எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, January 29, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம்-2 ஒப்பில் அப்பன் கோயில்


முதல் நாள் ராமசாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு மறுநாள் காலை ஒப்பிலியப்பன் கோயிலில் ஒரு திருமணத்திற்குச் செல்வதற்காகப் போனோம். அங்கே சத்திரத்தில் இருந்து கிட்டே பெருமாள் கோயில் இருந்ததால் அங்கேயும் சென்றோம். ஏற்கெனவே பலமுறை பார்த்திருக்கும் கோயிலே என்றாலும் கோயில்கள் பற்றி எழுத ஆரம்பிச்ச இத்தனை நாட்களில் இப்போத் தான் போகிறேன். கோயில் ஆயிரம் வருஷங்களுக்கும் மேல் பழமையானது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஈடாக இவரைச் சொல்லுவார்கள். இவருக்கும் வெங்கடாசலபதி சுப்ரபாதம் போல் தனியாக ஒப்பிலியப்பன் சுப்ரபாதம் உண்டு. 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. இந்தக் கோயிலை பொய்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்திருக்கின்றனர்.

இதன் பழைய பெயர் திருவிண்ணகரம் ஆகும். இந்தக் கோயிலுக்கு அருகேயே திருநாகேஸ்வரம், நாகநாத ஸ்வாமி கோயிலும் அமைந்துள்ளது. வைகானஸ முறைப்படி வழிபாடுகள் நடக்கும் இந்தக் கோயிலின் நிவேதனத்தில் உப்புச் சேர்ப்பதில்லை என்று சொல்லுவார்கள். அதற்குக் காரணமும் உண்டு. பின் வருமாறு:

மார்க்கண்டேய ரிஷி மகள் வேண்டித் தவம் இருக்கும் வேளையில் பூதேவியோ ஸ்ரீதேவியை மட்டும் மார்பில் தாங்கும் விஷ்ணு நம்மையும் தாங்க மாட்டாரா என எண்ணினாள். அவள் எண்ணம் புரிந்த விஷ்ணு அவளைத் துளசிச் செடியின் அருகே திருத்துழாய் என்னும் திருநாமத்துடன் கூடிய பெண்ணாகப் பிறந்து வளர்ந்து வருமாறும், தாமே அவளைத் திருமணம் செய்து கொள்வோம் எனவும் திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி துளசிச்செடிக்கு அருகே ஸ்ரீயின் அம்சமான பூதேவி குழந்தை வடிவில் கிடக்க, மார்க்கண்டேயர் குழந்தையைத் திருத்துழாய், துளசி எனப் பெயரிட்டு அருமையோடும், பெருமையோடும் வளர்த்துவருகிறார்.

உரிய வயது வந்தது. பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும். அப்போது ஓர் வயதான அந்தணர் அங்கே வந்தார். அவர் மார்க்கண்டேய ரிஷியின் பெண்ணைத் தாம் மணக்க விரும்புவதாய்க் கூற, வெகுண்ட ரிஷியானவர், "என் மகள் மிகச் சிறியவள், அவளுக்கு சாப்பாட்டில் உப்புச் சேர்க்கும் அளவு கூடத் தெரியாது. உப்பே சேர்க்காமல் அவள் சமைக்கும் சாப்பாட்டை நான் சாப்பிடுகிறேன், உங்களால் முடியாது" எனக் கூற, முதியவர் விடவில்லை.


முதியவராக வந்த பெருமாள் கேட்கவில்லை. அடம் பிடிக்கிறார். உங்கள் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று. பெண்ணிடம் கேட்க, அனைத்தும் அறிந்த அவளோ, முதியவரை நான் எங்கனம் திருமணம் செய்வது என மறுக்கிறாள். திகைத்த மார்க்கண்டேயர், தவத்தில் ஆழ, அவருக்கு வந்திருப்பது எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளே எனப் புரிகிறது. பின்னர் திருமணம் கோலாகலமாக நடக்க, மாமனார் வீட்டோடு மாப்பிள்ளையாக அங்கேயே தங்கி இருக்கும்படி மாமனார் வேண்ட பெருமாளும் சம்மதித்துத் தங்குகிறார். துளசிச் செடி மாலையாக மாறி நிரந்தரமாய்ப் பெருமாளின் மார்பை அலங்கரிக்கிறது. இவ்விதம் துளசிக்கும் பெருமாள் முக்கியத்துவம் கொடுத்தார். அப்போது முதல் விஷ்ணு வழிபாட்டில் துளசிக்கு நிரந்தரமான இடமும் ஏற்பட்டது. தன் பெண்ணுக்கு உப்பிட்டுச் சமைக்கத் தெரியாது என முனிவர் கூறியதற்கு ஏற்ப பெருமாளும் தனக்கு உப்புடன் கூடிய உணவு வேண்டாம் என்று சொன்னதாகவும், அதனாலேயே இந்தக் கோயிலில் இன்றளவும் பெருமாளுக்கு உப்பில்லா நிவேதனமே செய்யப் படுகிறது.

இங்கே பெருமாள் ஐந்து கோலங்களில் காட்சி கொடுத்தருளியிருக்கிறார். மூலவர் திருவிண்ணகரப்பன் என்றும், உற்சவர் பொன்னப்பன் என்ற பெயரிலும், மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் என்று பிராகார சந்நிதிகளிலும் பெருமாள் காட்சி கொடுத்ததாகச் சொல்கின்றனர். இவர்களில் முத்தப்பன் சந்நிதி காலப்போக்கில் மறைந்துவிட்டது என்கின்றனர். மூலவரான திருவிண்ணகரப்பன் பாதம் நோக்கித் தம் வலக்கையைக் காட்டிய வண்ணம் அருள் பாலிக்கிறார். அந்த வலக்கையில் "மாம் ஏகம் சரணம் விரஜ" என எழுதப் பட்டிருப்பதாய்ச் சொல்லுகின்றனர்.( எனக்குக் கண்ணாடி போட்டாலே எழுத்துத் தெரியாது, இது சுத்தமாய்த் தெரியலை, சொல்லிக் கேள்வி) அதாவது ஆண்டவனைச் சரணடைபவர்களை நான் காப்பேன் என்று பொருள்படும் வண்ணம், "என்னைச் சரண் என அடைபவர்களைக் காப்பேன்" என எழுதி இருப்பதாகக் கூறுகின்றனர். நம்மாழ்வாரே இவரை யாருக்கும் நிகரில்லா தன்னிகரில்லா, ஒப்பில்லா அப்பன் என அழைத்தவர். அது முதலே இவர் ஒப்பில் அப்பன் என அழைக்கப் பட்டு ஒப்பிலியப்பனாகி இந்தக் கோயில் நிவேதனங்களின் காரணமாக உப்பிலியப்பன் என்ற பெயருக்கு மாறிவிட்டிருக்கிறார்.

அஹோராத்ர புஷ்கரணி என்னும் இந்தக் கோயில் திருக்குளத்தில் பகல், இரவு எந்நேரமானாலும் ஸ்நாநம் செய்யலாம் என்பதும் மரபு. அந்தணன் ஒருவனுக்கு மஹாவிஷ்ணு இந்தப் புஷ்கரணியில் நீராடியதும் பாவம் போக்கியது நள்ளிரவு நேரத்தில் என்றும், அது முதல் இந்தப்புஷ்கரணியில் நீராடுவதற்கு நேரமோ, காலமோ இல்லை என்றும் சொல்கின்றனர். மார்க்கண்டேயர் வழிபட்ட தலமாகையால் இங்கேயும் சஷ்டி அப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேஹம் போன்றவை செய்து கொள்ளுவது சிறப்பாகக் கருதப் படுகிறது. இந்தக் கோயில் பெருமாளுக்குத் திருக்கல்யாண உற்சவமும் பண்ணி வைப்பதாய் பக்தர்கள் பிரார்த்தித்து நிறைவேற்றுகின்றனர். நாங்க போன அன்றும் ஒரு கல்யாண உற்சவம் நடந்து கொண்டிருந்தது. கூட்டமான கூட்டம். ஆனால் சந்நிதியில் தரிசனம் நன்றாகப் பண்ண முடிந்தது. படங்கள் எடுக்க விடவில்லை. வெளியே வெறும் கோபுரத்தை மட்டும்தான் எடுக்கணும்னு அதுவும் எடுக்கவில்லை. :( அநேகமாய் அறநிலையத் துறையின் முன் அநுமதி இருந்தால் மட்டுமே வெளிப்பிரஹாரங்களில் படம் எடுக்க முடியும் என்றார்கள். இனிமேல் முன் கூட்டிக் கேட்டுப் பார்க்கணும்.

Thursday, January 28, 2010

நடந்தாய் வாழி காவேரி! - காவேரி ஓரம் 1 குடந்தை ராமசாமி கோயில்

கும்பகோணத்துக்குப் போய் இறங்கிய அன்றே ராமசாமி கோயிலுக்குப் போனோம். ஒவ்வொரு முறை அங்கே செல்லும்போதெல்லாம் கோயில் வாசலோடு போனாலும் உள்ளே செல்ல முடிந்ததில்லை. அங்கே உள்ள சிற்ப, சித்திரங்கள் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். வெறுமனே பார்த்துட்டு வந்தால் போதுமா? இம்முறை காமிராவும் கையுமாப் போனோம். வழக்கம்போல் சிற்பங்களைப் படம் எடுக்க முடியவில்லை. கூட்டம் இல்லாத நேரம்னு கிடைக்கவே இல்லை. அதென்னமோ எங்க ராசியோ என்னமோ தெரியலை, நாங்க எங்கேயானும் போனால் போதும், கூட்டமே இல்லாமலிருக்கும் அந்த இடம் மக்கள் கூட்டத்தால் வழிய ஆரம்பிக்கும். இங்கும் அதே! ஒருத்தருக்கும் தெரியாமல் எப்படி எடுக்கிறது? போறாக்குறைக்கு ஒரு சுற்றுலாக் கூட்டம் வேறே.

இந்தக் கோயில் கிட்டத் தட்ட ஐநூறு வருடங்கள் பழமையானது என்று சொல்கின்றனர். அயோத்தியில் இருக்கும் ராமர் போல் இங்கே தான் காணமுடியும் என்றும் சொல்கின்றனர். ராமர் தன் குடும்பத்தோடு காட்சி அளிக்கும் ஒரே கோயில் தமிழ்நாட்டிலே இது மட்டுமே என்கின்றனர். நல்ல ஆஜாநுபாகுவாக ராமரும், அவர் அருகே அழகே வடிவான சீதா தேவியும், மற்ற மூன்று சகோதரர்களும் காட்சி அளிக்க அநுமனோ கையில் வீணையுடன் காட்சி கொடுக்கிறார். ராமருக்கு என பல தனிக்கோயில் நம் நாட்டில் இருந்தாலும் பரதனுக்கு என ஒரு கோயில் கேரளாவில் இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். இம்மாதிரி சகோதரர்கள் நால்வரும் சேர்ந்து காட்சி அளிப்பது அயோத்தி தவிர இங்கே தான் என்று பட்டாசாரியார்கள் கூறினார்கள்.

இது தவிர ஒரு பெருமாள் சந்நிதியும் உள்ளது. விநாயகர், விநாயகராகவே நாமங்கள் இல்லாமல் சுற்றுச் சுவரில் காட்சி அளிக்கின்றார். சந்நிதிக்கு வெளியே பிராஹாரத்தில் ராமாயணம் மொத்தமும் அழகான சித்திரங்களால் வரையப் பட்டுள்ளது. மூலிகை வண்ணங்களால் வரையப்பட்டுள்ள அந்தச் சித்திரங்கள் நாயக்கர் காலத்தவை எனச் சொல்கின்றனர். யாருக்கும் அது பற்றிச் சொல்லத் தெரியவில்லை. குறிப்பு ஏதானும் இருக்குமானு தேடினேன், சரியாத் தெரியலை. இன்னொரு முறை பகலில் போய்ப் பார்க்கணும்.

இங்கே ராமரும், சீதையும் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்திருப்பதால் இது ராமரின் திருமணக்காட்சி என்றும் கூறுகின்றனர். அநுமன் ராமாயணத்தைப்பாடிய வண்ணம் காட்சி அளிப்பதாகவும் கூறுகின்றனர். ஸ்ரீ ராமன் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக பூமியில் பிறந்தபோது அவருடைய படுக்கையான ஆதிசேஷன் லக்ஷ்மணனாகவும், சக்கரம் பரதனாகவும், சங்கு சத்ருக்கனனாகவும் பிறந்ததாகச் சொல்லுவார்கள் ஆன்மீகப் பெரியோர்கள். சகோதரர்கள் நால்வரும் ஒற்றுமையாக இருந்ததும் ஒரு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. அதே போல் நால்வரும் ஒரே குடும்பத்து சகோதரிகளையும் மணந்தனர். ராமருடைய பட்டாபிஷேஹக் காட்சிகளைத் தென்னக மக்கள் பார்த்து இன்புற முடியவில்லை என்றே இந்தக் கோயில் இம்மாதிரி வடிவமைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர். படங்களை இங்கே காணலாம்.

யாருக்கும் தெரியாதபடி கொஞ்சம் கஷ்டப் பட்டுத் தான் படங்கள் எடுக்க முடிந்தது. நான் தேர்ந்த திறமைவாய்ந்த போட்டோகிராபரும் இல்லை. ஓரளவு சுமாரான படங்களைக் காணலாம். ராமசாமி கோயில் சித்திரங்கள்

test mail

ராமசாமி கோயில் சித்திரங்கள்

Monday, January 11, 2010

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - முடிவு!

மேற்கண்ட பாடலை முதல்முதல் விபரம் தெரியா வயசிலே படிக்கும்போதே என் கண்களில் கண்ணீர் வந்தது. இப்போ நன்கு புரிந்துகொண்டு படிக்கும்போது கண்ணீர் வரக் கேட்பானேன்! அதே நிலைமையில் தான் சிலருக்கும் இருக்கிறது என்பதும் புரிந்து கொண்டேன். இனி மேலே பார்ப்போமா??

பொன்னம்பலத்தா பிள்ளையின் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமாய்ப் பெருகி வந்தது. நெடுநேரம் அங்கேயே நின்று கொண்டு மனம் உருகிப் பாடிக்கொண்டிருந்ததையும், கோயில் நிர்வாகிகளும், அர்ச்சகர்களும் கண்டுகொண்டனர். பின்னர் ஒருவாறு சமாளித்துக் கொண்ட பிள்ளைவாள் மற்ற சந்நிதிகளையும் தரிசனம் செய்து முடித்துக்கொண்டு ராமநாதபுரம் போய்ச் சேர்ந்தார். அவர் கிளம்பும் முன்பே கிளம்பிய கோயில் அதிகாரி ஒருவர் ராமலிங்க விலாசத்தில் சேதுபதி மன்னரைக் கண்டு உத்தரகோச மங்கையில் நடந்த நிகழ்வுகளைச் சொல்லிவிட்டார். மன்னர் எதுவும் பேசவில்லை. பொன்னம்பலத்தா பிள்ளை திரும்பிவந்ததும், பிரயாணத்தின் செளகரியம், அசெளகரியம் பற்றி மன்னர் விசாரித்தார். பிரயாணம் வசதியாகவே இருந்ததாகவும், கோயிலிலும் தரிசனம் நன்கு கிட்டியதாகவும் பிள்ளைவாள் சொன்னார். சேதுபதி மன்னர் விடாமல், “தாங்கள் கவிஞராயிற்றே? அங்கே ஏதேனும் தோத்திரப் பாடல் புதிதாய்ப் புனைந்தீரா?” என்று பிள்ளையிடம் கேட்டார். பிள்ளை அவர்களின் மனதுக்குள் இது தான் தக்க சமயம், நம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது.

உடனேயே சாமர்த்தியமாய் மன்னரிடம், “அங்கே புதுசாய் வந்திருக்கிறாராமே ஒரு மூர்த்தி?? அவரைத் தரிசித்தேன். அப்போது அங்கே என் கேள்விகளை ஒரு செய்யுளாகச் சொன்னால், என்ன ஆச்சரியம்? அதற்கு விடையும் கிடைத்தது மற்றொரு செய்யுளாக.” என்று ஆச்சரியம் குறையாதவர் போல் சொன்னார். உண்மையில் இப்போது மன்னருக்குத் தான் ஆச்சரியம். “என்ன சொல்லுங்கள், உங்கள் கேள்வியாக எழுந்த செய்யுளையும், அதன் விடையாக வந்த செய்யுளையும் சொல்லுங்கள், கேட்கலாம்.” என்றார் மன்னர்.

பொன்னம்பலம் பிள்ளை, “புற்றெங்கே” என்று ஆரம்பித்துத் தான் பாடிய செய்யுளைச் சொன்னார். பின் எதுவுமே அறியாதவர் போல் இதன் விடையாகக் கிடைத்த செய்யுள் இது, என்று சொல்லிவிட்டு மற்றொரு செய்யுளைச் சொன்னார். அந்தச் செய்யுள்:

”விள்ளுவமோ சீராசை வீடுவிட்டுக் காடுதனில்
நள்ளிருளிற் செண்பகக்கண் நம்பியான் – மெள்ளவே
ஆடெடுக்குங் கள்வரைப் போலஞ்சாதெமைக் கரிசற்
காடுதொறு மேயிழுத்தக்கால்!”

சீராசை என்பது சங்கரநயினார் கோயிலைக்குறிக்கும்.

என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். மன்னர் முகத்தையே பார்த்தார். மன்னருக்குப் புரிந்துவிட்டது. சங்கரன் கோயில் நாயகர் உத்தரகோச மங்கைக்கு வந்த வரலாறைப் பிட்டுப் பிட்டு வைக்கிறார் பொன்னம்பலத்தா பிள்ளை என்பதைப் புரிந்து கொண்டார். மீண்டும் அந்த மூர்த்தம் சங்கரன் கோயிலையே போய்ச் சேரவேண்டும் என்ற தமது ஆசையையும் அவர் இந்த வெண்பா மூலம் வெளிப்படுத்தியதைப் புரிந்து கொண்டார். பிள்ளையைப் பார்த்து, “ மிகச் சாதுர்யமாக நடந்து கொண்டிருக்கிறீர்கள் பிள்ளை அவர்களே! பாராட்டுகிறேன். ஆனாலும் நாயகருக்கு இங்கே என்ன குறை?? கரிசற்காடாக இருந்தாலும் அவருக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. வேளா வேளைக்கு எல்லாம் நடந்தே வருகிறது. கரிசற்காட்டிற்கு வரும்போது அவஸ்தைப் பட்டார் போல! இப்போது செளகரியமாகவே உள்ளார்” என்று முடிக்கப் பார்த்தார்.

பிள்ளை அவர்களோ, “அரசே, உமக்குத் தெரியாதது இல்லை. அவரவர் இடத்தில் அவரவர் இருத்தலே சிறப்பன்றோ? சங்கரன் கோயில் நாயகரைத் திரும்ப அங்கேயே சேர்ப்பிப்பதே முறை” என்று மீண்டும் வேண்டினார். என்ன தோன்றிற்றோ அரசரும் திடீரென, “சரி, உம் விருப்பம் அதுவானால் அப்படியே செய்துவிடலாம்.” என்று சொன்னார். பொன்னம்பலத்தா பிள்ளையின் ஆனந்தம் சொல்லி முடியாது. அரசர் உத்தரவின் பேரில் தக்க உபசாரங்களுடனும், மரியாதைகளுடனும், கொடி, ஆலவட்டம், குடை போன்ற பரிவாரங்களுடனும் சங்கரன் கோயில் நாயகர் உத்தரகோசமங்கையிலிருந்து எழுந்தருளினார். அவருடன் தாமும் போவதாய்க் கூறி பொன்னம்பலத்தா பிள்ளை மன்னரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு மூர்த்தத்தைப் பின் தொடர்ந்து தாமும் சென்றார். முன்னால் ஒரு ஆளை அனுப்பி நாயகர் திரும்ப வருவதையும், சந்திக்கும் இடம் திருமங்கலம் என்றும் சொல்லி ஆறை அழகப்ப முதலியாருக்குச் செய்தி அனுப்பினார். முதலியாரும் மேள, தாளங்களுடனும், சிவாச்சாரியார்களுடனும், மற்ற முக்கிய உத்தியோகஸ்தர்களுடனும், தாமே நேரில் சென்று சங்கரன் கோயில் நாயகரை மட்டுமின்றிப் பொன்னம்பலத்தா பிள்ளையையும் எதிர்கொண்டு வரவேற்றார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பிள்ளை அவர்களைத் தம் நிலையையும் மறந்து இறுகக் கட்டிக் கொண்டு வாய்விட்டு அழுதார் ஆறை அழகப்ப முதலியார். அனைவரும் நாயகரைத் தரிசித்து மனம் உருகிப் பிரார்த்தித்ததோடல்லாமல், விம்மி, விம்மியும் மெய்ம்மறந்தனர்.

பொன்னம்பலத்தா பிள்ளையை வாழ்த்தினார்கள் அனைவரும். நாயகர் மீண்டும் சங்கரன் கோயிலில் தம் யதாஸ்தானத்துக்கு எழுந்தருளினார். அதன் பின்னர் பொன்னம்பலத்தா பிள்ளையின் இந்தச் செயலால் கவரப்பட்ட ஆறை அழகப்ப முதலியார், அதிகாரி, ஏவலாளர் என்ற வேறுபாடின்றி அனைவரோடும் சுமுகமாய்ப் பழகவும் இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. நாயகரும் தம் இடத்துக்கு வந்துவிட்டார். நம் கதையும் முடிஞ்சு போச்சு. கத்திரிக்காயும் காய்ச்சுடுத்து.

Saturday, January 09, 2010

தாமிரபரணிக்கரையில் சிலநாட்களில் சங்கரன் கோயில்! புற்றெங்கே? புன்னை வனமெங்கே????

வந்திருந்த அடியாரில் ஒருவர் திடீரெனத் தன் காலில் விழுந்ததும் சேதுபதி மன்னர் திகைத்துப் போனார். வணங்கிய பொன்னம்பலத்தா பிள்ளை எழுந்தார். உடனேயே,

“சேதுபதியென்று நர சென்மமெடுத்த தாய் கமல
மாதுபதிக்குன்னையன்றி வாயாதே- நீதிபதி
நீயே விசயரகுநாதனினையீன்ற
தாயே யருட்கோசலை!”

என்று சேதுபதி அரசர் விசயரகுநாத சேதுபதியைக் குறித்து ஒரு பாடல் பாடினார். தாங்கள் யார் என விசாரித்தார் சேதுபதி அரசர். மேலும் ஏன் இந்தப் பாட்டைப் பாடி என்னைப் புகழ்கிறீர்கள் என்றும் கேட்டார். பொன்னம்பலத்தாபிள்ளை தம் சுய அறிமுகத்தைச் செய்து கொண்டார். சேதுபதி அரசரின் புகழைப் பற்றிக் கேள்விப் பட்டு அவரைத் தரிசிக்கும் ஆவலில் இருந்ததாகவும், பழநியாண்டவனின் அருளால் இன்று இது நிகழ்ந்ததாகவும் கூறினார். அரசருக்கு இவர் தான் பொன்னம்பலத்தா பிள்ளை என அறிந்தது ஒரு ஆச்சரியம் எனில் அவர் தம்மீது ஒரு பாடல் புனைந்ததும், அதில் தம் தாயைக் கோசலை என்ற பெயரில் விளித்ததும் மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் அரசரின் தாயின் பெயர் உண்மையிலும் கோசலை ஆகும். ஆனால் பொன்னம்பலத்தா பிள்ளையோ அதை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. அந்தப் பாடலில் அவர் சேதுபதி அரசரின் தாயைக் கோசலை என விளித்தது முற்றிலும் தற்செயலாகும். ராமரைப் பெற்றெடுத்த கோசலைக்கு நிகரானவள் என்ற புகழ்ச்சியான சொற்களுக்காகவே சொல்லி இருந்தார் பொன்னம்பலம் பிள்ளை. ஆனால் விஜய ரகுநாத சேதுபதி அரசருக்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம். தன் தாயின் பெயர் இந்தப் பொன்னம்பலத்தா பிள்ளை எவ்விதம் அறிந்தார்? உண்மையிலேயே இவர் மிகுந்த பக்திமானாகவும், சிறந்த கடாக்ஷம் நிறைந்த வித்வானாகவும் இருக்கிறார். அதனால்தான் அவருக்கு நம் அன்னையின் பெயரும் தெரிந்திருக்கிறது. மன்னரின் மனம் மிக மிக மகிழ்ந்தது. இவர் ஸ்தானாதிபதியாக இருக்க உண்மையிலேயே சொக்கம்பட்டி ஜமீன் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது என்றும் எண்ணிக் கொண்டார். பொன்னம்பலத்தா பிள்ளையோ, தம் மனதில் ஏதோ பட்டதால் சொன்னதாகக் கூறினார். அரசருக்கு அவரிடம் மேலும் மதிப்பு அதிகமாயிற்று.

அவரை அமரச் செய்து பேச யத்தனித்த மன்னனிடம் தம்முடன் வந்த அனைவருக்கும் அந்த மரியாதை கிட்டவேண்டும் என பொன்னம்பலத்தா பிள்ளை சொல்ல, அரசர் இன்னும் வியப்பில் ஆழ்ந்தார். இப்படிப்பட்ட ஒரு ஸ்தானாதிபதி இருந்தால் மக்களுக்கு எவ்வளவு மன நிறைவு என்ற எண்ணமும் ஏற்பட்டது மன்னருக்கு. பொன்னம்பலத்தா பிள்ளையுடன் வந்தவர்களில் முக்கியமான சிலருக்கு ஆசனம் அளிக்கச் செய்தார். அரசர்களுக்கு முன் சரியாசனத்தில் அமருவது என்பதே நடக்காத அக்காலகட்டத்தில் சேதுபதி அரசரோடு சரியாசனத்தில் பொன்னம்பலத்தா பிள்ளை அமர்ந்தார். இருவரும் சற்று நேரம் பொது விஷயங்களைப் பேசிக் கொண்டனர். சேதுபதி அரசருக்குப் பொன்னம்பலத்தா பிள்ளையின் அறிவாற்றல் வியப்பில் ஆழ்த்தியது. இவரைப் பற்றிக் கூறும் அனைத்தும் உண்மையே அன்றிக் கட்டுக்கதை அல்ல என்பதையும் புரிந்து கொண்டார். அவரைச் சில நாட்கள் அங்கே தங்கச் சொன்னார். இசைந்த பிள்ளையும் சிலநாட்கள் அங்கே தங்கிக் கொண்டு அங்கிருந்தே பழநிக்குப் போய் முருகனை மனமார வேண்டிக் கொண்டு மீண்டும் ராமநாதபுரம் வந்தார். பின்னர் தம்முடன் வந்தவர்களில் சிலரை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்களை அவரவர் இருப்பிடம் அனுப்பினார். தக்க தருணம் பார்த்துக்கொண்டு காத்திருந்தார்.

ஒருநாள் மன்னரிடம் பேசும்போது, “இந்த சமஸ்தானத்தின் பெரிய கோயில்களைத் தரிசிக்கத் தமக்கு ஆசை என்றும் முக்கியமாய் திரு உத்தரகோச மங்கையைத் தரிசிக்கவேண்டும் என்றும் மணிவாசகப் பெருமான் உருகி உருகிப் பாடிய பல திருப்பாடல்களையும் பாடி அந்தப் பெருமானை வழிபட ஆசை என்றும் தெரிவித்தார். மஹாராஜாவும் இசைந்து அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பொன்னம்பலத்தா பிள்ளையை திரு உத்தரகோச மங்கையை தரிசித்து வரும்படி அனுப்பி வைத்தார். பொன்னம்பலத்தா பிள்ளைக்கு மனம் படபடத்தது. தாம் மேற்கொண்ட கைங்கரியம் நல்லபடியாக முடியவேண்டும். அதற்கு அந்தப் பெருமானே உதவ வேண்டும். உண்மையில் உத்தரகோச மங்கையின் மற்ற மூர்த்தங்களை விட அங்கே தற்சமயம் குடி இருக்கும் சங்கரன் கோயில் நாயகரை அல்லவோ காணவேண்டும்? அதற்காகத் தானே தாம் வந்திருப்பது??? வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கோயிலுக்குச் சென்றார் பொன்னம்பலத்தா பிள்ளை.

ஒவ்வொரு சந்நிதியாகத் தரிசனம் செய்தார். ஆலயக் குருக்களை ஒவ்வொரு மூர்த்தமாகச் சொல்லித் தரிசனம் செய்து வைக்குமாறும் மூர்த்தங்களின் சிறப்புகள், வரலாறு போன்றவற்றையும் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அவ்வாறே ஒவ்வொரு மூர்த்தமாகத் தரிசனம் செய்து வைக்கப் பட்டது. ஆயிற்று. இதோ, வந்தாயிற்று. இதோ, இதோ, இங்கே இருக்கிறாரே சங்கரன் கோயில் நாயகர். பொன்னம்பலத்தா பிள்ளை எதுவுமே தெரியாதது போல் ஒன்றுமே கேட்காமல் குருக்கள் முகத்தைப் பார்த்தார். குருக்களும், “இவர் சங்கரநயினார் கோயிலின் நாயகர்” என்று சொல்லி மூர்த்தத்தை அறிமுகம் செய்து வைத்தார். பொன்னம்பலத்தா பிள்ளையின் மனம், உடல், என அனைத்தும் பதறியது. என்றாலும் மனதைக் கட்டுப் படுத்திக்கொண்டே, “சங்கரன் நயினார் கோயிலின் நாயகரா? இங்கே எப்படி வந்தார்?” என்று மீண்டும் எதுவுமே தெரியாதது போல் கேட்டார். குருக்கள் விளக்கிச் சொன்னார். பொன்னம்பலத்தா பிள்ளையின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது. ஒரு க்ஷணம் அந்த நாயகரை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாமா என்று கூடத் தோன்றியது. சீச்சீ, ஒரு அரசன் தம் அரசை இழந்துவிட்டு மாற்று நாட்டு அரசனின் கீழ் இருப்பது போலல்லவா நம் நாயகர் இங்கே வந்து இருக்கிறார்?? என்ன கொடுமை இது? அவருக்குரிய சிறப்புகளை எல்லாம் விட்டு விட்டு, இங்கே வந்துவிட்டாரே? ஐயனே, உனக்கே இது ஏற்புடையதாய் உள்ளதா?” அடுத்த கணம் அவர் எண்ணமெல்லாம் ஒரு அழகான தமிழ்ப்பாடலாக உருவெடுத்தது.

“புற்றெங்கே, புன்னை வனமெங்கே பொற்கோயிற்
சுற்றெங்கே நாக சுனையெங்கே – இத்தனையும்
சேரத்தாமங்கிருக்கத் தேவ நீதான்றனித்தித்
தூரத்தே வந்ததென்ன சொல்!”

Friday, January 08, 2010

சங்கரன் கோயில் நாயகர் எங்கே! வேலனுக்கு அரோஹரா!

தமக்கு அடங்கிய மற்ற ஸ்தானாதிபதிகளைக் கூப்பிட்டு வைத்துக் கலந்து ஆலோசித்தார் அழகப்ப முதலியார். அனைவரும் ஒரே வார்த்தையாக இது பொன்னம்பலம் பிள்ளை அவர்களால் மட்டுமே ஆகக் கூடிய காரியம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் சொன்னதில் முழு உண்மை இருந்தாலும் அனைவருக்கும் அடித்தளத்தில் அழகப்ப முதலியார் தங்கள் எல்லாரையும் கீழே விழுந்து வணங்கச் செய்தார். ஆனால் பொன்னம்பலப் பிள்ளையிடம் அவர் பாச்சா பலிக்கவில்லை. இப்போது பிள்ளை அவர்களின் தயவை முதலியார் நாடவேண்டுமே. வேண்டும் முதலியாருக்கு என்ற எண்ணமும் உள்ளூர இருக்கத் தான் செய்தது. ஆனாலும் அனைவருக்கும் சங்கரன் கோயில் நாயகர் மீண்டும் சங்கரன் கோயிலுக்கே வரவேண்டுமானால் அது பொன்னம்பலம் பிள்ளையால் தான் முடியும் என்று புரிந்தும் வைத்திருந்தார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் பொன்னம்பலம் பிள்ளையை வரவழைத்தார் அழகப்ப முதலியார். பிள்ளை அவர்களோ தமக்கு சங்கரன் கோயில் நயினார் காணாமல் போன விஷயம் தெரியும் என்றாலும் முதலியாரால் ஆகாததும் ஒன்று உண்டா என்ற எண்ணத்திலேயே பேசாமல் இருந்ததாகச் சொன்னார். விரைவில் நாயகர் வந்துவிடுவார், சங்கரன் கோயிலில் போய்த் தரிசிக்கலாம் என எண்ணி இருந்ததாகவும் சொன்னார்.

அழகப்ப முதலியார் முழு விபரங்களையும் அவரிடம் கொடுத்தார். மேலும் நாயகர் இப்போது உத்தரகோச மங்கை கோயிலில் சேதுபதி ராஜாவின் பாதுகாவலில் பூரண வழிபாடுகளுடன் இருப்பதாகவும் கூறினார். திருநெல்வேலிச் சீமையின் கெளரவத்தைக் காக்கவேண்டும் என்றும் அதற்கு பொன்னம்பலம் பிள்ளைக்கும் பங்கு இருப்பதால் இந்தக் கைங்கரியத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் முதலியார். பொன்னம்பலம் பிள்ளையும் ஒத்துக் கொண்டார். ஆனால் உத்தரகோசமங்கையிலிருந்து எப்படிக் கொண்டு வருவது நாயகரை?? அங்கே யார் போகமுடியும்??? திருடிக் கொண்டு வருவதும் உசிதமாய்த் தெரியவில்லையே என்று கலங்கினார் முதலியார். பொன்னம்பலம் பிள்ளையோ அதைப் பற்றி எல்லாம் கவலை வேண்டாம் என்றும் அதை எல்லாம் தாம் பார்த்துக் கொள்வதாகவும் கூறிவிட்டுத் தமக்குச் சில தக்க மனிதர்களையும், தக்க பொருட்களையும் கொடுத்து உதவினால் போதுமானது என்றார். அங்கே இருந்த மற்ற ஸ்தானாதிபதிகளும் அரண்மனையின் வித்வான்களும் தாங்களும் இந்தக் கைங்கரியத்தில் பங்கு கொள்ள ஆசைப்படுவதாய்த் தெரிவிக்க அவர்களில் பொறுக்கி எடுத்த சிலரோடு கிளம்பினார் பொன்னம்பலம் பிள்ளை.

சேதுபதி மஹாராஜாவுக்கும் பொன்னம்பலம்பிள்ளை ஸ்தானாதிபதியாக இருக்கும் சொக்கம்பட்டி ஜமீனுக்கும் பகை இருந்து வந்தது. நீடித்த பகை. சொக்கம்பட்டித் தலைவரை அடக்க சேதுபதி பலமுறை முயன்றும் முடியவில்லை. இப்படி இருக்கையில் பொன்னம்பலம் பிள்ளை சேதுபதியின் ராஜ்யத்தில் உத்தரகோசமங்கைக் கோயிலில் பலத்த பாதுகாப்புகளுடன் வழிபாட்டில் இருக்கும் சங்கரன் கோயில் நாயகரை எப்படிக் கொண்டு வரப் போகிறார்?? அனைவருக்கும் கவலைதான். பொன்னம்பலம் பிள்ளையோ இவை எதையுமே நினைத்துப் பார்க்காதவர் போல, தம்முடன் வரும் மற்ற ஸ்தானாதிபதிகளோடும், வித்வான்களோடும் சில மேளக்காரர்களையும் கூட்டிக் கொண்டார். சில காவடிகளைத் தயார் நிலையில் ராமநாதபுரம் எல்லைக்கருகில் உள்ள ஊரில் முன்னேற்பாடாக வைக்கச் சொன்னார். அது போல் காவடி முன்னால் சென்றுவிட்டது. பொன்னம்பலம் பிள்ளை மற்றவர்களுடன் பின்னால் சென்றார். ராமநாதபுரம் எல்லையும் வந்தது. முன்னேற்பாட்டின்படி வைக்கப் பட்டிருந்த காவடியைப் பொன்னம்பலம் பிள்ளை எடுத்துக் கொண்டார். மேளக்காரர்களை நாதஸ்வரம் வாசிக்கச் சொன்னார். தவில்கள் முழங்கின. மற்ற வாத்தியக்காரர்கள் அவரவர் வாத்தியங்களை முழக்கச் சொன்னார். பழநிக்குப் பாத யாத்திரை செல்பவர்கள் போல் மற்றவர்கள் அனைவரையும் தயார் செய்தார். தாம் அந்தக் காவடியை எடுத்துக் கொண்டார். ஆவேசம் வந்தாற்போல், "வேலனுக்கு அரோஹரா! கந்தனுக்கு அரோஹரா! அரோஹராண்டி, பழநியாண்டி, அவன் போனாப் போறாண்டி, போனாப் போறாண்டி, முருகன் தானா வராண்டி!” என்று பாடிய வண்ணம் காவடிகளை சுமந்து கொண்டு அனைவரும் நடக்க ஆரம்பித்தனர்.

காவடி சுமக்காத மற்றவர்கள் சேகண்டி அடித்துக் கொண்டும், பழங்களைச் சுமந்து கொண்டும், ஆங்காங்கே தேங்காய் உடைத்துக் கொண்டும், கோஷங்கள் இட்டுக் கொண்டும் வந்தனர். விபூதிப் பைகளில் இருந்து தாராளமாக விபூதி அள்ளி அள்ளிப் பூசப் பட்டது. கூட்டம் ராமநாதபுரத்து எல்லையைத் தொட்டது. சேதுபதி ராஜாவுக்குப் பழநி ஆண்டவரிடம் பக்தி அதிகம். அதிலும் பழநிக்குக் காவடி எடுத்துக் கால்நடையாகச் செல்கின்றவர்கள் ராமலிங்க விலாசத்துக்குள் அனுமதி இல்லாமலே நுழையலாம். நம் விருந்தினர் கூட்டம் ராமலிங்க விலாசத்தை நெருங்கியது. ஒரு ஜமீனை விட்டு மறு ஜமீனுக்குள் நுழைவதற்கே அனுமதி தேவைப்பட்டாலும் பழநிக்குக் காவடி எடுத்துச் செல்வோரை மட்டும் யாரும் தடை சொல்வதில்லை. இதை நன்கு அறிந்து வைத்திருந்த பொன்னம்பலம் பிள்ளை இவ்வாறு பழநியாண்டவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இந்த முடிவை எடுத்திருந்தார். முருகனின் தாய், தந்தையர் அவரவர் வீட்டுக்குப் போய்ச் சேர அந்த முருகன் திருவருள்தான் துணை செய்யவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். காவடியோடு வந்தவர்கள் என்னமோ நூறுபேர்தான். ஆனால் போகப் போக உள்ளூர் மக்கள் கூட்டமும் கூடிவிட்டது.

எல்லாருக்கும் பக்தி பிரவாகம் எடுத்து ஓட பெரிய பெரிய அரோஹரா கோஷத்தோடு நடந்து வந்து ராமநாதபுரம் அரண்மனையின் ராமலிங்க விலாசத்திற்குள் நுழைந்தது. அரசருக்குத் தகவல் போனது. இதுவரை இல்லாத அளவிற்கு பக்தியோடும், சிறப்பான முறையிலேயும் காவடி எடுத்துச் செல்லும் கூட்டம் ஒன்று வந்துள்ளது என்று அரண்மனை அலுவலர்கள் அரசரிடம் தெரிவித்தனர். சேதுபதி ராஜாவும் பழநி பாதயாத்திரை செல்பவர்களுக்குத் தக்க மரியாதைகளும், அவர்களிடமே பழநி ஆண்டவனுக்குக் காணிக்கைகளும் செலுத்துவது வழக்கம். ஆகவே தகுந்த ஏற்பாடுகளுடன் வந்திருப்போரை வரவேற்று மரியாதைகள் செய்யத் தயாரானார். கூட்டம் பெரிதாக இருந்த காரணத்தினால் காவடியுடன் வந்தவர்கள் மட்டுமே உள்ளே சென்றனர். காவடிக்கு மாலை, மரியாதைகள் செய்து வழிபாடுகள் நடத்தி தீப ஆராதனையும் காட்டப் பட்டது. மன்னர் கை குவித்து அனைவரையும் வணங்க, திடீரென மன்னரே எதிர்பாராவண்ணம் காவடி தூக்கும் ஒருவர் மன்னர் காலடியில் விழுந்தார். அவர் பொன்னம்பலம் பிள்ளை. காவடியை அருகிலிருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டு சாஷ்டாங்கமாய் மன்னர் காலடியில் விழுந்து வணங்கினார்.

சங்கரன் கோயில் நாயகரைக் காணோம்!

கேட்கக் கதை போல் இருந்தாலும் இது ஒரு உண்மை நிகழ்ச்சி. பதிவு செய்யப் பட்டது. சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியும் கூட. முதலில் இதைப் பதிவு செய்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்கள்.

முந்நூறு வருடங்களுக்கு முன்பாக சங்கரன்கோயிலின் உற்சவ மூர்த்தியைக் காணவில்லை. திடீரெனக் காணாமல் போயிற்று. அப்போது சங்கரன் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆளுகையின் கீழே இருந்த காலகட்டம். திருநெல்வேலி மக்கள் அனைவருக்கும் சங்கரன் கோயில் நாயகரைக் காணோம் என்ற மனவருத்தம். அருகே இருந்த ராமநாதபுரத்துக்காரர்களுக்கோ, எங்கள் ஆளுகையில் இருந்தவரையில் இம்மாதிரியான ஒன்று நிகழ்ந்ததா?? என்ற எகத்தாளம். மக்கள் மனம் புழுங்கினர்.

அக்காலத்தில் திருநெல்வேலிச்சீமையை ஆண்டவர் நாயக்க மன்னர்களின் பிரதிநிதியான ஆறை அழகப்பமுதலியார் என்பார் ஆகும். ராமநாதபுரமோ சேதுபதி அரசரின் நேரடி ஆளுகைக்கு உட்பட்டது. அதனால் மூர்த்தம் சேதுபதியின் ஆளூகைக்கு உட்பட்ட பகுதிக்குப் போயிருக்கோ என்ற ஐயம். என்றாலும் இதை எவ்வாறு உறுதி செய்துகொள்வது?? ஆறை அழகப்ப முதலியாருக்கு நிம்மதியே இல்லை. தம் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டு தம் புகழுக்கும், பக்திக்கும், இறை வழிபாட்டின் தூய்மைக்கும் பங்கம் ஏற்பட்டதே என மனம் வருந்தித் துடித்தார். சிறந்த சிவபக்தரான அவர் மனம் கசிந்து உருகினார்.” சங்கரன் நயினார் கோயிலின் நாயகரைக் கண்டுபிடித்து அங்கே மீண்டும் பிரதிஷ்டை செய்யும் வரையில் அன்னம் எடுத்துக்கொள்வது இல்லை. இதனால் என் உயிரே போனாலும் சரி. அப்படி என் உயிர் போயிற்றென்றால் இதுவும் ஈசன் அருள் என அதை ஏற்பதே நல்லது. இனி என் வேலை நயினாரைக் கண்டு பிடித்து சங்கரன் கோயிலிலே சேர்ப்பது ஒன்றே.” என்று கடுமையான சபதம் எடுத்துக்கொண்டு சங்கரன் கோயில் நாயகரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.

அவருடைய நண்பர்கள் இம்முயற்சியைச் செய்யவேனும் உடலில் பலம் வேண்டாமா? இத்தகையதொரு கடும் விரதத்தை மேற்கொண்டால் எங்கனம் அலைந்து திரிந்து மூர்த்தத்தைத் தேடுவது? அதோடு ராஜ்ய நிர்வாகம் வேறே இருக்கிறதே? விரதத்தைத் தளர்த்துங்கள் என வேண்டிக் கொண்டனர். திட்டமாய் மறுத்த அழகப்ப முதலியார் மேலும், மேலும் நண்பர்கள் வற்புறுத்தல் தாங்காமல் பால்கஞ்சி மட்டும் எடுத்துக் கொண்டார். இரவிலும், பகலிலும் தூங்காமல் நாயகரைத் தேடும் முயற்சி தொடங்கியது. கடும் முயற்சியின் பேரில் சங்கரன் கோயில் நாயகர் காணாமல் போன அன்றிலிருந்து கோயிலின் அர்ச்சகர்களுள் ஒருவரான சண்பகக்கண்நம்பி என்பவரும் காணாமல் போய்விட்டார் என்று தெரியவந்தது. நன்கு விசாரித்ததில் நம்பியே விக்ரஹத்தைக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்பதும் உறுதியானது.

ஆம், உண்மையில் சண்பகக்கண்நம்பியே அந்தத் திருட்டைச் செய்தார். நாயகரைக் கொண்டு போய் சேதுபதியின் ஆட்சிக்கு உட்பட்ட திரு உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அடகு வைத்துவிட்டார். ஆறை அழகப்பமுதலியார் சேதுபதியின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு வந்து எதுவும் செய்யமுடியாது என்பதை நன்கு தெரிந்து கொண்டே இவ்விதம் செய்திருந்தார். மன்னன் சேதுபதிக்கோ நாயகர் தங்கள் ஆளுகைக்குள் வந்தது தெரிய வரவே, உள்ளூர மனம் மகிழ்ந்தான். அந்த நாயகரை அடகுக்கடையில் இருந்து மீட்டு, உத்தரகோசமங்கை கோயிலிலே அவரை வைத்து வழிபாடுகள் செய்துவர உத்தரவிட்டான். இங்கே ஆறை அழகப்பருக்கு இந்தச் செய்திகள் யாவுமே கிட்டியது. ஒற்றர்கள் அறிந்து வந்து முழுத் தகவல்களையும் கொடுத்தனர். இரு ஆட்சிப் பகுதிக்கும் எப்போது பகையே. நம்மிடம் நட்பு முறையில் சேதுபதி அரசர் இல்லை. ஆகவே அவருக்கு எழுதி வேண்டிப் பெற்றுக் கொள்வது இயலாத காரியம். மேலும் சேதுபதி கேட்பார். மூர்த்தம் உம் ஆட்சியின் கீழே இருந்தபோது அதைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள வக்கோ, திறமையோ அற்றுப் போய்க் களவாட விட்டவருக்கு மீண்டும் இந்த அரிய மூர்த்தத்தைக் கொடுக்க முடியுமா? உமக்கு எதற்கு அவர்? என்று பட்டெனக் கேட்டுவிடுவார். மானமே போய்விடும். சமஸ்தானத்து மந்திரிகளையோ, திவான்களையோ அனுப்பலாமா?

ம்ஹும், அவர்கள் எல்லாம் சேதுபதியின் அதிகாரத்துக்குப் பயப்படுகிறார்களே. மேலும் அவர்கள் போய் சேதுபதியை நேரில் பார்ப்பதும் இயலுமா?? முடியாதென்றோ தோன்றுகிறது. என்ன செய்யலாம்??? அப்போது அந்த சமஸ்தானத்தின் ஆட்சிக்கு உட்பட்ட சொக்கம்பட்டி சமஸ்தானத்தின் ஸ்தானாதிபதியான பொன்னம்பலம்பிள்ளையின் நினைவு வந்தது முதலியாருக்கு. பொன்னம்பலம் பிள்ளை திறமைசாலி. எப்படிப்பட்ட கல்நெஞ்சக்காரரையும் இளக வைக்கும் ஆற்றல் கொண்டவர். ஊற்றுமலை ஜமீந்தாரிணி பூசைத்தாயாரையே ஆனானப் பட்ட வடகரைத் தலைவரோடு சமாதானம் செய்து வைத்தவர் ஆயிற்றே? ஆனால் பொன்னம்பலம் பிள்ளை நம்மை வணங்குவதே இல்லையே? மற்ற ஸ்தானாதிபதிகள் கப்பம் செலுத்த வந்தால் கீழே விழுந்து ஆறை அழகப்ப முதலியாரை வணங்கிவிட்டே செல்வதுண்டு. இந்தப் பொன்னம்பலம் பிள்ளையோ நேரிலும் வருவதில்லை. எங்கேனும் பார்க்க நேர்ந்தாலும் கீழே விழுந்து வணங்குவதும் இல்லை. இவன் பேரில் நடவடிக்கையும் எடுக்க முடியாவண்ணம் கப்பத்தை ஒழுங்காய்ச் செலுத்திவிடுகிறான். இப்போது இவனையா போய் உதவி கேட்பது? அழகப்ப முதலியாரின் தன்மானமும், கெளரவமும் தடுத்தது.

Thursday, January 07, 2010

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்- சங்கரன் கோயில்!

கோயிலின் வடபக்கமாய் கோமதி அம்மனின் தனி சந்நிதி. மதுரை மீனாக்ஷியின் தங்கை என்று அழைக்கப் படும் இவளைக் காணச் செல்லும் முன்னர் மதுரை மீனாக்ஷியை தரிசித்துச் செல்லவேண்டும் என்றும், தரிசித்த பின்னர் திரும்ப மதுரைக்குப் போய் மீனாக்ஷியிடம் நன்றி கூறவேண்டும் என்றும் பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் இப்போது மதுரையில் மீனாக்ஷியை தரிசிப்பது என்பது கனவு என்பதால் அப்படி எல்லாம் செய்யறது ரொம்பக் கஷ்டம். இன்னும் கோமதி அம்மனுக்கு அவ்வளவு மோசமான நிலை ஏற்படவில்லை. நிதானமாய்த் தரிசிக்கலாம். கூட்டம் இருக்கிறது என்றாலும் நின்று தரிசிக்க முடிகிறது. இங்கே மாவிளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. அம்மன் சந்நிதியில் உள்ள பள்ளியறையில் மரகதக்கல் பதிக்கப் பட்டிருப்பதாய்ச் சொல்கின்றனர்.

இங்கே உள்ள பிரஹாரத்தின் ஒரு பக்கமாய் புற்று மண் பிரசாதம் சேமிக்கப் படுகிறது. இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்துப் பற்றுப் போல் நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். கெடுபலன்களும் குறையும் என்று சொல்வார்கள். அம்மனுக்குத் தனித் தேர் ஆடித் தபசு விழாவின் ஒன்பதாம் நாளன்று நடக்கிறது. நாகராஜர் சந்நிதியும் தனியாக உள்ளது. ஆகமமுறைப்படி வழிபாடுகள் நடக்கின்றன. சிவாலய வழக்கப்படி விபூதி, குங்குமப் பிரசாதங்களோடு, விஷ்ணு கோயில் வழக்கம்போல் தீர்த்தமும் இங்கே உண்டு. ஐப்பசியில் திருக்கல்யாணவிழா பெரிய விமரிசையாக நடைபெறுகிறது. அதற்கு முன்பாக ஆடி மாதம் ஆடித்தபசு விழாவும் விமரிசையாக நடைபெறும். உக்கிரபாண்டியனால் அளிக்கப் பட்ட நிலங்கள் இந்தக் கோயிலுக்கு உண்டு. அதன் நினைவாக சித்திரை பிரம்மோற்சவத்தில் உக்கிரபாண்டியனுக்கு ஒருநாள் விழா இன்றும் நடந்து வருகிறது.

உக்கிரபாண்டியன் தவிர பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் பதினைந்தாம் நூற்றாண்டிலும், கெடில வர்மன் என்பவனும் அதிவீரராம பாண்டியனும் முறையே பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளிலும் இந்தக் கோயிலின் திருப்பணிகளைச் செய்து வதிருப்பதாய்க் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. திருநெல்வேலியைச் சார்ந்த வடமலையப்பபிள்ளை என்பவர் இந்தக் கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். மேலும் இந்தக் கோயில் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்திருந்த காலத்தில் அதற்கு நாயக்கர்களின் பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்த ஆறை அழகப்ப முதலியார் என்பவர் இந்தக் கோயிலின் உற்சவர் திடீரெனக் காணவில்லை என்பதும் துயருற்று அதை மீட்க எடுத்த நடவடிக்கைகளைக் கேட்டால் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அது நாளை!!!!

Wednesday, January 06, 2010

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள் - சங்கரன் கோயில்

ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது இந்தக் கோயில். கோயிலின் பெயரே ஊருக்கும் அமைந்துள்ளது. சுமார் நாலு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயில் ஆனையூர் மலையின் கற்களால் கட்டப் பட்டதாய்க் கூறுகின்றனர். ஒரே வளாகத்தில் மூன்று பிரிவுகள் கொண்ட சந்நிதிகள் அமைந்துள்ளன. ஒன்று சங்கரலிங்க ஸ்வாமிக்கான சந்நிதி, அடுத்து ஸ்ரீசங்கரநாராயணருக்கான சந்நிதி, அடுத்து ஸ்ரீகோமதி அம்மனின் கோயில். ஒவ்வொன்றும் தனித்தனிக் கருவறை, அர்த்தமண்டபம், மணி மண்டபம், மஹா மண்டபம், தனித்தனிப் பிரஹாரம் கொண்டு விளங்குகின்றது. கோயிலின் ராஜகோபுரத்தில் ஒன்பது நிலைகள் இருக்கின்றன. ஒன்பதாவது நிலையில் பெரிய மணி ஒன்று வைக்கப் பட்டு இரண்டு நாழிகைக்கு ஒருமுறை அடிக்கும்படி ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாகவும், தற்சமயம் அது செயல்படவில்லை என்றும் சொல்கின்றனர். ராஜகோபுர வாயிலுக்கு நேரேயே சங்கரலிங்கனாரின் சந்நிதி உள்ளது. திருமுறைகள் பொறிக்கப் பட்டிருக்கும் பிரகாரச் சுவர்களைக் காணலாம். ஒரு காலத்தில் நாகர்கள் அதிகம் வழிபட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. அதற்கான புராணக்கதையானது:

காச்யப முனிவரின் மனைவியான கத்ரு என்பவளுக்குப் பிறந்த பாம்புகளுக்கும், மற்றொரு மனைவியான விநதையின் பிள்ளையான கருடனுக்கும் எப்போதும் பகை இருந்து வந்தது. இறுதியில் அனைத்துப் பாம்புகளும் கருடனைச் சரணடைந்தன. ஆதிசேஷனை மஹாவிஷ்ணுவிற்குப் படுக்கையாக்கி, வாசுகியை ஈசனின் ஆபரணம் ஆக்கினார்கள். சங்கனும், பதுமனும் ஈசனுக்கும், விஷ்ணுவுக்கும் பக்தர்கள் ஆனார்கள். என்றாலும் அப்போதும் யார் பெரியவர், விஷ்ணுவா, ஈசனா என்ற சண்டையே இருவருக்கும் ஏற்பட, அத்ரி முனிவர் ஈசனே உயர்ந்தவர் என்று சொல்ல, பதுமன் அதை ஏற்காமல் பூலோகம் வந்து புன்னைவனத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டதாகவும், அனைத்துப் பாம்புவர்க்கங்களும் அங்கே வந்து வழிபட, நாகசுனை ஏற்படுத்தப் பட்டதாகவும் கூறப் படுகிறது. இங்கே சங்கனும், பதுமனும் வழிபட்டபோதும், சங்கரநாராயணராகக் காட்சி தந்து அருள் பாலித்தார் ஈசன். ஆகவே இந்தத் தலத்தில் நாகசுனையில் நீராடி சங்கரலிங்கனாரை வழிபட்டால் நாகதோஷம் நீங்கும் என்றும், சொல்கின்றனர்.

இங்கே உள்ள கன்னிமூலகணபதிக்கும் நாக ஆபரணமே! நாகராஜனுக்குப் புற்றுக் கோயிலும் உள்ளது. சர்ப்பவிநாயகரை வணங்கி நாகராஜனுக்குப் பால், பழம் நைவேத்தியம் செய்து புற்று மண்ணைப் பிரசாதமாக எடுத்துச் செல்வதுண்டு. இந்தக் கோயில் புற்று மண்ணை வீட்டில் வைத்துக் கொண்டால் சுப்புக்குட்டிகளின் தொந்திரவு இருக்காது என்றும் சொல்வார்கள். பரிவார தெய்வங்களில் எல்லாச் சிவன் கோயில்களும் போலவே இங்கும் தேவார நால்வரோடு, மஹாவிஷ்ணு, அறுபத்து மூவர், ஜுரதேவர், பிரம, ஈச, குமார,விஷ்ணு, வராஹ, இந்திர, சாமுண்டி சக்திகள் சப்த கன்னிகளாகவும், கூடவே உக்கிரபாண்டியன்(?), உமாபதிசிவம்(?) ஆகியோரின் சிற்பங்களும், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியரும் அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள நடராஜரின் ஞானநடனத்தைக் காரைக்கால் அம்மையார் ரசித்தவண்ணம் காட்சி அளிக்கிறார். சிவகாமி அம்மை தாளம் போடுகிறாள். சங்கரலிங்கனார் சுயம்பு லிங்கம் என முன்னரே பார்த்தோம். கருவறையிலேயே மனோன்மணி சக்தியாக எல்லாச் சிவன் கோயில்களையும் போல் இணை பிரியாத சக்தி காட்சி அளிக்கிறாள். வாலற்ற பாம்பு வடிவத்திலேயே சிலருக்குக் காட்சி கொடுத்ததால் ஈசன் இங்கே கூழைப்பிரான் என்றும், கூழையாண்டி, கூழைப் புனிதர், கூழைக்கண்ணுதலார் என்றெல்லாம் சொல்லப் படுகிறார். சூரியனும் இங்கே வந்து வழிபடுவதாகவும், அவை முறையே புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் நடக்கும் என்றும் அப்போது சங்கரலிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் முறையே மூன்றுநாட்கள் தொடர்ந்து விழுந்து வணங்குவதைக் காணலாம் என்றும் சொல்கின்றனர். உற்சவ மூர்த்தி உமாமஹேஸ்வரர்.

சங்கரலிங்கனார் சந்நிதிக்கும், கோமதி அம்மன் சந்நிதிக்கும் நடுவே காட்சி அளிப்பது சங்கரநாராயணர் சந்நிதி ஆகும். இது ஒரு தனிக்கோயிலாகக் காட்சி கொடுக்கிறது. திருக்கல்யாணமண்டபம் ஒன்றும் அதில் கண்கவரும் ஓவியங்களும் காட்சி கொடுக்கின்றன. ஈசன் வலப்பக்கம் கங்கையுடன் கூடிய ஜடாமகுடம், நாககுண்டலம், திருநீறணிந்த பொன்னொளிர் மேனியோடும், இடப்பக்கம், ரத்தினக்கிரீடம், மகரகுண்டலம், கஸ்தூரிப் பொட்டு அணிந்த நீலமேக சியாமளனாகவும், ஒரு பக்கம் கொன்றைமாலை, புலித்தோலை அணிந்தும் ,மறுபக்கம் சக்கரம், பொன்னால் ஆன பூணூல், துளசிமாலையுடன் மஞ்சள் வண்ணப் பீதாம்பரம் அணிந்தும் காட்சி கொடுக்கிறார். உற்சவமூர்த்தியும் சங்கரநாராயணரே. அபிஷேஹப் பிரியரான ஈசன் தன்னுடன் இணைந்த விஷ்ணுவிற்காக அபிஷேஹத்தை விட்டுக் கொடுத்துவிட்டார். ஆகையால் இங்கிருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கே அபிஷேஹம் நடக்கிறது. இந்த ஸ்படிக லிங்கம் ஆதிசங்கரர் ஸ்தாபித்தது என்றும், ஸ்ரீசிருங்கேரி பீடாதிபதியான ஸ்ரீநரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ஸ்தாபித்தது என்றும் இருவேறு கருத்துகள் உண்டு. கோமதி அம்மன் சந்நிதி போலவே இங்கும் வசனக்குழிப்பள்ளம் உண்டு. இங்கும் பேய், பில்லி, சூனியம் போன்றவற்றுக்கு வழிபாடுகள் நடத்துவதுண்டு. எல்லாத்துக்கும் மேலே விடுதலைப் போராட்ட முதல் வீரன் ஆன பூலித்தேவன் மறைந்த இடம் இந்தச் சங்கரன் கோயிலில், சங்கரநாராயணர் சந்நிதிக்கு அருகேயே. அங்கே ஒரு கல்வெட்டு ஒன்றும் காணப்படும். பூலித்தேவன் இங்கே வந்து வழிபாடுகள் செய்துகொண்டிருந்த வேளையில் பறங்கியர் கோயிலுக்குப் பிடிக்க வருவதைத் தெரிந்து கொண்டு இங்கிருந்த சுரங்கப்பாதையில் சென்று மறைந்ததாகவும், அதன் பின்னர் திரும்பவே இல்லை என்றும் சொல்லுவார்கள்.

Saturday, January 02, 2010

தாமிரபரணிக்கரையில் சில நாட்களில் சங்கரன் கோயில் 2

நாட்கள் கழிந்தன. கடகராசியில் சூரியன் பிரவேசித்தான். சந்திரன் பூரணமாய்ப் பொலிந்த ஆடி மாதம் பெளர்ணமியில் உத்திரட்டாதி நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் நள்ளிரவு வேளையில் அம்மைக்குக் காட்சி கொடுத்தார் ஈசன். எப்படி??? வலப் பக்கம் புலித்தோல் ஆடை, இடப்பக்கம் மஞ்சள் வண்ணப் பட்டுப் பீதாம்பரம். வலப்பக்கக் கழலில் பாம்பு ஆபரணம், வலப் பக்கம் பொன்வண்ணத் திருமேனி, இடப்பக்கமோ கார்வண்ணத் திருமேனி. வலப்பக்கம் கங்கை தரித்த சடாமகுடம், நாக குண்டலம், திருநீறணிந்த மேனி, இடப்பக்கம் ரத்தின கிரீடம், மகர குண்டலம், கஸ்தூரிப் பொட்டு, இட மேல்கையில் சக்கரமுமாக சங்கரநாராயணர் காட்சி கொடுத்தார். அன்னை புரிந்து கொள்கின்றாள். அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதோர் வாயிலே மண்ணு என்னும் அரும்பெரும் தத்துவத்தை. இதன் பின்னரும் அன்னையின் தவம் தொடர்ந்தது. இம்முறை ஈசனின் சுய உருவைக் காணவேண்டித் தவமிருந்தாள் அன்னை. அவள் தவத்தின் பலனாக ஈசன் அவளைத் திருமணம் செய்து கொண்டார். இதைத் தவிரவும் பல்வேறு புராண, சரித்திர சம்பவங்களையும் குறிப்பிடுகின்றனர்.

ஈசன் இங்கே சங்கரலிங்கமாகவும் லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். அதற்குச் சொல்லப் படும் கதை ஒன்று உக்கிரபாண்டியன் காலத்திலே இந்தக் கோயில் கட்டப்பட்டதாய்ச் சொல்கின்றது. இதற்கான கல்வெட்டுக் குறிப்பும் இருப்பதாய்க் கூறுகின்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் கட்டப் பட்டிருக்கவேண்டும் என அந்தக் கல்வெட்டுத் தகவல்களின்படி அறிகிறோம். முன் காலத்தில் புன்னைவனமாக இருந்த இந்த ஊரில் புன்னை வனத்திற்குக் காவல் காத்து வந்தவன் பெயர் காப்பரையன் என்பவன். இவன் தேவர்களுள் ஒருவன் எனவும் பார்வதி தேவியின் சாபத்தால் பூவுலகில் பிறந்தான் என்றும் சொல்கின்றனர். இந்தக் காப்பரையன் தோட்டத்தைப் பராமரித்து வந்த வேளையில் ஒருநாள் பாம்புப் புற்று ஒன்றை மிகப் பிரயத்தனத்துடன் அகற்ற முற்பட்டான். அப்போது அவன் கைக்கோடரி அந்தப் புற்றில் இருந்த பாம்பு ஒன்றின் மீது பட்டுக் கோடரி துண்டாகிவிட்டது. அதிர்ந்து போன காப்பரையன் மேலும் புற்று மண்ணை நீக்கிவிட்டுப் பார்த்தான், அடியிலே ஒரு லிங்கம் இருப்பதைக் கண்டான். மன்னரிடம் சென்று தெரிவித்தான்.

அப்போது பாண்டிய ஆண்டு வந்த மன்னன் உக்கிரபாண்டியன் மீனாக்ஷியின் பக்தன். இவன் மணலூரைத் தலைநகராய்க் கொண்டே ஆட்சி புரிந்து வந்தான். எனினும் அவ்வப்போது மீனாக்ஷியை தரிசிக்க மதுரை செல்வது உண்டு. அவ்வாறே மதுரை கிளம்பிச் சென்ற ஒருநாளில் அவனது பட்டத்து யானை வழியில் பெருங்கோட்டூர் என்னும் இடத்தை அடைந்ததும் நகராமல் நின்றுவிட்டது. அடம் பிடித்தது. யானைப்பாகனாலும் எதுவும் செய்யமுடியவில்லை. மன்னன் கீழே இறங்கி யானையைச் சமாதானம் செய்து பார்த்தான். தனது பெரிய தந்தங்களால் தரையைக் குத்தி மணலைப் பெயர்த்து எடுத்த யானை அப்படியே படுத்துக் கொண்டுவிட்டது. மன்னனுக்குள் கலவரம் மூண்டது. மன்னனைக் காண்பதற்கெனப் புன்னை வனத்தில் இருந்து வந்த காப்பரையனுக்கு மன்னன் பெருங்கோட்டுரில் இறங்கி இருக்கும் செய்தி கிடைக்கிறது. அங்கே ஓடோடி வந்தான். புன்னை வனத்தில் தனக்கு நேர்ந்த அநுபவத்தைக் கூறினான். அவனுடன் புன்னைவனம் சென்ற மன்னனும் புற்றையும் தாக்கப்பட்டுக் கிடந்த பாம்பையும், லிங்கத்தையும் பார்த்தான்.

மன்னனுக்கு அப்போது அசரீரி மூலம் அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டும்படிச் சொல்ல, மன்னனும் தனது பட்டத்து யானை மூலம் பிடி மண் எடுத்து பெருவிழாக் கொண்டாடிக் கோயில் கட்டினான். அங்கே இந்த லிங்கத்தைத் தவிரவும் சங்கரநாராயணரும், கோமதி அம்மனும் பிரதிஷ்டை செய்யப் பட்டனர். கோ என்றால் பசு என்று அர்த்தம். இங்கே பக்தர்களாகிய பசுக்கள் எனவும் சொல்லலாம். மதிக்கு அர்த்தம் சொல்லவேண்டாம். ஒளி பொருந்திய எனப் பொருள். பக்தர்களாகிய பசுக்களைக் காத்து அருளும் ஒளிபொருந்திய திவ்ய முகம் படைத்தவள் என்ற பொருளிலேயே “கோமதி” என்றும், தமிழில் “ஆ” என்றால் பசு என அர்த்தம் வரும். ஆவுடைநாயகி எனத் தமிழிலும் அழைக்கப் படுகிறாள் இந்த அன்னை. அது மட்டுமா? மதுரை மீனாக்ஷிக்கு சகோதரி எனவும் அன்பாக அழைக்கப் படும் இந்த அன்னை கிரியா சக்தியாகச் சித்திரிக்கப் பட்டிருப்பதாயும் கூறுவார்கள். யோகமுறைப்படி மதுரை மீனாக்ஷி இச்சா சக்தியாகவும், சங்கரன் கோயில் கோமதி அம்மன் கிரியா சக்தியாகவும், நெல்லை காந்திமதி அம்மன் ஞானசக்தியாகவும் சித்திரிக்கப் பட்டிருப்பதாய் ஆன்றோர் கருத்து. இந்த கோமதி அம்மன் முன்னால் உள்ள ஸ்ரீசக்கரம் மிகவும் சக்தியும் மகிமையும் வாய்ந்தது என்பார்கள். இதைப் பிரதிஷ்டை செய்தவர் திருவாவடுதுறை ஆதினத்தைச் சேர்ந்த ஸ்வாமிகள் ஒருவர்

முதன்முதல் நினைவு தெரிந்து பத்து வயசிலே நான் சங்கரன் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். எனக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனான மொட்டை போட்டு மாவிளக்குப் போடுதலை இங்கே நிறைவேற்றினார்கள். விபரம் தெரிந்த பருவமாதலால் இந்த ஸ்ரீசக்கரத்தில் பல பெண்கள் உட்கார்ந்து வழிபட்டதையும் பார்க்க நேர்ந்தது. அத்தோடு சில பெண்களும், ஆண்களும் மனநிலை சரியில்லாதவர்கள் இந்தச் சக்கரத்தின் பள்ளத்தில் அமர்ந்து தங்களை மறந்த நிலையில் ஆடுவதையும் கண்டேன். மதுரை மீனாக்ஷி கோயிலிலும் அறுபதுகளின் கடைசியில் இம்மாதிரியான ஒரு நிகழ்வைப் பார்க்க நேர்ந்திருக்கிறது. ஒரு விதத்தில் வெளி உலகின் கஷ்ட, நஷ்டங்கள் பற்றிய அறிவைப் பெற்றேன் என்றும் சொல்லலாம். குழந்தைப் பேறு வேண்டிப் பிரார்த்திப்பவர்களையும் பார்க்க முடியும். இம்முறை சென்றபோது தை மாசமாக இருந்தாலும் முன் சொன்ன அம்மாதிரியான பழக்கங்களை நிறைவேற்றுதல் தடை செய்திருப்பதாய்ச் சொன்னார்கள். ஆகவே ஸ்ரீசக்கரப் பள்ளத்தின் எதிரே அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வந்தவர்களையே பார்த்தோம். அப்பாடானு இருந்தது.


படங்கள் உதவி: கூகிளார் நன்றி.

Friday, January 01, 2010

தாமிரபரணிக்கரையில்(???) சில நாட்களில் சங்கரன் கோயில் 1

“தேவர்க்கெல்லாம் தேவநுயர்
சிவபெருமான்பண்டோர் காலத்திலே
காவலினுலகளிக்கும் – அந்தக்
கண்ணனும் தானுமிங்கோருருவாய்
ஆவலொடருந்தவங்கள் –பல
ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேனி நின்றருள் புரிந்தான் – அந்த
வியப்புறு சரிதையை விளம்புகின்றேன்.””

கோமதி மஹிமை என்ற தலைப்பின் இந்த மூன்றாவது பாடலில் சங்கரன் கோயில் சங்கரநாராயணர் பற்றியும் தவம் புரிந்த அன்னையைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். ஆனால் எட்டாம்பாடல் மூன்றே வரிகளுடன் நின்றுவிட்டது. இந்தப் பாடல் தொகுப்பு முற்றுப் பெறவில்லை. என்ன எழுத நினைச்சாரோ தெரியலை. சங்கரன் கோயிலை பாரதியார் “புகழ் வளர்த்திடும் சங்கரன் கோயில்” என்று சொல்லி இருக்கிறார். உண்மைதான். சங்கரன் கோயில் பாண்டிய நாட்டின் பஞ்சபூதத் தலங்களில் ப்ருத்வி(மண்) தலமாகக் கருதப் படுகிறது. மற்றத் தலங்கள் தேவதானம்(ஆகாயம்), தென்மலை(வாயு), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்த நல்லூர்(நெருப்பு). இந்த சங்கரன் கோயில் ராஜபாளையம் என்னும் ஊருக்குத் தெற்கே அங்கிருந்து ஒருமணிநேரப் பிரயாணம், சுமார் முப்பது மைலில் உள்ளது. ரயில் மார்க்கம் என்றால் விருதுநகர்-தென்காசி மார்க்கத்தில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து அறுபது மைல் இருக்கலாம். இந்தப் பக்கத்தில் எல்லாவீடுகளிலும் ஒரு சங்கரலிங்கமும், ஒரு கோமதியும் இருப்பார்கள். சிலர் ஆவுடையப்பன் என்றோ, ஆவுடைநாயகி என்றோ அல்லது ஆவுடை என்று மட்டுமோ பெயர் வைத்துக் கொள்வார்கள். உள்ளூர் மக்களும், சுற்றுவட்டாரக் கிராம மக்களும் ஆஅவுடையம்மன் கோயில் என்றே சொல்வதாய்ச் சிலர் சொல்கின்றனர்.

சங்கரநயினார் கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. இந்த ஊருக்கு பூகைலாயம் என்ற பெயரும் உண்டு என்கின்றனர். இந்த ஊரில் குடி கொண்டிருக்கும் சங்கரநாராயணர் மேல் போற்றிப் பாடிய பல நூல்கள் இருப்பதாயும் கேள்விப் படுகிறோம். கோமதி அம்மன் மேல் ஒரு பிள்ளைத் தமிழும் பாடப் பட்டிருக்கிறது. எழுதியவர்கள் யாரெனத் தெரியவில்லை. என்றாலும் கோமதி அம்மை தவ மகிமையை அம்மானையாக மதுரை ராமலிங்கம்பிள்ளை என்பவர் பாடியுள்ளார். ஸ்ரீசங்கரநாராயண க்ஷேத்ர மான்மியம் என்ற வடமொழி நூலில் இருந்து மொழிபெயர்க்கப் பட்ட நூலில் இருந்து இந்தக் கோயிலின் தல புராணம் தெரியவருகிறது. திருக்குற்றாலக் குறவஞ்சியில் “புன்னைக்காவு” என்று சொல்லப் பட்ட ஊர் இந்த சங்கரநயினார் கோயில் தான் என்றும் இந்த ஊர் முன் காலங்களில் புன்னைக்காடாக இருந்தது என்றும் சொல்கின்றனர். இதைத் தவிர மேலே சொன்ன பாரதியாரின் கோமதி மகிமை என்னும் ஏழுபாடல்கள் கொண்டு முற்றுப் பெறாத ஒரு தொகுப்பும் கிடைக்கிறது.

இந்தக் கோயிலில் அம்பாள் தவம் இருந்து ஈசனை வழிபட்டதாகப் புராணங்கள் சொல்கின்றன. அம்பாளைத் தவிர, இந்திரன், பைரவர், சூரியன், அக்னி ஆகிய தேவாதிதேவர்களும், அகத்திய முனியும், வழிபட்ட தலம் இது. இந்திரனின் மகனான ஜெயந்தன் சீதாதேவியைத் துன்புறுத்தியதால் இழந்த ஒரு கண்ணின் பார்வையை இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசங்கரலிங்கத்தை வழிபட்டு சுய உருவைப் பெற்றதோடு இழந்த கண்பார்வையும் கிடைக்கப் பெற்றான். உறையூர்ச் சோழன் வீரசேனன், பிரகத்துவஜ பாண்டியன் போன்ற மன்னர்களாலும் வணங்கப்பெற்ற தலம் இது. இனி இந்தக் கோயிலின் தல புராணங்கள் சொல்லும் தகவலைப் பார்க்கலாம்.


இந்தக் கோயில் தலபுராணம் சீவலப்பேரி பாண்டியன் சீவலமாற பாண்டியன் என்பவனால் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டதாய்ச் சொல்கின்றனர். இன்னும் சிலர் அருணாசலக்கவிராயர் என்றும் சொல்கின்றனர். இப்போது தலபுராணம் பார்ப்போமா??? திருக்கைலை, அம்மை, அப்பன் தனித்திருந்த ஒரு நாளில் அம்மை, அப்பனைப் பார்த்து, “ஐயனே, ஹரி, ஹரன் ஆகிய உங்கள் இருவரில் யார் பெரியவர்? யார் சிறியவர்?” எனக் கேட்டாள். அனைத்தும் அறிந்த அம்மைக்கு இது தெரியாமலா இருக்கும்? ஐயன் முகத்தில் குறுநகை பூக்க, அம்மையைப் பார்த்து “அவ்வளவு சுலபமாய்த் தெரிந்து கொள்ளமுடியுமா?? தவம் இயற்று. அதிலும் பூலோகம் சென்று தவம் இயற்று. பூலோகத்தில் பசுக்கள் நிறைந்த புன்னைவனம் சென்று தவம் இயற்று. அங்கே யாம் வருவோம். உன் சந்தேகத்தைத் தீர்த்து வைப்போம்.” என்றார். அம்மையும் புன்னைவனம் சென்று தவத்தில் ஆழ்ந்தாள். தவமும் கலையவில்லை. ஐயனும் வரவில்லை.


டிஸ்கி: இது தாமிரபரணிக்கரையிலே இல்லை. கள்ளபிரான் வந்து கேட்கிறதுக்குள்ளே சொல்லிடறேன். திருநெல்வேலிப் பயணத்திலே இந்த ஊருக்கும் போனோம். அதனால் அந்தத் தலைப்பிலேயே எழுதறேன். :P