எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, May 11, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! சங்கரநாராயணர்!

உமா மகேசருக்கு அடுத்து சங்கரநாராயணரைப் பார்க்கலாம். அரியும், சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு என்பது ஒரு வழக்கு. அது போல் சிவன், விஷ்ணு என்பதெல்லாம் நம் செளகரியத்திற்காகத் தான். ஒரே அம்மாவே எத்தனை அவதாரங்கள் எடுக்கிறாள்? அவள் தாய், தந்தையருக்கு மகள், சகோதர, சகோதரிகளுக்கு சகோதரி, மாமியார், மாமனாருக்கு மருமகள், கணவனுக்கு மனைவி, குழந்தைகளுக்குத் தாய் என எத்தனை பெயர் அவளுக்கு? அப்படி எல்லாம் வல்ல பரம்பொருளும் ஒவ்வொரு சமயங்களில் ஒவ்வொரு பெயருடன் காணப்படுகிறது. என்றாலும் இதிலும் பேதங்கள் பார்க்கிறவர்கள், கற்பிக்கின்றவர்கள் உண்டே! அப்படித் தான் சங்கனுக்கும், பதுமனுக்கும் தோன்றியதாம். இவ்வுலகத்துப் பிரஜைகளுக்கெல்லாம் பிரஜாபதியான காச்யபரின் நாக வம்சத்துப் பிள்ளைகளான வாசுகி, ஆதிசேஷன் இருவரும் முறையே சிவனின் ஆபரணமாகவும், விஷ்ணுவின் படுக்கையாகவும் ஆகும் பேறைப் பெற்றனர். இவர்களின் வழியே வந்த அஷ்டமாநாகங்களில் இருவரான சங்கனுக்கும், பதுமனுக்கும் சகல சாஸ்திரங்களிலும் பாண்டித்தியமும், பரிச்சயமும் இருந்தாலும், சங்கனுக்கு சிவனிடமும், பதுமனுக்கு விஷ்ணுவிடமும் ஈடுபாடு அதிகம் இருந்தது. அதற்கேற்ப வாசுகி மூலம் சிவதீக்ஷை பெற்றான் சங்கன், ஆதிசேஷன் மூலம், நாராயண மந்திர உபதேசம் பெற்றான் பதுமன்.

ஆனாலும் இருவரும் தங்கள் தெய்வம் தான் உயர்ந்தது என்ற எண்ணத்திலேயே இருந்து வந்தார்கள். இது குறித்துப் பலரிடமும் கருத்துக் கேட்டனர். யாராலும் தெள்ளத் தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. ஒருவர் சிவனைப் பரம்பொருள் என்றால் அதை பதுமன் ஒத்துக்கொள்ள மாட்டான், ஒருவர் விஷ்ணுவைப் பரம்பொருள் என்றால் அதை சங்கன் ஏற்க மறுத்தான். ஆகவே இருவரும் தேவர்கள் தலைவன் ஆன இந்திரனிடம் போய்த் தங்கள் வழக்கை முன் வைத்தனர். இந்திரனுக்கும் இந்த வழக்கைத் தீர்க்க முடியாமல் தங்கள் குருவை நாட, அவர் கூறினார்: இருவரும் ஒருவரே. ஈசன் தன் மேனியின் இடப்பாகத்தில் விஷ்ணுவுக்கும் இடம் அளித்துள்ளார்; இந்த வடிவைக் குறித்த விளக்கத்தை உமாதேவிக்கும் கூறி அருளினார். இது ஞானம், செல்வம் இரண்டையும் தரும் வடிவம் எனக் கூறி உள்ளார். அன்னையானவள் அந்த வடிவைக் காண விரும்ப, கடும் தவம் இருந்தாலொழிய இத்தகையதொரு அற்புதக் காட்சியைக் காண முடியாது என ஈசன் கூறினார். அன்னையும் பூலோகத்தின் தென்பாகத்தில் பொதியமலைச்சாரலில் உள்ள புன்னை வனம் ஒன்றுக்குச் சென்று தவம் இருக்கலானாள். அங்கே தேவர்கள் அனைவரும் மரங்களாக மாறி வந்து அன்னையின் வழிபாட்டுக்கும், தவத்துக்கும் தேவையான பூக்கள், பழங்கள், தேன் போன்றவற்றைக் கொடுக்க தேவலோகத்து மாந்தர்களோ பசுக்களாக மாறிப் பாலைச் சொரிந்தனர். அக்னி விளக்காக மாற, வாயு தன் இனிமையான காற்றினால் அந்த இடத்தைச் சுத்தம் செய்து கொடுத்தான்.

கடும் தவத்தின் பின்னர் அன்னைக்கு ஒரு ஆடிமாதப் பெளர்ணமி நன்னாளில் ஈசன் சங்கரநாராயணராகக் காட்சி அளித்தார். நீங்களும் அத்தகைய தவம் இருந்தால் அந்தக் காட்சியைக் காணலாம். என்று தேவகுரு சங்கனுக்கும், பதுமனுக்கும் எடுத்துக் கூறினார். இருவரும் புன்னைவனம் வந்து தவம் இருந்தனர். தவம் இருந்த அவர்களுக்கு ஈசன் சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். வலப்பாகம் முழுதும் சிவவடிவிலே தலையிலே கங்கையும் சந்திரனும் காட்சி அளிக்க, காதில் நாகாபரணத்தோடும், நெற்றியின் ஒரு பாதியில் திருநீறும், கையில் மழுவை ஏந்திய வண்ணம், கொன்றைமலர் சூடிக்கொண்டு, பொன்னாலாகிய பூணூல் தரித்துக்கொண்டு, அரையில் புலிக்கச்சையுடன், காலில் நாகாபரணமான வீரக் கழலோடும்

இடப்பாகத்தில் நெற்றியில் நீலமணிக் கஸ்தூரிப் பொட்டும், சிரசில் ரத்தினக் கிரீடத்துடனும், காதில் அழகின மீன்வடிவ மகரகுண்டலத்தோடும், கையில் சங்கை ஏந்திக்கொண்டும், துளசிதளங்களால் ஆன மாலை தரித்துக்கொண்டும், இடுப்பில் அழகிய மஞ்சள் வண்ணப் பட்டுப் பீதாம்பரத்தோடும், காலின் பொன்னால் ஆன வீரக் கழலோடும் அழகிய கோலத்தில் இளமுறுவல் ததும்பக் காட்சி அளிக்கிறார்.

1 comment:

பெண்கள் நாட்டின் கண்கள் said...

நல்ல செய்திகள். உங்களது நற்பணி தொடர வாழ்த்துக்கள்.