எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, February 28, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! தாண்டவ விளக்கங்கள்!

நடராஜத் தத்துவத்தை ஆழ்ந்து கவனிக்குங்கால் பேரொளியான ஈசன் ஒரு தீச்சக்கரம் சுழல்வது போலத் தன் கைகளை வீசிக்கொண்டு, நிலம் , நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்துக்கும் தானே ஒரு சாட்சியாய்த் தோன்றுவதை உணரலாம். வீசும் கைகளின் புயல்வேக அசைவு காற்றையும், (சிலர் சுவாசம் என்றும் சொல்வார்கள்) சூரிய, சந்திர, நெற்றிக் கண்கள் அக்னி ரூபமாகவும், உடலே நிலமாகவும், தலையில் இருக்கும் கங்கையே நீராகவும், செவிகள் ஆகாயமாகவும் குறிப்பிடப் படும். மேற்சொன்ன பஞ்ச பூதங்களில் நாட்டியம் இல்லாத எதுவுமே இல்லை. காற்று தென்றலாகவும், சுழற்காற்றாகவும் நடை போட்டால், தீச்சுடரோ பலவேறு விதங்களிலும், வண்ணங்களிலும் நெளிந்து நடனமாடும். பூமியோ எல்லாவற்றிற்கும் மேல் வெடிப்போசையின் மூலம் தன் நடனத்தை நிகழ்த்துகிறது. நீரோ கடல் அலைகளால் தன் நாட்டியத்தைக் காட்டினால் விண்ணோ, அதிரும் இடியோசையிலும், கொட்டும் மழையிலும், வீசும் காற்றிலும், சூரிய, சந்திர, நக்ஷத்திரங்கள் மூலமும் தன் அளப்பரிய சக்தியைக் காட்டுகிறது.

இவ்வாறு இறைத் தத்துவம் பல்வேறு விதங்களில் தன் இருப்பை நமக்குக் காட்டி வருகிறது. அனைத்துமே ஒழுங்கான ஒரு இயக்கமாக இருப்பது எங்கனம்? நினைக்க நினைக்க ஆச்சரியமாய் இருக்கிறது அல்லவா? ஈசனின் பல்வேறு நாட்டியக் கோலங்களையே இதற்குக் காரணமாகச் சொல்லுவார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உள்ளர்த்தமும் உள்ளது. ஊர்த்துவ தாண்டவம் என்பது யோகநிலையில் மேல்படியைச் சுட்டிக் காட்டுவது என்பதைப் போல ஒவ்வொரு தாண்டவத்திற்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது. இவற்றில் சிதம்பரத்தில் இருக்கும் ஆனந்த நடராஜரை ஆத்ம ஸ்வரூபி என்றால் மற்ற இடங்களில் காணப்படும் ஒவ்வொரு கோலத்துக்கும் ஒவ்வொரு தத்துவப் பொருள் உண்டு. இதில் ஏற்கெனவே திரிபுர சம்ஹாரத்தில் ஆணவம்,, கன்மம், மாயை என்னும் மும்மலத்தின் தாக்கத்தால் தன் நிலை மறந்த அரக்கர்களைக் குறித்துப் பார்த்தோம். திரிபுர தாண்டவம் என்னும் அந்தத் தாண்டவத்தில் திரிபுரத்தை ஈசன் எரித்தான் என்பதை உண்மையாகவே ஒரு நகரத்தை எரித்தான்; அசுரர்களைக் கொன்றான் என்ற நேரடிப் பொருள் கொண்டால் அது முழுத் தவறு. இங்கே கொல்லப்படுவது ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும். எரிக்கப்படுவது இவை மூன்றுமே. இங்கே அக்னியாகச் சுட்டப்படுவது நம்முடைய தவமாகிய அக்னி. இந்த யோகநெறியுடன் கூடிய தவாக்னியில் மும்மலங்களும் சுட்டுப் பொசுக்கப் படுகின்றன என்பதே உள்ளார்ந்த பொருளாகும்.

அடுத்தது பிரம்மாவின் தலையைக் கொய்தல். இதற்கும் உள்ளார்ந்த அர்த்தம் உண்டு. மூலாதாரத்தில் தோன்றும் மூலாக்னியை மேலெழுப்பி சஹஸ்ராரத்துக்குக் கொண்டு போகவேண்டும். அதற்குத் தடையாக இருப்பதோ பிரம்மா அதிபதியான சக்கரமாக இருக்கும் சுவாதிஷ்டானச் சக்கரம். இங்கேயே சிருஷ்டித் தொழில் நடைபெறவேண்டி பிரம்மா துணை புரிகிறார். ஜீவனுக்கு இதிலேயே மனம் ஆழ்ந்து போகாமல் காத்துத் தடுக்க வேண்டும். மேலும் பிரம்மாவுக்குத் துணையாக இருப்பவரும் மாயன் எனப்படும் விஷ்ணு. அவரோ மணிபூரகத்தில் இருந்து உலக மாயைகளில் மனதைச் சிக்க வைப்பார். இவர்கள் இருவரிலிருந்தும் சீவனை விடுவித்து சஹஸ்ராரத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதே பிரம்மாவின் சிரச்சேதமாகச் சொல்வதுண்டு. இதற்கு மனம் மிகவும் பக்குவப் பட வேண்டும். அத்தகைய பக்குவப்பட்ட ஆன்மாக்களை இந்த சிருஷ்டி மோகத்திலிருந்து தடுத்து மேலே கொண்டு போவதே பிரம்ம சிரச்சேதம் ஆகும்.

நிஜமாகவே பிரம்மாவின் தலையை வெட்டிவிட்டார் என அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது.

Friday, February 17, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சந்த்யாநிருத்த மூர்த்தி!

அடுத்ததாய் நாம் பார்க்கப் போவது சந்தியா ந்ருத்த மூர்த்தி. பிரதோஷக் காலத்தில் நடனமாடியதால் ஈசனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இதன் கதையும் நாம் அனைவரும் அறிந்ததே. தேவர்கள் அம்ருதம் வேண்டிப் பாற்கடலைக் கடைகின்றனர். ஆனால் அதன் முன்னர் ஈசனின் அனுமதியை வேண்டவில்லை என்பதோடு அவருக்குத் தெரிவிக்கவும் இல்லை. மந்தரமலையை மத்தாகக் கொண்டு கடைகின்றனர். வாசுகி தான் மத்தின் கயிறாகப் பயன்பட்டது. வாய்ப்பாகத்தை அசுரர்களும், வால் பாகத்தை தேவர்களும் பிடித்துக்கொண்டு வெகு வேகமாய் இழுத்துக் கடைந்தனர. அந்த வேகத்தில் வாசுகி விஷத்தைக் கக்கக் கூடவே பாற்கடலில் இருந்தும் ஹாலாஹால விஷம் வெளியே வரத் தொடங்கியது. தேவர்களும், அசுரர்களும் மட்டுமல்லாமல் விஷ்ணுவும் விஷத்தின் கடுமையால் உடல் கருகினார். அனைவரும் செய்வதறியாது தவிக்க, விஷ்ணுவின் ஆலோசனையின் பேரில் கைலை சென்று ஈசனிடம் முறையிட்டனர்.

ஈசனும் அந்த விஷத்தை ஒரு உருண்டையாகத் திரட்டி எடுத்துவரச் சொல்லி ஆலால சுந்தரரை அனுப்பி விஷத்தை எடுத்துவரச் செய்தார் என்று ஒரு கூற்று உண்டு. அதே விஷத்தை நந்தி தேவரைத் திரட்டிக் கொண்டு வருமாறு ஈசன் பணித்ததாகவும் கூறுவார்கள். நந்தி தேவர் விஷத்தைத் திரட்டி ஒரு பெரிய உருண்டையாகக் கொண்டு வந்து ஈசனிடம் கொடுக்க, அந்த விஷத்தை ஈசன் விழுங்கினாலும் அபாயம், விழுங்காமல் விஷம் வெளியே இருந்தாலும் அபாயம் என்பதால் அதை ஈசன் அப்படியே தொண்டையில் நிறுத்திக்கொண்டார். விஷத்தைக் கண்டு பயந்தே ஈசன் தம் தொண்டையில் நிறுத்திக்கொண்டதாய் நினைத்த நந்தி தேவர் கேலியாக ஒரு ஹூம்காரம் செய்து சிரித்தார். அதைக் கண்ட ஈசன் நந்தியின்கர்வத்தைப் போக்க எண்ணி விஷமுண்ட தம் கையை நந்தியின் மூக்கெதிரே வைத்து முகரச் செய்ய முகர்ந்த நந்தி மயங்கியதோடல்லாமல் விழித்து எழுந்தும் பித்துப் பிடித்தவர் போலானார்.

அனைவரையும் தம் அருமைக்குழந்தைகளாய் நினைக்கும் அன்னை மனம் வருந்தி நந்தியைத் தண்டிக்கலாமா என ஈசனிடம் கேட்க, தண்டனை இல்லை என்றும் நந்திக்கு கர்வம் அடங்கவே தாம் இவ்வாறு செய்ததாகவும் ஈசன் கூறிவிட்டு, அரிசியை நீரில் நனைத்து வெல்லம் சேர்த்துக் காப்பரிசியாக நந்திக்கு உண்ணக் கொடுக்குமாறும் கூறினார். அவ்வாறே செய்ய நந்திக்குச் சுய நினைவும் மீண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதன் பின்னர் ஈசனின் திருவடியில் விழுந்து தம்மை மன்னிக்கும்படி நந்தி ஈசனை வேண்ட, ஈசனும் அவ்வாறே மன்னித்ததாய்க் கூறிவிட்டு, நந்தியின் இருகொம்புகளுக்கிடையே நின்ற வண்ணம் சூலம், உடுக்கை ஏந்திக் கொண்டு ஒரு ஜாம காலம் நிருத்தியம் செய்தார். அவரின் ஆடலைக் கண்ட தேவர்களும், பிரம்மா, விஷ்ணுவும் மனம் மகிழ்ந்து வாத்தியங்கள் வாசித்து நடனத்துக்கு மெருகூட்டினார்கள். இது மாலை நேரத்தில் நடந்ததால் அந்த நேரத்தைப் பிரதோஷக் காலம் என்பார்கள்.

விஷமுண்ட ஈசனே மயங்கினாற்போல் படுத்துவிட்டதாகவும், அப்படிப் படுத்த நாள் ஏகாதசி எனவும் ஒரு கூற்று உண்டு. ஈசனே படுத்ததைக் கண்ட தேவர்கள் ஊண், உறக்கமின்றித் தாமும் உபவாசம் இருந்து நாள் முழுதும் விழித்திருந்து சிவனைத் துதித்தனர். மறுநாள் துவாதசி அன்றும் பாராயணத்தைத் தொடர, அதன் மறுநாள் திரயோதசி அன்று ஈசன் மனமிரங்கித் திருநடனம் செய்தருளினார். இந்தப் பிரதோஷ காலத்தில் தான் விஷம் துரத்தி தேவர்கள் ஓடி வந்ததைக் குறிக்கும் வண்ணம், சோமசூக்தப் பிரதக்ஷிணம் என்னும் முறையில் பிரதக்ஷிணம் செய்வதுண்டு. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலஹால விஷத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அனைவரும் ஈசனை நாடிக் கைலை நோக்கி ஓட, அங்கேயும் விஷம் அப்பிரதக்ஷிணமாய் வந்து அவர்கள் எதிரே தோன்றி விரட்ட, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓட, விஷம் மீண்டும் எதிரே வந்து விரட்ட, இப்படியே இடம், வலமாக அவர்கள் வலம் வந்த முறையே சோமசூக்தப் பிரதக்ஷிண முறை எனக் கடைப்பிடிக்கப் படுகிறது. முக்கியமாய் பிரதோஷ காலத்தில் செய்யவேண்டிய பிரதக்ஷிண முறை இதுவாகும்.

நந்தியின் இரு கொம்பிற்கிடையே ஈசனை வழிபட்டுவிட்டு அப்பிரதக்ஷிணமாக சண்டேஸ்வரர் வரை சென்று திரும்பிப் பின் மீண்டும் நந்தியைத் தரிசித்துப் பிரதக்ஷிணமாக வரவேண்டும். இந்தப் பிரதக்ஷிணம் கோமுகம் எனப்படும் அபிஷேஹ நீர் வரும் துவாரம் வரையில் தான் செய்யவேண்டும். பின்னர் மீண்டும் திரும்பி வந்து நந்தி தரிசனம், மீண்டும் அப்பிரதக்ஷிணம் சண்டேஸ்வரர் வரை என்று செய்தல் நலம். ஆனால் இப்போதெல்லாம் பிரதோஷம் என்றால் சின்னஞ்சிறிய கோயில்களிலேயே கூடும் கூட்டத்தைப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டம் தான். மதுரை வெள்ளியம்பலத்தில் சந்த்யாந்ருத்ய மூர்த்தியாக நடராஜரைக் காணலாம். பாண்டியனுக்காகக் கால் மாறி ஆடிய கோலமும் இதுவே. சதாசிவ மூர்த்தியின் உச்சியில் அமைந்துள்ள ஈசான முகத்திலிருந்தே நடராஜ வடிவம் தோன்றியதாய்க் கூறுவார்கள். நடராஜவடிவம் காணக் காணத் திகட்டாத அழகு வாய்ந்த ஒன்றாகும். இவ்வடிவின் வெவ்வேறு கோலங்களே பல்வேறு விதமான நிருத்த மூர்த்திகளாக அமைந்துள்ளன.