எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, October 22, 2006

43. ஓம் நமச்சிவாயா-14

திரு தி.ரா.ச. அவர்களுக்கு நான் ரொம்ப பயமுறுத்துகிறேன் என்று அபிப்பிராயம். பயமுறுத்தவெல்லாம் இல்லை. நடந்த நிகழ்வுகளை எனக்குத் தெரிந்த வரை அப்படியே கொடுக்கிறேன். இதிலே என்னோட மனநிலையும், என் கணவரோட மனநிலையும் தான் சொல்லி வருகிறேன்னு நினைக்கிறேன். எங்களோட தனிப் பட்ட அபிப்பிராயத்தினால் யாரும் பாதிக்கப் படாமல் இனிமேல் எழுதலாம்னாலும் சில நிகழ்வுகளைக் கட்டாயமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. முத்தமிழ்க் குழுமத்தில் சிவசங்கருக்கு எல்லாருமேவா உடல்நலமில்லாமல் போனார்கள்? உங்கள் குழுவில் ஆரோக்கியமாய் யாருமே இல்லையா? என்று கேள்வி. ரொம்பவே உடல் நலமில்லாமல் போனது டாக்டர் திருமதி நர்மதாவும், திரு கோபாலகிருஷ்ணனும் தான். திரு கோபாலகிருஷ்ணனைத் திரும்ப அனுப்பி விட்டார்கள். துணைக்கு ஆளோடு, அவர் வீட்டுக்கும் தகவல் கொடுத்து விட்டார்கள். திருமதி நர்மதா கைலை வரை வந்தார். மற்றவர்களுக்கு அங்கங்கே சில சில சின்னச் சின்னப் பிரச்னைகளும், உடல்நலக் குறைவும் ஏற்படத் தான் செய்தது. இதை மறைப்பதற்கோ மறுப்பதற்கோ இல்லை. முழு ஆரோக்கியத்துடன் இருந்தவர்களில் பதிவு 13-ல் எழுதிய மூன்று பெண்மணிகளைத் தவிர மதுரையில் இருந்து வந்த அலமேலு என்பவர், மைலாப்பூரில் இருந்து வந்த லலிதா, திருச்சியில் இருந்து வந்த தம்பதியர், திரு மனோஹர், எங்கள் குழுத் தலைவரான திரு மனோஹர் 9-வது முறையாகக் கைலை வருகிறார். இவர் குளிருக்கான ஆடைகள் கூட அணியவில்லை. பாண்டிச்சேரியில் இருந்து வந்த பெரியவர், டாக்டரின் கணவர்,(இவர் 73 வயது ஆனவர்), பங்களூரில் இருந்து வந்த பெரியவர் சங்கரன், இன்னும் சிலர் இருந்தார்கள். ஆனால் குளிர் எல்லாரையும் வாட்டியது என்பதே உண்மை. சிலர் சாப்பாடு பிடிக்காமல் அவதிப் பட்டார்கள். வட இந்திய உணவுமுறை பழக்கம் இல்லாமல் சிலருக்குப் பிடிக்கவில்லை. இதையும் மறுக்க முடியாது.

முத்தமிழ்க்குழுமத்தில் திரு ரமணன் இறைவனின் நினைவுக்கு முன்னால் எல்லாம் துச்சம் என்றும் தான் கைலை சென்றபோது அதிகம் சிரமப் படவில்லை என்றும் உடல் என்பதே நினைவில் இல்லை என்றும் கூறுகிறார். அத்தகைய நிலை எங்களில் யாருக்கும் இல்லை என்பது நிஜம். மற்றபடி பக்தியில் யாரும் பின்வாங்கவில்லை. எப்படியாவது போய்க் கைலையைத் தரிசனம் செய்யவேண்டும் என்ற பேராவலுடன் தான் எல்லாரும் எதையும் வாய்விட்டுச் சொல்லாமல் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இப்போது இந்த 2006-ல் போவதற்கே இவ்வளவு சிரமம் என்றால் முன்னாளில் எல்லாம் எப்படிப் போயிருப்பார்கள்? நினக்கவே முன்னோர்களைக் கை எடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.

இப்போது சிவசங்கரின் வேண்டுகோளுக்கு இணங்க பிரம்மபுத்திராவைப் பற்றிச் சிலவரிகள். பாரத நாட்டில் நதிகளைப் பெண் உருவில்தான் வணங்கி வருகிறார்கள். பிரம்மபுத்ராவும், சோன் நதியும் விலக்கு. சிலர் மஹாநதியும் ஆண்நதி என்கிறார்கள். அது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. இந்த பிரம்மபுத்ராவைக் கடந்து தான் நாங்கள் சாகாவுக்கு வந்திருந்தோம். பாலம் இருந்தது. இருந்தாலும் குறிப்பிட்ட இடங்களில் சற்றுத் தண்ணீரும் இருந்தது. ஆனால் 2004 வரை இந்தப் பாலம் கூடக் கிடையாதாம். பெரிய படகு அல்லது கட்டுமரங்களில் முன்னாலேயே தயார் செய்து வைத்திருப்பார்களாம். அதில் வரும் வண்டிகளைச் சங்கிலிகளால் கட்டி விட்டுப் பின் அக்கரையில் இருந்து இழுப்பார்களாம். அப்படித் தான் போய் வந்திருக்கிறார்கள். அப்படிப்பார்க்கும்போது நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லவேண்டும்.

பிரம்மாவின் புதல்வன் என்பதால் "பிரம்மபுத்ரா" என்று பெயர் என்று சொல்கிறார்கள். ஆனால் திபெத்தியர்கள் இதை அழைப்பது "சான்போ" என்ற பெயரிலோ "சம்போ" என்ற பெயரிலோ தான். இங்கே நதியின் அகலம் குறைவுதான் என்றாலும் ஆழம் மிகவும் அதிகம். 400 அடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். அஸ்ஸாமில் எப்படி இருக்கும் என்று சிவசங்கர்தான் சொல்லவேண்டும். வங்காளத்தின் துயரம் என்று அழைக்கப் படும் இந்த நதி இங்கே சற்று அடங்கித் தான் ஓடுகிறது என்றே சொல்ல வேண்டும். கடல் மட்டத்துக்கு மேல் 8,000 மீட்டர் உயரத்தில் இருக்கும் சாகாவுக்கு முன்னால் சிலப் பனிமலைச் சிகரங்கள் பாதுக்காக்கப் பட்ட பகுதி என்று சொல்கிறார்கள். இங்கே ராணுவம் அந்தப் பகுதியைப் பாதுகாக்கிறது என்கிறார்கள். உறைபனி ஏரிகள் அங்கே இருக்கின்றனவாம். சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் சொல்கிறார்கள். சாகாவுக்குச் சற்று முன்னால் கிழக்கே பிரியும் சாலை திபெத்தின் தலைநகரான "லாஸா"வுக்குப் போவதாகவும் அடுத்த ட்ரெக்கிங் இதை முடித்து விட்டு அக்டோபரில் லாசாவுக்குப் போவதுதான் என்றும் ட்ராவல்ஸ்காரர்கள் மூலம் அறிந்து கொண்டோம்.

பொதுவாக திபெத்திய மக்கள் ஏழையாகவும் அறியாமையிலும் இருக்கிறார்கள். இவை தேவை இல்லை என்றே எழுதாமல் விட்டேன். என்றாலும் சிலர் பார்த்தது, கேட்டது என்று எழுதச் சொல்வதினால் எழுதுகிறேன். தினசரி வாழ்வுக்கே அவர்கள் நம்பி இருப்பது காட்டெருமைகளைத்தான். செம்மறி ஆடுகளையும், காட்டெருமைகளையும் தேவைப்படும்போது விற்றுக் கிடைக்கும் பணத்தில்தான் வாழ்க்கை ஆதாரமே இருக்கிறது.காட்டெருமைகள் தானே போய் மேய்ந்துவிட்டு வீடு திரும்புகின்றன. சுமை தூக்குவதும் அவற்றின் வேலை. இது மாதிரிச் சுற்றுலாப் பயணிகள் வரும் நேரம் அவர்களுக்கு சுமை தூக்க வாடகைக்குக் காட்டெருமைகள், குதிரைகளைக் கொடுத்துவிட்டுப் பணம் சம்பாதிக்கிறார்கள். வழிபாட்டுக்கு இருக்கவே இருக்கிறார் கைலாசபதி. காணும் கற்களில் எல்லாம் கைலை நாதனைக் காணும் திபெத்தியர்கள் அவற்றைக் கோபுரம்போல அடுக்கிக் கைலைநாதனாக வழிபடுகிறார்கள்.கொம்புகளுடன் கூடியக் காட்டெருமை முகத்தையும் வழிபடுகிறார்கள். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போவது என்றால் ட்ராக்டர் போன்ற ஒரு வாகனம், குடும்பமே அதில் எல்லா சாமான், செட்டுக்களுடனும் போகிறது. செய்திப் பரிமாற்றம் குதிரைகள் மூலம்தான். நாட்டுப் பகுதியில் இருந்து வரும் ஊழியர்கள் குதிரைக் காரர்களிடம் கொடுக்கும் செய்தியை அவர்கள் அங்கே இந்த மாதிரி மலைக்காடுகளில் வசிக்கும் கொஞ்சநஞ்சக் குடிமக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். முன்னேற்றம் என்பதே எந்த விதத்திலும் இல்லை. குழந்தைகளுக்குப் படிப்பு என்பதே கிடையாது. எதிர்காலம்? இந்தக்காட்டில்தான். குதிரைகள், காட்டெருமைகள் மூலம் என்ன கிடைக்கிறதோ அதுதான். மின்சாரம் அறவே கிடையாது. ஒரு குறிப்பிட்ட இடங்களில் அதுவும் அங்கே அரசு அலுவலகம் இருந்தால் ஜெனெரேட்டர் மூலம் மின்சாரம் இருக்கும். பகலில் அதுவும் கிடையாது. ஆனால் இந்த மலைமக்கள் நடக்கும் வேகம் இருக்கிறதே? வியக்கவைக்கிறது. சாகாவுக்கு முன்னால் எங்கள் வண்டி ஒரு இடத்தைக் கடக்கும்போது ஒரு குடும்பம் முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தது. நாங்கள் சாகா போய்த் தங்குமிடம் போகும்போது அந்தக் குடும்பம் ஊருக்குள் நுழைந்து விட்டது. அவ்வளவு வேகம் நடையில். பெண்கள் ஜிப்ஸி போல உடை அலங்காரம் செய்து கொள்கிறார்கள். இவர்களின் நிலை எப்போது உயரும்? இவர்கள் நம்மிடம் பிச்சை கேட்டு வாங்கும் பொருட்கள் எத்தனை நாளுக்குத் தாங்கும்? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

5 comments:

Porkodi (பொற்கொடி) said...

இது போல நம் நாட்டிலேயே நிறைய பேர் இருக்காங்களே... கிராமங்கள் எத்தனையோ இன்னும் இருட்டுல இருக்கு... ஆமா, இந்த எருமை எல்லாம் என்னத்த மேயும், அதான் மரம் செடி எல்லாம் கிடையாதே?

Geetha Sambasivam said...

வேதா, உண்மையிலேயே அந்தக் காலத்தில் போய்ட்டு வந்தவங்க ரொம்பவே சிறந்தவர்கள்தான். இப்போவே இத்தனை கஷ்டம்னால் அப்போ எல்லாம் எப்படி இருந்திருக்கும்? நினைச்சுப் பார்க்கவே முடியலை.

Geetha Sambasivam said...

போர்க்கொடி, ஒருவகையான புல் போன்ற செடிகள் சில இடங்களில் இருக்கின்றன. அவற்றைச் சாப்பிடும்னு நினைக்கிறேன். அங்கங்கே கூட்டம் கூட்டமாக மாடுகள், குதிரைகள் பார்க்க முடிகிறது. பழகின குதிரைகள் தவிர காட்டில் யதேச்சையாகவும் குதிரைகள் திரிகின்றன.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இப்போது இந்த 2006-ல் போவதற்கே இவ்வளவு சிரமம் என்றால் முன்னாளில் எல்லாம் எப்படிப் போயிருப்பார்கள்? நினக்கவே முன்னோர்களைக் கை எடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது//

உண்மை தான் கீதா மேடம்; அப்பர் சுவாமிகள் ஊர்ந்தும், காரைக்கால் அம்மையார் தலையால் தேய்ந்தும், அப்பப்பா, இன்னும் பலரின் கயிலை யாத்திரை எவ்வளவு கடினமாக இருந்ததோ?

உங்களுக்கு அவர்கள் செய்த யாத்திரை செயற்கரியதாகத் / கடினமாகத் தோன்றுகிறது.

எங்களுக்கு, நீங்கள் செய்யும் யாத்திரை செயற்கரியதாகத் / கடினமாகத் தோன்றுகிறது :-))

ஆகவே நீங்களும் சாதனையாளர்கள் தான், எங்கள் பார்வைக்கு!

Porkodi (பொற்கொடி) said...

அதாவது கீதா பாட்டி காரைக்கால் அம்மையார் மாதிரினு சொல்ல வர்றாரு :)