எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, June 17, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

ஸ்ரீ வைகுண்டத்திற்குக் கிழக்கே, தூத்துக்குடி செல்லும் வழியில், ஒரு மைல் தொலைவுக்குள்ளாக தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள திருத்தலம் வரகுணமங்கை என்னும் நத்தம் ஆகும். பெருமாளின் பெயர் விஜயாசனர். தாயார் வரகுணவல்லி. விமானம் விஜயகோடி விமானம் என அழைக்கப் படுகின்றது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட இந்த ஊரில் அக்னி பிரத்யக்ஷம் என்று சொல்லப் படுகின்றது. இறைவன் கிழக்கே பார்த்துக்கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கின்றார். அக்னி பகவானுக்குப் பிரத்யக்ஷமாய்க் காக்ஷி அளித்ததைத் தவிர, உரோமச முனிவருக்கும், சத்யாவனுக்கும் காக்ஷி கொடுத்தார் எனச் சொல்லப் படுகின்றது.

இது கொஞ்சம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருப்பதால், முன்கூட்டியே கோயில் பட்டாசாரியாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லுவது நல்லது. நாங்கள் காலை வேளையிலேயே சென்று விட்டதால் தரிசனம் கிடைத்தது. உள்ளூர் மக்கள் நத்தம் என்றே இந்த ஊரைச் சொல்லுவதால் நத்தம் என்றே கேட்கவேண்டும். இந்தக் கோயிலின் தல புராணம் முன் பிறவியில் செய்த கர்மவினை இப்பிறவியிலும் தொடர்ந்தாலும் ஒருவன் இந்த ஊரில் பிறந்த காரணத்தாலேயே நற்கதியும் அடைந்தான் என்று சொல்லுகின்றது. தலவரலாறு வருமாறு:

உரோமச முனிவர் இங்கே தவம் செய்து வந்தார். சத்தியவான் அவருடைய சிஷ்யன். குருவிற்குத் தொண்டு புரிந்து கொண்டும் , பாடங்கள் கற்றுக் கொண்டும் வந்தான். இங்கே இருந்த திருக்குளத்திற்கு அகநாச தீர்த்தம் என்ற பெயர் இருந்து வந்தது. அந்தத் தீர்த்தத்தில் நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சத்தியவானுக்கு ஒரு செம்படவன் வலை வீசி மீன்கள் பிடிப்பது தெரியவந்தது. ஏராளமான மீன்கள் பிடித்தும் ஆசை அடங்காமல் மேலும் மேலும் வலையை விரித்து வந்த செம்படவனை ஒரு நாகம் பின்னாலிருந்து தீண்டியதையும், தீண்டிய நாகம் மறைந்ததையும், செம்படவன் உடனே இறந்ததையும் கண்டான் சத்தியவான். ஆனால் என்ன ஆச்சரியம்????

அந்தச் செம்படவனை தேவலோகத்தில் இருந்து கந்தர்வர்கள் அலங்கரிக்கப் பட்ட அழகிய விமானத்தைக் கொண்டு வந்து சொர்க்கத்திற்குக் கூட்டிச் சென்றதையும் அவன் காண நேர்ந்தது. மீன்களைத் துன்புறுத்தி வந்த இந்தச் செம்படவனுக்கு இவ்வளவு நற்கதியா என யோசித்த வண்ணம் குருவிடம் சென்ற சத்தியவான், தான் கண்டதை அவரிடம் கூறி, செம்படவனுக்கு நற்கதி ஏற்பட்ட விதம் எவ்வாறு எனக் கேட்டான். உரோமச முனிவர் தன் சக்தியால் அந்தச் செம்படவன் முற்பிறவியில் விதர்ப்ப தேசத்து அரசகுமாரனாய் இருந்து தீவினை புரிந்து வந்து நரக வாசத்தை அனுபவித்ததாயும், எப்போதோ செய்த ஒரே ஒரு நற்செயலின் விளைவாக இந்தப் பூமியில் இந்த ஊரில் வந்து பிறந்திருக்கின்றான் எனவும் கூறினார். இந்த ஊரில் பிறந்த காரணத்தாலேயே அவன் கர்மவினை அழிந்து அவன் நற்கதி அடைந்திருக்கிறான் என்றும் சொன்னார்.



மேலும் உரோமசர் தன் சீடனிடம் சொன்னதாவது:
ரேவா நதிக்கரையில் புண்ணியகோசம் என்னும் ஊரில் "வேதவித்" என்ற அந்தணன், மாதா, பிதா, குரு மூவரையும் முறைப்படி வணங்கி வழிபட்டு வந்ததாகவும், பின்னர் பகவானை வழிபட வேண்டும் என எண்ணியபோது, பகவான் ஒரு பிராமணனாக அவன் முன் தோன்றி இம்மாதிரி தென்பாகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடையே உள்ள வரகுணமங்கை என்னும் ஊருக்குச் சென்று தவமியற்றுமாறும் கூறவே, அந்த பிராமணனும் வரகுண மங்கையை அடைந்து பிரம்மசாரியாகவே இருந்து தவம் செய்தான். ஈசன் மீண்டும் அவன் முன்னே தோன்ற விஜயாசனன் என்ற பெயரோடு இங்கேயே கோயில் கொள்ளவேண்டும் என்று அவன் கேட்டுக் கொள்ள ஈசனும் அவ்வாறே அருள் புரிந்தான்.

இந்தக் கோயிலின் ராஜ கோபுரத்தில் தசாவதார சிற்பங்கள், காளிங்க நர்த்தனம் சிற்பம், வசுதேவர் தன் தலையில் கூடையில் குழந்தைக் கிருஷ்ணனை வைத்துக் கொண்டு யமுனையைக் கடப்பது ஆகிய சிற்பங்கள் காணவேண்டிய ஒன்றாகும். முன்னேற்பாடுடன் செல்லாததால் அப்போது படமெல்லாம் எடுக்கவில்லை. :(((((((

அடுத்துத் திருப்புளியங்குடி செல்லப் போகின்றோம்!

3 comments:

குப்பன்.யாஹூ said...

உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

தொடரட்டும் இந்த மக்கள் பணி.

பெருமாளோடு சேர்ந்து இந்த அன்பனும் தங்களை வாழ்த்துகிறேன்.

திருப்புளியங்குடி, ஆழ்வார்திருநகரி, ட்டேன்டிருப்பெரை பற்றி படிக்க மிக ஆவலாக உள்ளேன்.

நவ திருப்பதி முடிந்து, முடிந்தால் கருங்குளம், பாளையம்கோட்டை ராஜகோபாலசாமி கோயில், டவுன் மேல ராதா வீதி பெருமாள் கோயில், திருநாந்கொஇல் பற்றியும் எழுத வேண்டுகிறேன்.

குப்பன்_யாஹூ

ambi said...

முதல் முறையா நீங்க எழுதி இருக்கும் சின்ன பதிவு போல. நல்லா இருக்கு. :)


//முன்னேற்பாடுடன் செல்லாததால் அப்போது படமெல்லாம் எடுக்கவில்லை//

ஆமா, அப்படியே எடுத்துட்டாலும்...
:)))

Geetha Sambasivam said...

வாங்க குப்பன் யாஹூ, விடாமல் வருவதற்கும் கருத்துக்கும் நன்றி.

@அம்பி, ரொம்ப நாள் கழிச்சு எட்டிப் பார்த்திருக்கீங்க போல??? ரொம்ப பிசியோ?? சமையல் வேலை??? போகட்டும், என்னோட படங்களைப் பார்க்க படப் பதிவுக்கு வாங்க, தெரியும்! :P:P:P:P:P