எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, September 02, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி!


இது வரையிலும் வீரமான சிவத் திருமேனிகளைத் தரிசித்தோம். இப்போ யோக வடிவிலான தக்ஷிணாமூர்த்தியைத் தரிசித்துவிட்டுப்பின்னர் பைரவரைக் காணலாம். தென்முகக் கடவுள். திருக்கைலை மலையின் தென்முக தரிசனத்திற்கும் தக்ஷிணாமூர்த்தித் திருக்கோலம் என்றே அழைப்பார்கள். பொதுவாகத் தென் திசையை அவ்வளவு நல்லதாக யாரும் நினைப்பதில்லை. தெற்கு என்றாலே ஆகாதது, அழிவைக்குறிக்கும். மரணத்தைத் தரும் யமனுடைய திசை என்றே அனைவரும் விரும்புவதில்லை. அத்தகைய தென் திசையை நோக்கியே இந்த தக்ஷிணாமூர்த்தி எப்போதும் அமர்ந்திருப்பார். மரணத்தை நோக்கி இருக்கும் ஆன்மாக்களின் ஞானத்தைத் தருவதற்கும், அழியாத அமுத வாழ்வைத் தருவதற்கும் வழிபடவேண்டி, தென் திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஞான தக்ஷிணாமூர்த்தி. எப்போதும் ஆடிக் கொண்டிருக்கும் ஆநந்த நடராஜன் ஆன ஆடல்வல்லான் தென் திசையையே நோக்கி ஆடுகிறான். அதுபோல் அமைதியைப் போதிக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் தென் திசையே.

அஞ்ஞானம் நிறைந்த நம்முள் ஞானம் பெருக நாம் வழிபடவேண்டியவருக்குக் குருவாகக் காட்சி அளிப்பது தக்ஷிணாமூர்த்தியே. ஆதிகுரு என அழைக்கப் படுகிறார். நம் அறியாமையை அகற்றி ஞானத்தைப் போதிக்கும் வடிவில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ளார் தக்ஷிணாமூர்த்தி. இவர் வாய் திறந்து எதுவும் பேசுவதில்லை. மெளனம் தான். மெளனமாய் இவர் போதிப்பதையே புரிந்து கொள்கின்றனர் சீடர்கள். சீடர்கள் நான்கு பேர். வயது முதிர்ந்தவர்கள். குருவோ பதினாறு வயது நிரம்பிய இளைஞன். அவனோ வாய் திறந்து பேசுவதில்லை. ஆனாலும் சீடர்கள் புரிந்து கொள்கின்றனர். ஆசிரியர்களுக்கெல்லாம் மேம்பட்ட எல்லாம் வல்ல பரம ஆச்சாரியன் போதிக்கவேண்டிய பொருளுக்கு ஏற்ப தன் போதனையை மாற்றிக் கொண்டு இவ்விதம் மெளனத்தின் மூலமே போதிக்கின்றான். சொல்லுக்கும், செயலுக்கும், மனதுக்கும், வாக்குக்கும் எட்டாத பரம்பொருளை எவ்விதம் சொல்லுவது? எந்தச் செயலில் புரிய வைப்பது? எப்படிக் காட்ட முடியும்? ஆகவே மெளனத்தையே தன் பாடமாகப் போதிக்கின்றான் இறைவன். இந்த மெளனத்தின் வாயிலாக சத் சித் ஆநந்தத்தை அநுபூதியாகத் தம் உணர்வினால் வெளிப்படுத்திக் காட்டச் சீடர்களும் அதைப் புரிந்து கொள்கின்றனர். இத்தகைய தெய்வீக அநுபவத்தைப் பெற்ற சீடர்களும் தம் உள்ளங்களில் அதைப் பரிபூரணமாக அநுபவித்து முழுமையாகப் பரவச் செய்து பேரின்ப நிலையை எய்துகின்றனர். மேலும் தக்ஷிணாமூர்த்தி வடிவம் பார்ப்பதற்கு எதுவும் செய்யாது சும்மா இருத்தல் போலத் தெரிந்தாலும் சிவசக்தி அடங்கிய ஐக்கிய வடிவம் அது. இது பற்றி இன்னும் விரிவாய்ப் பார்ப்போமா?

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள். இந்த தொடர் முடிந்ததும் வீட்டில் செய்யும் நித்ய பூஜை பற்றி எழுதுவீர்களா.

Geetha Sambasivam said...

ராம்ஜி யாஹூ, நித்ய பூஜை பலவகைகளில் உண்டு. அதில் பஞ்சாயன பூஜை என்பது கணபதி, சிவன், அம்பாள், விஷ்ணு, சூரியன் ஆகியோரை வழிபடுவது. ஒவ்வொருவரையும் தனித்தனியாகவும் வழிபடுவார்கள். உங்கள் தேவை என்னனு தெரியலை. என்றாலும் இது குறித்து விபரமாகவும் தெளிவாகவும் அறிய இங்கே செல்லுங்கள். தமிழ் அல்லது இங்கே english