எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, May 22, 2009

தாமிரபரணிக்கரையிலே சில நாட்கள்!


தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆகும். தண் பொருநை என அழைக்கப் பட்ட இது காலப் போக்கில் தாமிரபரணி எனத் திரிந்து விட்டது. பொருநை என்பதன் பெயர்க்காரணம் தெரியவில்லை. ஆனால் அகத்தியர் தென்னாடும், வடநாடும் சமானம் ஆக்குவதற்காக த் தென்னாடு வந்தபோது உமை அம்மை அவர் கமண்டலத்தில் கங்கை தீர்த்தத்தை நிரப்பியதாயும், அதையே அவர் இங்கே பொதிகை மலைக்கு வந்ததும், ஆறாக மாற்றியதாகவும் சொல்லப் படுகின்றது. கங்கையின் தெய்வீகத் தன்மை மட்டுமில்லாமல், பொதிகை மலையின் மூலிகைச் செடிகளின் மூலிகைத் தன்மையும் நிறைந்தது தாமிரபரணி. பொதிகை மலையின் உச்சியிலே இருந்து வருகின்றது இந்த நதி. பொதிகை மலையும் மிக மிக மூப்பு வாய்ந்த தொன்மையான மலை எனச் சொல்லப் படுகின்றது.

மேலும் தமிழ் பிறந்தது பொதிகையிலே தான் எனச் சொல்லப் படுகின்றது. தெற்கே இருந்து வருவது தென்றல் என அழைக்கப் பட்டாலும் அது பொதிகையின் உச்சியில் இருந்து வருவதாய்த் தான் சொல்கின்றனர். பொதிகை மலைத் தொடரின் அருவிகளிலே ஒன்றே குற்றாலம் அருவியும் ஆகும். இந்தக் குற்றாலம் அருவியின் ஆறும் தாமிரபரணியிலேயே கலக்கின்றது. இதிலே அகத்தியர் இருந்த மலையை ஏக பொதிகை எனச் சொல்கின்றனர். அகத்தியர் வாழ்ந்த குகையும் அங்கே இருப்பதாயும், இன்னமும் அகத்தியர் மிகச் சிலர் கண்களுக்குத் தென்படுவதாயும் சொல்கின்றனர். திருக்குற்றாலத்தில் தேனருவிக்கு மேலே பழங்காலத் தமிழ் வட்டெழுத்துக்கள் உள்ள கல்வெட்டு இருப்பதாயும் தெரிய வருகின்றது. பாணதீர்த்தம் என்பதே இங்கே குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தீர்த்தம் ஆகும். அது பாபநாசம் மேலணைக்கும் மேலே இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். சரியான வழிகாட்டுதல் இல்லாமையாலும், நேரக் குறைவாலும் மேலே செல்லவில்லை நாங்கள். கீழே உள்ள பாபநாசம் கோயிலுக்கு மட்டுமே செல்ல முடிந்தது. அது பற்றிப் பின்னால். பாணர்களின் தாகம் தீர்த்ததால் பாணதீர்த்தம்னு சொல்வதாய்க் கேள்விப் படுகின்றோம். என்றாலும் உண்மையான பெயர்க்காரணம் இதுவாய் இருக்காதோ என்றும் தோன்றுகின்றது.

இங்கே பெரும்பாலும் சித்தர்கள் குடி இருந்து தவம் செய்திருக்கின்றனர். இந்தப் பாண தீர்த்தத்துக்கு அருகே உள்ள கல்யாணி தீர்த்தத்திலே மஹாவிஷ்ணு, ஆஞ்சநேயர், அகத்தியர் ஆகியோருக்கு உருவச் சிலைகள் இருக்கின்றனவாம். இந்தப் பாணதீர்த்தத்துக்கு மேலே உள்ள மொட்டை மேடு என்னும் இடம் துலுக்க மொட்டை என அழைக்கப் படுவதாயும், இதற்கும் மேலே உள்ள பூங்குளமே தாமிரபரணி என்னும் பொருநை பிறக்கும் இடம் எனவும் சொல்கின்றனர். இந்தப் பூங்குளத்தில் இருந்தே தாமிரபரணி பாணதீர்த்தத்துக்கு வருகின்றது. இரு பருவ மழைக்காலங்களிலும் நீர்ப்பிடிப்பு வசதி இருப்பதால் இங்கே கடுங்கோடைக் காலத்திலும் நதியில் நீர் ஓடிக் கொண்டிருக்கும். தாமிரபரணி நதி புறப்படும் இடத்தில் இருந்து கடலில் சென்று கலக்கும் இடம் வரைக்கும் கிட்டத் தட்ட எண்பது மைல்களுக்கு ஓடுகின்றது.


படங்கள் உதவி கூகிளார்: நன்றி.

1 comment:

குப்பன்.யாஹூ said...

thanks for a post on Tamirabarani. For us Tamirabarani is one of the family member.