எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, June 24, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நடராஜர்! ஆட்டத்தின் வகைகள்!

மற்ற விடங்கர்களைப் பற்றி அறியும் முன்னர் தஞ்சைக் கோயிலின் விடங்கர் பற்றி ஒரு சிறு அறிமுகம். எனக்கும் இது இப்போத் தான் தெரிய வந்தது. ராஜராஜ சோழனின் சிவபக்தி ஈடு இணையற்றது. தன் தலையில் சூடிக்கொண்டிருந்த சோழநாட்டு மணிமகுடத்தை விடவும் அவன் பெரியதாய் மதித்தது ஈசன் திருவடி நீழலையே. எவருக்கும் வணங்கா அவன் சிரம் ஈசன் திருவடியில் தோய்ந்து பதிந்து காணப்படுவதில் பெரு மகிழ்ச்சியும், உவகையும் கொண்டான் அவன். குறிப்பாய்ச் சிதம்பரம் நடராஜாவிடம் பெரும் பக்தி பூண்டவன். தில்லை அந்தணர்களே பரம்பரை, பரம்பரையாகச் சோழ அரசர்களின் தலையில் மகுடம் சூட்டும் உரிமையைப் பெற்றிருந்தது மட்டும் இதன் காரணம் அல்ல. ஆடவல்லான் என அப்பர் ஸ்வாமிகள் அன்புடன் அழைத்த தில்லை நடராஜனின் ஆநந்தக் கூத்தில் மெய்மறந்தான் ராஜராஜன். வடநாட்டிலிருந்து வெற்றி கண்டு வந்த ராஜராஜன் தன் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்க விருப்பமின்றி, அனைத்துப் பெருமையையும், வெற்றியையும் ஈசனுக்கே அர்ப்பணித்துத் தஞ்சைப் பெருங்கோயிலை உருவாக்கினான்.

அங்கே எல்லாமே பெரிது பெரிதாக சிற்பங்கள். பெரிய நந்திகேஸ்வரர், பெரிய ஆவுடையார், பெரிய லிங்க பாணம், பெரிய கருவறைக் கோபுரம் சுற்றுப் பிராஹாரங்களிலும் ஈசனின் பல்வேறு வடிவங்களில் பெரிய சிற்பங்கள் அமைத்தான். அதோடு விமானத்தை இருநூறு அடிக்கு மேல் உயரமாய்க்கட்டி தக்ஷிணமேரு என்றும் பெயர் வைத்திருக்கிறான். உள்ளேயும் தக்ஷிண விடங்கர் என்ற பெயரில் ஒரு மூர்த்தம் உண்டு. சோமாஸ்கந்தர் தான் அவர். மூலஸ்தான மூர்த்தியான அருவுருவான லிங்கத்தின் பிரதிநிதியாக அனைத்துச் சிவன் கோயில்களிலும் காணப்படும் சோமாஸ்கந்த மூர்த்திக்கு இந்தத் தஞ்சைப் பெருங்கோயிலில் தக்ஷிண விடங்கர் என்ற பெயர். என்ன?? குழப்பமா இருக்கா? விடங்கர் என்றால் உளியால் செதுக்காத மூர்த்தத்தைத் தானே சொல்வார்கள்? தஞ்சைக் கோயிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உளியால் தானே செதுக்கி இருக்க முடியும்னு தோணுதா? ஆம், உண்மைதான், இங்கே விடங்கர் உளியால் தான் செதுக்கப்பட்டிருக்கிறார். எனினும் விடங்கர் என்ற பெயரையே ராஜராஜன் இந்த மூர்த்தத்துக்கும் வைத்துள்ளான். பொதுவாய் விடங்கர் என்றாலே வீதி விடங்கரும், திருவாரூரும் தான் நினைவில் வரும். சப்த விடங்க ஸ்தலம் இருந்தாலும் பெருமையும், பெயரும் பெற்ற தலம் திருவாரூரே ஆகும். ஒரு காலத்தில் சோழநாட்டுத் தலைநகராமாகவும் இருந்து வந்தது. ஆகவே பழைய தலைநகரான திருவாரூரை நினைவு கூர மட்டுமின்றி, தன் குலத்து முன்னோர்களான மனுநீதிச் சோழனிலிருந்து திருவாரூரைத் தலைநகராய்க் கொண்டு ஆட்சி புரிந்த அனைத்துச் சோழ மன்னர்களின் நினைவாகவும் இங்கே உள்ள மூர்த்தத்துக்கும் விடங்கர் என்ற பெயரை ராஜ ராஜ சோழன் சூட்டியதாயத் தெரியவருகிறது. தியாகராஜாவை இப்படிப் பெருமைப் படுத்திய ராஜராஜன், நடராஜாவையும் பெருமைப் படுத்தி உள்ளான். இங்கே உள்ள நடராஜ மூர்த்தத்துக்கு “ஆடல்வல்லான்” என்றே பெயராகும். இந்தக் கோயிலின் ஆடவல்லானுக்காக வழிபாட்டில் ஏற்படுத்தப் பட்ட பல வகை உபசாரங்களில் ஆட்டமும், பாட்டமும் முக்கியமாக இருந்து வந்திருக்கிறது. அதிலே சாந்திக் கூத்து என்ற ஒன்றும் இருந்திருக்கிறது. அது என்ன என்று ஆராயப் போனால், உக்ரகாளியை அடக்கிய ஆடவல்லான், அவளைத் தோற்கடித்து, அவளுடைய உக்ரத்தை சாந்தப் படுத்தியதே சாந்திக்கூத்து என்ற பெயரில் வழங்கி வந்ததாய்த் தெரியவருகிறது. அது பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?

இந்த சாந்திக் கூத்தே தற்கால மலையாள நாட்டிய நாடக வகையான கதகளி ஆட்டத்தின் மூலம் என பரமாசாரியாள் அவர்கள் தெரிவிக்கிறார். இவை நாட்டியம் கலந்த நாடக வகையைச் சார்ந்தது என்றும் சொல்கிறார். நாட்டிய, நாடக வகைகள் சாந்திக் கூத்து, விநோதக் கூத்து என இருவகைப் பட்ட்து என்றும், விநோதக் கூத்தில் கொஞ்சம் ஹாஸ்யம், விநோதம், கலந்து பொம்மலாட்டம், கழைக்கூத்து, குடக்கூத்து(கரகாட்டம் போன்ற ஒரு வகை) இவை எல்லாமும் கொஞ்சம் வேடிக்கை, விளையாட்டு கலந்து ஆடப் பட்டதாயும், சாந்திக் கூத்து இவற்றிலிருந்து வித்தியாசப் பட்டதாயும் கூறுகின்றார். சாந்தி கூத்து நாலு வகைகள் என்று தெரிய வருகிறது. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போமா?

சொக்கம்: சுத்த நிருத்தம் என்று சொல்லப் படும் இதில் பாட்டுக்கு அபிநயமாக இல்லாமல் தில்லானா, ஜதிஸ்வரம் போன்ற அடவுகளைப் பிடித்து மனசை உயர்த்தும் வண்ணம் நளினமாய் உடலை வளைத்துக் கொண்டே அதற்கேற்றவாறு கை, கால்களையும் வளைத்துக் காட்டவேண்டும். இவற்றில் 108 கரணங்கள் உண்டெனத் தெரிய வருகிறது. அந்தக் கரணங்களை ஈசன் ஆடும் கோலத்தில் தஞ்சைப் பெருங்கோயிலின் கர்ப்பகிருஹத்தைப் பிரதக்ஷிணம் செய்யும் போது விமானத்தில் இரண்டாம் தளத்தில் அமைக்கப் பட்டிருக்கின்றன. கூர்ந்து கவனிக்கவேண்டும், நாட்டிய சாஸ்திரத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் 108 கரணங்களும் சொல்லப் பட்டிருக்கிறதாயும் தெரிய வருகிறது.

அடுத்து மெய்க்கூத்து: இதில் நாயகன், நாயகி பாவத்தில் இறைவனை வழிபடுவது பற்றியே சொல்லப் படும். ஜீவாத்மாவும், பரமாத்வாவும் ஐக்கியமாகும் பாவத்தில் பாடல்கள் அமைந்துள்ள தேவார, திருவாசகப் பாடல்களைக் கொண்டு அமைக்கப் படும்.

மூன்றாவது அவிநயம்: கவனிக்கவும் அவிநயம். விநயம் என்றால் என்ன அர்த்தமோ அதற்கு மாற்று என இங்கே அர்த்தம் கொள்ளக் கூடாது. அபிநயமே, அவிநயமாக இங்கே ஓரெழுத்து மாற்றிச் சொல்லப் படுகிறது. நவரசங்களையும் அபிநயம் மூலம் வெளிப்படுத்திக் காட்டுவதும் இதன் கீழே வரும். பல்வேறு விதமான அபிநயங்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.

கடைசியாகச் சொல்லப் படுவது நாடகம்: ஒரு பெரிய கதையை எடுத்துக்கொண்டு அதை ஆடல், பாடல்கள், அபிநயங்கள் மூலம் நடித்துக் காட்டுவது. இவற்றில் சில உட்பிரிவுகள் உண்டு. சம்ஸ்கிருதத்தில் உள்ள பாடல்களுக்கு அபிநயித்துக்கொண்டு ஆடிப் பாடுவது ஆரியக் கூத்து எனவும், தமிழில் உள்ள பாடல்களுக்கு ஏற்ற கதையைத் தேர்ந்தெடுத்து ஆடுவது தமிழ்க்கூத்து எனவும் சொல்லப் பட்டது. இதிலே சாந்திக் கூத்து எங்கே இருந்து வந்தது? ஈசனும், காளியும் எங்கே வந்தார்கள்? கொஞ்சம் பொறுக்கவும்.

Friday, June 18, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நடராஜர்!

முசுகுந்தன் கதை அனைவருக்கும் தெரியும். ஏற்கெனவே என்னோட திருவாரூர்ப் பதிவிலே எழுதி இருக்கேன். சிறந்த சிவபக்தன் ஆன "முசுகுந்தச் சக்கரவர்த்தி" தேவேந்திரனுக்குத் தேவாசுர யுத்தத்தில் உதவி செய்தான். அதன் பலனாக அவனுக்குக் கிடைத்தவையே ஏழு விதமான நடராஜத் திருக்கோலங்கள். இவையே வேறுவிதமாயும் சொல்லப் படுகிறது. முசுகுந்தன் பூஜித்து வந்த நடராஜ மூர்த்தத்தைத் தேவேந்திரன் கவர்ந்து கொண்டு செல்ல, முசுகுந்தன் தேவேந்திரனுடன் போரிட்டு வென்றான். அவனின் நடராஜ மூர்த்தம் போலவே மற்றும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்து, முசுகுந்தனிடம் காட்டுகிறான் தேவேந்திரன். உன்னுடையது இவற்றில் எதுவோ நீயே பார்த்து எடுத்துச் செல் எனக் கூறுகிறான். இறை அருளால் சரியான மூர்த்தத்தைக் கண்டறிகிறான் முசுகுந்தன். அதுவே திருவாரூர் தியாகராஜா எனவும், மற்ற மூர்த்தங்களையும் முசுகுந்தனுக்கே தேவேந்திரன் அளித்தான் எனவும் அவை முறையே திருவாரூரைச் சுற்றி ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டதாயும் சொல்லப் படுகிறது.

முதலில் இந்தத் தியாகராஜா பற்றிய ஒரு விளக்கம். மஹாவிஷ்ணு பிள்ளை வரம் வேண்டி ஈசனைப் பிரார்த்திக்கிறார். அப்போது அவர் அம்மையையும் சேர்த்து நினையாமல் ஈசனை மட்டுமே வேண்டியதாகச் சொல்வார்கள். அம்மை அதற்காக மஹாவிஷ்ணுவைக் கோபித்ததாகவும், பின்னர் அம்மையோடு சேர்த்துத் தம் மருமகன் ஆன கார்த்திகேயனையும் சேர்த்து சோ+உமா+ஸ்கந்தனாக மனதுக்குள்ளாகவே ஆவிர்ப்பவித்து ஜபித்ததாகவும் ஐதீகம். அப்போது அவர் மூச்சுக்காற்று வெளியே போகும்போதும், உள்ளே வரும்போதும் ஈசன் ஆடிய அந்தத் தாண்டவமே அஜபா நடனம் எனப்படுகிறது. அந்தச் சமயம் அவர் தம் மனதிற்குள்ளாக ஈசனை இதயத்தில் நிறுத்தி மனதிற்குள்ளாகவே ஜப மந்திரங்களைச் சொல்லி வழிபட்டார். இப்படி வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளாகச் சொன்னதே அஜபா எனப்படும்.

திருவாரூர் - வீதி விடங்கர் - அஜபா நடனம்

வேதாரண்யம் - புவனி விடங்கர் -ஹம்சபாதா நடனம்

நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர் - விசி நடனம்

திருநள்ளாறு - நகர விடங்கர் - உன்மத்த நடனம்

திருக்காரயல் - ஆதி விடங்கர் - குக்குட நடனம்

திருக்குவளை - அவனி விடங்கர் - ப்ருங்க நடனம்

திருவாய்மூர் - நிலா விடங்கர் - கமலா நடனம்

என்று சொல்லப் படுகிறது. பொதுவாக ஈசனின் திருநடனம் 9 வகை எனவும் சொல்லப் படுகிறது. அவை ஆனந்தத் தாண்டவம், காளி தாண்டவம் அல்லது காளி நிருத்தம், கெளரி தாண்டவம், முனி நிருத்தம், சந்த்யா தாண்டவம்,. சம்ஹார தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதம் மற்றும் பிட்சாடனம். இதைத் தவிரத் தஞ்சை மாவட்டத்தின்
திருவெண்காட்டிலும், திருச்செங்காட்டாங்குடியிலும் ஈசனின் நாட்டியக் கோலங்களைப் பார்க்கலாம். திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் ஈசனின் இந்தக் கூத்தை ஐந்து
வகைகளாய்ப் பிரித்துள்ளார். அவை சிவானந்தக் கூத்து, அறிவையும், சுந்தரக் கூத்து, ஆற்றலையும், பொற்பதிக் கூத்து, அன்பையும், பொற்றில்லைக் கூத்து, ஆற்றல் கூடுதலையும், அற்புதக் கூத்து, அறிவு கூடுதலையும் குறிப்பதாய்ச் சொல்லுகிறார்.

சிவானந்தக் கூத்து: திருமந்திரப் பாடல்

"தானந்தமில்லாச் சதானந்த சத்தி மேல்
தேனுந்தும் ஆனந்தமாநடங்கண்டீர்:
ஞானங்கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கானது."

சுந்தரக் கூத்து:

"அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பாலும்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்
கண்டங்கரியான் கருணை திருவுருக்
கொண்டங்கு உமை காணக் கூத்து தந்தானன்றே!"

பொற்பதிக் கூத்து:

தெற்கு வடக்கு கிழக்கு மேற்குச்சியில்
அற்புதமானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனி நடஞ்செய்யுமே!"

பொற்றில்லைக் கூத்து:

"அண்டங்கள் ஓரேழும் அப்பொற்பதியாகப்
பண்டையாகாசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டனிற் சத்தி திரு அம்பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்து கந்தானன்றே!"

அற்புதக் கூத்து:

"இருவருங்காண எழில் அம்பலத்தே
உருவோடருவோடு அருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தனாந்தன்
அருளுருவாக நின்றாடலுற்றானே!"


அஜபா நடனம் ஒரு விளக்கம்: மஹாவிஷ்ணு ஈசனோடு, அம்மையையும், கந்தனையும் சேர்த்து நினைத்து வழிபட்டது பற்றி அந்த மூர்த்தம் சோமாஸ்கந்தராக இருப்பின், ஈசனோடு கூடே, அன்னையும், குமரனும் கூட பெருமாளின் மனத்தரங்கில் அஜபா நடனம் ஆடியதாக அல்லவா வரும்? என்று கேட்கின்றனர். பல தாண்டவ வடிவச் சிற்பங்களிலும், ஈசன் ஆடும்போது அன்னை அருகிருந்து ரசிக்கும்படியான சிற்பங்களைப் பார்த்திருக்கிறோம். அப்படியே இப்போதும் தெரிந்து கொள்ளவேண்டும். மஹாவிஷ்ணுவின் மூச்சுக்காற்றிலே மேலேயும், கீழேயும் ஈசன் எழுந்தாடியதை அருகே இருந்தவண்ணம் உமையும், கந்தனும் பார்த்துக்கொண்டிருந்தனர். இது நம் மனக்கண்ணால் மட்டுமே பார்த்துக் கேட்டு ரசிக்கவேண்டியது. அப்படியே உருவங்களோடு வந்துட்டாங்கனு நினைச்சால் அவ்வளவு தான்!

Wednesday, June 16, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! நடராஜர்!

கெளரி தாண்டவம்: தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தையும், ரிஷிபத்தினிகளின் ஆணவத்தையும் அடக்க பிட்சாடனராய் வந்த இறைவன், தன்னுடன் விஷ்ணுவையும் மோகினி உருவில் அழைத்து வருகிறார். ரிஷி, முனிவர்களின் கர்வம் அடக்கப் படுகிறது. அப்போது இறைவன் மோகினியான திருமாலுடன் ஆடிய ஆட்டமே முதல் ஆட்டம் எனச் சொல்லப் படுகிறது. நாராயணனும், தான் தான், நாராயணியாக இருப்பவளும் தான் தான் என இறைவிக்குப் புரியாதா? உமையொரு பாகத்து இறைவனின் நடனத்தைத் தான் மட்டும் கண்டு களிக்க ஆசைப் பட்டாள் இறைவி, அவளின் ஆசையை நிறைவேற்ற இறைவன் ஆடியது தான் கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது. சைவ ஆகமங்கள் படி இறைவனின் பிரம்மோற்சவத்துடன் இணைத்துச் சொல்லப் படுகிறது இந்தத் தாண்டவம். இதில் நந்தி இறைவனின் வலப் பக்கமும், இடது பக்கம் கெளரியான அம்பிகையும் காணப் படுகிறார்கள். ஆனந்தத் தாண்டவத்தில் இல்லாதபடிக்கு இதில் இறைவனின் இடப்பக்கத்துக் கைகள் ஒன்றில் பாம்பு காணப் படுகிறது.

ஆண்மயில் வடிவில் இறைவன் உறைந்த இடம் மயிலாடுதுறை. இறைவனை அடைய பெண்மயில் உருவில் ஸ்ரீதேவி, சரஸ்வதி துணை புரிய அம்பிகை தவம் செய்த இடம் மயிலாடுதுறை. இறைவியின் தவத்தை மெச்சி அவளை அடைந்த இறைவன், அவளை மகிழ்விக்க ஆடிய ஆட்டமே "கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது என்றும் கூறுகிறார்கள். இந்தக் கோயிலின் இந்தச் சபையை "ஆதி சபை" என அழைக்கிறார்கள். அப்பர் தேவாரத்தின் மயிலாடுதுறை பற்றிய பதிகத்தில் இருந்து இரு பாடல்கள் கீழே காணலாம்.

கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை
உள்ளம் உள்கி யுரைக்குந் திருப்பெயர்
வள்ளல் மாமயி லாடு துறையுறை
வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே.
5.39.1
388

சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென் பைங்கொடி பான்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே

இது தவிர, ராமநாதபுரம் மாவட்டத்துத் திரு உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர்
திரு உருவம் எங்கும் காணக் கிடைக்காத ஒன்று. இந்த மரகதநடராஜரைச் சுய உருவில் காணவேண்டுமானால், மார்கழித் திருவாதிரை அன்று மட்டுமே காண முடியும். மற்ற நாட்களில் அவர் மேல் சந்தனக் காப்பு சாத்தப் பட்டே காண முடியும். இவரை அன்னையின்
வேண்டுகோளுக்கிணங்கி அறைக்குள் அன்னை மட்டுமே காணுமாறு ஆடியதாய்க் கூறுகின்றனர். "அறைக்குள்" ஆடியது திரு உத்தரகோசமங்கையிலும், "அம்பலத்தில்" சிதம்பரத்திலும் ஆடியதாய்க் கூறப்படுகிறது. மாணிக்க வாசகர் இங்கே பாடியருளிய நீத்தல் விண்ணப்பம் முதலிரு பாடல்கள் கீழே காணலாம்.

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105

கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106





இவற்றைத் தவிர எல்லாச் சிவன் கோவில்களிலும் நடராஜ மூர்த்தம் இருந்து வந்தாலும், இந்திரனிடம் இருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியினால் பெறப்பட்ட 7 விதமான நாட்டிய பாவங்களைக் காட்டும் "விடங்க மூர்த்தி"களும் உள்ளனர். நாளை பார்ப்போமா?

Thursday, June 10, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! நடராஜர்!

காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே


திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவம் தனித் தன்மை பெற்று விளங்குகிறது. மற்ற ஊர்த்துவ தாண்டவங்களில் நடராஜரின் வலக்கால் உடம்போடு ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி நின்றாடுவார். திருவாலங்காட்டிலோ, இடக்கால் பாதத்தைச் செங்குத்தாகத் தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்துக்கு நேராக வரும்படியான அமைப்பில் உள்ளது. காளியின் செருக்கை அடக்க ஆடப்பட்ட ஆட்டமே ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப் படும். தில்லையிலும் பொன்னம்பலத்தின் எதிரே உள்ள நிருத்த சபையில் ஊர்த்துவ தாண்டவ சிற்பம் தனி சந்நிதியாக உள்ளதைக் காண முடியும். நெற்றிக்கு நேராகத் திலகம் வைக்கும் பாவனையில் காணப்படும். இதை "லலாட திலகா" என்று சொல்வதுண்டு. இன்னும் சிலர் காதில் அணிந்திருந்த குழையைக் கீழே இருந்து இடக்காலால் எடுத்து, காலாலேயே அணிந்ததாகவும் அதைக் கண்ட காளி தன்னால் அப்படிச் செய்ய முடியாது என வெட்கித் தலை குனிந்ததாகவும் சொல்வார்கள்.

காளியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை என்ன தான் பெண்ணாக இருந்தாலும் காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்து ஆட முடியாது அல்லவா? மேலும் இதில் ஆணாதிக்கம் என்பதெல்லாம் கிடையாது. இறைவன் அவளை ஆட வேண்டாம் எனவும் சொல்லவில்லை. உன்னால் முடியுமா என்பது தான் கேள்வி! முடியும் என்றாலும் பெண்களுக்கு என ஒரு எல்லைக் கோடு உண்டு என்பதை அன்னை தானாகவே வகுத்துக் கொண்டாள். பண்பு என்பது எல்லைக் கோட்டைத் தாண்டாது என்பதையும் உணர்த்தினாள். இதில் வெற்றி, தோல்வி என்பதை விட பெண்ணின் பெருமையும், அவள் தன்னிலையை ஒருக்காலும் மறக்கக் கூடாது என்பதுமே உணர்த்தப் படுகிறது. சக்தியானவள் ஆக்கும் சக்தியாக வெளிப்படுவதே அன்றி, தன்னையும் தன்னிலையையும் மறந்து அழிக்கும் சக்தியாக மாறக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துவதாய் என் கருத்து.

அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.


சம்ஹார தாண்டவம்: எட்டுக் கைகளுடனும், மூன்று கண்களுடனும் காணப் படும் இறைவனின் ஊழிக் கூத்தாக வர்ணிக்கப் படும் இது இறைவன் தனக்குள் இந்தப் பிரபஞ்சத்தை அடக்கும் வேளையில் ஆடப் படும் கூத்தாகச் சொல்லப் படுகிறது. அபஸ்மார புருஷனை அடக்கும் இடக்காலுடனும், வலக்கால் தூக்கிய நிலையிலும், வலக்கைகள் அபய ஹஸ்தத்துடனும், மேலும் சூலம், உடுக்கை,போன்றவற்றுடனும், இடக்கைகளில் மண்டை ஓடு, அக்கினியுடனும் கஜஹஸ்த முத்திரையுடனும் காணப் படுகிறது. வலப்பக்கம் நந்தியும், இடப்பக்கம் கெளரியும் காணப் படுகின்றனர். பிரளய காலத்தில் ஏற்படும் இந்த ஊழிக் கூத்தில் இறைவன் தன்னில் தானே அமிழ்ந்து போய், சகலமும் தானே என்பதை உணர்த்தும் வண்ணம் ஆடுவதாயும், இதுவும் ஒரு வகையான ஆனந்தத் தாண்டவம் தான் என்றும் சொல்லப் படுகிறது.

தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)
ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.

ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.



ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையின் ஒரு நாமம் இந்தப்பிரளயகால நடேசனின் கூடவே சாக்ஷியாக நிற்பவள் என்ற அர்த்தத்தில் வரும். "மஹேச்வர, மஹாகல்ப, மஹா தாண்டவ சாக்ஷிணி" என்பதற்கு இதுதான் அர்த்தம்னு நினைக்கிறேன். (மெளலி, உதவிக்கு வரவும்.)

Monday, June 07, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, நடராஜர்


எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.


உமா தாண்டவம் என்பது அன்னை பார்வதி உடனிருக்கும் கோலத்தில் அமைந்தது. ஒரு கால் அபஸ்மார புருஷனின் மேல் இருக்கும்போது மற்றொரு காலைத் திரும்பி இருக்கும் நிலையில் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டிய வண்ணம் அமைந்திருக்கும் இந்தத் தாண்டவம். காத்தல் தொழிலை நிலைத்திருக்கச் செய்யும் தாண்டவமாய்க் கருதுவார்கள்.

ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருத்துறை அந்தத்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.


காளிகா தாண்டவம்: இரு கண்களுடனும், எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கை போன்றவையும், இடப் பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப் படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. ஐந்தொழில்களையும் குறிக்கும் நடனம் காளிகா தாண்டவம் எனப் படுகிறது. இது திருநெல்வேலியில் காணப்படுகிறது. திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டம் "காளிகா தாண்டவம்" எனச் சிலரால் சொல்லப் படுகிறது. இது தவிர தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் காணப் படுகிறது.



கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.



திரிபுர தாண்டவம்: முப்புரங்களையும் தன்னுடைய "அட்டஹாசம்" எனப்படும் சிரிப்பாலும் நெற்றிக்கண்ணாலும் அழித்த இறைவன் ஆடிய ஆட்டமே திரிபுர தாண்டவம் எனப்படுகிறது. 16 கைகளுடன் காணப் படும் இறைவனின் இடப்பக்கம் கெளரியும், வலப்பக்கம் ஸ்கந்தனும் காணப்படுகிறார்கள். திருக்குற்றாலத்துச் சித்திர சபையில் காணப்படுகிறது இந்தத் திரிபுர தாண்டவக்கோலம். ஸ்கந்தனையும், உமை அம்மையும் பயந்து விலகும் கோலத்தில் சில சிற்பங்களையும், ஓவியங்களையும் காணலாம். இது திருக்குற்றாலச் சித்திர சபையில் பிரம்மாவால் வரையப் பட்டதாக ஐதீகம். ஆனால் இப்போ இந்தச் சித்திர சபை நடராஜரின் நிலையை நினைத்தால் ரத்தக் கண்ணீர் வரும். அவ்வளவு மோசமான பராமரிப்பில் இருக்கிறார் சித்திர சபை நடராஜர்.

Tuesday, June 01, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நடராஜர்!

சந்தியா தாண்டவம் என்பது மாலை ஆரம்பிக்கும் நேரத்தில் ஆடப் பட்டது. பொதுவாக சிவனின் தாண்டவங்கள் அனைத்துமே மாலை நேரத்தில் அமைந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் இது கைலை மலையில் ஆல மரத்தின் அடியில் ஆடப் பட்டதாய்க் கூறப் படுகிறது. ஆனந்தத் தாண்டவத்தில் இருக்கும் "அபஸ்மார புருஷம்" (தன்னை மறந்த நிலை?)என்பது இதில் இருக்காது. மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடும் ஆட்டம் "சந்தியா தாண்டவம்" என்று சொல்லப் படுகிறது. மற்ற ஊர்களில் எல்லாம் இடது பதம் தூக்கி ஆடும் நடராஜர் மதுரை வெள்ளியம்பலத்தில் மட்டும் வலது பதம் தூக்கி ஆடுவார். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அன்னை மீனாக்ஷியைத் திருமணம் செய்து கொண்ட சுந்தரேஸ்வரர், திருமணத்திற்கு வந்திருந்த ரிஷி, முனிவர்களை விருந்துண்ண அழைக்க, வியாக்ரபாதரும், பரஞ்சோதியும் தாங்கள் இருவரும் தினமும் தில்லையம்பலத்து ஆடிய ஈசனின் ஆட்டத்தைக் கண்ட பின்னரே உணவருந்தும் வழக்கம் எனச் சொல்ல, புன்னகை புரிந்த ஈசன் மதுரை மாநகரிலே ஒரு வெள்ளியம்பலத்தை உருவாக்கி அங்கேயே திருநடனம் புரிந்தார். அந்த வடிவிலேயே அர்ச்சாவதாரமாக இருந்து மீனாக்ஷி அம்மன் கோயிலின் வெள்ளியம்பலத்தில் ஈசன் அருள் புரிந்து வந்த ஒரு சமயத்தில், விக்கிரம பாண்டியனுக்குப் பின்னர் ராஜசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அவனைப் பற்றித்திருவிளையாடல் புராணம் கூறுவதாவது:

கண்ணகன் புவி இராச சேகரன் பொதுக் கடிந்து செங்கோல் ஓச்சி
வண்ண வெண் குடை நிழற்றுவான் ஆனந்த வடிவமாய தனி மன்றுள்
அண்ணால் ஆடிய திரு நடனத்து அன்பினால் ஆடல் நூல் ஒழித்து ஏனை
எண்ணி மூ இரு பத்து முக்கலையும் கற்று இறை முறை செய்யும் நாளில்.

ராஜசேகர பாண்டியன் ஆடல்கலையைத் தவிர மற்ற கலைகளில் நன்கு தேர்ந்தவன். அவன் அவைக்குச் சோழ நாட்டில் இருந்து வந்த ஓர் புலவன், அவனுக்கு பரதம் தெரியாது எனக் கண்டு ஆச்சரியமடைந்து, அப்போது பூம்புகாரில் ஆண்டு கொண்டிருந்த கரிகால் பெருவளத்தானுக்குத் தெரியாததே இல்லை எனப் பெருமிதமாய்ச் சொன்னான்.

பொன்னி நாடவன் வாயில் உள்ளான் ஒரு புலவன் வந்து அலர் வேம்பின்
கன்னி நாடனைக் கண்டு முன் பரவுவான் கனைகழல் கரிகால் எம்
மன்னவற்கு அறுபத்து நால் கலைகளும் வரும் வாராது உனக்கு ஒன்று
தென்னர் ஏறு அனையால் அது பரத நூல் தெரிந்திலை எனச் சொன்னான்.

இதைக் கேட்ட ராஜசேகர பாண்டியன் மனம் வெதும்பி பரதமும் கற்றுத் தேர்ந்திட வேண்டும் என எண்ணி பரதம் பயிலத்தொடங்கினான்.

ஆடல் நூல் வரம்பு கண்டவர் ஆகி அவ்வழி ஆடாலும் பயின்ற
நாடக நடை தேர் புலவரைத்துருவி நண்ணிய அவர்க்கு எலாம் மகிழ்ச்சி
வீடரும் சிறப்பால் அறுவையும் பூணும் வெறுக்கையும் வெறுத்திடக் கொடுத்துப்
பாடல் வண்டாற்றும் தாரினான் பரதப் பனுவலும் கசடு அறப் பயில்வான்.

உரைத்த இக் கூத்துக் கற்கும் போது தன் உடன் பிறப்பில் சால
வருத்த நோய் எய்தி இந்த வருத்த நான் மறையும் தேறா
அருத்தமாய் அறிவாய் வெள்ளி அம்பலத்து ஆடி நின்ற
நிருத்தனார் தமக்கும் உண்டே என்பது நினைவில் கொண்டான்.

இந்தக் கூத்துக் கற்கும்போது தன் உடலின் அனைத்து அங்கங்களுக்கும் ஏற்படும் நோவை உணர்ந்த ராஜசேகர பாண்டியன், "ஆஹா, இதைக் கற்கும் எனக்கு இவ்வளவு நோவு ஏற்பட்டதெனில், இடையறாது ஆடும் ஈசனின் கால்களும் இதை விட அதிகமாய் நோவு எடுக்குமே" என வருந்தினான். ஈசனின் நிலையை எண்ணி, எண்ணித் துயரம் அதிகம் கொண்டான் ராஜசேகர பாண்டியன். இதற்கு என்ன செய்யலாம் என யோசித்த மன்னன் அன்றிரவு வெள்ளியம்பலம் சென்றான். தன்னிரு கைகளையும் சிரமேல் கூப்பிக்கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருக ஈச்னை வேண்டினான். ஆடிய பாதத்தை ஊன்றி, வலக்காலைத் தூக்கி ஆடும்படியும் அவ்வாறு ஈசன் கால் மாறி ஆடவில்லை எனில் தன் சுரிகை என்னும் வாளை நிலத்தில் ஊன்றி அதன் மேல் வீழ்ந்து தன் உயிரை விடப் போவதாயும் ஈசனிடம் கூறிவிட்டுப் பாண்டியன் வாள் மேல் வீழ்ந்து உயிரை விடத் தயாரானான்.

விண்டக மலர்த்தாள் ஏத்தி வெள்ளி அம் பலத்துள் அன்பர்
தொண்டகம் மலர நின்ற சோதி மெய்ஞ் ஞானக் கூத்தைக்
கண்டக மகிழ்ந்து தாழ்ந்து கண்புனல் சேரச் செம்கை
முண்டக முடிமேல் ஏற்றி முகிழ்த்து நின்று இதனை வேண்டும்.

1480. நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்
குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.

ஆஹா, என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்? தூக்கிய திருவடியை ஊன்றி, ஊன்றிய திருவடியைத் தூக்கிக்கொண்டு கால்மாற்றி ஆடத்தொடங்கினான் கூத்தபிரான்.

நாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி
நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக்
காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும்
வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே.

பெரியாய் சரணம் சிறியாய் சரணம்
கரி ஆகிய அம் கணனே சரணம்
அரியாய் எளியாய் அடி மாறி நடம்
புரிவாய் சரணம் புனிதா சரணம்.

என்று இப்படியே இந்தத் திருநடம் யாரும் காண
நின்று அருள் செய்ய வேண்டும் நிருமலமான வெள்ளி
மன்றவ அடியேன் வெண்டும் வரம் இது என்று தாழ்ந்தான்
அன்று தொட்டு இன்று எம் கோன் அந் நட நிலையாய் நின்றான்.

அதைக்கண்ட ராஜசேகரன் இந்தத் திருநடனம் அனைவரும் காணும் வண்ணம் இப்படியே நின்று அருள் செய்யவேண்டும் என வேண்ட அன்று தொட்டு இன்று வரை வலக்காலைத் தூக்கி ஆடிய நிலையிலேயே ஈசன் காட்சி தருகிறார் மதுரை வெள்ளியம்பலத்தில்.




டிஸ்கி: அந்த அந்த நாட்டியக் கோலத்துக்கு ஏற்ற படங்கள் சரியாகக் கிடைக்கவில்லை. படம் போட ஆரம்பிச்ச பின்னர் நிறுத்தவும் முடியலை. தவறான நாட்டிய முத்திரைகளுடன் கூடிய படங்களுக்கு மன்னிக்கவும்.