கங்காதேவி தொடர்ந்து பண்டிதருடன் தனக்கு இருந்த சந்தேகங்கள் பற்றிக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டிருந்தாள். அப்போது வாசலில் நிழலாட இருவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே கோபண்ணா வந்து கொண்டிருந்தார். உடல் இளைத்து வாட்டம் அடைந்த முகத்துடன் கையில் பட்டுத்துணி சுற்றிய ஏதோ ஒரு பொருளுடன் வந்து கொண்டிருந்தார். பண்டிதர் அவரை வரவேற்று ஆசனத்தில் அமர வைக்க கங்காதேவியோ அவரை நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டாள். கோபண்ணாவும் வடமொழி வல்லுநராக இருந்தாலும் இப்போது அதைப் பற்றிப் பேசவில்லை. ராஜரிக காரியமாக கோபண்ணா வந்திருப்பதைப் புரிந்து கொண்ட பண்டிதர் கோபண்ணாவிடம் அவர் என்ன முடிவு எடுத்தார் எனக் கேட்டார். கோபண்ணாவோ தாம் ராஜரிகத்தைத் துறக்கும் முடிவையே எடுத்ததாய்ச் சொன்னார். தம் கையில் கொண்டு வந்திருந்த பட்டுத்துணியை அவிழ்த்து அதிலிருந்து இரு பொன்னால் ஆன கங்கணங்களை வெளியே எடுத்தார். பண்டிதர் அதைப் பார்த்துத் திடுக்கிட்டார்.
அந்தக் கங்கணங்கள் சாமான்யமானவை அல்ல. வீரக் கங்கணங்கள். அவற்றை புக்கராயரே கோபண்ணா கிழக்கில் நடந்த போர்களில் காட்டிய திறமைகளுக்காகத் தன் கைகளால் கோபண்ணாவுக்குப் பூட்டியவை. அதை அவர் எடுத்ததைப் பார்த்த கங்காதேவிக்கும் திகைப்பு ஏற்பட்டது. பண்டிதரோ கோபண்ணாவைப் பார்த்து, "கோபண்ணா! மன்னர் இப்போது ஊரில் இல்லை. ஆகவே தங்கள் முடிவைத் தள்ளிப் போட்டு மன்னர் வந்ததும் அவரிடம் பேசி முடிவெடுப்பதே சிறந்தது." என்றார். ஆனால் கோபண்ணாவோ திட்டவட்டமாக மறுத்தார். தன் மனதில் ஏற்பட்டிருக்கும் அவாவைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் தான் இருப்பதால் மன்னர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அவருக்கு அடுத்து இருக்கும் கிரியாசக்திப் பண்டிதரிடம் தன் பொறுப்பை ஒப்படைக்க விரும்புவதாய்ச் சொன்னார்.
பண்டிதர் கண்களில் கண்ணீர் திரண்டது. கோபண்ணாவைப் பார்த்து அவர் நாட்டில் தர்மங்களே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன/ அல்லது அழிக்கப்படுகின்றன. இந்நிலையில் நீங்கள் உங்கள் ஸ்வதர்மத்தை மட்டும் காத்துப் பாதுகாக்க விரும்பலாமா? இந்த விஜயநகர சாம்ராஜ்யம் ஏன் தோன்றியது என்பதைத் தாங்கள் அறிவீர்கள் தானே? புதியதாய் ஓர் ராஜவம்சம் தோன்றுவதற்கோ அல்லது புதிய ஒரு ராஜா பட்டத்துக்கு வருவதைக் கொண்டாடவோ இல்லை. நம் தர்மங்களும், நம் ஒழுக்கங்களும் பாழ்பட்டு வருகின்றன. அவற்றை மீட்டெடுத்து வருங்காலச் சந்ததிகளிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லவா? அதற்காகத் தானே இந்த சாம்ராஜ்யத்தின் உதயமே! இப்போது குறுகிய வட்டத்தில் இருக்கும் இந்த சாம்ராஜ்யம் விரைவில் தென்னாடுகள் முழுவதையும் சேர்த்துக் கொண்டு வலிமையானதொரு பெரிய சாம்ராஜ்யமாக மாற வேண்டும். நம் தர்மங்களை அழிவிலிருந்து மீட்க வேண்டும். நமது விருப்பம் தேசத்தைச் சார்ந்ததாக இருக்கவேண்டுமே அல்லாது, நம் ஸ்வதர்மத்தைக் காப்பதற்கோ சமயத் துறவை மேற்கொண்டு பற்றற்ற வாழ்க்கையைக்கைக்கொள்வதற்கோ அல்ல. இது தான் தற்போதைய மிகப் பெரிய தர்மம். அதை நாம் காக்க வேண்டும்."
கோபண்ணாவோ அவர் பேசி முடிக்கக் காத்திருந்தவரைப் போல் அவரிடம் சமய வாழ்க்கையையே தான் மிகவும் விரும்புவதாய்க் கூறினார். கங்காதேவி அப்போது குறுக்கிட்டுத் தான், நடுவில் பேசுவதற்கு மன்னிக்கும்படி கூறிவிட்டு மேலே தொடர்ந்தாள். தான் ஓர் வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறினாள். அதன் பேரில் என்ன வேண்டுகோள் என கோபண்ணா கேட்டார். ராஜரீகத்தைத் துறந்து சமயப்பணி ஆற்றவேண்டும் என்னும் எண்ணம் கோபண்ணாவிற்குத் தானாகத் தோன்றியதா அல்லது தெய்வத்தின் ஆக்ஞையா எனக் கேட்டாள் கங்கா தேவி. கோபண்ணா அதற்கு ஒரு விதத்தில் இது தெய்வ ஆக்ஞை தான் என்றார். மேலும் தொடர்ந்த கோபண்ணா தாம் கொள்ளைக்களம் போய் வந்ததிலிருந்து தொடர்ந்து வரும் ஒரு கனவைப் பற்றிக் கூறினார். அந்தக் கனவை விவரிக்கச் சொல்லி கங்கா தேவி கேட்க அவரும் கூறினார்/
தாம் ஓர் கனத்த அந்தகாரத்தில் இருப்பதாயும் கைகளால் துழாவுவதாயும் உணர்ந்ததாய்ச் சொன்னவர் அப்படித் துழாவும்போது ஓர் தெய்வ விக்ரஹம் அவர் கைகளுக்குத் தட்டுப்பட்டதாகவும் சொன்னார். அழகான பிரசன்ன வதனத்துடன் கூடிய அந்த முகத்தைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்பட்டதாயும், சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டிருந்தபடியால் அது விஷ்ணுவின் விக்ரஹமாக இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அந்த விக்ரஹத்தைத் தாம் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை என்றவர் அது திருவரங்கன் விக்ரஹம் எனத் தனக்குத் தோன்றியதாயும் சொன்னார். தாம் திருவரங்கமே போனதில்லை என்றவர் அரங்கனைப் பார்த்ததே இல்லை என்றும் சொன்னார். ஆனால் அவர் மனதில் தாம் கனவில் கண்ட அந்த விக்ரஹம் அரங்கனுடையது தான் என்று உறுதியாய்க் கூறினார்.
அடிக்கடி கனவில் வரும் அந்த விக்ரஹம், வஸ்திரங்கள், ஆபரணங்கள் எதுவும் இல்லாமல் வெறுமையாய் இருப்பதாயும் அது அவர் மனதில் துக்கத்தை ஏற்படுத்தியதாயும் சொன்னார். கனவிலேயே தாம் கண்ணீர் விட்டு அழுததாயும் பின்னர் எழுந்து கொண்டால் அதே நினைவுகள் திரும்பத் திரும்ப வருவதால் தன்னால் எந்த வேலையையும் மனம் ஒருமித்துச் செய்ய முடியாமல் போவதாயும் சொன்னார். வேறு என்ன கனவில் தெரிந்தது எனக் கேட்டதற்கு கோபண்ணா, அந்தகாரமான பெரிய காடு ஒன்று கனவில் வருவதாய்ச் சொன்னார். அந்த அந்தகாரமான காட்டில் எங்கேயோ இருந்து கொண்டு தான் அரங்கன் தம்மை அழைப்பதாயும் சொன்னார்.
அப்போது கங்காதேவி," காடும், மலையும் சேர்ந்த இடம் திருமலை/திருப்பதி தான். தெய்வமும் அங்கே இருக்கின்றது. ஆகவே உங்கள் கனவில் வந்த க்ஷேத்திரம் திருமலையாகத் தான் இருக்க வேண்டும். தாங்கள் ஏன் திருமலைக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு வரக்கூடாது?. அதன் மூலம் ஏதேனும் தெளிவு பெறலாமே! " என்றாள். பண்டிதர், கோபண்ணா இருவரின் முகங்களும் மலர்ந்தன. பண்டிதர் கோபண்ணாவிடம்," தாங்கள் ஏன் இதைச் செயலாற்றக் கூடாது? ஏதேனும் ஒரு வழி கிடைக்கலாம்!" எனத் தன் கருத்தையும் சொன்னார்.