எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, January 09, 2008

சிதம்பர ரகசியம் - ஆகமச் சிறப்பைப் பற்றித் திருமூலர்!

ஆகமங்களைப் பற்றித் திருமூலர் கூறியவை தொகுத்துக் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

திருமூலரின் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே வேதத்தின் சிறப்பைப் பற்றி 6 பாடல்களும், அதற்குப் பின்னர் ஆகமச் சிறப்பு என்ற தலைப்பிலே 10 பாடல்களும் வருகின்றன.

1.அதில் ஆகமங்கள் மொத்தம் 28 எனவும் அவை யாவுமே சிவபெருமான் அருளிச் செய்தவை எனவும் கூறுகின்றார். ஈசனின் ஈசான முகத்தில் இருந்து இவ்வாக்கியங்கள் வந்து ஆகமமாய் நிலை பெற்றது எனவும் சொல்கின்றார். அதற்கான பாடல்:

//அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.//

2.இந்த ஆகமங்களை எண்ணினால் 28 என்றாலும் அவை இந்த அளவில் நில்லாமல் அளவின்றியும் உள்ளன. இவற்றைப் பற்றிக் கூறிய 66 பேர்களைத் தவிர, யானும் இது பற்றிச் சிந்தித்துத் துதிக்க ஆரம்பித்தேன்.

//அண்ண் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.//

3.இறைவன் அருளால் அருளப் பட்ட இந்த ஆகமம் ஆனது வானோர்களாலும் அறியப் படாத ஒன்றாகும். இவை அனைத்தும் சொல்லப் பட்டால் பூவுலக மாந்தர்க்கு அறிய முடியாத ஒன்றாகும்.

//அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.//

4.சிவலோகத்தில் "சதாசிவ"மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலானோர்க்கு உணர்த்திய ஈசன், அவற்றைப் பூலோக மாந்தர் அறியும்படி உரைத்த போது,"சீகண்ட பரமசிவன்" ஆக இருந்து உணர்த்த, அதைக் கேட்ட நந்தி எம்பெருமான் மெய்யுணர்வோடு, அவற்றை உணர்ந்தவராய் மெய்யுணர்வோடு விளங்கப் பெற்றார்.

//பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.//

5.இத்தனை ஆகமங்களில் சிறந்ததான ஒன்பது ஆகமங்கள் நாத தத்துவத்தில் நிலைத்த சிவத்திடம் இருந்து வந்த காலத்தில், சிவமானது, விந்து தத்துவத்தில் நிலைத்த சத்தியினிடத்தில் இதை உணர்த்த, சத்தியானது, தன்னில் இருந்து தோன்றிய சதாசிவருக்கும், சதாசிவர், சம்பு பட்ச மகேசுவரருக்கும் அங்கிருந்து அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர், பின்னர் உருத்திரர், திருமால், பிரம்மா என அனைவருக்கும் சென்றடைந்த இந்த ஆகமங்களில் ஒன்பதை எங்கள் ஆசிரியர் ஆன நந்தி எம்பெருமான் சீகண்ட பரமசிவனிடமிருந்து பெற்றார்.

//சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.//

6. அந்த ஆகமங்கள் முறையே 1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6......7.....8.... சுப்பிரபேதம், 9. மகுடம் ஆகியவை ஆகும்.

//பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.//

7. இறை அருளால் சொல்லப் பட்ட இந்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும், அவற்றின் உட்பொருளை, இப்பூவுலக மக்கள் அறியவில்லை எனில் அது அவர்களுக்குச் சரிவரப் பயன்படாது.

// அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.//

8.மக்கள் அனைத்து மெய்யுணர்வையும் உணராது, புலனுணர்வே மிகப் பெற்று வாழுங்காலத்து, அதைப் போக்கும் வண்ணம் சிவபெருமான், உமாதேவியார்க்கு "ஆரியம், தமிழ்" என்னும் இரு மொழிகளை உலகம் உய்யச் சொல்லித் திருவருள் செய்ய எண்ணங்கொண்டான்.

//மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.//

9.இறைவன் உயிர்களைப் பாசத் தளையினின்று விடுவிக்கின்ற முறையையும், பின் உயிர்கள் தன்னிடம் செலுத்தும் அன்பால் அவற்றைத் தன்னிலேயே நிலை நிறுத்தும் முறையையும், அவ்வாறு நிலை நிறுத்தும்போது, உயிரானது பண்டைய நினைவுகளால் மோதி அலைப்புண்டு, பாசத்திலே பொருந்தி நிற்பதையும், "தமிழ் மொழி, வடமொழி" இவ்விரு மொழிகளுமே ஒரே மாதிரியாக உணர்த்தும். அவற்றைச் சரியானபடி உணராதவருக்குச் சிவஞானம் கை கூடுவது அரிதே யாகும்.

// அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.//

10.மொழிகள் பதினெட்டு உள்ளன, அனைத்து மொழிகளுமே, சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும், சிறப்பாகவும் அனைவரும் உணர அமைத்த வாயிலே. அதை உணராத கற்றோர், எத்தனை தான் கற்றிருந்தாலும் "கல்லாதவர்" என்றே உணரப் படுவார்கள்.

//பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.//

8 comments:

திவாண்ணா said...

//6. அந்த ஆகமங்கள் முறையே 1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6......7.....8.... சுப்பிரபேதம், 9. மகுடம் ஆகியவை ஆகும்.//
6,7,8 என்ன ஆச்சு?


//பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்//

மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
மற்று அவ்வியம் ஆமளம் ஆகுங்கால் உத்தரம்

சரிதானா?

Geetha Sambasivam said...

மண்டையை உடைச்சிட்டு இருக்கேன், நண்பர் சிவசிவாவைக் கேட்டால் அர்த்தம் சரியாச் சொல்லுவார், அதுக்குள்ளே மானத்தை வாங்கணுமா? :P

திவாண்ணா said...

சரீ..... சரீ.... பொறுக்கிறேன்.
:-)

Geetha Sambasivam said...

தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக உரையில் 6-வியாமளம், 7-காலோத்தரம், 8-சுப்பிரம்... என்று கூறியிருக்கிறார்கள். (பொதுவாக இந்த உரைநூல் மீது எனக்கு நம்பிக்கை குறைவு)

ஆனால், தருமை ஆதீன உரையில், "இத்திருமந்திரத்தின் மூன்றாம் அடி, 'நாயனார் திருமொழியன்று' என்பது தெளிவாய்த் தெரிகின்றது....." என்கிறார்கள். (தருமை ஆதீன உரை - quite reliable)

Geetha Sambasivam said...

நண்பர் சிவ சிவா கூறியவை இவை!

திவாண்ணா said...

உம். நாலு புலவர்கள் சேர்ந்தால் அவ்வளவுதான். குழப்பி விடுவார்கள்!
:-(

Geetha Sambasivam said...

அட, இதிலே நீங்க கமெண்டி இருக்கீங்க??? ஆச்சரியமா இருக்கே? :P

Sivamjothi said...

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454