எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, February 08, 2011

அண்ணாமலைக்கு அரோஹரா!

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
1.10.1
98

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.


அண்ணாமலைக் கோயிலில் மலை மேல் தீபம் ஏற்றும் உரிமை பர்வதராஜ குலம் எனப்படும் மீனவ குலத்தவருக்கே உரிமை உண்டு. ஈசன் மீனவனாய்ப் பிறந்து செய்த திருவிளையாடலை நினைவு கூரும் வண்ணமாயோ? தெரியலை. கொடி ஏற்றுவது தேவாங்கர் இனத்தவர். அவங்க நெய்து கொடுக்கும் துணியில் தான் கொடி ஏற்றப்பட்டு விளக்கு ஏற்றத் திரிக்குத் துணியும் பெறுகின்றனர். கார்த்திகை தீபத் திருவிழா வெகு கோலாகலமாய் நடைபெறும். தேரோட்டம் அப்போது தான் நடக்கும். அண்ணாலையார், விநாயகர், சுப்ரமணியர், உண்ணாமுலை அம்மன், சண்டேஸ்வரர் ஆகியோர் தேரில் வீதி வலம் வருவார்கள். நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்படும் செட்டியார்களால் அதிகமாய்த் திருப்பணி செய்யப்பட்ட கோயிலும் இதுவாகும். இந்த ஊரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பிரதோஷ அபிஷேஹம் நடைபெறும். என்றாலும் அண்ணாமலையார் ஆலய மஹாநந்திக்கு நடக்கும் பிரதோஷ அபிஷேஹமே சிறப்பு வாய்ந்தது. இங்கே உலக நன்மைக்காகப் பிரார்த்தித்துக்கொண்டு ஒவ்வொரு பிரதோஷத்திலும் வேத கோஷங்களோடு திருமுறைகளும் ஓதப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி வழிபாடுகள் செய்வார்கள். காணக்கிடைக்காத காட்சி என்கின்றனர். கூட்டத்தை நினைச்சால் தான் பயமா இருக்கிறது. 


மேலும் தமிழ்நாட்டின் அனைத்து சிவன் கோயில்களிலும் காமதகனம் நடைபெறுவதில்லை. ஆனால் இந்தக் கோயிலில் காமதகனம் நடைபெறும். இந்தக் கோயில் கிரிவலம் அண்ணாமலையாரே செய்து வந்ததாய் ஐதீகம். அதை ஒட்டி இப்போதும் ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். உண்ணாமுலை அம்மனின் ஊடலைத் தீர்க்கும் திருவூடல் உற்சவம் அப்போது நடைபெறும். மலையைச் சுற்றுவதால் ஈசனுக்கு மலையைச் சுற்றும் மஹாதேவன் என்ற பெயரும் உண்டு. இங்கே கிரிவலப்பாதையில் உள்ள அநேக கோயில்களைத் தவிர பல பெரியோர்கள், சித்தர்கள், சுவாமிகள் போன்றோரின் ஆசிரமங்கள் உண்டு. இங்கே இருந்து உலகோருக்கு ஆன்மீகத்தைப் போதித்த பலரில் பகவான் ஸ்ரீரமண ரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், இசக்கி சுவாமிகள், ஆலமரத்து சாமிகள், காட்டு சிவா சுவாமிகள், கயிறு சாமி, பிரும்மானநந்த சுவாமி, ஜடை சாமி போன்றோர் ஆசிரமங்களும் சமீப காலத்தில் வாழ்ந்த யோகியான ராம்சூரத்குமார் அவர்களின் ஆசிரமமும் இருக்கின்றன. இது பகவான் ஸ்ரீ ரமணரின் ஆசிரமத்தில் எடுத்த படம். இங்கே உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தோமானால் நம்முள்ளே பல அரிய மாற்றங்கள் ஏற்படும் என்று கூறுகின்றனர். நாங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்தோம். தியானம் செய்ய நேரமெல்லாம் கொடுக்கவில்லை. சீக்கிரமாய்க் கிளம்ப வேண்டி இருந்த்து.  மற்ற ஆசிரமங்களையும் பார்க்க நேரமில்லை.

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் பெயரும், புகழும் பெற்றது இந்தத் திருவண்ணாமலையில் தான். அருணகிரியார் சம்பந்தாண்டான் என்பவன் தூண்டுதலின் பேரில் அரசனால் பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி கட்டளை இடப்பட்டார். கூடுவிட்டுக் கூடு பாயும் சித்தி கைவரப் பெற்ற அருணகிரியார் தன் உயிரைத் தன் உடலில் இருந்து நீக்கிச் செத்த ஒரு கிளியின் உடலில் செலுத்திக்கொண்டு பாரிஜாதத்தைக் கொண்டு வருகிறார். ஆனால் அதற்குள் அருணகிரியாரின் உடலை எரித்துவிடுகிறான் சம்பந்தாண்டான். ஆஸ்தான புலவன் ஆன சம்பந்தாண்டானின் பொறாமையைப் புரிந்து கொள்ளாத மன்னனும் முதலில் அருணகிரி இறந்துவிட்டார் என்றே நம்புகிறான். பின்னர் கிளி வடிவில் அங்கு வந்து சேர்ந்த அருணகிரியார், கிளி கோபுரத்தில் அமர்ந்த வண்ணமே கந்தரநுபூதியைப் பாடினார். கிளி வடிவிலேயே இருந்த அவரை அவ்வடிவிலேயே முருகன் ஆட்கொண்டான். அந்தக் கோபுரம் கிளி கோபுரம் என்று அது முதல் அழைக்கப் படுகிறது.

இதே போல் குகை நமசிவாயரின் சீடரான குரு நமசிவாயர் குருவின் ஆலோசனைப்படி திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் தியானத்துக்கு அமர்ந்தார். தியானம் முடிந்ததும் பசி எடுக்க உண்ணாமுலை அம்மனை நினைந்து “அண்ணாமலையார் அகத்துக்கு இனியாளே, உண்ணாமுலையே, உமையாளே, உண்ணச் சோறு கொண்டுவா!” என்று பாட அப்போது தான் கோயிலில் தங்கத் தாம்பாளத்தில் சர்க்கரைப் பொங்கலை அர்ச்சகர்கள் நிவேதனம் செய்து கொண்டிருக்க, தாம்பாளத்தோடு பொங்கல் குரு நமசிவாயரை வந்தடைகிறது. தங்கத் தாம்பாளத்தைக் காணாமல் திகைத்த அர்ச்சகர்கள் மனம் கலங்கி நிற்க, அங்கிருந்த ஒரு குழந்தையின் உடலில் புகுந்து கொண்ட அம்பிகை தங்கத் தாம்பாளத்தைப் பொங்கலோடு தான் குரு நமசிவாயருக்குக் கொடுத்த்தையும், தாம்பாளம் இப்போது ஒரு குறிப்பிட்ட மரத்தடியில் இருப்பதையும் சொல்லி அங்கிருந்து தாம்பாளத்தை எடுத்து வரச் சொல்ல, அவ்விதமே சென்று பார்த்தவர்களுக்குத் தாம்பாளம் கிடைத்த்து.

2 comments:

priya.r said...

நல்ல பதிவு

நிறைய தகவல்கள் .,
//“அண்ணாமலையார் அகத்துக்கு இனியாளே, உண்ணாமுலையே, உமையாளே, உண்ணச் சோறு கொண்டுவா!” என்று பாட அப்போது தான் கோயிலில் தங்கத் தாம்பாளத்தில் சர்க்கரைப் பொங்கலை அர்ச்சகர்கள் நிவேதனம் செய்து கொண்டிருக்க, தாம்பாளத்தோடு பொங்கல் குரு நமசிவாயரை வந்தடைகிறது//
படிக்கும் போது உடல் சிலிர்த்தது ;உள்ளம் இறைவியின் கருணையை வியந்து போற்றியது

பதிவுக்கு நன்றி கீதாம்மா

Geetha Sambasivam said...

நன்றி ப்ரியா.