எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, October 10, 2006

39.ஓம் நமச்சிவாயா-10

நாங்கள் முதலில் நுழைந்த கிராமத்தின் பெயர் "ஜாங்-மூ" என்பதாகும்.. வழி எல்லாம்

நிறையக் கடைகள். எல்லா இடங்களிலும் குளிருக்குப் பாதுகாப்பான ஆடைகளும்,

வெல்வெட் துணிகள், படுக்கை விரிப்புக்கள் முதலியன இருந்தன. நம் தமிழ்நாட்டில் அதுவும்

சென்னையில் சற்றும் உபயோகப் படாது. ஆகவே நாங்கள் மேலே நடந்தோம். மேலும் இருக்கும் பணமெல்லாம் செலவு செய்து விட்டால் மேலே போய்க் குதிரைக்கு, கூட வரும்

ஹெல்ப்பருக்கு என்று பணம் தேவைப் படும். திடீரென உடல் நிலை சரியில்லாது போனாலும்

பணம் தேவைப் படும். அதிகப்படியான சீனப் பணம் ட்ராவல்ஸ்காரர்களிடம் இருந்தது

என்றாலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது அல்லவா? சீன நேரத்திற்கும் நம்

நேரத்திற்கும் 2-1/2 மணி நேரம் வித்தியாசம்.அதாவது நம் நாட்டில் பகல் 12-00 மணி என்றால் சீனாவில் 2-30PM ஆகும். அதற்கேற்பக் கைக்கடிகாரங்களை எல்லாரும் மாற்றிக்

கொண்டார்கள். எல்லாருக்கும் தேவையான சீனப் பணம் அன்றிரவு நாங்கள் தங்கப் போகும் "நியாலம்" என்ற ஊரில் தரப் படும் என்று கூறப்பட்டது. சற்றுத் தூரம்

நடந்ததும் "எகோ ட்ரக்" கொடி ஏற்றப்பட்ட வண்டிகள் கண்ணுக்குத் தெரிந்தன. கிட்டத்

தட்ட 10, 12 வண்டிகள். எல்லாம் "டொயோட்டோ" கார் வகைகள்."Land Cruiser" வண்டிகள். ஒரு காரில் டிரைவரைத் தவிர்த்து 4 பேர் பிரயாணம் செய்யலாம். வலது பக்க டிரைவ். டிரைவரின் அருகில் ஒருத்தர். பின்னால் 3 பேர். அதற்கும் பின்னால் உள்ள இடத்தை சாமான்கள் வைக்கும் இடமாக வைத்திருந்தார்கள். எந்தக் காரில் ஏற வேண்டும் எனத்

தெரியவில்லை. நாங்களாக ஒரு காரில் ஏறிக் கொண்டோம். டிரைவர் உடனே பார்த்துவிட்டு

வந்து பின்னால் திறந்து சாமான்கள் வைக்க உதவினார். எல்லாம் சைகையில்தான். அவர்

சொல்வது நமக்குப் புரியாது. நாம் கேட்பது அவருக்குப் புரியாது. போக வேண்டிய ஊரின் பேரைச் சொல்லிக் கையால் எத்தனை மணி நேரம் ஆகும் எனக் கேட்டோம். 4

கைவிரல்களை விரித்துக் காட்டினார். அதற்குள் பங்களூரில் இருந்து வந்த முதியவர் திரு

சங்கரன் எங்கள் வண்டியில் வேறு யாரும் இல்லை என்றால் ஏறிக் கொள்ளலாமா? எனக்கேட்கவே நாங்கள் வரவேற்றோம். இன்னும் ஒருத்தர் இருக்கிறாரே என நினைத்த போது ஒரு ஃப்ரென்ச்காரர் வந்தார். எங்கள் குழுவில் இவரைத் தவிர 3 ரஷ்யர்கள், ஒரு ஜர்மானியப் பெண், இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இரண்டு குஜராத்தைச் சேர்ந்த இந்தியர்கள், சென்னையில்

இருந்து மனோஹரனத் தவிர்த்து நாங்கள் 2 பேர், டாக்டர் நர்மதா, அவர் கணவர், மடிப்பாக்கத்தில் இருந்து, மைலாப்பூரைச் சேர்ந்த லலிதா என்ற பெண்மணி இருந்தனர். மற்றவர்கள் முறையே மதுரை, திருச்சி, நாகூர், பங்களூர், ஹைதராபாத், புனா, பாம்பே, குஜராத்தில் உள்ள புஜ் ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழர்கள். கேரளாவில் இருந்து

ஒருவரும், பாண்டிச்சேரியில் இருந்து ஒருவரும் வந்திருந்தனர்.பாண்டிச்சேரிக்காரரை முதல் மந்திரி திருரங்கசாமி அவர்கள் தன் செலவில் அனுப்பி வைத்துள்ளார். இவர் தன்

பொறுப்பில் ஒரு சிவாலயம் எழுப்பிக் கைலாச நாதர் கோவில் என்ற பெயரில் பராமரித்து

வருகிறார். அதற்கு திருரங்கசாமி அவர்களும் உதவியதோடு அல்லாமல் ட்ரஸ்டியாகவும்

இருந்து உதவி இருக்கிறார். இது பற்றி ஒரு தனிப் பதிவு போடவேண்டும் என அந்தப்

பெரியவரிடம் கேட்டிருக்கிறேன். சம்மதம் வந்ததும் எழுதுகிறேன்.

எல்லாரும் காரில் ஏறிக் கொண்டார்கள் என்று தெரிந்ததும், சாமான்கள் ஏற்றிய இரண்டு

ட்ரக்குகள் உள்பட மொத்தம் 14 வண்டிகள் தன் நீண்ட நெடும் பயணத்தை மேற்கொண்டன.

கைலை யாத்திரையின் முதல் நாள் பயணம் துவங்கியது. இன்னும் 4 நாள் போக வேண்டும். எல்லாம் மலைகளின் மேலேயே. எல்லாரும் கடவுளை வேண்டிக் கொண்டு புறப்பட்டோம். மிகக் குறுகிய தெருக்கள். ஒரு வண்டி வந்தால் மேலே போக இடமே இல்லை.

அதில் மிகச் சாமர்த்தியமாக டிரைவர்கள் ஓட்டுகிறார்கள். மலைப்பாதைதான். சற்றுப்

பயமாகத் தான் இருக்கிறது. கிட்டத் தட்ட 2,300 மீட்டர் உயரத்தில் பயணம் செய்து

கொண்டிருந்தோம். தூரத்திலும் கிட்டத்திலும் அருவிகள் தெரிந்தன என்றாலும் நேபாளத்தில்

மிக் அருகே பார்த்த மாதிரி இல்லை. சற்றுத் தூரம் வரை பசுமை, மலைகளிலும் சுற்றுப்

புறங்களிலும். போகப் போகக் குறைந்து கொண்டே வருகிறது. கீழே சுழித்துக் கொண்டு ஓடும் ஆறு கூடவே வருகிறது. கொஞ்சம் தப்பினாலும் அவ்வளவு தான். இதிலே எதிரே நிறைய லாரிகள், ட்ரக்குகள் வருகின்றன. அவற்றுக்கு விட இடமே இல்லை என்றாலும் வண்டிகள் நம்மைக் கடந்து போனதும் ஒரு நிம்மதி. என்றாலும் சற்றுத் தூரம் வரை ஊர் வந்ததால் ஒன்றும் தெரியவில்லை. மேலும் ஒரு வண்டி நின்றால் எல்லா வண்டிகளும் நின்று விட்டு என்ன ஏது என்று தெரிந்து கொண்டுதான் கிளம்புகிறார்கள். மற்ற வண்டிகள் பிரச்னை என்றால் எல்லாரும் கூடிப் போய்ச் சரி செய்கிறார்கள். சுமார் 5 அல்லது 6 கி.மீ போனதும்

வண்டிகள்நின்றன. என்ன என்று பார்த்தால் சீனக் கஸ்டம்ஸ் அலுவலகம்.. இங்கேயும் எல்லாரும்

தனித்தனியாகத் தங்கள் பாஸ்போர்ட்டைக் காட்டி விட்டுச் செல்ல வேண்டும். மறுபடி வரிசை,

மறுபடி,எங்கள் ஏஜெண்ட் வந்து அறிமுகம் செய்ய ஒவ்வொருவராக வந்து எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வண்டியில் ஏறினோம்.அந்தத் தெரு தாண்டித் திரும்பலாம் என்று போன போது எதிரே ஒரு லாரி வந்தது. சற்று நின்றால் பின்னாலேயே லாரிகளின் அணிவகுப்பு. நாங்கள் நின்றபோது நேரம் சீன நேரப்படி மாலை 4-00. ஆகி இருந்தது. சற்று நேரத்தில்

சரியாகிவிடும் போகலாம் என்றால் எல்லா டிரைவர்களும் வண்டியை நிறுத்தி விட்டுப் போய் உட்கார்ந்து கொண்டு விட்டார்கள். எங்களுக்கு என்னவென்றே புரியவில்லை. எங்கள் குழுவில் ஒருத்தர் முன்னால் போய் விசாரித்து விட்டு ஏதோ பாதை சரியில்லையோ
எனத் தெரிவித்தார். எல்லாருக்கும் கவலையும்.. பயமும் ஏற்பட்டது.

முதல்நாள் பயணத்திலேயே தடங்கலா என. டிரைவரைக் கேட்டால் அவர், "மாச்சி,மாச்சி,"

என்று ஏதேதோ சொல்கிறார்.குழப்பத்துடன் உட்கார்ந்திருந்த போது ஒரு வண்டி ஹிந்தியில்

எழுதப் பட்டு வரவே அதன் டிரைவரிடம் கேட்டோம். அவர் நட்புப் பாலம் அருகாமையில்

இருப்பதால் அதை மாலை 6 மணிக்குள் கடக்க வேண்டும் எனவும் இல்லை எனில்

மலைப்பாதையில் ஒரு இரவு பூராக் கழிக்க வேண்டி வரும் எனவும் ஆகவே மாலை 4-00 மணி முதல் 6-00 மணி வரை நேபாளம் போகிற வண்டிகளை விடுவார்கள் எனவும் 6-00 மணிக்கு அப்புறம் நீங்கள் போக முடியும் எனவும் சொன்னார். ஒரே லாரிகளின்

அணிவகுப்பு. நூற்றுக் கணக்கான லாரிகள் சீனாவில் இருந்து வருகிறது, நேபாளத்தில் இருந்து

சீனா போய்விட்டும் திரும்புகிறது. எல்லாம் ஏதேதோ சாமான்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள். அந்த அணி வகுப்பு சரியாக 6 மணிக்கு முடிந்து நாங்கள் "நியாலம்" கிளம்பினோம். மலைப்பாதை,வளைந்து வளைந்து போகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,750 மீட்டர் உயரத்தில் உள்ள "நியாலம்' என்ற ஊரில் தான் நாங்கள் முதல் நாள் தங்க வேண்டும்.

6 comments:

Hariharan # 03985177737685368452 said...

சென்னையிலிருந்தே ஏதேனும் டிராவல்ஸ் மூலம் பேக்கேஜ் டூராகச் சென்றீர்களா?

படிக்கையில் இமயமலை உச்சிக்குச் செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் வருகிறது.

சீன கஸ்டம்ஸ்...திபெத்...நேபாளம்...
இந்துமத புண்யத்தலம் கைலாயம், மானஸரோவர் பல அடுக்குகளைக் கடந்து சென்றால் தான் பார்க்கமுடியும் போலிருக்கிறது.

தி. ரா. ச.(T.R.C.) said...

கஷ்டத்தை மட்டும் எழுதாமல் பார்த்த இடங்களைப் பற்றி நிறைய எழுதுங்கள்.ரம்யமான இமயமலையில் பார்த்ததை விவரித்து எழுதுங்கள் நிறையபேர் படிக்க வருவார்கள்.
@பொற்கொடி உடம்பு தேவலாமா ?, ஆனாலும் இந்தப் போடு போடறயே மேடத்தை. ஸ்.எம்.ஸ்,போன் வந்தா திருப்பி பேசரதுன்னு ஒரு மரியாதை உண்டு. தெரியுமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாண்டிச்சேரிக்காரரை முதல் மந்திரி திரு ராமசாமி அவர்கள் தன் செலவில் அனுப்பி வைத்துள்ளார்//

திரு ரங்கசாமி என்று சொல்ல வந்தீர்களோ? :-))

//மேலும் ஒரு வண்டி நின்றால் எல்லா வண்டிகளும் நின்று விட்டு என்ன ஏது என்று தெரிந்து கொண்டுதான் கிளம்புகிறார்கள்//

அடியார்க்கு இரங்கும் சிவனடியார். தரிசிக்கச் செல்வதோ சிவனாரை! அதான் போல இந்த கூட்டு அன்பு :-)

archives சென்று முதலில் இருந்து படிக்கிறேன்.
மிக்க நன்றி கீதா மேடம்!

Geetha Sambasivam said...

ஹரிஹரன்,
சென்னையில் இருந்து தான் போனோம் என்றாலும், டெல்லி வரை நம் சொந்த வசதிக்கு ஏற்பப் போகலாம். டெல்லியில் இருந்து நாம் கட்டும் பணத்திற்கு ஏற்ப விமானம் மூலமோ ரெயில் மூலமோ காட்மாண்டு அழைத்துப் போகிறார்கள். சென்னையில் இருந்தும் கோரக்பூர் வரை ரெயிலில் போய்ப் பின் அங்கிருந்து காட்மாண்டு செல்லவும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். பல அடுக்குகள் தான். மிகவும் கஷ்டமான பயணம், அதனால்தான் கஷ்டத்தைப் பற்றியும் எழுதுகிறேன்.

Geetha Sambasivam said...

தி.ரா.ச.சார்,
நம்ம இந்தியப் பக்கம் இமயமலைப் பகுதியைப் போல இங்கு ரம்மியம் என்று சொல்ல முடியாது. பயங்கரமான அழகு என்று வேண்டுமானால் சொல்லலாம். மேலும் போகிறவர்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதில் உள்ள கஷ்டங்களை விவரிக்கிறேன். எத்தனை பேர் சிரமப்பட்டார்கள் தெரியுமா? அதெல்லாம் நான் ஓரளவு தவிர்த்துத் தான் வருகிறேன். அங்கு செல்லும் முறை தெரியாமல் போயும் மாட்டிக் கொள்ளக் கூடாது. கடைசியில் என்னுடைய அபிப்பிராயத்தை எழுதுகிறேன். படித்து விட்டுச் சொல்லுங்கள்.

Geetha Sambasivam said...

மன்னிக்கணும் கண்ணபிரான், ரங்கசாமி தான் ராமசாமி ஆகிவிட்டது. உடனே திருத்தி விடுகிறேன்.

அந்த மலைப் பாதையில் போனால்தான் தெரியும், ஓட்டுபவர்களுக்கு உள்ள சிரமமும், போகிறவர்கள் படும் அவஸ்தையும், அதனாலேயே அதிக எச்சரிக்கை.
மற்றபடி உங்கள் விமரிசனத்துக்கு நான் தான் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.