எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, February 19, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

குலசேகரன் மிகவும் முயன்று குதிரையை ஒவ்வொரு பல்லக்கின் அருகேயும் கொண்டு போனான். அவற்றில் ஒன்றில் ஹேமலேகாவின் முகமும் அவனுக்குத் தெரிந்தது. ஹேமலேகா அவனிடம் பல்லக்கை ஒட்டிக் கொண்டு வரவேண்டாம் என எச்சரித்தாள். ராணி தவறாக நினைக்கக் கூடும் என பயந்தாள். ஆனால் குலசேகரன் அவளிடம் தான் கூற வந்ததைக் கூறினான்: "அம்மா! உங்கள் கதை கூறும் ஆற்றல் வியக்கத் தக்கது! நான் மிகவும் விரும்பிக் கேட்கிறேன். இது போன்ற ஆன்மிகக் கதைகளைக் கேட்டு என் நிலையை உயர்த்திக் கொள்ளாமல் வாழ்நாளைப் போர்ப்பயிற்சியில் வீணடித்து விட்டேனே என நினைத்தால் வேதனையாக இருக்கிறது.கல்வி கற்றால் எவ்வளவு மேன்மை என்பதை உங்களால் உணர்ந்து கொண்டேன்!" என்றெல்லாம் அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே திடீரென யாத்திரை நிறுத்தப்பட்டது. அனைவரும் அவரவர் நின்ற இடத்திலேயே நின்றனர்.

திகைத்துப் போய்ப் பார்த்த குலசேகரன் தூரத்தில் எதிரே ஒரு குதிரைப்படை புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்ததைப் பார்த்தான். அதைக் கண்ட ராணி உடனே குலசேகரனை அழைத்து அவனிடம் முத்திரை மோதிரம் ஒன்றைக் கொடுத்தாள். அது ஹொய்சள முத்திரை மோதிரம். அதைக் காட்டும்படி ராணி உத்தரவிடக் குலசேகரன் அதை எடுத்துக் கொண்டு சென்றான். வந்தவர்கள் தில்லி வீரர்கள் தான். நாட்டைச் சுற்றிச் சுற்றி வந்து ஆங்காங்கே வேவு பார்த்துக் கொண்டு வந்தனர். குலசேகரன் காட்டிய முத்திரை மோதிரத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர் ஒரு சில கேள்விகளை மட்டிலும் கேட்டுக் கொண்டு ஊர்வலத்தை மேலே செல்ல அனுமதித்தனர்.  பின்னர் குலசேகரன் திரும்ப ராணியிடம் சென்று முத்திரை மோதிரத்தைத் திரும்பக் கொடுக்க ராணியோ அவனையே அதை வைத்திருக்கச் சொன்னாள். இன்னும் வேறு யாரேனும் வந்தால் இதைப் பயன்படுத்திக் கொள்ளும்படியும் கூறினான்.

பின்னர் அவனைப் பார்த்து, அவன் பெயரைக் கேட்டறிந்தாள். திருவரங்கத்துக்காரன் என்று தெரிந்ததும் போர்த்தொழிலை எங்கே எவ்வாறு கற்றான் என்றும் கேட்டாள். காஞ்சியில் ஹொய்சள வீரன் ஒருவனிடம் கற்றதாகச் சொன்ன குலசேகரனைப் பார்த்து அவனைப் போன்றதொரு வீரனுக்குக் கலை, இலக்கியம், கவிதை போன்றவை தேவை இல்லை என்றும் சொன்னாள். வீரத்தை வளர்த்துக் கொண்டு ஓர் குறுநில மன்னனாக ஆகும்படியும் அறிவுரை கூறினாள். ஆனால் குலசேகரனோ தனக்கு அவற்றில் எல்லாம் விருப்பம் இல்லை என்றும் தன் வாழ்க்கை லட்சியம் திருவரங்க நாதனைத் திரும்பத் திருவரங்கத்தில் சேர்ப்பிப்பது ஒன்றே என்றும் கூறினான். ராணியோ இதெல்லாம் ஒரு லட்சியமா எனக் கேலி செய்து நகைத்தாள். குலசேகரன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

ராணி அந்தப் பல்லக்கில் பஞ்சணையில் படுத்த வண்ணம் இருந்தாள். அவள் அழகைக் கண்டு வியந்தான் குலசேகரன்.  தன் பார்வையை அவன் மேல் படரவிட்ட ராணி, "இதெல்லாம் ஒரு லட்சியமா! ஓர் உலோக விக்ரஹம்! அதைப் பாதுகாப்பதாம்! திருவரங்கத்தில் கொண்டு சேர்ப்பதாம்!" என்று சொல்லி மீண்டும் கேலி செய்து சிரித்தாள். குலசேகரன் கோபத்துடன் தனக்கு அது லட்சியம் தான் என்றும் தன்னைப் பொறுத்தவரை அது வெறும் உலோக விக்ரஹம் மட்டுமில்லை என்றும் கூறினான். அரங்கன் அவர்களைப் பொறுத்த வரை உயிர் என்றும் அவனே அவர்களது நம்பிக்கை என்றும் அவனை இழந்தால் வாழ்க்கையில் அவர்களுக்கு எதுவுமே இல்லை என்றும் கூறினான். அரங்கனை இழக்க ஒருக்காலும் சம்மதியோம் என்ற குலசேகரன் அரங்கனைக் காப்பாற்றும் வியாஜ்யத்தில் எத்தனை பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்பதையும் எடுத்துச் சொன்னான்.  அரசிக்குச் சிரிப்புத் தான் வந்தது. என்றாலும் போலியான பயத்துடன் குலசேகரனைப் பார்த்து நிறுத்திக் கொள்ளச் சொன்னாள்.

திருவண்ணாமலைக் கடைவீதியில் சண்டை போட்டது போல் சண்டை போட்டுவிடப் போகிறாய் என்று கேலியும் செய்தாள். பின்னர் அவனைப் பார்த்து யாத்திரை சரியாகச் செல்கிறதா என்று கண்காணிக்கும்படி சொல்லிவிட்டுப் பல்லக்கின் திரையை விட்டுக் கொண்டு திரும்பிப் படுத்தாள்.

****************

அங்கே!

அழகர் கோயிலில் ஒரு தோப்பு! அரங்கன் மறைந்து வாழ்ந்து வந்தான். பசுந்தழைகளால் ஆன விதானங்களை எழுப்பி அரங்கனுக்கு ஆலயம் போல் எழுப்பி தினசரி உபசரணைகளைச் செய்து வந்தார்கள் அரங்கனைப் பொறுப்பில் எடுத்துக் கொண்ட கொடவர்கள். அவர்கள் மூவரும் ஊர்வலத்தோடு சேர்ந்தே வந்த உறவினர்கள் ஆவார்கள்.  அரங்கனை வெறும் தெய்வமாக மட்டும் எண்ணாமல் ஓர் உலோக விக்ரஹமாக எண்ணாமல் தங்களுடன் வாழும் ஓரு மாமனிதன் என்றே நினைத்து அவனுக்கு வேண்டியதைச் செய்தார்கள். அவர்கள் வெப்பத்தை உணர்ந்தால் அரங்கனுக்கு விசிறி போட்டார்கள். அவர்கள் சாப்பிடும் முன் அரங்கனுக்கு உணவு படைத்தார்கள்.

அப்போது ஓர் நாள் வெகு தூரம் சென்று மண் குடங்களில் நீர் எடுத்து வருகையில் ஓர் அரசப் பரிவாரம் ஆரவாரங்களோடு அங்குள்ள தோப்புக்களில் புகுந்தது. மூவரும் பயந்து போய்விட்டார்கள். அரங்கனின் இருப்பிடம் நோக்கி விரைந்தார்கள். அவசரம் அவசரமாக அரங்கனைக் கண்டதும் அவர்களுக்குத் தெரிந்து விடப் போகிறதே என நினைத்து அவர்கள் செய்த குழப்படிகளால் அரங்கன் விக்ரஹம் அங்கிருந்த கூளங்களுக்குள் மறைந்து போனது. அப்போது பார்த்து அரசப் பரிவாரங்களில் கூட வந்த பெண்கள் அங்கே வந்து விட்டனர். அவர்கள் தில்லித் துருக்கப் பெண்கள் என்பது அவர்களின் உடையிலிருந்து தெரிந்தது. கொடவர்கள் செய்வதறியாது திகைக்கையிலேயே அரண்மனையில் ஊழியத்துக்கு அமர்த்தப்பட்டிருந்த அலிகள் ஓடி வந்து மூவரையும் பிடித்துக் கொண்டனர். 

Friday, February 16, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ராணி கிருஷ்ணாயிக்கு இவர்களின் மௌன பாஷை கோபத்தை மூட்டியது. அவசரம் அவசரமாக சபையைக் கலைத்தாள். குலசேகரனிடம் வந்து, "வீரனே, நீ செய்வது சரியல்ல!" என்றாள் கோபத்துடன்.  குலசேகரன் தான் தவறு ஏதும் செய்யவில்லை என்று பணிவுடன் கூறினான். ஆனால் ராணியோ அவன் காவலை விடுத்துக் கதை கேட்டதால் கள்வர்கள் உள்ளே புகுந்ததைக் குறித்துச் சொல்லிவிட்டு அவனுக்கு தண்டனை கொடுக்க நினைத்ததாகவும் கள்வர்கள் பிடிபட்டதால் கொடுக்கவில்லை எனவும் கூறினாள். குலசேகரன் அவமானத்தால் கவிழ்ந்த தலையோடு வெளியே வந்தான். ராணியின் கோபம் கலந்த சுபாவம் அவனுக்குள் கலக்கத்தை மூட்டியது. கடுமையாகத் தன்னை நடத்தும் இந்த ராணியிடம் போய் தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டு விட்டோம் என்றெல்லாம் கவலைப் பட்டான். இரவில் உணவு அருந்திவிட்டுப் படுத்தும் கூட அவன் சிந்தனைகள் அவனைத் தூங்க விடாமல் குழப்பி எடுத்தன.

அப்போது திடீரெனப் பஞ்சு கொண்டான் குரலில் குலசேகரனை அழைத்தமாதிரி இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான் குலசேகரன். மர நிழலில் பஞ்சு கொண்டான் நின்றுகொண்டு அவனை அழைத்துக் கொண்டிருந்தார். கூடவே அரங்கன் ஊர்வலத்தைப் பின்பற்றச் சொன்னால் இங்கே அணங்குகளின் ஊர்வலத்தைப் பின்பற்றுகிறாயே என்றும் கேட்டார். இது தான் நீ அரங்கனுக்குச் செய்யும் சேவையா என்றெல்லாம் அவர் கேட்டார். குலசேகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. எழுந்து அமர்ந்து கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு எதிரே பார்த்தான். யாரும் இல்லை. அவன் லட்சியத்திலிருந்து அவன் புரண்டு விட்டதால் இத்தகைய எச்சரிக்கை தோன்றியதோ என நினைத்தான். கண் முன்னே அரங்கன் உருவமும் அவன் ஊர்வலமும் தோன்றியது.  அரங்கன் விக்ரஹம் அவனைப் பார்த்துச் சிரித்து என்னை மறந்தாயோ என்று கேட்பது போலும் தோன்றியது.

"ரங்கா! ரங்கா!" என்று அரற்றினான் குலசேகரன். ராஜாதிராஜனாகிய அரங்கன் இன்று நம் உதவியையா எதிர்பார்க்கிறான்? நாயினும் கடையேனாகிய என்னை அரங்கன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறானா? ரங்கா, ரங்கா, என்னால் இயன்றதைச் செய்து உன்னை எப்படியேனும் காப்பாற்றித் திரும்பவும் திருவரங்கம் கொண்டு சேர்ப்பது என் கடமை! ஐயகோ! அழகர் மலையில் அவருக்கு தினமும் மூன்று வேளை அமுது படைத்து வருகிறார்களா என்று தெரியவில்லை. பூஜைகள் சரிவரச் செய்து வருகிறார்களா என்றும் புரியவில்லை. குலசேகரனுக்குள் தவிப்பு மேலிட்டது. என்ன செய்வது எனப் புரியாமல் அப்போது முறை காவலில் இருந்த குறளனை அணுகினான். அவனிடம் தனக்கு அரங்கன் நினைவு அதிகம் வருவதால் அழகர் கோயில் சென்று விடலாமா என்று கேட்டான்.

அதற்குக் குறளன் அழகர் கோயிலில் கொடவர்கள் அரங்கனை நன்கு கவனித்துக் கொள்வதை எடுத்துச் சொன்னான். "கோடைக்காலம் நாம் காற்றில்லாமல் தவிக்கையில் கூட இந்தக் கொடவர்கள் முறை போட்டுக் கொண்டு அரங்கனுக்கு விசிறியால் விசிறினார்களே! மறந்து விட்டீர்களா!" என்று கேட்டான்.  ஆனாலும் குலசேகரன் மனம் சமாதானம் அடையவில்லை. என்ன இருந்தாலும் கொடவர்கள் வீரர்கள் இல்லையே என்று கவலை அடைந்தான்.  "அரங்கனுடைய விக்ரஹம் மறைந்து இருக்கும்வரை கவலை இல்லை. அவர்களும் அதைப்பாதுகாப்பார்கள். எல்லாவிதமான உபசரணைகளும் செய்வார்கள். ஆனால் எதிரிகளால் விக்ரஹத்துக்கு ஆபத்து நேரிட்டால்? அவர்களால் என்ன செய்ய முடியும்? இங்கே நாம் ஹொய்சள மன்னர் உதவி செய்வார் என நம்பி வந்தால் இங்கே நடப்பதே வேறு விதமாய் இருக்கிறது. அரங்கனையே பறிகொடுத்து விடுவோமோ எனக் கவலையாக இருக்கிறது. காலையிலிருந்து இந்த எண்ணம் தோன்றி என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. நிம்மதியில்லாமல் தவிக்கிறேன். "என்றான் குலசேகரன்.

குறளன் அதற்கு இந்த தீர்த்த யாத்திரையைச் சரியாகவும் சீக்கிரமாகவும் முடித்துக் கொண்டு திருவண்ணாமலை திரும்பினால் ஹொய்சள மன்னரிடமிருந்து உதவி கிடைக்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்தான். குலசேகரன் ஏதும் பேசவில்லை. மறுநாள் அங்கிருந்து யாத்ரிகர்கள் கிளம்பினார்கள். யாத்ரிகர்களின் முன்னால் குலசேகரனும், குறளனும் காவலாகச் சென்றார்கள். கிருஷ்ணாயி மூடு பல்லக்கில் பயணம் செய்தாள்.  மற்றவர்கள் வந்த பல்லக்குகளின் வரிசைகளோடு முன்னும் பின்னுமாக வீரர்கள் காவல் காத்த வண்ணம் சென்றனர். குலசேகரனுக்கு ஹேமலேகா அந்தப் பல்லக்குகளில் எதிலேனும் இருப்பாளா என்னும் சந்தேகம் தோன்றியது. அவள் கதையைக் கேட்கக் கூடாது என்று ராணி தடை விதித்தது அவன் மனதில் வருத்தத்தை உண்டாக்கியது. அவளைப் பார்க்கவானும் முடியுமா என்று யோசித்தான்.

Sunday, February 04, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

குலசேகரனை முறை காவலில் போட்டிருந்தார்கள். அவன் இரவில் நின்றிருக்கையில் மீண்டும் மீண்டும் ஹேமலேகாவின் கதை தொடங்குவது அவனுக்குக் கேட்கும். அவள் குரலோடு யாழும் இணைந்து பாடத் தொடங்க அவனுக்கு உடனே அங்கே சென்று கதையைக் கேட்கும் ஆவல் தோன்றும். இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டுப் பொறுத்திருந்தவனால் மூன்றாம் நாள் பொறுத்திருக்க முடியவில்லை. மெல்ல நடந்து சென்று கூட்டத்தின் ஓரமாக நின்று கொண்டு கதையைக் கேட்கத் தொடங்கினான். அப்போது அங்கே ஏற்பட்ட சலசலப்பைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தால்! அங்கே ராணி கிருஷ்ணாயி தாயி நின்று கொண்டிருந்தாள். அவள் குலசேகரனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இரு சேடிகள் அவளுக்குக் காவலாக நின்றனர். குலசேகரனையே பார்த்தவள் கோபத்துடன், "ஓஹோ! இது தான் நீங்கள் காவல் காக்கும் லட்சணமா? இதற்குத் தானா மன்னர் உங்களை எங்களுடன் அனுப்பி வைத்தார்?" என்று கோபமாகக் கேட்கக் குலசேகரனால் பதில் சொல்லவே முடியவில்லை.

தலைகுனிந்து பிரமிப்புடன் நின்றிருந்தவனைப் பார்த்து அவள், "இதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்காதது!" என்று கூறி விட்டு வெடுக்கென்று திரும்பிக் கொண்டு மேலே போய்விட்டாள். அவமானத்துடன் திரும்பிய குலசேகரன் மனம் வருந்தினான். நாலாம் நாள் இரவில் இரு பெரிய சத்திரங்களில் அனைவரும் தங்கினார்கள். அன்று கதை கேட்கப் போனபோது ஹேமலேகாவைப் பார்த்தது தான். அதன் பின்னர் குலசேகரனால் அவளைப் பார்க்கவே முடியவில்லை. சத்திரத்துக்கு வெளியே திறந்த வெளியில் காவல் காத்துக் கொண்டிருந்த குலசேகரனுக்கு  ஹேமலேகாவும் அவளுடைய குளுமையான பார்வையும் அந்தப் பார்வையைக் கொண்ட பிரகாசமான கண்களும் மனதில் தோன்றின. அவள் கவர்ச்சியும் அழகும் ஆட்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்காது. மனதில் அமைதியையும் மரியாதையையும் தோற்றுவிக்கும் கவர்ச்சி. இப்படி எல்லாம் தன்னால் நினைக்க முடியுமா என எண்ணும்போதே குலசேகரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனக்கெனத் தனி வாழ்க்கை இனி ஏது என்னும் நினைப்பில் இருந்தவனுக்குள் இத்தகைய எண்ணங்கள் வாக்கையில் ஓர் பிடிப்பை ஏற்படுத்தின. பஞ்சு கொண்டானைப் போல் தானும் ஓர் நகரத்து அரையராக வாழ்க்கையில் கீர்த்தி பெற்று வாழ வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

ஹேமலேகாவின் மேல் தனக்குக் காதலா? ம்ஹூம், இல்லை, இல்லை! அப்படி எல்லாம் இல்லை! தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் குலசேகரன். ஆம், ஆம், காதல் தான் என்றது இன்னொரு மனது! தான் அத்தகைய சின்னச் சின்ன இன்பங்களுக்கெல்லாம் எளிதில் ஆளாக மாட்டோம் என நம்பிக் கொண்டே தன் தலையை உலுக்கித் தான் ஹேமலேகாவைக் காதலிக்கவில்லை என்பதைத் தனக்குள்ளே உறுதிப் படுத்திக் கொண்டான் குலசேகரன். எங்கிருந்தோ யாழின் ஓசை கேட்டது. மெல்ல மெல்ல யாழிசை அந்தப் பிராந்தியத்தையே நிறைத்தது. கூடவே ஹேமலேகாவின் குரலும் கேட்டது. சத்திரத்துக்குள்ளே இருந்து கேட்டதால் தன்னையும் அறியாமல் குலசேகரன் அந்தக் குரலைத் தொடர்ந்து சென்று சத்திரத்தின் வெளிப்புறத்தில் நின்ற வண்ணம் இசையை ரசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது சத்திரத்தின் பின் புறம் வழியாகச் சில கள்வர்கள் சத்திரத்தினுள் புகுந்தார்கள். இதைக் குலசேகரன் அறியவில்லை. உள்ளே புகுந்த கள்வர்கள் யாத்திரைக் குழுவினரின் பொருட்களை எல்லாம் உக்கிராண அறைக்குள்ளிருந்து அள்ளிக் கொண்டு பின்புறமாகவே ஓடினார்கள். அப்போது ஓர் பெட்டகம் தடால் எனக் கீழே விழுந்து சப்தத்தை ஏற்படுத்த யாத்திரிகர்கள், "திருடன், திருடன்!" எனக் கூவினார்கள்.  ஹேமலேகாவின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த அரசிக்குக் கோபம் வந்தது. இந்தக் காவலாளிகள் என்ன செய்கிறார்கள்? தூங்கி விட்டார்களா?  என்று நினைத்த வண்ணம் சத்திரத்தின் வெளியே வந்தாள். வீரர்களை அழைத்துக்கள்வரைத் தொடரும்படி ஆணையிட்டாள். அப்போது அங்கே ஆயுதங்கள் ஏதும் தரிக்காமல் நின்று கொண்டிருந்த குலசேகரன் அவள் கண்களில் படவே அவள் கோபம் எல்லை மீறியது!

"இரண்டாம் முறையாக உன்னைக் காவலில் இல்லாமல் பார்க்கிறேன்! இது தான் நீ முறை காவல் காக்கும் லட்சணமா?" என்று கோபத்துடன் கத்தினாள். அப்போது தான் ஏதோ நடந்திருக்கிறது என்பதையே குலசேகரன் உணர்ந்தான். தன் தவறை உணர்ந்தவனாக, "ராணி, இதோ, இதோ, வருகிறேன்!" என்றுகூறி விட்டுத் தன் கூடாரம் நோக்கி விரைந்தான். கவசம் அணியாத வெற்றுடம்புடன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொண்டு வந்த குலசேகரன், வீரர்களைத் தன்னைப் பின் தொடரும்படி கூறி விட்டுக் குதிரையில் ஏறி விரைவாகச் செலுத்தினான். பின்னர் சிறிது நேரத்துக்குள்ளாக ஆறு கள்வர்களையும் அவர்கள் திருடிய பொருட்களையும் ராணியின் முன்னே சமர்ப்பித்தான் குலசேகரன். கூடவே அவனுடைய வீரர்களும் இருந்தனர். கள்வர்களையும் குலசேகரனையும் கண்டு கடுமையாக விழித்த ராணி எல்லோரையும் விலங்கிட்டு வைக்குமாறு ஆணை இட்டாள்.

மறுநாள் சத்திரத்தின் முற்றத்தில் சபை கூடியது. ராணி தன் விசாரணையை ஆரம்பித்தாள். குறளனுக்கும் குலசேகரனுக்கும் உள்ளூற அச்சம். அரசி கள்வர்களை விசாரித்ததைக் கண்டு குலசேகரனுக்குள் கொஞ்சம் தைரியம் வந்தது. சபையைச் சுற்றிக் கண்களை ஓட விட்டவன் ஓர் ஓரமாக ஹேமலேகா நிற்பதைக் கண்டு விட்டான். அவன் கண்கள் அவளை விட்டு நகர மறுத்தன. அவள் பார்வையோ அவனிடம் இல்லை. அவள் தன்னைப் பார்க்க மாட்டாளா என ஏங்கினான் குலசேகரன். அவளோ திரும்பாமல் நின்றாள். ராணி விசாரணையை முடித்துவிட்டாள் என்பது அவள் தீர்ப்புக் கூறியதிலிருந்து தெரிந்தது. கள்வர்களின் கையையும் மூக்குகளையும் வெட்டிவிடும்படி கட்டளை இட்டாள். பின்னர் தன் மன ஆறுதலுக்காகச் சேடிகளை அழைத்து நாட்டியம் ஆடும்படி சைகை செய்தாள். குலசேகரன் என்ன செய்கிறான் என்பதையும் அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள்.

அவன் ராணி இருக்கும் பக்கம் கூடத் திரும்பவில்லை. நாட்டியத்தை ரசித்தான். ஹேமலேகாவைப் பார்த்தான். மீண்டும் மீண்டும் அவன் பார்வை அவள் பக்கமே சென்றது. ஒரு நிமிடம் அவனால் தன் கண்களை நம்பமுடியவில்லை. ஏனெனில் ஹேமலேகா அவள் கண்களை முழுதும் திறந்து அவனையே பார்த்த வண்ணம் இருந்தாள். அவள் விழிகளைக் கண்ட குலசேகரனின் பார்வை அந்த விழிகளின் வழியிலிருந்து மீள முடியாமல் தவித்தது. அதை ராணி கிருஷ்ணாயியும் கவனிக்காதவள் போலக் காட்டிக் கொண்டு நன்கு கவனித்துக்  கொண்டாள்.