எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, October 24, 2007

சிதம்பர ரகசியத்தில் இறைவனின் கூத்து!







சிறந்த சிவபக்தன் ஆன "முசுகுந்தச் சக்கரவர்த்தி" தேவேந்திரனுக்குத் தேவாசுர யுத்தத்தில் உதவி செய்தான். அதன் பலனாக அவனுக்குக் கிடைத்தவையே ஏழு விதமான நடராஜத் திருக்கோலங்கள். இவையே வேறுவிதமாயும் சொல்லப் படுகிறது. முசுகுந்தன் பூஜித்து வந்த நடராஜ மூர்த்தத்தைத் தேவேந்திரன் கவர்ந்து கொண்டு செல்ல, முசுகுந்தன் தேவேந்திரனுடன் போரிட்டு வென்றான். அவனின் நடராஜ மூர்த்தம் போலவே மற்றும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்து, முசுகுந்தனிடம் காட்டுகிறான் தேவேந்திரன். உன்னுடையது இவற்றில் எதுவோ நீயே பார்த்து எடுத்துச் செல் எனக் கூறுகிறான். இறை அருளால் சரியான மூர்த்தத்தைக் கண்டறிகிறான் முசுகுந்தன். அதுவே திருவாரூர் தியாகராஜா எனவும், மற்ற
மூர்த்தங்களையும் முசுகுந்தனுக்கே தேவேந்திரன் அளித்தான் எனவும் அவை முறையே

திருவாரூர் - வீதி விடங்கர் - அஜபா நடனம்

வேதாரண்யம் - புவனி விடங்கர் -ஹம்சபாதா நடனம்

நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர் - விசி நடனம்

திருநள்ளாறு - நகர விடங்கர் - உன்மத்த நடனம்

திருக்காரயல் - ஆதி விடங்கர் - குக்குட நடனம்

திருக்குவளை - அவனி விடங்கர் - ப்ருங்க நடனம்

திருவாய்மூர் - நிலா விடங்கர் - கமலா நடனம்

என்று சொல்லப் படுகிறது. பொதுவாக ஈசனின் திருநடனம் 9 வகை எனவும் சொல்லப் படுகிறது. அவை ஆனந்தத் தாண்டவம், காளி தாண்டவம் அல்லது காளி நிருத்தம், கெளரி தாண்டவம், முனி நிருத்தம், சந்த்யா தாண்டவம்,. சம்ஹார தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதம் மற்றும் பிட்சாடனம். இதைத் தவிரத் தஞ்சை மாவட்டத்தின்
திருவெண்காட்டிலும், திருச்செங்காட்டாங்குடியிலும் ஈசனின் நாட்டியக் கோலங்களைப் பார்க்கலாம். திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் ஈசனின் இந்தக் கூத்தை ஐந்து
வகைகளாய்ப் பிரித்துள்ளார். அவை சிவானந்தக் கூத்து, அறிவையும், சுந்தரக் கூத்து, ஆற்றலையும், பொற்பதிக் கூத்து, அன்பையும், பொற்றில்லைக் கூத்து, ஆற்றல் கூடுதலையும், அற்புதக் கூத்து, அறிவு கூடுதலையும் குறிப்பதாய்ச் சொல்லுகிறார்.

சிவானந்தக் கூத்து: திருமந்திரப் பாடல்

"தானந்தமில்லாச் சதானந்த சத்தி மேல்
தேனுந்தும் ஆனந்தமாநடங்கண்டீர்:
ஞானங்கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கானது."

சுந்தரக் கூத்து:

"அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பாலும்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்
கண்டங்கரியான் கருணை திருவுருக்
கொண்டங்கு உமை காணக் கூத்து தந்தானன்றே!"

பொற்பதிக் கூத்து:

தெற்கு வடக்கு கிழக்கு மேற்குச்சியில்
அற்புதமானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனி நடஞ்செய்யுமே!"

பொற்றில்லைக் கூத்து:

"அண்டங்கள் ஓரேழும் அப்பொற்பதியாகப்
பண்டையாகாசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டனிற் சத்தி திரு அம்பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்து கந்தானன்றே!"

அற்புதக் கூத்து:

"இருவருங்காண எழில் அம்பலத்தே
உருவோடருவோடு அருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தனாந்தன்
அருளுருவாக நின்றாடலுற்றானே!"

ரகசியம் தொடரும்......

3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

சப்தவிடங்கர்கள் என்பது நடராஜ ரூபமா?....நான் என்னமோ தியாகராஜன் (சோமாஸ்கந்த ரூபம்) என்றல்லவா நினைத்திருந்தேன்....திருவாரூரிலும் தியாகராஜன் என்று சோமாஸ்கந்த ரூபத்தையல்லவா குறிப்பிடுகிறார்கள்?
குழப்பமாக இருக்கு...

Geetha Sambasivam said...

குழப்பமே வேணாம், இதுவும் ஒரு வகை நாட்டியக் கோலம் என்றே திருவாரூர்த் தல புராணத்திலும், இன்னும் சில பதிவுகளிலும், வேறு சிலரின் கூற்றுக்களிலும் படித்துத் தெரிந்து கொண்டே எழுதி உள்ளேன். விவரமாய் எழுதுகிறேன். இந்தத் "தியாகராஜா" தனியாக இருப்பார். இவரைத் தவிர மூல லிங்கமும், அன்னையும் வேறே தனியாக உண்டு. தகவல்கள் சேகரித்துக் கொண்டு எழுதுகிறேன்.

jeevagv said...

பச்ச்சை நிறத்தில் வித்யசமாக இருக்கிறதே என வியந்து கொண்டிருந்தேன்!