எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, November 13, 2006

ஓம் நமச்சிவாயா -18

மானசரோவரில் பூஜை, யாகம் நடத்த நாங்கள் எல்லாரும் தயார் ஆனாலும் யார் செய்யப்

போகிறார்கள் என்பதே ஒரு பெரிய விஷயமாக விவாதிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. என் கணவரும்,எங்களோட காரில் பிரயாணம் செய்யும் திரு சங்கரனும் முன்னோர் வழிபாட்டை முதலில் முடிக்க வேண்டும் என்று முடித்துக் கொள்ள திரு சங்கரனிடம் எல்லாரும் வந்து தங்களுக்கும் உதவும்படிக் கேட்க அவரும் தன்னால் முடிந்த உதவியைச் செய்தார். அவரையே ஹோமம் செய்யச் சொல்லலாம் என்று நாங்கள் விரும்பியபோது தனக்கு அதன் சட்ட திட்டங்கள் சரிவரத் தெரியாது என்பதால் முடியாது என்று அவர் மறுத்தார். பின் எங்களுடன் வந்திருந்த சமையல் குழுவில் உள்ள "அர்ஜுன்" என்ற நபர் தான் ஹோமம் செய்வதாகக் கூறி முன் வந்தார். அவருக்கும் முறைப்படிச் செய்யத் தெரியவில்லை. பிறகு எல்லாரும்சேர்ந்து ம்ருத்யுஞ்சய ஸ்தோத்திரத்தை உரக்க 108 முறை கூறி ஹோமத்துக்கு என்று கொண்டு போன பொருட்களை அதில் போட்டு ஒரு வழியாக ஒப்பேற்றினோம். பின்னர் தம்பதி பூஜையும் செய்ய ஆள் இல்லாத காரணத்தால் நாங்கள் தேர்ந்தெடுத்த தம்பதிக்குக் கால் அலம்பி நமஸ்கரித்துக் கொண்டு போன பொருட்களை வைத்துக் கொடுத்தோம். மற்றவர்களும்

அப்படியே செய்தார்கள். தம்பதி பூஜைக்குக் கிட்டத் தட்டக் கல்யாணம் போலவே திருமாங்கல்ய

தாரணம் செய்து, மெட்டி அணிவித்து எல்லாம் முறைப்படி செய்ய வேண்டும். அப்படி

இல்லாமல் போனது கொஞ்சம் வருத்தம் தந்தது. பின் மானசரோவரில் தண்ணீர் எடுத்துக்

கொள்ள வேண்டி எல்லாரும் செல்லலாம் என்ற போது "கைலை பரிக்ரமா" முடித்துப் பின் திரும்பி வரும்போது மறுபடி மானசரோவர் வருவோம். அப்போது எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். ச ரினு எல்லாரும் சாப்பிடப் போனோம். அன்று பெரிய விருந்து

கொடுக்க வேண்டும் என்று விதவிதமான தித்திப்பு வகைகள், சாத வகைகள், காய், கனி

வகைகள் என்று நிரம்பி இருந்தது, மானசரோவரில் தொலைபேசி வசதி கிடையாது. ஆகவே

வீட்டுக்குத் தொலைபேச விரும்புபவர்கள் தார்ச்சனில் போய்ப் பேசலாம் என்று

சொன்னார்கள். சாப்பிட்டு விட்டு உடனேயே எல்லாரும் கைலாஷ் பரிக்ரமாவிற்குத் தயார் ஆனோம்.

அங்கிருந்து சுமார் 40 மைல் தூரத்தில் உள்ள "தார்ச்சன்" என்ற Base Camp ற்குப் போய்ச்

சேர்ந்தோம். அவரவர் வந்த காரிலேயே அந்தப் பிரயாணம் நடைபெற்றது. தார்ச்சனில்

அறைகள் நன்றாகவே இருந்தன. என்றாலும் இங்கேயும் கழிப்பிடம் என்பது மிக மோசமான

ஒன்றாகவே இருந்தது. பொதுவாகவே நியாலம் தாண்டி சாகா வந்ததில் இருந்தே இந்தத்

தொல்லை இருக்கிறது.அநேகமாய்த் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் தான். பெண்கள்

தனியாக வந்தால் கூட்டமாகப் போய் வருவது நலம். தார்ச்சன் காம்ப்பிற்கு மாலை 5-30 அளவில் போய்ச் சேர்ந்தோம். போய் அறையில் சாமான்களை வைத்து விட்டுத் தொலைபேசி இருக்கும் இடம் தேடிப்போனோம். அப்போது எங்களுடன் பிரயாணம் செய்யும்

திரு வெங்கடேசன் தன் மனைவியிடம் தெரிவிக்காமல் வெளியே எங்கேயோ இன்னொரு

நண்பருடன் போய் வர நேரம் ஆகவே சிறு குழப்பம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் தொலைபேசச் செல்லும்போது அவர்களை வழியில் பார்த்து விவரம் சொல்லிச் சீக்கிரம் போகும்படி சொல்லிவிட்டுத் தொலை பேசினோம். இது சீன அரசால் நியமிக்கப்பட்ட தொலைபேசியகம் என்பதால் கட்டணம் ஒரு நிமிஷத்திற்கு 5 யுவான் மட்டும் வாங்கிக் கொண்டு பேச அனுமதித்தார்கள். இந்தியாவுக்கு என்றால் 6 யுவான் வாங்குகிறார்கள். பிறகு அறைக்கு

வந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்து மறுநாள் காலை நாங்கள் எல்லாரும் காலை உணவு முடித்து

முதல் நாள் "பரிக்ரமா"விற்குத் தயார் ஆனோம். தார்ச்சன் காம்பில் இருந்து சற்றுத் தூரம் வரை காரில் போய் எங்கே பரிக்ரமா ஆரம்பிக்குமோ அங்கே இறங்கிக் கொள்ளும்படி ஏற்பாடு

செய்யப்பட்டிருந்தது. எல்லாரும் காரில் ஏறிக்கொண்டோம். போகும்வழியில் ஒரு இடத்தில் இருந்து கூட்டமாகச் சில குதிரைகளும், காட்டெருமைகளும், அவற்றோடு சில ஆட்களும் வந்து

கொண்டிருந்தார்கள்,. அவர்கள் எங்களுக்காகத் தான் வருகிறார்கள் என்று புரிந்து கொண்டோம்.

அரை மணி நேரத்தில் ஒரு பெரிய ஆறு தெரிந்தது. அதுதான் "வைதருணி நதி" என்றும் இதைக் கடந்து தான் செல்லவேண்டி இருக்கும் என்று பேசிக் கொண்டார்கள். ஆற்றங்கரையில்

ஒரு இடத்தில் முக்கோணமாகக் கோபுரம் போல் கட்டி இருந்தது. கற்களாலும்,தோரணங்களாலும்

திபெத்திய முறைப்படி அலங்கரிக்கப் பட்ட அதற்கு முன்னால் எல்லா வண்டிகளும்

நிற்கவே எல்லாரும் இறங்கினார்கள். நாங்களும் இறங்கினோம். அந்தக் கோபுரத்தின் நடுவில் சிறிய ஒரு துவாரம் தெரிந்தது. எல்லாரையும் அதற்குள் போய் வருமாறு கூறினார்கள். எல்லாரும் அதற்குள் போய் வந்தோம். அது "யமத்துவாரம்" என்றும் இந்த இடத்திற்கு "யமஸ்தல்" என்று பெயர் என்றும் தெரிந்து கொண்டோம். அந்தத் துவாரத்திற்குள் போய் வருவது யமலோகத்திற்குள் போய் வருவது போல் இருக்குமோ என்னமோ

என்று நினைத்துக் கொண்டோம். பிறகு அங்கிருந்து இன்னும் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு பெரிய சமவெளிக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நாங்கள் போன சற்று நேரத்துக்கு எல்லாம் குதிரைகள் வந்து சேர்ந்தன. எல்லாரையும் நம்பர் படி வரிசையாக நிற்கச் சொன்னார்கள். முதலில் எல்லாருக்கும் உதவி ஆள் தேர்வு நடந்தது. ஆட்கள் பெயரை எழுதிப் போட்டுக் குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. எங்கள் முறை வந்தது. என் கணவருக்கு ஒரு

பெண்ணும், எனக்கு ஒரு ஆளும் தேர்வானார்கள். எனக்கு நியமிக்கப் பட்ட ஆள்

தேர்வானதும் என்னோட பையை வாங்கிக் கொண்டு எங்கே போனான் என்றே தெரியாமல்

காணாமல் போனான். என் கணவரின் உதவிக்கு வந்த பெண்ணோ அவர் பையை வாங்கிக்

கொண்டு அவர் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் குதிரைத் தேர்வும்

நடைப்பெற்றது. குதிரைகள் என்றால் குதிரைகள். காட்டில் இஷ்டத்துக்குச் சாப்பிட்டு வளர்ந்த

குதிரைகள். திபெத்திய மொழி மட்டுமே தெரிந்தவை. இந்தி கூடப் புரியாது. இங்கே நம் நாட்டில் கேதார்நாத் மற்றும் அமர்நாத்தில் பிரயாணத்திற்கு மட்டக் குதிரைகள் என்னும் PONY தான் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவை அப்படி இல்லை. அவற்றின் வாலிற்கே தனியாக வாரிப் பின்னி அலங்காரம் எல்லாம் செய்து வைத்திருந்தார்கள். குதிரையின்

வாலின் நீளம் நம்மைப் பொறாமைப் படவைக்கிறது. அவ்வளவு நீளமான வால். குதிரைத் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் ஒவ்வொருவராகக் குதிரையில் உதவி ஆளின் உதவியுடனும், குதிரைக்காரர்கள் உதவியுடனும் ஏறிக் கொண்டிருந்தார்கள். எங்கள் முறையும் வந்தது. என் நம்பர் முன்னால் இருந்தாலும் என் கணவர் எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த காரணத்தால்

அவருக்கு முதலில் குதிரைத் தேர்வு நடந்தது. ஒரு பெண் குதிரைக்காரியும் அவள் குதிரையும் தேர்வானது. உடனேயே அந்தக் குதிரைக்காரி என் கண்ணெதிரிலேயே என் கணவரைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினாள். அவர், இரு, இரு, என் மனைவியும் வரட்டும்," என்று சைகை செய்கிறார். அவள் அதைக் கவனிக்காமல் எங்கேயோ அவரைக் கிட்டத் தட்ட இழுத்துக்

கொண்டு ஓடினாள். நான் திகைத்து நின்றேன். என் பக்கம் என்னோட உதவி ஆள் கூட இல்லை. எங்கே இருக்கிறானோ தேட வேண்டும். என்னோட முறையும் வந்தது,

குதிரையும் தேர்வானது. எனக்கும் ஒரு பெண் தான் வந்தாள் குதிரைச் சொந்தக்காரியாக. முகம் முழுக்க மூடிக் கொண்டு இரு கண்கள் மட்டுமே தெரிந்தன. அவளோடகண்களையும் அவள்

முகத்தை மூடிக் கொண்ட துணியின் நிறத்தையும் வைத்துத் தான் அடையாளம் கண்டு பிடிக்க

வேண்டும். அவர்கள் பெயர் எழுதின சீட்டு ஒன்று நம்மிடமும், குதிரைக்காரர்களிடமும்

கொடுக்கிறார்கள். வெறும் காகிதத்தால் ஆன அந்தச் சீட்டை நாம் பத்திரமாக வைத்துக் கொள்ள

வேண்டும். என்னோட குதிரைக்காரி என்னை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டுத் தான்

போய்க் குதிரையைக் கொண்டு வந்தாள், குதிரையின் உயரம், நீளம், அதன் நிறம், வாளிப்பு

எல்லாம் பார்த்தால் சாட்சாத் தேசிங்கு ராஜா இம்மாதிரிக் குதிரையைத் தான் அடக்கி

இருப்பானோ, ராணி லட்சுமி பாய் இம்மாதிரிக் குதிரையில் தான் சண்டை போடப் போர்க்களத்துக்குப் போயிருப்பாளோ, ராணி மங்கம்மாவிடம் இம்மாதிரிக் குதிரைப் படை இருந்திருக்குமோ என்றெல்லாம் தோன்றியது. என்னோட இந்த அபார சரித்திர அறிவைப் பத்தி ஏதும் தெரியாத அந்தப் பெண் என்னைக் குதிரையில் ஏறி உட்காரச் சொன்னாள். நானோ, " இவர் எங்கே போனார்?" என்ற கவலையில் மூழ்கி அவளிடம், "என் கணவர் வரட்டும்." என்று ஜாடை காட்டினேன். குதிரை கனைத்தது.

2 comments:

EarthlyTraveler said...

மிக மிக அழகாக எழுதுகிறீர்கள். அனைத்து பதிவுகளும் படித்தேன். எப்படி இவ்வளவும் நினைவில் வைத்து எழுதுகிறீர்கள்?கையோடு நோட்புக் கொண்டு போய் அங்கங்கே எழுதி வைத்துக் கொண்டீர்களா?ஒவ்வொரு விவரமும் அழகாகக் கூறியுள்ளீர்கள்.--SKM

Geetha Sambasivam said...

அதெல்லாம் எழுதி வச்சுக்கிற பழக்கம் படிக்கிற நாளிலேயே இல்லை. இப்போ எப்படி வரும்? அந்த மாதிரி நல்ல பழக்கம் எல்லாம் கிடையாது. ஹிஹிஹி, என்னோட ஞாபகசக்தியைப் பத்தி நிறையப் பேர் சொல்லிட்டாங்க, கஷ்டம் என்னன்னா, போன ஜென்மத்து ஞாபகம் கூடச் சில சமயம் வந்துடுதுன்னு என் கணவர் பயப்படறார். அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. :D