எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, June 22, 2007

சிதம்பர ரகசியம்- கனகசபைக்குப் போவோமா?

ரொம்ப நாளா எல்லாரையும் காக்க வச்சதுக்கு முதலில் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். மத்தப் பதிவுகள் மாதிரி ஆதாரங்களைச் சரி பார்க்காமல் இதை எழுத முடியாது. அதனாலும், வேலை மிகுதியாலும் எழுத முடியவில்லை.
*************************************************************************************
சித் சபையில் மேற்குறிப்பிட்ட இறை ரூபங்கள் தவிர "முக லிங்கம்" என்றொரு லிங்கமும் "சிதம்பர ரகசியம்" அருகே உள்ளது. எப்போது என்று சொல்ல முடியாத காலத்தால் முந்தைய இந்த லிங்கம் பிரம்மாவின் ஐந்தாவது முகத்தின் பிரதிநிதியாகவும் சொல்லப் படுகிறது. பிரம்மாவின் கர்வத்தை அடக்க சிவன் அவருடைய ஐந்தாவது முகத்தைக் கிள்ளி எடுத்து இங்கே லிங்க ஸ்வரூபத்தில் வைத்திருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. (இந்த லிங்கம் நான் இன்னும் பார்த்ததில்லை.)மதுரையம்பதி "பலிநாதர்" பற்றி எழுப்பிய சந்தேகத்துக்கு நான் சொன்ன விடை தவறு என்றும் என் கணவர் கூறுகிறார். பலிநாதர் சூல வடிவத்தில் இருப்பதாயும் கூருகிறார். பிரகாரங்கள் சுற்றி வரும்போது பார்த்திருக்கிறேன் என்றாலும் என்ன ஸ்வரூபம் என்று சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதையும் எங்கள் குருவான ராமலிங்க தீட்சிதரிடம் கேட்டுவிட்டே உறுதி செய்கிறேன்.
*************************************************************************************

சித்சபைக்கு வெளியே சில முக்கியமான நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, சிறப்பு வழிபாடு செய்பவர்கள் நிற்கும் சிறிய மேடை உள்ளது. இங்கே வைத்துத் தான் "ஸ்வர்ணாகர்ஷண பைரவர்" அபிஷேகம் செய்யப் படுவார். இங்கே நடராஜர் சன்னிதிக்கு நேரேயே நந்தியெம்பெருமான் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளார். சிவனின் அந்தரங்கக் காரியதரிசியாகச் சொல்லப் படும் இவர் கைலை மலையிலும் முக்கியமாகக் காணப்படுகிறார், ஒரு மலை உருவத்திலேயே. நடராஜரின் ஆட்டத்துக்கு நந்தி தான் தாளங்கள் போட்டு மேளம் வாசிப்பார் என்று ஐதீகம். ஆகவே நடராஜரின் ஆட்டம் நந்தியின் பக்கவாத்தியம் இல்லாமல் நிறைபெறாது. அதிலும் பிரதோஷ காலங்களில் இவருக்கு எல்லாச் சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இவரைத் தவிர நர்த்தன விநாயகர், இங்கே நடனம் ஆடும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அடுத்து லிங்கோத்பவ மூர்த்தி, சிவனின் வழிபாட்டில் லிங்கொத்பவர் வழிபாடும் ஒன்று. இவரைப் பற்றிய புராணக் கதை அருணாசலம் மலையுடன் தொடர்பு கொண்டது. நாம் அனைவரும் நன்கு அறிந்ததே!
***********************************************************************************
ஒரு சமயம் விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் தங்கள் இருவரில் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்தது. இருவரும் தாங்களே பெரியவர் எனச் சொல்லிக் கொண்டிருக்க, இறைவன் அவர்கள் முன்னால் நெருப்பால் எழுப்பப் பட்ட ஒரு லிங்கச் சுவர் போல் எழுந்தருளினார். சூடு தாங்கவில்லை இருவருக்கும், என்ன செய்ய முடியும்? ஊழித்தீயோ எனப் பயந்தனர்.அப்போது அங்கே எழுந்தது அசரீரியாக இறைவன் குரல். "என்னுடைய முடியையும், அடியையும் உங்கள் இருவரில் யார் கண்டுபிடிக்கிறீர்களோ அவர்களே பெரியவர்." இதுதான் இறைவன் சொன்னது. இருவரும் இது என்ன பிரமாதம் என ஒத்துக் கொண்டனர். முதலில் விஷ்ணு போய்ப் பார்த்துவிட்டு வர, என்னால் முடியவில்லை எனத் தோல்வியை ஒப்புக் கொள்கிறார். பின்னர் ஒரு அன்ன ரூபத்தில் கிளம்பும் பிரம்மாவும் தேடுகிறார், தேடுகிறார். அவராலும் முடியவில்லை. அப்போது இறைவனுக்கு அர்ச்சிக்கப் பட்ட ஒரு மலரின் இதழ், தாழம்பூ எனச் சொல்வதுண்டு, கீழே வருகிறது. பிரம்மா அந்தப் பூவை எடுத்துக் கொண்டுபோய் சாட்சியாக வைத்துத் தான் "கண்டுகொண்டேன், கண்டு கொண்டேன்", எனச் சொல்ல இறைவன் கோபம் அடைகிறார். "அனைவருக்கும் முதல்வன் நீ, உன்னால் தான் சிருஷ்டியே, நீ இப்படிப் பொய் சொல்லலாமா" எனக்கேட்டு "இன்று முதல் உனக்குத் தனியாகக் கோயில்களோ, ஆராதனையோ கிடையாது, பொய்சாட்சி சொன்ன இந்த மலரும் இனிமேல் என்னுடைய வழிபாட்டுக்கு உதவாது!" எனச் சொல்லுகிறார். இந்த ஸ்வரூபம் தான் லிங்கோத்பவர் எனச் சொல்லப் படுகிறது. அவர் மேல் பிரணவம் எழுதப் பட்டிருப்பதைப் பார்த்த விஷ்ணுவும், பிரம்மாவும் இவரே ஆதியாம் முதல்வன், அனைத்துக்கும் காரணன் எனவும் ஒத்துக்கொண்டனர்.

3 comments:

Geetha Sambasivam said...

இது எப்போ முடியும்னு எனக்கே தெரியலை, உண்மையில் இந்தப் பதிவுதான் என்னை இழுத்துட்டுப் போகுதே தவிர, நான் எழுதவில்லை. ஆகவே கொஞ்சம் பொறுமையோடுதான் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//பலிநாதர் சூல வடிவத்தில் இருப்பதாயும் கூருகிறார்//

மற்ற எல்லா சிவன் கோவில்களிலும் பலிநாதர் சூல வடிவில் இருப்பார்....சிவன் கோவில் தீர்த்தவாரிகளில் இந்த சூலத்தைதான் தீர்த்தமாட்டுவார்கள். (பெருமாள் கோவிலில் உள்ள சக்ரத்தாழ்வார் தீர்த்தமாட்டபடுவார்.

Geetha Sambasivam said...

கருத்துக்களுக்கு நன்றி மதுரையம்பதி அவர்களே!