பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தின் கல்யானைக்குக் கரும்பு அருந்துவித்த படலத்தில் இருந்து சில பாடல்களைக் கீழே காணலாம்:
ஈண்டு உள்ளவர்க்கு எம் விளை யாடலைக்
காட்டி இச்சை
வேண்டும்
பலசித்தியும் நல்குவம் வேதம் ஆதி
மாண்டு
அங்கு எண் எண் கலை
ஞானமும் வல்லம் அல்லால்
சேண் தங்கு எல்லாப் பொருளும்
வல்ல சித்தரேம் யாம்.
உன்னால்
நமக்குப் பெறல் வேண்டுவது ஒன்றும்
இல்லை
தென்னா
என உள் நகை செய்தனர்
சித்தயோகர்
மன்னா இவர் தம் இறுமாப்பும்
செருக்கும் வீறும்
என்னால்
அளவிட்டு அறிவேன் என எண்ணித்
தேர்வான்.
வல்லாரில்
வல்லேம் என உம்மை மதித்த
நீர் இக்
கல் ஆனைக்கு இந்த கரும்பை
அருத்தின் எல்லாம்
வல்லாரும்
நீரே மதுரைப் பெருமானும் நீரே
அல்லால்
எவர் நும் மனம் வேட்டது
அளிப்பன் என்றான்.
மன்னன் சித்தரைக்
காண வருவதை அறிந்த குடிமக்களும் அங்கே கூடி இருந்தனர். அவர்களில் ஒரு குடியானவன் கையில்
கரும்புக் கட்டை வைத்திருந்தான். சித்தர் அந்தக்
கட்டுக் கரும்பையும் அப்படியே அவனிடமிருந்து வாங்கினார். அருகே இருந்த கல் யானையிடம் நீட்டினார். தம் கடைக்கண்ணால்
ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவே! என்ன ஆச்சரியம்?
செல்லா
உலகத்தினும் சென்று ஒரு விஞ்ஞை
கற்றோர்
பல்லாரும்
நன்கு மதிக்கப் பயன் எய்துவார்கள்
எல்லாம்
அறிந்த எமக்கு ஒன்றிலும் ஆசை
இல்லை
கல் ஆனை கன்னல் கறிக்கின்றது
காண்டி என்றார்.
1371
கடைக்கண்
சிறிதே குறித்தார் முன் கடாக் கல்
யானை
மடைக் கண் திறந்து மதம்
மூன்றும் வழிய விண் வாய்
அடைக்கும்
படிவாய் திறந்து ஆர்த்துப் புழைக்கை
நீட்டித்
தொடைக்
குன்று அனான் கைச் சுவைத்
தண்டைப் பறித்தது
அன்றே.
1372
பறித்துக்
கடைவாய் வழிசாறு அளி பாய்ந்து
நக்கக்
கறித்துக்
குதட்டிப் பருகிக் கரம் ஊசல்
ஆட
நெறித்துத்
தருக்கி நிழல் சீறி நிமிர்ந்து
நிற்ப
மறித்துக்
கடைக்கண் குறித்தார் பினும் மாயம் வல்லார்.
1373
மட்டு உற்ற தாரான் கழுத்தில்
கண்ட மாலை தன்னை
எட்டிப்
பறித்த இகல் காஞ்சுகி மாக்கள்
சீறிக்
கிட்டிக்
களிற்றைப் புடைப்பான் கிளர் கோல் கொண்டு
ஓச்சச்
சிட்டத்தவர்
கண் சிவந்து ஆனையைச் சீறி
நோக்க.
கல்யானை கரும்புகளை
வாங்கி கொண்டு அதன் சாறு வாயிலிருந்து ஒழுகும் வண்ணம் கடித்துத் தின்ன ஆரம்பித்தது.
அனைவரும் அதிர்ந்து நிற்க, சித்தரோ மீண்டும்
கடைக்கண் பார்வையைச் செலுத்த வந்தது வினை மன்னனின் அரிய முத்துமாலைக்கு. முத்துமாலையைப் பிடுங்கித் தன் வாய்க்குள் போட்டுக்
கொண்டது கல்யானை. மன்னன் சினத்தோடு சித்தரையும்
யானையையும் அடிப்பதற்காகத் தன் வீரர்களை ஏவ அவர்களும் அடிக்கப் போனார்கள். சித்தரோ சிறிதும் கலங்காமல், “நில்லுங்கள் அங்கேயே!”
என்றார். ஓங்கிய கைகள் ஓங்கிய வண்ணம் அப்படியே சிலையைப் போல் நின்றனர் வீரர்கள். மன்னன் கலங்கிப் போய் சித்தரின் கால்களில் விழுந்து
வணங்கி மன்னிப்புக் கேட்க, மன்னனை மன்னித்தார் சித்தர். அவனுக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதைப்
புரிந்து கொண்டு குழந்தை பாக்கியமும் அளித்தார். பின்னர் கல்யானையிடம் கேட்டு மன்னனின்
முத்து மாலையை வாங்கிக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட மன்னன் கழுத்தில் அணிந்து
கொண்டு திரும்பிப் பார்க்க,சித்தரையும் காணோம், யானையும் மீண்டும் கல்லாகி நின்றது. சித்தராக வந்தது சாக்ஷாத் ஈசனே என்பதை உணர்ந்தான்
மன்னன். சித்தரின் அருள் மூலம் பிறந்த குழந்தைக்கு விக்ரமன் எனப் பெயர் வைத்து அருமையும்,
பெருமையுமாய் வளர்த்து விக்ரம பாண்டியன் என்ற பெயரோடு முடி சூட்டினான்.
மதுரைக் கோயிலில்
ஈசனின் சந்நிதிக்கு வடமேற்கு மூலையில் எல்லாம் வல்ல சித்தர் சந்நிதி உள்ளது. அருகேயே துர்க்கையும் இருப்பாள். சித்தரைச் சுற்றினாலோ, சித்தருக்குப் பிரார்த்தனைகள்
செய்து கொண்டாலோ நினைத்த காரியம் சித்தியடையும் என்பார்கள். சித்தருக்குப் பஞ்சலோக விக்ரஹமும் உள்ளது. அது மஹா மண்டபத்தில் வைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு தைப் பொங்கலன்றும் கல் யானைக்குக் கரும்பு
தந்த படலம் திருவிளையாடல் ஐதீகவிழாவாய்க் கொண்டாடப் படும்.