதை உண்ணும் வானரங்களும். என்றாலும் அதை எல்லாம் அழுத்திக் கொண்டு இப்போது வந்திருக்கும் கட்டிடங்கள் அந்த அழகை மங்கச்செய்கின்றது.
குற்றால நாதரோ என்றால் கேட்கவே வேண்டாம். ஆன்மீக ஐதீகப்படிக் "கு" என்பதை ஒரு பக்கம் இந்தப் பூமியாகவும், இன்னொரு பக்கம் பிறவிப்பிணியாகவும் கொண்டால் "தாலம்"என்ற சொல்லானது அதைத் தீர்க்கும் என்று குறிக்கிறதாய்ச் சொல்கிறார்கள்.இங்கே உள்ள பராசக்தி யோகத்தில் இருக்கிறாள். இவளே மூவரையும் பயந்தாள்எனவும் சொல்கிறார்கள். அதனாலும்இதற்குத் திரிகூடம் என்னும் பெயர்வந்ததாயும் கூறுகிறார்கள். இவ்வுலகம் தோன்ற மூல காரணமாயிருந்த காரணத்தால் "தரணி பீடம்" எனவும் சொல்கிறார்கள். அதைக் குறிக்க ஒரு தொட்டில் இந்தப் பராசக்தி பீடத்தின் சன்னதியில் ஆடுகிறது.
இப்படிப்பட்டகோயில் இன்று இருக்கும் நிலையை எண்ணிப் பார்த்தால் மன வருத்தம் மேலிடுகிறது. என்ன தான் முன் மண்டபம் யாத்திரீகர் தங்க ஏற்பாடு செய்து கட்டி இருந்தாலும் சாப்பாட்டு இலைகளில் இருந்து எல்லா அசுத்தங்களையும் அங்கே பொதுமக்கள் செய்கிறார்கள். கண்டும் காணாத கோயில் சிப்பந்திகள்.

கோயிலில் இருந்து சற்றுத் தூரத்தில் மேலே கொஞ்சம் ஏறிப் போனால் வருகிறது பிரசித்தி பெற்ற "சித்திர சபை". கோயிலின் வடக்கே உள்ள இந்தச் சித்திர சபை அழியும் நிலையில் உள்ளது. அரசின் பாதுகாப்பில் உள்ள இதற்கு உள்ளே செல்லக் கட்டணம் வாங்குகிறார்கள். ஆனால் இந்தக் கோயிலின் எதிரே உள்ள குளமும் சரி, அதன் நடுவில் உள்ள வசந்த மண்டபமும் சரி பாழடைந்த நிலையில்உள்ளது. முழுதும் சித்திரங்களால் நிறைந்த இந்தக் கோயிலில் "நடராஜர்" சித்திர உருவில் காட்சி அளிக்கிறார்.மூலிகைகளைக் குழைத்துத் தீட்டிய வண்ணங்கள் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இவற்றில் நம் மக்கள் கைவண்ணம் வேறே! அவர்களின் அன்பைக் காட்டிக் கொள்ள இந்தச் சித்திரங்கள் தான் கிடைத்ததா புரியவில்லை. இப்போது சற்றுத் தடுப்புப்போட்டிருந்தாலும் பெரும்பாலான சித்திரங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன. 64 திருவிளையாடல்களைக் காட்டும் சித்திரங்கள் பாதி அழிந்து உள்ளது. நடராஜர் மட்டும் பிழைத்தார். எதோ விட்டு வைத்திருக்கிறார்கள். அரசுமனது வைத்தால் தான் நடராஜரோடுசேர்ந்து எல்லாருக்கும் வழி பிறக்கும். மிகுந்த மனவேதனையோடு திரும்ப
வேண்டியதாயிற்று.