எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, April 18, 2009

ஜெய் சோம்நாத்!

சோமநாதர் கோயில் சைவர்களுக்கு, அதாவது சிவனை வழிபடுபவர்களுக்கு முக்கியமான இடமாக இருந்து வந்தது. அதன் உயர்ந்த லகுளீச சம்பிரதாயமும், அதைக் கடைப்பிடித்த ஆசாரியர்களும் மிகவும் செல்வாக்கும் பெற்றிருந்தனர். இந்தக் கோயிலைக் கைப்பற்றினாலே நாட்டைப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்ட அந்நியர்களில் முகமது கஜினி கி.பி.1025-ம் ஆண்டு இந்தக் கோயிலைத் தாக்கினான் முதல்முறையாக. சோமநாத ஜ்யோதிர்லிங்கமும் உடைக்கப் பட்டது. கி.பி 1000-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் மீதும், இந்தியக் கோயில்கள் மீதும் படை எடுத்த முகமது கஜினி முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஷாஹி அரசர்களை விரட்டியதோடு, 1009-ம் ஆண்டு பிரசித்தி பெற்ற நாகர்கோட் கோயிலையும், 1011-ம் ஆண்டு தானேஸ்வரத்தின் சக்ரஸ்வாமி என்ற பெயர் பெற்ற விஷ்ணு கோயிலையும் இடித்தான். கன்னோஜி, மதுரா போன்ற நகரங்களும் சூறையாடப் பட்டன. அதிலிருந்து ஆரம்பித்துக் கடும் முயற்சியின் பேரில் கஜினியால் சோமநாதர் கோயிலும் இடிக்கப் பட்டது. அது குறித்து தாரிக்-இ-ஃபிஷ்டா என்னும் பாரசீக நூல் கூறுவது:

முகமது தன் பெரிய படையோடு கஜினியில் இருந்து கி.பி. 1024-ம் ஆண்டு புறப்பட்டான். முகமதிய ஆண்டு ஷபான் ஏ.எச். 415 என்று சொல்லப் படுகிறது. படையின் வீரர்களுக்குச் சம்பளம் இல்லை. ஆனால் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும் ஆவலிலே வந்தார்கள் எனச் சொல்லப் படுகிறது. எதிர்ப்புகள் அதிகம் இல்லாத பாதையில் எச்சரிக்கையோடு வந்த சுல்தான் சோமநாத்தில் முப்புறமும் கடலால் சூழப்பட்டும், கோட்டை கொத்தளங்களில் ஆயுதங்கள் தாங்கிய வீரர்களையும் கண்டான். இந்து அரசர்கள் ஆன பிரம்மதேவ், தபிஷ்லீம் என்ற இருவரின் படைகள் தலைமையில் போர் நடந்தது. முகமதியர்கள் சோர்வடையும் நேரம் கஜினி தன் குதிரையில் இருந்து கீழே இறங்கி தரையில் படிந்து வணங்கி, தன் படைகளுக்கு இறைவன் துணையை வேண்டினான். சுல்தானின் வீரத்தைக் கண்டு உற்சாகம் அடைந்த வீரர்கள் புது உற்சாகத்துடன் மோத ஆரம்பித்தனர். 5,000-க்கும் மேற்பட்ட ஹிந்து வீரர்கள் உயிரிழந்தனர். கோயிலை நெருங்கியதும், அற்புதமான எழிலோடு காட்சி அளித்த கோபுரம், சுல்தான் கண்களில் பட்டது. உள்ளே சிறந்த சிற்பங்களோடு, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட 56 கற்தூண்களும் கோபுரத்தைத் தாங்கிக் கொண்டிருந்தன.

அந்த அழகிய மண்டபத்தின் நடுவில் சோமநாதரின் சிலா உருவம். இரண்டடி பூமியில் பதிந்திருந்தது. சிலைக்கருகே சுல்தான் வந்து தன் கோடரியால் அதை உடைத்தான். கஜினிக்கு அனுப்பப் பட்டது அந்த உடைந்த சிலைத் துண்டுகள். சோமநாத லிங்கத்தின் துண்டுகளில் ஒன்று கஜினியில் உள்ள மசூதியின் வாயிலிலும், மற்றொரு துண்டு தனது அரண்மனை வாயிலிலும் கிடக்குமாறு ஆணையிட்டான் மன்னன். இன்றும் இவை கஜினியில் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. மற்ற துண்டுகளில் இரண்டு மெக்காவுக்கும், மெதினாவுக்கும் அனுப்பப் பட்டன.

சுல்தானுக்குப் பெருமளவு பொன்னும், பொருளும் கொடுப்பதாயும் சிலையை உடைக்கவேண்டாம் எனவும் கோயிலில் வழிபாடுகள் நடத்தும் அந்தணர்களால் கோரப் பட்டது. ஆனால் கஜினி பொன்னைப் பெற்றுக் கொண்டு போய்விட்டால் தான் விரும்பும் பட்டம் கிடைக்காது, சிலை விற்பவன் என்றே சொல்லுவார்கள் என நினைத்தான். ஆகவே சிலை உடைக்கப் பட்டது . என்று தாரிக்-இ-ஃபிரிஷ்டா என்னும் பாரசீக நூல் கூறும் செய்தி ஆகும். கஜினி எதிர்பாராமல் வந்து மோதியதாலேயே சோமநாதம் தகர்க்கப் பட்டது என்று சொல்லுகின்றனர். ஏனெனில் கஜினி வரப் போவதை அறிந்த இந்து மன்னர்கள் அனைவரும் பரம்தேவ் என்னும் அரசன் தலைமையில் ஒன்று கூடி முகமதின் வழியை மறைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கஜினி முகமதோ அவர்களை நேரில் சந்தித்துச் சண்டையிடாமல் அரபுக்கடற்கரை ஓரமாகவே வந்து, சிந்து வழியாக உள்ளே நுழைந்து முல்தான் வழியாகப் படை வீரர்களை வழி நடத்தினான். இதில் அவனுக்கும் பெருமளவில் உயிர்ச்சேதம் படைகளின் குதிரைகள், ஒட்டகங்கள் ஆகியவை இறந்தன.


ஆனாலும் அப்போது மாலவத்தையும், குஜராத்தையும் ஆண்டு வந்த அரசர்கள் ஆன பீமனும் , போஜனும் சேர்ந்து இந்தக் கோயிலை உடனே கட்டினார்கள். அப்போது சக்கரவர்த்தியாக இருந்த சித்தராஜ ஜெயசிம்மன் என்பவன் இந்தக் கோயிலுக்கும்,கோயிலைத் தரிசிக்கச் செல்லும் யாத்ரீகர்களுக்கும் வரிவிலக்கு அளித்தான். அடுத்து வந்த குமாரபாலன் என்னும் அரசனும் கோயிலை விரிவு செய்து கொடுத்தான். மேலும் கோயிலுக்கு நடந்தே வந்து காணிக்கைகள் கொடுத்தான். அப்போது கன்யா குப்ஜத்தின் முக்கியஸ்தராய் இருந்து வந்த பாசுபத சைவத்தின் தலை சிறந்த ஆசாரியர் ஆன பாவா பிருஹஸ்பதி என்பவரை அழைத்துக் கோயிலின் புனர் சீரமைப்பு வேலைகளுக்கான அஸ்திவாரம் போட்டதோடு அவரின் ஆலோசனைகளின் பேரில் கோயிலையும் விரிவு செய்தான். பாவா பிருஹஸ்பதி சிவன் கோயில்கள் கட்டுவதில் அந்தக் காலகட்டத்தில் பெரும் புகழ் பெற்றவராய் இருந்து வந்தார். இவர் ஈசனின் அவதாரமாகவே கருதப் பட்டார். புதிய ஆலயம் கைலாச பர்வதம் போல ஒளி வீசிப் பிரகாசித்தது என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது எனச் சொல்கின்றனர்.

டிஸ்கி: சரித்திரக் குறிப்புகள் உதவி: IMMORTAL INDIA, VOLUME 2, BY J.H.DAVE, K.M. MUNSHI,
BHAVAN'S BOOK UNIVERSITY, PUBLISHED BY BHARATIYA VIDYA BHAVAN, BOMBAY. YEAR 1959, REPUBLISHED 1970

3 comments:

திவாண்ணா said...

ம்ம்ம்ம் கடுமையான ஆராய்ச்சி பதிவு! நல்லா இருக்கு.

Geetha Sambasivam said...

@திவா, நன்றி.

குமரன் (Kumaran) said...

சௌராஷ்ட்ரர்கள் தென்னாட்டிற்கு வந்ததற்கு முதன்மைக் காரணமாக சோமநாதத்தின் மீது கஜினி எடுத்த படையெடுப்புகளைத் தான் சொல்கிறார்கள். கேள்விபட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.