எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, March 26, 2013

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், வைகுண்ட ஏகாதசி முடிவு!


இராப்பத்தின் முடிவு நாளன்று நம்மாழ்வார் மோட்சம் தான்.  பத்து நாட்களாக பரமபதமாகிய வைகுந்த வாசலுக்கு ஒவ்வொரு படியாக வந்து கொண்டிருந்த நம்மாழ்வாருக்கு அன்று இறைவன் பரமபதத்தை அருளுகின்றான்.

“கெடுமிடராய வெல்லாம் கேசவாவென்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும்குறுககில்லார்” 

நம்மாழ்வார் ஆழ்ந்து அநுபவித்துத் தம் திருவாய்மொழியில், “கேசவன்” என்னும் பெயரைச் சொன்னாலே போதும்;  துன்பங்கள் அனைத்தும் கெட்டு ஓடிவிடும்;  நமக்கு இந்த ஞானம் பிறக்கும் முன்னர் நாம் செய்த பாவங்களும், பிறந்த பின்னர் மறந்து போய்ச் செய்யும் அனைத்துப் பாவங்களும்,  அனைத்தும் அழிந்து போகும்.  நாள்தோறும் எவருடைய உயிரையேனும் எடுக்க வேண்டி கொடிய செயலைச் செய்து கொண்டிருக்கும் யமனும் நெருங்க மாட்டான்.” என்கிறார்.  இதைத் தான் ஆண்டாள்,”தீயினில் தூசாகும்!” என்றாள்.

தினம் போலவே இன்றும் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளுவார்.   இராஜ நடை, சிம்ம நடை போன்ற நடைகளில் நடந்து ஆஸ்தானம் எனப்படும் மணிமண்டபத்துக்கு வந்து சேருவார்.  சாற்றுமுறை துவங்குகிறது. 

“தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும்நான்குடைச் சுரிகுழல்கமலக்கண்கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே”  

என்னும் பாசுரத்துடன் தொடங்கும் சாற்றுமுறை எட்டாம் திருவாய்மொழியுடன் நிறுத்தப்படுகிறது.  நம்மாழ்வாருக்கு மோட்சத்தை அளிக்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார் என்பதை உறுதி செய்யும் வகையில் பரமபத வாசல்கள் திறக்கப்படுகின்றன.  பட்டர்கள் மிக மிக அருமையாக ஒரு குழந்தையைக் கையாளுவதைப் போல திருக்கைத்தல சேவையின் மூலம் நம்மாழ்வாரை எம்பெருமான் திருவடியில் சரணாகதி செய்விக்கின்றனர்.  அப்போது அவர்கள்


சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின
பூரணபொற்குடம் பூரித்தது 
உயர் விண்ணில் கீதங்கள் பாடினர் 
கின்னரர்கெருடர்கள் கணங்கள்
வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்

வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்
வைகுந்தன்தமர்எமர் எமதிடம்புகுதென்று
வைகுந்த்தமரரும் முனிவரும்வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே

விதிவகைபுகுந்தனரென்று நல்வேதியர்
பதியினில்பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும்நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும்
மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே.

என்ற பாசுரங்களைப் பாடுகின்றனர்.  பின்னர் பத்தாம் திருவாய்மொழி துவங்குகிறது.

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
தனியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே!”


என்றெல்லாம் பாடி நம்மாழ்வார் எம்பெருமானை என்னை எங்கேயும் அனுப்பிவிடாதே!  உன் பக்கமிருந்து உன் திருவடி சேவை தவிர வேறெதுவும் வேண்டாம் என வேண்டுகிறார்.   நம்மாழ்வார் எம்பெருமானின் திருவடி தொழுதல் என்னும் இந்நிகழ்வுக்காக பட்டர்கள் நம்மாழ்வாரைத் தங்கள் கரங்களில் தாங்கிய வண்ணம் எம்பெருமானை மூன்றுமுறை சுற்றி வந்து நம்மாழ்வாரைப் பெருமாளின் திருவடிகளில் தொழ வைக்கின்றனர்.  நம்மாழ்வாரை நம்பெருமாளின் திருவடிகளில் சேர்ப்பித்ததும், துளசியால் அபிஷேஹம் செய்து அவரை மூடுகின்றனர்.  பின்னர் சாம்பிராணிப் புகை போடவும் சிறிது நேரம் அந்தப் புகையில் நம்மாழ்வாரும், நம்பெருமாளும் தனித்துப் பேசிப்பாங்க போல!



எம்பெருமானிடம் சரணாகதி செய்து வைணவப் பரிபாஷையில் திருநாட்டுக்கு எழுந்தருளிய நம்மாழ்வாரை, பட்டர்கள் இவ்வுலகத்து மாந்தர்கள் உய்ய வேண்டி திரும்பத் தரும்படி வேண்டுகின்றனர்.  நம்பெருமாளும் அதை ஏற்று,  “தாம், தோம், தீம், தந்தோம், தந்தோம், தந்தோம்!” எனத் திரும்பத் தருகின்றார்.  நம்மாழ்வாரின் மேலுள்ள துளசிதளங்கள் அகற்றப்பட்டு நம்மாழ்வார் திரும்ப  ஆஸ்தானம் எழுந்தருளுகிறார்.  பின்னர் அனைவருக்கும் தீபாராதனை காட்டிய பின்னர் நம்மாழ்வார் மோட்சம் நிறைவு பெறுகிறது.

இந்த மோட்சத்தன்று நேரில் பார்க்கும் பக்தர்களில் கண்ணீர் விடாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

Sunday, March 24, 2013

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! இராப்பத்து எட்டாம் நாள்


அவ்வளவு நேரமாகத் தான் தன் குதிரையில் இந்த மணமகனைத் துரத்தியதும், நகைகளைக் கழட்டச் சொன்னதும், அவன் பயந்து ஓடியதும் நினைவில் வர மீண்டும் நிமிர்ந்து அந்த மணமகனைப் பார்த்தான் பரகாலன் என்னும் நீலன்.  அப்போது, “நீ கலியன்!” எனச் சொல்லிச் சிரித்தான் அந்த மணமகன்.  என்ன? என ஓங்கி அதட்டிவிட்டு மீண்டும் அந்த மெட்டியைக் கழற்ற முயன்ற காதுகளில்  மீண்டும் ஒலித்தது “ஓம் நமோ நாராயணாய!”  நிமிர்ந்து நோக்கினான் கலியன் என அழைக்கப்பட்ட நீலன்.  அங்கே அவன் கண்டது என்ன?



சங்கு சக்ரதாரியாக, மார்பில் வைஜயந்தி மாலையும், ஸ்ரீவத்ஸமும் துலங்க, ஸ்ரீயானவள் மார்பில் துலங்க அபய ஹஸ்தம் காட்டிக் கொண்டு, வாயில் குமிண் சிரிப்புடனும், கமல நயனங்களுடனும், பரிமள கந்த கஸ்தூரித் திலகத்துடனும், காட்சி கொடுப்பது யார்?  தான் காண்பது கனவா? தன்னைத் தானே உலுக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான் கலியன்.  அங்கே அவன் கண்டது கனவில்லை;  நனவே தான்.  சாக்ஷாத் பரந்தாமனைப் பார்த்தான் அங்கே.  அப்போது தான் தனக்கு உபதேசிக்கப் பட்ட மந்திரத்தின் முழுப்பொருளும் புரியவர, தன்னையும் அறியாமல் எம்பெருமானைத் துதிக்க ஆரம்பித்தான் கலியன் என அழைக்கப்பட்ட நீலன் என்னும் பரகாலன்.




வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்பெருந்துயரிடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்”


என்று ஆரம்பித்து பாசுரங்கள் பாட ஆரம்பித்தவர் பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திடுநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்ய நூல்களை அருளிச் செய்து திருமங்கையாழ்வார் என்னும் பெயரைப் பெற்றார்.  இவர் பெயரில் ஸ்ரீரங்கம் கோயிலில் திருப்பணி செய்த குறிப்புகளும் கிடைக்கின்றன.  இவர் வேண்டிக் கொண்டதால் ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி அன்றும் முன்னர் ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரிலிருந்து நம்மாழ்வார் புறப்பட்டு வந்து பரமபத சேவையையும் மோட்சத்தையும் பெற்று வந்தார் என அறிகிறோம்.  தற்சமயம் ஸ்ரீரங்கம் கோயிலிலேயே நம்மாழ்வார் விக்ரஹப் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதால் இங்கேயே நம்மாழ்வார் எழுந்தருளி இருக்கிறார்.  அடுத்து நாம் பார்க்கப் போவது நம்மாழ்வார் மோட்சம் தான்.


Wednesday, March 20, 2013

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், இராப்பத்து உற்சவம்!



பல  மாதங்கள் கழித்து இந்தப் பக்கத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இராப்பத்து உற்சவம் தொடங்குவதில் நிறுத்தி இருந்தேன்.  அதன் பின்னர் அடுத்தடுத்து விருந்தினர் வருகை, உடல் நலக்கேடு எனக் கணினி கிட்டே அவசியத்துக்கு மட்டும் வரும்படி ஆகி விட்டது.  ஆகவே இந்தப் பதிவை இப்போது தான் எழுதவே ஆரம்பிக்கிறேன்.  எழுதிவிட்டு உடனே போட எண்ணம்.  இராப்பத்தின் ஒவ்வொரு நாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆஸ்தானமிருந்துவிட்டு மூலஸ்தானம் திரும்பும் பெருமாள் வீணாகானத்தை ஏகாந்த சேவையில் கேட்ட வண்ணம் திரும்புவார்.  இராப்பத்தின் ஏழாம் நாள் தான் பிரபலமான திருக்கைத்தல சேவை.  அன்று பட்டாசாரியார்கள் தங்கள் கரங்களிலேயே பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு நம்மாழ்வாருக்கு எதிரே சேவை சாதிப்பார்கள்.  நம்மாழ்வார் நாச்சியார் திருக்கோலத்தில் அன்று காணப்படுவார்.  இவரைத் தான் பராங்குச நாயகி என்பார்கள்.  அவர் பாடிய பிரபந்தப் பாடல் ஒன்று கீழே காணலாம்.

வண்டுகளோ! வம்மின்! நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண்பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்ஏனம் ஒன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டு கள்வாரும் மலர் உளவோ நும்வியல் இடத்தே?

இவர் தம்மை நாயகியாகவும், பெருமாளை நாயகனாகவும்  பாவித்துக் கொண்டு பாடியவை இவை.  இறைவனை மனக்கண்ணில் கண்ணாரக் கண்டு அவனோடு தாம் பெற்ற இன்பத்தை அப்படியே சொல்லுகிறார்.  நெஞ்சம் திருமாலைத் தவிர வேறொருவரை நினைக்கக் கூடாது;  நாவும் அவன் திருநாமத்தை வாழ்த்திப் பாட வேண்டும்.  இவ்வுலகைப் படைத்துக் காத்து ரக்ஷிக்கும் திருமாலை வாழ்த்திப் பாடுவது அல்லாமல் இப்பிறவி எடுத்ததன் பயன் என்ன என்று கேட்கிறார் நம்மாழ்வார்.   இந்த இராப்பத்துத் திருநாட்களில் நம்மாழ்வாருக்கே முக்கியத்துவம்.  இவ்விதம் ஸ்ரீரங்கநாதனிடம் வேண்டிப் பெற்றவர் பரகால நாயகி என அழைக்கப்பட்ட திருமங்கை ஆழ்வார்.  நம்மாழ்வார் பராங்குச நாயகியாகத் தம்முள்ளே தனது ஆழ்ந்த பக்தியில் கொண்ட விரகதாபத்தினால் பராங்குச நாயகியானார் எனில் பரகால நாயகியான திருமங்கை ஆழ்வாரோ பெருமாளையே கொள்ளை அடித்தவர்.  இந்த இராப்பத்துத் திருநாளின் ஏழாம் நாள் திருக்கைத்தல சேவைக்குப் பின்னர் எட்டாம் நாளன்று தான் இந்தத் திருநாட்கள் ஏற்படவே காரணகர்த்தாவான திருமங்கை ஆழ்வாரின் வேடுபறி உற்சவம் நடைபெறும். 

பெருமாளுக்குச் சேவை செய்வதற்காகப் பணம் இல்லை என வழிப்பறிக் கொள்ளை செய்தவர் திருமங்கை ஆழ்வார்.  இவர் பெருமாளிடம் கொண்ட பக்தி எப்படிப் பட்டது தெரியுமா?

“வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த
  வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்
  எல்லாரும் என்றன்னை ஏசிடினும் பேசிடினும்
  புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே”

வில்லால் இலங்கையையே ஒரு கை பார்த்த ஸ்ரீராமனின் பின்னே சென்றுவிட்டதாம் அவர் மனம்.  யார் என்ன சொன்னாலும் ஏன் அந்தப் பெருமானே பொய் சொல்லி இருந்தாலும் அதைக் கேட்டுக் கொண்டு நம்பி அவரையே வணங்கி வழிபட்டு இருப்பேன்.” அப்படினு சொல்கிறார்.  இவர் தான் ஒரு சமயம் வழிப்பறியின் போது ஒரு திருமண கோஷ்டி வருவதாய்க் கேள்விப் பட்டுப் போய்க் காத்திருந்தார்.  வந்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.  சாக்ஷாத் ஸ்ரீமந்நாராயணனும், ஸ்ரீதேவியுமே மணமகனும், மணமகளுமாய் வந்தனர்.  தேவாதி தேவர்கள் உறவினர் கோலத்தில் கூட வந்தனர்.  பார்த்தார் கலியன்.  (கலியன் யாருனு கேட்கிறவங்களுக்கு, திருமங்கை ஆழ்வாரின் பெயர் கலியன் ஆகும்.) ஆஹா, நல்லதொரு வேட்டை தான் இன்னிக்கு. அப்படினு நினைச்சார்.  திருமண கோஷ்டி எதிர்பாராவண்ணம் அவர்களைத் தாக்கினார்.  ஆஹா, ஆனால் இந்த கோஷ்டியோ இதுக்குத் தானே காத்திருந்தது!  அவர்கள் தப்பி ஓடுவது போல் ஓட, கலியன் துரத்த, அங்கே ஒரு நாடகமே நடத்தப் பட்டது. கலியனுக்கு அது புரியவில்லை. காரியத்திலேயே கண்ணாக இருந்தார்.  உறவினர்கள், கல்யாண கோஷ்டியினர் அனைவர் பொருட்களும் கவரப் பட்டன.  இனி மிச்சம் இருப்பது, பெண்ணும், மாப்பிள்ளையும் தான்.  அவர்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம்னு சுற்றி உள்ளவர்கள் கேட்கக் கேட்க கலியன் விடவில்லை. பெண்ணை நகைகளை எல்லாம் கழட்டித் தரச் சொல்ல ஸ்ரீதேவியும் அவ்வாறே செய்தாள்.  அடுத்து மணமகன்.  மணமகனின் அனைத்து ஆபரணங்களும் கழட்டப்பட்டன.  மணமகன் பயந்த வண்ணம் ஓடுவது போல் பாவனை செய்ய, கலியனோ விடவில்லை.  இரு கைகளாலும் மணமகன் கைகளைப் பற்றி எல்லா நகைகளையும் கொடுத்தாச்சா என சோதனை செய்தார்.

ஆஹா, காலில் மெட்டி காணப்படுகிறதே.  ஆம், அந்த நாட்களில் பெண்ணிக்குத் திருமங்கலநாண் பூட்டப் படுவது போல் ஆணுக்குக் காலில் மெட்டி அணிவிக்கப் படும்.  இது இந்த ஆண்மகன் திருமணம் ஆனவன் என்பதற்கான அடையாளம்.  அந்த மெட்டியையும் விடாமல் கலியன் கழட்டச் சொல்ல, பெருமாள் கழட்டுவது போல் நடிக்கிறார்.  அது வரவே இல்லை.  எப்படி வரும்! வரவிடாமல் தடுப்பது அவன் தானே.  கலியனுக்குக் கோபம் முற்றுகிறது.  மணமகனைப் பயமுறுத்துகிறான்.  பயந்தது போல் நடித்த மணமகன் கலியனையே கழட்டி எடுக்கச் சொல்கிறான்.  குனிந்து மணமகன் கால்களைப் பற்றுகிறான் கலியன்.  ஆஹா, என்ன பாக்கியம், என்ன பாக்கியம்.  ஆனாலும் புரியாமல் மெட்டியைக் கழட்டுவதிலேயே ஈடுபடுகிறான்.  அதுவா வராமல் சண்டித்தனம் செய்யத் தன் வாயை பகவானின் திருப்பாதங்களில் வைத்துப் பற்களால் கழட்ட முயல, கலியன் காதுகளில் மெல்லக் கேட்டது ஒரு உபதேசம்.

“ஓம் நமோ நாராயணாய!”