எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, February 23, 2007

32. ஓம் நமச்சிவாயா

கண்டகி நதிக்கரையில் உள்ள "முக்திநாத்" க்ஷேத்திரம் இமயமலைத் தொடரான தவளகிரிப் பிராந்தியத்தில் உள்ளது. கண்டகி உற்பத்தி ஆகும் தாமோதர் குண்டத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் இருக்கும் இது கடல் மட்டத்தில் இருந்து 4,000 மீட்டர் உயரத்தில் உள்ளது. எங்கள் விமானம் கோவிலுக்குச் சற்றுக் கிட்டேயே இறங்கியது. அங்கிருந்து முக்திநாத் ஊர் கீழே ஒரு ஆயிரம் அடி தள்ளி இருக்கிறது. ஊரில் இருந்து வரும் வழியில் கூட ஒரு ஹெலிகாப்டர் விமானத் தளம் இருக்கிறது. அங்கேயும் ஒரு
ஹெலிகாப்டர் வந்து நின்று அதில் இருந்து சிலர் இறங்கி மேலே வந்தார்கள். அந்த ஹெலிகாப்டரில் ஐந்து பேர்தான் பயணம் செய்யலாம் எங்களுடையது பெரியது என்பதால் சற்று மேலேயே வந்து கிட்டத்திலே உள்ள இறங்கும் தளத்தில் இறங்கியது.இன்னும் சிலர் இன்னும் கீழே
இருந்து குதிரையின் மூலமும் வந்து கொண்டிருந்தார்கள். முக்திநாத் ஊருக்கு மேலே சுமார் 500 அடி உயரத்தில் அமைந்த இந்தத் திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார் போன்றோர் மங்களாசாஸனம் செய்திருக்கும் இந்தக் கோயிலில் கருவறையில் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு சேவை சாதிக்கிறார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அமர்ந்திருக்கும் பெருமாளின் அழகைக்
காணக் கண் கோடி வேண்டும். பக்கத்திலேயே கையைக் கூப்பிக் கொண்டு
ஆழ்வார் ஒருத்தர். யார் அவர் என்று நாம் கேட்பது அங்கே பூஜை செய்யும் நேபாளிப் பெண்ணிற்குப் புரியவில்லை. ஆம், அங்கே பூஜை செய்வது நேபாளப் பெண்கள்தான். ராமானுஜர் என்று ஒருத்தரும் இல்லை நம்மாழ்வார் என்று ஒருத்தரும் கூறினார்கள். கடைசியில் அது யார் என்று தெரியாமலேயே தரிசனம் செய்தோம். இங்கே தமிழ்நாட்டுப் பெருமாள் கோவில் போல் அங்கேயும் தீர்த்தம், சடாரி உண்டு. எல்லாரும் தாங்கள் வாங்கிய முத்து, மணி, பவள மாலைகளைப் பெருமாள் பாதத்தில்
வைத்துத் தரச்சொல்ல அந்தப் பெண்ணும் அப்படியே வைத்துக் கொடுத்தார்.

குளிப்பவர்கள் குளித்ததும் உடை மாற்ற வசதியாக அறைகள் உள்ளன. ஆனால் அந்த நடுக்கும் குளிரில் குளிப்பது எப்படி? அதுவும் நாங்கள் தரிசனம் செய்யும்போதே திடீரென மழை வரவே எங்கள் ஹெலிகாப்டரில் கூடவே வரும் உதவியாளர் எங்களை அவசரப் படுத்த ஆரம்பித்தார். ஆகவே தரிசனமே முண்டி அடித்துக் கொண்டு பார்க்க வேண்டி வந்தது. கோவில் புத்த மதப் படி "பகோடா' என்னும் முறையில் கட்டப் பட்டிருந்தது. இதன் ஸ்தல வரலாறு ;தெரியவில்லை, கொஞ்சம் வருத்தமாய்த் தான் இருந்தது.

பின் அங்கிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள மலைப்பகுதிக்கு எல்லாரும் போனார்கள். என்னவென்று விசாரித்தால் அன்னை இங்கே ஜ்வாலமுகி"யாகக் காட்சி அளிப்பதாய்ச் சொன்னார்கள். அதற்குள் எங்கள் உதவியாளரும் ரொம்பவே அவசரப் படுத்தினார். அங்கே உள்ள விநாயகர், அனுமன் எல்லாரையும் அவசரமாய்ப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு நாங்களும் அங்கே போனோம். நிறையப் பேருக்கு இங்கே இந்தக் கோயில் இருப்பது தெரியாதாம். நாங்கள் ஏற்கெனவே தெரிந்து இருந்ததால் போனோம்.

முக்திநாத் மலைப்பாதையில் இருந்து சற்று விலகி இருந்தாலும்
திரும்பவும் அங்கேயும் வர முடியும். நேபாளிகள் இந்தத் தேவியைப்
"பகுளாமுகி" என்று சொல்கிறார்கள். இங்கேயும் பெண்கள்தான் பூஜை
செய்கிறார்கள். குகை போன்ற அமைப்புள்ள பகுதியில் சற்றுக் கீழே
இறங்கினோமானால் மேலே ஒரு பெரிய மேடையில் அன்னையின் திரு உருவம் காட்சி அளிக்கக் கீழே வலைக் கதவு போட்ட ஒரு ஜன்னல் போன்ற அமைப்பு. அதன் அருகில் உட்கார்ந்து கீழே குனிந்து பார்த்தோமானால் காதில் அருவியாகப் பாய்ந்து ஓடும் நதியின் ஓசையும் அதற்கு நடுவில் ஒரு நீல நிற ஜ்வாலையும் தென்படுகிறது. அந்த ஜ்வாலையைத் தான் ஜ்வாலாமுகி என்றும், அருவியின் சத்தம் கேட்பதால் பகுளாமுகி என்றும் சொல்கிறார்கள். அன்னைக்குப் பூஜை செய்யும் தகுதி படைத்த பெண்கள் சிவப்பு வண்ண உடையில் காட்சி அளிக்கிறார்கள். செந்தூரம்தான் பிரசாதம். நாங்கள் சிலர்
கொண்டு போயிருந்த தீபத்தை ஏற்றினோம். சிலர் அங்கேயே தீபம் வாங்கி
ஏற்றினார்கள். அங்கேயும் தீபம் வாங்கி ஏற்றலாம். மற்றபடி பூஜை என்று ஏதும் அங்கே நடக்கவில்லை.

தரிசனம் முடிந்ததும் எல்லாரும் ஒவ்வொருத்தராய்க் கீழே இறங்கினோம்.
தயாராய் நின்றிருந்த ஹெலிகாப்டரில் ஏறியதும் புறப்பட்டது. எல்லாருக்கும் நல்ல பசி என்பதால் அவரவர் கொண்டு வந்திருந்த தின்பண்டங்களைப் பகிர்ந்து கொண்டோம். மறுபடி மேகங்களின் ஊடே பயணம். இப்போது நல்ல வெயில் தெரிந்தது. கையை நீட்டினால் தொட்டுவிடலாம் போல் சூரியன்
பிரகாசித்தான். ஒரு மணி நேரத்தில் காட்மாண்டு ஊர் தெரிய ஆரம்பித்தது.
இறங்க இன்னும் பத்து நிமிஷமே இருந்தபோது விமான நிலையம் நெருங்கும் சமயம் விமான ஓட்டிக்கு அவசரமாய் சிக்னல் கொடுத்து விமானத்தை நடுக்காட்டில் இறக்கினார்கள். முதலில் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விமானம் இங்கேதான் இறங்குகிறது. இங்கே இருந்து பேருந்தோ, சிற்றுந்தோ வந்து அழைத்துப் போகும் என நினைத்தோம்.
எங்களை இறங்க வேண்டாம் எனச் சொல்லி விட்டு உதவியாளரும், விமான
ஓட்டிகளும் இறங்கினார்கள். ராணுவ உடையில் பெண்களும், ஆண்களும்,
போலீஸ் உடையிலும் அதிகாரிகளும் வந்தனர். கூடவே 2 பெரிய நாய்கள்.
எல்லாரும் வந்ததும் அவர்களில் ஒருத்தர் கதவைத் திறந்து உள்ளே வந்து எங்கள் எல்லாரையும் பார்த்தார். பின் இறங்கச் சொன்னார். நாங்களும் இறங்கினோம். எல்லாரையும் எடுத்து வந்த பொருட்களைக் காட்டச் சொன்னார்கள். நாங்கள் கண்டகியில் நீர்தான் எடுத்திருந்தோம்.
அதைக் காட்டினோம். முகர்ந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லிவிட்டுச்
சிலர் இடுப்பில் கட்டி இருக்கும் கைத் தொலைபேசி வைக்கும் பெல்ட்டை
அவிழ்த்துப் பார்த்தார்கள். நாய்கள் வந்து முகர்ந்து பார்த்தன. வண்டியிலும் ஏறிப் பார்த்தன. அலமேலு என்பவரின் உடைமைகள் சோதனை போடப் பட்டன. பின் எங்களை விடுவித்தனர். எங்களுடன் வந்திருந்த பெரியவர் சங்கரன் கோபம் வந்து யாத்திரீகர்களை அதுவும் புனிதப் பயணம் வந்திருப்பவர்களை இப்படி நடத்தலாமா எனக்கேட்டதற்கு இது மாமூலான ஒன்று என்று சொல்லிவிட்டுப் போகச் சொன்னார்கள். பின் நாங்கள்
அனைவரும் காட்மாண்டு விமான நிலையம் வந்து எங்களுக்குத் தயாராக
இருந்த ட்ராவல்ஸ்காரரின் வண்டியில் ஏறி ஹோட்டலுக்கு வந்தோம்.

உள்ளே நுழைந்தபோது மணி மூன்று. பசியுடன் சாப்பிடப் போனால் மனோகரன் வந்து 5 மணிக்கு விமானம் உங்களுக்கு. இப்போச் சாப்பிட நேரம் இல்லை. உடனேயே விமான நிலையம் கிளம்புங்கள் எனச் சொல்ல நானும், என் கணவரும் அறைக்குப் போய் மற்ற உடைமைகளை எல்லாம் சேர்த்துக் கொண்டு கீழே வந்தோம். சிலர் சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு நாங்களும் போய் ஒரு சப்பாத்தியும், கொஞ்சம் தயிர்சாதமும் சாப்பிட்டோம். பின் அவசர அவசரமாய் விமானநிலையம் பயணம் மறுபடி. அங்கே போய் விமானத்தில் நுழையச் சீட்டு வாங்கி விட்டுப் பின் எங்கள் பொருட்களை விமானத்தில் ஏற்றக் கொடுத்தால் அதிக எடைப் பிரச்னை. திரு மனோகரனை உதவிக்குக் கூப்பிட்டு குழுவாக வந்திருப்பதால் எடை போடும்போது குழுவினர் எல்லாருடைய உடைமைகளையும் சேர்த்து அப்படியே போடவேண்டும் என்று கூப்பிடத் தேடினால் அவர் எங்களை விமான நிலையத்தில் விட்டு விட்டுப் போய்விட்டார். அவர் மறுநாள்தான் திரும்புகிறார். பின் நாங்களே பேசிக் கொஞ்சம் பணமும் கொடுத்து ஒருமாதிரியாக எல்லாருடைய சாமான்களையும் ஏற்றத் தயார் செய்தோம்.

பின் விமானம் கிளம்பும் வாயிலுக்குப் போகும் வழியில் மறுமுறை செக்கிங்.
இம்முறை நாங்கள் கையிலேயே வைத்திருந்த மானசரோவர் தண்ணீரில்
இருந்து சோதனை செய்யப் பட்டது. மற்ற எல்லாரும் அந்த ப்ளாஸ்டிக் கேனை லக்கேஜில் போட நாங்கள் மட்டும் பிடிவாதமாய்க் கையில் வைத்திருந்தோம். சிலருடைய கேன் உடைந்து தண்ணீர் எல்லாம் கொட்டி விட்டது. நல்லவேளையாக நாங்கள் எங்களுடைய சொந்தக் கேனிலேயே தண்ணீர் பிடித்து வந்திருந்ததால் எங்களுடையது காப்பாற்றப் பட்டது. எஸ்கலேட்டரில் நானும், இன்னும் சிலரும் ஏற முடியாமல் படிக்கட்டு எங்கே
என்று தேடினால் உதவ ஆளே இல்லை. ஒருமாதிரியாகத் தேடிக் கண்டுபிடித்து படி ஏறி மேலே வந்தால் மறுபடி ஒரு சோதனை. எல்லாம் முடிந்து வந்தால் விமானம் தாமதமாய் வந்தது. ஒரே கூட்டம் விமானத்தில். இந்தியா வரும்போது நெரிசலாய் இருக்கும் விமானம். சிலசமயம்
இடமே கிடைக்காது. இந்தியாவில் இருந்து நேபாளம் போகும்போது படுத்துக்
கொண்டே போகலாம். அவ்வளவு இடம் இருக்கிறது. விமானம் ஏறியதுமே அனைவருக்கும் இந்தியா வந்த உணர்வு. 2 மணி நேரத்தில் டெல்லி தெரிந்தது,. இந்தியா வந்தோம். எங்கள் லக்கேஜ் வரத் தாமதம் ஆனதால்
என்னுடைய மைத்துனனுக்குத் தொலைபேசித் தெரிவித்து விட்டு
சாமானுக்காகக் காத்திருந்தோம். அந்த ஏ.சி. குளிரிலும் எனக்கு வியர்த்தது.
மனதிலோ இனம் புரியாத நிம்மதி. வெளியே வந்து டெல்லியின் புழுக்கத்தை
அனுபவித்ததும் தோன்றியது இது தான்.

"ஸாரே ஜஹான்ஸே அச்சா, ஹிந்து ஸிதா ஹமாரா, ஹமாரா!" என்ற வரிகள். எத்தனை உண்மை!

HOME SWEET HOME!

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே!"

7 comments:

VSK said...

விமான ஓட்டிதான் அவசரப் படுத்தினார்... சரி!

நீங்களும் அதற்காக அவரை விட அவசரமாக முடித்து விட்டீர்களே!

அருமையான ஆன்மீக உணர்வு... படித்து முடித்ததும்.

'சங்கரன்' போன்றவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள் போலும்!:))

யாத்ரீகர்கள் என்றால் அதிகாரிகள் சோதனை போடக் கூடாது என்பது நல்ல ஜோக்!

குழுவாக வந்தாலும் அவரவர் உடைமைகளுக்குத் தனித்தனியேதான் எடை போடப்படும் என்பதுதான் பொது விதி.

நன்றி... ஒரு நல்ல தொடர் தந்தமைக்கு!

Porkodi (பொற்கொடி) said...

ullen paatti :)

Porkodi (பொற்கொடி) said...

hihihi apram sooriyana thottu paakradhu thaane apdiye chumma? :)
yeeeeeeeeeeeeee paatti is back home!! :D

Porkodi (பொற்கொடி) said...

migavum arumaiya irundhudhu thodar. ana neenga romba enjoy pannaliyo nu kooda thonudhu. extreme climatic conditions, ozhunga help pannadha travels aalunga nu kashtam thaan jaasthi mindla nikkudhu... epdiyo yaathirai poitu kalakkitinga!

Porkodi (பொற்கொடி) said...

amaa idhoda mutruma illa innum irukka ambathur vandhu serum varai? :)

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், எஸ்.கே.சார், நீங்க சொல்றது சரி, எழுதும்போது எனக்கும் இந்த மாதிரி யாருக்காவது தோணும்னு ஒரு உணர்வு வந்தது. ஆனால் நாங்கள் அங்கே இருந்தது என்னமோ 40 நிமிடங்கள் தான், மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரம் இருந்திருப்போம். மற்ற யாத்திரீகர்களையும் அங்கே உள்ள பணி ஆட்களையும் தவிரத் தகவல் திரட்ட யாருமே இல்லை. அது ஒரு குறையாகவே இருந்தது. என் மனதில் இன்னும் கூட அதிருப்திதான் இந்த முக்திநாத் பயணத்தில். எங்கள் 2 பேருக்குமாக 27,000/- கொடுத்துச் சரியாகப் பார்க்கக் கூட முடியாமல் அவசரப் படுத்தி, அன்றே கிளம்பவேண்டிய நிலை வேறே! உள்ளதை உள்ளபடி தானே சொல்ல முடியும்?

Geetha Sambasivam said...

போர்க்கொடி, அவ்வளவு போர் அடிச்சதுன்னா ஏன் படிக்கணும்? :D pointers படிக்க வேண்டியது தானே? இந்தக் கைலைப் பயணம் டில்லியில் ஆரம்பிச்சது டில்லியிலேயே முடிச்சிருக்கேன். அவ்வளவு தான்.