எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, February 04, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்! அஹோபிலம் 1

நாங்க எப்போவும்போல் தனி அறைக்கு முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தோம். அஹோபிலம் மடத்திலும் அறைகள் கிடைக்கும். திருப்பதி தேவஸ்தானமும் அறைகள் வாடகைக்குக் கொடுக்கின்றன. எதிலே தங்குவதாய் இருந்தாலும் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். இல்லை எனில் ரொம்பக் கஷ்டம் அறைகள் கிடைப்பது. அறையை ஜன்னல் கதவில் இருந்து எல்லாவற்றையும் திறக்காமல் இருத்தல் நலம். முன்னோர்கள் சர்வ சகஜமாய் வருவார்கள். அஹோபிலம் ஊர்க்காரர்கள், "எங்க வானரங்கள் ரொம்பவே சாதுவாக்கும்! உங்க ஷோலிங்கர் வானரங்களைப் போல கிடையாது!" என்று பெருமை அடித்துக் கொண்டாலும், நமக்குப் பயமாகவே இருக்கின்றது. எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது ISCON அமைப்பாளர்கள் கட்டியுள்ள தங்கும் விடுதியில். அறை வாடகை 250 யில் இருந்து 300 -க்குள் இருக்கலாம். அஹோபிலம் மடம் அவ்வளவுதான் வாங்குகின்றனர். என்றாலும் இங்கே கொஞ்சம் அதிகம். 400ரூ. கொடுத்தோம். அறைகள் நன்கு பராமரிக்கப் படுகின்றன. இது தவிர சாப்பிடும் உணவு விடுதிகள் எதுவும் இல்லை. ஆகவே தனியாய்ப் போனால் சாப்பாடு ஒரு பிரச்னை தான். மடத்தில் அன்னதானம் இரு வேளை நடக்கின்றது. அதைத் தெரிந்து வைத்துக் கொண்டு போகலாம்.

எங்களுக்கு நாங்கள் கொடுத்த பணத்திலேயே காலை காபி, காலை உணவு, மதியம் சாப்பாடு, சாயங்காலம் காபி அல்லது டீ, இரவு உணவு அடங்கியது. மடத்தில் இருந்து சமைத்து எடுத்து வந்தார்கள். ஆகவே செல்லும்போது உங்களுக்கு ஏற்ற பயணத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போ காலை ஆகாரம் முடிச்சுக் குளிச்சுக் கிளம்பியாச்சு நரசிம்மர் தரிசனத்துக்கு. அங்கேயும் மின் தடை ஆற்காட்டாருக்குத் தம்பி தான் அங்கே மின்சார அமைச்சர் போல. காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் மின்சாரம் வராது. குளிக்க வெந்நீர் முதல் நாள் கொடுக்க முடியலை. மறுநாள் காலை சீக்கிரமே எழுப்பிக் கொடுத்துவிட்டார்கள். இனி முதலில் அஹோபிலம் கோயில் வரலாற்றைப் பார்ப்போம். பின்னர் பயண அனுபவமும் நடு நடுவே வரும்.
************************************************************************************

நம் நாட்டில் ஒவ்வொரு மலைக்கும், ஒவ்வொரு நதிக்கும் புனிதம் உண்டு. வடக்கே இமயத்தில் ஆரம்பித்தால் தெற்கே கன்னியாகுமரி வரையிலும் ஒரே மாதிரியான கதைகள், காவியங்கள், புராணங்கள். அதிலும் தென்னாடு இதில் தனித்துவம் வாய்ந்தது என்றே சொல்லலாம். மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகு கண்ணையும், கருத்தையும் கவர்ந்து கொள்ளும் திருமணம் ஆகப் போகும் இளம்பெண்ணைப் போல் அழகு கொஞ்சினால், கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைகள், பக்குவமடைந்த, மனமுதிர்ச்சி அடைந்த பெண்ணைப் போல் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்கள் ஆன்மீகத்துடன் நெருங்கிய சம்பந்தம் கொண்டது. இயற்கையின் சுந்தரம் மட்டுமின்றி, ஆன்மீகத்தின் புனிதமும் சேர்ந்தது கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர். இந்தக் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களையே மஹா சர்ப்பம் ஆன ஆதிசேஷன் சுருண்டு படுத்திருப்பதாய்ச் சொல்லுகின்றனர். அவரின் தலைப்பகுதி திருப்பதியும், மத்திய உடல் பகுதி அஹோபிலம் என்றும், நீண்டு சுருட்டி வைக்கப் பட்ட வால்பகுதி ஸ்ரீசைலம் எனவும் சொல்லுவார்கள்.

திருப்பதிக்கு மலை எறித் தரிசிக்க குறைந்தது 4 மணி நேரம் ஆகும்.மலை ஏறி விடலாம். ஸ்ரீசைலம் சென்று தரிசிக்கும்படியாகவே இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். ஆனால் அஹோபிலம் அப்படி இல்லை. மிகுந்த மன உறுதியும், உடல் உறுதியும், உள்ளார்ந்த பக்தியும் இருந்தாலே செல்லமுடியும் எனச் சொல்கின்றனர். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மற்ற அவதாரங்களில் இருந்தும் மாறுபட்டது நரசிம்ம அவதாரம். கண நேரத்தில் பக்தனின் வேண்டுகோளுக்காகத் தோன்றி, குறைவான நேரமே இருந்து தான் எதற்காக வந்தோமோ அதை முடித்துக் கொண்டது இந்த அவதாரம் மட்டுமே. மற்ற அவதாரங்களில் உலகத்து மக்களுக்காகவும் தேவர்களின் அபயக் குரலுக்காகவுமே எடுக்கப் பட்டு வந்தது. ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு சிறு பையனின் உண்மையான பக்திக்காகவும், வேண்டுகோளுக்காகவும், உண்மையை நிலை நாட்டுவதற்கு எடுக்கப் பட்டது. உக்கிர ஸ்வரூபமாய் எடுக்கப் பட்ட நரசிம்மரைப் பார்க்கும்போதே ஹிரண்யகசிபு அச்சம் கொண்டான். ஆனால் பிரஹலாதனுக்கோ பெருங்கருணையே நரசிம்ம வடிவெடுத்து வந்திருப்பதாய்த் தோற்றம் அளித்தது. சற்றும் அஞ்சாமல் வணங்கி நின்றான். இப்பேர்ப்பட்ட அவதார புருஷனைத் தரிசிக்கும் எண்ணத்துடன் கருட பகவான் முன்னொரு காலத்தில் இம்மலைப் பிராந்தியத்தில் தவம் இருந்தார். கருடனின் தவத்துக்குப் பரிசாக நரசிம்மர் இங்கே காட்சி அளித்தார் ஒரு மலைக்குகையில். இனி ஒவ்வொரு மலைக் குகையாகச் சென்று பார்க்கலாமா??

11 comments:

Raghav said...

அற்புதமான ஒரு தொடரை ஆரம்பிச்சுருக்கீங்க.. நரசிம்மரை தரிசிக்கத் தயார்..

நானும் செல்ல வேண்டும் என்று நினைத்துள்ளேன், தங்கள் பதிவு அதற்குரிய மன உறுதியை தரட்டும்.

மாலோலன் தரிசனமும் உண்டு தானே..

ஞாபகம் வருதே... said...

அறை முன் பதிவு என்பது எப்படி.திருமலை மாதிரி ஆன் லைன் முன்பதிவு உண்டா?

Geetha Sambasivam said...

வாங்க ராகவ், பத்து நரசிம்மரும் உண்டு. மாலோல நரசிம்மர் இல்லாமலா??

Geetha Sambasivam said...

வாங்க ஞாபகம் வருதே! முதல் வரவு???
அறை முன்பதிவுக்கு அஹோபிலம் மடத்தின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அது தவிரவும் திருப்பதி தேவஸ்தான அறையின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இஸ்கான் காரங்க கிட்டே கேட்கணும், நாங்க தங்கி இருந்த அறைகள் முன்பதிவு பத்தி, எங்களுக்கு மொத்தமாய் குழுவினரே ஏற்பாடு செய்துட்டாங்க. அஹோபிலம் மடத்தின் தொலைபேசி எண்களைக் குறிப்பிடுகின்றேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. பிலம் அஹோபிலம்.

கேட்டதுமே சிலிர்க்கிறது. கீதா. ஆரம்பமே அருமையா இருக்கு. உங்களோட வர நான் ரெடி. புண்ணியம் செய்தவர் நீங்கள்.

Geetha Sambasivam said...

வாங்க வல்லி, இடம் சொல்லவில்லையே, தேடுவீங்களோனு நினைச்சேன், கரெக்டா வந்துட்டீங்க, உண்மையிலேயே இங்கே செல்லக் கொடுத்துத் தான் வச்சிருந்தேன் என்பது போனதும் தான் புரிந்தது. அற்புத அனுபவம்.

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அருமையான தொடரை ஆரம்பித்திருக்கிறீர்கள் கீதாம்மா...இத் தொடரை விடாது படிப்பேன் :-)

Test said...

Mee too started...

jeevagv said...

சிதம்பரம் முடிந்து அபோஹிலமா, அசத்துங்க!

குமரன் (Kumaran) said...

//இப்போ காலை ஆகாரம் முடிச்சுக் குளிச்சுக் கிளம்பியாச்சு நரசிம்மர் தரிசனத்துக்கு. //

செய்த செயல்களின் வரிசை மாறுதே கீதாம்மா. சாப்பிட்ட பின் குளிச்சீங்களா? குளிச்சுட்டு சாப்பிட்டீங்களா? :-)

அகோபிலம் ஒன்பது ஆளரிகளையும் தரிசிக்க நானும் உங்களுடன் வருகிறேன்.

திவாண்ணா said...

/உக்கிர ஸ்வரூபமாய் எடுக்கப் பட்ட நரசிம்மரைப் பார்க்கும்போதே ஹிரண்யகசிபு அச்சம் கொண்டான். ஆனால் பிரஹலாதனுக்கோ பெருங்கருணையே நரசிம்ம வடிவெடுத்து வந்திருப்பதாய்த் தோற்றம் அளித்தது. சற்றும் அஞ்சாமல் வணங்கி நின்றான்.//

இப்படித்தான் யம தர்ம ராஜனையும் சொல்கிறாங்க கருட புராணத்திலே. யம லோகத்திலே பாபம் பண்ணவங்களுக்கு கொடூரமா எல்லாமே எல்லாரும் தெரிவாங்களாம். அதே இடத்திலே புண்ணியம் பண்ணவங்களுக்கு எல்லாமே எல்லாருமே நல்லதா தெரியுமாம்!