எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, October 10, 2006

40.ஓம் நமச்சிவாயா-11

நியாலத்தில் அன்று இரவு மட்டும் இல்லாமல் மறுநாள் முழுதும் தங்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். மறுநாளில் இருந்து மேலே மேலே உயரத்தில் போக வேண்டியதற்கு வேண்டியிருக்கும், ஆதலால் இந்த ஓய்வு. மிக ஆபத்தான வளைவுகள் கொண்ட பாதை. கொஞ்ச தூரம் வரை வீடுகள், கடைகள், மக்கள் நடமாட்டம். எங்கு பார்த்தாலும் தெருமுனைகளிலும், சற்று உயரமான இடங்களிலும் தோரணங்கள் கலர் கலராகத் தொங்கின. சில வீட்டு வாயில்களிலும் கோலம் போன்ற அமைப்புத் தெரிகிறது. கூடாரம் போன்ற அமைப்புக்களில் தோரணங்கள் கட்டப் பட்ட இடத்தை வண்டிகள் கடக்க நேர்ந்தால் பிரதட்சிணமாகச் செல்லுகின்றன. புத்த மத வழிபாட்டு இடம் என்கிறார்கள். எல்லாரும் வந்து அங்கே பிரதட்சிணம் செய்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறார்கள். நல்ல வேளையாக வெயில் இருந்தது. ஆகவே வண்டிகள் போய்க் கொண்டிருந்தன. வழியில் அருவிகள் வழக்கம் போல் குறுக்கிட்டன. ஒரு இடத்தில் மலை மேலிருந்து விழும் அருவி ரோட்டில் நேராக விழுவதால் அதன் வேகத்தாலும் அதன் தாரையாலும் வண்டிகள் ஓட்ட முடியாது என கான்கிரீட்டில் தூண்கள் எழுப்பி மேலே ஒரு கான்கிரீட்டால் ஆன பலகை போட்டும் அதை மீறிக் கொண்டு தண்ணீர் மிக வேகமாக விழுந்து கொண்டு இருந்தது.

ரோடா அது எல்லாம். எல்லாம் வண்டிகள் போய்ப்போய்ப் பழக்கத்தில் ஏற்பட்டவையாக இருந்தனவே தவிர ஒழுங்காகப் போடப்பட்ட மாதிரி இல்லை. வண்டியும் குதித்துக் குதித்துப் போனது. எல்லாரும் மேலேயும் கீழேயும் குதிக்க வேண்டி வந்தது, வண்டிக்குள்ளேயே. புழுதி பறக்கிறது. வாயை மூட மாஸ்க் கொடுத்திருந்தார்கள். கண்டிப்பாக வாயை மூடிக் கொள்ள வேண்டும். என்னதான் வண்டியின் ஜன்னல்கள் மூடி இருந்தாலும் புழுதி கொஞ்சம் உள்ளே வரத் தான் செய்கிறது. இம்மாதிரியே மேலே ஏறிக் கீழே இறங்கிச் சில சமயம் கீழ் மலையிலேயே சுற்ற வேண்டும். பின் சமவெளி. மறுபடி ஒரு மலை. இமயமலை அடுக்குத் தொடர். அதில் ஒவ்வொரு அடுக்கும் ஏறி, இறங்கி அந்தச் சமவெளி அல்லது பள்ளத்தாக்கைக் கடந்து, மறுபடி இன்னொரு மலை ஏறி, இறங்கி இப்படியே போய் அன்றிரவு 8-30 மணி அளவில் "நியாலம் ஹோட்டல்" அடைந்தோம். ஹோட்டலில் மாடியில் அறைகள். சாப்பிடும் இடம் கீழே. கழிப்பறை வசதி இருந்தாலும் அத்தனை பேருக்குப் போதாது. சமாளித்தோம்.

அன்றிரவு எல்லாரும் கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைக்கப் பட்டு எல்லாருக்கும் மறுபடி பயணத்தின் சிரமங்கள் பற்றி எடுத்துச் சொல்லப் பட்டது. மேலே போகப் போக ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் இருப்பதற்கும் ட்ராவல்ஸ்காரர்களே "Diamox" என்னும் மாத்திரை இருவேளையும் கொடுக்கிறார்கள். நம் மருத்துவர்களும் இதை ஆதரிக்கிறார்கள். மேலும் திட உணவு இல்லாவிட்டாலும் திரவ உணவு அதிகம் எடுத்துக் கொள்ளும்படியும் வற்புறுத்துகிறார்கள். இதெல்லாம் கட்டாயம் இவ்வளவு உயரம் பயணம் செய்யும்போது தெரிந்து கொள்ள வேண்டியவை, என்பதால் எழுதுகிறேன். மேலும் காலை "ப்ளாக் டீ"யுடன் எழுப்புவார்கள். நமக்கு அவ்வளவாக "ப்ளாக் டீ" பழக்கம் கிடையாது என்றாலும் அங்கே கட்டாயம் சாப்பிட வேண்டும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் தேவை என்கிறார்கள்.

அன்றுக் கூட்டுப் பிரார்த்தனை முடிந்து இரவு எல்லாரும் படுத்தோம். எல்லாருக்கும் கட்டில், மெத்தை, தலையணை, ரஜாய் முதலியன இருந்தது. என்றாலும் மேலே போகப் போக எப்படியோ தெரியாது. மறுநாள் காலை நாங்கள் எல்லாரும் காலை உணவுக்குக் கூடியபோது மலை மேல் ஏறும்போது தேவைப்படும் பொருட்கள் இல்லை என்றால் அங்கே வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டோம். எல்லாருக்கும் "RED BULL" என்ற பானம் வாங்கிக் கொள்ளும்படியும் சொன்னார்கள். கைலை பரிக்ரமா செய்யும் போது அது தேவைப்படும் என்றார்கள்.

கடையில் பொருட்கள் வாங்கப் போனால் விலையை அவர்கள் கால்குலேட்டரில் போடுவார்கள். நாம் கேட்கும் விலையை அதில் போட வேண்டும். இப்படிப் பேரம் நடந்து சாமான்கள் வாங்கிக் கொண்டு சீன தொலைபேசித் துறை மூலம் நடத்தப் படும் தொலைபேசியில் ஒரு நிமிஷத்துக்கு 5 யுவான் கொடுத்து யு.எஸ்ஸில் உள்ள பெண்ணிடமும், பையனிடமும் பேசினோம்.. இந்தியாவுக்கு 6 யுவான். ஒரு யுவான் இந்தியப் பணத்தில் 6ரூ. ஆகிறது.

வெந்நீர் எல்லாம் ஒரு ப்ளாஸ்டிக் மக்கில் கொடுப்பார்கள். அதிலேயே எல்லாம் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால் குளியல் எல்லாம் கிடையாது. அந்தக் குளிரில் தண்ணீரில் குளித்தால் விறைத்துத் தான் போகும். இருந்தாலும் சில துணிகளைத் துவைத்துக் கொண்டோம். மேலே போகப் போக எப்படியோ என்று. மதியச் சாப்பாடு தென்னிந்திய முறைப்படி சாம்பார், ரசம், சப்ஜி என்று இருந்தாலும் கூடவே ரொட்டியும் இருந்தது.

நியாலம் வருவதற்குள் சிலருக்கு ரொம்பவே முடியாமல் போய்விட்டது. அதில் எங்களுடன் வந்த டாக்டர் நர்மதாவும், SBI Retd. திரு தாரகராமன், திருமதி தாரகராமன் மற்றும் செந்தில் என்ற ஒரு இளைஞர் செவ்வாய் அன்று படுத்தவர்கள் எழுந்திருக்கவே இல்லை. சாப்பிடக் கூடவரவில்லை. பயணம் அவர்களை மிகவும் வாட்டி விட்டது. மேலும் இருவர் வந்த வண்டிகளும் ஒன்று டயர் பங்சர் ஆகித் தொந்தரவு கொடுத்தது. இன்னொருத்தருக்கு டயரே உருண்டு விட்டது. பின் எல்லாரும் நின்று சரி செய்து கொண்டு வந்தோம். மெக்கானிசமும் டிரைவர்கள் தெரிந்து வைத்திருப்பதால் வசதியாக இருக்கிறது. இல்லாவிட்டால் அந்த மலைக்காட்டில் என்ன செய்வது? மறுநாள் காலை "ப்ளாக் டீ"யுடன் எழுப்பினார்கள். டீ குடித்து ஓரளவு சுத்தம் செய்து கொண்டு தயார் ஆனோம்..இங்கே தான் கட்டிடம் போன்ற அமைப்பு உள்ள தங்கும் இடம். மற்ற இடங்களில் எல்லாம் (Mud House)களிமண்ணால் செய்யப் பட்ட சிறு அறைகள் தான். குளிர் தாங்கும் என்பதால் இந்த மாதிரியான அறைகள் தான் அங்கே பயணிகள் தங்கும் camp-ல் அதிகம் காணப்படுகிறது. காலை உணவு முடிந்து, மதியம் சாப்பாடும் அங்கேயே தயார் செய்து ஒரு வண்டியில் ஏற்றிப் பின் பாத்திரங்கள் சுத்தம் செய்து சமையல் அறை காலி செய்து பொருட்கள் ட்ரக்கில் ஏற்றப்பட்டு மறு நாள் பயணம் துவங்கியது. நியாலத்தில் இருந்து "சாகா" என்னும் ஊர் பிரம்மபுத்ரா நதிக்கரையில் உள்ளது அங்கே போய்த் தங்க வேண்டும். இங்கிருந்து தான் high altitude ஆரம்பிக்கிறது. எல்லாரும் மீண்டும் எச்சரிக்கப் பட்டோம். ஒரு விதமான எதிர்பார்ப்புடன் பயணம் துவங்கியது.

பி.கு: வேதாவுக்குச் சீக்கிரம் சீக்கிரம் எழுதுகிறேன் படிக்க முடியவில்லை எனக் குறை, திரு தி.ரா.ச. அவர்கள் பார்த்த இடங்கள் பற்றிச் சொல்லச் சொல்கிறார். இமயமலையின் இந்தப் பகுதி ஒன்று நீண்ட பள்ளத்தாக்காக வருகிறது. அல்லது அடுக்கடுக்கான மலைத் தொடர்களாக வருகிறது. ஆகவே பார்க்கும்படியான இடங்கள் எதுவும் இல்லை. சொன்னால் திபெத் மக்களின் வறுமை பற்றியும் மிகவும் பின் தங்கி இருப்பது பற்றியும் சொல்லலாம். . எனக்கு எழுத்துப் புதிது என்பதால் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாமல் எல்லாவற்றையும் எழுதிப் போரடிக்கிறேன் என நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களைத் தாராளமாகச் சொல்லுங்கள். மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன்.

6 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

வாயை மூட மாஸ்க் கொடுத்திருந்தார்கள். கண்டிப்பாக வாயை மூடிக் கொள்ள வேண்டும்.
நம்ப சார் அப்படியே இந்த அதிசயத்தை பார்த்து பரவசப்பட்டு ஆனந்தப்பட்டு இருப்பாரே.ஏதோ நம்பளாலே முடியாததை கேவலம் இந்த ட்ராவல்ஸ் காரன் பண்ணிட்டானேன்னு.
பயணம் நிமிடத்துக்கு நிமிடம் ஸஸ்பெந்சுடன் நல்லா போறது.போட்டோ எதுவும் இல்லையா.

Geetha Sambasivam said...

நான் பாட்டுக்கு ஃபோட்டோ போட முயற்சி செய்து எல்லாம் போயிட்டா என்ன செய்யறது? அதான், யாரையாவது வைத்துக் கொண்டு செய்யலாம், விஷப்பரிட்சை வேண்டாம்னு. கொஞ்சம் பொறுத்துக்குங்க. சீக்கிரம் ஆள் தேடறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

you please e'mail the photo to me i will try to upload for you madame.

மலைநாடான் said...

கீதா அம்மா!

மிக அருமையான ஒரு தொடர். இன்றுதான் படிக்கத்தொடங்கினேன். ஓரே அமர்வில் 11 பகுதிகளையும் படித்துவிட்டென். மிகச்சுவாரச்சியமாக எழுதுகிறீர்கள். இக்கைலாய யாத்திரை குறித்து வேறு சிலர் எழுதிய புத்தகங்களும், ஒருத்தரின் வீடியோப்பதிவும் பார்த்திருந்த போதும், இன்னமும் அறிய வேண்டும் எனும் ஆவல் உங்கள் தொடரிலும் கிடைக்கிறது. மிக நல்ல முயற்சி. தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

மேலும் படங்கள் பதிவு செய்ய கீழேயுள்ள சுட்டிக்குச் செல்லுங்கள். மிக இலகுவாக வலையேற்றக் கூடிய முறைகொண்ட தளமிது.

http://i51.photobucket.com

முடியுமாயின் எனக்கு தயவுசெய்து ஒரு மடலிடுங்கள்.

malainaadaan@hotmail.com

தி. ரா. ச.(T.R.C.) said...

எனக்கு எழுத்துப் புதிது என்பதால் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாமல் எல்லாவற்றையும் எழுதிப் போரடிக்கிறேன் என நினைக்கிறேன்.

மக்களே அப்படியே நம்பி விடுங்கள்.பொற்கொடி நீயும் தான்.கேழ்வரகுலே நெய் வருதுன்ன கேட்பவர்க்கு புத்தி எங்கே போச்சுன்னு கேட்கக்கூடாது.

EarthlyTraveler said...

ithanai vivarangalum ezhudhuvadhu padikka migavum arumaiyaga ulladhu. ungal ezhuthu nadai miga yedhartham.thordhu padikirom--SKM