எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, April 11, 2008

சிதம்பர ரகசியம் - மேலும் தகவல்கள் கொடுக்கின்றார் வெங்கட்ராம் திவாகர்!

சிம்மவர்மன், மகேந்திர பல்லவனின் தாத்தா அதாவது, சிம்மவிஷ்ணுவின் தந்தை. சிம்மவர்மனுக்கு தோல்நோய் கண்டவர். இந்நோய் தீர தில்லையில் உள்ள சிவகங்கை குளத்தில் மூழ்கி பெரும் பலன் பெற்றதாக பழைய தகவல்கள் உள்ளன. இவர் ஆண்ட காலம் ஏறத்தாழ கி.பி.550 ஆகும்.

சைவத் திருமரபில் புகழ்பெற்ற ஐய்யடிகள் காடவர்கோன் சிம்மவர்மன் காலத்தவர். இவர்தான் சிம்மவர்மனை சிதம்பரத்திற்கு இழுத்ததாக சரித்திர ஆசிரியர் (என்.சுப்பிரமணியன்-Social and Cultural History of Tamilnadu) எழுதியுள்ளார். ஐய்யடிகள் காடவர்கோனும் ஒரு பல்லவ மன்னர்தாம் என்றாலும் இவர் சிம்மவர்மனுக்கு கீழாகவோ, அல்லது உறவாகவோ இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இவர் எழுதிய 24 பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. க்ஷேத்திர திருவெண்பா எனும் பெயர் கொண்ட இப்பாடல்கள்தான் தமிழின் முதல் கோயில் பயண நூல். 24 கோயிலகளில் குடிகொண்ட சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்களை இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் என எழுதியுள்ளார்.
11 ஆவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களைப் படித்தாலே தமிழும் தேனும் ஏன் ஒரே வகையில் சேர்க்கப்பட்டது என்பது புரியும். சுந்தரப் பெருமானும், நம்பியாண்டார் நம்பியும், மற்றும் சேக்கிழார் பெருமானும் இப்பெருமானைப் பற்றி எழுதியுள்ளார்கள்.

அடுத்து கோப்பெருஞ்சிங்கன் (பதிமூன்றாம் நூற்றாண்டு): பிற்காலப் பல்லவ அரசன். மீண்டும் பல்லவ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க ஆசைகொண்டு தோற்றுப் போனவன்) இவன் முதலில் சேந்தநல்லூரை தலை இடமாகக் கொண்டு ஆண்டுவந்த சிற்றரசன்தான். ஆனால் காலம் செல்ல செல்ல இவன் சோழப் பேரரசனாக இருந்த மூன்றாம் குலோத்துங்கனையும் மீறி பலம் பெற்றவன். ஏறத்தாழ ஒரு சக்கரவர்த்தி போல ஆட்சி செய்தவன். தில்லை அம்பலத்து கீழவாசல் கோபுரம் இவனால் கட்டப்பட்டது என்பார்கள் சரித்திர ஆசிரியர்கள். இந்த அரசனைப் பற்றிக் காவியமே எழுதப்பட்டது.(காத்யகர்ணாம்ருதம்-சமுஸ்கிருத நூல்)

சிதம்பரம் கோயிலைப் பற்றி ஆய்வாளர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், (ஏறத்தாழ 2000 பக்கங்கள் கொண்டது) மற்றும் குடவாயில் பாலசுப்ரமணியம் ஆய்வுப் புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.

திவாகர்

திரு திவாகர் கொடுத்த மேல் அதிகத் தகவல்களை அவர் அனுமதியுடன் போட்டுள்ளேன். இன்னும் தகவல்கள் யாரானும் கொடுத்தாலும் நல்லது.

24 பாடல்கள் ஆன சேத்திரத் திருவெண்பா குறிப்பிடும் சிவதலங்கள். தில்லைச் சிற்றம்பலம், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவையாறு, திருவாரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, திருஇடைவாய் திருநெடுங்களம், திருத்தண்டலைநீணெறி, திருஆனைக்கா, திருமயிலை, திருஉஞ்சேனைமாகாளம், திருவளைகுளம், திருச்சாய்க்காடு, திருப்பாச்சிலாச்சிராமம், திருச்சிராப்பள்ளி திருமழபாடி, திருஆப்பாடி, திருக்கச்சியேகம்பம், திருக்கடவூர், திருப்பனந்தாள், திருவொற்றியூர், திருமயானம் (கச்சி, கடவூர், நாலூர்).

1 comment:

மெளலி (மதுரையம்பதி) said...

ஐய்யடிகள் காடவர்கோனுக்கு தென் தமிழகம் பற்றி ஒன்றும் தெரியாது போல...எல்லாம் தஞ்சை மற்றும் தொண்டை மண்டல கோவில்கள் பற்றி மட்டும் பாடியிருக்காரு :-)