எச்சரிக்கை
ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.
Friday, August 31, 2007
Monday, August 20, 2007
சிதம்பர ரகசியம் - அன்னை சிவகாமி!
சிவகங்கைக் குளத்துக்கு மேற்கே நாம் காணப் போவது "சிவகாம கோட்டம்" என்று அழைக்கப் படும் சிவகாம சுந்தரியின் சன்னதி. இறைவனின் சக்தி மூன்றுவிதப் படுகிறது. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்பவை. சக்தி எல்லாமே ஒன்று என்றாலும் அந்த அந்த நேரத்துக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளணும் இல்லையா? அதனால் நடராஜரை விட்டுப்பிரியாமல் அவருக்கு அருகேயே இருக்கும் சிவகாமசுந்தரியானவளை "இச்சா சக்தி" எனவும், இங்கே தனிக் கோயில் கொண்டு குடியிருப்பவளை "ஞான சக்தி" எனவும், இவளுக்கு அருகேயே துர்கையாக இருப்பவளை, கிரியா சக்தி" எனவும் உள்ளூர் மக்கள் நம்புவதோடு அல்லாமல் சில புராணங்களும் அவ்வாறு சொல்வதாய்க் கூறுகின்றனர். இந்த்க் கோயில் சோழர் கால்த்தில் இரண்டாம் குலோத்துங்கனால் திருப்பணி செய்யப் பட்டுள்ளது. தசமகாவித்யை பற்றிச் சொல்லும் "ஸ்ரீவித்யா உபாசனா", இந்தக் கோயிலை பூதேவியின் இருப்பிடம் எனக் கூறுவதாய்த் தெரிகிறது.
சிவகாம சுந்தரியின் அருளாலேயே பதஞ்சலி முனிவர் தன்னுடைய வியாகரணத்துக்கான மகாபாஷ்யத்தை எழுதியாதாய்ச் சொல்கின்றனர். ஹயக்ரீவர், அகஸ்த்யர், லோபாமுத்ரை, துர்வாசர், பரசுராமர், ஆதி சங்கரர் போன்றோர் இங்கே வழிபாடு நடத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு வருஷமும் ஐப்பசி மாசத்தில் பிரம்மோற்சவத்தின் போது, சிவகாமசுந்தரிக்குத் திருமண விழாவும் நடராஜருடன் இங்கே நடை பெறுகிறது. வேறெங்கும் காணாத அதிசயமாய்ச் சித்திரகுப்தனுக்கு இங்கே தனியாய் ஒரு சன்னதி உள்ளே நுழையும்போது இடது பக்கமாய்க் காணலாம். சித்திரகுப்தனுடன் கூடவே பிரம்மாவும் இருக்கிறார்.
சிவகாமசுந்தரியை அடுத்துச் சிறிய அகிலாண்டேஸ்வரி சன்னதி காணப் படுகிறது. அதற்குப் பின்னர் துர்கை சன்னதி கிட்டத் தட்ட ஒரு தனிக் கோவில் போல் முக்கியத்துவம் பெற்றுக் காணப் படுகிறது. பராசக்தியின் அவதாரங்களில் ஒன்றான "மஹிஷாசுர மர்த்தினி"யாக வடக்கே பார்த்துக் கொண்டு இங்கே காணப் படும் அம்மனின் காலடியில் மஹிஷன் காணப் படுகிறான். இந்தக் கோயில் துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவளாயும் இருக்கிறாள். நவராத்திரிகளில் இவளுக்குத் தனி அலங்காரம், பூஜைகள் முதலியன உண்டு.
பாண்டியநாயகன் கோவில்: இது ஒரு முக்கியமான கோவில். தென்னிந்தியக் கோவில் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் இது மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப் பட்டிருக்கிறது. ஆறுமுகங்களோடும், அருகில் தன்னிரு மனைவியரான வள்ளி, தேவானையோடும், மயில் வாகனனாய்க் காட்சி தருகிறான் அந்த வேலவன் இங்கே! பாண்டியனின் குலத்தைக் காக்க வந்த கடவுளான கந்தனுக்குப் பாண்டியன் இங்கே தனியே கோயில் எடுத்துச் சிறப்புச் செய்தமையால் இந்தக் கோயில் பாண்டிய நாயகன் கோயில் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். இந்தக் கோயிலின் முன்பாகத்தில் ஷண்முகன் என்ற பெயருடனும் அருள் பாலிக்கிறான் குமரக் கடவுள்.
Sunday, August 19, 2007
சிதம்பர ரகசியம் - சிவகங்கைக் குளத்தருகே!
மேலே நாம் காண்பது சிவகங்கை என்று அழைக்கப் படும் கோவிலைச் சேர்ந்த, கோவிலுக்குள்ளேயே இருக்கும் திருக்குளம் ஆகும். மீனாட்சி,சுந்தரேஸ்வரர் சன்னதியை அடுத்து நாம் காண்பது நூற்றுக்கால் மண்டபம் ஆகும். சோழர்களின் தளபதியான காளிங்கராயன் என்பவனால் கட்டிக் கோவிலுக்கு அளிக்கப் பட்டதாயும், முற்காலங்களில் நவராத்திரி சமயத்தில், அன்னை சிவகாமியை இங்கே தான் அலங்காரம் செய்து வைப்பார்கள் என்றும் குறிப்புக்கள் கூறுகின்றன.
அடுத்தது நாம் மேலே காணும் சிவகங்கைக் குளம். சிதம்பரத்தில் பத்து முக்கிய தீர்த்தங்கள் உள்ளன. அவை1. சிவகங்கை மூன்றாவது வெளிப்பிரகாரத்தில் அன்னை சிவகாமி சன்னதிக்கு நேரேயும்,
2.பரமானந்த கூபம் ஏற்கெனவே நாம் பார்த்தோம், சித்சபைக்கு வெளியே கிழக்கே ஒரு கிணறாகவும் ,
3. குய்ய தீர்த்தம் என்று சிதம்பரம் நகருக்கு வட கிழக்கே கிள்ளை என்னும் இடத்துக்கு அருகே உள்ள "பாசமறுத்தான் துறை"யிலும்,
4.சிதம்பரத்துக்குத் தெற்கே புலிமடு என்னும் தீர்த்தமும்,
5. வியாக்ரபாத தீர்த்தம், மேற்கேயும்,
6. அனந்த தீர்த்தமும் மேற்கே அனந்தீஸ்வரர் கோவில் அருகேயும்,
7.நாகசேரி என்னும் தீர்த்தம் அனந்த தீர்த்தத்துக்கு மேற்கேயும்,
8. பிரம்ம தீர்த்தம் சிதம்பரத்துக்கு வடமேற்கே திருக்களன்ச்சேரியிலும்,
9.சிவப்பிரியை, சிதம்பரத்துக்கு வடக்கே தில்லைக் காளி கோவில் அருகேயும்,
10.சிவப்பிரியைக்குத் தென் கிழக்கே "திருப்பாற்கடல்" என்னும் தீர்த்தமும் இருந்தன. தற்சமயம் சில குறிப்பிட்ட தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் சிவகங்கை முக்கியமானது.
"ஹேம புஷ்கரணி", "அம்ருதவாபி", "சந்திர புஷ்கரணி" என்றெல்லாம் தல புராணங்களில் வர்ணிக்கப் படும் இந்தக் குளம் பண்டைக் காலந்தொட்டே இருந்து வந்ததாய்க் கூறுகிறார்கள். நமக்கு நன்கு தெரிவது ராஜா ஹிரண்யவர்மனின் காலத்தில் இருந்து தான். சோழத் தளபதியான காளிங்கராயனால் குளத்துக்குள் இறங்கும் 9 படிக்கட்டுக்கள் கட்டுவிக்கப் பட்டதாய்த் தெரிகிறது. பல ரூபங்களில் உள்ள சிவலிங்கங்களும், விநாயக மூர்த்திகளும் இந்தக் குளத்தைச் சுற்றிலும் பிரதிஷ்டை பண்ணப் பட்டிருக்கிறது. தென்பகுதியில் தண்ணீருக்குள் "ஜம்புகேஸ்வரர்" லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும், தினசரி தீட்சிதர்களால் வழிபாடு செய்யப் படுவதாயும் சொல்கிறார்கள். (நாங்க இன்னும் பார்க்கவில்லை, இந்த வழிபாட்டை.). பல்லவ ராஜா சிம்மவர்மன் உடல்நலம் குன்றி இருந்த சமயத்தில் மகரிஷி வியாகிரபாதரின் ஆலோசனையின் பேரில் அவன் இந்தக் குளத்தில் புனித நீராடி, நடராஜரை ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் தரிசனம் கேட்டுப் பெற்று வழிபட்டதாயும், அதன் பின்னர் அவன் உடல் நலம் அடையவே, தான் பெற்ற பயன் அனைத்து மக்களும் பெறவேண்டி அவன் குளத்தை ஆழப்படுத்தியும், அகலப் படுத்தியும் பராமரிப்புப் பணிகள் செய்ததாயும் கூறுகின்றனர். இதன் பின்னரே அவன் பெயர் ஹிரண்ய வர்மன் என அழைக்கப் பட்டதாயும் கூறுகின்றனர். இந்தக் குளம் "ரஜ சபை" என அழைக்கப் படும், ஆயிரக்கால் மண்டபத்துக்கும், சிவகாம சுந்தரி சன்னதிக்கும் நடுவே அமைந்துள்ளது. குளத்தின் நடுவில் இருந்து நேரே அன்னை சிவகாமி குளத்தைத் தன் அருட்கண்களால் பார்த்தவண்ணம் அருள் பாலிக்கிறாள்.
திரு "ஜீவா வெங்கட்ராமன்" கேட்ட சந்தேகத்துக்குத் தற்சமயம் என்னால் தக்க பதில் கூற முடியவில்லை. முஸ்லீம் மன்னர்கள் (திப்பு சுல்தான்?) படை எடுப்பின் போது நடராஜரைத் தூக்கிக் கொண்டுத் திருவாரூரில் சில காலமும், திருச்சூரில்/ஆலப்புழாவில்? சில காலமும் இருந்ததாய்த் தீட்சிதர் (எங்கள் குருவான ராமலிங்க தீட்சிதர்) என்னிடம் நேரில் கூறினார். பல தீட்சிதர்கள் சித்சபையின் மேலே உள்ள பொன்னால் வேய்ந்த கோபுரத்தின் மேல் ஏறி உயிரை விட்டதாயும் கூறுகின்றனர். வேறு சிலர் மூலவர் ஆன நடராஜரை எடுத்துக் கொண்டு கேரளாவில் மறைந்து இருந்ததாயும், அதன் பின்னர் தான் அங்கே உள்ள கோவில்கள் இவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிதம்பரம் கோவில் அமைப்பில் கட்டப் பட்டதாயும் அவர் கூற்று. ஆனால் அதற்கான ஆதாரங்கள் சரிவரக் கிடைக்கவில்லை. தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் விரிவான விளக்கம்.
Friday, August 17, 2007
சிதம்பர ரகசியம் -கோபுர வாசலிலே!
மேலே நாம் காண்பது சித்சபையின் அற்புதத் தோற்றம். இதுவும் மூலஸ்தானத்துக்கு மேலே இருக்கும் கோபுர ம் என்ற அளவில் இருந்தாலும் இதன் தாத்பரியம் பற்றி நாம் முன்னாலேயே பார்த்து விட்டோம். படம் இப்போத் தான் போட முடிந்தது. கிழக்குக் கோபுரம் பத்தி எழுதலைன்னு விஎஸ்கே கேட்டிருக்கிறார். பின்னால் வரும். இப்போ முக்குறுணி விநாயகருக்கு அடுத்து நாம் காணப் போவது பாண்டியன் "ஜடாவர்மன் சுந்தரனால்" திருப்பணி செய்யப் பட்ட மேலக் கோபுரம். இங்கே நாம் காண்பது கற்ப க விநாயகர் நடனமாடும் திருக்கோலத்தில். இவரை க்ஷேத்திர பால விநாயகர் எனவும் சொல்கின்றனர். இவர் இங்கே வந்ததுக்குச் சொல்லப் படும் காரணம் அல்லது புராணக் கதை என்னவென்றால்:
தில்லை நகருக்கு "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்னும் காரணப் பெயர் உண்டு. எப்போது வந்தாலும் அன்னபூரணியின் அருள் நிறைந்து உணவு கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது. அந்தப் பழமொழியைச் சோதனை செய்யவோ என்னமோ, ஒருமுறை துர்வாச முனிவர் நடு இரவில், தன் சிஷ்யர்களுடன் தில்லைச் சிற்றம்பலம் வந்தடைகிறார். வரும்போதே நல்ல பசி முனிவருக்கு. கோவிலின் அர்த்தஜாம பூஜையும் அப்போது தான் நடந்து முடிந்திருந்தது. ஆகவே துர்வாசரின் பசியைப் போக்க யாருமே முன்வராததால் கோபம் அடைகிறார் முனிவர். அப்போது அன்னை தானே முன் வந்து அவர் பசிப்பிணி தீர்க்க வரவும், துர்வாசர் நடராஜரின் ஆனந்தத் தாண்டவக் கோலத்தைக் கண்ணும் ஆசையைத் தெரிவிக்கிறார்.
ஆனால் தந்தைக்குப் பதில் அங்கே தனயன் தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடவே தன்னை மறந்து கோபமும், பசியும் தீர்ந்து சமாதானம் அடைகின்றார் துர்வாசர்."
உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப் பட்ட "கற்பக கணேச பஞ்சரத்ன ஸ்தவம்" என்னும் ச்லோகத்தில் இதைப் பற்றியக் குறிப்பு இருப்பதாய்க் கூறுகிறார்கள். இந்தக் கோவிலில் இந்த மூர்த்தங்களைத் தவிர ஒரு நந்தியெம்பருமானும், வில்வ மரமும், மிகப் புராதனமானது என்று சொல்லப் படுகிறது உள்ளன. இந்திரன் வல்காலி என்னும் அசுர வதம் செய்யும் முன்னர் நந்தி ரூபத்தில் இந்த விநாயகரை வழிபாட்டுச் சென்றதாயும், இங்கே உள்ள வில்வ மரம் சிவனின் ரூபம் என்றும் சொல்கின்றனர்.
விநாயகரை நடுவே தான் போட்டேன். சரியா வரலை. போகட்டும், அடுத்துக் காண இருப்பது குமரகோட்டம் அல்லது பாலசுப்ரமணிய சன்னதி ஆகும். நவ வீரர்களுடனும் இங்கே சூர சம்ஹாரத்துக்கு முன் சுப்ரமணியர் இருந்ததாய்க் கூறுகின்றனர். மேலக் கோபுரச் சுவர்களுக்கு உள்பக்கமாய் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த ஆறுமுகன், தன் ஆறுமுகங்களோடும் காணப் படுவதோடு அல்லாமல், தன் இரு மனைவியருடனும் இருக்கிறான். சிங்கத்தின் மேலே அண்ணனான விநாயகர் காவல் செய்ய, அருணகிரிநாதர் தொழ அற்புதக் காட்சி அளிக்கிறான். கந்த சஷ்டியில் "சூர சம்ஹார"ப் பெருவிழா விமரிசையாக இங்கே நடக்கும். அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியும், காணப் படுகிறது. மாணிக்க வாசகர் வேண்டுகோளுக்கு இணங்க மீனாட்சி அன்னையை மணந்த திருக்கோலத்திலே இங்கே சொக்கநாதர் வந்ததாய்ச் சொல்லப் படுகிறது.
Tuesday, August 14, 2007
சிதம்பர ரகசியம் - கோபுர தரிசனம் - பாப விமோசனம்!
கல்யாண மண்டபம், யாகசாலையை அடுத்து, உள்ள அர்த்த ஜாம சுந்தரரைத் தரிசனம் செய்துகொண்டு, பக்கத்தில் உள்ள சங்குடன் கூடிய "பாலகணபதி"யைத் தரிசனம் செய்யலாம். இதே பிரகாரத்தில் சனீஸ்வரருக்குத் தனி சன்னதி கிழக்கே பார்த்து உள்ளது, தவிரவும் நவகிரகங்களுடனும் சனீஸ்வரர் இடம் பெற்று இருக்கிறார். இதை அடுத்து உள்ள தேவசபையானது, சித்சபைக்கு மேற்கே, தென் திசையை நோக்கி உள்ளது. உற்சவ மூர்த்திகள் இங்கே வைக்கப்பட்டுள்ளதோடு தீட்சிதர்களின் தினசரி கூடும் இடமாகவும் உள்ளது. இங்கே கூடித் தான் கோவில் நடைமுறைகள், வழிபாடுகள் பற்றிய முடிவுகள், கோவில் நிர்வாகம் பற்றிய முடிவுகள் முதலியன தீட்சிதர்களால் எடுக்கப் படும்.
சிதம்பரம் கோவிலில் 5 பிரகாரங்கள் உள்ளன. இதில் 2வது பிரகாரத்தில் கோபுரங்கள் அமைந்துள்ளன. இந்த 2-வது பிரகாரத்தைப் "பிராணமயகோசம்" எனவும் சொல்லுகிறார்கள். நம் உடலில் பிராணன் எவ்வளவு முக்கியமோ அவ்வலவு முக்கியத்துவம் கோபுரங்களுக்கும் உண்டு. "கோபுர தரிசனம் பாப விமோசனம்" என்பது ஆன்றோர் வாக்கு! கோவில் நடை கூடக் குறிப்பிட்ட காலம் வரைதான் திறந்து இருக்கும். இறையைத் தரிசனம் செய்யவும் குறிப்பிட்ட காலங்கள் உண்டு. ஆனால் இந்தக் கோபுரங்கள் நம்மால் இறை தரிசனம் செய்ய முடியாவிட்டாலும் கோவில் மூடிய பின்பு கூட இவற்றின் தரிசனத்தால் நமக்கு இறை தரிசனம் கிடைத்த மாதிரி மனம் நிம்மதி அடைகிறது. இந்தக் கோபுரங்கள் அவ்வப் பொழுது வந்த அரசர்களால் பராமரிப்பும், திருப்பணியும் செய்யப் பட்டிருக்கிறது. இதில் முக்கியமான மன்னர்கள் எனச் சரித்திரம் குறிப்பிடுபவை பல்லவர்களின் நந்திவர்மன், ஹிரண்யவர்மன், சோழ அரசர்களில் தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்த முதலாம் பராந்தகன், பாண்டியர்களில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், விஜய நகர அரசர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
தெற்குக் கோபுரம் கோப்பெருஞ்சிங்கன் என்னும் பல்ல்லவ அரசனால் திருப்பணி செய்யப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. இதை ஒட்டி ஒரு சுப்ரமணியர் கோவில் வடக்கே பார்த்து உள்ளது. தவிரவும் சதாசிவ மூர்த்தி என்ற சிவனின் ஒரு ரூபத்திற்கு எனத் தனி சன்னதியும் தெற்கு கோபுரத்துக்கு எதிரே உள்ளாது. இதை அடுத்து நாம் காண்பது 8 அடிக்கு உயரமான மிகப் பெரிய "முக்குறுணி விநாயகர்". இவர் தான் தென் இந்தியாவிலேயே மிகவும் பெரிய விநாயக ரூபமாகக் கூறப்படுகிறது. இவருக்குப் பெரிய படி அளவு 6 படிக்கு அரிசியில் செய்யப் பட்ட கொழுக்கட்டையை ஒரே கொழுக்கட்டையாகச் செய்து நைவேத்தியம் செய்யப் படுகிறது. இங்கே தவிர, மதுரையில் மீனாட்சி சன்னதியில் இருந்து ஸ்வாமி சன்னதிக்குப் போகும் வழியில் தெற்கு கோபுரத்தைப் பார்த்துக் கொண்டு "முக்குறுணி விநாயகர்" அமர்ந்திருப்பார். அவருக்கும் இதே மாதிரி முக்குறுணி அரிசியால் செய்யப் பட்ட கொழுக்கட்ட்டை நைவேத்தியம் பிள்ளையார் சதுர்த்தி அன்று செய்யப் படும்.
மேலே போட்டிருக்கும் சித்சபைத் தோற்றத்தின் படம் விக்கிபீடியாவில் இருந்து எடுத்தது. முன் பதிவில் போட்டிருக்கும் லிங்கத் திருமேனி, சிதம்பரம் மூலநாதரின் லிங்க ஸ்வரூபம் இல்லை. அது நான் புகுந்த ஊரான பரவாக்கரைக்கு அருகில் உள்ள "கருவிலி" எனப்படும் சற்குணேஸ்வரபுரத்தின் "சற்குணேஸ்வரர்" ஆவார்.
Saturday, August 11, 2007
சிதம்பர ரகசியம் - லிங்கத் திருமேனியை ஒரு தரிசனம்!
தட்சிணா மூர்த்திக்கு அடுத்துப் "பல்லிஸ்வரர்" என்பவரின் சன்னதி உள்ளது. பல்லியின் சொல்லுக்குப் பலன்கள் உண்டு என்றும், பல்லி உடலின் எந்தப் பாகத்தில் விழுகிறது என்பதற்குத் தகுந்தாற்போல் பலன் உண்டு என்பதும் மக்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் கெடுபலனக்ள் இந்த ஈஸ்வரரின் தரிசனத்தால் விலகும் என்றும் க்ஷேத்ரபாலகர்களில் இவரும் ஒருவர் என்றும் சொல்கின்றனர். அடுத்து வருவது வல்லப கணபதி. சுப்ரமணியர் தாரகன் வதத்துக்குப் போகும்போது இவரை வணங்கி அருள் பெற்றுச் சென்றதாய் ஐதீகம்.
இந்த சன்னதிக்குப் பின் வருகிறது ஒரு சிறிய கோயில். நடராஜர் கோவில் கொள்ளும் முன்பு, இது தான் மூலஸ்தானமாய் இருந்தது எனச் சொல்லப் படுகிறது. லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் ஈசனை, மூலநாதர் எனச் சொல்கின்றனர். பதஞ்சலியும், வியாக்ரமபாதரும் இந்த மூலநாதரைத் தான் முதலில் வழிபட்டு வந்ததாயும், பின்னர் தான் நடராஜ தரிசனம் கிடைக்கப் பெற்று ஆனந்தத் தாண்டவக் கோலத்தைத் தாங்கள் எந்நாளும் கண்டு கொண்டு இருக்க வேண்டும் என்பதால் நடராஜரை இங்கே கோயில் கொள்ள வேண்டினார்கள் என்றும் சொல்கின்றனர். மேலும் இந்த மூலநாதர் ஜைமினி ரிஷியாலும், உபமன்யுவாலும், ராஜா ஹிரண்ய வர்மனாலும் வணங்கப் பெற்றிருக்கிறது. அம்மன் பெயர் உமாம்பிகை. அம்மன் சன்னதியும் பக்கத்திலேயே உள்ளது. இந்த மூலநாதருக்கும் அம்பிகைக்கும் அந்த, அந்தக் கால பூஜைகள், வழிபாடுகள் தீட்சிதர்களாலே செய்யப் படுகிறது.
மூலநாதர் கோவிலைச் சுற்றிக் காணப் படுகின்ற இறை ரூபங்களில் குணேச கணபதி, காசி விஸ்வநாதர், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், கல்பக விருஷம், வைதீஸ்வரன் கோவில் வைத்தியநாத ஸ்வாமியும், தெய்வநாயகியும், 63 நாயன்மார்கள், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சேக்கிழார் பெருமான் போன்றவர்கள் ஆவார்கள். இதை அடுத்துக் காணப்படுவது, மத்யார்ஜுன க்ஷேத்ரம் என்று சொல்லப் படும் திருவிடைமருதுரின் ஸ்ரீ மஹாலிங்கஸ்வாமியின் லிங்கத் திருமேனியும், ப்ருகத்-குஜாம்பிகையும். இந்த மத்யார்ஜுன க்ஷேத்திரத்தில் அம்பாள், சிவனைத் தன் இருதயத்தில் வைத்து, "அதி தெய்வீகி" முறையில் வழிபட்டதால் இந்த லிங்கத் திருமேனியை மகாலிங்கம் எனக்குறிப்பிடுகின்றனர். அடுத்து அருணாசலேஸ்வரரும், தர்ம சாஸ்தாவுக்கும் என ஒரு தனி சன்னதியும் உள்ளது. இதை அடுத்துக் காணப்படும் கல்யாண மண்டபம், யாகாசாலையை அடுத்து நாம் கோவிலின் வெளியே வந்து கோபுரங்கள் இருக்கும் திருச்சுற்று வழியாகப் போய் சிவகங்கைக் குளத்தையும் அதன் அருகே இருக்கும் அன்னை சிவகாமியையும் தரிசனம் செய்வோமா?
Thursday, August 09, 2007
சிதம்பர ரகசியம் - திருமுறை கண்ட விநாயகர்!
நிருத்த சபையில் சற்று உயரமான இடத்தில் மேற்கே பார்த்துக் கொண்டு ஒரு விநாயகர் சன்னதி காணப்படுகிறது. அந்த விநாயகரைத் தரிசனம் செய்வது என்றால் ஏணியின் படிகளில் ஏறிப் போய்த் தான் பார்க்கவேண்டும். "உச்சிப் பிள்ளையார்" என்று அழைக்கப் படும் இந்த விநாயகரைத் திருமுறை கண்ட விநாயகர் என்றும் சொல்கின்றனர். நாயன்மார்களால் எழுதப் பட்ட "பன்னிரு திருமுறைகள்' இந்தச் சிதம்பரம் கோவிலில் ஒரு அறையில் சுவடிகளாய் அடைபட்டுக் கிடந்தது. பத்தாம் நூற்றாண்டில் "நம்பியாண்டார் நம்பி' அவர்களின் வேண்டுகோளின் பேரில், அந்தச் சுவடிகள் அங்கு இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜன் அந்தச் சுவடிகளை அங்கிருந்து மீட்டு உலகுக்கு அதை அர்ப்பணித்தான். (இது கொஞ்சம் விரிவாய் எழுத நினைத்தேன், நேரம் இன்மையால் சுருக்கி விட்டேன். ) அப்போது நம்பியாண்டார் நம்பியின் வேண்டுதலின் பேரிலும், மன்னனின் வேண்டுதலின் பேரிலும் அவர்களுக்குப் பன்னிரு திருமுறைகள் இருக்குமிடத்தைச் சுட்டிக் காட்டியது இந்த விநாயகர் அருளினால் தான் என்று கூறுகிறார்கள். அன்றிலிருந்து இந்த விநாயகர் "திருமுறை கண்ட விநாயகர்" என அழைக்கப்படுகிறார். இவருக்கு அருகே உள்ள சிவலிங்கத்தைச் சிலர் "தாயுமானவர்" என்றும், வேறு சிலர் "மாயூர நாதன்" என்றும் அழைக்கின்றனர். எப்படி இருந்தாலும் சிவனருள் நமக்கு நிச்சயமாய்க் கிட்டும்.
இதே பிரகாரத்திலேயே தேவார நால்வர் ஆன அப்பர்,சு ந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்காக ஒரு கோவில் கிழக்கே பார்த்துக் காணப்படுகிறது. தினமும் தீவிர சைவர்களும், ஓதுவார்களும் இந்தச் சன்னதியில் அமர்ந்து தேவாரம் ஓதுவது வழக்கம். கோவிலுக்கென்று அமைந்த ஓதுவார்கள் இங்கே ஓதுவதோடு மட்டுமின்றி கனகசபையில் அவர்களுக்கென்று நியமித்த நேரத்தில் கால வழிபாட்டின் போதும், மற்றச் சமயங்களிலும் தேவாரம் ஓதுவது உண்டு. தினந்தோறும் தீட்சிதர்களில் யாராவது ஒருவரால் தேவார நால்வருக்கும் அந்த, அந்தக் கால பூஜைகளும் நடைபெறுகிறது.
அடுத்து வருபவர் ஞானகுருவான தட்சிணாமூர்த்தி. பெயருக்கேற்பத் தென் திசை நோக்கி இருக்கும் இவரின் தோற்றமும், சின்முத்திரை காட்டும் அழகும் எல்லார் மனதையும் கவர வல்லது. சிவனின் பல்வேறுவிதமான லீலா விநோதங்களில் அவர் பல ரூபங்கள் எடுத்தார். அப்படி எடுத்த இந்த ஞான ஸ்வரூபம் மெளனத்தின் மூலமே நமக்கு உண்மையை உணர்த்துகிறது. சனத்குமாரர், சனகர், சனந்தனர், சனாதனர் நால்வருக்கும் மெய்ப்பொருளை அறியும் ஆவல் ஏற்பட்டது, அதற்காக அவர்கள் தகுந்த குருவைத் தேடி அலைந்தபோது ஒரு கல் ஆல மரத்தின் அடியே அவர்கள் ஞான ஸ்வரூபம் ஆன ஒரு இளைஞன் சின்முத்திரை காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டனர்.
அவர்களை அறியாத உணர்வால் தூண்டப் பட்ட நால்வரும் அங்கே அமர்ந்து குரு உபதேசம் பெற முயற்சிக்க, உபதேசம் பெறாமலேயே அந்த ஞானகுருவின் மெளனத்தின் மூலமும், அவர் காட்டிய சின் முத்திரையின் மூலமுமே அவர்கள் மெய்ப்பொருளைக் கண்டறிந்தனர். அன்று முதல் எல்லாச் சிவன் கோவிலிலும் தட்சிணா மூர்த்தி ஸ்வரூபம் ஞானகுருவாக, வழிகாட்டியாக வணங்கப் படுகிறது. குருவாரம், அல்லது வியாழக்கிழமை என்று சொல்லப் படும் கிழமையில் வெள்ளைக் கொண்டைக்கடலையை ஊறவைத்து மாலை கட்டி இந்த தட்சிணாமூர்த்திக்குச் சாற்றி, வழிபட்டால் எல்லா ஞானங்களும் பெறலாம் என்பதோடு அல்லாமல் அஞ்ஞானமும் அகலும். முக்கியமாய்ப் படிப்பு நன்கு வராத மாணவ, மாணவிகள் இவரை வழிபட்டால் நன்கு பலன் பெறலாம். நம்பிக்கைதான் முக்கியம்.
Wednesday, August 08, 2007
சிதம்பர ரகசியம் -நிருத்த சபையின் நாயகர்கள்!
நிருத்த சபைக்கு வந்த நாம் இப்போது அதன் முக்கியமான தரிசனத்துக்குத் தயாராகிறோம். உண்மையில் இந்த நிருத்த சபைதான் மிகப் பழமை வாய்ந்தது எனச் சொல்லப் படுகிறது. ஆதியில் காளியின் வசம் இந்தக் கோயில் இருந்தபோது காளி இங்கே தான் வாசம் செய்தாள் என்றும் கூறப் படுகிறது. கனகசபைக்கும், த்வஜஸ்தம்பத்திற்கும் தெற்கே இருக்கும் இந்தச் சபையில் தான் சிவன் காளியுடன் போட்டி போட்டு ஆடித் தன்னுடைய ஆட்டத்திறமையைக் காட்டி ஜெயித்தார். இந்தத் தாண்டவக் கோலம் "ஊர்த்துவத் தாண்டவம்" என்று சொல்லப் படுகிறது. இந்த மூர்த்தி ரூபத்துக்கும் "ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி" என்றே பெயர். அருகாமையில் நாணத்துடன் நிற்கும் காளியின் அழகு கொள்ளையோ கொள்ளை! காணக் கண் கோடி வேண்டும்! சரபருக்கு அருகேயே கோவில் கொண்டிருக்கும் இந்த தாண்டவ மூர்த்தியும், காளியும் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களுக்கு அடுத்தபடியாக இந்த வெளிப்பிரகாரத்தில் லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தி, மகாலட்சுமி சன்னதிக்கும், நிருத்த சபைக்கும் நடுவில் காணப்படுகிறார், வடக்கு முகமாய். அடுத்து வருவது மகா லட்சுமியின் சன்னதி. தனியாகக் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தாயாரின் மூல விக்ரஹம் "புண்டரீகவல்லித் தாயார்" என்று அழைக்கப் படுகிறது. உற்சவ விக்ரஹமும், கூடவே இந்தக் கோயிலில் காணப் படுகிறது. நவராத்திரிகளில் விசேஷ அலங்காரங்கள் செய்யப் படுவதாய்க் கூறுகிறார்கள்.
அடுத்துக் காணப் படும் பாலதண்டாயுத மூர்த்தியின் சிற்பம் ஒரு தூணில் காணப் படுகிறது. பழனிக்குப் போக விரும்பிய மக்கள் கொள்ளிடத்தின் வெள்ளப் பெருக்கால் போக முடியாமல் தவித்தபோது அந்தப் பழனி ஆணடவர் இந்தச் சிற்பத்தில் ஆவிர்ப்பவித்துத் தன்னை வணங்குமாறு சொன்னதாய்ச் சொல்கின்றனர். அடுத்து வருபவர் நம் நண்பர் விநாயகர் ஒரு அருமையான வேலை செய்தவர்! என்ன தெரியுமா? மறைந்து இருந்த ஒரு பொருளைக் காட்டிக் கொடுத்தவர். அதுவும் யாருக்கு? சோழ மன்னனுக்கு! என்ன பொருள்? எந்த மன்னன்? யோசியுங்கள், நாளைக்கு வந்து சொல்றேன்.
இவர்களுக்கு அடுத்தபடியாக இந்த வெளிப்பிரகாரத்தில் லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தி, மகாலட்சுமி சன்னதிக்கும், நிருத்த சபைக்கும் நடுவில் காணப்படுகிறார், வடக்கு முகமாய். அடுத்து வருவது மகா லட்சுமியின் சன்னதி. தனியாகக் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தாயாரின் மூல விக்ரஹம் "புண்டரீகவல்லித் தாயார்" என்று அழைக்கப் படுகிறது. உற்சவ விக்ரஹமும், கூடவே இந்தக் கோயிலில் காணப் படுகிறது. நவராத்திரிகளில் விசேஷ அலங்காரங்கள் செய்யப் படுவதாய்க் கூறுகிறார்கள்.
அடுத்துக் காணப் படும் பாலதண்டாயுத மூர்த்தியின் சிற்பம் ஒரு தூணில் காணப் படுகிறது. பழனிக்குப் போக விரும்பிய மக்கள் கொள்ளிடத்தின் வெள்ளப் பெருக்கால் போக முடியாமல் தவித்தபோது அந்தப் பழனி ஆணடவர் இந்தச் சிற்பத்தில் ஆவிர்ப்பவித்துத் தன்னை வணங்குமாறு சொன்னதாய்ச் சொல்கின்றனர். அடுத்து வருபவர் நம் நண்பர் விநாயகர் ஒரு அருமையான வேலை செய்தவர்! என்ன தெரியுமா? மறைந்து இருந்த ஒரு பொருளைக் காட்டிக் கொடுத்தவர். அதுவும் யாருக்கு? சோழ மன்னனுக்கு! என்ன பொருள்? எந்த மன்னன்? யோசியுங்கள், நாளைக்கு வந்து சொல்றேன்.
Sunday, August 05, 2007
சிதம்பர ரகசியம் - சரபர் தோன்றிய காரணம்!
அபி அப்பா சொன்னதின் பேரில் தனிப்பட்டக் குறிப்புக்கள் எதுவும் இல்லாமல் கூடியவரை பதிவின் தலைப்புக்கள் சம்மந்தமாகவே எழுதத் தீர்மானித்து இருக்கேன். இருந்தாலும் சில சமயம் உதவிகள் செய்து வருபவர்களைக் குறிப்பிட வேண்டும். சரபர் பத்தின கதை ஏற்கெனவே தெரியும் என்றாலும், அவ்வளவு விவரமாய்த் தெரியாமல் கூகிளில் ஒரு நாளைச் செலவழித்தபின் வழக்கம் போல் நண்பர் "அகிரா"வின் உதவியை நாடினேன். அவர் கொடுத்த லிங்கில் இருந்து எடுத்த தகவல்கள் பெரிதும் உதவின. "அகிரா"விற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
***********************************************************************
ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு , வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல், இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த "ஸ்ரீ" கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுவதாய்ச் சொல்கின்றனர். இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். தோற்றத்தின் காரணம் தெரிந்து விட்டது. இனி உடலின் ஒவ்வொரு பாகமும் எந்த அமைப்பில் ஏற்பட்டது எனப் பார்ப்போம்.
சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்" என்றும் "சாலுவேஸ்வரன்" என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.
எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் "கலியுக வரதன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். "நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி" என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலில் நாம் பார்த்ததும் தனிச் சன்னதி தான். ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப் படுகிறது.
Friday, August 03, 2007
சிதம்பர ரகசியம் -நிருத்த சபைக்கு வந்துட்டோமே!
ஒரு வாரமா எழுத நினைச்சும் ஒண்ணுமே முடியலை. உடம்பு சரியில்லை என்பது ஒரு பக்கம். முக்கியக் குறிப்புக்களை எடுக்க முடியாமல் எங்கேயோ வச்சுட்டு இன்னிக்குத் தான் தேடி எடுக்க முடிஞ்சது. சிலர் தினமும் போடாதே, ஒரு வாரம் ஒண்ணு எழுதுன்னு சொல்றாங்க, விஷயத்தை நாங்க புரிஞ்சுக்க முடியறதில்லைனு அவங்களோட வருத்தம், இன்னும் சிலருக்குத் தினமும் எழுதலியேன்னு. நானும் 2 நாளுக்கு ஒரு முறையாவது எழுதிடணும்னு நினைப்பேன். முடியறதில்லை. இப்போ நிருத்த சபைக்குப் போவோமா?
********************************************************************
நிருத்த சபை என்பது வெளிப் பிரகாரம். இங்கே நாம் இப்போது தரிசிக்கப் போவது பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப் பட்ட சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும். இந்த சோமாஸ்கந்தர் இங்கே வந்ததுக்கும் ஒரு கதை இருக்கிறது.
வனவாசம் செய்து வந்த பஞ்ச பாண்டவர்கள் தருமபுத்திரரின் பிறப்புக்குக் காரணம் ஆன தர்மராஜனின் உபதேசத்தின் பேரில் சிவனைத் துதிக்க நல்ல இடம் தேடினார்கள். அதற்கு அவர்கள் தென்பகுதி தான் உகந்தது என முடிவெடுத்து வந்தபோது சிதம்பரம் பற்றிக் கேள்விப் பட்டு சிதம்பரம் வர "கால முனிவரின்" உபதேசத்தின் பேரில் தாங்கள் இழந்த ராஜ்யத்தைப் பெறுவதற்கும், வாழ்வின் மேன்மைக்கும் சிவபூஜை செய்ய, சிவன் சோமாஸ்கந்தரின் வடிவில் நடனக் கோலத்துடன் அவர்கள் எதிரே தோன்றி அனுக்கிரகம் செய்ததோடு அல்லாமல், ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜ ரூபத்தையும் காட்டி அருளினார். அப்போது முதல் இந்த மூர்த்தம் "பஞ்ச பாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்தி" என்ற பெயருடன் விளங்குகிறார். இவர் நிருத்த சபையின் வடபாகத்தில் இவரும் வடக்கே பார்த்துக் கொண்டே காட்சி அளிக்கிறார்.
காலசம்ஹார மூர்த்தி: இவர் பஞ்சபாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்திக்கு அருகேயே மேற்கே பார்த்துக் கொண்டு காணப் படுகிறார். பொதுவாக காலசம்ஹார மூர்த்தி, மார்கண்டேயருடனும், திருக்கடையூருடனுமே தொடர்பு கொண்டிருந்தாலும் இங்கேயும் காணப் படுகிறார்.
அடுத்தது ரொம்ப முக்கியமானவர். சரபர்: இவரைப் பற்றி ஏற்கெனவேயே "திவாகர்' கேட்டிருந்தார். இவருக்கு இங்கே தனிச் சன்னிதியே உள்ளது. தனியான பூஜைகள், அர்ச்சனைகள், அபிஷேஹங்கள் எல்லாம் உண்டு. இவரும் அந்த சிவபெருமானின் ஒரு ஸ்வரூபம் தான் என்றாலும் இவரின் தோற்றம் விசித்திரமாய் இருக்கும். இவர் மனித ரூபத்திலும், பறவைகள் போல் இறக்கைகளுடனும், மிருகங்கள் போன்ற உடல் அமைப்பிலும் காணப் படுவார். இவரின் தோற்றம் பற்றிப் பல புராண்ங்கள், உபனிஷதங்கள், ஆகமங்கள் பலவிதமாய்க் கூறினாலும் காளிகாபுராணம் கூறுவது என்னவென்றால்: நாளை பார்ப்போமா?
********************************************************************
நிருத்த சபை என்பது வெளிப் பிரகாரம். இங்கே நாம் இப்போது தரிசிக்கப் போவது பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப் பட்ட சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும். இந்த சோமாஸ்கந்தர் இங்கே வந்ததுக்கும் ஒரு கதை இருக்கிறது.
வனவாசம் செய்து வந்த பஞ்ச பாண்டவர்கள் தருமபுத்திரரின் பிறப்புக்குக் காரணம் ஆன தர்மராஜனின் உபதேசத்தின் பேரில் சிவனைத் துதிக்க நல்ல இடம் தேடினார்கள். அதற்கு அவர்கள் தென்பகுதி தான் உகந்தது என முடிவெடுத்து வந்தபோது சிதம்பரம் பற்றிக் கேள்விப் பட்டு சிதம்பரம் வர "கால முனிவரின்" உபதேசத்தின் பேரில் தாங்கள் இழந்த ராஜ்யத்தைப் பெறுவதற்கும், வாழ்வின் மேன்மைக்கும் சிவபூஜை செய்ய, சிவன் சோமாஸ்கந்தரின் வடிவில் நடனக் கோலத்துடன் அவர்கள் எதிரே தோன்றி அனுக்கிரகம் செய்ததோடு அல்லாமல், ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜ ரூபத்தையும் காட்டி அருளினார். அப்போது முதல் இந்த மூர்த்தம் "பஞ்ச பாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்தி" என்ற பெயருடன் விளங்குகிறார். இவர் நிருத்த சபையின் வடபாகத்தில் இவரும் வடக்கே பார்த்துக் கொண்டே காட்சி அளிக்கிறார்.
காலசம்ஹார மூர்த்தி: இவர் பஞ்சபாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்திக்கு அருகேயே மேற்கே பார்த்துக் கொண்டு காணப் படுகிறார். பொதுவாக காலசம்ஹார மூர்த்தி, மார்கண்டேயருடனும், திருக்கடையூருடனுமே தொடர்பு கொண்டிருந்தாலும் இங்கேயும் காணப் படுகிறார்.
அடுத்தது ரொம்ப முக்கியமானவர். சரபர்: இவரைப் பற்றி ஏற்கெனவேயே "திவாகர்' கேட்டிருந்தார். இவருக்கு இங்கே தனிச் சன்னிதியே உள்ளது. தனியான பூஜைகள், அர்ச்சனைகள், அபிஷேஹங்கள் எல்லாம் உண்டு. இவரும் அந்த சிவபெருமானின் ஒரு ஸ்வரூபம் தான் என்றாலும் இவரின் தோற்றம் விசித்திரமாய் இருக்கும். இவர் மனித ரூபத்திலும், பறவைகள் போல் இறக்கைகளுடனும், மிருகங்கள் போன்ற உடல் அமைப்பிலும் காணப் படுவார். இவரின் தோற்றம் பற்றிப் பல புராண்ங்கள், உபனிஷதங்கள், ஆகமங்கள் பலவிதமாய்க் கூறினாலும் காளிகாபுராணம் கூறுவது என்னவென்றால்: நாளை பார்ப்போமா?
Subscribe to:
Posts (Atom)