எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, December 29, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா!


திருக்கைலை மலை. ஐயனும் அன்னையும் தனிமையில். ஐயன் அன்னைக்குப் பிரணவப்பொருள் உரைக்க அன்னையோ விளையாட்டாக இறைவன் கண்களைப் பொத்த, அகில உலகமும் நிலை தடுமாறுகிறது. சூரிய, சந்திரர்களாக இருகண்களும், நெற்றிக்கண் அக்னியாகவும் விளங்கியவற்றைப்பொத்தவும் எங்கும் இருள் சூழ்ந்தது. அஞ்சிய அம்பிகை தன் கைகளை எடுக்க உலகில் மீண்டும் ஒளி பிறந்தது. ஜோதி வடிவான ஈசனைத் தான் மறைத்ததுதான் காரணம் எனப் புரிந்துகொண்டாள் அன்னை. அந்த ஒரு கணம் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் காரணம் தெரியாமல் துன்பத்தில் ஆழ்ந்தன. ஆகையால் அன்னையைப் பாவம் சூழ்ந்துகொள்ள ஈசனை வேண்டினாள்.

பூவுலகம் சென்று அங்கே தம்மை மணலால் லிங்கமாய்ப் பிடித்து வைத்து வழிபடச் சொன்னார் ஐயன். அன்னையும் காஞ்சீபுரம் வந்து மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டுத் தவமும் புரிந்தாள். அன்னையின் தவத்தைக் கலைக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போக அன்னைக்கு அருள் வழங்கினார் ஈசன். மேலும் திருவண்ணாமலைக்கும் வந்து தவம் இயற்றினால் தம் இடப்பாகத்தைப் பெறலாம் எனவும் கூறினார். ஆகையால் அன்னை அங்கே வந்து ஈசனின் திருவுருவமாகிய லிங்கத்தை அங்கிருந்த நதிக்கரையில் எழுந்தருளச் செய்து வழிபட்டாள். கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்திரம் கூடிய தினத்தில் ஐயனை ஜோதிவடிவாய்க் கண்டாள். மலையின் மேலும் ஜோதியாய்த் தெரிய ஐயனை வேண்டித் துதித்து அவரின் இடப்பாகத்தைப் பெற்றாள். முதலில் மலைமேல் தீபம் ஏற்றியது அன்னைதான் என்று ஒரு ஐதீகம். மேலும் இடப்பாகம் அடையவேண்டி இறைவன் மலையாக அமர்ந்திருக்கையில் அதைச் சுற்றித் தலைமேல் கைகூப்பியவண்ணம் அன்னை வலம் வந்ததாயும், அதனாலேயே இன்றும் கிரிவலம் வந்தால் கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும் என்பதும் ஒரு கூற்று..

இந்த அர்த்த நாரீசுவரர் தோற்றம் இன்னொரு வகையாகவும் கூறப்படுகிறது. திருக்கைலை மலையில் ஐயனும் அன்னையும் அமர்ந்திருக்கையில் சிவனடியார்கள் அனைவரும் வந்து வணங்கிச் சென்றனர். ரிஷிகள் முனிவர்கள், தேவாதிதேவர்கள் வந்து வணங்குகின்றனர். அவர்களில் ஒருவர் பிருங்கி முனிவர். அந்த பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். ஐயனை மட்டுமே வணங்குவார். அன்னையை வணங்க மாட்டார். ஐயனும், அன்னையும் அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒரு ஈயின் உருவெடுத்துக்கொண்டு சென்று ஐயனை மட்டுமே வலம் வருவார். அன்னைக்கு இது கொஞ்சம் உறுத்தலாய் இருந்த்து. அவரிடம் தன்னையும் வணங்கச் சொல்ல, அவரோ மறுத்தார். உடனேயே அவர் உடலின் சக்தியையெல்லாம் நீக்கினாள் அன்னை. நிற்கக் கூட முடியாமல் உடலின் சக்தி அனைத்தும் போய் எலும்புக்கூடாக ஆனார் பிருங்கி முனிவர். அவருக்கு நிற்க ஒரு ஊன்றுகோலைக் கொடுத்தார் ஐயன். அப்படியும் பிடிவாதமாய் அவர் இருக்கவே அன்னை ஐயனை வேண்டிப் பிரார்த்திக்க உடலின் இடப்பாகத்தைப் பெற்றாள் என்பதும் ஒரு ஐதீகம்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலையில் சிறப்பாய்க் கொண்டாடப் படும். பதினேழு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் கொடியேற்றத்தோடு முதல் திருவிழா ஆரம்பம் ஆகிறது. முதல் மூன்று நாட்கள் விநாயகர், ஸ்ரீபிடாரி, ஸ்ரீதுர்கை ஆகியோருக்காகக் கொண்டாடப் படுகின்றன. காலை, மாலை இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகளும் வீதி உலா வருகின்றனர். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வாகனத்தில் ஈசன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பத்தாம் நாள் அதிகாலை நான்கு மணி அளவில் மலைமேல் மலை தீபம் ஏற்றும் முன்னர் பரணி தீபம் போடப் படும். உலகத்து மக்கள் அனைவரும் நன்கு சீரோடும், சிறப்போடும் வாழப் பிரார்த்தித்துக்கொண்டு ஏற்றப் படும். அன்று மாலையே மஹா தீபம் ஏற்றப்படும். தீப தரிசன மண்டபத்தில் மக்கள் கூட்டம் குவிந்திருக்கப் பஞ்சமூர்த்திகளும் காத்திருக்க ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வரும் அர்த்தநாரீசுவரர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு வெளியே வந்து ஆடலோடு பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் காட்சி தர அந்தக் கணம் பஞ்சமூர்த்திகளுக்கு தீப ஆராதனை எடுக்கப் பட்டு மலை உச்சியில் மஹாதீபமும் ஏற்றப்படும். அனைவரும் அண்ணாமலைக்கு அரோஹரா என்னும் முழக்கம் விண்ணைத் தொடும்.

தொடரும்

Thursday, December 16, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா ! 5


சோணகிரி வலம் வருதல் பிறவி எனும்
பெருங்கடற்குத் தோணி ஆகும்
ஏழ்நரகக் குழி புகுதாது அரிய முத்தி
வழிக்கு ஏற ஏணி ஆகும்
காண் அரிய தவத்தினுக்கும் அறத்தினுக்கும்
அரும்பொருட்கும் காணி ஆகும்
வாள் நுதல் மின் இடத்திருக்கும் கண்ணுதலை
மனம் உருக்கும் மகிழ்ச்சியாகும்.”

என்னும் தலப் புராணப்பாடல் ஒன்று கிரிவல மகிமையைக் கூறுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் கோயில்களையும் அஷ்டலிங்கங்களையும் பார்ப்போமா?? தேயு எனப்படும் அக்னியே இங்கே ஜ்யோதிர்லிங்க வடிவாகி ஸ்ரீசக்ர வடிவில் உள்ள இந்தப் பூவுலகின் உன்னதமான ஒப்பற்ற மேருவாக அருணாசலேஸ்வரர் என்ற பெயரில் விளங்குகிறார். இம்மலையை ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தால் சிவபதம் கிடைக்கும் எனவும், திங்கள்கிழமை வலம் வந்தால் இந்திரனைப் போன்ற சிறப்பான வாழ்க்கையும், செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் பிறவிப் பிணி நீங்கிவிடும் எனவும், புதன்கிழமை வலம் வந்தால் தேவர்களாகும் தகுதி கிடைக்கும் எனவும், வியாழனன்று வலம் வந்தால் மேலான பதவி சுகம் கிடைக்குமெனவும், வெள்ளியன்று வலம் வந்தால் விஷ்ணு பதவி கிடைக்குமெனவும், சனிக்கிழமை வலம் வந்தால் நவக்ரஹ தோஷங்களும் நிவர்த்தி அடையும் எனவும் புராணங்கள் கூறுகின்றன. இனி கிழக்குத் திசையில் உள்ள ஸ்ரீ இந்திர லிங்கத்தைப் பார்ப்போமா?


கிரிவலம் வரும்போது எந்த இடத்தில் ஆரம்பிக்கிறோம் என்பது நம் வசதியைப் பொறுத்தது என்றாலும் இப்போது எழுதும் வசதிக்காகக் கிழக்கே இருக்கும் இந்திரலிங்கத்தில் ஆரம்பிக்கிறேன். அறியாமை நீங்கவும், இருள் நீங்கவும், ஏன் அறியாமையே இருள் தானே? ஆகவே அவற்றை ஒழிக்க வஜ்ராயுதம் தாங்கிக் காட்சி அளிக்கிறார் இங்கே ஈசன். நாம் அறவழியில் செல்ல வேண்டி நம் வாழ்க்கைக்கே த்த்துவமான அறநெறியை அள்ளித்தருகிறார். இந்திரன் ஈசனை வணங்கி வழிபட்ட லிங்கம் என்று சொல்லப் படுகிறது.

அடுத்துத் தென் கிழக்குத் திசை. நீங்கள் கிழக்கே பார்த்து நின்றால் உங்கள் வலப்பக்கம் மூலையில் வரும். இது அக்னி மூலை எனப்படும். அக்னி அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான ஒன்று. வேள்வியில் மூட்டப்படும் அக்னிதேவன் ஏழுவகைப்படுவான் எனவும் ஏழு நாக்குகள் உண்டெனவும் கூறுவார்கள். நம் சார்பில் இறைவனிடம் வேண்டுதலை வைப்பவன் அக்னி பகவான். அக்னி ஒவ்வொரு யுகங்களிலும் மாறாமல் தொடர்ந்து வந்து இணைப்புச் சங்கிலியாய் இருக்கிறது. இங்கே அக்னி வழிபட்டதாய்க் கூறப்படுகிறது.

அடுத்துத் தென் திசை. ம்ருத்யு எனப்படும் மரணத் தெய்வம் ஆன யமனின் திசை. நம் மனதைப் பரிசுத்தப் படுத்தினால் மீண்டும் பிறவி ஏற்படாது. மாயையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் பிறவியும், மறுபிறவியும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். அத்தகையதொரு துன்பத்திலிருந்து காப்பவர் யமலிங்கம். ஆன்மாவைக் கண்டருள உதவி செய்வதோடு ஈசனோடு ஆன்மா இரண்டறக் கலக்கவும் உதவுவார்.

அடுத்துத் தென்மேற்குத் திசை. நாம் செய்யும் அனைத்துக் கெட்ட செயல்களிலிருந்தும் விடுதலை பெற இவரை வழிபட வேண்டும். ஸ்ரீநிருதிலிங்கமான இவரை வழிபட்டால் நம் பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆத்மார்த்தமாக அமர்ந்து ஒரே முனைப்போடு இவரை வழிபட்டால் உள்ளத்தினுள்ளே ஜோதிமயமான தரிசனம் ஏற்படும் என ஞாநிகள் கூற்று. தென் திசையிலிருந்து மேற்கு நோக்கித் திரும்பும் மலைப்பாதையில் அமைந்துள்ளது ஸ்ரீநிருதி லிங்கம்.

ஸ்ரீவருணலிங்கம் இங்கே மேற்குத் திசையில் காட்சி அளிக்கிறார். நீரின்றி அமையாது உலகு என்பதற்கொப்ப இந்தப் பரந்த உலகில் மட்டுமல்லாது மூவுலகிலும் உள்ள நீருக்கெல்லாம் அதிபதியாக விளங்கும் இவர் வழிபட்ட இந்த ஸ்ரீ வருணலிங்கத்தை வழிபட்டால் நாடு செழிக்கும். நீர்நிலைகள் நிரம்பும், அனைவரையும் மகிழ்வோடு வாழ வைக்கும் ஸ்ரீவருணலிங்கத்தை வருணன் ஸ்தாபித்ததாய்க் கூறப்படுகிறது.

வடமேற்குத் திசையில் உள்ள ஸ்ரீவாயுலிங்கம் நம் ஜீவன் என்றே கூறலாம். காற்றில்லாமல் யாருக்கும் மூச்சு விடமுடியாது. காற்றுத் தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவனாய் விளங்குகிறது. காற்றில்லை எனில் இவ்வுலகம் இயங்குவது எவ்வாறு? காற்று கண்ணுக்குத் தெரியவில்லை எனினும் எங்கும் வியாபித்து இருக்கிறது. நிலைத்தும் இருக்கிறது. இயக்குவதும், இயங்குவதும் இவரே. நமக்கெல்லாம் சுவாசத்தை அளிக்கும் வாயுலிங்கத்தை ஸ்தாபித்தவர் வாயு என்று கூறுகின்றனர்.

அடுத்துக் குபேரதிசையான வடகிழக்கு மூலை. இங்கே ஈசான்ய லிங்கமும் குடி கொண்டிருக்கிறார். ஈசான்ய மூலை என்றும் கூறுவார்கள். குபேரன் ஈசனுக்கு நெருக்கமானவன். குபேரன் ஸ்தாபித்த இந்த லிங்கத்தை வழிபட்டால் செல்வத்துக்குக் குறைவிருக்காது என்று கூறுகின்றனர். ஈசான்யலிங்கமோ எனில் உடல் முழுதும் திருநீறணிந்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார். பூதகணங்கள் சூழ்ந்திருக்க முக்கண்ணோடும் ஜடாமுடியோடும், புலித்தோலில் அமர்ந்த வண்ணம் ஏழு ருத்ரர்களில் ஒருவராய்க் காட்சி தருகிறார் இவர். மலையே இங்கு ஈசன். ஈசனின் ஜோதி ஸ்வரூபமே மலை என்று முன்னரே பார்த்தோம். அத்தகைய மலையைச் சுற்றி அமைந்துள்ள இந்த அஷ்ட லிங்கங்களின் அமைப்பும் அந்த அந்த தேவர்கள் ஈசனை வழிபட்டதைக் குறிக்கிறது. ஸ்ரீவருண லிங்கத்தை அடுத்து உள்ள ஆதி அண்ணாமலையார் ஆலயத்தை மஹாவிஷ்ணு ஸ்தாபித்ததாய்க் கூறுகின்றனர். கார்த்திகை தீபத் திருநாளின் மூன்றாம் நாள் அருணாசலேஸ்வரர் இந்தக் கோயிலுக்கு வருவார் என்றும் மலையை அம்பிகையோடு சேர்ந்து அவரும் வலம் வருவார் என்றும் தெரிய வருகிறாது. அடுத்து நாம் காணப்போவது கார்த்திகை தீபச் சிறப்பும், ஈசனின் அர்த்த நாரீசுவரக் கோலத்தின் சிறப்பும்.

Saturday, December 11, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா! 4

உருவமும் உயிரு மாகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்
மற்றொரு மாடி லேனே.
4.63.3
612

பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்
யாதும்நான் நினைவி லேனே.

நாவுக்கரசர் தேவாரம்.


அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் கலங்கித் துன்பம் அடையும்போது ஆறுதலை அளிக்கும் ஆத்மாவாய்ச் சொல்லப் படுகிறது. புத்தியும், அகங்காரமும் பிரம்மனாயும், விஷ்ணுவாயும் செயல்பட்டு நம் உள்ளே ஒளிரும் உள்ளொளியைக் காண முடியாமல் அல்லல் படுகின்றனர். புத்தியிலே ஆணவம் அதிகம் ஆவதால் பிரம்மனால் காண முடியவில்லை. ஆனால் விஷ்ணுவோ சரணாகதி எனத் திருவடிகளைச் சரணடைவதால் அவருக்குக் காண முடியாவிட்டாலும் ஈசனின் அருள் கிடைக்கிறது.

நம் உள்ளத்தினுள்ளே இதயம் என்று நாம் சொல்வது, லப் டப் லப் டப் னு துடிச்சுக்குதே அது இல்லை ,நம் மார்பில் நட்ட நடுவில் ஒரு சின்னப் பொறியாக நம் கண்ணுக்கே தெரியாமல் சின்னத் துவாரமாக இருக்கிறது. மிக மிக சூக்ஷ்மமாகச் சின்ன துவாரத்தில் பொறியாக இருக்கும் அந்த அக்னி தான் நாம் நம்மை உணரும்போது ஆத்மதரிசனமாய்த் தெரிகிறது. இந்த உடலே நான் என்று நினைப்பதை அகற்றி உள்முக திருஷ்டியில் மனதைத் திருப்பி உள் ஒளியைக்காணுவதெ அருணாசல மலையின் சிகரத்தில் ஏற்றப்படும் ஜோதியின் தத்துவம் ஆகும். அதுவே ஜோதி தரிசனமும் ஆகும். பழங்காலத்தில் இறைவனை ஜோதி வடிவிலேயே வணங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் நாளா வட்டத்தில் ஞானமும், யோகமும் மங்கிப்போக இறைவன் என்ற ஒரு வடிவத்தை உண்டாக்கிக் கொண்டனர்.

இந்த அற்புதமான அருணாசல மலையே ஜோதி சொரூபம் என்கிறார்கள். இது தோன்றிய நாளாக மார்கழித் திருவாதிரை நன்னாளைச் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். இங்கே ஜோதி உருவில் தோன்றிய ஈசனை தேவாதி தேவர்களும், பிரம்மா, விஷ்ணுவும் வழிபட்டு வணங்கிய நாள் மாசி மகா சிவராத்திரி என்றும் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். அன்று தான் லிங்கோத்பவர் உற்பத்தி என்றும் கூறுவார்கள். இந்த மலையில் ஈசன் அருணகிரி யோகியாக ஒரு சித்தர் வடிவில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாயும் சகல ஐஸ்வரியங்களையும் கொண்டுள்ள அதிசய குகை இருப்பதாயும் அருணாசல மஹாத்மியம் கூறுகிறது.

இந்த மலையக்காணக் கூடிய எல்லையிலிருந்து தரிசித்தாலும், மனத்தினால் நினைத்தாலும் கூட முக்தியைக்கொடுக்கும் என்றும் அருணாசல மஹாத்மியம் கூறுகிறது. அழலுருவில் ஈசன் நிரந்தர வாசம் செய்வதால் இங்கே ஞாநிகளும், சித்தர்களும் வசிக்கிறார்கள். அதோடு பிறருக்குத் தீங்கு செய்வதை நினைக்கவும் முடியாது எவராலும். ஏனெனில் ஈசனின் கோபாக்னி அவர்களைத்தண்டிக்கும்.

தொடரும்.

படங்கள் உதவி: கூகிளார் நன்றி.

Monday, December 06, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா! 3

உருவமும் உயிரு மாகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்
மற்றொரு மாடி லேனே.
4.63.3
612

பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்
யாதும்நான் நினைவி லேனே.
4.63.4
613

பிறையணி முடியி னானே
பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார்
கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும்
அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா
லியாதுநான் நினைவி லேனே.

திருநாவுக்கரசர் தேவாரம்.



இங்கே தான் அம்பிகை ஈசனிடம் சரிபாதி பெற்றதாயும் ஐதீகம். அது நடந்த குன்று என்று பவளக்குன்றைச் சொல்லுவார்கள். கிரிவலப் பாதையில் வரும் பவளக்குன்றைத் தவிர அங்கே வண்ணாத்தி குகை, அருட்பால் குகை, மாமரத்து குகை போன்ற பத்துக்கும் மேற்பட்ட குகைகளும் முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், பாத தீர்த்தம், அருட்பால் தீர்த்தம் போன்ற தீர்த்தங்களும், மயிலாடும்பாறை, ஆமைப் பாறை போன்றவைகளும் அல்லிச் சுனை, குமார சுனை, இடுக்குச் சுனை, புகுந்து குடிச்சான் சுனை போன்றவைகளும் உள்ளன. இவற்றில் இடுக்குச் சுனையில் நுழைய முடியாது என்றும் வலக்கையால் பாறை ஒன்றைப் பிடித்துக்கொண்டு இடக்கையால் நீரை அருந்தவேண்டும் என்றும் கூறுகின்றனர். இது தவிரவும் ஊமைச்சி குட்டை, அழகுக்குட்டை, கசபக்குட்டை, பண்டாரக் குட்டை, இலுப்பக் குட்டை ஆகிய குட்டைகளும் கிரிவலப் பாதையின் உண்டு.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரைத் தரிசனம் செய்த பின்னர் கிரிவலம் வந்தால் தான் வழிபாடு பூர்த்தி அடையும். ஒரு முறை கிரிவலம் செய்து பார்த்தாலே அதன் பலனைக் காண்போம் என ஸ்ரீரமண மஹரிஷி கூறுகிறார். கிரிவலத்தில் முதல் அடியில் உலகை வலம் வந்த பலன் கிடைக்கும் எனவும், இரண்டாம் அடியில் புண்ய தீர்த்தங்களில் நீராடிய பலனும், மூன்றாம் அடியில் அஸ்வமேத யாகப் பலனும், நான்காம் அடியில் அஷ்டாங்க யோகப் பலனும் கிடைக்கும். கிரிவல நியதிகள் குறித்து ஜனக மஹரிஷிக்கு பிரம்மா உபதேசித்துள்ளதாய்ப் புராணங்கள் மூலம் அறிகிறோம். கிரிவலப் பாதையில் எத்தனையோ ரிஷிகளும், முனிவர்களும், ஞாநிகளும் சூக்ஷ்ம சரீரத்துடன் வலம் வருவதால் கிரிவலப் பாதையில் மட்டுமின்றி ஊரிலேயே அநேகர் செருப்புப்போட்டுக்கொள்ளாமலே நடக்கின்றனர்.

முக்கியமாய் கிரிவலம் வரும்போது வேகமாய் நடக்காமல் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக் காலில் செருப்பின்றி, ஆண்கள் மேலாடை இல்லாமல், குடை போன்றவை பிடிக்காமல் சிவ சிந்தனை ஒன்றுடனேயே வேறு பேச்சு எதுவும்பேசாமல் நடக்கவேண்டும். கைகளை வீசிக்கொண்டோ முன்னால் செல்பவர்களை அவசரமாய்த் தாண்டிக்கொண்டோ செல்லாமல், இடப்பக்கமாகவே செல்லவேண்டும். வலப்பக்கம் தேவர்களும், சித்தர்களும் பல உருவங்களிலும் வருவார்கள். அங்கே கிரிவலம் வரும்போது கூடவே வரும் பசு, கோழி, நாய், பூனை போன்றவை கூட சித்தர்களாகவோ, முனிவர்களாகவோ, ரிஷிகளாகவோ இருக்கக் கூடும். ஆகவே அவர்களை விரட்டவோ, இடைஞ்சலோ செய்யாமல் அமைதி காத்துக்கொண்டு வரவேண்டும். வாகனங்கள் எதிலும் கிரிவலம் செய்யக் கூடாது. எங்கே ஆரம்பிக்கின்றோமோ அங்கேயே கிரிவலத்தை முடிக்கவேண்டும்.
பெளர்ணமி தினத்தின் பூரண சந்திரனின் கிரணங்கள் மலை மீது வளர்ந்திருக்கும் மூலிகைகளின் மேல் பட்டுப் பிரதிபலிக்கும்போது அவற்றிலிருந்து கிளம்பும் அபூர்வ சக்தியால் பக்தர்களின் உடல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். ஐப்பசி, கார்த்திகை இரு மாதங்களிலும் கிரிவலம் வருவதும் சிறப்பாகும். கிரிவலப் பாதையில் 360 தீர்த்தங்கள் இருப்பதாகவும், விநாயகருக்கு என 16 தனிக்கோயில்களும் ஆறுமுகனுக்கு என 7 சந்நிதிகளும் இருப்பதாய்ச் சொல்கின்றனர். கிரிவலப் பாதையிலேயே இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. அதற்கு மூன்று வாசல்கள் காணப்படுகிறது. முதலில் பின்வாசல் வழியாக நுழையவேண்டும், பின்னர் இரண்டாம் வாசலைக் கடந்து, முதல் வாசல் வழியே குனிந்து ஒருக்களித்தவாறு வெளியே வரவேண்டும்.

நாங்க முயற்சி செய்ய வில்லை. அவருக்குக் கழுத்து பிரச்னை. எனக்கு மொத்தமுமே பிரச்னை தான். அதனால் மத்தவங்களுக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம்னு இருந்துட்டோம். கூட வந்தவர்களில் ஒருத்தர் போயிட்டு வெளியே வர முடியாமல் தவிச்சு, எல்லாரும் தவிச்சோம். அப்புறமா விநாயகர் அருளால் எப்படியோ வந்துட்டார். கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலையார் கோயில் இருக்கிறது. இந்த லிங்கத்தைத் திருமால் ஸ்தாபிதம் செய்த்தாய்க் கூறுகின்றனர். கார்த்திகை தீபத்தின் போது இரண்டாம் நாள் விழா மற்றும் மூன்றாம் நாள் விழாவில் அருணாசலேசுவரர் இங்கு வருவாராம். அடி அண்ணாமலையாரைத் தவிர, காளியம்மன், துர்கை, அருட்பெருஞ்சோதி, மாரியம்மன், ஆஞ்சநேயர், பூதநாராயணர், இரட்டைப் பிள்ளையார், இடுக்குப் பிள்ளையார், வீரபத்திரர் கோயில், தக்ஷிணாமூர்த்தி கோயில்கள், துர்கையம்மன் கோயில், வடவீதி சுப்ரமணியர் கோயில், முனீஸ்வரர் கோயில், நவகிரஹக் கோயில் என ஏராளமான கோயில்கள் உள்ளன. எல்லாவற்றையும் தரிசித்துக் கிரிவலம் வருவதற்குச் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேல் பிடிக்கும்.

இவற்றைத் தவிர, சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், ஸ்ரீரமாணாஸ்ரமம், அண்ணாமலை சுவாமிகள் ஆஸ்ரமம், காட்டு சிவா ஆசிரமம், ஆலமரத்து ஆஸ்ரமம், ஜடைசாமி ஆஸ்ரமம், கயிறுசாமி என்ற பட்டினத்து சாமி சமாதி, யோகி ஸ்ரீ ராம்சூரத்குமார் ஆஸ்ரமம், பஞ்சமுகம் அருகில் இசக்கி சாமி, பிரும்மானந்ந்த சாமி சமாதிகள் போன்றவையும் உள்ளன. நாங்க நேரக் குறைவினால் ஸ்ரீரமணாஸ்ரமம் மட்டுமே போனோம்.