எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, August 21, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

திருச்செந்தூர் செல்லும் வழியிலேயே இந்தக் கோயில் இருப்பதால் திருச்செந்தூர் செல்லும் போதே இந்தக் கோயிலைத் தரிசித்துவிட்டே சென்றோம். திருச்செந்தூரில் நடை சார்த்த நேரம் ஆகும் என்பதாலும், இந்த மாதிரி கிராமங்களின் சிறு கோயில்கள் சீக்கிரம் மூடிவிடுவதாலும் , திருச்செந்தூரில் இருந்து திரும்ப வரும்போது பார்க்கமுடியுமோ என்ற எண்ணத்தாலும் போகும்போதே சென்றோம். இந்த நவதிருப்பதிகள் அனைத்துமே டிவிஎஸ் நிர்வாகத்தினரின் உதவியோடு நிர்வாகமும், பக்தர்களுக்கு தரிசன வசதிகளும் மிகவும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. கோயில்களும் சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகின்றன. பொதுவாகத் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மக்களே கொஞ்சம் சுத்தம் பராமரிக்கப் படுவதில் ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கின்றனர். பெரும்பாலும் வடமாவட்டங்களில் காணப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகளும், அங்கே குறைவாகவே காணமுடிகிறது. சாலைப் பராமரிப்பும் மிகவும் சுகமாய் இருக்கிறது. ஆகையால் பயணமும் செளகரியமாகவே அமைந்தது. ஓட்டுநரும் கோயில்கள் பற்றிய தகவல்களை நன்கு அறிந்தவராய் இருந்ததால் வசதியாகவும் இருந்தது.

திரு டோண்டு சாரின் குலதெய்வமும், இஷ்டதெய்வமும், வலைப்பதிவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவரும் ஆன மகரநெடுங்குழைக்காதர் கோயில் தென் திருப்பேரையில் தாமிரபரணியாற்றின் தென்கரையில் உள்ளது. பெருமாள் நல்ல ஆஜாநுபாகுவாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி கொடுக்கின்றார். பெரிய காதுகள், அதற்கேற்ற மீன் வடிவம் கொண்ட மகர நெடுங்குழைகள். அதி அற்புதமாய் உள்ளது. கிழக்கே பார்த்துக்கொண்டு பூமாதேவி அளித்ததாய்ச் சொல்லப் படும் குழைகளை அணிந்து கொண்டு அதன் காரணமாய் ஸ்ரீ எனப் படும் லட்சுமியின் கோபத்துக்கு ஆளானதாய்ச் சொல்லுகின்றார்கள். தென் திருப்பேரையில் தான் பகவான் பூமாதேவியிடம் ஆசை கொண்டதாயும் சொல்லுகின்றனர். ஒருவேளை இந்த இடத்தின் தண்மையும், பசுமையும் ஆசை கொள்ள வைத்ததோ என்னமோ?? நாங்களும் பார்த்து இரண்டு வருஷம் ஆச்சு, இப்போ பசுமை அப்படியே இருக்கா இல்லையா எப்படினு தெரியலை!  இங்கே மஹாலக்ஷ்மி பூமாதேவியின் பேரில் பெருமாளுக்குத் தனி ஆசை இருப்பதைக் கண்டு தனக்கு பூமாதேவியின் உருவும், நிறைவும் ஏற்படவேண்டும் என வேண்டினாளாம். அதுவும் துர்வாஸரிடம் கேட்டிருக்கிறாள். உடனே துர்வாஸர் பூமாதேவியைப் பார்க்க தென் திருப்பேரையை அடைந்தார்.

பங்கையக் கண்ணன் என்கோ.
பவளச்செவ் வாயன் என்கோ,
அங்கதிர் அடியன் என்கோ.
அஞ்சன வண்ணன் என்கோ,
செங்கதிர் முடியன் என்கோ.
திருமறு மார்வன் என்கோ,
சங்குசக் கரத்தன் என்கோ.
சாதிமா ணிக்கத் தையே. 3.4.3
3049
சாதிமா ணிக்கம் என்கோ.
சவிகோள்பொன் முத்தம் என்கோ,
சாதிநல் வயிரம் என்கோ,
தவிவில்சீர் விளக்கம் என்கோ,
ஆதியஞ் சோதி என்கோ.
ஆதியம் புருடன் என்கோ,
ஆதுமில் காலத் தெந்தை
அச்சுதன் அமல னையே. 3.4.4 நம்மாழ்வார் பாசுரம். ஆனால் இந்தக் கோயில் பற்றி ஒரு பாசுரம் தான் எழுதி இருக்கார். கண்டுபிடிக்கணும். :))))))

ஆனால் பகவானின் மடியில் செளக்கியமாய் அமர்ந்திருந்த பூமாதேவி துர்வாஸரைக் கண்டு வணங்கவில்லை. மடியை விட்டு எழுந்து உபசரிக்கவில்லை. அதனால் ஸ்ரீயின் உடலை நீ பெறவேண்டும் என துர்வாசர் சபித்ததாகவும், ஸ்ரீயின் உடல் தனக்கு வேண்டாம் என பூமாதேவி கேட்டுக் கொண்டதின் பேரில் அவளை பொருநை நதிக்கரையின் தென்கரையில் பங்குனி மாதப் பெளர்ணமியில் நதியில் நீராடித் தவம் புரியச் சொன்னார். அஷ்டாக்ஷரத்தில் தவம் இருந்ததாயும் சொல்கின்றனர். பூமாதேவி அவ்வாறு தவம் புரியும் வேளையில் மீன்போன்ற வடிவுடைய இரு குண்டலங்கள் அவள் கைகளுக்குக் கிடைத்தன. அவற்றைக் கண்டதும் மீண்டும் பெருமாள் நினைவே அவளுக்கு வர, அவற்றைப் பெருமாளிடம் கொடுக்க, அவரும் அதை ஆசையுடன் வாங்கித் தம் காதுகளில் அணிந்து கொண்டார். அது முதல் பெருமாள் மகரநெடுங்குழைக்காதர் ஆனார். தாயார் பெயர் குழைக்காதவல்லி,/ ஊர் பெயர் ஸ்ரீபேரை என்றும், தென் திருப்பேரை என்றும் வழங்குகிறது. மற்றொரு தாயாரை தென் திருப்பேரை நாச்சியார் என்றும் சொல்லுவார்கள்.

அசுரர்களால் தோற்கடிக்கப் பட்ட வருணன் தனது நாகத்தையும், பாசத்தையும் இழந்து தவிக்க, அவன் மனைவி தேவகுருவிடம் வேண்ட தேவகுரு அவனை தென் திருப்பேரை மகர தீர்த்தத்தில் நீராடி “திருவைந்தெழுத்தால்” பகவானை வழிபட வேண்டியது பெறுவாய் என்று சொல்ல அவ்வண்ணமே வருணன் பங்குனி பூர்ணிமையிலேயே வழிபட்டதாகவும், அப்போது மகிழ்ந்த பெருமான் கொடுத்த நீரானது பாசமாக மாறி அதைப் பெற்று வருணன் மனமகிழ்வோடு அசுரர்களைத் தோற்கடிக்கப் புது வலிமை பெற்றதாகவும் தலபுராணம் சொல்லுகின்றது. மேலும் விதர்ப்ப நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது தாமிரபரணிக் கரைக்கு தென் திருப்பேரைக்கு வந்து மகரநெடுங்குழைக்காதரை வேண்ட பஞ்சம் நீங்கி, மழை பொழிந்ததாகவும் சொல்கின்றனர்.

அடுத்தது திருக்கோளூர் என்னும் ஸ்தலம். நம்மாழ்வாரைக் கண்டெடுத்த மதுரகவியாழ்வார் அவதாரம் பண்ணிய இடம் இது.

4 comments:

dondu(#11168674346665545885) said...

//திருச்செந்தூர் செல்லும் வழியிலேயே இந்தக் கோயில் இருப்பதால் திருச்செந்தூர் செல்லும் போதே இந்தக் கோயிலைத் தரிசித்துவிட்டே சென்றோம்.//

தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் உங்கள் பதிவின் இந்த ஆரம்பவரிகளைக் கண்டதுமே அது என் உள்ளங்கவர் கள்வன் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் கோவிலாகத்தான் இருக்க முடியும் என தீர்மானித்து க்ளிக் செய்தால் நான் நினைத்தது சரி என்பதைப் பார்க்க முடிந்தது. மிக்க மகிழ்ச்சி.

என்னையும் இப்பதிவில் நினைவுகொண்டு குறிப்பிட்டதற்கு நன்றி. ராமாயண கதை நடக்கும் இடத்தில் அனுமன் பக்தியோடு வந்தமர்வதைப் போலவே தென்திருபேரை மகரநெடுங்குழைகாதன் என்றால் இந்த டோண்டு ராகவனும் பலருக்கு நினைவுக்கு வருவது எனக்கு அவன் செய்த அருளே.

நல்ல சேவை கிடைத்ததா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jayashree said...

Romba Nanna irukku. Mahara nedung kuzhai kaadhan. Beautiful is n't it?. Pasuram onnuthangarela? Naan 11 nu ninachen.. (2)la 7.3.1 lenthu 7.3.11 varai :-
Villai soori sango, Naanakarunguzhal, Chenganivayan, uzhandavemmaaamai, Munainthu chagatam, Kaalamperavenaikkalumin,Periyal soozh kadal, Kandathuvenko,Servan senrun,Nagaramum Naadum,
oozhithoroozhi
NU thodangara merkonda ella paasurathullaiyum thenthiruparai yai paththithan padiyirukkar nu nenaichen. Neenga ezhudhinadhum sertha 13 illayaa. Azhwargaloda anbu paasurangallanu engamma solva.

Geetha Sambasivam said...

வாங்க சார், உங்களை நினைக்காமல் மகரநெடுங்குழைக்காதரை எப்படி நினைக்கிறது?? நல்லாவே நினைப்பு வச்சுக்கொண்டே தரிசனம் செய்தோம். அருமையான தரிசனம். இன்னொரு முறையும் போகணும். எப்போ கிடைக்குமோ?

Geetha Sambasivam said...

ம்ம்ம்?? ஜெயஸ்ரீ, ஒரு பாசுரம் தான்னு கேள்விப் பட்டேன். நேத்திக்குத் தேடமுடியலை. இன்னிக்குப் பார்க்கிறேன். நீங்க கொடுத்திருக்கும் ஆரம்பத்திலே இருந்து படிச்சுப் பார்க்கிறேன். ரொம்ப நன்றி.