எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 28, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! ஸ்ரீவில்லிபுத்தூர் 4

இங்கே ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேண்டுகோள். ஸ்ரீவில்லிபுத்தூரை ஏன் தாமிரபரணிக்கரையிலே சேர்த்தீங்கனு கள்ளபிரான் கேட்கிறார். எங்களோட திருநெல்வேலிப் பயணத்திலே அதுவும் அடங்கினது அவ்வளவே. மேலும் குழுமங்களில் இட ஒரே இழையாக இருப்பது வசதி, தலைப்பை மாற்றவேண்டாம் என்பதே காரணம். மேலும் ஆண்டாள் பிறந்த வீடான ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடாரைவல்லித் திருநாள் பொங்கலன்றே நடைபெறுகிறது. அன்றே மூட நெய் பெய்து முழங்கை வழிவார அக்காரவடிசில் சமைத்து நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப் படும். (இப்போத் தெரியாதுங்கோ) இங்கே ஆண்டாள் கனுவன்று பிறந்தவீட்டுக்குச் சாப்பிடச் சென்றுவிடுவாள். :D திருமலை நாயக்கர் காலத்திலும் , ராணி மங்கம்மாள் காலத்திலும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த இவ்வூர் அப்போது மதுரைமாவட்டத்தைச் சேர்ந்ததாகவே இருந்தது. அதற்குப் பின்னர் நெற்கட்டுச் சேவலின் ஜமீந்தாரான பூலித்தேவரிடம் இதன் பொறுப்பும், கோயிலின் பொறுப்பும் சில காலம் இருந்து பின்னர் யூசுப்கான் என்றழைக்கப் பட்ட கான்சாகிபிடம் சென்றது. அதன் பின்னர் சுதந்திரம் வரைக்கும் ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்குச் சற்று முன்பாக திருவாங்கூர் அரச வம்சத்தினர் கோயிலின் பொறுப்பை மேற்கொண்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தில் இடம் பெற்றிருந்த இந்த ஊர் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் இணைக்கப் பட்டு அதன் பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தோடு சேர்க்கப் பட்டது. இவ்விதம் பல்வகைகளிலும் அல்லாடி வந்த இந்த ஊரானது இப்போது விருதுநகர் மாவட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது.

ரயில் மூலம் செல்வதென்றால் தென்காசிக்குச் செல்லும் ரயில்பாதையில் இந்த ஊர் வரும்னு சொல்றாங்க. நாங்க திருநெல்வேலியைத் தலைமையாகக் கொண்டே சுற்றியதால் திருநெல்வேலியில் இருந்தே சென்றோம். சாலைப்பயணத்திலும் தென்காசி செல்ல இது உகந்தது என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுவிட்டே அங்கிருந்து தென்காசியும் சென்றோம். சாலைவழி இணைப்பு மதுரை,திருநெல்வேலி, சிவகாசி, சாத்தூர் போன்ற ஊர்களோடு இணைத்துள்ளதால் சாலைப்பிரயாணமும் நன்றாகவே இருக்கிறது. மதுரையில் இருந்து இங்கே தினமும் வந்து போகிறவர்கள் இருக்கிறார்கள். மதுரையில் இருந்து மூன்றுமணி நேரச் சாலைப்பயணம் இருக்கலாம். மேலும் நூபுரகங்கை பற்றி முத்துச்சாமி கேட்டிருக்கிறார். இங்கே தவிர நூபுரகங்கை மதுரைக்கருகே உள்ள அழகர் கோயிலில் உள்ளது. அங்கே ஓடுவது சிலம்பாறு. வாமன அவதாரத்தின்போது பெருமாள் எடுத்த திரிவிக்கிரம அவதாரத்தின் ஒரு கால் விண்ணைத் தொடவும், தேவாதிதேவர்களெல்லாம் எம்பெருமானின் திருவடிகளுக்கு நன்னீரால் அபிஷேஹ ஆராதனைகள் செய்ய, அப்போது அவர் சிலம்பில் பட்டுத் தெறித்த நீரே இங்கே உள்ள நூபுரகங்கையில் இருந்து சிலம்பாறாக மாறி வருகிறது என்றொரு புராணக்கதையும் இந்தத் தீர்த்தத்துக்கு உண்டு. நூபுரம் என்றால் சிலம்பு என்று அர்த்தம் அல்லவோ?? அப்பாடா, ஒருவழியா அழகர்கோயிலையும், ஸ்ரீவில்லிபுத்தூரையும், கீழே காட்டழகரையும் இணைத்து எழுதிட்டேன். கள்ளபிரான், இது எப்படி இருக்கு?? :P:P:P:P

இதைத் தவிர ஒரு காட்டழகரும் இருக்கிறார். இவர்தான் முதலிலே அழகர் ஆற்றிலே இறங்கும் திருவிழாவை நடத்தி வந்ததாகவும், இவர் காட்டிலே இன்னமும் இருப்பதாலும், நெருங்க முடியாமல் இருப்பதாலும் அதைத் திருமலை நாயக்கர் மாற்றி மதுரைக்குக் கொண்டு போனதாகவும் ஒரு கர்ணபரம்பரைக் கதை மதுரையில் சொல்லுவதுண்டு. இந்தக் காட்டழகர் இன்னமும் காட்டிலேதான் குடி கொண்டிருக்கிறார். இங்கேயும் ஒரு நூபுரகங்கை இருப்பதாய்க் கேள்வி. ராஜபாளையம் ராஜா வம்சத்தினருக்குக் குலதெய்வம் எனக் கேள்வி. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலே உள்ள ஒரு மலைத் தொடரிலே அமைந்திருக்கும் இந்தக் காட்டழகர் கோயில் உள்ள மலையை எங்கள் வண்டி ஓட்டுநர் எங்களுக்குக் காட்டினார். புரட்டாசி சனிக்கிழமைகளில் மேலே காட்டுக்குள் இருக்கும் கோயிலுக்குப் பக்தர்கள் கூட்டமாய்ச் செல்வதுண்டு என்றும் சொன்னார். கூட்டமாய்த் தான் செல்லவேண்டும், என்றும் இன்றும் யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு என்றும், அந்தக் கோயில் யானைகள் நுழையமுடியாதபடிக் கட்டப் பட்டிருக்கும் என்றும் சொன்னார். ஆசைதான் தாசில் பண்ண! ஆனால் முடியலை! அங்கே போகலை, தனியாகச் செல்லமுடியாது என்பதால்.

அடுத்து வருவதும் இதே தலைப்பில் தான், சங்கரன் கோயில். கொஞ்சம் காத்திருங்க.

4 comments:

வல்லிசிம்ஹன் said...

காட்டழகரைப் பார்க்கலையா. உங்கள் மூலமா அவரை அறிந்து கொள்ளலாம் என்று நினைத்தேனே.

goma said...

எங்கள் ஊரைச் சுற்றியே பயணித்திருக்கிறீர்கள்.என்னிடம் சொல்லவே இல்லையே!!!!

Geetha Sambasivam said...

வாங்க கோமா, அப்போ நீங்க பதிவே எழுத ஆரம்பிக்கலையே??? ஹிஹிஹி!

Geetha Sambasivam said...

வல்லு, காட்டழகரைப்பார்க்கணும்னு தான், மலையிலே இல்லை உட்கார்ந்திருக்கார், பதினொரு மணிக்கு மேலே மலை ஏறவேண்டாம்னு வேறே சொல்லிட்டாங்க, மனுஷங்களைப் பார்த்தா சிங்கம், புலி எல்லாம் பயப்படுமாமே???? :)))))))))