எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, November 12, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

இந்தச் சம்பவங்கள் எல்லாம் கற்பனை அல்ல. உண்மையாகத் தமிழகத்தில் நிகழ்ந்தவை. ஒரு சில கதா பாத்திரங்கள் மட்டுமே கற்பனை. மற்றபடி பிள்ளை உலகாரியர், வேதாந்த தேசிகர் போன்றோர் கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்ல. அரங்கனைத் தூக்கிச் சென்றதும் ஊர் ஊராக ஊர்வலம் சென்று அரங்கனை மறைக்கப் பாடுபட்டதும் உண்மையே. இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தது பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் ஆகும். 1323 ஆம் ஆண்டில் நடந்தவை. பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே குறைந்து கொண்டு வந்த சோழ சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரம், இறுதிக் கட்டத்தை அடைந்தபோது பாண்டியர் பேரரசர்களாக ஆகி இருந்தனர். பாண்டியர்கள் தமிழ்நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஆண்டு கொண்டிருந்தனர். பல பாண்டிய மன்னர்களும் சிறப்பாகவே ஆட்சி புரிந்து வந்தாலும் இவர்களில் மிகத் திறமைசாலியான குலசேகரப் பாண்டிய மன்னர் 1310 ஆண்டில் கொல்லப்பட்டார். அவருக்கு நேரடி வாரிசுகள் என ஐந்து பேர் இளவரசர்கள் என்னும் பெயரில் கிளம்பி நாட்டை ஐந்து துண்டாக்கி ஆட்சி புரிந்து வந்தனர்.

இவர்களின் ஒற்றுமைக் குறைவால் ஏற்கெனவே கொங்கு நாட்டுப் பகுதியிலும் அருண சமுத்திரம் என அப்போது அழைக்கப்பட்டு வந்த திருவண்ணாமலைப் பகுதியிலும் ஹொய்சாளர்களின் ஆட்சி நடந்து வந்தது.  மதுரையைப் பராக்கிரம பாண்டியர் ஆட்சி புரிந்து வந்தார். அந்தச் சமயம் தான் ஆரம்பத்தில் கூறியவாறு உல்லுக்கானின் படையெடுப்பு நிகழ்ந்தது. மற்றப் பாண்டிய மன்னர்கள் அவரவர் தலைநகரை விட்டு ஓடி ஒளியப் பராக்கிரமப் பாண்டியர் மட்டும் தைரியமாக உல்லுக்கானை எதிர்த்துப் போராடினார். ஆனாலும் நாம் சொன்ன மாதிரி பராக்கிரமப் பாண்டியர் தோற்றுப் போய்ச் சிறைப்பட்டார். மதுரை உல்லுக்கானின் ஆட்சிக்கு உட்பட நேரிட்டது. ஆனால் உல்லுக்கானுக்குத் தொடர்ந்து அங்கே இருக்க முடியாமல் தில்லியிலிருந்து அழைப்பு வரவே அவன் தனக்குப் பிரதிநிதியாக ஓர் ஆளை நியமித்தான். மாலிக் நேமி என்னும் அந்தப் பிரதிநிதி ஆளத் தொடங்கியதன் மூலம் தென் தமிழகம் துருக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டது.

இந்த மாலிக் நேமியின் ஆட்கள் தான் நாம் முந்திய அத்தியாயத்தில் பார்த்தவர்கள். அவர்கள் விடாமல் அரங்கன் ஊர்வலத்தாரைத் தொடர்ந்து சென்று எப்படியோ ஆறு பேர்களைப் பிடித்தார்கள். அவர்களில் வாசந்திகா என்னும் அரங்கனின் ஊழியத்துக்கு ஆட்பட்ட நாட்டியக்காரியும் ஒருத்தி. தப்பிச் செல்ல வழிவகை தெரியாமல் அகப்பட்டுக் கொண்டவள், எப்படியாவது குலசேகரன் வந்து தன்னைக் காப்பாற்றி அழைத்துச் செல்லுவான் என எதிர்பார்த்தாள். அரங்கனின் ராஜகிளியானது அவளுடனேயே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. சற்றைக்கொரு தரம் அது ரங்கா ரங்கா எனக் கூவிற்று. வாசந்திகாவுக்கு நேரம் ஆக ஆக குலசேகரன் வருவான் என்னும் அந்த நம்பிக்கை குறைந்தது. மதுரை நோக்கிச் செல்லும் ராஜபாட்டையில் ஓர் வண்டியில் அவளை ஏற்றி விட்டார்கள். மறுநாள் பொழுது இறங்கும் வேளையில் மதுரையை அடைந்தனர். அவளை அரண்மனைக்கு அப்போது ஆண்டு கொண்டிருந்த மாலிக் நேமியின் முன் அழைத்துச் சென்று நிறுத்தினார்கள்.

வாசந்திகாவின் அழகைப் பார்த்த மாலிக் நேமி அவளை ஓர் அரசகுமாரி என்றே நினைத்தான். இல்லை என்று அவள் சொன்னதை நம்பாமல் அவளைத் தன் அந்தப்புரத்திலேயே விடச் சொன்னான். அங்கே வாசந்திகா பல முறை சீரழிக்கப்பட்டாள். தப்பிக்கவும் முடியாமல் வாழவும் பிடிக்காமல் தவித்துக் கொண்டிருந்தாள் வாசந்திகா. ஒரு நாள் காலை தன் நிலையை எண்ணி எண்ணி அவள் வருந்தி அழுது கொண்டிருந்தாள். குலசேகரன் மட்டும் திரும்பி வந்து தன்னைக் காப்பாற்றி அழைத்துச் செல்லக் கூடாதா என்று எண்ணினாள். அவனையே நினைந்து வாழ்ந்து கொண்டிருந்த தனக்கு இத்தகைய கதி ஏற்பட்டதே என விம்மினாள். தன் கனவெல்லாம் பாழாகி விட்டதை எண்ணி எண்ணிக்கலங்கினாள். குலசேகரன் பெரும்படை திரட்டிக் கொண்டு வந்து தன்னை மீட்டுச் செல்லப் போவதாகக் கற்பனையில் கண்டு மகிழ்ந்தாள்.

ஆனால் அப்போது குலசேகரன் வேறு ஒரு காரியம் பண்ணிக் கொண்டிருந்தான்.

புரட்டாசி மாதம். மாலை வேளை. காவிரிக்குக் கிழக்கே இரு பிரயாணிகள் நதியைக் கடந்து அழகிய மணவாளம் என்னும் கிராமத்துக்குள் நுழைந்தனர். அந்தக் கிராமத்தில் இருந்த சிங்கப்பிரான் என்னும் பெரியவர் இல்லம் நோக்கிச் சென்றார்கள். அவர்களைக் குலசேகரன் என்றும் குறளன் என்றும் அடையாளம் கண்டு கொண்டார் சிங்கப்பிரான். அன்புடன் அவர்களை வரவேற்றார். சிங்கப்பிரான் ஆவலுடன் நடந்த விஷயங்களைக் கேட்டார். முக்கியமாக அரங்கன் இருக்குமிடம் தெரிய ஆவலுடன் காத்திருந்தார். முதலில் மௌனம் சாதித்தக் குலசேகரனும், குறளனும் பின்னர் சிங்கப்பிரானின் பதட்டத்தைக் கண்டு அரங்கன் அழகர்மலையில் ஒளிந்திருப்பதைக் கூறினார்கள்.

இதைக் கேட்ட சிங்கப்பிரான் மேலும் பதறினார். மதுரை துருக்கர் வசம் இருக்கும்போது மதுரைக்கு அருகே அழகர் மலையில் அரங்கனை வைத்திருப்பது சரியா எனக் கலங்கினார். ஆபத்து வந்துவிடுமே என்று அஞ்சினார். ஆனால் குலசேகரனோ மதுரைக்குத் தெற்கே துருக்கப்படைகள் இன்னமும் அதிகமாகவும் அடர்த்தியாகவும் பரவி இருப்பதாகக் கூறினான். தெற்கே கொண்டு செல்வது தான் ஆபத்து எனவும் அழகர் மலையில் ஓர் மறைவான தோப்பிற்குள் மறைவான இடத்தில் அரங்கனை மறைத்து வைத்திருப்பதாகக் கூறினார்கள். இங்கிருந்து சென்ற அனைத்து பரிசனங்களிலும் மற்றமக்களிலும் அனைவரும் ஆங்காங்கே சிதறிப் போயோ அல்லது இறந்தோ அல்லது காணாமலோ போய்விட்டதாகவும் இப்போது எஞ்சி இருப்பது பனிரண்டே நபர்கள் தான் எனவும் அவர்கள் பொறுப்பில் தான் அரங்கன் இருப்பதாகவும் கூறினார்கள். 

Wednesday, November 08, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

குலசேகரனிடம் தன் உணர்ச்சிகளின் எதிரொலியை எதிர்பார்த்த வாசந்திகா ஏமாற்றமே அடைந்தாள். பின்னர் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள். குலசேகரனுக்கு அவள் மனம் புரிந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஊர்வலம் கிளம்ப ஆரம்பித்து விட்டது. ஆகவே அதில் போய் இணைந்து கொண்டான். இரண்டு நாட்கள் இடைவிடாப் பயணம் செய்து மூன்றாம் நாள் எங்கே தங்குவது என யோசிக்கையில் பிள்ளை உலகாரியரின் உடல்நிலை மோசமான செய்தி பரவியது. காட்டு மார்க்கத்தைக் கைவிட்டு விட்டு அருகில் உள்ள ஊரான ஜோதிஷ்குடியை நோக்கிப் பயணம் ஆனார்கள். இந்த ஜோதிஷ்குடி என்பது தற்போது காளையார் கோயில் என்னும் பெயரில் இருப்பதாகத் தெரிய வருகிறது. கிட்டத்தட்ட  மதுரை அருகில் உள்ளது. கொடிக்குளம் என்னும் பெயரிலும் வழங்கி வருகிறது.

இங்குள்ள கோயிலில் வேதநாராயணர் என்னும் பெயருடன் பெருமாள் அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலின் பின்னுள்ள குகையில் தான் நம்பெருமாள் என்று பிற்காலத்தில் பெயர் சூட்டப்படப் போகும் அழகிய மணவாளரை ஒளித்து வைக்கச் சொன்னார் பிள்ளை உலகாரியர். எனினும் இங்கும் அந்நியர்கள் பெருமாளைத் தேடி வந்ததாகச் சொல்கின்றனர். இங்குள்ள மலை உச்சிக்குப் பெருமாளைத் தன் கைகளால் தூக்கிக் கொண்டு பிள்ளை உலகாரியர் சென்று விட்டதாகவும் சொல்கின்றனர். பின்னர் எதிரிகள் அவ்விடம் விட்டுச் சென்றதும் திரும்பும் போது தவறிக் கீழே விழுந்து விட்டார் என்கின்றனர். அப்படி விழும்போது  அழகிய மணவாளருக்குச் சேதம் ஏற்படக் கூடாது என அவரை மார்போடு அணைத்தவண்ணம் மல்லாக்க விழுந்திருக்கிறார். ஆகையால் அவருக்கு முதுகில் பலத்த அடி பட்டிருக்கிறது. இதனால் அவர் உடல்நிலை மேலும் மோசமாகி ஆனி மாதம் ஜேஷ்ட சுத்த துவாதசி வளர்பிறையில் திருநாடு எய்தினார் என்கிறார்கள். சீடர்களிடம் அழகிய மணவாளரை ஒப்படைத்துப் பாதுகாக்கும்படியும் உரிய சமயத்தில் ஶ்ரீரங்கத்தில் சேர்ப்பிக்கும்படியும் சொல்லி இருக்கிறார். இவருக்கு ஓர் தனிச் சந்நிதி பிற்காலத்தில் காளையார் கோயில் என்னும் ஜோதிஷ்குடி என்னும் கொடிக்குளத்தில் பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

விதிமுறைப்படி அரங்கனின் பரிவட்டம், மாலைகள்  போன்றவற்றை உலகாரியருக்குச் சார்த்தி அவர் உடலுக்கு முறைப்படியான மரியாதைகள் செய்து அந்திமக் கிரியைகள் செய்து முடித்தார்கள். ஒரு மாதம் அங்கேயே தங்கி இருந்து உலகாரியருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் முறைப்படி செய்து முடித்தார்கள். கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டாலும் யாருக்கும் எங்கே போவது, எங்கே தங்குவது என்றே புரியவில்லை. இத்தனை நாட்களாக உலகாரியர் அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்தார். திருவரங்கத்துக்குச் சீக்கிரம் திரும்பி விடலாம் என நினைத்துக் கிளம்பிய இந்தப் பயணம் இத்தனை நாட்கள் ஆகியும் திருவரங்கம் செல்லும்படியான நிலையில் இல்லை. வழியெங்கும் தில்லி துருக்கர்கள் ஆங்காங்கே தங்கி நாடு, நகரங்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் எங்கே செல்வது?

மதுரை அருகே இருப்பதால் அங்கே செல்லலாம் எனச் சிலர் விருப்பமாக இருந்தது. இன்னும் சிலர் நெல்லைச் சீமைக்குப் போனால் பாதுகாப்பு என நினைக்கக் கடைசியில் ராமேஸ்வரத்திற்கும் மதுரைக்கும் இடையே தென் திசையில் பயணம் செய்ய முடிவானது. இரு நாட்கள் பயணம் செய்தார்கள். மூன்றாம் நாள் பயணத்தில் எதிரே ஓர் சிவிகையும் அதைச் சுற்றிப் பரிவாரங்களும் வருவது தெரிந்தது. பரிவாரங்கள் அனைவருமே பெண்களாகவும் இருந்தனர்.  அந்தப் பரிவாரங்களில் உள்ள சில பெண்கள் அரங்கன் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி அவர்கள் யார், எந்த ஊர் என்றெல்லாம் விசாரித்தனர். எங்கே போகிறார்கள் என்றும் விசாரித்தனர்.  அப்போது பேச்சுக்குரல் கேட்டுப் பல்லக்கில் இருந்து ஓர் பெண்மணி கீழே இறங்கினாள். நடுத்தர வயதுள்ள அவள் ராஜகுலத்தைச் சேர்ந்தவள் போல் காணப்பட்டாள்.

அந்தப் பெண்மணி தான் மதுரை அரசர் பராக்கிரம பாண்டியனின் பட்டத்து ராணி உலகமுழுதுடையாள் என்னும் பெயர் கொண்டவள் என்றும் மதுரையையும் தில்லித் துருக்கர் சூழ்ந்து கொண்டு போரிட்டதாகவும் தெரிவித்தாள். தீரத்துடன் போரிட்ட பாண்டிய நாட்டு மறவர்களுக்கும் அரசருக்கும் துர்க்கதி நேரிட்டு விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தாள்.  என்ன ஆயிற்று என விசாரித்த ஊர்வலத்தார் பாண்டிய மன்னர் இறந்துவிட்டாரா என்றும் வினவினார்கள். அதற்கு அவள் பாண்டியரை தில்லி வீரர்கள் சிறைப்பிடித்துச் சென்று விட்டதாகத் தெரிவித்தாள். மதுரை நகரில் உள்ள மக்கள் பெரும்பாலோர் ஊரை விட்டுச் சென்று விட்டதாகவும் தாங்களும் அதனால் தான் ஓடி வந்து விட்டதாகவும் கூறினாள்.

பின்னர் அவள் ஶ்ரீரங்கத்தின் நிலைமைக்கும் அரங்கனின் தற்போதைய நிலைமைக்கும் மனம் வருந்தி விட்டுத் தன் ஆபரணங்களை எல்லாம் கழற்றி அரங்கன் செலவுக்கும், சாப்பாட்டுக்கும் இருக்கட்டும் என்று கொடுத்தாள். கையில் இருந்த பொருளை எல்லாம் இழந்து விட்டு அரங்கனின் ஒரு வேளை நிவேதனத்துக்குக் கூடப் பொருளில்லாத நிலையிலும் அவர்கள் அந்த நகைகளை வாங்க மறுத்தனர். அரசகுலத்தாரின் உதவி தேவையில்லை என்றும் கூறினார்கள். அதற்கு ராணியோ அது தன் சொந்த நகைகள், பாரம்பரியச் சொத்து என்று கூறி வாங்கச் சொல்லி வற்புறுத்த வாங்கிக்  கொண்டார்கள். அதன் பின் ராணி புறப்பட்டுச் சென்று விட்டாள்.  அரங்கன் ஊர்வலம் தன் பாதையில் தொடர்ந்தது.

நான்காம் நாள் ஓர் சிற்றாற்றுப் படுகையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓர் சலசலப்புக் கேட்க சுற்றும் முற்றும் பார்த்தவர்களுக்கு ஆற்றின் கரையில் ஓர் உயரமான விளிம்பின் மேல் தில்லி வீரர்கள் குதிரையில் அணி வகுத்து நிற்பதைக் கண்டார்கள். திடுக்கிட்ட பரிசனங்கள் தாறுமாறாக ஓட ஆரம்பித்தனர். தில்லி வீரர்கள் உடனே ஆற்றில் இறங்கி அவர்களைத் தொடர முனைந்தார்கள். பரிசனங்கள் ஓட்டமாக ஓடினாலும் அரங்கன் பல்லக்கைத் தூக்கி வந்தவர்களால் அப்படி விரைவாகச் செல்ல முடியவில்லை. பின் தங்கி விட்டார்கள். அதற்குள் ஆற்றில் இறங்கி விட்ட தில்லி வீரர்கள் பின் தொடரத் தொடங்கி விட்டார்கள். அரங்கன் கதி என்னாகுமோ என அனைவரும் கலங்கும் சமயம் குலசேகரன் உருவிய வாளோடு அரங்கன் பல்லக்கை நெருங்கி அரங்கனைப் பீடத்தோடு சேர்த்துக் கட்டி இருக்கும் கயிற்றின் பிணைப்பைத் துண்டித்தான். இரு நாச்சியார்களின் பிணைப்பையும் துண்டித்தவன். நாச்சியார்களை ஶ்ரீபாதம் தாங்கிகள் இருவரிடம் கொடுத்து எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து செல்லும்படி கூறினான்.

பல்லக்கை அப்படியே விட்டுவிடச் சொல்லி விட்டு அரங்கனை அவன் தன் கைகளில் எடுத்துக் கொண்டான். மார்போடு அணைத்துக் கொண்டு அங்கிருந்த மச்சக்காரனின் குதிரையில் ஏறி குதிரையை விரட்டி அடித்தான். குதிரை வேகமாகப் பறந்தது! குலசேகரனும் பறந்தான்.

முதல் பாகம் முற்றியது!





Saturday, November 04, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

மறு நாள் காலையில் அவர்கள் தண்டு இறங்கி இருந்த இடத்தில் பிள்ளை உலகாரியரைப் பார்த்த அவருடைய அணுக்கத் தொண்டரான "விளாஞ்சோலைப் பிள்ளை" என்பார் உலகாரியரின் நிலையையும் திருவரங்கத்தை விட்டு வர நேர்ந்ததையும் அரங்கன் இப்படி ஊர் ஊராகச் சுற்ற வேண்டிய அவலநிலையையும் எண்ணி எண்ணி அழுதார். அதற்குப் பிள்ளை உலகாரியர்,"இதுவும் அரங்கன் லீலை" என்றே எண்ணிக் கொள்ள வேண்டும் என விளாஞ்சோலைப் பிள்ளைக்குச் சமாதானம் சொன்னார்.  இதைத் "திருவரங்கன் உலா"வாகக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். மேலும் அரங்கன் மேல் தீராத பக்தி கொண்டு அவனையே சரண் அடைந்தவர்களுக்கு அரங்கன் மேல் பக்தி ஒருக்காலும் குறையாது எனவும் எந்தத் துயரத்தையும் ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள் எனவும் அப்படி எண்ணினால் அவர்கள் ஆத்திகர்களே இல்லை. பொய்யான ஆத்திகம் பேசுபவர்கள் என்றும் கூறினார்.

அன்று அங்கே கழித்து விட்டு மறுநாள் காலையில் திருவரங்கன் உலா காட்டு வழியில் சென்ற போது ஒரு கள்ளர் கூட்டம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அவர்களிடம் பொன்னும், நகையும், பொருளும் இருக்குமெனச் சோதனை போட்ட கள்ளர் தலைவன் மூட்டைகளில் புஞ்சை தானியங்களும் பல்லக்கில் திருவரங்கன் எவ்விதமான ஆடை, ஆபரணங்களின் பகட்டில்லாமல் எளிமையாகக் காட்சி கொடுத்ததையும் பார்த்துத் திடுக்கிட்டான். பரிசனங்களை விசாரித்து நடந்தவற்றைத் தெரிந்து கொண்டான். திருவரங்கப் பெருமாளின் செல்வமும், செல்வாக்கும் குறித்து அறிந்திருந்த அவன் இப்போது மனம் வருந்திப் பின்னர் தன்னிடமுள்ள கொள்ளை அடித்த மூட்டைகளைப் பிரித்து காசு, பணம், நகைகள் என அள்ளி எடுத்து ஒரு தாம்பாளம் நிறைய வைத்து அதைப் பிள்ளை உலகாரியரிடம் நீட்டினான்.

பிள்ளை உலகாரியர் அவற்றை ஏற்க மறுத்தார். கொள்ளை அடித்துச் சேர்த்த பொருட்களைத் தாமும் தம் பரிசனங்களும், அரங்கனின் அடியார்களும் தொடமாட்டோம் என உறுதிபடக் கூறினார். பரிசனங்களுக்கு உணவு வழங்கத் தேவையான பொருளையாவது பெற்றுக்கொள்ளும்படி கள்வர் தலைவன் வேண்டியும் பிள்ளை உலகாரியர் பட்டினி கிடந்து மரித்தாலும் மரிப்போம். ஆனால் இந்தப் பொருட்களைத் தொட மாட்டோம். எனத் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். கள்வர் தலைவனிடம் உன் உண்மையான சொத்துக்களைக் கண்டடை என்று சொல்லிவிட்டு ஊர்வலம் மேலே நகர உத்தரவிட்டார் பிள்ளை உலகாரியர். தன் உண்மையான சொத்து எது எனக் கேட்ட கள்வர் தலைவனுக்கு அரங்கனின் நாமத்தைச் சொல்லும்படியும் அந்தச் சொத்து அவனுக்குத் தானாக வந்து சேரும் என்றும் கூறினார் பிள்ளை உலகாரியர்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் வந்த குலசேகரனுக்கு இந்தக் கூட்டத்தில் வாசந்திகா இருக்கும் இடம் தெரியவில்லை. எங்கே இருப்பாள் என யோசித்த அவன் முன்னர் வந்து நின்றார் ஓர் ஊர்வலத்தார். தன் தலையில் பாகை கட்டிக் கொண்டு வந்து நின்ற அவரைப் பார்த்த குலசேகரன் யார் என யோசிப்பதற்குள்ளாக, கலகலவெனச் சிரிக்கும் சப்தம் கேட்டு உற்றுப் பார்க்க ஊர்வலத்தார் வேஷத்தில் வாசந்திகா நிற்பது புரிந்தது.  காட்டில் அனைவரிடமிருந்தும் தப்பிப்பதற்காகவும் தான் பெண் என்பது புரியாமல் இருப்பதற்காகவும் இந்த வேஷத்தில் வருவதாக வாசந்திகா சொல்ல அதை ஆமோதித்தான் குலசேகரன்.

அப்போது குலசேகரன் தன்னையும் மச்சக்காரரையும் பார்த்து வரும்படி திருக்கோஷ்டியூருக்கு அனுப்பியது வாசந்திகா தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டான். வாசந்திகாவும் அதை உறுதி செய்தாள். தில்லிப் படை வீரர்களிடமிருந்து தப்பிக்கும் வழிதெரியாமல் தான் அப்படிச் செய்ததாகவும் கூறினாள். மச்சக்காரரை எப்படி நம்ப முடிந்தது என்னும் கேள்விக்கு, குலசேகரன் அவருக்கு ஆதரவு காட்டியதில் இருந்து மச்சக்காரர் நல்லவர் என்னும் எண்ணம் தனக்கு வந்தது என்றும் சொன்னாள். மச்சக்காரரைக் காப்பாற்ற வேண்டி அரங்கன் ஊர்வலத்தையே துறந்து குலசேகரன் சென்றதையும் ஆகவே மச்சக்காரர் உண்மையிலே நல் மனம் கொண்டவர் தான் என்பது உறுதிப்பட்டதாகவும் கூறினாள்.

குலசேகரன் தன்னை விரட்டினாலும் தான் திரும்ப அவனை அழைத்துக் கொண்டதையும் குறளனைப் போல் சஞ்சலங்கள் தன்னிடம் இல்லை எனவும் கூறினாள்.  மேலும் குலசேகரனைப் போன்றவர்களுக்காகவும் அவர்களை எல்லாம் மகிழ்விக்கவுமே தான் அரங்கனுக்கு எதிரில் ஆடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னாள். அங்குள்ள மற்றக் கூட்டத்தாரை விடக் குலசேகரன் ஒருவன் தான் ஆடும் ஆட்டத்தின் காரணத்தையும் அரங்கனுக்காக மட்டுமின்றி அவனுக்காகவும் தான் ஆடுவதையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் சொன்னாள் வாசந்திகா. 

Wednesday, November 01, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஹேமலேகாவைக் குறைந்த நேரமே சந்தித்த குலசேகரனுக்கு அவள் எப்படி இருப்பாள் என்பதே நினைவில் இல்லை. அந்த நினைவில் அவன் வாசந்திகாவைப் பார்க்க வாசந்திகாவோ அவன் தன் மேல் காதல் கொண்டிருக்கிறான் என்னும் குதூகல நினைவில் மூழ்கினாள்.  குலசேகரனுடன் ஆனந்தப் பேச்சு வார்த்தையும் மூழ்க நினைத்த வாசந்திகாவுக்கு ஏமாற்றமே மேலிட்டது. குலசேகரன் முழுவதும் தன் நினைவில் வந்து விட்டான். தான் மேற்கொண்டிருக்கும் முக்கியமான காரியத்தைக் குறித்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். மேம்போக்காக வாசந்திகா கேட்டவற்றுக்குப் பதில்களை அளித்தான். வாசந்திகாவோ அங்கே கிடந்த ஓர் பாறையை அரங்கனாகவும் அரங்கன் பாம்பணை மேல் படுத்திருக்கும் கோலமாகவும் எண்ணிக் கொண்டு நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றைப் பாடிக் கொண்டு ஆடவும் ஆரம்பித்தாள்.

பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும்

காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்

சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும்,

நீதியாய்! நிற்சார்ந்து நின்று.

குலசேகரனின் நொந்த மனதுக்குப் பாசுரமும் அதன் பொருளும் அவள் பிடித்த அபிநயங்களும் ஆறுதலை அளித்தன. அவன் முகத்தைக் கண்ட வாசந்திகாவும் அவன் உண்மையில் தன் மேல் காதல் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடனேயே விடைபெற்றுச் சென்றாள். மறுநாள் அனைவரும் புறப்படுவதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்த வேளையில் பிள்ளை உலகாரியரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்குப் போய் விட்டிருந்தது. தொண்டர்களும் பரிசனங்களும் அழுது புலம்பிக் கொண்டு அவரின் கூடாரத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். பலவாறு சொல்லிப் பிரலாபித்தார்கள்.

இப்போது பிள்ளை உலகாரியரின் தாய், தந்தை குறித்து ஓர் சிறிய குறிப்பு.  வைணவ ஆசிரியப் பெருந்தகைகளில் ஒருவரான "நம்பிள்ளை" என்பாருக்கு "வடக்குத் திருவீதிப் பிள்ளை" என்றொரு சீடர் இருந்தார். அவர் திருமணம் ஆகியும் மனைவி மேல் பற்றில்லாமல் துறவி போல் பிரமசரிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். அதைக் கண்ட அவர் தாய்க்கு வருத்தம் மேலிட அவர் தம் பிள்ளையின் ஆசிரியரான நம்பிள்ளையை அணுகி நிலைமையைச் சொல்லிப் புலம்பினார். தம் குலம் தழைக்க வேண்டும் என்ற ஆசையினைப் பகிர்ந்து கொண்டார். மகன் இப்படித் தன் மனைவியைப் பாராமுகமாக இருப்பதை எண்ணி வருந்தினார்.

நம்பிள்ளை அவரைச் சமாதானம் செய்து அவர் மருமகளை அழைத்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லி ஆசிர்வாதங்கள் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் தம் சீடரான திருவீதிப்பிள்ளையை அழைத்து அவரைத் தம் மனைவியுடன் அன்றிரவு மட்டும் சுகித்து இருக்கும்படி சொல்லி, இது குருவின் கட்டளை என்றும் தெளிவு செய்து அனுப்பி வைத்தார். குருவின் கட்டளையைச் சிரமேற்கொண்டு திருவீதிப் பிள்ளை அன்றிரவு தன் மனைவியுடன் சுகித்திருந்தார். அதன் விளைவாகப் பிறந்தவரே பிள்ளை உலகாரியர் என்பார்கள்.

இந்தக் கதை நடந்து வந்த சமயம் பிள்ளை உலகாரியருக்குப் பிராயம் அறுபதை நெருங்கி கொண்டிருந்தது. வைணவ சமயத்தை நிலை நிறுத்த வேண்டி "பதினெட்டு ரகசியங்கள்" என்னும் நூலை எழுதி இருந்தார். அவற்றுள் சூத்திரங்களாக உள்ள "ஶ்ரீ வசன பூஷணம்" என்னும் நூலுக்குப் பலரும் வியாக்கியானங்கள் எழுதி இருப்பதோடு இன்னமும் எழுதியும் வருகின்றனர். இவர் ஆரம்பத்தில் இருந்தே பிரமசரியத்தில் ஈடுபாடு கொண்டதால் திருமணமே செய்து கொள்ளாமல் வழ்ந்து வந்தார். அரங்கன் சேவையையே தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வந்த அவருக்குக் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய குழப்பமான சூழ்நிலைகளால் உடல்நிலையும் மனோநிலையும் பரிபூரணமாகக் கெட்டுப் போயிருந்தது.

ஆழ்ந்த மன வருத்தத்தில் இருந்த அவர்  அரங்கனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு செவ்வனே முடிக்க ஆசைப்பட்டார். அதை இப்போது தம்மால் நிறைவேற்ற முடியுமா என்னும் ஐயம் அவரைப் பிடித்து ஆட்டியது.  ஏற்கெனவே இருந்த பலவீனம், மனோவியாகூலம் எல்லாம் சேர்ந்து அவரை மயக்க நிலையில் தள்ளி இருந்தது.  அதைக் கண்ட அவர் சீடர்கள் மனம் வருந்தினார்கள். கூடாரத்திலிருந்து வெளியே வந்த அவர்களில் சிலர் தங்களுக்குள்ளாக ஆலோசனைகள் நடத்தினார்கள். ஆற்றங்கரையோரமாகத் தங்கி இருந்ததால் அந்தப் ப்ரதேசத்தில் அதிக நாட்கள் தங்கக் கூடாது என்பதால் ஓர் பல்லக்கை ஏற்பாடு செய்து பிள்ளை உலகாரியரை அதில் படுக்க வைத்துச் சுமந்து செல்லத் தீர்மானித்தார்கள்.