எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, July 24, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 3


கோயில் பெரிய கோயில், பெருமாள் பெத்த பெருமாள்,  தாயாரும் பெரிய தாயார், ஊரும் பெரிய ஊர், தளிகை பெரிய தளிகை, வாத்யம் பெரிய வாத்யம், மற்றும் பலகாரங்கள் எல்லாமும் நிவேதனத்துக்குப் பெரியவையாகவே தயாரிக்கப்படும்.  இப்படி எல்லாவற்றிலும் இந்தக் கோயில் பெரிதாகவே உள்ளது.  ஸ்ரீரங்கத்தை மதுரகவி ஆழ்வார் தவிர்த்து மற்ற எல்லா ஆழ்வார்களும் பாடி இருக்கின்றனர்.  ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பு சுமார் 156 ஏக்கர் ஆகும்.  பங்குனி மாதம், வளர்பிறை சப்தமி திதியில், சனிக்கிழமை, சந்திரன் ரோஹிணியிலும், குரு ரேவதியிலும் இருக்கையில் ஸ்ரீரங்கநாதர் இங்கே வந்து சேர்ந்ததாகக் கூறுகின்றனர்.   வலக்கையைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டு திருமுடியைத் தாங்க, முதுகுப் பக்கம் வடக்கு நோக்கி இருக்க, இடக்கையால் திருவடியைச் சுட்டிய வண்ணம் தெற்கு நோக்கு திருமுக மண்டலத்தை வைத்துக்கொண்டு நேராக இலங்கையைப் பார்த்த வண்ணம் பள்ளி கொண்டிருக்கிறார், ஸ்ரீரங்கநாதப் பெருமான்.   இதைத் தொண்டரடிப்பொடியாழ்வார்,

குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டி, தென்திசை இலங்கை நோக்கிக்
கடல்நிறக்கடவுள் எந்தை அரவணை துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ!  என் செய்கேன் உலகத்தீரே!

மேலும்

கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே             (23)
என்கிறார்.

இந்த ரங்கநாதர் முழுக்க முழுக்கச் சுதையில் ஆனவர்.  ஆகவே இவருக்குத் திருமஞ்சனம் என்றஅபிஷேஹங்கள் கிடையாது.  தினமும் கொள்ளிடம் எனப்படும் வடகாவிரி நீரில் நம்பெருமாள் எனப்படும் உற்சவரான அர்ச்சாமூர்த்திக்கே அபிஷேஹங்கள் நடைபெறுகின்றனர்.  தொன்று தொட்டுக் கைங்கரியம் செய்யும் பட்டாசாரியார்கள் ஸ்ரீரங்கநாதரின் சுதை உருவச் சிலாரூபத்தைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர் . எப்படி எனில் ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தன்று, தெற்கே காவிரியில் இருந்து நீர் எடுத்துப் போய் நம்பெருமாளுக்கு அபிஷேஹம் ஆகும்.   அப்போது சிலா உருவில் இருக்கும் ஸ்ரீரங்கநாதரின் ஆடைகள், ஆபரணங்கள் களையப்பட்டு, பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ,  போன்ற வாசனாதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டு, மூலிகைகளின் சாறுகள் சேர்க்கப்பட்டு எண்ணெய் தயாரிக்கப்  பட்டு இந்த எண்ணையை ஸ்ரீரங்கநாதருக்கு தாராளமாகக் காப்பிட்டு விடுவார்கள்.  திருமுக மண்டலத்தை விடுத்து மற்ற பாகங்களைப் பட்டுத் துணியால் மூடி விடுவார்கள்.  இந்த எண்ணெய்க்காப்பிலேயே பெருமாள் ஒரு மண்டலம் எனப்படும் நாற்பத்தைந்து நாட்கள் இருப்பார்கள் என ஒரு சாராரும், தீபாவளி வரை என இன்னொரு சாராரும் கூறுகின்றனர்.  எப்படி இருந்தாலும் எண்ணெய்க் காப்பிட்டு சுதை உருவில் இருக்கும் ஸ்ரீரங்கநாதரின் சிலா உருவைக்  காப்பாற்றி வருவது என்னவோ உண்மை.  அந்தச் சமயம் உற்சவ மூர்த்தியின் உடலிலும் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு குறைகள், நிவர்த்தி செய்யப்படும்.  பின்னர் நான்கு நாட்கள் கழித்து இதே போல் தாயாருக்கும் செய்யப்படும்.


ஸ்ரீரங்க விமானம்: இந்த விமானம் ஆதியில் தானாகவே உருவானது என்கின்றனர்.  இது பொன்னால் வேயப்பட்டு “ௐ” என்னும் பிரணவ வடிவில் உள்ளது.  இந்த விமானத்தில் உள்ள பரவாசுதேவர் கையில் கிண்ணம் ஒன்றை வைத்திருக்கிறார்.  அந்தக் கிண்ணம் அவரின் வாயை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், கிண்ணம் வாயருகில் சென்று சேர்ந்து கிண்ணத்தில் உள்ளதைப் பர வாசுதேவர் குடிக்கிறாப் போல் ஆனால் உலகம் அழியும் எனச் சொல்வார்கள்.  இது சிறு வயதில் கேட்டது.  ஸ்ரீரங்க விமானத்தின் வெளியே விக்னேஸ்வரர் நின்று காவல் புரிவதாகவும், கீழ்ப்பக்கம் மஹாவிஷ்ணுவின் யோக மாயை ஆன துர்கை இருப்பதாகவும் கூறுகின்றனர்.  அவசரம் அவசரமாப் போங்க, போங்கனு சொல்லுவதால் இவற்றை எல்லாம் நிதானமாய்ப் பார்க்க முடிவதில்லை. L ஸ்ரீரங்க விமானத்துக்குள்ளே ஆதிசேஷன் மேல் ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டிருக்கிறார்.  மேலும் ஸ்ரீரங்கவிமானத்தினுள், சப்த ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், அனைத்து தேவர்களும், த்வாதச ஆதித்யர்களும், நவக்ரஹங்களும் இருக்கின்றனர்.   மேலும் தன்னுடைய இந்த ரூபத்தைக்குறித்து பகவான், தான் இங்கே “த்ரிதாமன்” ஆக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  பகவான் மூன்றே மூன்று இடங்களில் தாம் “த்ரிதாமன்” ஆக இருப்பதாகவும் அவற்றில் இது முதன்மையானது எனவும் கூறப்படுகிறது.  இந்த மூன்று இடங்களிலும் தனது சுயரூபத்தோடு இருப்பதால் த்ரிதாமன் எனப்படுவதாகக் கூறுகின்றனர்.


மேலும் ஸ்ரீரங்க க்ஷேத்திரம் ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் எனப்படுகிறது.  மனிதராலோ, தேவர்களாலோ, ரிஷி, முனிவர்களாலோ நிர்மாணிக்கப் படாமல் தானாகவே உண்டான க்ஷேத்திரங்கள் ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் எனப்படும்.  அவை ஸ்ரீரங்கத்தைச் சேர்த்து எட்டு ஆகும்.

1.ஸ்ரீரங்கம்,
2.ஸ்ரீமுஷ்ணம்
3.திருமலை
4.சாளக்ராம மலை
5.நைமிசாரண்யம்
6.தோதாத்ரி
7.புஷ்கர க்ஷேத்ரம்
8.பத்ரிநாதம்


இவற்றில் முதன்மையானதும் ஸ்ரீரங்கமே.  108 திவ்ய ஸ்தலங்களில் முக்கியமானதும், முதன்மையானதுவும் ஸ்ரீரங்கமே.  தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட க்ஷேத்திரங்களுக்கு திவ்ய க்ஷேத்திரங்கள் என்றும், ரிஷி, முனிவர்கள், போன்றோர் தங்கள் சித்தியால் ஏற்படுத்தும் க்ஷேத்திரங்களுக்கு “ஸைந்தம்” என்றும், மனிதர்களால் நிர்மாணிக்கப்படும் கோயில்களை “மாநுஷம்” என்றும் கூறுவார்கள்.  இப்படி ஸ்வயம்வ்யக்தம், தைவிகம், ஸைந்தம், மாநுஷம் என்னும் நால்வகையான நிர்மாணம் செய்யப்பட்ட கோயில்களே நூற்றெட்டு திருப்பதிகளில் அடங்குகிறது.  ஆதியில் ஸ்ரீரங்க நாதரை வழிபடும் முறையை பிரம்மாவுக்கு ஸ்ரீரங்கநாதரே சொல்லிக் கொடுத்தார் என்று ஸ்ரீரங்க மஹாத்மியம் கூறுகிறது.  பாஞ்சராத்ர முறைப்படி வழிபடச் சொன்னதாகவும் ஒரு நாளை ஐந்து காலமாகப் பிரித்துக்கொண்டு வழிபாடுகளை நடத்தச் சொன்னதாகவும், நித்யகர்மாக்களுக்கும், அநுஷ்டானங்களுக்கும்  பின்னரே தனது அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்கவேண்டும் எனவும் கூறியதாகத் தெரிய வருகிறது.  பிரமனும் அவ்வாறே பாஞ்சராத்ர முறைப்படி வழிபட்டதாகவும், பின்னர் ஐந்து ருத்ரர்கள், பிரம்ம ரிஷிகள்,ஸ்வயாம்புவ மநு, தக்ஷப்ரஜாபதி தேவர்கள் என அனைவருக்கும், த்வாதச அக்ஷர உபதேசம் செய்து இந்தப் பூஜாமுறையை அறிமுகப் படுத்தி வைத்ததாகவும், பிரமனாலும் ஒரு முறை ஸ்ரீரங்கநாதர் தோன்றிய முறை விவரிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. பின்னர் பிரம்மா சூரியனுக்கும் இந்த வழிபாட்டு முறையைச் சொல்லிக் கொடுக்க, சூரியன் தன் மகனான வைவஸ்வத மநுவுக்குச் சொல்ல, அவனிடம் இருந்து வைவஸ்வத மநுவின் புத்திரன் இக்ஷ்வாகுவுக்குப் போய் அவர்களின் குல தனம் ஆயிற்று.  பின்னர் ஸ்ரீரங்கநாதர் விமானத்தோடேயே காவிரிக்கரைக்கு வந்த வரலாற்றைப் பார்த்தோம். 

Tuesday, July 17, 2012

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 2


திருவரங்கம் குறித்து அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் ,திவ்யப்ரபந்தம் போன்றவற்றில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அகம் 137. பாலை - உறையூர் முதுகூத்தனார்

ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்டசிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.

சிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டம் காடுகாண் காதையில்

நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்


பொய்கையாழ்வார் முதலாம் திருவந்தாதியில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்திருவரங்க மேயான் திசை(2087)


பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில்,
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும் நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள் மாவாய் பிளந்த மகன்(2209)


பூதத்தாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில்
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு(2343)


உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் திருவரங்கம் இருக்கும் திசை நோக்கித் தொழுதாலே போதும் என்று ஆன்றோர் வாக்கு.  இந்தத் தலத்தின் சந்திர புஷ்கரிணியில் நீராடி திருவரங்கனை தரிசிப்பதற்கு ஈடு, இணை இல்லை என்று சொல்லப்பட்டாலும் இந்தத் திருவரங்கம் இருக்கும் திசையை வணங்கினாலே மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப் படுகிறது.   இங்குள்ள சந்திர புஷ்கரிணி, பள்ளிகொண்ட ரங்கநாதர் தோன்றும் போதே அனந்த பீடத்தோடு தோன்றியதாகவும் கூறப்படும்.  அதன் வரலாறு வருமாறு:


ஒருமுறை கங்கை, காவிரி, யமுனை போன்ற புண்ணிய நதிகள் தங்கள் கன்யாரூபத்தோடு இமயமலை அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது வெண்ணில் சென்ற கந்தர்வன் ஒருவன் அத்தனை நதிகளையும் கன்யாரூபத்தில் பார்க்கவே அவர்களை வணங்கினான்.  அங்கிருந்த ஒவ்வொரு நதிப் பெண்ணும் அந்த கந்தர்வன் வணங்கியது தன்னையே எனக் கூற அவர்களுக்குள் வாக்குவாதம் ஆரம்பமாயிற்று.  மற்ற நதிப் பெண்கள் விலகிக் கொள்ள, கங்கையும், காவிரியும் மட்டும் விவாதத்தைத் தொடர்ந்தனர்.  இதற்கு ஒரு முடிவில்லாமல் போகவே இருவரும் விஷ்ணுவை நாடினார்கள்.  அவர் கங்கை தன் பாதத்தில் தோன்றியதால் கங்கையே பெரியவள்.  கந்தர்வனின் வணக்கமும் கங்கையையே சாரும் என்று சொல்லிவிடுகிறார்.  காவிரி துக்கத்தில் ஆழ்ந்து போகிறாள்.  கங்கையை விடவும் தான் பெரியவள் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தவம் இருக்கிறாள்.  அவள் தவத்தில் மகிழ்ந்த மஹாவிஷ்ணு, வரும் காலத்தில் அவள் மடியில் சயனிப்பதாகவும், அதற்கான காலம் வந்துவிட்டதாகவும், அந்தச் சமயம் அவள் கங்கையை விடவும் மகிமை பொருந்தியவளாக ஆவாள் எனவும் வரமும், வாக்கும் கொடுக்கிறார்.


அதே போன்ற சமயம் வந்து விட்டதாலும், பாரதத்தை விட்டுப் போக மனமில்லாமலும், சூரிய குலத்தைச் சேர்ந்த சோழன் தர்ம வர்மாவின் பக்திக்காகவும், ஸ்ரீரங்கநாதர் இங்கேயே இருக்கவேண்டும் என தவமிருந்த சோழநாட்டு மக்களின் பக்திக்காகவும்,  இப்படி எல்லாத்துக்காகவும் அரங்கன் இங்கேயே இருந்துவிடுகிறார்.  அவர் இருந்த இடத்தைச் சுற்றுக் காவிரியின் மத்தியில் ஒரு தீவும், அனந்த பீடமும், சந்திர புஷ்கரிணியும் ஏற்படுகிறது.  ஆற்று நீர் எல்லாப் பக்கமும் சூழ மத்தியில் அமைந்துள்ள பகுதியை அரங்கம் என்று கூறுவார்கள்.  அதன்படி இந்தத் தீவானது இரு ஆறுகளின் மத்தியில் இருப்பதாலும், மஹாவிஷ்ணு பள்ளி கொண்டிருப்பதாலும், எப்போதும் ஸ்ரீ எனும் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் நிறைந்து காணப்படுவதாலும், ரங்கநாதர் பெயரான ரங்கத்தோடு ஸ்ரீயும் சேர்ந்து ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் எனப் பெயர் பெற்றது.  இங்கே ஸ்ரீரங்கத்தின் தெற்குப்பக்கம் ஓடும் காவிரி நதியானது பரமபதமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு வெளியே ஓடும் விரஜா நதிக்கு ஒப்பானது ஆகும்.

Friday, July 13, 2012

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!


அன்பார்ந்த நண்பர்களே,

வணக்கம்.  சிதம்பரம் குறித்த தொடரை எழுதும்போதே ஸ்ரீரங்கம் குறித்தும் எழுத ஆவலாக இருந்தது.  ஆனால் தகவல்கள் திரட்டுவது தான் எப்படி எனத் தெரியவில்லை.  தற்சமயம் ஸ்ரீரங்கவாசியாக ஆனதில் ஒரு சில தகவல்களைத் திரட்டி உள்ளேன்.  மேலும் தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கிறேன்.  இது வரையிலும் இருபது பக்கங்கள் எழுதி வைத்திருக்கிறேன்.  இதிலே தவறாக ஏதேனும் இருந்தால்ஸ்ரீரங்கவாசிகள் குறிப்பாக ஸ்ரீ வைணவர்கள் நம் மின் தமிழில் உள்ளவர்கள் தவறுகளையும் என் உளறல்களையும் தயங்காமல் சுட்டிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.  வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த ஆதாரங்கள், அரங்கன் உலா போன்றவற்றிற்கான சரியான தகவல்களுக்குக் காத்திருக்கிறேன்.   ஆதாரமற்ற தகவல்கள்  குறிப்பிடப் பட்டால் தயவு செய்து சுட்டிக் காட்டவும்.  பலரும் எழுதி இருப்பார்கள்.  ஆகவே புதியதாக எதுவும் இருக்காது என்றால் அதையும் மன்னிக்கும்படி வேண்டுகிறேன்.



வைணவர்களுக்கு 108 திவ்ய தேசங்கள் என மஹாவிஷ்ணு கோயில் கொண்டிருக்கும் இடங்களை முக்கியமாகச் சொல்லுவார்கள்.  அவற்றில் முதன்மையானது ஸ்ரீரங்கம்ஆகும்ஸ்ரீரங்கம் மிகவும் பழமையான கோயில் ஆகும்.  ஸ்ரீரங்கநாதர் இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த அரசர்களின் குலதெய்வம் ஆவார்.  ஸ்ரீராமர் அவதரித்த இக்ஷ்வாகு குலத்து மன்னரான இக்ஷ்வாகு ஒரு சமயம் பிரம்மாவை நோக்கித் தவம் இருந்தார். அவருக்கு பிரம்மாவிடம் இருந்த ஶ்ரீரங்க விமானத்துடன் கூடிய பெருமானின் அர்ச்சா விக்ரஹத்தை வைத்து வழிபட வேண்டும் என நீண்ட நாள் ஆவல்.  அதற்காக பிரம்மாவிடம் அதை வேண்டித் தவம் இருந்தார்.  பிரம்மாவிடம் ஸ்ரீரங்கவிமானத்தில் பள்ளி கொண்ட பெருமாளின் திருவுருவோடு கூடிய ஒரு அர்ச்சா விக்ரஹம் இருந்தது.  அதை பிரம்மா பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து பாற்கடலில் இருந்து பெற்றார்.  அந்த விமானத்தின் முன்னர் அமர்ந்த வண்ணம் நான்கு வேதங்களையும் பிரம்மா ஓதி இருக்கிறார்.  இந்த ரங்க விமானமும் பாற்கடலில் பள்ளி கொண்ட உருவில் இருந்த ஸ்ரீரங்கநாதரின் அர்ச்சா விக்ரஹத்தையும் வேண்டியே இக்ஷ்வாகு தவம் இருந்தார்.  பல்லாண்டுகள் தவம் செய்தார்.  அவரின் தவத்தின் கனல் பிரம்மலோகம் போய்த் தாக்க வேறு வழியின்றி பிரம்மா அவர் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்டார்.  இக்ஷ்வாகுவும் அவரிடம் இருக்கும் பெரிய பெருமாளின் அர்ச்சாவிக்ரஹம் அதைச் சார்ந்த ரங்க விமானத்துடனே தன்னிடம் அளிக்குமாறும் தானும், தன் வம்சாவளியினரும் அதைப் பூஜித்து வருவதாகவும் வேண்டினார். 

அப்படியே பிரம்மாவும் அந்த அர்ச்சா விக்ரஹத்தை இக்ஷ்வாகுவுக்கு அளித்தார்.  இக்ஷ்வாகுவும் அதைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீரங்கநாதரைத் தங்கள் குலதெய்வமாக வணங்கி வந்தான்.  இக்ஷ்வாகுவிற்குப் பின்னர் பல்லாண்டுகள் கழித்துச் சூரிய வம்சத்தில் இக்ஷ்வாகுவின் குலத்தில் தோன்றிய ஸ்ரீராமர் ராவண வதத்திற்குப் பின்னர் அயோத்தி வந்து பட்டம் சூட்டிக் கொண்ட சமயம் விபீஷணனும் அங்கே வந்திருந்தான்.  அவன் திரும்ப இலங்கைக்குச் செல்லும் சமயம் அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பிய ஸ்ரீராமர் அவனிடம் என்ன பரிசு வேண்டும் எனக் கேட்க, ஸ்ரீராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கநாதரையே தன்னிடம் அளிக்குமாறு கேட்கிறான் விபீஷணன்.     கொடுத்த வாக்கை நிறைவேற்ற எண்ணிய ஸ்ரீராமரும் அவ்வாறே விபீஷணனிடம் ரங்க விமானத்தோடு கூடிய ரங்கநாதரை அளிக்கிறார்.  பெருமானைத் தானே தாங்கிக் கொண்டு பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் ஆகாய மார்க்கமாக விபீஷணன் வந்தான்.  பெருமானுக்கோ பாரதத்தை விட்டோ அல்லது சூரியகுலத்தை விட்டோ செல்ல இஷ்டமில்லை போலும்.  ஒரு திருவிளையாடலை நடத்தித் தன்னை பாரதத் திருநாட்டிலேயே இருத்திக் கொண்டார்.

பெருமானைச் சுமந்து கொண்டு வந்த விபீஷணன் அதை எங்கேயும் கீழே வைக்கக்கூடாது என்ற உறுதியுடன் வந்து கொண்டிருந்தான்.  ஆனால் ஸ்ரீரங்கநாதரோ சூரியகுலத் தோன்றல்களிடமே இருக்க விரும்பினார்.   மாலை மயங்கும் நேரம்.  அன்றாட அநுஷ்டானங்களை விட முடியாது.  அதோடு இயற்கையின் உபாதை வேறு விபீஷணனுக்கு. கையில் வைத்திருந்த விமானத்தோடு கூடிய ஸ்ரீரங்கநாதரை எங்கேயும் கீழே வைக்கக் கூடாது.  பின் என்ன செய்வது?  சுற்றும் முற்றும் பார்த்தான்.  அங்கே ஒரு அந்தணச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.   நதி ஒன்று இரு பிரிவாகப் பிரிந்து மாலை போல் ஓடிக் கொண்டிருந்தது.  அது காவிரி என்பதைக் கண்டு கொண்ட விபீஷணன், அந்தச் சிறுவனை அழைத்து விக்ரஹத்தைக் கையில் வைத்துக்கொள்ளுமாறும், தான் நதியில் இறங்கி மாலை நேர அநுஷ்டானங்களை முடித்துவிட்டு வருவதாகவும் கூறி விக்ரஹத்தைக் கையில் கொடுத்தான்.  அந்தப் பிள்ளையோ மறுத்தது.  தன்னால் தூக்க முடியாது எனப் பிடிவாதம் பிடித்தது.  விபீஷணன் பிள்ளையைச் சமாதானம் செய்து அவனால் தூக்க முடியாமல் கனம் அதிகம் தெரிந்தால் தன்னை அழைக்குமாறு கூறிவிட்டுப் பிள்ளையின் கையில் கொடுத்தான்.  பிள்ளையும் வேறு வழியில்லை போல என நினைத்தாற்போல் குறும்புச் சிரிப்புடன் வாங்கிக் கொண்டது. 

சற்று நேரம் பொறுத்தது அந்தப் பிள்ளை.  விபீஷணன் திரும்பிப் பார்த்தான்.  பிள்ளையின் கைகளில் விமானம் பத்திரமாக இருந்ததைக் கண்டான்.  நதியில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டான்.  அவன் தலை நிமிர்வதற்குள்ளாக அந்தப் பிள்ளை விமானத்தைக் கீழே வைத்துவிட்டு ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டான்.  கோபம் கொண்ட விபீஷணன் ஓட்டமாக ஓடி வந்து விக்ரஹத்தை எடுக்க முனைந்தான்.  அவனால் முடியவில்லை. அந்தப் பிள்ளையைத் துரத்தினான்.  அது பிடிபடவே இல்லை.  ஒரே ஓட்டமாக ஓடியது.  ஒருவாறு பிடிக்க நினைத்தபோது எதிரே தோன்றியதொரு மலையில் ஏறிற்று.  மூச்சு வாங்கத் தானும் மலையில் ஏறிய விபீஷணன் அந்தப் பிள்ளையைப் பிடித்து உச்சந்தலையில் ஓங்கிக் குட்ட நினைத்தபோது அவன் கண்ணெதிரே காட்சி அளித்தார் பிள்ளையார்.  “அப்பனே, ஸ்ரீரங்கனுக்கு இங்கிருந்து செல்ல இஷ்டமில்லை. அதனால் என்னுடன் சேர்ந்து அவர் நடத்திய திருவிளையாடலே இது.” என்று கூற பிள்ளையாரைக் குட்ட வந்த விபீஷணன் தன் தலையில் தானே குட்டிக் கொண்டு, “விநாயகா, என் நாட்டில் பிரதிஷ்டை செய்ய நினைத்து எடுத்துச் செல்ல இருந்த விக்ரஹத்தை இங்கேயே விட்டுச் செல்ல எனக்கு மனம் வரவில்லையே!’ என வருந்த, “கவலை வேண்டாம் அப்பனே! ஸ்ரீரங்கநாதர் தெற்கு முகமாக முகத்திருமண்டலத்தை வைத்துக்கொண்டு உன் நாட்டைப் பார்த்த வண்ணமே குடி இருப்பார்.  உன் நாடு சுபிக்ஷமாக இருக்கும்.  எந்தக் குறையும் வராது.”  என ஸ்ரீரங்கநாதரும், பிள்ளையாரும் அருளிச் செய்தனர்.  இந்த வரலாறு ஸ்ரீரங்க மஹாத்மியத்தில் தர்ம வர்மா என்னும் சோழ மன்னனின் வேண்டுகோளின்படி விபீஷணனே விரும்பி விக்ரஹத்தை அளித்ததாய்ச் சொல்லப் படுகிறது.  மேலும் பிள்ளையாரைப் பிடித்து உச்சந்தலையில் விபீஷணன் குட்டியதாகவும், பிள்ளையார் எனத் தெரிந்ததும், தன் தலையில் தானே குட்டிக் கொண்டதாகவும் ஒரு ஐதீகம்.  அந்தக் குட்டு விழுந்த இடம் இன்றும் பிள்ளையாரின் தலையில் பள்ளமாய்க் காணப்படுவதாகவும் சொல்கிறார்கள்.   பிள்ளையாருக்கு விபீஷணன் வைத்துக்கொண்ட குட்டுக்களைத்தான் நாம் இன்றளவும் தொடர்கிறோம் என்றும் சொல்வார்கள்.   மேலும் பிள்ளையார் விபீஷணனிடமிருந்து தப்பிச் சென்ற இடம் தான் உச்சிப் பிள்ளையார் கோயில் என்றும் சொல்வார்கள்.

விபீஷணன் விக்ரஹத்தை எடுக்க முடியாமல் இலங்கை திரும்பியதையும் நடந்த விபரங்களையும் அப்போது சோழ நாட்டை ஆண்டு வந்த தர்ம வர்மா என்னும் மன்னன் தெரிந்து கொள்கிறான்.  அரங்கனுக்கு அங்கேயே ஒரு கோயில் கட்டி வழிபட்டான்.  நாளாவட்டத்தில் தர்மவர்மா காலத்திற்குப் பின்னர் காவிரியில் ஏற்பட்ட அதீத வெள்ளம் காரணமாக ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுர உச்சி வரை மண்மேடிட்டுக் காடுகள் ஏற்பட்டுக் கோயில் காட்டினடியில் மறைந்து போனது.  அவன் காலத்திற்குப் பின்னர் வந்த சோழன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தினடியில் சற்று இளைப்பாற அமர்ந்தான்.  அப்போது திடீரென ஸ்ரீரங்கநாதர் குறித்தும், அவரின் கோயில் குறித்தும் யாரோ ஸ்லோகமாய்ச் சொல்வது மன்னன் காதுகளில் விழுந்தது.  சுற்றும் முற்றும் பார்த்த மன்னன் மரத்தின் மேலே இருந்த ஒரு கிளி அது என அறிந்து கொண்டான்.  உடனேயே மன்னன் தன் ஆட்களை அழைத்து அங்கே தோண்டிப் பார்க்கச் சொன்னான்.  எதுவும் கிடைக்கவில்லை.  ஏமாற்றத்துடன் சென்ற மன்னன் கனவில் அன்றிரவு ஸ்ரீரங்கநாதரே தோன்றித் தாம் இருக்குமிடத்தைக் காட்டியருளினார்.

மன்னனும் காட்டை அழித்தான். மணலை நீக்கினான்.  கோயிலும், அதன் பிரகாரங்களோடு புதைந்திருப்பதும், ஸ்ரீரங்க விமானமும்,ஸ்ரீரங்கநாதரின் அர்ச்சா விக்ரஹமும் கிடைத்தது.   கோயிலை முன்னிருந்தவாறே திருத்தி அமைத்தான்.  தன்னுடைய நினவாகக் கிளி மண்டபத்தைக் கட்டினான்.  கிளியின் மூலம் இறைவன் இருக்குமிடம் தெரிந்ததால் கிளிச்சோழன் என்ற பட்டப் பெயரையும் பெற்றான்.  வைணவர்களுக்குக் கோயில் என்றால் திருவரங்கம் தான்.  அதே போல் அவர்கள் திருமலை என்றால் திருப்பதிக் கோயில் தான்.  பெருமாள் கோயில் என்றால் காஞ்சிபுரம் பெருமாள் கோயிலைக்குறிக்கும்.  இந்தக் கோயில் அவர்களுக்கு முதன்மை பெற்றதாக ஆனது.  ஸ்ரீ என்னும் வடமொழி எழுத்துக்குப் பதிலாக திரு சேர்த்து திரு சீரங்கநாதன் பள்ளி/(அரங்கன் பள்ளி கொண்டிருப்பதால்) என்ற பெயரால் அழைத்து வந்தனர்.  பின்னர் அதுவே மருவி திருச்சிராப்பள்ளி என ஆனது என்று சிலர் கூற்று.  இன்னும் சிலர் உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்டிருக்கும் மலையின் மூன்று சிகரங்களை வைத்து திரி=மூன்று, சிகரங்கள் உள்ள பள்ளி என்ற திரிசிகரப் பள்ளி என்றும், இன்னும் சிலர் சிரா என்னும் சமண முனிவரின் பள்ளி இந்த மலையில் இருந்ததால் திரிசிராப்பள்ளியே திருச்சிராப்பள்ளி என்றானது என்றும் கூறுகிறார்கள்.  திரிசிரன் என்ற மூன்று சிரங்களை உடைய இவ்வூரில் இருந்து வழிபட்டு வந்தமையால் இந்தப்பெயர் பெற்றதாகவும் கூறுவார்கள்.  ஆனால் நாம் இப்போது பார்க்கப் போவது ஸ்ரீரங்கம் மட்டுமே.  வடக்கே கொள்ளிடம் சுற்றிவர, தெற்கே காவிரி அணைத்துவர நடுவே பள்ளி கொண்டிருக்கிறார் ஸ்ரீரங்கநாதர்.  இது தான் பழங்காலத்திலே சொல்லப்பட்ட நாவலந்தீவு என்பாரும் உண்டு. 

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அச்வாரூடர்!

பிட்டைக் கூலியாகப் பெற்ற ஈசன் அதை உண்டார்.  நீர் அருந்தினார்.  வைகைக் கரைக்குச் சென்றார்.  அங்கே போய் மண்வெட்டியால் மண்ணை அள்ளுவது போல் போக்குக் காட்டினார்.  ஆனால் எதுவும் செய்யவில்லை.  பின்னர் திரும்பி வந்து தலையில் சும்மாடு கட்டி இருந்த துணியை எடுத்துக் கீழே விரித்துப் படுத்துவிட்டார்.


3017. வெட்டுவார் மண்ணை முடி மேல் வைப்பார் பாரம் எனக்  
கொட்டுவார் குறைத்து எடுத்துக் கொடு போவார் சுமடு  
                                   விழத்  
தட்டுவார் சுமை இறக்கி எடுத்து அதனைத் தலை படியக்  
கட்டுவார் உடன் சுமந்து கொடு போவார் கரை சொரிவார்.  
 
3018. இவ் வண்ணம் இவர் ஒருகால் இருகால் மண் சுமந்து  
                                   இளைத்துக்  
கை வண்ண மலர் கன்றக் கதிர் முடிமேல் வடு அழுந்த  
மை வண்ணன் அறியாத மலர் அடி செம் புனல் சுரந்து  
செவ் வண்ணம் படைப்ப ஒரு செழும் தருவின் மருங்கு  
                                   அணைந்தார்.  
 
3019. தரு மேவும் மலை மகளும் சலமகளும் அறியாமல்  
திரு மேனி முழுது நிலமகள் தீண்டித் திளைப்பு எய்தக்  
குரு மேவு மதி முடியைக் கூடை அணை மேல் கிடத்தி  
வரும் மேரு அனையார் தம் வடிவு உணர்ந்து துயில்  
                                       கின்றார். 
பின்னர் மீண்டும் எழுந்து மண் அணைப்பவர் போல் கூடையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு ஆற்றின் கரையில் கொட்டுவார். கூடையும் அப்படியே ஆற்றில் விழுந்துவிட்டது போல் பாவனை காட்டுவார்.  உடனே ஆற்றில் குதித்துச் சென்று நீந்திக் கூடையை எடுத்துக் கொண்டு கரையேறுவார்.  கரையேறியதும் மீண்டும் பசிக்கிறது எனக் கூறிப் பிட்டை வாங்கி உண்பார்.  உண்டதும் உறங்குவார்.  இப்படியே வேலை நடந்து கொண்டிருந்தது.  மன்னன் வேலை நடப்பதைப் பார்க்க அங்கே வந்தான். எல்லாருடைய பங்கிலும் மணல் கொட்டி கரை அடைக்கப்பட்டிருக்க வந்தியின் பங்கில் மட்டும் அடைபடாமல் இருப்பதைக் கண்டான்.  இது யார் பங்கு எனக் கேட்க எல்லாரும் வந்தியின் பங்கு, அவள் ஓர் ஆளை அமர்த்தி அடைக்கச் சொல்லி இருக்கிறாள்.  ஆனால் அவனோ வந்ததில் இருந்து ஒரு வேலையும் செய்யவில்லை.  வேலை செய்பவர்கள் கவனத்தையும் சிதற அடித்துக் கொண்டு இருக்கிறான் எனப் புகார் சொன்னார்கள். மன்னனுக்குக் கோபம் வந்தது. " யார் அவன்? எங்கே இருக்கிறான்?" என்று கேட்க அனைவரும் கரையில் ஒரு பெரிய மரத்தின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்த ஈசனை அடையாளம் காட்டினார்கள்.  

அதைக் கண்ட மன்னன் கோபம் பொங்கத் தன் கைப்பிரம்பை எடுத்து அந்த ஆள் எனக் காட்டப்பட்ட ஈசன் முதுகில் ஓங்கி ஓர் அடி அடித்தான். அவ்வளவு தான், அருகே இருந்த கூடையை எடுத்து அதை மணலால் நிரப்பி மணலோடு உடைப்பில் கொட்டினான் அந்த ஆள். அடுத்த கணம் ஜோதி வடிவில் மறைந்தான்.  ஆனால் அவன் அடித்த அடியோ அங்கிருந்த அனைவர் முதுகிலும் பட்டது.  பாண்டியன் தன் முதுகில் யாரோ தன்னை ஓங்கி அடித்ததைப்போல் உணர்ந்தான்.  அங்கிருந்த அமைச்சர்கள், வீரர்கள், கூலியாட்கள், பெண்கள், ஆண்கள் என வேறுபாடில்லாமல் அனைவர் மேலும் பட்டது.  அவ்வளவு ஏன் சின்னக் குழந்தைகள் முதுகிலும் சுரீர் என அடி படக் குழந்தைகள் அலறின.  குதிரைகள், யானைகள், ஆடுமாடுகள் என அனைத்தின் மேலும் அடி பட்டது.  சூரிய சந்திரர் மேலும், நக்ஷத்திரங்கள் மேலும், மலை, மடு, ஆறு, நதி, கால்வாய் என அனைத்தின் மேலும் அடி சுரீர் எனப் பட்டது.  வந்தவர் சாதாரண ஆளில்லை என்பதை மன்னன் உணர்ந்தான்.  

விண்ணிலிருந்து அசரீரி கேட்டது. "மன்னா!  மாணிக்கவாசகர் குற்றமற்றவர்.  அவர் மாபெரும் சிவத் தொண்டர்.  அவரைச் சிறையில் அடைத்து வைத்து நீ கொடுமைப் படுத்தியதாலேயே உன்னைச் சோதித்தேன்.  அவர் உன் கஜானாவின் பணத்தை நமக்காகக் கோயில் எழுப்பச் செலவு செய்திருக்கிறார்.  நீ அவரை அரச பதவியிலிருந்து விடுவித்து விடு.  எம்மைப் பாடிப் பரப்பவே அவர் பிறவி எடுத்திருக்கிறார். இனி எல்லாம் முன்னர் இருந்தது போல் ஆகும்." என்று கூற, மன்னனும் தன் தவறை உணர்ந்து மணிவாசகரிடம் மன்னிப்புக் கேட்டான்.  மணிவாசகருக்காக ஈசன் குதிரைப் படைத் தலைவனாக வந்த சொரூபமே அச்வாரூடர் ஆகும். இத்துடன் சிவ வடிவங்கள் முடிவடைந்தன. இனி ஸ்ரீரங்கம் பற்றிய ஒரு சிறு தொடர் ஆரம்பிக்கும்.  கொஞ்சம் அதற்கான முன்னேற்பாடுகளில் இருக்கிறேன்.  ஆகவே தாமதம் ஆகும்.

3042. வள்ளல் தன் கோபம் கண்ட மாறு கோல் கையர் அஞ்சித்  
தள்ளரும் சினத்தர் ஆகித் தடக்கை தொட்டு ஈர்த்துப்  
                                      பற்றி  
உள்ளடு புறம் கீழ் மேலாய் உயிர் தொடும் ஒளித்து  
                                      நின்ற  
கள் வனை இவன் தான் வந்தி ஆள் எனக் காட்டி  
                                      நின்றார்.   
 
3043. கண்டனன் கனன்று வேந்தன் கையில் பொன் பிரம்பு  
                                   வாங்கி  
அண்டமும் அளவு இலாத உயிர்களும் ஆகம் ஆகக்  
கொண்டவன் முதுகில் வீசிப் புடைத்தனன் கூடையோடு  
மண் தனை உடைப்பில் கொட்டி மறைந்தனன் நிறைந்த  
                                   சோதி.   
 
3044. பாண்டியன் முதுகில் பட்டது செழியன் பன்னியர்  
                           உடம்பினில் பட்டது  
ஆண் தகை அமைச்சர் மேனி மெல் பட்டது அரசு இளம்  
                           குமரர் மேல் பட்டது  
ஈண்டிய கழல் கால் வீரர் மேல் பட்டது இவுளி மேல்  
                           பட்டது பருமம்  
பூண்ட வெம் கரிமேல் பட்டது எவ் உயிர்க்கும் போதன்  
                           மேல் பட்ட அத் தழும்பு.   
 
3045. பரிதியும் மதியும் பாம்பும் ஐங் கோளும் பல் நிறம்  
                              படைத்த நாள் மீனும்  
இரு நிலம் புனல் கால் எரி கடும் கனல் வான் எனும்  
                              ஐம் பூதமும் காரும்  
சுருதியும் ஆறு சமய வானவரும் சுரர்களும் முனிவரும்  
                              தொண்டின்  
மருவிய முனிவர் கணங்களும் பட்ட மதுரை நாயகன்  
                              அடித் தழும்பு.