எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, December 22, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்!


இரட்டைக் கோயில்களாக அமைந்துள்ள இந்தக் கோயில்களில் முதலில் நாம் காணப் போவது ஆண்டாள் கோயில். பெரியாழ்வாரும்,ஆண்டாளும் வாழ்ந்த வீட்டையே பின்னாட்களில் கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவர் திருக்கோயிலாக மாற்றி உள்ளார். கல்வெட்டுத் தகவல் இதைத் தெரிவிப்பதாய்ச் சொல்கின்றனர். இரட்டைக் கோயிலாக அமைந்துள்ள இந்தக் கோயிலின் வட கிழக்கிலேதான் வடபத்ரசாயிக்குக் கோயில் உள்ளது. மேற்கே ஆண்டாள் கோயில், இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியிலே பெரியாழ்வாரின் நந்தவனம் இன்னும் மலர்கள் அளித்துவருகிறது. இங்கேயும் ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்று உள்ளது. இங்கே உள்ள துளசிமாடத்தில் ஆண்டாளின் சிற்பமும் வடித்திருக்கின்றனர். நந்தவனம் காலை வேளை சென்றால் மட்டுமே காணலாம் என எண்ணுகிறேன். முதலில் காணப்படுவதைப் பந்தல் மண்டபம் என்கின்றனர். அதைத் தாண்டிய கல்யாண மண்டபத்தில் நாயக்கர் காலத்திய ராமாயண ஓவியங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். பார்க்கமுடியலை. ஓவியங்கள் அழியும் நிலைமையில் உள்ளன என்றும் கேள்விப் பட்டோம். மதுரைப் பொற்றாமரைக்கரையைச் சுற்றி இருந்த ஓவியங்களை அழித்தாற்போல் இவையும் அழியாமல் இருக்கவேண்டும் எனப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. உள் பிரகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் காட்சி அளிப்பதே நம்ம மாதவிப்பந்தல்.(கேஆரெஸ்ஸோடது இல்லைங்க, நிஜமான ஆண்டாள் திருப்பாவையில் பாடின மாதவிப் பந்தல்) அடுத்து உள்ள மண்டபத்திலே தான் ஆண்டாள் முகம் பார்த்த தட்டொளி காணப்படுகிறது.

அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?


ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியயச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.

முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். தினமும் இவ்வாறு ஒரு கிளி புதிதாகச் செய்யப் பட்டு வைக்கப் படுகிறது. தான் அணிந்து கொண்ட பூமாலையுடன் ஆண்டாள் இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. கிணறை கண்ணாடிக் கிணறு என அழைக்கின்றனர்.
முதல் பிரகாரத்தைப் பெரியாழ்வாரின் நெஞ்சாகக் கருதினால் இரண்டாம் பிரகாரத்தில் சொர்க்க வாசல் உள்ளது. இங்கே மஹாலக்ஷ்மியும் அநுமனும், கலைமகளும் அருள் பாலிக்கின்றனர். வடக்கே உள்ள கோயிலுக்கும், நந்தவனத்துக்கும் இடையே சக்கரத்தாழ்வாரும் காணப்படுகிறார். சக்கரத்தாழ்வார் உக்கிரமாக இருந்ததாயும், ஆண்டாளால் சாந்தமடைந்ததாகவும் வரலாறு. இங்கே இருந்த ஆண்டாளும் அந்நியர் படை எடுப்பின் போது கேரளம் சென்று கொஞ்ச காலம் மறைந்து வாழ்ந்திருக்கிறாள். வடபத்ரசாயிக்கு ஆலிலையில் பள்ளி கொண்ட பெருமான் என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயிலை எழுப்பியவர்கள் வில்லி என்பவனும்,கண்டன் என்பவனும் ஆவார்கள். இவர்கள் பெயராலேயே வில்லிபுத்தூர் என்னும் பெயரும் இந்த ஊருக்கு ஏற்பட்டது. இந்தத் திருக்கோயிலின் எதிரே நூபுரகங்கை உள்ளது. இதில் எந்தக் கோடையிலும் நீர் வற்றுவதில்லை என்பதோடு நீருக்கான ஆதாரமும் தெரியவில்லை.

15 comments:

passerby said...

ஸ்ரீவில்லிபுத்தூர் தாமிரபரணிக்கரையோரம் எப்படி வந்தது? தமிழ்நாட்டின் பூகோளத்தையே மாற்றுகிறீர்களே!

Geetha Sambasivam said...

வாங்க, கள்ளபிரான், நீங்க ஸ்ரீவைகுண்டமா?? ஸ்ரீவில்லிபுத்தூர் தாமிரபரணிக்கரையோரம் வரலை, நான் அந்தத் தலைப்பையே தொடர்ந்து வச்சிருக்கேன் அவ்வளவு தான், இதிலே தாமிரபரணியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை, நல்லா படிச்சுப் பாருங்க! :))))))))))) அங்கே இருந்தப்போ போன ஊர்களிலே இதுவும் சங்கரன் கோயிலும் இருக்கு. தலைப்பை மாத்தாமல் தொடர்ந்து அதே தலைப்பிலே கொடுத்திருக்கேன்.

குப்பன்.யாஹூ said...

one should see pakal patthu, raap patthu in srivilliputhur.

passerby said...

Mrs GS!

நீங்க மதுரை போலிருக்கு.

உங்க விளக்கம் Ok.

இரு பதிவுகளையும் - ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி - எழுதியவைகளை இப்போதுதான் படித்தேன்.நன்றாக Homework பண்ணி எழுதியிருக்கிறீர்கள்!

இராஜாஜி, மற்றும் தமிழறிஞரும் வழக்கறிஞருமான திரு மு.இராகவையங்கார் அவர்கள், என்றெல்லாம் தேடிக்கண்டுபிடித்து எழுதி உங்கள் பதிவின் சுவையைக்கூட்டியிருக்கிறீர்கள்.

மு.இரா அவர்கள் எழுதிய அக்கருத்துகள் அன்னாரின் ‘ஆழ்வார்கள் காலநிலை’ என்ற பொத்தகத்தில் காணலாம். முழுவதையும் படித்திருக்கிறீர்களா?
நீங்கள் குறிப்பிட்ட ஆண்டாள் பாசுரத்தில் சொல்லப்படுவது அவ்வாழ்வார் காலத்தில் தோன்றிய ஒருவிண்மீனாகும் என்கிறார். Super analysis!

இராஜாஜியின் கருத்துகள் பல வைணவ அறிஞர்களாலும் ஆச்சாரியர்களாலும் ஆதாரங்களோடு மறுக்கப்பட்டுள்ளன.

தந்தைக்கும் மகளுக்கும் உள்ள வேறுபாடு அவர்கள் எழுதிய தமிழிலேயே புலனாகும். படித்துப்பாருங்கள்.

அது கிடக்க.

‘பெரியாழ்வார் பெற்றெடுத்த...’ என்று எழுதியிருக்கிறீர்கள். அது,
’பெரியாழ்வார் கண்டெடுத்த’ அல்லது, ‘பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட’ என்றிருக்கவேண்டும்.

கோயிலப்பற்றியும் அதன் ஐதீகங்களைப்பற்றியும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

ஆண்டாள் கோயிலின் திருப்படத்தைப் போட்ட நீங்கள் வடபத்ரசாயியின் கோயில் திருப்படத்தையும் போடாதது ஏனோ?

பயணக்கட்டுரைகள முடிக்கும்போதோ அல்லது தொடங்கும்போதோ, அவ்விடத்துக்கு போகும் வழியைச்சொல்வது வழக்கம். எப்படி போக வேண்டும். இரயிலிலா அல்லது பேருந்திலா? நமது உந்திலேயே போயின், எவ்வழியாகச் செல்லவேண்டும்? இரவு தங்க இடமுண்டா? பயணச்செலவு எவ்வளவு ஆகும்? இவற்றையெல்லாம் போட்டால் படிப்பவருக்கும் உதவியாக இருக்கும்.

அப்புறம் எங்கே பயணம் - திருமாலிருஞ்சோலையா? அதுதான் உஙகள் ஊராயிற்றே!

ம்..தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் அங்கேயும் கழிக்க்லாமே!

மதுரைக்காரர்கள் கோபப்பட்டால் நான் சொல்லுவேன்:

”அட விடுங்கப்பா...தமிழக ஆறுகளை இணைத்து தமிழ் நாட்டின் குடினீர்ப்பஞசத்தைப் போக்க கிளம்பியிருக்கிறார்கள் இந்த அம்மா. அது நலலதுதானே!”

என்பேன்.

மீண்டும் நன்றி. வணக்கம்.

Geetha Sambasivam said...

//இராஜாஜியின் கருத்துகள் பல வைணவ அறிஞர்களாலும் ஆச்சாரியர்களாலும் ஆதாரங்களோடு மறுக்கப்பட்டுள்ளன.

தந்தைக்கும் மகளுக்கும் உள்ள வேறுபாடு அவர்கள் எழுதிய தமிழிலேயே புலனாகும். படித்துப்பாருங்கள்.//

வாங்க கள்ளபிரான், இந்தச் செய்தியை ஒரு தகவலாகவே சொல்லி இருக்கேனே தவிர, அதை நான் ஏற்றுக் கொண்டதாய் எங்கேயும் சொல்லலை, நீங்களும் மீண்டும் படித்துப் பாருங்கள் நான் எழுதி இருப்பதை! :D ஏற்கெனவே நான் சார்ந்திருக்கும் ஒருகுழுமத்தில் இது பற்றிய விவாதங்களும் நடந்து முடிந்திருக்கிறது.


//பெரியாழ்வார் பெற்றெடுத்த...’ என்று எழுதியிருக்கிறீர்கள். அது,
’பெரியாழ்வார் கண்டெடுத்த’ அல்லது, ‘பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட’ என்றிருக்கவேண்டும்.//

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே என்று தான் பாடம் எனக்கு. இந்தக் குறிப்பிட்ட பெற்றெடுத்த என்ற வார்த்தையைப் பத்தி எழுத ஆரம்பிச்சால் இந்தப் பதிவுகளை எழுதி முடிக்க முடியாது. தனியா வச்சுப்போமா?? அப்புறமா????

Geetha Sambasivam said...

http://sivamgss.blogspot.com/2008/08/blog-post_03.html//

இது உங்கள் தனிப்பட்ட கவனத்திற்கு திரு கள்ளபிரான், ஆண்டாள் பற்றி எழுதியது.


//அப்புறம் எங்கே பயணம் - திருமாலிருஞ்சோலையா? அதுதான் உஙகள் ஊராயிற்றே!

ம்..தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் அங்கேயும் கழிக்க்லாமே!//

ம்ம்ம்ம்?????? தாமிரபரணிக்கரையில் உள்ள ஊர்களைப் பார்க்கையிலே இந்த ஊர்களையும் எங்களோட வசதியை உத்தேசித்துப் பார்த்தோம். தனித் தலைப்புக் கொடுக்கவேண்டாமேனு ஒரே தலைப்பில் கொடுக்கிறேன் என்று காரணம் சொல்லிவிட்டேன். என்றாலும் கிண்டல்???? ஓகே, அது உங்கள் விருப்பம், என்றாலும் அழகர் கோயிலை நான் தாமிரபரணிக்கரையோட சேர்க்கவில்லை, தனியாவே எழுதி இருக்கேன், எழுதுவேன், மதுரை மாநகரம் பத்தின கட்டுரைகளில், அப்புறமா போகிற வழி எல்லாம் அந்தக் குறிப்பிட்ட பதிவை முடிக்கிறச்சே கொடுப்பது என் வழக்கம். மேலும் நாங்க காரிலே சென்றோம். அதையும் மற்றப் பதிவுகளிலே குறிப்பிட்டிருக்கேன். ஒரே தலைப்பிலே எழுதுவதை ஒரு பெரிய தப்பாய்த் திரும்பத் திரும்பக் குறிப்பிடுவது உங்களுக்கு சந்தோஷம் அளிக்கிறது எனில் எனக்கும் மகிழ்ச்சியே. நன்றி உங்கள் வரவுக்கும், இனிமையான கிண்டலுக்கும். மீண்டும் வருக.

anna said...

கல்வெட்டுத்தகவல் அற்புதம்.
உபயோகமான் தகவல்க்ள்.
பிற்காலத்தில் எங்கள் ஊர்(ஒக்கூர்) சி.கரு.சி.சித.அவர்கள் குடும்பதார் சுற்றுப்பிரகார கல் திருப்பணி செய்திருக்கிறார்கள்,என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

passerby said...

நன்றி.

திருமாலிருஞ்சோலை அக்காரவடிசலுக்காகக் காத்திருக்கிறேன்.

துளசி கோபால் said...

பதிவு அருமை.

இந்த வருசம்தான் போய் வந்தேன். ரொம்பப் பிடிச்ச விஷயம், கோவிலில் படம் எடுத்துக்கலாம். சின்ன கட்டணம் உண்டு.

Geetha Sambasivam said...

வாங்க அன்னா,(ண்ணா??) புதிய செய்தியை அளித்தமைக்கு நன்றிங்க.

Geetha Sambasivam said...

கள்ளபிரான், அக்காரவடிசில் பத்தி எழுதி அலுத்துப் போச்சே?? நீங்க ரொம்ப லேட்???? :P

Geetha Sambasivam said...

வாங்க துளசி, அப்போ எங்க கிட்டே டிஜிடல்காமிரா இல்லை, ஃப்ளாஷ் காமிரா தான். எடுத்துப் போகலாமானு தெரியலை, காரிலேயே வச்சுட்டுப்போயிட்டோம். படங்கள் அதிகம் எடுக்க முடியலை. இப்போத் தான் டிஜிடல் காமிரா வாங்கினதுக்கு அப்புறமா எடுக்கறோம். அதுவும் சில சமயம்(பல சமயம்) காமிராவை எடுத்துக்கவே மறந்துடும், செல்லை வீட்டிலேயே வச்சுட்டுப் போற மாதிரி காமிராவைக் கைப்பையை விட்டு எடுக்க மறந்துடும். :))))))))))

வல்லிசிம்ஹன் said...

கீதா,அருமையான
விளக்கங்களுடன் கோவிலை விவரித்திருக்கிறீர்கள்.

எனக்குத் துளிக்கூட நினைவில்லை ,கோவில் கடைத்தெரு,பால்கோவா கடை, நேரிழைத்துண்டுகள் விற்கும் இடம்
என்று மனதில் பதிந்த சொற்களே மிச்சம்.
ரொம்ப நன்றிம்மா.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

மிக அருமையான பதிவு. ஆண்டாள் இயற்றியவை "இயற்றர வினை கொச்சகக் கலிப்பா" எனும் மிக சிக்கலான வடிவமைப்பு. பெரியாழ்வார் எளிமையான வழியில் பாசுரஙகள் எழுதியுள்ளார். ஆக, பெரியாழ்வாரின் கற்பனைப் பதிவாக ஆண்டாள் இருக்க முடியாது என்பது என் ஐயம். ஆண்டாள் பாசுரத்தில் பெண்மையின் தாக்கமே மிக அதிகமாகத் தெரிகின்றது. ஒரு ஆணால் இப்படி எழுதுவது கடினமே. ::::
ஆய்வுக்கான ஒரு கேள்வி : ஏன் நாலாயிர திவ்ய பிரபந்தங்களில் பகவத் கீதையைப் பற்றி சொல்லவில்லையே? விபரம் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.

Geetha Sambasivam said...

@N.D. NATARAJA DEEKSHIDHAR,

நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களிலே எனக்கு அவ்வளவு பரிச்சயம் கிடையாதுனே சொல்லலாம், படிச்சிருக்கேன், படிப்பேன், என்றாலும் நீங்க கேட்கிற கேள்விக்கு விடை சொல்றதுக்கான தகுதி எனக்கு இல்லை.