எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, April 23, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! உமாமகேசர், தோணியப்பர்!

எல்லாவற்றுக்கும் மேலாக சீர்காழியின் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ள கட்டுமலையின் நடுப்பகுதியில் தோணியப்பராகக் காட்சி தருபவரும் உமாமகேசரே என்கின்றனர். சீர்காழிக்குப் போய்விட்டு வந்து பல மாதங்கள் ஆகியும் அந்தக் கோயில் குறித்த விபரங்களை இன்னமும் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்போது இந்தச் சந்தர்ப்பத்தில் கூறுகிறேன். சீர்காழி என்ற உடனே நம் அனைவருக்கும் திருஞானசம்பந்தர் தான் நினைவில் வருவார் இல்லையா?? இங்கே தான் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் கொடுத்த நிகழ்வு நடந்தது. வியாசரின் மகன் சுகப்பிரம்மம் எப்படிப் பிறவி ஞானியோ அவ்வாறே ஞானசம்பந்தரும் பிறவி ஞானி ஆவார். மேலும் இவரைக் குமரக் கடவுளின் திரு அவதாரம் என்றும் கூறுவார்கள். இப்போ முதலில் பிரம்மபுரீஸ்வரரைப் பார்ப்போம். சீர்காழி மிகப் பழமையான ஊராகும். இங்கே ஈசன் கட்டுமலையில் காட்சி அளிக்கிறான். கீழே ஒரு சந்நிதி, கட்டுமலையில் முதலில் ஒரு சந்நிதி, அதன் மேலே இன்னொரு சந்நிதி. கீழே இருக்கும் சந்நிதியில் ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கின்றார். கட்டுமலையின் நடுவே தோணியப்பர், உமாசகிதராகக் காட்சி அளிக்கிறார். மேலே சென்றால் சட்டைநாதராகக் காட்சி அளிக்கிறார். இந்தச் சட்டைநாதர் வரலாறும் ஆச்சரியமான ஒன்று.

நீதி நெறி வழுவாமல் மஹாபலிச் சக்கரவர்த்தி ஆண்டபோது அவன் இந்திரபதவி அடைந்துவிட்டால் சரியாக இருக்காது என்ற எண்ணத்திலும், மஹாபலிக்கு இருந்த அளவு கடந்த ஆணவத்தை அழிக்கவும், விஷ்ணு வாமனனாக அவதரித்துத் திரிவிக்கிரமனாக மாறி அவனைப் பாதாளத்தில் தள்ளிய வரலாறு அறிவோம். மஹாபலிக்குச் சிரஞ்சீவிப் பட்டம் கொடுத்தாலும், விஷ்ணுவிற்கு இந்த மாதிரியான ஒரு பக்தனைப் பாதாளத்தில் தள்ளியது வருத்தத்தைக் கொடுத்தது. அதன் தோஷமும் அவரைப் பீடித்தது. விஷ்ணுவின் தோலைச் சட்டையாக அணிந்தார் ஈசன். அதுவும் பைரவக் கோலத்தில் இருக்கையில். அஷ்டபைரவர்களின் சக்தியும் சேர்ந்த ஒரே பைரவராகச் சட்டைநாதராகக் காட்சி அளித்தார். ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மியோ மஹாவிஷ்ணு எங்கேயோ காணாமல் போய்விட்டாரோ எனக் கவலை கொண்டு ஆபரணங்கள் பூணாமல், தலைவாரிப் பூச்சூடாமல் விஷ்ணுவையே எண்ணி, எண்ணி வருந்தினாள். அவளிடம் தான் வேறு, விஷ்ணு வேறல்ல எனக் காட்டினாராம் ஈசன். இங்கே அம்பிகையே மஹாலக்ஷ்மி சொரூபமாக சக்தி பீடத்தில் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். இந்தச் சட்டைநாதரைத் தரிசிக்கச் செல்லும் ஆண்கள் மேல்சட்டை அணியாமலும், பெண்கள் தலையில் பூவைக்காமலும் செல்லவேண்டும் என்பது ஐதீகம். அப்படியே பூ வைத்துக்கொண்டு சென்றாலும், அதைக் களைந்து கீழேயே வைத்துவிட்டுக் கட்டுமலையில் மேலே சென்று தோணியப்பரையும், அதற்கும் மேலே சென்று சட்டை நாதரையும் தரிசித்துப் பின்னர் கீழே இறங்கிப் பூவை மறுபடி வைத்துக்கொள்ள அனுமதிக்கின்றனர்.

கோயிலினுள் சென்றதும் ஆஸ்தான மண்டபத்தைக் கடந்ததும் கீழே பிரம்ம புரீஸ்வரர் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கி திருக்குளத்தின் அருகே காண முடியும். வலப்பக்கம் கையில் கிண்ணம் ஏந்தி திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் காட்சி கொடுப்பார். கோயிலின் வடப்பக்கம் அமைந்திருக்கும் திருநிலைநாயகி அம்பிகை சந்நிதிக்கு அருகே காணப்படும் பிரம்ம தீர்த்தத்தில் தான் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த நிகழ்வு நடைபெற்றது. கோயிலைச் சுற்றி வருகையில் வெளிப் பிரகாரத்தில் கோயிலின் அறநிலையத் துறை ஊழியரின் அலுவலகம் எதிரே கட்டுமலை காணப்படும். இந்தக் கட்டுமலையின் காரணமும் சீர்காழியின் வரலாறும் அடுத்துக் காணலாம். உலகம் அழியும் வகையில் ஏற்பட்ட பிரளயகாலத்தில் ஈசன் அறுபத்தி நான்கு கலைகளையும் ஆடையாக அணிந்து, பிரணவத்தையே தோணியாக அமைத்து அதில் அன்னையையும் அழைத்துக்கொண்டு கிளம்ப தோணி சீர்காழிப் பகுதிக்கு வந்ததும், அனைத்து இடங்களும் அழிந்திருக்கும் இந்தப் பிரளய வெள்ளத்தில் அழியாமல் இருந்த பகுதியான சீர்காழியைக் கண்டார். இனி வரப் போகும் யுகங்களின் சிருஷ்டிக்கு இதுவே மூலத்தலம் எனக் கூறி உமை அன்னையுடன் அங்கே தங்கினார். முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் தோற்றுவிக்கப் பட்டு தொழில் தொடங்கினார்கள். பிரம்மா இங்கே ஈசனை வணங்கி சிருஷ்டியை ஆரம்பித்தார். ஆகவே இங்கே குடி கொண்டிருக்கும் ஈசனை பிரம்மபுரீஸ்வரர் என்னும் பெயரால் அழைக்கின்றனர். என்றாலும் பெரும்பாலும் சட்டைநாதர் என்ற பெயரே வழக்கத்தில் இருந்து வருகிறது.

Tuesday, April 19, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! உமா மகேசர்


மன்மதனை அழைத்து ஈசன் மீது மலர்பாணங்களைச் செலுத்தி அவர் அன்னையை மணக்கும்படிச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். ஆனால் மன்மதன் பயந்தான். ஈசனின் கோபம் தன்னை என்ன செய்யுமோ என்று பயந்தான். ஆனால் அனைவரும் வற்புறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் மன்மதன் ஒத்துக்கொண்டான். தென்றலாகிய தேரில் ஏறிக்கொண்டு, கரும்புவில்லையும், மலர்ப்பாணங்கள் ஐந்தையும், தாமரை, அசோகா, மா, மல்லிகை, நீலோற்பலம் ஆகியன. தாழை மடலாகிய வாளையும் எந்திக்கொண்டு கிளம்பினான் மன்மதன். ரதியும் உடன் கிளம்ப அவளையும் அழைத்துக்கொண்டான். கயிலை மலைச் சாரல். ஈசன் கடும் மோனத்தில் இருந்தார். அங்கே காவலுக்கு இருந்த நந்திதேவரைக் கண்ட மன்மதன் அவரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு மேற்கு வாயில் வழியாக உள்ளே சென்றான். அங்கே யோகத்தில் ஆழ்ந்திருந்த ஈசன் மேல் மலர்க்கணையைச் செலுத்த ஈசனின் மோனம் கலைந்தது. கண் விழித்த ஈசன் மன்மதனைக் கண்டதும், தன் நெற்றிக்கண்ணைத் திறந்து விழிக்க, அந்த அக்னியின் வெப்பம் தாங்காமல் மன்மதம் சாம்பலானான்.

இதைக் கண்ட ரதி துடித்தாள். புலம்பினாள், அழுதாள், அரற்றினாள். அவள் நிலை கண்டு இரங்கிய ஈசன் மன்மதனை அவள் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு அநங்கனாக உயிர்ப்பித்தார். பின்னர் தேவாதி தேவர்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு அம்மையைத் திருமணம் செய்து கொள்ள இசைந்தார். அங்கே தவத்தில் ஆழ்ந்திருக்கும் அம்மையை வயோதிக வடிவில் ஈசனே சோதனை செய்து பார்த்துத் தெளிந்து அன்னையை ஏற்றுக்கொள்வேன் என உறுதியும் கூறினார். பின்னர் திருமண ஏற்பாடுகள் செய்யப் பட்டன. திருமணத்திற்குக் குவிந்த கூட்டத்தினால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்ததும், அதைச் சமன் செய்ய அகத்தியர் தெற்கே வந்ததும் தெரிந்த கதை. அப்படித் திருமணம் ஆன பின்னர் ஐயனும், அம்பிகையும் ரிஷபத்தில் அமர்ந்த வண்ணம் திருக்கயிலையில் உமாமகேசராக அருள் பாலித்தனர்.அமைதியாக மோனத் தவம் செய்த சிவம் அமைதிநிலை உடையது. நிலையானது. அது இயங்க வேண்டுமெனில் சக்தி, ஆற்றல் தேவை. சலனம் என்று கூறினாலும் இங்கே சரியாக இருக்கும். தற்காலங்களில் சலனம் என்பது மனச் சஞ்சலத்தைக் குறிக்கும் சொல்லாக மாறி உள்ளது. ஆனால் இங்கே சலனம் என்பது இயக்கத்தையே சுறுசுறுப்பான ஆற்றல் வாய்ந்த சக்தியின் இயக்கத்தையே குறிக்கும். நிலையான சிவத்தோடு ஐக்கியம் ஆகும் ஆற்றல் வாய்ந்த சக்தியினாலேயே இவ்வுலகம் இயங்குகிறது. உலகப்பொருட்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்தும் காண்கின்றோம். இந்த உமாமகேச வடிவங்கள் இந்தியாவைத் தவிர வெளிநாடுகளான நேபாளம், திபெத் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் காணப்படுவதாய் அறிகிறோம். இதைத் தவிர அகத்தியரைத் தென்னாட்டைச் சமன் செய்ய அனுப்பியதால் அவருக்குத் தமிழ்நாட்டில் பல இடங்களில் உமாசகிதராக ஈசன் காட்சி அளித்ததாகத் தெரிகிறது. வேதாரண்யம், திருவேற்காடு, திருநல்லூர் போன்ற தஞ்சை மாவட்டக் கோயில்களிலும் உமாசகிதராக ஈசன் அருள் பாலிக்கிறார்.

Saturday, April 16, 2011

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, உமா மகேசர்!

திரு உத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ளதலம் எனத் தவறாய்க் குறிப்பிட்டுவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும். முன் காலத்தில் இந்த ஊர் கல்யாணபுரம் என்ற பெயரில் அழைக்கப் பட்டிருந்திருக்கிறது. இந்த ஊருக்குக் கல்யாணபுரம் என்ற பெயர் வந்ததற்குக் காரணமாய் அம்பிகை வேதியர் குடும்பத்தில் பிறந்து மங்களநாயகி என்ற பெயரோடு வளர்ந்து ஈசனைத் திருமணம் செய்துகொண்டதால் ஈசன் இந்த ஊர் கல்யாணபுரம் என அழைக்கப் படும் எனத் திருவாய் மலர்ந்தருளியதாய் ஒரு கூற்று. ஆனால் தற்காலத்தில் இந்த ஊரானது உத்தரகோசமங்கை என்று அழைக்கப் படுகிறது. மங்கையாகிய பார்வதி தேவிக்கு அவள் கேட்ட கேள்விகளின் மூலம் மகத்தானதொரு ரகசியமான பிரணவப்பொருளை ஈசன் உபதேசித்ததால் இந்தப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவார்கள். மாணிக்க வாசகர் தமது திருவாசகத்தில் உத்தரகோசமங்கையின் ஈசனைக் குறித்துத் தமது நீத்தல் விண்ணப்பத்தில் குறிப்பிடுகிறார். இந்த ஊரில் மாணிக்கவாசகருக்கெனத் தனிச் சந்நிதி இருப்பதாயும் கேள்விப் படுகிறோம். இங்கே கட்டுமலை அமைப்பில் கோயில் இருப்பதாயும், அந்தக் கட்டுமலையில், ஈசன் மடியில் அம்பிகை அமர்ந்திருக்கும் கோலத்தில் அம்பிகையை அணைத்தவண்ணம், சின் முத்திரை காட்டி அம்பிகைக்கு உபதேசிக்கும் கோலத்தில் ஐயன் காணப்படுவார் எனவும் கூறுகின்றனர். முதன்முதல் இந்தப் பிரணவப் பொருளை உபதேசம் பெற்றது அம்பிகையே ஆவாள். அவளே குருவாக இருந்து தனது அருள் பார்வையால் அனைத்து ஆன்மாக்களுக்கும் இவற்றை உணர்த்தினாள் என்பது ஆன்றோர் வாக்கு. சைவ மரபின் முதல் ஏழுகுருமார்களில் அம்பிகையும் ஒரு குருவாகக் கருதப் படுகின்றாள். //

அடுத்து உமாமகேசர். எப்போதும் அம்பிகையைப் பிரியாமல் தன்னுடனேயே வைத்திருக்கும் ஈசன். இமவானுக்கும் அவன் மனைவி மேனைக்கும் மகளாய்ப் பிறந்து வளர்ந்தாள் அம்பிகை. அவள் தோன்றும்போது ஆயிரத்தெட்டு இதழ்கள் கொண்ட தாமரை மலரின் மீது தோன்றினாள். அந்தக் குழந்தையைத் தன் மனைவியிடம் கொடுத்து பார்வதி என்ற பெயரில் வளர்ந்த குமாரியானவள் ஈசனையே திருமணம் செய்து கொள்ளப் போவதாயும், அதற்காகத் தவம் செய்யப் போவதாயும் கூறித் தந்தையின் உதவியோடு பர்ணசாலை அமைத்துக் கடுந்தவம் இருக்க ஆரம்பித்தாள். இங்கே ஈசனோ கடும் யோகத்தில் யோகாசன மூர்த்தியாக அமர்ந்திருந்தார். அவரை நெருங்க முடியவில்லை. ஈசனிடம் வரம் வாங்கிக்கொண்ட சூரபத்மன் என்னும் அசுரனோ தன்னுடைய வரங்களின் மகிமை இருக்கும் வரை தன்னை எவராலும் எதுவும் செய்ய இயலாது என்று புரிந்து கொண்டு அட்டகாசம் புரிந்து வந்தான். தேவாதிதேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது தவித்தனர். ஈசனே தஞ்சம் என இருக்கும் நிலையில் அவரோ யோகத்தில் ஆழ்ந்துள்ளாரே. இவர் யோகத்தைக் கலைத்து மீண்டும் உலகில் அமைதியை ஏற்படுத்துவது எவ்வாறு? அதோடு ஈசன் யோகத்தில் இருக்கும் இந்நிலையில் உலகில் சிருஷ்டியில் பங்கம் ஏற்படலாயிற்று. அனைத்து உயிர்களையும் மாயையில் மறைத்துப் பின் அருள் காட்டி அனுகிரஹிக்கும் எம்பெருமான் அன்னை இல்லாமல் சக்தியை இழந்த நிலையில் இருக்கவே சிருஷ்டியில் குறைபாடுகள் ஏற்பட்டு விண்ணுலகிலும், மண்ணுலகிலும் இன்னும் அனைத்து ஜீவராசிகளிடமும் காமம் என்னும் சிற்றின்ப உணர்வே இல்லாமல் இயக்கமே இல்லாமல் இருந்தது.

ஈசன் தன் நிலைக்குத் திரும்பி சக்தியோடு ஐக்கியம் ஆனால் ஒழிய இந்நிலை மாற வாய்ப்பில்லை.அதோடு சிவசக்தி ஐக்கியத்தால் தோன்றப் போகும் குமாரனாலேயே சூரனுக்கு அழிவு என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். எல்லாவற்றுக்கும் ஈசனின் தவம் கலையவேண்டும். என்ன செய்யலாம்?? ஆஹா, இதோ ஒரு வழி! மன்மதனை அனுப்பலாம். அவனுடைய கணைகளுக்கு மயங்காதவர் உண்டோ? மன்மதனை அனுப்பத் தீர்மானித்தனர். மன்மதனோ பயந்தான்.

இந்நிலை மாறவேண்டுமெனில் சிவகுமாரன் உதயம் ஆகவேண்டும்.

Wednesday, April 13, 2011

நமசிவாய வாழ்க, நாதன் தாள்வாழ்க, சுகாசன மூர்த்தி!


ஈசன் பிரணவப்பொருளின் ஸ்வரூபம் ஆவார். எல்லாவற்றுக்கும் மூலமான வித்து பிரணவமே ஆகும். மிக மிக சூக்ஷ்மம் நிறைந்த இந்தப் பிரணவம் உலகின் அனைத்து ரூபங்களிலும் வியாபித்து உள்ளது. இதை அறிந்தவர் பிரம்மத்தை அறிந்தவர் ஆவார் ; இதுவே பரப்பிரும்மம் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பிரணவ மந்திரத்தை ஏகாக்ஷரம் எனவும் ஆதி மந்திரம் எனவும் அழைக்கின்றனர். அ+உ+ம இவை மூன்றும் சேர்ந்து உச்சரிக்கப்படுவதே பிரணவம் ஆகும். இதிலிருந்து வேதங்கள் தோன்றின. முதலெழுத்தான “அ”காரம் ரஜோகுணத்துடன் கூடிய நான்கு முக பிரம்மாவை சிருஷ்டி செய்யும். “உ”காரமோ சத்வ குணத்துடன் கூடிய விஷ்ணு ரூபமாகவும் பிரக்ருதி எனப்படும் யோனியாகத் தோன்றி இவ்வுலகைக் காக்கும். “ம”காரமானது தமோ குணத்துடன் ருத்ரனாகத் தோன்றி சம்ஹரிக்கும் தொழிலைச் செய்யும். இதன் பிந்துவே மஹேஸ்வர ரூபமாக மறைத்தல் என்னும் திரோபாவத்தைச் செய்கிறது. கடைசியில் தோன்றும் நாதமானது சதாசிவ மூர்த்தியாக எல்லாவற்றையும், அனுகிரஹம் செய்யும். இதுவே “நாத பிந்து கலாதி நமோ நம:” எனப்படும்.

இந்த அதி அற்புதமான பொருளைப் பூரணமாக அறிந்து கொள்ளவேண்டுமெனில் குருமூலம் தீக்ஷை பெற வேண்டும். மந்திரம், யந்திரம், தேவதை, பிரபஞ்சம், ஆகியவற்றின் மூலமாயும், குரு சிஷ்யன் என்னும் உறவினாலும் அந்தப் பரம்பொருளின் தத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஈசனை “ஓம்” என்னும் ஏகாக்ஷர சொரூபியாகத் தியானிக்கவேண்டும். குருவை தியானித்து வணங்கி அவர் மூலம் உபதேசம் பெற்றுத் தூய்மையான இடத்தில் பிரணவத்தை உச்சரித்துப் பஞ்சாக்ஷரம் ஜெபித்துப் பின்னர் முறைப்படி பூஜைகள் செய்து ஐக்கிய அநுசந்தானத்தை அடையவேண்டும். மூன்றையும் சேர்த்து ஓம் என உச்சரித்தலின் மூலம் சிவனையும், சக்தியையும் சிவசக்தியரின் அருளையும் பெறலாம்.

மேற்கண்ட பிரணவப் பொருளின் தத்துவத்தை உமாதேவியார் கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி ஈசன் சுகாசனத்தில் அமர்ந்து அன்னைக்கு உபதேசித்தார். சுகாசனம் என்பது இடக்காலை மடித்து வைத்துக்கொண்டு வலக்காலைத் தொங்க விட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் கோலத்தைக் குறிக்கும். இவரின் இடத்தொடையில் அமர்ந்திருக்கும் அம்பிகையை “தர்மார்த்த காம மோக்ஷ பிரதாயினி” என அழைக்கப் படுவாள். இவ்விதம் வேதங்களையும் ஆகமங்களையும் அம்பிகைக்கு உபதேசித்த கோலத்தையே சுகாசன மூர்த்தி என்று சொல்கிறோம். பாடம் நடத்தியதோடு அல்லாமல் அம்பிகைக்குப் பரிக்ஷையும் வைத்தாராம் ஈசன். அது ஒரு திருவிளையாடல். தென் பாண்டிநாட்டில் நடந்தது. அனைத்து ரகசியங்களையும் உபதேசித்த ஈசன் அம்பிகையிடம் தான் கூறியவற்றைக் குறித்து விளக்கம் அளிக்கக் கேட்டாராம். அன்னையவளால் பதில் சொல்ல இயலவில்லை. ஆச்சரியமா இருக்கா? ஆம், நம்மை எல்லாம் அன்பால் அரவணைக்கும் அன்னைக்கு நாடகம் நடத்திப் புரிய வைக்கவேண்டி இருக்கும் எனத் தோன்றி இருக்கலாம்.

இல்லை எனில் ஓம் என்னும் மூல மந்திரத்தை அ+உ+ம் என உச்சரிக்காமல் வரிசையைச் சற்றே மாற்றி, உ+ம்+அ என உச்சரித்தால் நாம் பெறுவது உமா என்னும் சொல். இது சக்திப் பிரணவம் என அழைக்கப்படும். மந்திரங்களுக்கெல்லாம் ஆதார சக்தியாகவும், அக்ஷரங்களின் ரூபமாகவும் இருப்பவள் சர்வேஸ்வரியே. ஆகவே இது சக்திப் பிரணவம் எனப்படுகிறது. அப்படிப்பட்ட அவளுக்குத் தெரியாதா ஐயன் கூறியவற்றின் விளக்கம் ! எனினும் அம்பிகை விளக்கம் சொல்ல இயலாமல் தவிக்க ஐயன் அவளை பூலோகத்தில் ஒரு வேதியரின் மகளாய்ப் பிறந்து வேத ஆகமங்களைக் கற்றுக்கொண்டு வரச் சொல்லி அனுப்பிவிட்டார். உரிய காலத்தில் தாமே அவளை மணந்து கொள்வதாயும் வாக்குக் கொடுத்தார். அப்படி அதிர்ஷ்டம் செய்த ஊர் தென் பாண்டி நாட்டில் ராமநாதபுரத்திற்கு அருகே உள்ள திரு உத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ள ஒரு சிறிய ஊர்.

Monday, April 04, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! லிங்கோத்பவர் தொடர்ச்சி

பிரம்மா படைப்புக் கடவுள் ஆவார். அதோடு அறிவுக்கு அதிபதியும் ஆவார். கலைமகளைத் தன் நாவில் கொண்டவர் ஆயிற்றே. அத்தகைய அறிவு படைத்த பிரம்மா ஈசனின் முடியைத் தேடிச் சென்றார். அறிவு இருந்தால் பணிவும் இருக்கவேண்டும், விநயம் இருக்கவேண்டும், ஆனால் தனக்கு அறிவு இருப்பதால் அகந்தை கொண்டு பிரம்மா முடியைத் தேடிச் சென்றார் எனப் புராணங்கள் கூறுகின்றன. மஹாவிஷ்ணுவோ செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீயைத் தன் மார்பில் தாங்கியவர். அனைத்துச் செல்வங்களும் அவரிடம்,. எனினும் அவரும் செல்வத்தால் எதையும் சாதிக்க இயலாது என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை என்றாலும், ஈசனின் திருவடிகளையே நாடினார். காண முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளவும் செய்தார். ஆனால் அறிவினால் செருக்குற்ற பிரம்மாவோ, தான் முடியைக் கண்டதாய்ப் பொய்யைச் சொன்னார். அறிவினாலோ, செல்வத்தாலோ பரம்பொருளை அடைய முடியாது என்பதன் தாத்பரியமே இந்தப் புராணக் கதை. தான் என்ற அகந்தை நிறைந்த பிரம்மாவால் முடியைக் காண முடியாமல் போனது மட்டுமல்லாமல் செருக்கில் பொய்யும் உரைத்தார். வெறும் அறிவு இருந்தால் மட்டும் அனைத்தையும் வெல்ல முடியாது, அதிலும் ஈசனை அடைய முடியாது. கூடவே பணிவும், விநயமும் இருக்கவேண்டும் என்பதே இந்தக் கதையின் தாத்பரியம்.

ஆனாலும் பெரியோர்கள் இந்தக் கதையைச் சொன்னதின் காரணமே நாம் நமக்கு மேம்பட்ட அறிவு இருக்கிறதென்றோ, நிறைந்தசெல்வம் இருக்கிறதென்றோ அகந்தை கொள்ளாமல் செல்வத்தின் மூலமோ, அறிவின் மூலமோ ஈசனின் உயர்ந்த தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும் என எண்ணாமல், ஒரு வரைமுறைக்கு உட்படாத ஈசனின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த அறிவும், செல்வமும் போதும் என நினைப்பவர்களால் முடியாது என்பதே இந்த அடிமுடி தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் அலைந்ததின் உள்ளார்ந்த தத்துவம் ஆகும். அறிவு மட்டும் இருந்தாலோ, செல்வம் மட்டும் இருந்தாலோ இறைவனை அடையவே முடியாது. இவை இரண்டும் சேர்ந்து இருந்தாலோ மனிதனுக்குத் தான் என்னும் அகங்காரம் ஏற்பட்டு விடும். இந்தத் தான் ஒழிந்தால் தான் அந்தத் தானாக மாறமுடியும், ஒன்றிப் போக இயலும். கல்வியினால் ஏற்படும் செருக்கு அல்லது அகந்தை பணத்தினால் ஏற்படுவதை விடவும் ஒரு பங்கு அதிகம் தான். அதனால் தானோ என்னமோ பிரம்மா தன் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. விஷ்ணு மட்டும் ஒப்புக்கொண்டார். மேலும் அண்டத்தை எல்லாம் நிறைத்துக்கொண்டு பேரொளியாக நின்ற ஈசனின் தத்துவமானது அடி, முடி என ஒரு வரையறைக்கு உட்பட்டு இல்லாமல் எல்லை கடந்த ஒன்று என்பதே ஆகும். எல்லைகளே இல்லாப் பரம்பொருளைத் தியானிக்க அவனை ஒளிவடிவில் வணங்குவதும் ஒரு முறை ஆகும். நீள் வட்ட வடிவில் காணப்படும் இந்த லிங்க பாணம் பிளந்து நடுவில் இருந்து தலையில் பிறையைச் சூடிய சந்திரசேகரர் வெளிப்படுவதாய்ச் சில லிங்கோத்பவ மூர்த்தங்களில் காணமுடியும். என்றாலும் இந்தச் சிற்பங்களிலும் அடியோ, முடியோ காண இயலாது. சோழர்கள் காலத்தில் முதலாம் பராந்தகன் காலத்தில் எழுப்பிய சிவன் கோயில்களின் கருவறைக்குப் பின்னால் லிங்கோத்பவர் இடம் பெற்றிருந்ததாய்க் கேள்விப் படுகிறோம்.

லிங்கோத்பவரின் மூர்த்தங்களில் சிலவற்றைக் காஞ்சீபுரம் கைலாயநாதர் கோயிலில் அழகாய்ச் செதுக்கி இருப்பதைக் காணமுடியும். ஆனால் அழிய ஆரம்பித்திருக்கிறது மன வருத்தத்தைத் தரும் செய்தி. இதைத் தவிர குன்றக்குடி, சுசீந்திரம், தஞ்சைப் பெரிய கோயில் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் லிங்கோத்பவர் எழுந்தருளி இருப்பதாய்த் தெரிய வருகிறது. அடுத்து நாம் தரிசிக்கப் போவது அம்பிகைக்கு உபதேசம் செய்த ஈசனின் திருக்கோலம். ஆகமங்களை அம்பிகைக்கு ஈசன் உபதேசித்ததாய்க் கேள்விப் படுகிறோம். பர்வத ராஜகுமாரியாக அம்பிகை அவதரித்த அந்த நாட்களில் ஒருநாள் அம்பிகை ஈசனிடம் மந்திர தீக்ஷை அளிக்கச் சொல்லி விண்ணப்பிக்கிறாள். அப்போது பிரணவத்தின் பொருளும் உபதேசம் செய்யப் படுகிறது. அந்த உபதேசம் நடக்கும் நேரம் அம்பிகை ஈசனின் இடப்பாகத்தில் , அவரின் இடத்தொடையில் அமர்ந்த வண்ணம் காட்சி அளிப்பாள். காணக்கிடைக்காத அபூர்வமான இந்த மூர்த்தியின் வடிவமே சுகாசன மூர்த்தி ஆகும். அதைக் குறித்து வரும் நாட்களில் காணலாம்.