எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, January 10, 2019

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரனும் ஹேமலேகாவும்!

அந்த நேரத்தில் அவனை அங்கே எதிர்பார்க்காத ஹேமலேகா திடுக்கிட்டுப் போனாள். குலசேகரன் மனதில் அவளைப் பார்த்தவுடன் பூரிப்பு ஏற்பட்டது. தன் மகிழ்ச்சியை அவன் மறைக்கவில்லை. ஹேமலேகாவின் பாசுர விளக்கங்களைக் கேட்டுக் கொண்டு அதில் திளைத்துக் கொண்டு இருந்ததாகவும், தான் செய்யும் வேலையை விட இது தான் பெரிதாக அவனுக்குத் தோன்றுவதாகவும் கூறினான்.  இந்தப்பாசுரங்களின் விளக்கங்களை ஹேமலேகா மூலம் கேட்கும் பெரும் சுவையைத் தவிர்த்து வேறு சுவையை அவன் வேண்டவில்லை என்றும் கூறினான்.  அதைக் கேட்ட ஹேமலேகா சிரிப்புடன் பாசுரங்கள் மற்றும் காவியம் போன்றவற்றில் ததும்பும் பக்தி ரசம் ததும்பும் கவிதைகள் கள்ளைவிட அதிக மயக்கம் தருவது எனக் கூறினாள். ஆனால் போரில் ஈடுபட்டு நாட்டு விடுதலைக்காகப் பாடுபடும் குலசேகரனையும் இப்பாசுரங்கள் ஈர்த்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

குலசேகரன் சற்று முன்னர் அவள் சொன்ன நம்மாழ்வார் பாசுரத்தை மீண்டும் அவளைப் பாடச் சொல்லிக் கேட்டு ரசித்தான். அவளும் மறுபடி அதைப் பாடி அதன் பொருளையும் அவனுக்குச் சொன்னாள்.

புவியும் இருவிசும்பும் நின் அகத்த, நீயென்
செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,- அவிவு இன்றி
யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,
ஊன்பருகு நேமியாய்! உள்ளு.

பெரிய திருவந்தாதியின் இப்பாடலைப் பாடிக் குலசேகரனுக்கு அதன் பொருளையும் அவனுக்கு உரைத்தாள். இவ்வுலகமும் இரு விசும்புகளும் இறைவனின் உள் அடங்கி இருக்க அவனோ நம் செவி வழியாகப் புகுந்து நம்முள் இருக்கிறான். இந்த இடத்தில் நம்மாழ்வார் தன்னையே சொல்லிக் கொள்கிறார். ஆகவே இறைவனை விடத் தானே பெரியவன்! இறைவன் பெரியவன் என்பதை யாரும் அறியார்! எனச் சொல்கிறார். இதன் தத்துவார்த்தமான பொருளாக ப்ரம்மம் எனும் விபூதிகளை வஹிக்கும் இறைவனை விட அந்த இறைவனையே தன்னுள்ளே வஹிக்கும் ஆழ்வாரே பெரியவர் என்னும் பொருளில் வரும். தன்னுள்ளேயே பிரம்மம் இருக்கிறது! தானே பிரம்மம் என்பது இதன் பொருள்.(என்னளவில் புரிந்து கொண்டது)

இந்தப் பாசுரத்தின் அழகையும் அதன் இனிமையையும் ரசித்த குலசேகரனுக்கு அங்கிருந்து திருவண்ணாமலை போகும் எண்ணமே இல்லை. ஆனால் ஹேமலேகாவோ இது ஆபத்து என உணர்ந்தவளாய் அவனிடம் இந்த ஆசை இப்போது வேண்டாம் என்று சொன்னாள். அதிலும் குலசேகரன் போன்ற வீரர்களுக்கு இந்த  ருசி வந்துவிட்டால் பின்னர் நாட்டைக்காப்பது எப்படி எனும் கவலையில் ஆழ்ந்தாள். ஆனால் குலசேகரனோ தான் முறையாகப் போர்ப்பயிற்சியும் பெறவில்லை. ஆபத்துக்காலத்தில் வீரன் ஆனவன். உண்மையில் கல்வி கற்கப் போனவன் தான் ஶ்ரீரங்கத்து நிலைமை மோசமான நிலையில் போர்ப்பயிற்சி பெறாமலே வீரனாகிப் பின்னர் பயிற்சி பெற்றதாய்ச் சொன்னான், தனக்கு இப்போது கல்வியே முக்கியத்துவம் வாய்ந்ததாய்த் தெரிகிறது என்றும் சொன்னான்.  அவன் மனதில் இந்தப் போர், யுத்தம் எல்லாம் எதற்கு என்னும் எண்ணம் தோன்றுவதாகவும் பல நாட்களாகவே இந்த எண்ணம் மனதில் குமைந்து கொண்டு இருந்ததாகவும் அதன் காரணமாகவே திருவண்னாமலைப் பயணத்தைத் தொடராமல் இங்கே வந்து விட்டதாகவும் சொன்னான். அவன் சில நாட்களாக அங்கே இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட ஹேமலேகா எத்தனை நாட்களாக அங்கே இருக்கிறான் என்பதை விசாரித்தாள்.

அவன் இரண்டு நாட்களாக இருப்பதாகச் சொன்னதும் மிகக் கவலை அடைந்த ஹேமலேகா அவனிடம் இது அவனுக்கு உகந்தது அல்ல. அவன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய வேலை இப்போது நாட்டின் விடுதலையும் அரங்கனை மீட்டுப் பழையபடி திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்வதும் அரங்கன் கோயில் மீண்டும் திறக்க ஏற்பாடுகள் செய்வதும் தான் என்று எடுத்துச் சொன்னாள். ஆனால் குலசேகரன் வாயே திறக்கவில்லை. மௌனம் சாதித்தான். அவன் உள் மனதில் என்ன நினைக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட ஹேமலேகா அவனிடம், உண்மையில் குலசேகரனுக்குப் படிப்பின் மீது உள்ள பிரேமையை விடத் தன்னிடம் உள்ள பிரேமை தான் அவனை இங்கே கொண்டு வந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டு அவனிடம் அது தானே உண்மை என விசாரித்தாள். குலசேகரன் முதலில் தலை குனிந்து மௌனம் சாதித்தான். பின்னர் அவளைப் பார்த்து அவள் சொல்வது உண்மைதான் என ஒத்துக் கொண்டான்.

ஒரு நல்ல வீரன் தன்னால் இப்படிப் பைத்தியமாக இருக்கிறானே என நினைத்த ஹேமலேகா அவனிடம் நம் பிரேமை எல்லாம் இப்போது முக்கியம் அல்ல. நாடு தான் முக்கியம். நாடு இல்லைஎனில் நம் பிரேமை வாழ்வது எப்படி? அதுவும் குலசேகரன் போன்ற வீரர்கள் இத்தகைய மன மயக்கத்தில் ஆழ்வது தவறு என்றும் எடுத்துச் சொன்னாள். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஏற்பட்ட மன மயக்கம் போல் இப்போது அவனுக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொன்னாள். சண்டை இட மாட்டேன் என்று சொன்ன அர்ஜுனனைப் போல் இப்போது குலசேகரனும் சொல்லுவதாகச் சொன்னவள்  சுமார் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவன் வாழ்ந்து வந்த வறண்ட வாழ்க்கையே இதற்குக் காரணம் என்பதைத் தான் புரிந்து கொன்டிருப்பதாகச் சொன்னாள்.  மனம் கனிந்து தோன்றும் இனிய உணர்வுகளைப் புறக்கணிக்க எவருக்கும் மனம் வராது! இது இயல்பு தான் என்றும் எடுத்துச் சொன்னாள்.

ஆனாலும் அவள் குலசேகரன் தன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் பொறுப்பை உணர்ந்து அதற்கேற்பத் தான் நடந்து கொள்ள வேண்டும் என்றாள். பஞ்சு கொண்டானுக்கு அவன் செய்து கொடுத்திருக்கும் வாக்குறுதியை நினைவூட்டினாள். நாட்டின் மன்னாதி மன்னர்களுக்கும், போர்த்தளபதிகளுக்கும் கிட்டாத ஓர் அரிய வாய்ப்பு குலசேகரனுக்காகக் காத்திருக்கையில் இத்தகைய சிறிய அற்ப சுகத்தில் அவன் மூழ்கி விடலாமா என்றும் கேட்டாள்.  இத்தனை பெரிய பொறுப்புக் காத்திருக்கையில் கிடைத்தற்கரிய பேறு அவன் பெற்றிருக்கையில் அவன் மனமும் உடலும் அதற்கான வேலைகளில் தான் ஈடுபடவேண்டுமே தவிர இத்தகைய அற்ப சுகங்களைத் தேடி அல்ல என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். அவன் கடமையிலிருந்தும், தர்மத்திலிருந்தும் சற்றும் விலகாமல் இருக்கும்படியும் கூறினாள்.

மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த குலசேகரன் கொஞ்சம் தன் மீதே வெட்கம் கொண்டான். சற்று நேரம் மௌனத்தைத் தொடர்ந்தவன் பின்னர் தன் நிலையை உணர்ந்து கொண்டு ஹேமலேகாவிடம் விடை பெற்றுக்கொண்டு திருவண்ணாமலை நோக்கிக் கிளம்பினான். உணவு அருந்தும்படி சொன்னதைக் கூடக் கேட்காமல்  உடனே கிளம்பினான் குலசேகரன்.