
"மருவிய சகாத்தமாயிரமும் ஐநூற்றெழுப
துக்கு மேல் சருவதாரி
வருஷமார் கழிமாதம் ஆதித்த வாரமதில்
மன்னும் அம்பலவாணரை
அருமையொடு குடுமிமா மலையினாற் பதுமாதம்
அப்புற மதுரை தனிலே
அடவுடன் எழுந்தருளி ஆகமுப்பதியின்
னெட்டான அட்சய வருஷமும்
பரவு கார்த்திகை மாத தேதிபதி னாலுடன்
பருதிநாள் வளர்பக்கமும்
பகருத்தி ரட்டாதி திசமிக்கும் பத்தினிற்
பாருயிரே லாமுய்யவே
திருமருவு செம்பொன்மா மழைகளது பொழியுவுந்
தில்லைமா னகர் வாழவுந்
தேவர்கள் துதிக்கவு மூருடைய முதலியார்
சிற்சபையுள் மேவினாரே!"
இதன் பின்னர் தில்லைக் கூத்தன் மீண்டும் தில்லையில் இருந்து வெளியே சென்று 1696-ல் சிதம்பரம் மீண்டும் வந்தார் என்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் குறிக்கப் பட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது. இதற்கு அப்போதைய முகலாய சாம்ராஜ்ய அரசன் ஆன ஒளரங்கசீப்பின் படை எடுப்புக் காரணமாய் இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். தென்னாட்டில் செஞ்சியில் 7 ஆண்டுகள் இந்தப் படைகள் தங்கி இருந்ததாயும் தெரிய வருகின்றது. தஞ்சை மராட்டிய வம்சத்து அரசர்களுக்குத் தில்லைக் கூத்தன்பால் உள்ள அன்பால் அச்சமயம் திருவாரூரில் தில்லைக் கூத்தனை மறைத்து வைத்திருந்ததாயும் சொல்கின்றனர். அப்போது எடுத்துச் செல்லப் பட்ட செப்பேடுகள் பின்னாட்களில் அம்பலவாணன் தில்லைக்குத் திரும்பும்போது திருவாரூரிலேயே தங்கிவிட்டபடியால் அந்தச் செப்பேடுகள் திருவாரூர்ச் செப்பேடுகள் என்று அழைக்கப் பட்டதாயும் சொல்கின்றார். தில்லைப் பேரம்பலத்தில் அம்பலவாணனை மறைத்து வைத்திருந்த பெட்டியை இன்றும் காண முடிகின்றது.
அடுத்து சைவ மடங்களின் தொண்டுகளைச் சிறிது காணலாம். சைவ மடங்கள் ஆன தருமபுரம் ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம் ஆகியவை தில்லைச் சிற்றம்பலக் கூத்தன் பால் பேரன்பு பூண்டு அங்கு தொண்டு செய்வதை பெரும் பாக்கியமாய்க் கருதும் மடங்கள் ஆகும். இந்த மடங்கள் தினசரி வழிபாட்டுக்கான கட்டளைகள் மட்டுமின்றி திருப்பணிகளும் செய்து கொடுக்கின்றன. இம்மடங்கள் முறை போட்டுக் கொண்டு ஓதுவார்களையும் தயார் செய்து கோயிலுக்கு அளித்து வருகின்றது. இந்த மடங்களால் நிர்வகிக்கப் படும் திருமுறைக் கழகம் தில்லை வாழ் அந்தணர்கள், ஓதுவார்கள், மற்றும் பொதுமக்களில்விரும்புபவர்களுக்குத் திருமுறை கற்றுக் கொடுக்கும் பணியையும் செய்து வருகின்றது.
எல்லாக் கால பூஜைகளிலும் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு போன்ற பஞ்ச புராணங்கள் என்று சொல்லப் படும் தமிழ்ப் பாக்கள் தான் பாடப்பட்டு வருகின்றன. தினசரி ஒவ்வொரு கால பூஜையின் போதும் கோயிலின் முறையான ஓதுவார்களால், திருவெம்பாவையும் ஓதப் படுகிறது. இவை நந்திக்குப் பின்னர் இருந்தே ஓதப் படவேண்டும் என்பது மரபு. இந்த ஓதுவார்களை இதற்கெனவே தயார் செய்து அளிப்பதில் இருந்து ஓதுவார்களுக்கான செலவுகளையும் சைவ மடங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளுகின்றது. சிவன் கோயில்களில் மட்டுமே ஓதுவார்கள் என்ற தனி அடியார்கள் இருக்கின்றனர். இவர்களே தமிழிசைப் பாடல்கள் ஆன தேவார, திருவாசகப் பாடல்களை வழிபாட்டின் காலத்துக்கு ஏற்றாற்போல் பாடுகின்றனர்.
தற்சமயம் பாடி வருபவர்களில் ஒரு பெண்மணியும், சிதம்பரத்திலேயே இருக்கும் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் (ஓய்வு) இருவரும் திருப்பனந்தாள் மடத்தால் நியமிக்கப் பட்டு பாடிவருவதாய்த் தெரிய வருகின்றது. பரம்பரை ஓதுவார்கள் போல பாவமும், ராகமும் அமையாவிட்டாலும் இறைவன் மேல் கொண்ட ஆசையும், அன்பும், தமிழின் மேல் கொண்ட ஆர்வமும் இவர்களைப் பாட வைக்கின்றது. ஒவ்வொரு காலபூஜை வழிபாட்டின் போதும் அனைத்து பக்தர்களும் இறைவனைத் தரிசிக்கும் வண்ணம் கனகசபையில் வைத்தே அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆராதனைகளும், அபிஷேகங்களும் நடக்கும்போது பக்தர்கள் அனைவரும் கட்டுக்கோப்புடனும், ஒழுங்கு முறையுடனும் நின்று கொண்டு தரிசிப்பதோடு அல்லாமல் வெளி ஊர் பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் தமிழ்நாட்டிலேயே இந்தக் கோயிலில் பார்க்க முடிகின்றது.


No comments:
Post a Comment