எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, August 28, 2006

. 29. மடத்துத் தெரு பகவத் விநாயகர்.

இது முன்னேயே எழுத வேண்டாம் சரியாகப் பிள்ளையார் சதுர்த்தி அன்று எழுதலாம் என வைத்திருந்தேன். நேற்று எழுதவே முடியவில்லை. மேலும் சிவா வேறு வேலை செய்து கொண்டிருந்தால் தொந்திரவாக இருக்குமே என்ற எண்ணத்தினாலும் பேசாமல் இருந்து விட்டேன். இனி நம்ம உயிர் நண்பர் பிள்ளையார் பற்றி. மதுரையில் இருந்த வரை வடக்கு மாசி வீதி,மேல மாசி வீதி கூடும் இடத்தில் உள்ள ஆலமரப் பிள்ளையார் தான் எதுக்கும். அவர் என்னுடைய உயிர் நண்பர். இப்போவும் சில சமயம் அவரை நினைச்சுக்குவேன். என் மனம் அமைதி அடையும். அதுபோல என் கணவருக்குக் கும்பகோணத்தில் படிக்கும் சமயம் மடத்துத்தெருப் பிள்ளையார் இருந்திருக்கிறார். நான் அவரைப் பார்த்ததே இல்லை. இம்முறை பல வருஷங்களுக்கு முன்னால் உள்ள பிரார்த்தனை ஒன்றும் நிறைவேற்ற முடியுமா எனக் கேட்கவும், பிள்ளையாரைத் தரிசனம் செய்யவும் போனோம்.

கோவிலில் சாயங்கால பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிள்ளையாரை அழகாக அலங்கரித்து இருந்தார் குருக்கள். எப்பவுமே பிள்ளையாரைப் பார்த்ததும் ஏற்படும் ஒருவிதமான அமைதி இப்பவும் ஏற்பட்டது. சின்னக் கோவில் தான். பிரஹாரம் சுற்றி வந்தோம். அப்போது இந்தக் கோவில் பற்றிய வரலாறு சித்திரங்களில் வரையப் பட்டிருந்தது. சங்கட ஹர சதுர்த்தி ஹோமம் செய்யும் குண்டத்திற்கு முன்னால் நவக்ரஹ விநாயகர் படம் வரைந்திருந்தது. இப்போ கோவிலின் வரலாறு:

வேதாரண்யத்தில் "பகவத்" என்னும் பெயருடைய ஒரு முனிவர் இருந்து வந்தார். அவருடன் அவர் சிஷ்யனும், அவர் தாயாரும் வசித்து வந்தார்கள். வயதில் மிக மூப்பு அடைந்த அந்த அம்மாள் தனக்கு முடிவு நெருங்குவதைப் புரிந்து கொண்டு தன் பிள்ளையான பகவத் முனிவரை அழைத்துச் சொல்கிறாள்: "நான் இறந்ததும் என் அஸ்தியை அது எந்த இடத்தில் மலர்களாக மாறுகிறதோ அந்த இடத்தில் உள்ள நதியில் கரைத்து விடு." என்றாள். சில நாட்களில் தாயார் இறந்து போக பகவத் முனிவர் தன் தாயின் அஸ்தியை எடுத்துக் கொண்டுக் காவிரிக் கரையோரமாக வருகிறார். காவிரியின் வட கரையில் கும்பகோணத்திற்கு வந்தார். அங்கே ஒரு பிள்ளையார் கோவிலைப் பார்க்கிறார். நதியில் குளித்து விட்டுப் பிள்ளையாருக்குப் பூஜை செய்யலாம் எனத் தன் சிஷ்யனிடம் அஸ்திக் கலசத்தைக் கொடுக்கிறார். கரையில் காத்திருந்த சிஷ்யன் தற்செயலாக அஸ்திக் கலசம் திறந்திருப்பதைப் பார்த்து மூடப் போகும்போது அஸ்தியே அதில் இல்லாமல் மலர்களாக இருப்பதைக் காண்கிறான். தாயின் அஸ்தி இல்லை என்றால் குரு என்ன சொல்லுவாரோ என்று பயந்து உடனேயே அஸ்திக் கலசத்தை மூடி விடுகிறான். நடந்தது தெரியாத முனிவர் வந்து தன் அன்றாடக் கர்மாக்களையும் பிள்ளையார் பூஜையையும் முடித்துக் கொண்டு சிஷ்யனுடன் கிளம்புகிறார்.

ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே கடைசியில் காசிக்கு வருகிறார். அஸ்தி அப்படியே இருக்கிறது. மனம் நொந்த முனிவர் மறுபடிக் கும்பகோணம் போகலாம், அல்லது வேதாரண்யமே போகலாமா என ஆலோசிக்க அப்போது சீடன் உண்மையை உரைக்கிறான். உடனேயே குரு சொல்கிறார்; "அப்பனே, அதனால்தான் காசிக்கு வீசம் அதிகம் கும்பகோணம்" என்று. பின் திரும்பிக் காவிரிக்கரையில் கும்பகோணம் வர, அஸ்திகள் மலர்களாக மறுபடி மாறுகிறது. உடனேயே காவிரியில் அஸ்தியைக் கரைக்கிறார். பின் அங்கேயே இருந்து பிள்ளையாருக்குக் கோவில் கட்டிப் பூஜை செய்கிறார். அதில் இருந்து அந்தப் பிள்ளையார் "பகவத் விநாயகர்" என்று அழைக்கப் படுகிறார்.

நாளாவட்டத்தில் காவிரி தன் திசையை மாற்றிக் கொள்ள வடகரையில் இருந்த பிள்ளையார் தென்கரைக்கு வந்து விடுகிறார். காவிரி சற்று நகர்ந்து போனதினால் இந்த மாற்றம் என்று சொல்கிறார்கள். இப்பவும் அந்தத் தெருவில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது ஆற்று மணலாக வரும் என்கிறார்கள். இந்தப் பிள்ளையாருக்கு மராட்டிய மன்னரின் அமைச்சரான "அண்ணாஜிராவ்" என்பவர் நிலங்கள் ஒதுக்கித் தினப்படி பூஜைக்கு வழி செய்திருக்கிறார். அவர் சிலை அந்தக் கல்வெட்டைத் தாங்கியபடி விநாயகரின் இடது பக்கம் சன்னதிக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறது. பின் "டபீர் தெரு" இளைஞர்கள் சங்கம் சேர்ந்துக் கோவிலைப் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேஹம் நடத்தி இருக்கிறார்கள். கோவிலில் எல்லாம் பார்த்த பிறகு நாங்கள் வந்த காரியத்தைச் சொன்னோம். அது பிள்ளையாருக்கு 108 தேங்காய்கள் உடைக்க வேண்டும் என்பதுதான். உடனேயே குருக்கள் தேங்காயை மூட்டையில் வரவழைத்து உடைக்கவும் ஆட்கள் தயார் செய்து முதல் தேங்காயும், கடைசித் தேங்காயும் என் கணவர் உடைக்க 4 பேர் நின்று தேங்காய்களை உடைத்து அன்று போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தார்கள். இது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம் என்று கோவில் குருக்கள் சொன்னார். அந்தப் பிள்ளையாருக்குத் தேங்காய் அதுவும் 108 என்றால்தான் பிடிக்கும் போல் இருக்கு என்று நான் நினைத்தேன். எப்படியோ பிள்ளையாருக்கும் சந்தோஷம், எங்களுக்கும் சந்தோஷம்.

Saturday, August 26, 2006

28. எங்களை வாழ வைக்கும் மாரி

ரொம்ப நாளாக மனதில் தோன்றிக் கொண்டிருந்த எண்ணம் ஆன்மீகம் எழுத தனிப் பதிவு போடணும்னு. திரு கார்த்திக் வெளிப்படையாகக் கேட்கவே எண்ணம் உறுதிப்பட்டது. உடனேயே சிவா நான் செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு நேற்று அவருடைய விடுமுறையாக இருந்தும் கூட இந்த உதவியைச் செய்திருக்கிறார். சோதனை பார்த்ததும் அவர் தான். நான் இல்லை. நான் இப்போ இந்த நிமிஷம் தான் இந்தப் பக்கத்துக்கே வந்திருக்கேன். இந்தப் பக்கத்தில் நான் எழுதுவது எல்லாம் அந்தச் சிவனுக்கே எங்கள் குல தெய்வமான மாரி அம்மனுக்கும் அர்ப்பணம். நான் இன்று எங்கள் குலதெய்வமான மாரி அம்மனைப் பற்றி எழுத நினைத்ததும் இந்தப் பக்கம் தனியாக வந்ததும் பொருத்தமாக அமைந்து விட்டது.
நாகை சிவாவிற்கு நன்றி. சும்மாச் சொல்லிட்டு அப்புறம் மறந்து போற மாதிரி நன்றி எல்லாம் இல்லை இது.

எங்கள் ஊர்ப் பெருமாள் கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் அக்ரஹாரம் முடிவில் கிழக்கே சில பர்லாங் போய்ப் பின் வடக்கே திரும்பினால் சற்றுத் தூரத்தில் வருகிறது எங்கள் குலதெய்வமான மாரி அம்மன் கோவில். எங்கள் மாமனாரின் கொள்ளுத் தாத்தா காலத்தில் ஏற்பட்டது என்று சொல்வார்கள். தற்சமயம் அறங்காவலராக வேறு ஒருவர் நியமிக்கப் பட்டு முழுக்க முழுக்கத் தனியார்களால் நிர்வாகம் செய்யப் படுகிறது. கோவிலின் சூழ்நிலையே மிகவும் ரம்மியமாக இருக்கும். சுற்றிலும் வயல்கள் சூழ்ந்த இடத்தில் அம்மன் கிழக்கே பார்த்துக் கொண்டு ஒரு காலை மடித்து ஒரு காலைத் தொங்க விட்டு உட்கார்ந்திருக்கிறாள். மிகவும் சாந்தமான சொரூபம். சன்னதிக்குச் சற்றுத் தள்ளி முன் மண்டபம். மண்டபத்தில் அம்மனின் வாகனங்கள் இருக்கின்றன. வெளிப் பிரகாரத்தில் அம்மனின் எதிரே பலிபீடத்திற்குச் சற்றுத் தள்ளி ஒரு பெரிய குளம். சில வருடங்களுக்கு முன்னால் சுத்தமாக இருந்த குளம் தற்சமயம் சுத்தப்படுத்துதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. வடக்கு வாசல் வழி நுழைந்தால் உள்ளே நுழையும்போதே பேச்சி அம்மன் சன்னதி. பரம்பரைப் பூசாரிகளால் பூஜை செய்யப்படுகிறது. தற்சமயம் கோவில் கட்டுமானப் பணி விரிவுபடுத்தப் படுகிறது. இதற்கு முன்னால் ராஜகோபுரம் கிடையாது. தற்சமயம் ராஜகோபுரம் நிர்மாணிக்கும் பணி, வரும் பக்தர்கள் அங்கேயே குளித்துப் பூஜை செய்யும்படியான தங்குமிடம் வசதி முதலியன செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கும்பாபிஷேஹத்திற்குத் தயார் ஆகி வருகிறது.

சுற்று வட்டாரம் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற்றிச் செல்வதைக் காண முடியும். மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். இவள் அருளால் தான் பெருமாளும் தன் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என நம்புகிறேன். படங்கள் இருக்கின்றன. ஆனால் எனக்கு Tata Indicom-ல் 3 மாதத்துக்குக் கிடைக்கும் 1 1/2 GBயும் தீர்ந்துவிடும் என்று எல்லாரும் சொல்வதால் படங்கள் போடவில்லை. இருந்தாலும் கண்கண்ட தெய்வமான மாரி அம்மன் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டாம். எங்கள் வீட்டில் அவள் அருளால் தான் நாங்கள் இன்று இந்த நிலையில் இருக்கிறோம் என்று சொன்னால் மிகை இல்லை. உலகத்து நாயகியான அவள் தாள் பணிந்தால் நம்முடைய மனம் அமைதி பெறும். அவளே நமக்கு அடைக்கலம் தருவாள்.

"உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன் பாதம் சரண் புகுந்தோம்-எங்கள் முத்து மாரியம்மா எங்கள் முத்து மாரி!"

27. வேங்கடநாதனின் துயரம்

ஆகஸ்ட் 24, 2006

கருவிலியில் இருந்து பரவாக்கரை நுழையும் போது முதலில் பெருமாள் கோவில் வரும் என்று என்னுடைய 115-ம் பதிவில் மாணிக்கேஸ்வரர் கோவிலைப் பற்றிக் கூறும்போது எழுதி இருந்தேன் அல்லவா? அந்தப் பெருமாளைப் பற்றி இப்போது. இவரைப் பற்றியும் திருமூலர் தன் திருமந்திரத்தில் கூறி இருக்கிறாராம். திருமந்திரம் 190-ம் பாடலில்,"வேங்கடநாதனை வேதாந்தக் கூத்தனைவேங்கடத்துள்ளே விளையாடு நந்தியைவேங்கடம் என்றே விரகறியாதவர்தாங்க வல்லாருயிர் தாமறியாரே."என்று திரு சு.செளந்திர ராஜன் கூறுகிறார்.(அவருடைய இனிஷியல் "க" என்று நானாகப் போட்டு விட்டேன். இன்று தான் அவர் புத்தகம் பார்த்ததில் சு.செளந்திரராஜன் என்று புரிந்தது. தவறுக்கு மன்னிக்கவும்.) இந்த வேங்கடநாதன் கோவில் யார் கட்டினது, எப்போ கட்டினது என்று எல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் என் மாமனாரின் பாட்டனுக்குப் பாட்டன் காலத்தில் இருந்து எங்கள் குடும்பம் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வந்திருக்கின்றனர். என் மாமனாரின் பாட்டி குடும்பம் இங்கே விஷ்ணு கோவிலும், அந்தப் பாட்டியின் தங்கை குடும்பம் கருவிலியில் சிவன் கோவிலும் பராமரித்து வந்திருக்கிறார்கள். என் மாமனாரின் அண்ணா இருந்த சமயம் கும்பாபிஷேஹம் செய்வித்திருக்கிறார். பெருமாளுக்கு என்று நிலங்கள், இடம், தேர்முட்டி கோவிலில் பூஜை செய்யும் பட்டருக்கு வீடு என்று எல்லாம் இருந்து வந்தது. ஆனால் என் மாமனார் தன்னால் நிர்வகிக்க முடியாது என்பதாலும், அரசாங்கம் எல்லாக் கோவில்களையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்த நேரம் தன் அறங்காவலர் பதவியை விட்டு விட்டார். அதற்குப்பின் வந்த யாரும் ஊரில் தங்கிப் பெருமாளுக்குப் பூஜை செய்யவில்லை. இங்கேயே இருந்த பட்டாச்சாரியாரும் வேறு ஊருக்குப் போய்விட வேறு ஊரில் இருந்து வந்தவர் நினைத்த நேரம் வர, பெருமாள் தனக்கு எப்போ குளியல், எப்போ படையல் எதுவும் தெரியாமல் திகைத்துப் போய் விட்டார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆன இவர் மிக அழகான உருவமும் வேண்டியவர்க்கு வேண்டியதைத் தரும் உள்ளமும் கொண்டவர். மாமனார் கருவிலியில் இருந்தவரை அவ்வப்போது நடந்த பூஜையும் இப்போது சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. 41/2 அடி உயரத்தில் இருக்கும் பெருமாள் உற்சவ மூர்த்தங்களுடன் அருள் பாலிக்கிறார். இடது பக்கம் சிறிய ஆஞ்சனேயர் சன்னதி உண்டு. தற்சமயம் ஆஞ்சனேயர் சன்னதியில் ஆரம்பித்து அரச மரம் வேர் விட்டுப் பரவு சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது கோவில். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் முட்களும், பாம்புகளும், புதர்களும் மண்டிக்கிடக்கிறது. உள்ளே சன்னதியிலோ வவ்வால்களின் குடித்தனம்.

எப்போதாவது நாங்கள் போகும் சமயம் கோவிலைத் திறந்து வைக்கச் சொல்வது உண்டு, நாளாவட்டத்தில் கோவில் திறக்கக்கூட ஆள் இல்லாமல் போய் அந்த ஊரிலேயே போஸ்ட் ஆஃபீஸில் வேலை பார்க்கிறவர் பரிதாபப்பட்டுக் கோவிலைத் திறந்து வைத்து அபிஷேஹமும், நைவேத்யமும் ஒருமுறையாவது செய்து வந்தார். அவர் தாயின் உடல் நலம் குன்றியதால் அவரும் தற்சமயம் ஊரில் இல்லை. கோவிலின் நிலங்கள் போனவழி தெரியவில்லை. கோவிலின் முன்னே இருந்த தேர்முட்டி மற்றும் அதைச் சார்ந்திருக்கும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு விட்டது. வேங்கடநாதன் தன் மனைவியருடனும், அத்யந்த சிநேகிதனான அனுமனுடனும் கோவிலில் சிறைப்பட்டு விட்டார். அவரை விடுவிக்கும் வழி தான் தெரியவில்லை. ஊர்க்காரர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சி பலிக்க வில்லை. எல்லாம் தெரிந்த அந்த இறைவன் இதை அறிய மாட்டானா என்ன? அவனுக்கு அவன் தான் வழி தேடிக்கொள்ள வேண்டும். மூன்று முறை நாங்கள் முயற்சித்தும் புனருத்தாரண வேலை ஆரம்பிக்க முடியவில்லை. பொறுப்புப் பெரிதாக இருப்பதால் எல்லாரும் பயப்படுகிறார்கள். பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்கள் புரியவில்லை.

26. மரகத மாணிக்கேஸ்வரர்

ஆகஸ்ட் 21, 2006

கருவிலிக்கு வடக்கே முட்டையாற்றைக் கடந்தால் ஒரு மைல் தூரத்தில் "பரவாக்கரை" என்னும்ஊர் வருகிறது. இதுதான் என் கணவரின் முன்னோர்களின் பூர்வீக ஊர். என் மாமனாரின் அப்பா அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றப் புல்லாங்குழல் வித்வான். கும்பகோணத்தில் தங்கி இருந்து சங்கீதம் கற்பித்துக் கொண்டிருந்திருக்கிறார். தற்சமயம் உள்ள புல்லாங்குழல் வித்வாம்சினியான "திருமதி நவநீதம்" இவருடைய சிஷ்யை. இப்போ இருக்காரா என்னனு தெரியாது. என் மாமனாரின் அப்பாவைப் பற்றிய குறிப்பு பழைய தினமணி கதிர் சங்கீத மலரிலே பார்க்கலாம். அந்தக் காலத்தில் கிராமஃபோன் ரெக்கார்டில் பதிவது குறைவாகவும், அது சரியில்லை என்றும் கருதப் பட்டதால் இவரின் பாடங்கள் பதிவில் இல்லை எனக் குறிப்பிடும் இவர், தன் குருநாதர் ஆன என் மாமனாரின் அப்பா அகில இந்திய வானொலிக்காகக் கச்சேரி செய்ய நாள் குறித்திருந்த சமயம் திடீரென இறந்துவிட்டதாகக் கூறி இருக்கிறார். என் மாமனாரின் அண்ணா சில காலம் வாசித்து விட்டுப் பின் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தில் விட்டு விட்டார். இப்போது ஊருக்குள் போவோம்.

ஊருக்குள் நுழையும் போதே முதலில் வருவது பெருமாள் கோவில். கருவேலியில் இருந்து வந்தால் வரும்.ஆனால் வடமட்டத்தில் இருந்து வந்தால் முதலில் "பொய்யாப் பிள்ளையார்" கோயில் வரும். அது தாண்டிய உடனேயே சற்றுத் தூரத்தில் வருகிறது, மரகத மாணிக்கேஸ்வரர் கோயில்.. நான் கல்யாணம் ஆகி வந்த சமயம் சிவன் கோயில் இடிபாடுகளைத் தான் பார்த்திருக்கிறேன். நாங்கள் அதிகம் கருவேலி வழி வந்து விடுவதாலும், என் மாமனார் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த பெருமாள் கோவிலுக்கும், மாரி அம்மன் கோவிலுக்கும் மட்டும் போய்விட்டுப் போய் விடுவோம். சிவன் கோயிலுக்கு என்று போனது கூட இல்லை. அம்மன் விக்ரஹம் களவாடப் பட்டு மாணிக்கேஸ்வரர் மட்டும் வெட்ட வெளியில் தன்னந்தனியாக நின்று கொண்டிருப்பார். பார்த்திருக்கிறேன். கடைசியில் எங்கள் சொந்தக்காரரும், தாயாதியுமான திரு மத்யார்ஜுனன் (Retd. KCUB.) அவர்களின் பெரு முயற்சியாலும், அவருடைய சொந்தக்காரர் திரு செளந்திர ராஜன், (Retd. Professor, Indian Institute of Science) , முயற்சியாலும், காஞ்சிப் பெரியவர்கள் ஆசியினாலும் கோவிலை மறுபடி கட்டி, அம்பாள் சிலையும் புதிதாகப் பிரதிஷ்டை செய்து 2003, ஜூன் மாதம் கும்பாபிஷேஹம் செய்தார்கள்.

திரு செளந்திரராஜன் அவர்கள் தமிழில் ஈடுபாட்டுடன் வரலாறில் ஆராய்ச்சியும் செய்வதில் வல்லவர். அவர் தம் ஆராய்ச்சியின் மூலமும், அவருடைய தாத்தா கூறியதின் பேரிலும் இந்தக் கோயில் திருமூலரால் பாடப்பட்ட தலம் என்று தெளிவாக்கி இருக்கிறார். மரகத மாடம் என்று கூறப்படும் இந்தக் கோயில் திருமூலரால் கட்டுவிக்கப் பட்டது என்றும் கூறுகிறார். அகத்தியர் காலத்தவரான திருமூலர், நந்தி எம்பெருமானிடம் நேரிலே உபதேசம் பெற்றவர். சிவயோகம் பயின்று நந்தி எம்பெருமானால் "நாதன்" என்ற பெயரை அடைந்தவர். சைவ ஆகம சம்பிரதாயத்தில் நந்தி பெருமான் முதன்மை குரு. அவருக்கு நேர்சீடர்கள் 4 பேர். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர். இது தவிர சிவயோக முனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் நால்வர். எட்டுப் பேரும் சித்தர்கள். நந்தியின் மூலம் சிவ ஆகமத் தத்துவங்களையும்,,சிவ யோகத்தையும், சிவ சித்தாந்த ஞான போதத்தையும் கற்ற திருமூலர் தில்லையை அடைந்து யோக நிஷ்டையில் சில காலம் இருந்து பின் தெற்கே வந்த போது திருவாவடுதுறையில் மூலன் என்ற இடையனின் உயிரற்ற உடலில் புகுந்து பின் பரவாக்கரை, திருவாவடுதுறை ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்திருக்கிறார். பரவாக்கரையில் நிஷ்டையில் அமர்ந்து, "ஆணிப்பொன் மன்றினில்" "செவ்வனிற்செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமாய்" அந்த "மாணிக்கத்துள்ளே மரகத சோதியாய்" "மாணிக்கத்துள்ளே மரகத மாடமாய்" ஆடும் திருக்கூத்தைத் தொழுது மாணிக்கேஸ்வரரையும், மரகதவல்லியையும் பாடி தொழுது இருக்கிறார். சிவபஹியான பரவாக்கரையில் நவாக்கர் சக்ர, பஞ்சாக்கர விதி மூலம் மரகதவல்லி சமேத மாணிக்கேஸ்வரர் கோயிலை நிர்மாணித்திருக்கிறார்.

இந்தக் கோயிலானது தற்சமயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேஹம் முடிந்ததும் நித்தியப்படி பூஜை முதலிய பொறுப்பை ஊர்க்காரர்கள் ஏற்றுச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.மரகதவல்லி அம்மை தெற்கு நோக்கி யோக சக்தியாக நவாக்கரி சக்கரத்தில் அருள் பாலிக்கிறாள். மாணிக்கேஸ்வரரோ செஞ்சுடர் மாணிக்க, பிந்து-நாத சக்தி சிவ லிங்கம் என்று போற்றப்பட்டு திருச்சிற்றம்பல முக்தியை அருளுகிறார். மற்றும் நவக்ரஹம், பைரவர், தெற்கு நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி, வடக்கு நோக்கி இருக்கும் துர்க்கை போன்ற சன்னதிகள் எல்லாம் இருக்கின்றன. பரவாக்கரை என்ற பெயருக்கு ஆண்டவனின் பிரகாச பிந்துவினால் முக்தி கிடைக்கும் என்று அர்த்தம் திருமந்திரம் மூலம் தெளிவாகத் தெரிவதாக திரு செளந்திர ராஜன் அவர்கள் கூறுகிறார். இந்த ஊர் சிவன் கோயில் பற்றி என் மாமனார், மாமியார் அதிகம் கூறியது இல்லை என்பதால் நான் திரு செளந்திர ராஜன் அவர்கள் கூறியதையே எழுதி இருக்கிறேன்.

25. புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி

ஆகஸ்ட் 19, 2006

கும்பகோணத்திற்குக் கிழக்கே அரிசிலாற்றின் தென்கரையில் கூந்தலூர் என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து சற்று வடக்கே போனால் "கருவிலி" என்ற பெயர் கொண்ட ஊர் வரும். இதற்குக் கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து "பரவாக்கரை" என்ற ஊர் ஒரு கி.மீட்டரில் உள்ளது. அந்த ஊரில் இருந்தும் முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் ஒரு மைல் வந்தும் வரலாம். இந்த இரண்டு ஆறுகளுக்கு நடுவில் அமைந்த ஊர் தான் "கருவிலி". நான் கல்யாணம் ஆகி முதல் முதல் வந்த ஊர். உண்மையில் பூர்வீகம் "பரவாக்கரை" தான் என்றாலும் என் மாமனாரின் பங்கு நிலங்கள் இந்த ஊரைச் சுற்றி அமைந்த காரணத்தாலும், அந்த நாளில், மழை பெய்யும்போது முட்டையாற்றில் வெள்ளம் வந்து உடைப்பு ஏற்பட்டு இங்கே வந்து சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதாலும் இங்கேயும் ஒரு வீடு இருந்ததாலும் இங்கே வந்தனர் என்று சொல்வார்கள். ஆனால் இன்னும் நாங்கள் குலதெய்வம் என்று பரவாக்கரை மாரி அம்மனைத் தான் வழிபடுகிறோம். இப்போது சற்று கருவிலியைப் பற்றி.

முன்பு எல்லாம் நாங்கள் மூங்கில் பாலத்தில் தான் ஆற்றைக் கடக்க வேண்டும். அதுவும் மழை நாளிலும்,ஆற்றில் தண்ணீர் வந்து விட்டாலும் மாட்டு வண்டியை அவிழ்த்து மாட்டை விரட்டி விடுவார்கள். மாடு நீந்திப் போய்விடும். வண்டியை ஆட்கள் ஆற்றில் தள்ளிக் கொண்டு போய் கரையில் ஏற்றி விடுவார்கள். இப்போ கல்பாலம் வந்து விட்டது. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் கார் முதல் லாரி வரை போகலாம். போகும் வழி எல்லாம் மூங்கில் தோப்புக்களும், தென்னந்தோப்புக்களும் சூழ்ந்து நின்று வயல்களைப் பாதுகாக்கும். ஆற்றில் தண்ணீர் வந்ததும் ஊர்ப்பக்கம் போனால் வாய்க்காலில் நாற்று மாலைகள் மிதந்து வரும் காட்சியைப் பார்க்கலாம். இப்போது டீக்கடையில் இருந்து பாட்டுச் சத்தமும், அங்கங்கே டீ.விக்களின் சத்தமும் கேட்க ஆரம்பித்துள்ளது. இது முன்னேற்றத்திற்கான பாதை என்றாலும் ஊரின் ஜீவன் எங்கோ போய் விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் கடந்து போனால் ஊருக்குள் போகும்போதே அக்ரஹாரம் வரும். சில வீடுகளே உள்ள அக்ரஹாரம். நாங்கள் இருந்த போதே 4 வீடுகளில் தான் எங்கள் சொந்தக்காரர் இருந்தனர். தற்போது கோவில் குருக்களைத் தவிர யாரும் இல்லை. அக்ரஹாரத்தில் நுழையும் போதே நமக்கு வலப்பக்கமாக ஆஞ்சனேயர் கோயில். ஆஞ்சனேயரைத் தரிசித்துவிட்டு உள்ளே போனால் அக்ரஹாரத்தின் முடிவில் சிவ ஆலயம்.

சோழ நாட்டுப் பாணியில் கருவறையில் விமானம் பெரிதாக உள்ள மாதிரிக் கட்டப்பட்ட கோயில். மிகப் பழைமை வாய்ந்த கோவில். நான் திருமணம் ஆன புதிதில் கோவிலுக்குப் போனால் குருக்கள் மாமாவைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். அவர் கோவில் திறக்கும் சமயம் கேட்டுக் கொண்டு போய் விட்டு வருவோம். ஸ்வாமிக்கு விளக்கேற்றி சாதம் நைவேத்தியம் செய்தாலே பெரிது. சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து ஸ்வாமி சன்னதிக்கு வடக்கே அம்மன் சன்னதிக்குப் போகும் பாதை எல்லாம் புதர் மண்டிக் கிடக்கும். திரு பரணீதரன் அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்று விட்டதாக ஆனந்தவிகடனில் எழுதி இருக்கிறார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு 97 ஏப்ரலில் கும்பாபிஷேஹம் நடைபெற்றது. காரணகர்த்தாக்கள் கல்கி திரு வைத்தியநாதனும், அவர் தம்பி திரு கிருஷ்ணமூர்த்தியும் ஆவார்கள். இருவருக்கும் பூர்வீகம் இந்த ஊர்தான். ஆனால் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னே சென்னை சென்று பின் திரு கிருஷ்ணமூர்த்தி டெல்லியும் சென்று "மாருதி உத்யோக்" பொறுப்பையும் ஏற்றதும், பின் Steel Authority பொறுப்பும் சேர்ந்து கொள்ள ஊரைப் பற்றி மறந்தே போனார்.

திடீரென இந்த ஊர் ஆஞ்சனேயர் கனவில் வந்து கோவில் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்தினதாய்ச் சொல்கிறார்கள். சிலர் ஊர்க்காரர் ஒருத்தருக்கு ஆஞ்சனேயர் வந்ததாயும் சொல்கிறார்கள். எப்படியோ கோவிலுக்கு வந்தது புது வாழ்வு. பரம்பரை தர்மகர்த்தாக்களான இவர்கள் குடும்பம் பொறுப்பை ஏற்றதும் ஐயன் புதுப் பொலிவினையும், அன்னை அலங்காரத்தையும் பெற்றனர்.

தேவாரப்பாடல் பெற்ற தலம் இது.அப்பர் தன் பதிகங்களிலே இந்தத் தலத்தைக் "கருவிலிக் கொட்டிட்டை" என்றே அழைக்கிறார். திரிபுரம் எரித்த எம்பெருமான் ஆடிய பல்வேறு வகை நடனங்களிலே "கொட்டிட்டை" ஒருவகை என்பதாகவும், அதனையே ஈசன் இங்கு தாண்டவமாக ஆடினார் என்பதும் செவிவழிச் செய்தி. கோயிலின் பெயர் "கொட்டிட்டை" என்பது. அப்பர் தன் பாடலிலே,

"உய்யுமாறிது கேண்மினுலகத்தீர்
பைகொள் பரம்பரையான் படையார் மழுக்
கையினானுரை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்ட்டிட்டை சேர்மினே!" - என்றும்,

"நில்லா வாழ்வு நிலைபெறுமென்றெண்ணிப்
பொல்லாவாறு செயப் புரியாது நீர்
கல்லாரும் மதிள் சூழ்தண் கருவிலிக்
கொலேறூர்பவன் கொட்டிட்டை சேர்மினே! " - என்றும் இத்தலத்தைச் சிறப்பித்துப் பாடி உள்ளார்.

சற்குணன் என்ற சோழ அரசன் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து இத்தலத்து ஈசனைத் துதித்து மோட்சம் பெற்றான். "கருவிலி" என்ற பெயரே "இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்," என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது. மிகப் பெரிய லிங்கம். கோவில் மிகப் பழைய கோவில். ஆயிரம் வருடங்களுக்கு மேல் இருக்கும். மிகப் பெரிய அம்பாள். பார்த்தால் நிச்சயம் திகைப்பாக இருக்கும். அப்படி அம்மன் உங்கள் எதிரில் நின்று பேசுவாள்,. நாம் கூப்பிட்டால் "என்ன, இதோ வந்துட்டேன்," என்பது போன்ற சிரித்த முகத்துடன் நிற்பதைப் பார்த்தால் இவள் சர்வாங்க சுந்தரி என்பதற்கு வேறு அடையாளமே வேண்டாம் என்று தோன்றும். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

கோயிலின் எதிரே யமதீர்த்தம். நன்றாகச் செப்பனிடப்பட்டு வட இந்தியப் பாணியில் "கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின்" சிற்பம் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலில் இன்னும் ராஜகோபுரம் கிடையாது. உள்ளே நுழைந்ததுமே ராஜகோபுர அமைப்புக்கு முன்னேயே நந்தி எம்பெருமான் வீற்றிருக்கிறார். தற்சமயம் ராஜகோபுரம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. "கொடு கொட்டி"த் தாளம் போட்டு ஆடும் நடராஜர் சிலை பல வருடங்களுக்கு முன்னாலேயே களவாடப்பட்டு இப்போது வெளிநாட்டில் இருக்கிறது. 6 மாதங்களுக்கு முன்னால் தான் புதிய நடராஜர் சிலை ஸ்வாமி சன்னதியிலேயே பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள். முன்னால் இருந்த சிலை அம்மன் சன்னதியில் இருந்தது என்று என் கணவர் சொல்லித் தெரிந்து கொண்டேன். ஸ்வாமி சன்னதி தூய்மையுடன் இருக்கிறது. ஆடிக் களைப்படைந்த ஈசன் "சிவனே" என்று உட்கார்ந்து கொண்டு விட்டதாலோ என்னவோ தெரியவில்லை. மனதிலும் இனம் புரியாத அமைதி. சான்னித்தியம் பரிபூர்ணம். நன்றாய் உணர முடியும்.

வடக்கே தனியாய் அம்மன் சன்னதி. அம்மனைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். குறைந்தது 51/2 அடி உயரத்தில் இருக்கும் அம்மன் உலகத்து அழகை எல்லாம் உள்ளடக்கி நிற்கிறாள்.

"உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலைதுதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமதோயம் என்னவிதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே!" என அம்பாள் எல்லாம் சிவப்பாக மலர்மாலை கூடச் சிவப்புச் செம்பருத்தி மாலையுடன், சிவப்புப் புடவை, சிவப்பு மூக்குத்தியுடன் காட்சி அளித்தாள்.

கோவிலில் நவக்ரஹத்திற்குத் தனிச் சன்னதி இல்லை. யாருக்கும் காரணம் தெரியவில்லை. மிகப் பழைய இந்தக் கோயில் சோழ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்ததை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.முதலாம் ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் நிறைய இருக்கின்றன. யாராவது ஆராய்ச்சி செய்தால் கண்டு பிடிக்கலாம். ஆனால் உண்மையில் இந்தக் கோவிலைக் கட்டியவர் யார் என ஆராய்ச்சி நடக்கவில்லை. தருமபுர ஆதீனத்தின் நூல்களில் இங்கே இந்திரன் உள்ளிட்ட ருத்ர கணங்கள் வழிபட்டு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. கோயிலின் பல ஏக்கர் விஸ்தீரண நிலங்களில் தற்சமயம் மிகுந்த முயற்சிக்குப் பின் பாமாயில் சாகுபடி நடைபெற்று வருகிறது. காஞ்சி பரமாச்சார்யாள் இந்த ஊருக்கு வருகை தந்த சமயம் இங்கே அம்மன் சன்னதியில் கேட்பாரற்றுக் கிடந்த ஐம்பொன் மேருவைக் கண்டுபிடித்துக் காஞ்சியில் காமாட்சி அம்மன் சன்னதியில் பத்திரப்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார்கள். பிரஹாரங்களில் உள்ள சிற்பங்களைக் கண்டால் அந்தக் காலத்தில் இருந்த உன்னதமான நிலைக்குச் சான்று. சில சிற்பங்கள் கை உடைந்தும் காட்சி அளிக்கின்றன. எல்லாம் செப்பனிடுகிறார்கள்.

திரு வைத்தியநாதன், திரு கிருஷ்ணமூர்த்தி இருவரின் பாட்டியும், என் மாமனாரின் பாட்டியும் உடன் பிறந்த சகோதரிகள். அக்காவைப் பரவக்கரையிலும், ஒரு மைல் தள்ளித் தங்கையைக் கருவிலியிலும் கொடுத்தாராம் அவர்கள் தந்தை. அக்கா, தங்கையின் பூர்வீகம் நாச்சியார் கோவில். தற்சமயம் கோவிலில் நித்தியப்படி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தக் கோவிலைப் பற்றிக் கல்கி பத்திரிகையிலும், மங்கையர் மலர் பத்திரிகையிலும் ஜெயா டி.வியிலும் அடிக்கடி வரும்.

24. நடந்தாய் வாழி, காவேரி!

ஆகஸ்ட் 18, 2006

காவேரி நதியைப் பத்தி நான் சொல்லி யாரும் தெரிஞ்சுக்கணும்னு இல்லை. ஆனால் நான் முதலில் பார்த்த காவேரிக்கும், இப்போது பார்க்கிற காவேரிக்கும் உள்ள வித்தியாசங்களைச் சொல்கிறேன். நாங்க பங்களூரில் இருந்து மைசூர் போனது பஸ்ஸில் தான். கர்நாடக அரசு பஸ் என்றாலும் VOLVO பஸ் என்பதாலும் முற்றிலும் குளிரூட்டப் பட்டது என்பதாலும் பஸ்ஸில் போவது போலவே இல்லை. நல்ல தரமான ரோடும் கூட. பஸ்ஸில் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டு டிரைவர் பக்கத்தில் பொத்தான் உள்ளது. நடத்துனர், ஓட்டுநர் எல்லாரும் ஒருவரே. நல்ல திறமையான நிர்வாகம். கட்டாயம் பாராட்டுக்குரியது.

போகும் வழியில் சன்னப்பட்டினம் தாண்டியதுமே காவேரியின் சிறப்புக்கள் தெரிய ஆரம்பித்தன. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காவேரியைக் கடக்கும்போது பார்த்தேன். தலைக்காவேரியிலிருந்து தவழ்ந்து வரும் காவேரி, நடக்க ஆரம்பித்த குழந்தை போல வேகமாக வருகிறாள். செல்லும் வழி எங்கும் பசுமை, குளிர்ச்சி. மைசூரில் இருந்து கிளம்பி திருச்சி வரும் வழியில் இரவாகி விட்டதால் நடுவில் கடந்த காவேரியைப் பார்க்க முடியவில்லை. திருச்சியில் காலை எழுந்து குணசீலம் போகும் வழியில் முக்கொம்பில் ஆட்டோ பாதை மாறியது. ஆகவே முக்கொம்பை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டே போனோம். அகண்டு விரிந்த தன் கரங்களால் ஊருக்குள் வர முடியுமா என்பது போல வேகம் எடுத்துப் போக வேண்டியவள், இப்போது அடக்க ஒடுக்கமாக இரு கரையும் தொட்டுக் கொண்டு நிதானமாக ஓடுகிறாள்.முக்கொம்பிலேதான் கொள்ளிடம் பிரிகிறது. அங்கே தன் ஆற்றலில் ஒரு சிறிய பங்கு தான் கொடுத்திருக்கிறாள். முதன் முதல் திருமணம் ஆகிக் கணவன் வீடு வரும் மனைவி போல் இல்லாமல் வெகு நாட்கள் கணவனைப் பிரிந்திருந்து விட்டு இப்போது பயமும், தயக்கமுமாகக் கணவன் தன்னை ஏற்றுக் கொள்வானா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் பெண்ணைப் போல மிக அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறாள். ஆனால் செல்லும் வழியெங்கும் தன் வளத்தைக் காட்டத் தவறவில்லை. கடமையில் சிறிதும் தவறாத மனைவியைப் போல அங்கங்கே பாசனம் செய்திருந்த நிலங்களைச் செழிப்புறச் செய்திருந்தாள்.

பச்சையில் தான் எத்தனை வகை? நிலத்தில் விதை விதைத்தவுடன் முளை கிளம்பியதும் தெரிகிற மஞ்சள் கலந்த பச்சை, நாற்று சிறிது வளர்ந்ததும் தெரிகிற கிளிப்பச்சை, நாற்று பிடுங்கி நடுகிற பக்குவத்திற்கு வந்தது தெரிகிற கரும்பச்சை, நட்ட நாற்றுக்கள் பயிராக வளர்ந்த இடங்களில் தெரிகிற இலைப்பச்சை என்றும் எங்கும் எதிலும் பச்சை மயம். கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாகக் ,காற்றும் குளிர்ந்து வீசியது. நாற்றுக்கள் பிடுங்கி அங்கங்கே மாலை போலக் கட்டப்பட்டிருகின்றன. பார்க்கவே கண்ணுக்கு ரம்மியமான காட்சி. முன்பெல்லாம் என் புக்ககமான கிராமத்திற்குப் போகும் வழியில் இம்மாதிரி நிறைய நாற்று மாலையைக் காணலாம். சிலர் வாய்க்காலில் கூட விடுவார்கள். நாற்று மிதந்து போகும் காட்சி கண்ணுக்கு அழகாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கும். இப்போது என்னதான் தண்ணீர் இருந்தாலும் இம்மாதிரி அதிகம் பார்க்க முடியவில்லை. சில நிலங்கள் தரிசாகவும் கிடக்கின்றன. உழுது போட்டிருக்கும் நிலங்களின் பழுப்பு நிறமும், தண்ணீர் கட்டி வைத்துள்ள நிலங்களின் நிறமும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இன்பம் அளிக்கிறது.தன் புகுந்த வீட்டுக்கு எவ்விதக் குறையும் அளிக்க விரும்பாத ஒரு பெண்தான் அவள் என்று புரிகிறது. ஆனால் நாம்? அவள் வரும் வழியை எப்படி வைத்திருக்கிறோம்?

திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை ஓரளவு நல்ல மாதிரியாகப் பார்க்க முடிகிறது. ஆனால் கும்பகோணத்திலும், மாயவரத்திலும் மிகக் குறைந்த அளவிலேயே பாசனம் நடைபெறுகிறது. அதுவும் கும்பகோணத்தில் இருந்து ஸ்வாமிமலை போகும் வழி எங்கும் முன்னர் பார்த்த வயல்கள் எங்கே? தெரியவில்லை. எல்லாம் வீடு மயம். மடத்துத் தெரு காவேரிப் படித்துறையில் காவேரி சற்று வேகமாகப் போகிறாள். திருவலஞ்சுழியில் அவளில் இருந்து பிரிந்து வந்த அரசலாறோ பார்த்தாலே கண்ணீர் வரும் நிலைமையில் இருக்கிறது. அரசலாறு ஒரு அமைதியான நதி. காவேரியைப் போல ஆரவாரம் இருக்காது.

கும்பகோணத்தில் இருந்து எங்கள் ஊர் செல்லும் சாலையில் சாக்கோட்டையில் ஆரம்பித்து சாலையை விரிவாக்கம் செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு பழைய மரங்கள் எல்லாம் வேரோடு வெட்டிச் சாய்க்கப் படுகிறது. அந்தப் பக்கம் போனாலே குளிர்ச்சியாக இருக்கும். இப்போது அரசலாறு இரு கையும் இழந்த பெண்ணைப் போல ஒரு மெளன சாட்சியாக வாயைத் திறக்காமல் தயங்கித் தயங்கிப் போய்க் கொண்டிருக்கிறாள். அவள் மேனி எல்லாம் ஆகாயத் தாமரையும், பார்த்தீனியமும். தன் உடலில் இத்தனை வியாதி எப்படி வந்தது என்பதே புரியாமல் திகைப்புடன் தனக்கு என்ன ஆச்சு என்று பார்த்துக் கொண்டே போகிறாள். இத்தனை நாள் ஊர்ப்பக்கம் போகும் போது எல்லாம் தண்ணீர் வரவில்லை அதான் இப்படி என்று சொன்னார்கள். இப்போது நாட்டான் வாய்க்காலில் இருந்து ஆரம்பித்துக் காவேரியில் இருந்து பிரியும் எல்லாக் கிளை நதிகளிலும் தண்ணீர் போய்க் கொண்டிருந்தும் அரசலாற்றின் துயரம் தீரவே இல்லை. ரொம்ப மன வருத்தத்துடன் ஓடுகிறாள். இங்கே எல்லாம் பாசனமும் அவ்வளவாக நடைபெறவில்லை. எல்லாரும் பணப்பயிரான பாமாயில் கன்றுகள், கரும்பு என்று ஏதேதோ போடுகிறார்கள். மொத்தத்தில் இத்தனை நாளாக வறண்ட ஊரைப் பார்த்து வந்த எங்களுக்கு இப்போது தண்ணீர் வந்தும் ஏமாற்றமாக இருந்தது.

நடந்தாய் வாழி காவேரி!
"மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அது போர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி காவேரி!

கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி! "

23. ஐயனை ஆரத் தழுவிய அன்னை

ஆகஸ்ட் 16, 2006

பொதுவாகவே நான் கோவில்களுக்கோ அல்லது சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்களுக்கோ சென்றால் அதன் பூரா வரலாற்றையும் தெரிந்து கொள்ள கூடியவரை முயற்சி செய்வேன். இப்போது வலை பதிய ஆரம்பித்ததும் அது ஜாஸ்தி ஆகி விட்டது. இப்போ நாம் போகப் போற கோயில் கும்பகோணத்தில் இருந்து கிட்டேதான் இருக்கிறது. அன்று காலை நவக்கிரஹக் கோயில், மற்றக் கோயில் என்று ஏறி இறங்கியதில் மிகக் களைத்துப் போயிருந்த நான் சாயங்காலம் எங்கேயும் போக வேண்டாம் என்று தான் முடிவு செய்து இருந்தேன், ஆனால் எங்கள் ஆட்டோ டிரைவர் விடவில்லை. இவ்வளவு தூரம் வந்து விட்டுப் பட்டீஸ்வரம் துர்கையைப் பார்க்காமல் போவதா என்று சற்று நேரம் கழித்து வருகிறேன் என்று 5-30-க்கு வந்து எங்களை அழைத்துச் சென்று விட்டார். போனதும் தான் தெரிந்தது எவ்வளவு பெரிய விஷயத்தை நழுவ விட இருந்தேன் என்று.

கும்பகோணத்தின் புறநகர்ப் பகுதியாக இன்று மாறி இருக்கும் பட்டீஸ்வரம் கும்பகோணம் நகரில் இருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவலஞ்சுழியும், ஸ்வாமிமலையும் போய் விட்டுத் திரும்பும் வழியில் சற்றுத் தென்மேற்கே வந்து பட்டீஸ்வரம் போனோம். காமதேனுவும் அதன் மகள்களான நந்தினியும், பட்டியும் பூஜித்த தலம். அதுவும் பட்டி தன் பாலைப் பொழிந்து பூஜித்த காரணத்தால் அவள் பெயரிலேயே "பட்டீஸ்வரம்" என்ற பெயர் கொண்டது. வடமொழியில் தேனுபுரம் என்ற பெயர் கொண்ட இந்தக் கோயிலின் சுயம்பு லிங்கம் ஆன மூலவர் "தேனுபுரீஸ்வரர்" என்று அழைக்கப் படுகிறார். மார்க்கண்டேயர் பூஜித்த தலமும் கூட. அன்னை ஞானாம்பிகை. வசிஷ்டர் விஸ்வாமித்திரருக்குப் "பிரம்ம ரிஷி"ப் பட்டம் கொடுத்த தலம். மேலும் "திருச் சத்தி முற்றத்தில்" இருந்து வந்த ஞான சம்மந்தப் பெருமானுக்கு இந்தக் கோயில் தேனுபுரீஸ்வரர் ஞானசம்மந்தரை வெயிலின் கொடுமை தாக்காமல் இருக்க முத்துப் பந்தல் அனுப்பி வைத்து இருக்கிறார். ஞானசம்மந்தர் முத்துப் பந்தலில் வரும் அழகைத் தன் கண்ணால் காண வேண்டி நந்தியை விலகி இருக்கும்படித் தேனுபுரீஸ்வரர் பணித்தாராம். திருக்கோயிலின் ஐந்து நந்திகளுமே "சற்றே விலகி இருக்கும் பிள்ளை" களாக இருக்கின்றன. ராமேஸ்வரத்தில் ராமநாதரைப் பிரதிஷ்டை செய்த ராமர் இங்கும் வந்து வில்முனையால் கோடிதீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு.

உயர்ந்த பாணமான மூலவரையும், அம்மனையும் நிதானமாகத் தரிசனம் செய்ய முடிகிறது. காரணம் கூட்டம் எல்லாம் துர்க்கை சன்னதியில்தான். திருப்பணி செய்த கோவிந்த தீட்சிதர் சிலையையும் காட்டுகிறார்கள். ஸ்வாமி சன்னதிப் பிரஹாரத்தில் உள்ள பைரவர் சன்னதியின் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்றக் கோவில்களில் சிறு சிற்பமாகக் காணப்படும் காவல் தெய்வமான பைரவர் இங்கே நிஜமான ஒரு ஆள் போல இருக்கிறார். அந்தச் சன்னிதியின் குருக்கள் எங்களைக் கூப்பிட்டுத் தரிசனம் செய்து வைத்தார்.

வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கை அம்மன் அருள் பாலிக்கிறாள். இவளும் அண்ணாந்து பார்க்கும் உயரம் கொண்டிருக்கிறாள். பக்தர்கள் கூட்டம் எல்லாம் இங்குதான். தற்சமயம் கோவிலின் நுழைவாயிலே வடக்குக் கோபுர வாயிலாக மாறி விட்டிருக்கிறது.எட்டுக்கைகளுடன் அருள் பாலிக்கும் அன்னை வேண்டியவர்களுக்கு வேண்டியதை அள்ளித் தருகிறாள். அதனால்தான் கூட்டம் தாங்கவில்லை என்கிறார்கள்.

இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே "சத்தி முற்றம்" உள்ளது. உண்மையில் திருஞானசம்மந்தர் முதலில் இங்கே வந்துவிட்டுத்தான் தேனுபுரீஸ்வரர் அனுப்பிய முத்துப்பந்தலில் "பட்டீஸ்வரம்" சென்றிருக்கிறார். முத்துப்பந்தல் விழா ஆனி மாதம் நடைபெற்றிருக்கிறது. திருநாவுக்கரசர் இங்கே வந்துவிட்டு தழுவக் கொழுந்தீஸ்வரரை வணங்கிச் சென்ற பின் தான் திருநல்லூர் சென்று திருவடி தீட்சை பெற்றிருக்கிறார்.மனைவியைப் பிரிந்து பாண்டிய நாடு சென்ற புலவர் ஒருவர் நாரையின் மூலம் தூது விட்ட "நாராய்! நாராய்!, செங்கால் நாராய்!" என்ற பாடலை எழுதிய சத்திமுற்றப்புலவர் இந்த ஊர்தான்.

வேத ஆகமங்களின் பொருள் தெரிய ஆசை கொண்ட அன்னை அண்ணலை வேண்ட அண்ணலும் கூறுகிறார். தன் பக்தியின் மூலம் உலகத்தோர்க்கு "பக்தியே முக்திக்கு வித்து" என உணர்த்த எண்ணிய அன்னை சக்தி வனம் வந்து ஒற்றைக்காலில் கடுந்தவம் செய்கிறாள். அன்னையின் தவத்தையும், பக்தியையும் உலகத்தோர்க்கு உணர்த்த எண்ணிய அண்ணல் அன்னையைச் சோதிக்க எண்ணி அனல் பிழம்பாக வருகிறார். ஞானாம்பிகையான அன்னை தன் ஞானத்தால் வந்தது தன் பதியே என உணர்ந்து அந்தப் பரஞ்சோதியை, எல்லை இல்லாப் பரம்பொருளைத் தன் கைகளால் கட்டிக் குழைய அண்ணல் அன்னைக்கு அருள் பாலிக்கிறார். அன்னை கட்டித் தழுவிய நிலையிலேயே ஒரு தனி சன்னதி மூலவருக்கு இடப்பக்கம் உள்ளது. அதன் பின்னாலேயே அன்னை ஒற்றைக் காலில் தவம் இருந்த கோலத்தையும் கண்டு களிக்கலாம். மூலவர் கருவறையில் "சிவக்கொழுந்தீஸ்வரர்" ஆக அருள் பாலிக்கிறார். திருமேனியில், தீச்சுடர்கள் தெரிகின்றன. தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால் தீப ஆராதனை செய்து காட்டுகிறார். ஆனால் நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன. அன்னை பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.

திருமணம் ஆகாதவர்களும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் தழுவக்குழைந்த அன்னைக்கும் , ஈசனுக்கும் சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர். அன்னை தழுவி முத்தமிட்டதால் "சக்தி முத்தம்" என்பது மருவி "சத்தி முற்றம்" என்று ஆகி இருக்கிறது. எங்கும் காணக் கிடைக்காத இந்தக் காட்சியை நான் பார்க்க வில்லை என்றால் நிச்சயம் வருந்தி இருப்பேன். என்னை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு போன என் கணவருக்கும் இந்தக் கோயிலைப் பற்றிச் சொல்லி எங்கள் ஆவலைத் தூண்டி விட்ட ஆட்டோ டிரைவர் ரவிக்கும் தான் என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

இங்கிருந்து வரும் வழியில் தான் தாராபுரம் இருக்கிறது, என்றாலும் நேரம் ஆகிவிட்டபடியால் போக முடியவில்லை. பட்டீஸ்வரத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் தான் பழையாறையும் இருக்கிறது. கோவில் சீக்கிரம் மூடி விடுவார்கள் என்பதால் இங்கே எல்லாம் போக முடியவில்லை. வரும் வழியில் "சோழன் மாளிகை" என்றபெயரில் ஒரு ஊர் வருகிறது. அங்கே சோழன் மாளிகை இருந்த இடத்தையும், சில வருடங்களுக்கு முன் வரை சுற்றுச்சுவர் மட்டுமாவது இருந்த இடம் தற்சமயம் மண்ணோடு மண்ணாகி விட்டதையும் டிரைவர் காட்டினார்.

22. ஸ்ரீசக்ர ராஜ தனயே

ஆகஸ்ட் 15, 2006

அனைத்துக்கும் ஆதாரமான சக்தி வடிவானவள் "ஆதி பராசக்தி" என்று அழைக்கப் படுகிறாள்.எல்லாவற்றிற்கும் ஆதாரமான சக்தியைத் தாய் வடிவில் வழிபடுகிறோம். அந்த சக்தியின் வடிவே ஸ்ரீ லலிதா ஆகும். இவ்வுலகை ஆளும் பரம்பொருளின் சக்திகள் எல்லாம் இணைந்த வடிவே ஆயிரம் நாமங்களால் போற்றித் துதிக்கப் படும் ஸ்ரீ லலிதாம்பிகை. ஆதி பராசக்தியான ஸ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீ சக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத, ஹஸ்த முத்திரையுடன் அருளாட்சி நடத்தி வரும் இடம் "திருமீயச்சூர்" என்னும் ஊராகும். இது கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் போகும் வழியில் பேரளம் ரயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கே 1 கி.மீ தூரத்தில் இருக்கிறது.

இந்தத் "திருமீயச்சூர்" தலத்தில் தான் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்த என் பெரியப்பா மாப்பிள்ளை திரு சந்திரசேகரன் அவர்கள் இறை வழிக்குத் திரும்பினார். அந்த விதத்திலும் இது எங்களுக்கு ஒரு முக்கியமான க்ஷேத்திரம் ஆகும். தற்சமயம் "மயன்" என்ற பெயரில் குமுதம் "பக்தி" யில் மாவட்டம், மாவட்டமாகக் கோயில்களுக்குப் போய் வந்து எழுதிக் கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட கோயிலைத் தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. தற்சமயம் நிறைவேறியது. கும்பகோணத்தில் இருந்து திரு நள்ளாறு போகும் வழியில் சற்று மேற்கே திரும்பி இந்த ஊருக்குப் போனோம்.

உள்ளே போனால் இரண்டு கோயில்கள் இருக்கின்றன. ஒன்று லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாதஸ்வாமி கோயில், (மெயின் கோயில்), மற்றது மின்னும் மேகலை என்னும் அம்பாளுடன் கூடிய ஸகல புவனேஸ்வரரின் இளங்கோயில் ஆகும். சோழர் காலக் கட்டடக் கலையின் சிறப்புக்கள் கொண்ட இந்தக் கோயிலின் பேரழகு வாய்ந்த சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். செம்பியன் மாதேவி, மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியவர்களால் திருப்பணி நடத்தப் பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களிலும் ஒன்று. கணவன், மனைவி ஒற்றுமைக்குச் சிறந்த சான்று இந்தக் கோயில். ஒருவர் சினம் கொண்டால் மற்றவர் மெளனத்தால் அச்சினத்தை வெல்வதே சிறந்தது என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்தது. இன்றைக்கும் மனவேற்றுமைப் பட்ட கணவன், மனைவியர் இங்கே வந்து வேண்டிக் கொண்டு சேர்ந்து வாழ்வது பற்றிச் சொல்கிறார்கள்.

காசியபரின் மனைவிகளான கர்த்துரு, வினதை இருவரும் குழந்தை இல்லாமல் இறைவனை வேண்ட இறைவன் இருவருக்கும் ஒரு முட்டையைக் கொடுக்கிறார். இருவரும் அதைப் பாதுகாத்துப் பூஜை செய்து வர வினதையின் முட்டையில் இருந்து ஒரு பக்ஷி வெளி வருகிறது. "இதென்ன" என்று வியந்த வினதையிடம் இறைவன், "இந்தப் புத்திரன் மஹாவிஷ்ணுவிற்கு வாஹனமாய் உலகு எங்கும் பிரகாசிப்பான், கருடன் என்ற பெயரில்." என ஆசீர்வதிக்கிறார். கர்த்துரு ஏக்கத்தில் தன் முட்டையை அவசரப்பட்டு உடைக்க தலை முதல் இடுப்பு வரை மட்டும் வளர்ந்த ஒரு அங்கஹீனக் குழந்தை பிறக்கிறது.

வருந்திய கர்த்துரு இறைவனை வேண்ட அவர் அக்குழந்தை "சூரியனுக்குச் சாரதியாக உலகு எங்கும் பிரகாசிப்பான்." என்று வரம் கொடுக்கிறார். அங்கஹீனன் ஆன அவனால் இறைவனைத் தரிசனம் செய்ய முடியாது என்று சூரியன் அவனைக் கேலி செய்கிறான். தொல்லைகள் கொடுக்கிறான். மனம் வருந்திய அருணன் இறைவனை வேண்ட இறைவன் சூரியனை "உன் மேனி கிருஷ்ண வர்ணமாகப் போகக் கடவது" என சபிக்கிறார். உலகம் இருண்டு போனதைப் பார்த்த ஜெகன்மாதா அவன் சாபம் விமோசனம் அடைய இறைவனை வேண்ட அவர் கூறுகிறார்."அருணனின் தவ பலத்தாலும், சூரியன் ஏழு மாத காலம் பூஜை செய்தாலும் பழைய நிலை அடையலாம்" என்கிறார். தன் சாப விமோசனத்திற்காக இத்தலம் வந்து சூரியன் வழிபட, தன் கருமை நிறம் மாறாது போகவே வருந்தி, "ஹே மிகுரா" எனக் கதறத் தங்கள் ஏகாந்தத்தைக் கலைத்த சூரியனை அம்பாள் சபிக்க முற்படுகிறாள். இறைவன் தடுத்து "நீ சாபம் இட்டால் உலகம் மறுபடி இருண்டு போகும். உலகத்தின் நன்மைக்காக நீ பரம சாந்தையாகத் தவம் இருப்பாயாக." என்று கூறுகிறார். சூரியனுக்குச் சாப விமோசனம் கிடைக்கிறது. சாந்த தேவதையான அம்பிகையின் திருவாயில் இருந்து "வசினீ" என்ற வாக்தேவதைகள் தோன்றி அவர்கள் மூலம் மலர்ந்ததுவே ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் என்று கூறுகிறார்கள்.

அம்பாளே அருளியதால் அவர்தம் பெயர் கொண்டு "லலிதா சஹஸ்ரநாமம்" என்னும் பெயர் கொண்டு விளங்கியதாகச் சொல்கிறார்கள். அம்பாளிடம் இருந்து நேரே ஸ்ரீஹயகிரீவ முனியும் அவரிடம் இருந்து அகத்தியரும் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் பெற்றதும் இவ்வூரில் தான். அம்பிகையை வழிபடச் சிறந்த இடம் என அகத்தியர் தன் மனைவி லோபாமுத்திரையுடன் வந்து வழிபடும் சமயம் அம்பிகை நவரத்தினங்களாகக் காட்சி அளிக்கிறாள். அப்போது அந்தக் காணற்கரிய காட்சியை அகத்தியர் தன் "லலிதா நவரத்தின மாலை"யின் மூலம் பதிவு செய்திருக்கிறார். சூரியன், அருணன், கர்த்துரு, வினதை, அகத்தியர் தவிர யமனும் ஸ்ரீலலிதையையும், மேகநாத ஸ்வாமியையும், 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் சங்குகள் 1008-ஐக் கொண்டு சங்காபிஷேஹம் செய்து வழிபட்டிருக்கிறான். இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீலலிதையின் பெருமையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இதற்குச் சாட்சியாக 1999-ல் பங்களூரில் உள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த மைதிலி என்ற பெண்மணியிடம் அம்பாள் கனவில் வந்து தனக்குக் கொலுசு செய்து அணிவிக்குமாறு கட்டளையிடக் கோவிலைத் தேடிக் கண்டுபிடித்து அப்பெண்மணி கொலுசு செய்து அணிவித்திருக்கிறார்.

"கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி
நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவர் பெருகும்
பிழை என் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக
எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய் மாதா ஜயஓம்
லலிதாம்பிகையே, மாதா ஜயஓம் லலிதாம்பிகையே,
மாதா ஜயஓம் லலிதாம்பிகையே!"

21. ஐயாறப்பனும், அறம் வளர்த்த நாயகியும்

ஆகஸ்ட் 11, 2006

நாங்கள் முதலில் போனது என்னமோ பங்களூர் தான். அதுக்கு அப்புறம் மைசூர். அங்கிருந்து திருச்சி போய்ப் பின் தஞ்சாவூர், கும்பகோணம் போய்ப் பின் சென்னை வந்தோம். ஆனால் இதில் பார்த்த வரிசைகள்படி நான் எழுதவில்லை. முக்கியமான கோவில்கள் பற்றி மட்டும் எழுதுகிறேன். ஆகையால் முன்னே பின்னே தான் வரும். வரிசையாக வராது. இப்போ திருவையாறு பற்றி. எல்லாருக்கும் இங்கே நடக்கும் தியாகராஜ உற்சவம் பற்றித் தெரிந்திருக்கும். திருவையாறு என்ற பெயரில் திரு+ஐயாறு கலந்து வந்துள்ளது. ஐந்து ஆறுகள் கலக்கும் இடம் திரு+ஐயாறு ஆகும். அவை காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகியவை ஆகும். கி.மு.முதலாம் நூற்றாண்டில் இருந்த கரிகால் சோழ மன்னன் காட்டைத் திருத்தி நாடாக்கி வந்த காலத்தில், ஒருமுறை வடநாடு சென்று திரும்பும் வழியில் அவன் தேர் ஒரு இடத்தில் அழுந்தவே, தேரை எடுக்க முயற்சி செய்தான் மன்னன். அப்போது கிடைத்த லிங்கத்தை ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் அந்த இடத்திலே பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு உத்தரவு வர, அப்படியே செய்து ஐயனுக்கு ஒரு கோயில் கட்டுகிறான். கோயிலின் வெளிப் பிரஹாரத்தில் "செம்பியன் மண்டபம்' என்ற பெயரில் ஒரு மண்டபம் கட்டி அங்கே தன் உருவச்சிலையையும், தன் மனைவிமார் சிலையையும் பிரதிஷ்டை செய்கிறான். கோவில் கட்டப் பணம் தேவைப்படவே அரசன் திகைக்கிறான். அப்போது அகப்பேய்ச்சித்தர் வந்து அரசனுக்கு நான்கு பெரிய குளம்படிகளைக் காட்டி அது நந்தி எம்பெருமானின் குளம்படிகள் எனவும், அவற்றுக்குக் கீழே தோண்டினால் நவரத்தினப் புதையல் கிடைக்கும் எனவும் சொல்ல மன்னன் அதே மாதிரி செய்து கோவிலைப் பூர்த்தி செய்கிறான். தற்சமயம் ஒரு தியான மண்டபம் ஆகியிருக்கும் இந்த மண்டபத்தில் அரசு மேற்குறிப்பிட்ட தகவலை எழுதி இருக்கும் பலகை பழுதடைந்து போயிருப்பதால் மிச்சம் உள்ள வார்த்தகளின் மூலம் தெரிந்து கொண்ட தகவல் இது. சற்று மாறுபாடு இருந்தால் யாராவது தெரிவிக்கவும். ஸ்ரீதியாகராஜர் இந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்ததாகக் கூறப்படுகிறது. பஞ்ச லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு விளக்கு ஏற்றச் சொல்லி வருவோர் போவோரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 10ரூ கொடுத்தால் 5 விளக்கு. ஒரு வியாபாரம்.

அப்பர் பெருமான் பதிகம் பாடிய தலமும் இது. கைலாயம் செல்ல விரும்பிய அப்பர் இறைவனால் தடுத்தாட்கொண்டு ஒரு பொய்கையில் மூழ்கி எழுந்தபோது திருவையாறில் எழுந்ததாக வரலாறு கூறுகிறது. அப்பருக்குக் கைலையைக் காட்டிய இடம் "தெ கைலாயம்" என்று அழைக்கப் படுகிறது. கோயிலுக்குத் தென்புறம் உள்ள இந்த சன்னதி "பஞ்சவன் மாதேவீச்சுரம்" என்றும் சொல்லப் படுகிறது. இறைவன் தன்னைத் தானே பூஜித்துக் கொண்டதாக ஒரு ஐதீகமும் இந்தக் கோயிலில் உண்டு. அதன் வரலாறு: சிவாசாரியார் ஒருவர் காசிக்குச் சென்றிருந்த சமயம் அவர் ஐயனுக்குப் பூஜை செய்யும் முறை வந்தது. அவரால் உடனே ஊர் திரும்ப முடியவில்லை. அப்போது இறைவனே சிவாசாரியார் வேடத்தில் வந்து தன்னைத்தானே பூஜித்து வந்தார். சிவாசாரியார் வந்து பார்த்து "என்னைப் போல் இருக்கும் நீ யார்" எனக்கேட்க இறைவன் "வா, காட்டுகிறேன்." என்று சொல்லிக் கருவறையினுள் மறைகிறார். இந்த ஐதீகத்தைப் பின்பற்றி இப்போதுமொரு இரும்புப் பேழையில் இரு லிங்கங்களும், ஒரு அம்பாளும் வைத்துப் பூஜிக்கப்படுகிறது.

மூலவர் கருவறை அகழி போன்று இருக்கிறது. மூலவரின் முடி வளர்ந்து வருவதாகவும் அதனால் ஜடாபாரம் கருவறைக்கு வெளியேயும் பரவியுள்ளதால் இந்தக் கோயிலில் மூலவரின் உள்பிரஹாரத்தைச் சுற்றி வரக்கூடாது என்கிறார்கள். தட்சிணாமூர்த்தி பிரஹாரம் என்கிறார்கள். தட்சிணாமூர்த்தியைப் பார்த்துவிட்டுத் திரும்ப வேண்டும். மூலவர்முன் கவசம் இட்டு அதில் பசு, சூலம் பொறிக்கப் பட்டுள்ளது.அம்மன் கோயில் தனியாக உள்ளது. ரொம்ப தூஊஊஊஊஊரம் போய்ப் பார்க்க வேண்டும். அன்னையின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி ஆகும். இங்கே ஐயனுக்குத் தான் விசேஷம்.

சப்தஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகிற ஏழு ஊர்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் என்ற ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு தலமாகச் செல்வார். அந்தத் தலத்தின் பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாறை ஏழு மூர்த்திகளும் அடைவர். ஏழூர் வலம் முடிந்து ஐயாறப்பர் திருவையாறு கோவிலின் திருவோலக்க மன்றத்தில் இருக்கும் மக்கள் "ஹர ஹர மஹாதேவா, சம்போ மஹா தேவா" என்று எழுப்பும் பேரொலியில் கைலாயமே வந்து விட்டது போல் இருக்குமாம். ஏழு ஊர்களிலும் செய்யும் கண்ணாடிச் சப்பரமும் அதன் அழகும் எந்தப் பல்லக்கு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்வதும் நடக்குமாம். ஏழு ஊர்ப் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் காண திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) பெறுகிறது. நாங்கள் திருவையாறு செல்லும்போது திருவேதிக்குடி வழிதான் சென்றோம். உள்ளே போகவில்லை.

20. உலகத்து நாயகி

ஆகஸ்ட் 10, 2006

"உலகத்து நாயகியே-எங்கள் முத்து மாரியம்மா,
எங்கள் முத்து மாரி
உன் பாதம் சரண் புகுந்தோம்-எங்கள் முத்து மாரியம்மா,
எங்கள் முத்து மாரி"
**********************
நாங்கள் திருச்சி போனதும் சமயபுரம் போய் மாரியம்மனைப் பார்க்க முடிவு செய்தோம். பலமுறை போனதுதான். என்றாலும் பார்க்காமல் முடியாது. இதற்கு முன்னர் எங்களுக்கு நேர்ந்த ஒரு அனுபவம் அம்மனின் அருளையும், கருணையையும், நாங்கள் தவறாமல் வந்து பார்க்க வேண்டும் என்று சொல்லாமல் சொன்னதையும் நினைவு கூர்ந்தோம்.
**********************

2005 மார்ச் மாதம் எங்கள் பையன் 3 வருடங்களுக்குப் பிறகு தாய்நாடு வந்ததால் குலதெய்வம் கோவிலுக்குப் போக முடிவு செய்து கிளம்பிப் போய்விட்டுப் பின் திருச்சியில் சொந்தக்காரரைப் பார்த்து விட்டுச் சென்னை திரும்பினோம். வழியிலேயே சமயபுரம் மாரியம்மன் கோவில் வருவதால் அங்கே போகலாம் என நானும், என் கணவரும் நினைக்க எங்கள் பையனும், டிரைவரும் அங்கே போனால் நேரம் ஆகிவிடும், பின் சென்னை போகும் போது நடுராத்திரி ஆகும் என்று சொன்னார்கள். நான் கோவில் மெயின் ரோட்டில் வழியிலேயே இருப்பதால் நேரம் ஆகாது என்று சமாதானம் செய்தேன். திருச்சி தாண்டியதும் கோவில் அடையாளத்தைக் காட்டும் வளைவு வருவதை நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்டே வந்தோம். சாதாரணமாகச் சமயபுரம் போகும் பேருந்துகள் நிறையக் கண்ணில் படும். அன்று ஒரு பேருந்து கூடக் கண்ணில் படவில்லை. அதனால் என்ன நமக்கு இடம் தெரியுமே என்று பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் அரை மணி நேரத்தில் வரவேண்டியது ஒரு மணி நேரம் ஆகியும் கண்ணிலேயே படவில்லை. நான் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன். அதற்குள் என் கணவர், எனக்குச் சரியாகப் புரியவில்லை, என்றும் இனிமேல்தான் சமயபுரம் வரும் என்றும் கூறவே வண்டி மேலே போனது. சற்று நேரத்தில் பெரம்பலூரும் வந்து அங்கே பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் வளைவும் வரவே நான் நிச்சயமாகச் சமயபுரம் தாண்டி விட்டோம் எனக்கூறவே உடனே அந்த ஊர்க்காரர்களிடம் கேட்டோம். அங்கெ இருந்த ஒருத்தர், "அது என்ன ஒரு பத்து கிலோ மீட்டர் தான் இருக்கும். திரும்பிப் போய்ப் பார்த்துவிட்டே போங்க," என்று கூறினார். சரி பத்து கிலோமீட்டர் தானே என்று திரும்பினோம். போனால் போய்க் கொண்டே இருக்கிறது. சமயபுரம் கோவில் வளைவு கண்ணில் படவே இல்லை. மறுபடி சந்தேகம், மறுபடி கேட்டு, மறுபடி இன்னும் ஒரு பத்து கிலோமீட்டர் என்று இப்படியே கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் வந்ததும் அன்னை தன் கோவிலைக் காட்டினாள். இத்தனை பெரிய வளைவு எப்படி ஒருத்தர் கண்ணிலும் படாமல் 50 கிலோமீட்டர் போனோம்? இன்று வரை புரியாத புதிர். அப்புறம் உள்ளே போய் அம்மனைத் தரிசனம் செய்து விட்டுத் திரும்பினோம். மாரியம்மன் எல்லாரும் ஒன்றுதானே, ஊரில் நம் குலதெய்வக்கோவிலில் பார்த்ததும் அவளைத் தானே என்ற எங்கள் பையன் வாயே திறக்கவில்லை.

இம்முறையும் அவளைப் பார்த்துவிட்டுப் பின் அவள் பிறந்த இடமான ஆதி சமயபுரம், மாகாளிக்குடி போன்றவையும் பார்க்க நினைத்துப் போனோம். சமயபுரம் கோவிலில் கூட்டம் இருந்தாலும் சிறப்புத் தரிசனம் இல்லாமலேயே அன்னை தரிசனம் நன்கு கிடைத்தது. பிரசாதமும் கிடைத்தது. வளையல், குங்குமம், மஞ்சள் போன்றவை தருகிறார்கள்.இந்த அன்னை வருடத்தில் பத்து நாள் வைகாசி மாதத்தில் நாச்சியார் கோவிலில் ஆகாய மார்க்கமாக வந்து தங்குவதாக ஐதீகம். பத்து நாளும் நாச்சியார் கோவிலில் உற்சவம் நடக்கும். அன்னைக்கு அங்கே ஆகாச மாரியம்மன் என்றே பெயர். நாச்சியார் கோவிலில் இருந்து எங்கள் கிராமத்திற்குப் போகும் வழிதான். . மற்ற நாட்களில் ஒரு முக்கோணவடிவிலான கல்லில் இருக்கும் அன்னை, பத்து நாளும் அலங்கார ஸ்வரூபிணியாகக் காட்சி தருவாள். நாங்கள் நாச்சியார் கோவில் வழி போனாலோ அல்லது திரும்பி வந்தாலோ போகாமல் வருவது இல்லை.பிறகு அங்கிருந்து அன்னை பிறந்த இடமான ஆதி சமயபுரம் அல்லது இனாம் சமயபுரம் போனோம். வழி இந்தத் தற்போதைய சமயபுரத்திலிருந்து ஒரு கிலோமீட்டரில் இருக்கிறது. நுழைவு வாயிலில் ஆதி சமயபுரம் போகும் வழி என்று வளைவு இருக்கிறது. அங்கே போய் அம்மன் தரிசனம் செய்து விட்டுச் சன்னதிக்கு அருகேயே இடது பக்கம் சிறு ஓட்டு வீடு போன்ற ஒரு கட்டிடம் இருக்கிறது. அதற்குள் அம்மன் பிரதிஷ்டை செய்திருக்கும். அதுதான் அம்மனின் உண்மையான பிறந்த இடம் என்கிறார்கள். அங்கிருந்து தற்சமயம் இருக்கும் இடம் வந்ததாகச் சொல்கிறார்கள். யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. கோவிலில் புத்தகமும் வாங்க முடியவில்லை. அன்னை அருளால் அடுத்த முறை போகும்போதாவது வாங்கிப் போடலாம் என்று நம்புகிறேன்.

இதற்குப் பிறகு நாங்கள் பக்கத்தில் இருக்கும் "மாகாளிக்குடி" என்ற ஊருக்குப் போனோம். இதுவும் சமயபுரத்திலிருந்து 2 கிலோமீட்டருக்குள் தான் இருக்கிறது. நான் ஒரு சில வருடங்களுக்கு முன் என் தம்பியுடன் போனேன். அப்போதில் இருந்து என் கணவருக்கு இந்தக் கோவிலைக் காட்ட எண்ணி இப்போதுதான் முடிந்தது. கோவிலின் விசேஷம்: இது விக்கிரமாதித்தன் வழிபட்ட கோவில். அதைத் தவிர உஜ்ஜையினியில் இருந்து அவன் கொண்டு வந்த முழுத் தங்கத்தால் ஆன காளி சிலை இங்கே இருக்கிறது. விக்கிரமாதித்தன் காடாறு மாசம், நாடாறு மாசம் போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருமுறை காடாறு மாசத்தில் இங்கு வந்து தங்கி இருந்ததாகவும், அப்போது இந்தக் கோவிலைக் கண்டுத் தான் வழிபடும் காளியே இவள் என்று அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்கள். ஆகவே தான் கையோடு கொண்டு வந்த காளி சிலையையும் அங்கேயே வைத்துப் பூஜித்ததாகவும் சொல்கிறார்கள்.விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் மாட்டிக் கொண்டு விழித்ததும் இங்கே தான். அன்னையின் அருளால் வேதாளத்தின் கேள்விகளுக்குப்பதில் கிடைத்ததும் இங்கேதான் என்கிறார்கள். முன்னே போயிருந்தபோது வேதாளம் இருந்த மரம் என்று ஒரு பழைய மரத்தைப் பார்த்த ஞாபகம். இப்போது வேதாளத்திற்குத் தனி சன்னதி இருக்கிறது. அம்மனின் சன்னதிக்கு இடப்பக்கம் பிரகாரம் சுற்ற ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கிறது.

அன்னை இங்கே "ஆனந்த செளபாக்கிய சுந்தரி"யாகத் தாண்டவ ஸ்வரூபத்தில், வாசி யோகத்தில் அருள் பாலிப்பதாக அங்கே இருந்த காளி உபாசகர் கூறினார். கோவிலில் கூட்டம் இல்லாத காரணத்தால் எல்லாம் கேட்டு அறிய நேரமும் இருந்தது. சொன்னவரும் ஸ்ரீவித்யா உபாசகர் என்று அவர் பேச்சிலேயே தெரிந்து கொண்டோம். விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜயினி மஹாகாளி இந்த அன்னையின் உற்சவ விக்ரஹத்திற்கு வலப்பக்கம் இருக்கிறது. அந்த அன்னைக்கும் தனியாகக் கற்பூர ஆரத்தி காட்டிச் சொல்கிறார்கள். சுமார் ஒரு அடி உயரம் இருக்கும் அந்த சொர்ணத்தினால் ஆன விக்ரஹம் அந்தக் கோவிலுக்கு வந்துப் பல ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டதாகக் கூறினார்கள். இதே மாதிரிதான் உஜ்ஜைனியில் காளி அம்மன் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

**********************
"பூதமைந்தும் ஆனாய்-காளி!
பொறிகளைந்தும் ஆனாய்!
போதமாகி நின்றாய்-காளி!
பொறியை விஞ்சி நின்றாய்!

இன்பமாகி விட்டாய்-காளி!
என்னுளே புகுந்தாய்!
பின்பு நின்னை யல்லால்-
பிறிது நானுமுண்டோ?

அன்பு தந்து விட்டாய்- காளி, காளி!
ஆண்மை தந்து விட்டாய்!
துன்பம் நீக்கி விட்டாய்-காளி!
துயரழித்து விட்டாய்!"

**********************

19. நான் செய்த தவம்

ஆகஸ்ட் 09, 2006

உண்மையிலேயே நான் ரொம்பத் தவம் செய்திருக்கிறேன். இல்லாவிட்டால் என்னோட இந்த உடல் நிலையில் இத்தனை கோவில்களுக்குச் சென்று வரமுடியாது. அதற்கு உரிய மனோதைரியத்தையும் எனக்கு இறைவன் கொடுத்திருக்கிறான். இறைவனுக்கு நன்றி என்று சொல்வதை விட அவனையும், அவன் அருளையும் எந்நாளும் நான் மறவாமல் இருத்தல் வேண்டும். எல்லாம் அவன் செயலே!

இம்முறைத் திட்டம் இட்டது ஒன்று. நடுவில் பங்களூர் பயணம் குறிக்கிடவே சற்று மாறுதல் செய்ய வேண்டி வந்தது. ஆகவே மதுரை போக முடியவில்லை. நிறையக் கோயில்கள் சென்று வந்தாலும் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களில் உள்ள முக்கியமான சில கோவில்களைப் பற்றி எழுத எண்ணம். எல்லாம் எல்லாப் புத்தகங்களிலும் வருகிறது. என்றாலும் நான் பெற்ற இன்பம் எல்லாரும் பெற வேண்டி எழுதுகிறேன். முதலில் என் அருமை நண்பர், என் எல்லாக் காரியங்களிலும் கை கொடுப்பவர், விக்னங்களைத் தடுத்து ஆட்கொள்பவர், ஒரு சிறு அருகம்புல்லிற்கே மனம் மகிழ்பவர் ஆன அந்த ஆனைமுகத்தோனுக்கு வணக்கம் சொல்லி அவன் திருக்கோயிலைப் பற்றி எழுதுவதுடன் ஆரம்பிக்கிறேன். இது போனது என்னமோ அப்புறம்தான். ஆனால் முதலில் ஆனைமுகத்தோன் புகழ்தான் வர வேண்டும் என்பதால் அவன் தாள் பணிந்து ஆரம்பிக்கிறேன்.

**********************
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு-துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற்சார்வர் தமக்கு.
**********************

திருவலங்சுழிகாவிரி அன்னை வலமாகச் சுழித்துக் கொண்டு போனதால் இந்த க்ஷேத்திரம் "திருவலஞ்சுழி" எனப் பெயர் பெற்றது. பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க தேவர்களும், அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கட்டிக் கடையும் வேளையில் அமுதம் திரண்டு வராமல் போகவே ஏதோ தவறு நடந்திருக்கிறது எனப் புரிந்து கொண்ட தேவேந்திரன், என்ன காரணம் என மும்மூர்த்திகளைக் கேட்க அவர்கள் "விநாயகரை முறைப்படிவழிபட்டுப் பின் ஆரம்பிக்கும்படிச் சொல்ல அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் கடல்நுரையாலேயே விநாயகரை ஆவாஹனம் செய்து வழிபடுகிறான். விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைகிறது. அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என அங்கேப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்றும் தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். கடல் நுரையால் செய்யப்பட்ட இந்தப் பிள்ளையார் "ஸ்வேத விநாயகர்" என்றும் "வெள்ளைப் பிள்ளையார்" என்றும் அன்புடன் அழைக்கப் படுகிறார். இவருக்கு அபிஷேஹம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே சாத்தப் படுகிறது. இவரை வழிபட்டுவிட்டுத் தான் இவரின் தம்பியான "ஸ்வாமிநாதனை" வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதைத் தவிர இந்தக் கோயில் இன்னும் பல சிறப்புகளைக் கொண்டது. வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பள்ளம் (பிலத்துவாரம்) ஏற்படவே காவிரி அதனுள் சென்று மறைகிறாள். சோழன் செய்வது அறியாது தவிக்க அசரீரி கூறுகிறது. "தன்னலம் கருதாது அரசன் ஒருவனோ அல்லது மாமுனிவர் ஒருவரோ அந்தப் பாதாளத்தில் தங்களைப் பலியிட்டுக் கொண்டால் பள்ளம் மூடிக் கொண்டு காவிரி வெளிப்படுவாள்" எனக்கூறுகிறது. இதைக் கேட்ட ஹேரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளி வருகிறாள். ஹேரண்ட முனிவரின் சிலை கோவிலில் இருக்கிறது. மஹா சிவராத்திரி அன்று ஆதிசேஷன் வெளிவந்து வழிபட்டதாக ஐதீகம். அன்னை பராசக்தி சடைமுடி நாதனையே மணம் புரிவேன் என்று தவம் இருந்த காரணத்தால் "சக்திவனம்" என்ற பெயரும் உண்டு. ஸ்வாமிமலை கோயிலுக்கு நுழைவு வாயில். கோயில் ரொம்பப் பெரிது. இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் போக அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியவர்களால் பாடல் பெற்ற தலம். கோவில் ரொம்பப் பெரிது. ஆனால் இன்று திருப்பணி வேலைகள் ஆரம்பித்து நடுவில் நின்று விட்டது போல் தெரிகிறது. ஸ்வாமிநாதன் தன் அண்ணனின் வீடு கவனிப்பாரின்றி இருப்பதைக் காணவில்லையா தெரியவில்லை. இத்தனை பெரிய கோவிலைப் பராமரிக்க ஆட்களும் குறைவு. சன்னதிகளில் தனியாகப் போய்த் தரிசித்து விட்டு வரவேண்டி உள்ளது. பக்கத்தில் ஸ்வாமிமலை அத்தனை கோலாகலத்துடன் இருக்க அதன் நிர்வாகத்தின் கீழ் வரும் இந்தக் கோயில் இப்படி இருப்பது வருத்தமாக உள்ளது. கணபதி எளிமையானவர் என்பதால் இது போதும் என்று இருக்கிறார் போலும். கோவிலுக்கு மன்னர்கள் அளித்த மானியங்களைப் பற்றிய கல்வெட்டுக்களும் இருக்கின்றன. அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் கும்பாபிஷேஹம் நடைபெறும் என நம்புவோம்.

18. வேத மந்திரங்கள்- ஒரு பார்வை

ஜுலை 23, 2006

வேதங்கள் பற்றியும் மந்திரங்கள் பற்றியும் நமக்குத் தெரிந்தவை மிகக் குறைவு. அதன் மூலம் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்று முடிவு கட்டுகிறோம். ஆனால் அது அப்படி இல்லை. வேதங்களில் சொல்லாத விஷயமே இல்லை. அரசன், செய்ய வேண்டிய கடமையைப் பற்றிக் கூறும் அர்த்த சாஸ்திரம், உத்தமமான மருத்துவ முறையைப் பற்றிக் கூறும் ஆயுர்வேத சாஸ்திரம், சிற்பங்கள் வடிக்கும் முறை பற்றியும் கோவில் களின் விதி முறைகளையும் பற்றிக் கூறும் சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம் இவற்றை எல்லாம் நாம் படிக்காமல் விட்டு விட்டோம்.தப்புத் தப்பாக அர்த்தம் செய்து கொள்கிறோம். ஆயுர்வேத மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து மேன்மேலும் முன்னேற்றி இருக்க வேண்டிய ஒர் வைத்தியம் ஆயுர்வேத மருத்துவம். ஆனால் நாம் இதில் பின் தங்கி விட்டோம். அந்தக் காலத்தில் ரண சிகிச்சை முறை ஆயுர்வேதத்தில் இருந்திருக்கிறது. ஸுஸ்ருதர் என்பவர் இதைப் பற்றி எழுதி இருக்கிறார். வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் நம் சாஸ்திரங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டார்கள்.

சில வருடங்களுக்கு முன்னால் சென்னைத் தொலைக்காட்சியில், "Vedhik Science" "Vedhik Maths" என்று இரண்டையும் பற்றி ஒரு நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் மாலை வேளையில் வந்து கொண்டிருந்தது. எத்தனை பேருக்கு அது தெரியும் என்பது சந்தேகமே. மிகப் பயனுள்ள ஒர் நிகழ்ச்சி. அதைப் பார்த்தவர்கள் கட்டாயம் புரிந்து கொண்டிருப்பார்கள் தற்காலத்திலும் அவை ஏற்கத் தக்கவை என்று. சீனாவிலிருந்து வந்தது என்று ஒரு கணக்கு முறையைப் பற்றிப் பைத்தியமாக அலைகிறோம். குங்ஃபூ, கராத்தே போன்றவை ஜப்பானில் இருந்து வந்தது என்று கற்றுக் கொள்கிறோம். ஆனால் நம்முடைய செல்வங்களான கலரி, சிலம்பம், வர்மம் போன்றவை பற்றி யாருக்குத் தெரியும்? சிலம்பம் என்றால் சினிமாவில் வருவது தான் என்று நினைப்பார்களே தவிர, நிஜ வாழ்வில் இப்படி ஒரு விளையாட்டு இருந்ததே இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. நம்மைப் பற்றி நாமே குறைவாக நினைக்காமல் நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் செய்த ஒவ்வொரு காரியமும் அர்த்தமுள்ளது என்று நினக்க வேண்டும்.இப்போது திருமணங்களில் வரும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணம் நடக்கும் போது மணமகனிடம் சொல்வது போல் அமைந்த ஒரு மந்திரம்:

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:துரீயஸ்தே மனுஷ்யஜா: என்று ஒரு மந்திரம்.

வெளிப்படையாகப் பார்த்தால் பெண் முதலில் சோமன் என்னும் சந்திரனிடமும், பின் கந்தர்வர்களிடமும், பின் அக்னியிடமும் இருக்கிறாள், அக்னியிடம் இருந்து இந்தப் பெண்ணை உனக்குத் தருகிறேன்" என்று அர்த்தம் வரும். ஆனால் இதன் உண்மையான அர்த்தம் எல்லாருக்கும் புரிவது இல்லை. நான் புத்தகங்களில் இருந்தும், எங்கள் வீட்டுக் கல்யாணங்களில் இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டது என்ன என்றால்: பெண் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்கள். முதல் பாகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவர் ஸோமன். இது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் குளிர்ச்சியும் மகிஷ்ச்சியும் அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக இருப்பதற்கு எப்படிச் சந்திரனின் அருள் தேவையோ அது போல பூமி வளம் பெறுவதற்கும் சந்திரனின் அருள் தேவை. அவன் அருளால் உலக ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் பருவங்கள் உருவாகிறது. பூமி, வலுவும் வளமும் பெறுகிறது. அவன் அருளால் பெண்ணின் குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாகவும், வளம் பொருந்தியதாகவும் இருக்கும். இதற்குச் சந்திரனின் அருள் தேவை. மேலும் ஆயுர்வேத முறைப்படியும், சோமம் என்றால் "கபம்" என்றும் ஒரு பொருள் உண்டு. பிறந்த குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால் தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும் குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின் கண்காணிப்பில் இருக்கும். தாயின் மென்மையான அணுகுமுறையைக் கூட ஸோமனின் உதாரணத்துக்குச் சொல்லலாம்.

வளர்கையில் பெண்ணின் குணமும், குரலும், மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு காண ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக் காத்து நல்வழிக்குத் திருப்பும் பொறுப்பு கந்தர்வர்களுடையது. அதாவது தாய், தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணைக் கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக் காரணனான கபத்தை மட்டுப் படுத்தி அவளைத் தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு. அழகும், பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால் ஏற்படும் உணர்வுகளுக்கும் அவளுடைய துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி. இந்தச் சமயத்தில் தான் பெண் அந்த அக்னியைப் போல இருக்க வேண்டும். அவள் நினைவுகளும், கனவுகளும் அவளைச் சுட்டுப் பொசுக்காமல் அவளைப் பாதுகாப்பவன் அக்னி. அந்தப் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. ஏனென்றால் சிருஷ்டியின் மூலமே பெண்ணால்தான். தன்னிச்சையாகச் செயல் படும் தகுதி அவளுக்கு இருந்தாலும் அவள் ஜாக்கிரதையாகத் தன் குடும்பம், சமூகம் என்ற உணர்வுகளோடு ஆரோக்கியமான சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம் அக்னி. பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். ஆகவே தான் திருமணங்கள் அக்னி சாட்சியாகவும் நடைபெறுகிறது. மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து ஸோமன், கந்தர்வன், அக்னி இவர்கள் மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப் பூஜை செய்து வணங்கி வழி அனுப்புவார்கள். முறையே சந்திரனுக்குப் பிடித்த பழத்தை ஒரு குழந்தைக்கும், கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை, அலங்கரம், வாசனைத் திரவியம் போன்றவைகளுக்கு மணமகன், மணமகள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப் பிரியமான நெய்யும் கொடுத்து வழி அனுப்புவார்கள். இதில் அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னிக்கவும், மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும் இருவரும் வேண்டும் வேண்டுதலும் இருக்கும். அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள்.

ஆகையால் நாம் சந்தேகமே இல்லாமல் வேதங்களும் மந்திரங்களும் கூறும் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

17. திருப்பனந்தாள் காசி மடம்

ஜுலை 13, 2006

ரொம்ப நாளா இதைப்பத்தி எழுதணும்னு இருந்தேன். இது ஒண்ணு, ஐயப்பன் பத்தி ஒண்ணு இரண்டு பதிவும் போடணும்னு இருந்தேன். இது ஏற்கெனவே எழுத நினைச்சது. ரொம்ப நாளா தள்ளிப் போயிட்டே இருந்தது. இப்போ எழுத சரியான சமயம்னு நினைச்சு எழுதறேன்.

காசியில் "சங்கர மடம்" மட்டும்தான் இருக்குனு நிறையப்பேர் நினைக்கிறாங்க. அப்படி இல்லை. நகரத்தார் சமூகத்துக்கு உட்பட்ட சில சத்திரங்களைத் தவிர "சிவ மடம்"னு ஒண்ணு இருக்கிறது. அதைத் தவிர இந்தக் காசி மடம். கங்கையின் கரையிலேயே அனேகக் கோவில்கள். அதற்கு என்று உள்ள மடங்கள் என்று ஏராளமாக இருக்கிறது. இந்தக் காசி மடம் ஸ்தாபித்தது யார் என்று நினைக்கிறீர்கள்? "ஸ்ரீகுமரகுருபரஸ்வாமிகள்" தான் 17-வது நூற்றாண்டில் இதை ஸ்தாபித்தார். 1625-ம் ஆண்டு திருநெல்வேலி ஜில்லாவின் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மைக்கும் மகனாய்ப் பிறந்தவர். திருச்செந்தூர் செந்தில் வேலன் அருளால் பிறந்த குழந்தை 5 வயது ஆகியும் பேச்சுத் திறன் இல்லாமல் இருந்ததைப் பார்த்த பெற்றோர் செந்தில் வேலனிடமே வேண்டி வணங்க, முருகனின் இலை விபூதிப் பிரசாதம் பெற்றுப் பின் பேசும் திறனை அடைந்தவர். திருச்செந்தூரிலேயே தங்கி முருகனை வழிபட்டு வந்த குமரகுருபரர் தல யாத்திரை கிளம்பும் சமயம், அசரீரியாக இறைவன், "நீ யாத்திரை செல்லும் சமயம் எந்த இடத்தில் உன் வாக்குத் தடை பெறுகிறதோ, அவரே உன் குரு. ஞான உபதேசம் அவரிடம் பெற்றுக்கொள்" என உத்தரவு வர மகிழ்ந்து தன் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் வந்து "கைலைக்கலம்பகம்" என்னும் நூலை இயற்றினார். இதன் ஒரு பகுதிதான் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

பின் மதுரை வந்தார்,. திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம் அது. குமரகுருபரர் திருப்பரங்குன்றத்தில் தங்கி இருக்க நாயக்கர் கனவில் மீனாட்சி அம்மை வந்து, "திருப்பரங்குன்றத்தில் தங்கி இருக்கும் குமரகுருபரர் பெரிய மகான். புலமை மிகுந்தவரும் கூட.அவரை உரிய மரியாதையுடன் அழைத்து வந்து என் சந்நிதியில் அமர்த்தி என் பிள்ளைத்தமிழ்ப் பாமாலையைப் பாடச் சொல்லி அரங்கேற்றம் செய்வாயாக." என்று கூறி மறைந்தாள். அம்மன் வாக்குப் படியே திருமலை மன்னர் குமரகுருபரரை அழைத்து வந்து சந்நிதியில் அமர்த்தி அரங்கேற்றம் நிகழச் செய்தார். அர்ச்சகரின் சிறு பெண் குழந்தை வடிவில் வந்த அன்னை மீனாட்சி மன்னன் மடியில் அமர்ந்து மொத்தப் பாடலையும் கேட்டு மகிழ்ந்து தன் கழுத்தில் உள்ள முத்தாரத்தைப் பரிசாகக் கொடுத்தாள். மதுரையில் இருந்து புறப்பட்ட குமரகுருபரர் திருவாரூரை அடைந்து தருமபுர ஆதீன மாசிலாமணி தேசிக ஸ்வாமிகளைச் சந்தித்தார். ஆதீனத்தின் ஆதி முதல்வரான ஸ்ரீகுருஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் அருளுபதேசம் பெற்ற இந்த ஊரில் மாசிலாமணி தேசிகர் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் விடை சொல்லி வரும்போது திடீரென குமரகுருபரர் வாக்கு தடை பெற்றது. "இவரே தன் குரு" எனத் தெளிந்த குமரகுருபரர் அவரிடம் தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் ஒப்படைத்தார்.இப்போதும் தருமபுர ஆதீனத்துடன் திருப்பனந்தாள் காசி மடத்துக்கு நெருக்கமான தொடர்பு உண்டு என்கிறார்கள்.

மாசிலாமணி தேசிக ஸ்வாமிகள் குமரகுருபரரைக் காசி சென்று வருமாறு பணிக்க,முதலில் கொஞ்சம் தயங்கிய குமரகுருபரர், பின் குருவே துணை என்று நம்பிக் கிளம்பச் சம்மதித்தார். காடு, மலைகளையும், சிங்கம், புலி போன்ற மிருகங்களையும் எதிர்கொண்டு காசிக்குச் சென்று வரக் கிளம்பினார். வழியில் திருவேங்கட மலைவாழ் மக்களுக்குத் தொல்லை கொடுத்த சிங்கத்தைத் தன் தவ வலிமையால் அடக்கி அதன் மீது அமர்ந்தார். ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகள் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் இந்தப் படம் பலர் வீட்டில் இருக்கும். பார்த்திருப்பீர்கள். காசி நகரை குமரகுருபரர் அடைந்த சமயம் டெல்லியை ஆண்டு வந்த பாதுஷா இவரின் ஆற்றலை உணர்ந்து காசியில் கருடன் வட்டமிடும் இடங்களை இவரின் சமயப்பணிக்குத் தருவதாய் ஒப்புக் கொண்டார். காசியில் தான் தனக்கு இந்துஸ்தானியில் புலமை வேண்டி ஸ்ரீகுமரகுருபரர் "சகலகலாவல்லி மாலை" பாடி இந்துஸ்தானியில் பேசும் திறன் பெற்றார்.

காசியில் "பூ மணக்காது, பிணம் எரியும்போது நாறாது, கருடன் வட்டமிடாது, பசுமாடு முட்டாது," என்பார்கள். இந்நிலையில் கருடன் எப்படிப் பறந்து இவருக்கு இடத்தைக் காட்டுவது என எல்லாரும் திகைக்க, முனிவரின் தவ வலிமையால் கருடன் ஒரு குறிப்பிட்ட பகுதியை வட்டமிட்டது. பாதுஷா தன் வாக்குறுதியை நிறைவேற்ற குமரகுருபரர் "ஸ்ரீகுமாரசாமி மடம்" என்ற பெயரில் ஒரு மடத்தை அங்கே நிறுவி ஆன்மீகப் பணி ஆற்றத் தொடங்கினார். கங்கைக் கரையில் பழுதடைந்திருந்த கேதாரீஸ்வரர் கோவிலைத் தென்னிந்திய முறைப்படிச் செப்பனிட்டுக் கும்பாபிஷேஹம் செய்வித்தார். இன்றைக்கும் "கேதார் காட்" டில் உள்ள கேதாரீஸ்வரர் கோவில் திருப்பனந்தாள் காசி மடத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காணலாம். பூஜை செய்பவர்களும் தமிழர்கள் தாம்.

குருநாதரைப் பார்க்க வேண்டி பொன், பொருளோடு வந்த குமரகுருபரரை மாசிலாமணி தேசிகர் காசியிலேயே அவற்றை அறப்பணிகளுக்குச் செலவிடுமாறு சொல்லித் திரும்ப அனுப்பினார். 1688-ம் ஆண்டு தன் சீடர்களுள் ஒருவரான சொக்க நாதரைத் தன் வாரிசாக நியமித்து விட்டுப் பூரணத்தில் இணைந்தார். முதல் 5 பரம்பரையில் வந்தவர்கள் காசியிலேயே தங்கி இருந்தார்கள். 6-வது குரு பரம்பரையில் தான் திருப்பனந்தாளிலும் காசிமடம் ஸ்தாபிக்கப்பட்டது. காரணம் சரபோஜி மஹாராஜா. இவர் அன்னம் பாலிக்கக் கொடுத்த பல கிராமங்களின் நிர்வாகத்தைக் கவனிக்கத் திருப்பனந்தாளிலும் காசி மடம் ஏற்பட்டது.

இதன் 20-வது மஹாசந்நிதானமாக இருந்த ஸ்ரீ அருள்நம்பித் தம்பிரான் காலத்தில் மடத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தியா முழுவதிலும் உள்ள காசித் திருமடங்களின் அறப்பணிகள் இவர் காலத்தில் ஒழுங்கு படுத்தப்பட்டது. 21-வது பொறுப்பில் இப்போது இருப்பவர் காசிவாசி முத்துக்குமாரஸ்வாமித் தம்பிரான். ஸ்ரீகுமரகுருபரர் காலத்தில் இருந்து எல்லாப் பணிகளும் இன்றைக்கும் குறைவின்றி நடந்து வருகிறது. தமிழுக்கும், கல்விக்கும் முதலிடம் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது காசிமடம். திருப்பனந்தாளிலேயே நிறையப் பள்ளிகளும், கல்லூரிகளும் இருக்க ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி கற்கிறார்கள். தமிழ் இலக்கிய நூல்களும் தரமாக மிகக் குறைந்த விலையில் வெளியிடப் படுகிறது. "ஸ்ரீகுமரகுருபரர் "பெயரில் ஒரு மாதப் பத்திரிகையும் வருகிறது. கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக ஆன்மீகத்திற்கும், தமிழுக்கும், கல்விக்கும் மாபெரும் சேவை செய்து வருகிறது. கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேஹத்திற்குத் தேவையான "அஷ்டபந்தன மருந்து" இங்குக் குறைந்த அளவு தொகை செலுத்திப் பெறலாம். மருந்து தயாரிக்கும் செலவு அதிகம் என்றாலும் ஆலயப் பணிகளும் ஆன்மீகமும் சிறக்க வேண்டும் என்பதற்காக ஒரு சேவையாகச் செய்து வருகிறார்கள். நாங்கள் 1999 ஆகஸ்ட்டில் காசி போயிருந்த போது கேதார்காட் போய்க் காசி மடம், கேதார் நாத் கோவில், அங்கு சாயங்காலம் சூரியன் மறையும் சமயம் கங்கைக்கும், கேதாரீஸ்வரருக்கும் ஒரே சமயம் காட்டப்படும் ஆரத்தி எல்லாம் தரிசனம் செய்தோம். இதைத் தவிர சிவ மடம் என்ற பெயரிலும் வேறு மடம் ஒன்று இருக்கிறது. அதன் பூர்வீகம் பற்றித் தெரிந்து கொண்டு எழுதுகிறேன்.

16. பவானியைப் பார்த்தேன்

ஜுலை 10, 2006

முந்தா நாள் சுருட்டப்பள்ளி போய்விட்டுத் திரும்பும்வழியில் எங்கள் வண்டியை ஓட்டி வந்த டிரைவர் பக்கத்தில் ரெட் ஹில்ஸ் வழியாகப் போனால் பெரிய பாளையம் போய்ப் பவானி அம்மனைப் பார்க்கலாம் என்று கேட்டார். வீட்டில் போய் ஒண்ணும் வெட்டி முறிக்கப் போவது இல்லை. அன்று பெண்ணோட chatting-ம் இருக்காது. போனால் இவர் வழக்கம்போல் ரிமோட்டும் கையுமாகத் தான் உட்காருவார். ஆகவே போகலாம் என்று சொன்னோம். சுருட்டப்பள்ளியில் இருந்து சற்று வடகிழக்கே பிரியும் பாதையில் சில கிலோமீட்டர் போனதும் பெரிய பாளையம் கோவில் வருகிறது. அநேகமாக இந்தக் கோவிலுக்கு இதுவரை போகாத சென்னை வாசிகள் கிடையாது என்று டிரைவர் சொன்னார். சரி, நாமும் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவோம் என்று இருவரும் முடிவு செய்து போனோம்.

சாயங்காலம் தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. ஆகவே தரிசனத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். தர்ம தரிசனம் கூட்டம் ஜாஸ்தி இருந்த காரணத்தால் நாங்கள் 5ரூ டிக்கெட் வாங்கிக் கொண்டோம். அதற்கு மேல் இல்லை. 5ரூக்கும் கூட்டம் தான். சற்று நேரத்திற்கு எல்லாம் திரை விலகித் தீப ஆராதனை நடந்தது. நாங்கள் நின்று இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. சற்றுக் கூட்டம் குறைந்ததும் நாங்கள் பார்க்க வழி கிடைத்தது. பூசாரிகள் விரட்டுகிறார்கள். அதற்குள் அம்மனைப் பார்க்க வேண்டும். அம்மன் மார்பளவு தான் இருக்கிறாள். கீழே உற்சவ அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவளும் மார்பளவுதான். எனக்குத் தெரிந்து ரேணுகா தேவிதான் மார்பளவு இருப்பாள். பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேண்டும் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகா தேவிக் காயங்களுடன் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று புரியவில்லை.

மொத்தத்தில் ரேணுகா தேவி மாதிரி இருக்கிறாள், பவானி அம்மனும். அங்கு தரிசனம் முடிந்ததும் டிரைவர் அங்கே பக்கத்தில் இன்னொரு சிவன் கோவில் இருப்பதாகவும் அதன் கோபுரம் லிங்க உருவில் இருக்கும் என்றும் கோவில் மிக அழகாக இருக்கும் என்றும் கூறினார். உடனே அங்கே போகலாம் என்று சொன்னோம். பெரிய பாளையத்தில் இருந்து 10 அல்லது 15 கி.மீ. தூரத்தில் தாமரைப்பாக்கம் என்னும் சிறு ஊர் இருக்கிறது. அங்கே போய் ஒரு வாசலில் நிறுத்தினார் வண்டியை. வேண்டுமானால் உள்ளே கூட வரலாம் என்றார். வேண்டாம் என்று சொல்லி விட்டு நாங்கள் இறங்கினோம். பார்த்தால் ஏதோ ஆசிரமம் மாதிரி இருந்தது. பாதை கொஞ்சம் கரடு முரடு தான்.வழி நெடுக ஏதோ சின்னச் சின்ன போஸ்டர்கள் ஏதோ எழுதப்பட்டிருந்தன. என்னவென்று நெருங்கிப் பார்த்தால் ஸ்வாமி சின்மயானந்தாவின் பொன்மொழிகள். அப்போதான் புரிந்தது ஸ்வாமி சின்மயானந்தாவின் ஆசிரமம் இங்கே எங்கேயோ இருப்பதாகக் கேள்விப்பட்டது. பொன்மொழிகள் எல்லாம் மிகவும் கருத்துச் செறிந்தவையாக இருந்தன. ஸ்வாமிகளின் கருத்துக்கு அபிப்பிராயம் சொல்ல நாம் யார்? இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த 2 வாசகங்கள்.

"YOUTH ARE NOT USELESS
THEY ARE USED LESS"

"வெளியே விழுந்தால் அது வீழ்ச்சி,
உனக்குள் விழுந்தால் அது எழுச்சி."

இவை இரண்டும் என்னை மிகவும் கவர்ந்தன. கொஞ்ச தூரம் போனதும் ஒரு இடத்தில் வரிசை நின்று கொண்டிருந்தது. தரிசனம் செய்யவா என்று கேட்டதற்கு "இல்லை, பிரசாதம் தருகிறார்கள். தரிசனம் இலவசம். மேலே போய்ப் பார்க்கலாம்." என்று சொன்னார்கள். கீழே ஒரு பெரிய அறை இருந்தது. அதற்குள் போய்ப் பார்த்தால் அது "தியானக் கூடம்". ஒரு பெண் தியானம் செய்து கொண்டிருந்தாள், அவள் அருகில் போகும்போது எனக்குள் மெல்லிய அதிர்வுகளை உணர்ந்தேன். அந்தப் பெண் தியானத்தில் மூழ்கி விட்டாள் என்று புரிந்தது. கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டு சுற்றிப் பார்த்தோம். ஆதிசிவனின் வெவ்வேறு ரூபங்கள் படங்களாக வரையப்பட்டுத் தொங்கின. சின்மயாநந்த ஸ்வாமிகளின் படம் நடுநாயகமாக இருந்தது. பின் அங்கிருந்து படிக்கட்டுகளின் வழியாக மேலே போனோம். முதல் மாடியில் அருமை நண்பர் விநாயகர் சர்வ அலங்காரத்துடன் வீற்றிருந்தார். அவரைத் தரிசனம் செய்து கொண்டுப் பின் படி ஏறும் போதே ஸஹஸ்ர லிங்க வடிவத்தில் ஒரு பெரிய கோபுரம் தெரிந்தது. அதனுள் ஒரு வாயில். உள்ளே நுழைந்தால் நேரே தரிசனம். ஆனால் இயற்கையான ஒளியில். சற்றும் செயற்கையான ஒளி இல்லை. குளிரொளி தரும் சில விளக்குகள் கீழே உட்கார்ந்திருந்த பக்தர்களுக்கு மட்டும் போதுமான வெளிச்சம் தந்தது. சன்னதியில் வெறும் நெய்த் தீபங்களின் ஒளிதான். மேலே பாதரச லிங்கம்.(திருமுலை வாயிலிலும் உள்ளது). கீழே லிங்கம். பிரதோஷம் ஆகையால் சர்வ அலங்காரத்துடன் காட்சி கொடுத்தார். நேரே எதிரே நந்திஎம்பெருமான்,. அவருக்கும் அபிஷேஹ ஆராதனைகள் நடந்து இருக்கிறது. நாங்கள் போன சமயம் அர்ச்சனையோ சஹஸ்ரநாமமோ முடிந்து தீப ஆராதனை நடந்தது. மிகவும் நல்ல திவ்ய தரிசனம். பிரசாதம் பெற்றுக் கொண்டு கீழே வந்தோம். ஆசிரம வாசிகள் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த அரிசி, வெல்லம் சேர்த்தும், பாலும் பிரசாதம் கொடுக்கிறார்கள். இன்னொரு இடத்தில் கேசரியும், பஞ்சாமிர்தமும் கொடுக்கிறார்கள். நாங்கள் போன சமயம் தீர்ந்து விட்டது. பஞ்சாமிர்தம் மட்டும் கிடைத்தது. தண்ணீர் சுவையாக இருக்கிறது. மிகவும் அமைதியான சூழலில் ஆசிரமம் நன்கு பராமரிக்கப் படுகிறது.

****************

சுருட்டப்பள்ளியிலும் சரி, அக்கம்பக்கத்து ஊர்களிலும் சரி, டீ, காஃபி குடிப்பவர்களுக்கு நல்ல ஓட்டல் கிடையாது. டீக்கடை ஒன்று சுருட்டப்பள்ளிக் கோவில் வளாகத்தில் இருக்கிறது. கழிப்பறை வசதியும் பெண்களுக்கு மட்டும்தான். நிர்வாகம் கவனிக்க வேண்டும். சாப்பாடு எல்லாம் கையில் கொண்டு போக வேண்டும்.இல்லாவிட்டால் அந்தப்பக்கம் புத்தூரிலும், இந்தப்பக்கம் திருவள்ளூரிலும் தான் ஹோட்டல். வெளி ஊரில் இருந்து வந்தால் கஷ்டம்தான்.

15. நஞ்சுண்ட கண்டன்

ஜுலை 09,2006

நேற்று எதிர்பாரா விதமாகச் சுருட்டப்பள்ளி "பள்ளி கொண்டேஸ்வரர்" கோவிலுக்குச் சனி மஹாப் பிரதோஷம் பார்க்கப் போயிருந்தேன். என்னை நன்கு அறிந்தவர்கள் எல்லாம் நான் இந்த மாதிரிப் போவது பார்த்து "உனக்கு இறை அருள் நிறைய இருக்கிறது. இல்லாட்டி உன்னோட உடல் நிலையில் இப்படிப் போக முடியாது." என்று சொல்வார்கள். நான் அதைப் பூரணமாக ஒவ்வொரு முறையும் உணருகிறேன். நேற்றும் அப்படி உணர்ந்த ஒரு பிரயாணம். என்னோட பெருமை அப்புறம். இப்போ அந்த சிவன் பெருமை.

"தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"

இந்தத் தென்னாடுடைய சிவன் எல்லாக் கோவில்களிலும் லிங்க ரூபத்தில் இருக்கிறார். ஆனால் சுருட்டப்பள்ளியிலோ பள்ளி கொண்ட பெருமானாக இருக்கிறார். அதுவும் அன்னையின் மடியில் பள்ளி கொண்டு இருக்கிறார். இந்தக் காட்சி எங்கும் காணக் கிடைக்காத ஒரு காட்சி. மேலும் இந்தக் கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் வாம பாகத்தில் (இடப்பக்கம்) அன்னை உட்கார்ந்திருக்கிறாள். இப்படித் தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தியும் எங்கும் பார்க்க முடியாது. பரமாச்சார்யாள் 72-ம் வருடம் இந்தக் கோவிலில் தங்கி இருந்து தினமும் ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்திருக்கிறார். அப்போதுதான் இந்தக் கோவிலில் உள்ள எல்லாக் கடவுளர்களும் குடும்ப சமேதராகத் தரிசனம் செய்தது பற்றித் தெரிந்து கொண்டு கோவிலின் தலபுராணம் பற்றிக் கூறியதாவது: பாற்கடலைக் கடைந்த போது வாசுகி கக்கிய "காலம்" என்னும் விஷமும், பாற்கடலில் தோன்றிய "ஆலம்" என்னும் விஷமும் சேர்ந்து வந்த ஆலகால விஷத்தைக் கண்டு அதன் உக்கிரத்தால் அஞ்சிய தேவர்களையும் அசுரர்களையும் பரமேஸ்வரன் உலக நன்மைக்காகத் தான் விழுங்க எண்ணித் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அதை எடுத்து வரச் செய்கிறார்.

அது ஒரு கருநாவல்பழம்போல் உள்ளது. அதை வெளியே வீசினாலும் சரி, ஆண்டவன் உண்டாலும் சரி, சகல உயிர்களுக்கும் ஆபத்து. ஆகவே ஈசன் "விஷாபகரணமூர்த்தி" ஆகி விஷத்தை முழுங்க அம்பிகைத் தன் தளிர்க்கரங்களால் அதைத் தடுத்து விஷம் உள்ளே போகாதவாறு கண்டத்திலேயே அடக்குகிறாள். விஷத்தை உண்ட ஈசன் "விஷாபகரணமூர்த்தி" என்று அழைக்கப் பட்ட மாதிரி அன்னை அகிலத்தோர் வாழ்வை அமுதம் ஆக்கியதால் "அமுதாம்பிகை" என அழைக்கப் படுகிறாள். அபிராமி அந்தாதியில் "பொருந்திய முப்புரை செப்புரைசெய்யும் புணர்முலையால் வருத்திய மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே" என்று அபிராமி பட்டர் இதைத் தான் கூறுகிறார். அன்று முதல் திருநீலகண்டனான ஐயன் கைலாயம் செல்லும் வழியில் விஷம் உண்ட மயக்கம் தீர அம்மை மடியில் படுத்து இளைப்பாறுகிறார். அந்த அரியக் காணக் கிடைக்காத காட்சியைத் தான் நேற்று கண்டு வந்தோம். அன்னை மடியில் ஐயன் படுத்திருக்கச் சுற்றி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பிரான், நாரதர், மார்க்கண்டேயர், இந்திரன், சந்திரன், சூரியன், அகத்தியர், புலஸ்தியர், கெளதமர், தும்புரர், வஸிஷ்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி, எல்லாரும் இருக்கிறார்கள்.

மரகதாம்பிகை சன்னதி தனியாக இருக்கிறது. மற்றபடி காமதேனு, கற்பகவிருஷம், மற்ற மூர்த்திகளுடன் தட்சிணாமூர்த்தித் தன் மடியில் அன்னையுடன் காட்சி தருகிறார். மற்றக் கோயில்களில் ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணாதட்சிணாமூர்த்தி, மேதாதட்சிணாமூர்த்தி என்று இருக்கும். இங்கு மட்டும் இடப்பாகத்தில் தன் மனைவியுடன் காணப்படுகிறார். "மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்" என்று கோளறு பதிகத்தில் திருஞானசம்மந்தர் இவரைத்தான் சொன்னாரோ என்னவோ? இந்தத் தலத்தில் பக்தர்களுக்குப் பெருமாள் கோவில் மாதிரிச் சடாரி சாதித்துத் தீர்த்தமும் பிரசாதமாகத் தருகிறார்கள். பகவானின் பாத தரிசனம் இருப்பதால் சடாரியும், மஹாவிஷ்ணுவும் உடன் இருப்பதால் தீர்த்தமும் தருவதாய்ச் சொல்லுகிறார்கள். சென்னை கோயம்பேட்டில் இருந்துப் புத்தூர் செல்லும் பேருந்துகள் சுருட்டப்பள்ளியில் நிற்கும் என்று சொன்னார்கள்.

இங்கிருந்துதான் ஆந்திர எல்லை ஆரம்பிக்கிறது. கோவிலும் ஆந்திர மாநில அறநிலையத் துறை வசம்தான் இருக்கிறது. தரிசனம் செய்யப் பணம் நிறைய ஆகிறது. பிரதோஷ நாளில் போனால் தர்ம தரிசனம் கிடையாது. ஒரு ரூபாய் ஒருவருக்குச் செலுத்திப் போய்ப் பார்க்கவேண்டும். அதைத் தவிரச் சிறப்புத் தரிசனம் ஒருத்தருக்கு ரூ.50/ என்று வைத்திருக்கிறார்கள்.

கூகூகூகூகூகூகூகூகூட்ட்ட்ட்ட்ட்ட்டடடடடடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தாங்கவில்லை. என்னால் பிரதோஷ அபிஷேகம் முடியும் வரை நிற்கமுடிந்தது. மஹாதீப ஆராதனைக்கு நிற்கமுடியவில்லை. கூட்டத்தில் மயக்கம் வரும்போல் ஆகிவிட்டது. ஆகவே தரிசனம் மட்டும் போதும் என்பவர்கள் சாதாரண நாளில் போவது உத்தமம். பொதுவாக நான் கோவில்களுக்கு சாதாரண நாளில் தான் போவேன். நேற்று அப்படி முடியவில்லை.

சங்கரன் கோவில் கோமதி மகிமையில் பாரதியார் கூறுகிறார்.

"இக்கடலதனகத்தே-அங்கங்
கிடையிடைத் தோன்றும்புன்குமிழிகள் போல்
தொக்கன உலகங்கள்:-திசைத்
தூவெளியதனிடை விரைந்தோடும்,
மிக்கதோர் வியப்புடைத்தாம்-இந்த
வியன்பெரு வையத்தின் காட்சி, கண்டீர்,
மெய்க்கலை முனிவர்களே!-இதன்
மெய்பொருள் பரசிவன், சக்தி கண்டீர்!

எல்லையுண்டோ இலையோ?-இங்கு
யாவர் கண்டார் திசை வெளியினுக்கே?"

இந்தப் பாட்டை அவர் முடிக்கவில்லை. காரணம் அவர் கண்ட காட்சியில் அவரால் மேற்கொண்டு விளக்க முடியாமல் போனதோ என்னவோ? ஆனால் கோமதி அம்மனுக்காக அவர் எழுதிய வார்த்தைகள் இங்கும் பொருந்துகின்றன. ஓம் நமச்சிவாய:

14. என்னை அழைத்த கற்பகம்

ஜுலை 07, 2006

நேற்றுத் திடீரெனக் கற்பகாம்பாள் அழைப்பு வந்தது. காலை 10 மணி வரை நான் போகப் போவது எனக்கே தெரியாது. திடீரென ஒரு முடிவு. போகலாம் என. அதற்குப்பின் வேகமாக வேலைகளை முடித்துக் கொண்டுச் சற்று ஓய்வு எடுத்ததும், ரெயிலேயே போகலாம் என முடிவு எடுத்தோம். "மாநரகப் பேருந்து" பயணம் பல வருடங்களாகத் தவிர்த்து விட்டோம். அந்த கூட்டத்தில் நேரம் விரையம் ஆகிறது. ரெயிலில் போனாலும் செண்ட்ரலில் இருந்து வேறு ஊர்களுக்குப் போவதற்குப் போவதோடு சரி. முக்கால் வாசிப் பிரயாணங்கள் கோயம்பேடு 100 அடி சாலை வழியாகப் போய் விடுகிறது. இந்தப் பக்கம் எல்லாம் பார்த்து 4,5 வருடங்களுக்கு மேல் இருக்கும். ஆகவே ரெயிலில் போய் செண்ட்ரலில் இறங்கி அங்கிருந்து "ஆட்டோ" வைத்துக் கொண்டு மைலாப்பூர் போனோம். பல வருடங்களுக்குப் பின் மவுண்ட் ரோடில் பிரயாணம். ஆச்சரியம் என்ன என்றால் ஆட்டோ ஓட்டுநர்கள் யாரும் பேரம் பேசவே இல்லை. நம்ம சென்னை ஆட்டோதானா என்று சந்தேகம் வந்தது.

நாங்கள் போன வேலை முடிந்ததும் கோவிலுக்குப் போய்க் கற்பகாம்பாள் சமேதக் கபாலீஸ்வரர் தரிசனம் நல்லபடியாகக் கிடைத்தது. போகும் வழியிலேயே குளத்தைச் சுற்றிக் கொண்டு போனோம். புதியதாக வந்திருக்கும் விருந்தாளிகளைப் பற்றித் தினமும் பேப்பரில் படிப்பதால் அவற்றையும் பார்த்தோம். சிருங்கேரி துங்கா நதியில் இருக்கும் மீன்களை விட மிகச் சிறியவைதான். இருந்தாலும் குளத்தில் தண்ணீரையும், குளம் மற்றும் அதன் கரைகள் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டிருப்பதையும் பார்க்க மிகவும் மனம் நிறைவாக இருந்தது. முன் நாட்களில் அண்ணா ஆழ்வார்ப்பேட்டையில் ராமசாமி நாயக்கன் தெருவில் இருந்த சமயம் அடிக்கடி போவோம். அதற்குப் பின் சந்தர்ப்பமே வரவில்லை.

அம்பாள் மிகச் சிறிய பெண்ணாக மிக அழகாக அலங்கரிக்கப் பட்டு இருந்தாள். படியில் ஏறும்போதே பார்க்கும் வண்ணம் படிகள் மிக உயரமாக இருப்பதால் ஜாஸ்திக் கூட்டத்தில் அடிபடாமல் பார்க்கவும் முடிகிறது. கூட்டமும் அவ்வளவு இல்லை. அவள் கண்களின் கடைக்கண் பார்வையும், இதழ்களின் முறுவலும் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டியது. எல்லா உயிருக்கும் ஆதாரமான அவளை நாம் நம்முடைய இஷ்டத்துக்கு அலங்கரித்துப் பார்க்கிறோம். நாம் நம்முடைய குழந்தைகளுக்கு அலங்கரித்துப் பார்ப்பதைப் போலத்தான் இதுவும். நிதானமாகத் தரிசனம் செய்து கொண்டு உள்பிரஹாரம் சுற்றிவிட்டுப் பின் ஸ்வாமி சன்னதி வந்து அங்கேயும் தரிசனம் செய்தோம். நடராஜருக்கு தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. அதற்குப் பின் உற்சவருக்குத் தீப ஆராதனை. எல்லாம் நன்றாகப் பார்க்க முடிந்தது.

கோவிலும் வெளிப் பிரஹாரமும் சுற்றுப் புறங்களும் மிகத் தூய்மையாக இருந்தது. அம்பாள் மயில் வடிவில் தவம் செய்வதால் தான் மைலாப்பூர் என்றும் சொல்வார்கள். எப்படி இருந்தால் என்ன? சக்தியை எப்படி வழிபட்டாலும் சக்தி சக்தி தானே. இங்கே உள்ள கோலவிழி அம்மன் கோவில் சோழர் காலத்தியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வள்ளுவருக்கும் மைலாப்பூரில் கோவில் இருக்கிறது. எப்போவோ போனேன். இன்னொரு முறை போக வேண்டும். இப்போது ஒரு சக்திப்பாட்டு, நம்ம மீசைக்காரர் பாடியதுதான். சக்தியைப் பற்றி அவரைவிட வேறு யார் சொல்ல முடியும்?

"துன்பமிலாத நிலையே சக்தி,
தூக்கமிலாக் கண்விழிப்பே சக்தி.
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி.
இன்பமுதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத்திருக்கும் எரியே சக்தி.
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி.

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி.
தீம்பழந்தன்னில் சுவையே சக்தி,
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி.
பாம்பை அடிக்கும் படையே சக்தி,
பாட்டினில் வந்த களியே சக்தி.
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி.

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,
மாநிலங்காக்கும் மதியே சக்தி.
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி,
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி.
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணையளக்கும் விரிவே சக்தி.
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத்தொளிரும் விளக்கேசக்தி."

இந்த உள்ளத்துள் ஒளிரும் விளக்கைப் பாரதி கண்டு உணர்ந்ததால் தான் இப்படி ஒரு பாட்டு வந்துள்ளது. எனக்குப் படித்து ஆச்சரியப்படத்தான் முடிகிறது.

13. விதியின் வலிமை

ஜுன் 23, 2006

நேற்று முன் தினம் தற்செயலாக வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் படித்துக் கொண்டு இருந்தேன். சில சந்தேகங்கள் தெளிவதற்கு. அப்போது விதியின் வலிமை பற்றிச் சுமந்திரர் லக்ஷ்மணனிடம் கூறியது பற்றிப் படித்தேன். அதில் இருந்து தெரிந்தது, விதி என்பது வலிது என்றும், அதில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும்.அந்தச் சம்பவம் ராமாயணத்தில் நடைபெறும் சமயம், ஸ்ரீராமர் நிறை கர்ப்பிணியான சீதையைக் காட்டில் விட்டு வரும்படி லக்ஷ்மணனிடம் சொல்ல அவனும் விட்டு விட்டுத் திரும்புகிறான். அப்போது அவன் தன் அண்ணனின் நிலை பற்றிப் புலம்ப சுமந்திரர் அவனுக்கு எடுத்து உரைக்கிறார்."லக்ஷ்மணா, வருந்தாதே, கேள்!தன் பிள்ளைகளான ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கனர்களின் பிற்காலம் எப்படி இருக்கும் என்று ஜோதிட வல்லுனர்களிடம் தசரதர் கேட்டார். அவர்கள் ஸ்ரீராமர் தன் மனைவி, சகோதரர்களைப் பிரிந்து வாழ்வார் என்றும், தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்வார் என்றும், அவருக்குப் பிறக்கும் பிள்ளைகளால் ரகுவம்சம் தழைக்கும் என்றும் கூறி இருக்கிறார்கள்.

இதனால் வருத்தமடைந்த தசரதன், வசிஷ்டரைப் பார்க்க ஆசிரமத்திற்குப் போன போது அங்கே தற்செயலாக வந்திருந்த துர்வாச முனிவர், தசரதரின் பிள்ளைகளான ராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருக்கனர் ஆகியோர் பற்றி மன்னனிடம் கூறியது என்ன என்றால்:"தசரத மன்னனே! எதுவும் நம் கையில் இல்லை. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது விதி! அதை யாராலும் மாற்ற முடியாது. இது மஹாவிஷ்ணு பெற்ற சாபத்தின் பலன்" என்றார். "அது என்ன" என்று தசரதர் கேட்டார்.துர்வாசர் கூறினார்:"மன்னா, கேள்1 முன்னொரு காலத்தில் அசுரர்கள் தங்களைக் காப்பாற்ற யாரும் இல்லாமல் பிருகு முனிவரின் ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்தார்கள். பிருகு முனிவரின் மனைவி கருணை மிகுந்தவள். அவளால் அசுரர்கள் பாதுகாக்கப் பட அசுரர்கள் அங்கே பயமில்லாமல் வாழத் தொடங்கினார்கள். அசுரர்களின் இந்தச் செயல் பற்றிக் கோபம் உற்ற தேவர்கள் மஹாவிஷ்ணுவிடம் முறையிடவே அவர் தகுதி இல்லாத அசுரர்களைக் காத்து ரக்ஷித்த பிருகு முனிவரின் மனைவியைத் தன் சக்கராயுதத்தால் அறுத்துத் தள்ளினார். மஹாவிஷ்னுவின் இந்தச் செயலால் மனைவியை இழந்த முனிவர் மஹாவிஷ்ணுவைப் பார்த்துக் "கோபத்தினால் மதி இழந்த நீங்கள் எந்த நியாயமும் இல்லாமல் என் மனைவியைக் கொன்றீர்கள். பாவங்களை எல்லாம் விலக்கும் வல்லமை படைத்த நீங்களே இப்படிச் செய்யலாமா? உங்களை நான் சபிக்கிறேன். நீங்கள் பூவுலகில் மனிதனாகப் பிறந்து, மனைவியை இழந்து நெடுங்காலம் மனவேதனையுடன் வாழவேண்டும்."என்று சபித்தார்.

பிறகு தன் சாபத்தாலும், மன வேதனையில் தானும் கோபமுற்றதாலும் முனிவருக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. அவர் வேதனையைக் கண்ட மஹாவிஷ்ணு அவரைத் தேற்றி பூவுலக நன்மைக்காகத் தான் அவருடைய சாபத்தை ஏற்பதாகக் கூறினார்." அதன்படி ஸ்ரீராமர் அவதாரம் எடுத்து அயோத்தி மாமன்னனாக ஆட்சி புரிந்து, மக்களுக்காகவே வாழ்ந்து, அவர்களுக்காகவே மனைவியைத் துறந்து பின் தன் கையாலேயே தன் அருமைத்தம்பியான லக்ஷ்மணனையும் துறந்து மனவேதனை உற்றுப் பின் அவதாரப் பூர்த்தி செய்வார்." இது தான் தசரத மஹாராஜாவிடம் துர்வாசர் வசிஷ்டர் ஆசிரமத்தில் கூறியது. ஆனால் இது தேவ ரஹஸ்யம் என்பதால் ஒருவருக்கும் கூறக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். நான் அந்தச் சமயம் அங்கே இருந்தேன். இத்தனை நாள் இது பற்றிப் பேசாமல் இருந்ததுக்குக் காரணம் இது இப்படித்தான் இருக்கும் என்று உனக்குத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆகையால் வருந்திப் பயன் இல்லை. மனதைத் தேற்றிக் கொள். கடவுளே ஆனாலும் பாவம் செய்பவன் தண்டிக்கப்படுவான். அவன் விதி அது. மனிதகுலம் இதைப் புரிந்து கொள்வதற்குத் தான் ராமாவதாரம் ஏற்பட்டது" என்றார்.

12. கடவுள் என்னும் முதலாளி

ஜுன் 21, 2006

இந்தக் கடவுள் என்பவரைப் பற்றிப் பலவிதமாகக் கருத்துக்கள் நிலவுகிறது. இருக்கிறார் என்று சில பேர், அப்படி யாரும் கிடையாது என்று சில பேர். என்னைப் பொறுத்த வரை இருக்கிறார். இதை நான் ஒவ்வொரு நிமிஷமும் உணர்ந்தேன், உணருகிறேன், இது ஒரு உணர்வுதான். ஆனால் வழிபாடுகளில் கடவுளுக்கு உருவம் வைத்திருக்கிறோம். கடவுளுக்கு உருவம் இல்லை என்பதும் ஒரு கோட்பாடுதான். கடவுள் பல உருவங்களில் இருக்கிறார் என்பதும் ஒரு கோட்பாடுதான். இதில் எது நம் மனதுக்குப் பிடித்திருக்கிறதோ அதைத் தான் நாம் ஏற்றுக் கொள்கிறோம். கடவுள் கல்யாணம் செய்து கொள்கிறாரே, குழந்தை பெற்றுக் கொள்கிறாரே, ஆடை, அலங்காரங்கள் செய்து கொள்கிறாரே, இது எல்லாம் நமக்குப் பிடித்தமானது. நாம்தான் கடவுள் மேல் ஏற்றுகிறோம். இது போல அவரவர் மனதுக்குப் பிடித்தமான உருவங்களிலும் கடவுளை நினைக்கிறோம். இது சகுண வழிபாடு என்பது. சாதாரண மனிதனுக்கு இது தான் ஏற்றது.

கடவுளுக்கு உருவம் இல்லை. மனம்தான் அறிய முடியும். புலன்களால் உணர முடியாது. இதயத்தால் மட்டுமே உணரமுடிந்த, புலன்களுக்குப் புலப்படாத உருவமில்லாத தன்மையான நிர்க்குணம் அடைய நாம் எல்லாரும் ஞானிகளாக இருக்க வேண்டும். எல்லாரும் ஞானிகளாகி விட்டால் சிருஷ்டி தத்துவம் என்ன ஆவது? ஆதலால் தான் நாம் முதலில் சகுணத்தின் மூலம் கடவுளைப்புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். பண்பட்டவர்களுக்கு, நாள் செல்லச் செல்ல அவர்களுக்குள்ளேயே கடவுளை உணர முடியும். இதுதான் உள்ளொளி எனப்படும். இது நிர்க்குண வழிபாடு. இது கிடைக்கத் தான் எல்லாரும் முயற்சி செய்கிறார்கள்.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஒரு சின்னக்கதை. நான் படித்ததில் பிடித்தது: ஒரு கிராமத்தில் ஒருத்தன் கடவுளை நினைக்காமலோ, ஆராதிக்காமலோ எதுவும் செய்ய மாட்டான். ரொம்பவும் பக்திமான். அந்தக்கிராமத்தில் மழை நாட்கள் வந்த போது நதி உடைப்பு எடுத்து ஊருக்குள் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது எல்லாரும் கிராமத்தை விட்டுக் காலி செய்யும்படி அரசு உத்தரவு போட்டது. எல்லாரும் காலி செய்து கொண்டு இருந்தார்கள். நம் பக்திமான் கடவுள் நினைப்பிலேயே இருந்து வந்தார். அவர் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் வரவில்லையா என்று கேட்டதற்கு என்னைக் கடவுள் காப்பாற்றுவார் என்று பதில் சொன்னார். கொஞ்ச நேரம் ஆனது வெள்ளம் அதிகமாகச் சூழ்ந்தது. பக்திமான் முதல் மாடியில் ஏறி நின்று கொண்டார். அப்போது ஒரு படகு வந்தது. படகுக் காரர்கள் ஊரில் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டு வந்தவர்கள் இவரைப் பார்த்து விட்டுச் சத்தம் போட்டுக் கூப்பிட்டார்கள். இவர் திரும்பவும் "நான் வரவில்லை, கடவுள் வருவார், என்னைப் பாதுகாக்க" என்று சொல்லி விட்டார். படகுக்காரர்கள் கெஞ்சினார்கள். அவர் அசைந்து கொடுக்கவில்லை.

நேரம் சென்று கொண்டே இருந்தது. முதல் மாடியும் தண்ணீரால் சூழ்ந்தது. மேலே மொட்டை மாடிக்குப் போனார். தூரத்தில் ஒரு ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. சற்று நேரத்துக்கு எல்லாம் நம்ம பக்தர் இருக்கும் இடத்தைப் பார்த்து விட்டு அங்கே வந்து வட்டமிட்டது. ஹெலிகாப்டரில் இருந்து ஒரு ஏணி இறக்கப்பட்டது. ஒரு ஆளும் கூடவே இறங்கினான். " என்ன செய்கிறீர்கள், தனியாக, ஊரில் யாருமே இல்லை, சீக்கிரம் இந்த ஏணியில் ஏறுங்கள்" என்றான். நம்ம பக்தர் மறுத்து விட்டார். "என்னைக் கடவுள் காப்பாற்றுவார் அப்பனே, நீ போய் உன்னைக் காப்பாற்றிக் கொள்" என்றார். அவன் எவ்வளவு கெஞ்சியும் அவர் மறுத்து விட்டார். பின் அவனும் போய் விட்டான். ஊரை வெள்ளமும் சூழ்ந்தது. நம்ம பக்தர் வெள்ளத்தோட அடித்துச் செல்லப் பட்டார்.

அப்போ அவன் நினைச்சான். " நாம் இவ்வளவு வேண்டியும் கடவுள் நம்மைக் காப்பாற்றவில்லையே" என்று நினத்தான். அப்போது கடவுள் அவன் முன் கடவுள் தோன்றி "அப்பனே, நான் மூன்று முறை வந்தேன், உன்னைக் காப்பாற்ற, நீதான் இடம் கொடுக்கவில்லை" என்றார். "ம்ஹும், நீங்கள் எங்கே வந்தீர்கள்?" என்று கேட்டான். கடவுள் சொன்னார். "அப்பனே, முதலில் நான் பக்கத்து வீட்டுக் காரனாக வந்தேன். பின் படகுக்காரனாக வந்தேன். பின் ஹெலிகாப்டரில் வந்தேன். மூன்று முறையும் என் உதவியை நீதான் மறுத்தாய்" என்றார். (சுகி.சிவம் சொன்ன கதை என்று நினைக்கிறேன்.)

நாம் ரொம்பக் கஷ்டத்தில் இருக்கும்போது, அது மனக்கஷ்டமோ, பணக்கஷ்டமோ, உடல் கஷ்டமோ எங்கிருந்தோ வந்து நீளும் உதவிக்கரம் கடவுளுடையது தான் என்பதை நாம் புரிந்து கொண்டால் போதும்.

11. மீண்டும் கிருஷ்ணன்

ஜுன் 03, 2006

மறுநாள் காலை நாங்கள குளித்துத்தயாராகி ஸ்ரீமடத்திற்குப் போனோம். அங்கே பூஜை நடந்து கொண்டு இருந்தது. ஸ்ரீமஹாஸ்வாமிகள் தன் தனி அறையில் பூஜை செய்வதாகவும் சாயந்திரம் பூஜை அவர் செய்வார் எனவும் கேள்விப்பட்டோம். வந்திருந்த பக்தர்கள் எல்லாம் அவர் அவருக்குத் தெரிந்த பாடல்களையும், ஸ்லோகங்களையும் பாடிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் கலந்து கொண்டோம். சரியாகப் 10-30 மணிக்குப் பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. அதற்குப் பின்னர் ஸ்ரீஸ்வாமிகள் வந்தார். அவரிடம் எல்லாரும் தரிசனம் பெற்று ஆசிகளைப் பெற்றுக் கொண்டோம். என் கணவர் விசேஷமாக "கைலாஷ், மானசரோவர்" யாத்திரைக்குப் போக அவரிடம் கூற ஸ்ரீமஹாஸ்வாமிகளும் எண்ணம் ஈடேற ஆசி கொடுத்தார். பின் அன்றே அவர் பக்கத்தில் உள்ள "சிர்சா" என்னும் ஊருக்குக் கிளம்பிச் சென்றார். நாங்கள் மறுநாள் காலையில் சிருஙகேரியில் இருந்து கிளம்பினோம்.

அங்கிருந்து ஒரு கார் வைத்துக் கொண்டு மீண்டும் உடுப்பி நோக்கிப் போனோம். மதியம் 12 மணி அளவில உடுப்பி வந்து சேர்ந்தோம். அங்கு "பெஜாவர் மடத்தை"ச் சேர்ந்த ஒரு தங்குமிடத்தில் அறை கிடைத்தது. கீழே என்பதால் வாடகை ஒரு நாளுக்கு 150/-ரூ. மேலே முதல், இரண்டாம் மாடி என்றால், 25 ரூ/- கம்மியாகக் கிடைக்கிறது. பொதுவாக நாம் இம்மாதிரி ஊர்களுக்குப் போனால் மடங்களின் அறைகள் தேர்ந்தெடுப்பது என் அனுபவத்தில் சிறந்ததாகத் தெரிகிறது. அதிகபக்ஷமாக இரண்டு நாளுக்கு மேல் தங்க முடியாது. அதற்கு மேல் என்றால் சிறப்பு அனுமதி தேவை.கோவிலில் தரிசனம் எப்போதும் உண்டு என்பதால் நாங்கள் உடனே தரிசனம் செய்யப் போனோம். கண்ணன் ராஜாங்கக் கோலத்தில் காட்சி கொடுத்தான்.பார்க்கப்பார்க்கத் தெவிட்டாத அழகு. பிரமிக்க வைக்கும் அழகு. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மிக நிதானமாகத் தரிசனம் முடித்துப் பின் அங்கே உள்ள மற்ற கடவுள்கள் தரிசனமும் முடிந்து சாப்பிடப் போனோம்.

கோவிலில் சாப்பாடு போடுவார்கள் என்பதாலும் அன்று அமாவாசை, விரத நாள், வெளியில் சாப்பிட முடியாது என்பதாலும் கோவிலில் சாப்பிட்டோம். குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றால் நாம் பாத்திரம் எடுத்துப் போக வேண்டும். எங்களுக்கு இது பற்றித் தெரியாத காரணத்தால் தண்ணீர் இல்லாமல் ரொம்பக் கஷ்டப்பட்டோம். பக்கத்தில் உள்ள கல்லூரிப் பெண்கள் உதவினர். காய்கள் எதுவும் கிடையாது. வெறும் சாதம், ரசம், சாம்பார், மோர் மட்டும் தான். அவர்கள் பரிமாறும் வேகத்தில் நாம் சாப்பிட்டு விட வேண்டும். எல்லாரும் தினம் வருபவர்கள் என்பதால் தவித்தது நாங்கள் மட்டும்தான். சிலர், நம் ஊரில் மண் சோறு சாப்பிடுவது போலக் கீழே தரையைச் சுத்தம் செய்து அதில் சாதம் போட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். ஏதோ பிரார்த்தனையாம். என்ன என்று கேட்கக்கூடாது என்பதால் கேட்கவில்லை. கேட்டால் பலிக்காது என்று ஒரு நம்பிக்கை.

மறு நாள் காலையிலேயே எழுந்து 5-30 மணிக்கு நடக்கும் நிர்மால்ய சேவைக்குத் தயார் ஆனோம். கோவிலுக்குப் போகும்போது யாருமே இல்லை. கிருஷ்ணனும் நாமும் தான் என்று எண்ணிக் கொண்டோம். கோவில் ஊழியர்கள் நிர்மால்ய சேவைக்கும் அதன்பின் கிருஷணனின் குளியலுக்கும் வேண்டியது தயார் செய்து கொண்டு இருந்தார்கள். எதிரே உள்ள மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டோம். சற்று நேரத்தில் எங்கிருந்தோ உள்ளூர் பக்தர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். உடனே போய் முன்னால் நின்று கொண்டோம். சரியாக 5-30 மணிக்குத் திரை விலகியது. ஆஹா, அந்த அழகை என்ன என்று சொல்வது, நம் வீட்டில் குழந்தை தூங்கி எழுந்து வரும் கோலம் பார்த்திருப்பீர்கள் தானே? அதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கண்ணனின் மயில்பீலி அசைய, காதில் குண்டலங்கள் தொங்க, கழுத்தில் முத்தாபரணங்கள் தொங்க, இடையில் அரைச் சலங்கையும், அரைஞாண் கயிறும் தொங்கக் குழந்தையாக என் முன் வந்து "என்னைத் தூக்கிக்கொள்" என்பது போல நின்றான். அதைப்பார்க்கும் யாரும் தன்னை மறந்து விடுவார்கள். பொதுவாக நான் கோவில்களில் எதுவும் வேண்டிக் கொள்ளும் வழக்கம் கிடையாது. நமக்கு என்ன வேண்டுமோ அதை இறைவன் ஏற்கெனவே எழுதிவிட்டான், கூடவும் கூடாது, குறையவும் குறையாது என்ற எண்ணம் உண்டு.

ஆனால் அன்று இறைவனைப் பார்த்த பொழுது இவனுக்கு அல்லவா நாம் எல்லாம் கொடுக்க வேணடும்? இவன் குழந்தை அன்றோ என்றே தோன்றியது? "கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே, கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே" என்ற பாடல்(சிலப்பதிகாரம் என்று நினைக்கிறேன்) எம்.எஸ். அம்மாவின் குரலில் என் காதில் கேட்டது. ஊத்துக்காடு கவியின், "ஆடாது அசங்காது வா" பாடலில் உள்ள "பின்னிய சடை சற்றே" என்று துவங்கும் வரிகளும் நினைவு வந்து கொண்டிருந்தது. கண்ணன் என்னும் மாயக்கள்வனின் லீலைகள் எல்லாம் நினைவில் வந்து மோதியது. இந்தக் காட்சியைத் தானே தினம் தினம் யசோதை பார்த்து இருப்பாள் இது தானே கிடைக்காமல் தேவகி கண்ணனிடம் கேட்டுப் பெற்றாள் என்று புரிந்தது. பாரதி கண்ட"காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்கரிய நிறம் தோன்றுதையே நநதலாலா" என்ற பாடல் வரி்களுக்கு ஏற்பக் கண்ணன் கரிய திருமாலாகக் காட்சி அளித்தான். அன்று கண்ணன் அபிஷேஹம் முடிந்து "சிம்மவாஹினி" யாகக் காட்சி தந்தான். மேலும் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பக் கோவிலுக்குப் போய்விட்டு நாங்கள் அரை மனதாக உடுப்பியை விட்டுக் கிளம்பி ஊருக்குப் போக மங்களூர் வந்து அடைந்தோம்.

10. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 3

மே 30, 2006

"கிக்கா" என்று சொல்லப்படும் ரிஷ்யசிருங்கர் மலையில் இருந்து கிளம்பி நாங்கள் வந்து மடத்தின் அறையில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டோம். பிறகு மறுபடி சாயந்திரம் துங்கா நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது தமிழ் நாட்டில் உள்ள சில நதிகள் இத்தனை சுத்தமாக இருக்குமா என்று எண்ணம் தோன்றியது. ஒரு காலத்தில் மிகச் சுத்தமான நதியாக இருந்த கூவம் நதி இப்போது சாக்கடையாக மாறி விட்டது. அது போலப் பெரிய நகரங்களில். எனக்குத் தெரிந்து மதுரை மேம்பாலத்தின் இரண்டு கரைகளும் எவ்வளவு சுருங்கி இருக்கிறது. அதனால் தான் நமக்கு இறைவன் தண்ணீருக்குக் கை ஏந்தும்படி வைத்திருக்கறான் போலும். எஙகு சென்றாலும் இந்த எண்ணம் தவிர்க்க முடிவது இல்லை. மறு நாள் காலை சிருங்கேரிக்குக் கிழக்கே உள்ள அன்னபூரணி கோயில் இருக்கும் ஹொரநாடு என்ற ஊர் போகக் கிளமபினோம். கார் வைத்துக் கொண்டு போகும்படி சிலர் சொன்னாலும் பஸ்சில் போக ஆசைப்பட்டு பஸ்சில் போனோம். அதிகம் மலைப் பிரதேசங்களில் போக வேண்டி இருப்பதால் நம்ம ஊர் மினி பஸ்ஸை விடச் சிறியதுதான் அந்த பஸ். ஆனால் பஸ்ஸின் நடத்துனர் எங்களுக்கு உட்கார இடம் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த மனிதாபிமான் செய்கை அங்கே எல்லா ஊர்களிலும் காணப்பட்டது. ஊருக்குப் புதியவர் என்றால் முதல் மரியாதை கொடுக்கிறார்கள்.

பஸ் முழுக்க முழுக்க மலை மேலேயே போகிறது. நல்ல உயரம் 8,000/ அடியில் இருந்து 10,000/அடி வரை இருக்கும். கொண்டை ஊசி வளைவுகள் 15-க்கும் மேலே. 10 அல்லது 20 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் போக முடியாது. அநேகமாக மலைவாழ் மக்களுக்கு இது ரொம்ப வசதியாக இருப்பதால் எல்லா ஊர்களிலும் நின்று ஏற்றிக் கொண்டே போகிறது. மலைவாழ்மக்கள் என்றால் பழங்குடியினர் என்று நினைக்க வேண்டாம். எல்லா ஊர்களிலும் "நவோதயா" பள்ளிகள் காணப்பட்டன. நாம் எதை இழந்தோம் என்று நமக்கு இன்னும் புரியவில்லை. மத்தியானம் 12 மணி அளவில் ஊர் வந்தது. மிகவும் கஷ்டமான பிரயாணம். கோவில் மூடி இருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் திறந்து இருந்தது. வாயிலில் இருந்தே அம்மனைப் பார்க்க முடிகிறது. ஆனால் கோவில் ஊழியர்கள் கிட்டே போய்ப் பார்க்கச் சொல்லக் கிட்டே போனோம். தங்க அன்னபூரணி நின்றகோ்லத்தில் கையில் அன்னக் கரண்டியுடன் உலகுக்கே உணவு அளிக்கத் தயாராக இருக்கிறாள். அவளின் அந்தக் கோலத்தைப் பார்த்ததும் நம் பசியே போய் விடுகிறது. நிதானமாக ஒரு 10 நிமிஷம் அம்மன் தரிசன்ம் நடை பெற்றதும் பிரசாதம் வாங்கிக்கொண்டோம். பின் கோவில் ஊழியரிடம் கேட்டதில் சாப்பாடு வெளியில் சரியான ஹோட்டல்கள் இல்லை என்றும் கோயிலில் போடுவார்கள் என்றும் சொல்லவே, அங்கே போய்ச் சாப்பிட்டு விட்டு வந்தோம்.

திரும்ப நாங்கள் வந்த அதே மாதிரி பஸ் தயாராக இருக்கவே அதிலேயே போக முடிவு செய்தோம். அஙகே ஒரு கடையில் ஏலக்காய், கிராம்பு, காபிப்பவுடர், டீத்தூள் போன்றவை வாங்கிக் கொண்டோம்.பிறகு பஸ்ஸில் ஏறித் திரும்ப சிருங்கேரி வந்தோம். சிருங்கேரியில் நண்பர் ஒருவர் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனின் நிர்மால்ய தரிசனத்தைப் பற்றிச் சொல்ல மீண்டும் உடுப்பி போக ஆசை வந்தது. ஆகவே மறுபடி உடுப்பி போக நினத்தோம். அதற்குள் ஒரு முறை மறுபடி மஹாஸ்வாமிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. மறுநாள் காலை வேளையில் போக முடிவு செய்தோம்.

9. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 2

மே 29, 2006

துங்கா நதியில் நாங்கள் போன சமயம் அதிகம் தண்ணீர் இல்லை. மீன்கள் மிகப் பெரியவை. மேற்கில் இருந்து கிழக்கே பாயும் துங்கா நதி சரியாகத் தமிழ் நாட்டை வந்து அடைந்திருக்க வேண்டும். அந்த அளவு அதிர்ஷ்டம் நமக்கு ஏது? ஆனால் சற்று தூரம் கிழக்கே போய்ப் பின் வடக்கே போகும் துங்கா ஷிமோகாவிற்குப் பின் பத்ராவைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. ஆகவே சிருங்கேரியில் துங்கா மட்டும் தான். படிக்கட்டுகளில் இறங்கிக் கீழே போனோம். குளிர்ந்த காற்று வீசியது. படித்துறையில் கடவுளை ஆராதிப்போர் மற்றும் மீன்களுக்கு உணவு அளிப்போர் கூட்டம் நிரம்பி இருந்தது. சற்று நேரம் அங்கே செலவிட்டு விட்டுப் பின் மேலே ஏறி "நரசிம்மவனம்" என்னும் ஸ்ரீமஹாஸ்வாமிகள் இருக்கும் இடம் நோக்கிப் போனோம். மிகவும் அதி அற்புதமான இயற்கைச் சூழ்நிலை. அமைதி கோலோச்சி இருந்தது.வேதம் படிக்கும் பையன்கள் மடத்து நந்தவனத்தில் அவர் அவர்களுக்கு இஷ்டமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பாடம் கேட்டுக் கொண்டும் விவாதம் செய்து கொண்டும் இருந்தார்கள். உள்ளே மடத்தின் கூடத்தில் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். நாங்களும் போனோம்.

ஸ்ரீமஹாஸ்வாமிகள் வருபவர் எல்லாரையும் அவர் தம் பேர், ஊர் முதலியன கேட்டுக் கொள்கிறார். யாரையும் விடுவது இல்லை. பக்தர்கள் கூறும் விண்ணப்பங்களையும் செவி மடுக்கிறார். தரிசனம் முடிந்து அறைக்குத் திரும்புகிறோம். மறுநாள் காலை சிருங்கேரியைச் சுற்றி ஆதி சங்கரர் ஸ்தாபித்து இருக்கிற 4 திசைக்கும் காவல் ஆக உள்ள தெய்வங்களை தரிசிக்கக் கிளம்புகிறோம். முதலில் புராதனமான ஒரு சிவன் கோயில். மஞ்சுநாத ஸ்வாமி தான் இங்கேயும். கோயில் மிக உயரத்தில் இருக்கிறது. கூட்டம் குறைவு என்றாலும் பராமரிப்புப் பிரமாதம். அங்கிருந்து காலபைரவர் கோயில்,(ஆதி சங்கரர் நியமித்தது,)கெர்ரெ ஆஞ்சனேயர் கோயில், காளி கோயில், துர்கா பரமேஸ்வரி கோயில் (இங்கு துர்கையின் வலது பக்கம் லிங்க ரூபத்தில் ஈசன் அருள் பாலிக்கிறார். எல்லாக் கோயில்களும் மடத்து நிர்வாகம். அவர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவு எல்லாம் மடத்தைச் சேர்ந்தது. யாருமே வெளியில் போய் வேலை பார்க்கப் பிரியப் படவில்லை. மடத்தின் நிர்வாகம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

எல்&டியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒருவரால் மடம் நிர்வகிக்கப் படுகிறது. ஆதி ஆச்சாரியரின் வழிமுறைகளை மாற்றுவது இல்லை. எல்லாரும் முழுமனத்துடன், செய்வதால் ஒரு புனிதம் நிரம்பி இருப்பது உணரப்படுகிறது.பிறகு அங்கிருந்து "கிக்கா" எனும் மலைப் பிராந்தியத்தில் உள்ள ரிஷ்யசிருங்கரின் ஆலயத்திற்குப் போகிறோம்.காசியபரின் மகன் ஆன விபாண்டகரின் மகன் தான் ரிஷ்யசிருங்கர். இவர் பிறந்ததில் இருந்து பெண்வாடையே படாமல் வளர்ந்தவர். அவர் இருக்கும் இடத்தில் நல்ல மழை பெய்யும் என்பதை அறிந்த "ரோமபாத மன்னன்" தன் நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரைப் பெண்களைக் காட்டி, அப்பெண்களை அவருக்குப் பணிவிடை செய்ய வைத்துத் தன் நாட்டிற்கு வரவழைக்கிறான். ரிஷ்ய சிருங்கர் வந்ததும் நல்ல மழை பெய்கிறது. பின் தன் மகளான "சாந்தை"யை அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறான். சாந்தையுடன் காட்டுக்கு மீண்டும் வரும் முனிவர் பின் தசரதனுக்காக "புத்திர காமேஷ்டி யாகம்" செய்ய அயோத்தி செல்கிறார். அதற்குப் பின் அவரைப் பற்றிய விவரங்கள் தெரிய வில்லை. ஆனால் அவர் ஈசனுடன் ஐக்கியம் ஆனதாகச் சொல்லப் படுகிறது.மேற்குறிப்பிட்ட கோவிலில் லிங்க வடிவில் இருக்கும் ஈசனின் லிங்க பாகத்தில் மான் கொம்புகள் காணப் படுகிறது. அதுதான் ரிஷ்யசிருங்கர் என்றும் அவர் தன் மனைவியையும் மடியில் வைத்துக் கொண்டுள்ளார் என்றும் (ஒரு பெண் உருவம் தெரிகிறது) சொன்னார்கள். ரிஷ்ய சிருங்கருக்கு மான் கொம்புகள் உண்டு. அவர் மனைவி சாந்தைக்குத் தனியாக சன்னிதி இருக்கிறது.

நாங்கள் போகும்போது ஈசனுக்கு 11 மணி அளவில் தினம் செய்யும் அபிஷேஹ வேளை என்பதால் சாந்தை சன்னிதியில் மிக நன்றாக அர்ச்சனை செய்து கொடுத்தார் அந்தக் கோயிலின் குருக்களான விஸ்வநாத பட் என்பவர். கோயில் கர்நாடக அரசின் அறநிலையத் துறையின் கீழ் வருகிறது. என்றாலும் அதன் புனிதம் கெடாமல் பாது காக்கப் பட்டு வருகிறது. விஸ்வநாத பட்டும் இன்னோர் குருக்களும் முறை போட்டுக் கொண்டு கோயிலின் பூஜைகள் செய்து வருகிறார்கள். திரு விஸ்வநாத பட் சொன்ன கதை இது."சாந்தை" தசரதன் மகள் என்றும், தசரதன் தான் ரிஷ்யசிருங்கருக்கு சாந்தையைத் திருமணம் செய்து வைத்ததாகவும் கூறுகிறார். ஆனால் சாந்தையின் தாய் கெளசல்யா தேவி இல்லை என்றும் சொன்னார். அவர் என்னிடம் கேட்ட கேள்வி இது தான்'சாந்தையின் தாய் யார்? எனக்குத் தெரியவில்லை. குமரனோ, சிவமுருகனோ, இன்று புதிதாகக் "கடி மன்னன்" பட்டம் வாங்கி உள்ள செல்வனோ தான் வர வேண்டும். ஆராய்ச்சி செய்து சொல்ல. ஆனால் ஒரு விஷயம் நிச்சயம். இன்றும் சிருங்கேரியில் மழை பூரணமாகப் பெய்து விடும் என்கிறார்கள். தமிழ் நாட்டில் இருந்து மழை வேண்டி நிறையப் பிரார்த்தனைகள் ரிஷ்ய சிருங்கர் கோயிலுக்கு வருகிறதாம். கோயிலில் சொல்கிறார்கள்.

8. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 1

மே 22, 2006

சாயந்திரம் ஒரு 5-30 போல நாங்கள் ஸ்ரீசாரதா மடத்திற்குச் செல்லத் தயார் ஆனோம். துங்கா நதிக்கரையில் தென்கிழக்குத் திசையில் நரசிம்ம வனம் என்ற பகுதியில் ஸ்ரீமஹாஸ்வாமிகளின் மடம் அமைந்துள்ளது. தென் மேற்குப் பகுதியில் மடத்தின் தங்குமிடங்கள், சாப்பாட்டுக்கூடம், காரியாலயம், ஸ்ரீசாரதையின் கோயில், மற்றும் அதைச் சார்ந்த துணைக்கோயில்கள் இருக்கின்றன. ஸ்ரீசாரதா பீடம் என்ற வளைவு உள்ள பெரிய நுழைவு வாயில். மடத்தைச் சேர்ந்த வாகனங்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதி. மிதியடிகளை இட்டுச் செல்ல மடமே ஏற்பாடு செய்துள்ளது. முடிந்தவர்கள் பணம் கொடுக்கலாம். சாரிசாரியாக மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அதிகம் ஆந்திரா, மற்றும் கர்நாடகாவில் இருந்து. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட முதல் நான்கு மடங்களுள் ஒன்று இது. வடக்கே பத்ரிநாத்திற்கு முன்னால் "ஜ்யோதிஷ்"மடம், கிழக்கே ஜகன்னாத்தில் "கமலா" மடமும், மேற்கே துவாரகையில் "காளிகா" மடம், தெற்கே சிருங்கேரியில் "சாரதா" மடமும் ஸ்தாபிக்கப்பட்டன. யாத்திரையின் கடைசியில் காஞ்சியை அடைந்த ஸ்ரீசங்கரர் தன்னிடம் வைத்துக் கொண்ட யோகலிங்கத்தை அங்கே வைத்து "காமகோடி" பீடத்தை ஸ்தாபித்ததாகச் சொல்வார்கள். மற்ற லிங்கங்களான மோக்ஷலிங்கம், ஸ்ரீசிதம்பரத்திலும், முக்தி லிங்கம் ஸ்ரீபத்ரிநாத்திலும், வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்ட க்ஷேத்திரத்திலும், போக லிங்கம் ஸ்ரீசாரதா பீடத்திலும் ஸ்தாபிக்கப்பட்டன.

பெரிய நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே போனால் வலது பக்கம் காரியாலயத்தை சேர்ந்த அறைகள், மற்றும் சாப்பாடு சமைக்கும் இடம், சாப்பிடும் இடம் முதலியன தாண்டி ஸ்ரீசாரதையின் கோயில் வருகிறது. இடது பக்கம் மடத்தின் தங்குமிடங்கள், அதைச் சேர்ந்த கூடங்கள் முதலியன. சாரதையின் கோயிலுக்கு எதிரே மடத்தைச் சேர்ந்த 2 குட்டி யானைகள் நின்று கொண்டு இருந்தன. ஒன்று ரொம்பக்குட்டி மற்றும் குறும்பாக இருந்தது. அதை நாம் கவனிக்கவில்லை என்றால் கூடவே வந்து துதிக்கையால் கூப்பிடுகிறது. கூப்பிட்டால் வீட்டிற்கே வந்தாலும் வரும் என்று நினைத்தேன். கட்டுபடி ஆகாது என்பதால் விட்டு விட்டேன். சாரதை கோயில் நுழைவு வாயிலில் இருந்தே தரிசனம் செய்யும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. சாரதை கல்விக்கு அதிபதி என்பதால் அங்கு வந்து அட்சராப்பியாசம் செய்து கொண்டு போகின்றனர். சதா நேரமும் அங்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடந்து கொண்டே இருக்கிறது. இடைவிடாத பூஜை. நாம் எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நைவேத்தியப் பிரசாதத்துடன் 40ரூபாய் சஹஸ்ரநாம அர்ச்சனைக்குப் பணம் கட்டினால் பிரசாதம் என்று செங்கல் அளவில் தேங்காய் பர்பி தருகிறார்கள். சுத்தமான நெய்யினால் தயாரிக்கப்பட்டது. 4,5 கட்டிகள் இருக்கிறது. சாப்பிட வயிறு மட்டும் ஒன்றுதான் நம்மிடம் உள்ளது. அதுவும் சொன்னபடி கேட்காது.

பிரஹாரத்தில் வேத பாடசாலைப் பையன்கள் வேத கோஷம் செய்யப் பிள்ளையாருக்குப் பூஜை நடக்கிறது. சக்தி கணபதி என்று பெயர். பிள்ளையாரைப் போல ஒரு நட்பான கடவுள் யாருமே இல்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். கேட்டுக் கொள்வார். மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சேரும் இடத்தில் உள்ள நேரு பிள்ளையார் எனக்கு ஒரு காலத்தில் ரொம்ப நெருங்கிய சிநேகிதர். இப்போது ரொம்ப வருடம் ஆச்சு அவரைப் பார்த்து. இருக்கிறாரோ என்னமோ தெரியாது. சாரதை கோயிலுக்குப் பக்கத்திலேயே மற்ற ஸ்வாமிகளுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கின்றன. சற்றுத் தூரத்தில் துங்கா நதிப் படித்துறைப் பக்கத்தில் ஒரு பழமை வாய்ந்த கோயில் தென்பட்டது. கிட்டப் போய் விசாரித்தால் வித்யாரண்யர் கோயில் என்றார்கள். உள்ளே இருள் அடைந்து கிடக்கிறது. 4 அடுக்குகள் கொண்ட கோயிலின் 4 பக்கமும் முறையே சைவம், வைணவம், ஜைனம் மற்றும் புத்தம் மதங்களைச் சேர்ந்த முக்கியமான விக்ரஹங்கள் சுதை வேலைப்பாடு என்று நினைக்கிறேன், காணப்பட்டது. படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் 1 அடிக்கு மேல் உயரம். மேலே ஏறிப் போனால் உள்ளே வித்யாரண்யர் சந்நிதி வெளிச்சம் அதிகம் இல்லாத ஒரு விளக்குடன் காணப்பட்டது. வெளியே வந்து கண்ணில் பட்ட ஒருவரிடம் விவரம் கேட்ட போது மடத்தின் காரியாலயத்திற்கு எதிரே அறிவிப்பு வைத்திருக்கும் என்றார்கள். உடனே அங்கே போய்ப் பார்த்தோம். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த ஹரிஹர புக்கர்களின் குரு இந்த வித்யாரண்யர் தான் என்றும், சாம்ராஜ்ஜியத்தைத் தன் குருவிற்கு அர்ப்பணம் செய்ததாகவும், அவருக்கு எழுப்பிய கோயில் தான் இது என்றும், தற்சமயம் தொல்பொருள்த் துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் எழுதி இருந்தது. கோயில் வழிபாட்டிற்கும், மற்றபடி புனர் உத்தாரணத்திற்கும் தொல் பொருள் துறை ஏற்பாடு செய்யலாமே என்று நினைக்கத் தோன்றியது. இவரும் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த குரு பரம்பரையில் தான் வருகிறார்.

7. கோபாலகிருஷ்ணன் - 2

மே 21, 2006

கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. மலைப் பாதை. சில இடங்களில் உயரம் 6,000 அடி இருக்குமென்று நினைக்கிறேன். கூடவே வேண்டுமானாலும் இருக்குமே தவிரக் குறையாது. காபிச் செடிகள் தவிர மிளகுக் கொடிகள், முந்திரிச் செடிகள், பலா மரங்கள், பாக்கு மரங்கள் எனப் பலவகைப்பட்ட மரங்களும் செடிகளும் நிறைந்து காட்டுக்கே உரித்தான ஒரு தனி மணத்தோடு திகழ்ந்தது. மிளகுக்கொடிகள் பாக்கு மரங்களில் ஏற்றி விடப்பட்டிருந்தது. ஆங்காங்கே சில கிராமங்களில் சிறுவர்கள் வண்டி வரும் சப்தத்தை வைத்து முந்திரிப்பழம், பலாச்சுளை என்று எடுத்துக் கொண்டு ஓடிவந்தனர். ஒரு பையனிடம் பலாச்சுளைகள் வாங்கிக் கொண்டோம். நம் மூதாதையர் நடமாட்டமும் இருந்தது. இனம் தெரியாத பறவைகளின் கூச்சல் சப்தம். பறவைகள் நகரத்தில் வாழும் பறவைகள் என்றால் அவைகள் கூச்சலில் நான் இன்னதென்று கண்டு பிடிப்பேன். காட்டுப் பறவைகளின் வித்தியாசமான கத்தலில் கூர்ந்து கவனித்து இது இந்தப் பறவை என்று கண்டுகொள்ளவேண்டும். அதுவும் ஒரு புது முயற்சிதான். சில இடங்களில் பெரிய புலியின் படத்தைப் போட்டுக் காட்டுக்குள் நுழையத் தடை விதித்திருந்தார்கள். ஊட்டியிலும் சரி, இங்கும் சரி அப்படிப் பயப் படுத்தும்படிப் புலி, யானை நடமாட்டம் எதுவும் பார்க்கவில்லை. சாதாரணமாகக் கல்லாறு பகுதியிலும், பஃறுளியாறு பகுதியிலும் யானைகள் வந்து ரெயிலையோ அல்லது பேருந்து மற்றும் மேலே செல்லும் வண்டிகளையோ வழி மறிப்பதாகச் சொல்வார்கள். என் அதிர்ஷ்டம் நான் போன போது எல்லாம் அவை முதல் நாளே வந்து விட்டுப் போயிருக்கும்.

கோத்தகிரியில் இருந்துக் கோடநாடு செல்லும்போது ஒருமுறைக் குட்டி யானை ஒன்றைப் பழக்குவதற்குப்பிடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். குட்டி யானையைச் சங்கிலியால் கட்டிச் சுற்றிலும் 4 பெரிய பழகிய யானைகள் வழி நடத்தின. கூட மூன்று அல்லது நான்கு பாகர்கள் அல்லது காட்டிலாகா ஆட்கள். குட்டி யானை உடம்பெல்லாம் செம்மண்ணால் அப்பியிருந்தது. குழியில் இருந்து வெளியில் வரப் போராடி இருக்க வேண்டும். அது துதிக்கையைத் தூக்கித் தன் தாயை நினத்தோ என்னவோ ஓலமிட்டதும் கூடவே வந்த யானைகள் தங்கள் துதிக்கையால் அதை தொட்டு சமாதானம் செய்யும் முறையில் தொட்டதும் பார்த்த போது பாவமாக இருந்தது. நமக்கு மிருகங்களைப் பார்த்தால் வேடிக்கை. ஆனால் அவற்றுக்கு எப்படி? புரியவில்லை.

மலைப்பாதை முடிந்ததும் சற்று ஏற்ற இறக்கமான வெளியில் சற்று தூரத்தில் சிருங்கேரி வரும் என்று அறிவிப்புப் பலகை கண்ணில் பட்டது. பகல் 2 மணி இருக்கும் சிருங்கேரி வந்த போது. ஊர் சின்னதுதான். மடத்தின் காரியாலய வாயிலில் எங்களை இறக்கிவிட்டு விட்டு டிரைவர் மங்களூர் திரும்பினார். மடத்தின் காரியாலயத்தில் அறை ஏற்பாடு செய்து கொண்டோம். தங்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அறை தருகிறார்கள். நாங்கள் இரண்டு பேர்தான் என்பதால் ஒரு பெரிய அறையில் 2 கட்டில் போட்டுக் கூட யாராவது இருந்தால் படுக்கப் பாய், தலையணை என்று வசதிகளோடு இருந்தது. கழிப்பறை வசதியும் சேர்ந்தே இருந்தது. குளிக்க வெந்நீர் கேட்பவர்களுக்கு மடத்தில் இலவசமாகத் தருகிறார்கள். காபி, டீ, காலை ஆகாரம் போன்றவை அறையிலேயே நாம் கேட்டால் கொண்டு தரும்படிப் பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு நாமாக ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்கின்றனர். வற்புறுத்திக் கேட்பது இல்லை. அறை வாடகை ஒரு நாளைக்கு 60 ரூபாய் தான். 2 அல்லது 3 நாளைக்கு மேல் யாரையும் தங்க அனுமதிப்பது இல்லை. அனேகமாக எல்லாருக்கும் அறை கிடைத்து விடுகிறது. தனியார் விடுதிகள் இருந்தாலும் பெரும்பாலும் எல்லாரும் மடத்தின் அறைகளையே விரும்புகிறார்கள். சுத்தமாகவும் உள்ளது. எங்கள் அறை நல்ல வேளையாக கீழ்த் தளத்திலேயே இருந்தது. அதற்குள் மணி 2-30 ஆகி விட்டது. மடத்தில் 2-15-க்குள் சாப்பாடு முடிந்து விடும். ஆகையால் வெளியே போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம். ஸ்ரீமஹாஸ்வாமிகள் தரிசனம் மாலை 5 மணியில் இருந்து ஆரம்பிப்பதாகச் சொன்னார்கள்.ஆகவே அதற்குத் தயார் ஆனோம்.