எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 06, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா! 3

உருவமும் உயிரு மாகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்
மற்றொரு மாடி லேனே.
4.63.3
612

பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்
யாதும்நான் நினைவி லேனே.
4.63.4
613

பிறையணி முடியி னானே
பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார்
கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும்
அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா
லியாதுநான் நினைவி லேனே.

திருநாவுக்கரசர் தேவாரம்.இங்கே தான் அம்பிகை ஈசனிடம் சரிபாதி பெற்றதாயும் ஐதீகம். அது நடந்த குன்று என்று பவளக்குன்றைச் சொல்லுவார்கள். கிரிவலப் பாதையில் வரும் பவளக்குன்றைத் தவிர அங்கே வண்ணாத்தி குகை, அருட்பால் குகை, மாமரத்து குகை போன்ற பத்துக்கும் மேற்பட்ட குகைகளும் முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், பாத தீர்த்தம், அருட்பால் தீர்த்தம் போன்ற தீர்த்தங்களும், மயிலாடும்பாறை, ஆமைப் பாறை போன்றவைகளும் அல்லிச் சுனை, குமார சுனை, இடுக்குச் சுனை, புகுந்து குடிச்சான் சுனை போன்றவைகளும் உள்ளன. இவற்றில் இடுக்குச் சுனையில் நுழைய முடியாது என்றும் வலக்கையால் பாறை ஒன்றைப் பிடித்துக்கொண்டு இடக்கையால் நீரை அருந்தவேண்டும் என்றும் கூறுகின்றனர். இது தவிரவும் ஊமைச்சி குட்டை, அழகுக்குட்டை, கசபக்குட்டை, பண்டாரக் குட்டை, இலுப்பக் குட்டை ஆகிய குட்டைகளும் கிரிவலப் பாதையின் உண்டு.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரைத் தரிசனம் செய்த பின்னர் கிரிவலம் வந்தால் தான் வழிபாடு பூர்த்தி அடையும். ஒரு முறை கிரிவலம் செய்து பார்த்தாலே அதன் பலனைக் காண்போம் என ஸ்ரீரமண மஹரிஷி கூறுகிறார். கிரிவலத்தில் முதல் அடியில் உலகை வலம் வந்த பலன் கிடைக்கும் எனவும், இரண்டாம் அடியில் புண்ய தீர்த்தங்களில் நீராடிய பலனும், மூன்றாம் அடியில் அஸ்வமேத யாகப் பலனும், நான்காம் அடியில் அஷ்டாங்க யோகப் பலனும் கிடைக்கும். கிரிவல நியதிகள் குறித்து ஜனக மஹரிஷிக்கு பிரம்மா உபதேசித்துள்ளதாய்ப் புராணங்கள் மூலம் அறிகிறோம். கிரிவலப் பாதையில் எத்தனையோ ரிஷிகளும், முனிவர்களும், ஞாநிகளும் சூக்ஷ்ம சரீரத்துடன் வலம் வருவதால் கிரிவலப் பாதையில் மட்டுமின்றி ஊரிலேயே அநேகர் செருப்புப்போட்டுக்கொள்ளாமலே நடக்கின்றனர்.

முக்கியமாய் கிரிவலம் வரும்போது வேகமாய் நடக்காமல் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக் காலில் செருப்பின்றி, ஆண்கள் மேலாடை இல்லாமல், குடை போன்றவை பிடிக்காமல் சிவ சிந்தனை ஒன்றுடனேயே வேறு பேச்சு எதுவும்பேசாமல் நடக்கவேண்டும். கைகளை வீசிக்கொண்டோ முன்னால் செல்பவர்களை அவசரமாய்த் தாண்டிக்கொண்டோ செல்லாமல், இடப்பக்கமாகவே செல்லவேண்டும். வலப்பக்கம் தேவர்களும், சித்தர்களும் பல உருவங்களிலும் வருவார்கள். அங்கே கிரிவலம் வரும்போது கூடவே வரும் பசு, கோழி, நாய், பூனை போன்றவை கூட சித்தர்களாகவோ, முனிவர்களாகவோ, ரிஷிகளாகவோ இருக்கக் கூடும். ஆகவே அவர்களை விரட்டவோ, இடைஞ்சலோ செய்யாமல் அமைதி காத்துக்கொண்டு வரவேண்டும். வாகனங்கள் எதிலும் கிரிவலம் செய்யக் கூடாது. எங்கே ஆரம்பிக்கின்றோமோ அங்கேயே கிரிவலத்தை முடிக்கவேண்டும்.
பெளர்ணமி தினத்தின் பூரண சந்திரனின் கிரணங்கள் மலை மீது வளர்ந்திருக்கும் மூலிகைகளின் மேல் பட்டுப் பிரதிபலிக்கும்போது அவற்றிலிருந்து கிளம்பும் அபூர்வ சக்தியால் பக்தர்களின் உடல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். ஐப்பசி, கார்த்திகை இரு மாதங்களிலும் கிரிவலம் வருவதும் சிறப்பாகும். கிரிவலப் பாதையில் 360 தீர்த்தங்கள் இருப்பதாகவும், விநாயகருக்கு என 16 தனிக்கோயில்களும் ஆறுமுகனுக்கு என 7 சந்நிதிகளும் இருப்பதாய்ச் சொல்கின்றனர். கிரிவலப் பாதையிலேயே இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. அதற்கு மூன்று வாசல்கள் காணப்படுகிறது. முதலில் பின்வாசல் வழியாக நுழையவேண்டும், பின்னர் இரண்டாம் வாசலைக் கடந்து, முதல் வாசல் வழியே குனிந்து ஒருக்களித்தவாறு வெளியே வரவேண்டும்.

நாங்க முயற்சி செய்ய வில்லை. அவருக்குக் கழுத்து பிரச்னை. எனக்கு மொத்தமுமே பிரச்னை தான். அதனால் மத்தவங்களுக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம்னு இருந்துட்டோம். கூட வந்தவர்களில் ஒருத்தர் போயிட்டு வெளியே வர முடியாமல் தவிச்சு, எல்லாரும் தவிச்சோம். அப்புறமா விநாயகர் அருளால் எப்படியோ வந்துட்டார். கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலையார் கோயில் இருக்கிறது. இந்த லிங்கத்தைத் திருமால் ஸ்தாபிதம் செய்த்தாய்க் கூறுகின்றனர். கார்த்திகை தீபத்தின் போது இரண்டாம் நாள் விழா மற்றும் மூன்றாம் நாள் விழாவில் அருணாசலேசுவரர் இங்கு வருவாராம். அடி அண்ணாமலையாரைத் தவிர, காளியம்மன், துர்கை, அருட்பெருஞ்சோதி, மாரியம்மன், ஆஞ்சநேயர், பூதநாராயணர், இரட்டைப் பிள்ளையார், இடுக்குப் பிள்ளையார், வீரபத்திரர் கோயில், தக்ஷிணாமூர்த்தி கோயில்கள், துர்கையம்மன் கோயில், வடவீதி சுப்ரமணியர் கோயில், முனீஸ்வரர் கோயில், நவகிரஹக் கோயில் என ஏராளமான கோயில்கள் உள்ளன. எல்லாவற்றையும் தரிசித்துக் கிரிவலம் வருவதற்குச் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேல் பிடிக்கும்.

இவற்றைத் தவிர, சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், ஸ்ரீரமாணாஸ்ரமம், அண்ணாமலை சுவாமிகள் ஆஸ்ரமம், காட்டு சிவா ஆசிரமம், ஆலமரத்து ஆஸ்ரமம், ஜடைசாமி ஆஸ்ரமம், கயிறுசாமி என்ற பட்டினத்து சாமி சமாதி, யோகி ஸ்ரீ ராம்சூரத்குமார் ஆஸ்ரமம், பஞ்சமுகம் அருகில் இசக்கி சாமி, பிரும்மானந்ந்த சாமி சமாதிகள் போன்றவையும் உள்ளன. நாங்க நேரக் குறைவினால் ஸ்ரீரமணாஸ்ரமம் மட்டுமே போனோம்.

11 comments:

எல் கே said...

ரொம்ப அவசரமா எழுதினா பகுதி மாதிரி இருக்கே ??

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்???? இருக்கலாம் எல்கே, இப்போத் தான் எழுதினேன், எனக்கும் கொஞ்சம் திருப்தி இல்லைதான். இனி கவனத்தில் வைச்சுக்கறேன்.

sury siva said...

1985 அல்லது 1986ல் ஒரு தரம் கிரி வலம் வந்தேன். அதற்கப்புறம் போகவேண்டும் என்று நினைக்கிறேன். இருப்பினும்
இயலவில்லை.

அண்ணாமலையான் அருள் கிடைக்கும் என்று காத்திருப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை.
அரோஹரா. அண்ணாமலையானுக்கு அரோஹரா.

அது இருக்கட்டும். அந்த ரமண ஆஸ்ரம குடிலுக்கு முன்னே ஏக ஸ்லோகம் ஒன்று ஆதி சங்கரர் எழுதியது
பொறிக்கப்பட்டுள்ளது. அதை பார்த்தீர்களா ?

சுப்பு ரத்தினம்.

எல் கே said...

ஹ்ம்ம் சரி சரி .

பவள சங்கரி said...

நான் இன்னும் கிரிவலம் போனதே இல்லைங்க கீதா. பார்க்கலாம் ....அந்த அண்ணாமலையார் எப்போது கூப்பிடுகிறார் என்று.

Jayashree said...

""அண்ணாமலையான் அருள் கிடைக்கும் என்று காத்திருப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை ""

நானும் Mr SUBBURATHNAM, நித்திலம் சிப்பி மாதிரி அருள் தரட்டும்னே சொல்லிண்டு இருந்தேன். என் குழந்தைகளை பாக்க , என் ஃப்ரெண்ட் பொண் கல்யாணத்துக்கெல்லாம் எடுத்துக்கூட்டிண்டு இங்கேந்து போக என்னால் முடிஞ்சது.கிடைக்க முடியாத லீவையும் சாத்ய படுத்தி (வேற யாரு நம்ப அண்ணாமலையாரும், பிள்ளையும் தான் ) டபுள் சார்ஜ் டிக்கெடையும் குறைசாலா கிடைக்க வைச்சு என்ன சந்தோஷப்படுத்தினப்போ எனக்கு மனசுல நிறடித்து, கில்டி யா. நினைத்ததும் ரொம்ப வருத்தமா வந்தது இத்தனை பண்ணின என் சாமியை எப்படி நான் TAKEN FOR GRANTED நு. என்னமோ தெரியல்ல ரொம்ப அழவே வந்துடுத்து. நினச்ச நாள் கார்த்திகை தீபத்துக்கு 4 நாளுக்கு முன்னாடி. சொப்பனத்தில ஸ்ரீசைலம் கோவிலும் அண்ணாமலை ஜோதியும் அன்னிக்கு ராத்திரி. தமிழ்நாடு டூரிசம் க்கு ஃபோன் பண்ணி ஹைதிராபாதிலிருந்து கேட்டப்போ லாஸ்ட் 2 டிக்கெட் இருக்கறதா சொன்னா. புக் பண்ணினேன்.திருக்கார்த்திகைக்கு போகப்போறோம்னு சந்தோஷம் . ட்ரெய்ன் டிக்கெட்?? அதுவும் சாத்யமாச்சு. ஆத்துல பயங்கற எதிர்ப்பு. பைத்தியம் பிடுச்சிருக்கா உனக்கு. எப்படி கூட்டம் இருக்கும் தெரியுமானு. இவருக்கு பயம் . வேண்டாம் போகாதே அப்புறமா நான் கூட்டிண்டு போறேன்னு. குண்டு தைரியமா 6 லக்ஷம் பேற காப்பாத்தி வரவழைக்கிறவன் என்னையும் காப்பத்துவான்னு நானும் என் ஃப்ரெண்டும் கிளம்பிபோனோம். அப்பா!! அருமை சுத்துப்புற கிராமங்கள் கார்த்திகை தீபத்தில மினுக் மினுக்குன்னு போற வழியெல்லாம்.. நாம ஒரு அடி வச்சா அவன் பத்தடி வைப்பாங்கறதை கண்கூடா பாத்தேன். இறங்கினப்புறம் கூட்டத்துல எங்க போகனு தெரியல்ல ரெண்டுபேருக்கும்.கிட்டத்தட்ட 7 மணி சாயந்த்ரம். வழிலேந்தே தீபம் ஏத்தினப்போ பாத்துட்டோம். திடீர்னு ஒரு பெண் வாங்க ஆன்டினு என் கையை பிடித்துக்கொண்டு கூட்டிண்டு போச்சு. ஒவ்வொரு இடமா சொல்லி காட்டி, கற்ப்பூரமும் தந்து!! அந்த அன்பை என்னனு சொல்ல. காலை எடுத்து வச்சிடுங்கோ வந்திடுவான். அவன் நம்மை அளித்துக்காப்பான்.

Geetha Sambasivam said...

நாங்க பல வருஷங்களா முயன்றும் போக முடியலை சூரி சார்.. இந்தப் பயணம் ஜெயஸ்ரீ சொல்லி இருக்கிறாப்போல் திடீர்ப் பயணம், எதிர்பாராமல் நேர்ந்தது. யாரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பக் கூட இல்லை. போயிட்டு வந்ததும் சொல்லிக்கலாம்னு! :)))))

ஸ்லோகம் ஒன்று பார்த்த நினைவு. ஆனால் அதன் முக்கியத்துவம் குறித்துப் புரியலை. விளக்கம் கொடுத்தால் நல்லது. நன்றி வரவுக்கும், பகிர்வுக்கும்.

Geetha Sambasivam said...

வாங்க சங்கரி, நாங்களும் கோயிலுக்குப் போனோமே தவிர கிரிவலம் போக முடியவில்லை. டூர் ஆர்கனைசர் அதுக்கெல்லாம் நேரம் இல்லைனு சொல்லிட்டார். கிரிவலம் போறதுனா தங்கணும். அவர் போட்டிருந்தது ஒரு நாள் பயணம். வேறு வழியில்லாமல் வண்டியிலேயே கிரிவலப்பாதையை வலம் வந்தோம். :((((((((((((((((( முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

Geetha Sambasivam said...

ஜெயஸ்ரீ, எது எப்போ எப்படி யார் மூலமாக் கிடைக்கும்னு சொல்லவே முடியாது. இப்படிப் பல நிகழ்வுகள் எங்களுக்கும் நேர்ந்திருக்கு. சொன்னால் ஆச்சரியமாயத் தான் இருக்கும். நன்றிங்க பகிர்வுக்கு. கிரிவலம் வரலைங்கற குறையைத் தவிர கோயிலை நன்றாய்ச் சுத்திப் பார்த்தோம். தேடிப் பிடிச்சு எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தோம். நல்ல அருமையான தரிசனமும் கூட. உண்ணாமுலை அம்மனை நாலடி உயரத்துக்கு எதிர்பார்த்துப் போக சின்னஞ்சிறு கிளியாக அம்மன் கொஞ்சுகிறாள்.

Jayashree said...

ஆமாம் ம்ஸஸ் சிவம் . சில சமயம் ஆஷ்ஸ்சர்யமா இருக்கும் . நிகழ்வுகளோட வேகத்தில் சட்டுனு புரியாது அப்புறமா தான் என் மாதிரி ட்யூப் லைட்டுக்கெல்லாம் புரியும்:(. TTDC நான் HYD லேந்து ஃபோன் பண்ணினப்போ சாயந்திரம் 4.30குள்ள வந்து பணம் கட்டினா டிக்கெட் நா!! ஆளை பிடிச்சு கட்ட வைக்கணும் . கட்டினவர் சங்கரன்!! கைய பிடிச்சு கூட்டிண்டு போன பொண் பேர் உமா பார்வதி!!!!!!!!!!!

மாதேவி said...

கோவிலுக்கு வந்திருக்கிறேன் கிரிவலம் போகவில்லை.

கிரிவலம் சென்று வந்தது போன்ற உணர்வைத் தந்தது கட்டுரை.