அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2823) திருவாய்மொழி
திருக்குருகூர் தனிச் சிறப்புப் பெற்ற தலம். இதுவும் நெல்லை திருச்செந்தூர் சாலையில் தான் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திற்குக்கிழக்கே கிட்டத் தட்ட ஐந்து கிமீ தூரத்தில் தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது. பெருமான் ஆதியில் இங்கே தான் ஆசை கொண்டு இருந்தபடியால் அவர் பெயரும் ஆதிநாதர். நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். கிழக்கே பார்த்துக் கொண்டு “பொலிந்து நின்ற பிரான்” என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு கோவிந்த விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். தாயார் ஆதிநாயகி, குருகூர் நாயகி. பிரம்மாவிற்குப் பிரத்யட்சம் எனச் சொல்லப் படும் இந்த க்ஷேத்திரம் நம்மாழ்வாரின் திரு அவதாரத்தின் பின்னே ஆழ்வார்திருநகரி என்ற பெயரிலேயே வழங்கப் படுகிறது. ஹரி க்ஷேத்திரங்களுள் ஸ்ரீமந்நாராயணன் இங்கேயே முதன் முதல் அவதரித்ததாய்ச் சொல்லப் படுகிறது. இப்போ நம்மாழ்வாரின் அவதார மகிமை பற்றிப் பார்ப்போமா??ஸ்ரீவைகுண்டம், அருகிலே இரு தேவியரும் இருக்க, கருடனும், ஆதிசேஷனும் இருக்கையில் பெருமான் சொல்கின்றார். “நீங்கள் எல்லாரும் பூமியில் போய்ப்பிறக்கவேண்டும். வேதங்களைத் தமிழாக்கி, திவ்யப்ப்ரபந்தங்கள் என்னும் பெயரிலே அருளிச் செய்யவேண்டிய காரியம் இருக்கிறது. எங்கே நம் சேனை முதலியார்??? விஷ்வக்சேனர்? அவர் தான் இந்தக் காரியம் செய்ய வல்லவர். அவர் பூமியில் சடத்தை வென்ற சடகோபனாய்ப் பிறக்கவேண்டும் . ஆதிசேஷா, நீ புளியமரமாகப் போய் இருப்பாய்! கருடா, நீ மதுரகவி என்னும் பெயரிலே ஒரு ஆழ்வாராகப் பிறந்து, சடகோபனின் பெருமையை உணர்ந்து, அவரின் சிஷ்யனாக மாறி, சடகோபரின் பெருமையை உலகு அறியச் செய்வாய்! அத்தோடு அனைத்து ஆழ்வார்களின் பாடல்களும் அறியப் படவேண்டும்.” என்று சொன்னார்.
நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்,
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ?
ஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே.(2832) திருவாய்மொழி
சரி, எல்லாரையும் பிறக்கச் சொல்லியாச்சு, அதற்கான இடம் வேண்டாமா? அதுக்குத் தகுந்த க்ஷேத்திரமாகத் திருக்குருகூர் தேர்வு செய்யப் பட்டது பகவானாலேயே. தாய், தகப்பன்? அதுவும் தேர்வு செய்யப் பட்டது. திருவழுதி வளநாடரின் வழித் தோன்றலான காரி என்பவருக்கும் அவர் மனைவியான உடைய நங்கைக்கும் குழந்தைகளே இல்லை. அவர்கள் இருவரும் அருகே உள்ள திருக்குறுங்குடி என்னும் திவ்ய க்ஷேத்திரத்தின் நம்பியை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர். இருவரின் பிரார்த்தனைக்கும் செவி சாய்த்த எம்பிரான் தம்பதியரிடம், “யாரைப் போன்ற பிள்ளை வேண்டும்?” என்று கேட்க, உடைய நங்கையோ யோசிக்கவே இல்லை. “பரந்தாமா! உன்னைப் போல் பிள்ளை வேண்டும்” என்று கேட்டுவிட்டார். பகவானும், “அவ்வண்ணம் நாமே உமக்கு மகனாய்த் தோன்றுவோம்” என்று சொன்னாராம். அப்படி திருக்குறுங்குடி நம்பியின் அம்சமும், சேனை முதலியாரின் அம்சமும் சேர்ந்து தோன்றியவரே நம்மாழ்வார்.
குழந்தை பிறந்தாச்சு. குழந்தை அழணுமே? ஆனால் அழவே இல்லை, பால் குடிக்கணுமே? தாயிடம் பால் குடிக்கவும் இல்லை. எந்தவிதமான உணவும் எடுக்கவில்லை. இது என்ன அதிசயக் குழந்தை? இதை எவ்வாறு வளர்ப்பது? புரியாமலேயே கலங்கிப் போன காரியாரும், உடைய நங்கையும் குழந்தை பிறந்த பனிரண்டாம் நாள் குழந்தையை ஆதிநாதர் சந்நதிக்கு எடுத்துச் சென்றனர். அங்கே அக்குழந்தையை ஆதிசேஷனின் அவதாரமாய்த் தோன்றி இருக்கும் புளிய மரத்தடியில் விட்டுச் செல்லுமாறு தோன்ற அவ்வண்ணமே செய்தனர். குழந்தை ஏன் இவ்விதம் பிறந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை, புரியவில்லை. பின்னாட்களிலேயே தெரிய வந்தது.பிறக்கும்போது, தாயின் கர்ப்பத்தில் கூட ஒவ்வொரு குழந்தையும் ஞானம் கொண்டதாகவே விளங்குகிறது. ஆனால் பிறப்பின் ரகசியத்தால் இறைவன் சிலருக்கு மட்டுமே ஞானத்தோடு பிறக்க அருள் புரிகின்றான். மற்ற நம் போன்ற சாமானியருக்கு கர்ப்பத்தில் இருந்து வெளியே வரும்போதே சடம் என்னும் வாயு சூழ்ந்து கொண்டு நம்மை அஞ்ஞானம் என்னும் சாகரத்தில் தள்ளிவிடுகிறது. நம்மாழ்வாரோ தெய்வக் குழந்தை மட்டுமல்ல, பிறக்கும்போதே ஞானக் குழந்தையும் கூட அல்லவோ? ஆகையால் தம்மைச் சூழவந்த சடத்தைக் கோபித்து விலக்கிவிட்டார். அதனாலேயே அவர் பேசவில்லை, பால் அருந்தவில்லை. இப்படிச் சடத்தை உதறித் தள்ளிவிட்டுப் பிறக்கும்போதே ஞானத்தோடு பிறந்த குழந்தைக்குச் “சடகோபன்” என்னும் திருநாமம் சூட்டினார்கள். குழந்தை புளியமரத்தடியிலேயே வளர்ந்தது. கையிலே சின்முத்திரையைத் தாங்கிக் கொண்டு தெற்கே பார்த்து அமர்ந்திருந்தது அந்தக் குழந்தை. வரவேண்டுமே, உரிய நேரத்தில் சீடன் வரவேண்டும் அல்லவா? அதற்குத் தானே காத்திருந்தது குழந்தை? பதினாறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. குழந்தை இன்னும் தவம் செய்துகொண்டு மோன நிலையிலேயே இருந்தது. அப்போது!



